வெள்ளி, 5 டிசம்பர், 2014

முகம்மதின் மக்கா வாழ்வும், அவரின் புலப் பெயர்வும்


இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 53
இதுவரை மதம் எனும் அடிப்படையில் இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களை குரான் வசங்களையும் ஹதீஸ்களையும் கொண்டு முதன்மையாகவும் பின்னர் முகம்மதின் தன்மைகளைக் கொண்டும் முன்வைத்து வந்திருக்கிறோம். இப்போது முகம்மது எனும் மனிதரை நோக்கி நம் பார்வையைத் திருப்பலாம். இஸ்லாத்தில் எல்லாமானவராக இருக்கும் முகம்மது, வரலாற்றின் பார்வையில் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் எல்லையை மீறி முதிர்ந்திருந்தாரா? அன்றைய காலகட்ட மனிதனின் ஆளுமையைத் தாண்டி முகம்மதிடம் குடிகொண்டிருந்த வேட்கைகள் என்ன? போன்றவைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டாக வேண்டும் ஏனென்றால் முகம்மது தான் இஸ்லாம் எனும் மதத்தின் ஆணி வேராக இருந்திருக்கிறார். அந்த வகையில் மக்கா எனும் தன் பிறந்த நகரத்தை விட்டு யாத்ரிப் எனும் நகருக்கு முகம்மது புலம்பெயர்ந்த காதையை எடுத்துக் கொள்வோம்.

முகம்மது செல்வாக்கு மிகுந்த வணிககுலக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இளமையில் அவர் வறுமையினால் சூழப்பட்டிருந்தார். ஆடு மேய்ப்பது தொடங்கி வர்த்தகப் பயணங்களுக்கு தலைமையேற்றுச் செல்வது வரை பல வேலைகளைச் செய்திருக்கிறார். கதீஜா எனும் பெருவர்த்தக உடமையாளரின் கடைக்கண் பார்வைக்குப் பிறகு முகம்மதின் வாழ்க்கை செல்வத்தின் உச்சிக்கு இடம்பெயர்கிறது. கதிஜா எனும் பெருவணிகரை மூன்றாவது கணவராக மணந்த பின்னர் பெரும் செல்வந்தராகிறார் முகம்மது. பின்னர் தான் புதிய கொள்கைகளைக் கூறி மக்களை அதன்பால் திரட்டத் தொடங்குகிறார்.

மக்காவுக்கு அருகில் ஹீரா எனும் மலைக் குகையில் அடிக்கடி சென்று தங்கிக் கொள்வதும், தனிமையில் சிந்திப்பதும் முகம்மதுவுக்கு தன் கொள்களை கூறுவதற்கு முன்பிலிருந்தே வழக்கமாக இருந்திருக்கிறது. இந்தச் செய்தி புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

.. .. .. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்கள் குடும்பத்தாரிடம் திரும்ப வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாட்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். மீண்டும் கதீஜா அவர்களிடம் திரும்புவார்கள், அதே போன்று பல நாட்களுக்குறிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும்வரை நீடித்தது .. .. .. புஹாரி 3

இந்த ஹதீஸ் சில உண்மைகளை நமக்கு அளிக்கிறது. முகம்மது புதிய கொள்கைகளை வெளிப்படுத்துவதற்கு முன் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தார் என்பதோ, என்ன மனோநிலையில் இருந்தார் என்பதோ யாருக்கும் தெரியாது, அது குறித்த எந்தத் தகவலும் கிடையாது. ஆனால் இந்த ஹதீஸ் வணக்கங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறது. பல நாட்களுக்கான உணவை தன்னுடன் கொண்டு சென்று தனிமையில் அந்தக் குகையில் தங்கியிருந்திருக்கிறார். தெளிவாகச் சொன்னால் உணவை எடுத்துச் செல்வதற்காக மட்டுமே வெளியில் வந்திருக்கிறார். வறிய நிலையிலிருந்து மிகப்பெரிய செல்வந்த நிலைக்கு உயர்ந்த முகம்மது ஒரு மலைக் குகையில் பல நாட்களாகச் சென்று தனிமையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு இஸ்லாமிய மதப் பரப்புரையாளர்கள் எவரும் விளக்கம் தந்ததில்லை.

இந்த நிலையில் தான் முகம்மதுவுக்கு வஹீ வருகிறது. அதாவது அல்லாவின் உதவியாளரான வானவர் முகம்மதுவுக்கு குரானை கற்றுக் கொடுக்கிறார். முதல் வஹிக்குப் பிறகு, தான் அல்லாவின் தூதர் என்று முகம்மது கூறவில்லை. மாறாக அந்தநேர மக்களின் நம்பிக்கைப்படி தன்னை சைத்தான் பீடித்து விட்டதாகவே பயந்தார். நீர் அல்லாவின் தூதர் என்று முகம்மதை முகம்மதுவுக்கே அறிமுகப்படுத்தியவர் கதீஜாவின் உறவினரான வராஹா என்பவரே. அதாவது கதீஜாவின் மூன்றாவது கணவரான முகம்மது என்பவருக்கு, அவர் அல்லாவின் தூதரான முகம்மது என (அவருக்கு அவரையே) அறிமுகம் செய்து வைத்தவர் வராஹா என்பவர்.

ஓரிறைக் கோட்ப்பாடு என்பது அந்நாளில் இல்லாத ஒன்றோ, யாரும் செவியுற்றிராத ஒன்றோ, முகம்மது புதிதாக கூறியதோ அல்ல. மக்காவில் ஹனீஃபியம் என்றொரு கொள்கையும் இருந்தது. மக்காவில் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும், பல கடவுளை வணங்குவதைவிட ஒரே கடவுளை வணங்குவதே சரியானது என்றும் முகம்மதுவுக்கு முன்னரே மக்காவில் பரப்புரை செய்து கொண்டிருந்தவர்கள் இந்த ஹனீஃப்வாதிகள். ‘ஹனிஃபிய்’ என்ற சொல்லுக்கு ஹீப்ரு, சிரிய மொழிகளில் நம்பிக்கையற்றவர்கள், ஒப்புக் கொள்ளாதவர்கள் என்று பொருள். இந்த ஹனீஃப்வாதிகளில் முதன்மையானவரும், முகம்மதின் மனைவி கதீஜாவின் ஒன்றுவிட்ட சகோதரருமாகிய வராஹா இப்னு நவ்பல் தான் அல்லாவால் தூதராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதையும், அல்லாதான் வானவர்கள் மூலம் குரானை வழங்குகிறான் என்றும் முகம்மதுவுக்கு ‘புரிய’வைக்கிறார்.

அன்றைய மக்காவில் ஹனிஃப்வாதிகளாக அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், உத்மான் இப்னு ஹுவைரித், சையித் இப்னு அம்று போன்றவர்களை இப்னு இஸாக் பட்டியலிடுகிறது, இதில் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் முகம்மதின் பாட்டனார் அப்துல் முத்தலிப்பின் மகள் உமைமாவின் மகன், சையித் இப்னு அம்று முகம்மதின் நண்பரும், கவிஞரும் ஆவார். ஆனால் ஹனீஃபியம் குறித்தோ, அதனை பின்பற்றியவர்கள் குறித்தோ ஸஹீஹ் சித்தா எனப்படும் ஆறு ஆதாரபூர்வ ஹதீஸ் தொகுப்புகள் எதிலும் எந்தக் குறிப்பும் இல்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று முதன்மையான ஹதீஸ் தொகுப்பான புஹாரி வராஹா இப்னு நவ்பல் ஒரு கிருஸ்தவர் என்று பொய் சொல்கிறது.

ஹனீப்வாதிகள் மக்காவாசிகளின் சிலை வணக்கத்தை விமர்சித்த போது ஏற்க மறுத்ததைப் போலவே முகம்மது விமர்சித்த போதும் ஏற்க மறுத்தனர். ஆனால் முகம்மதுக்கு கடுமையான துன்பங்களை விளைவித்ததாக முஸ்லீம்கள் கூறுகிறார்கள். அப்படியான இன்னல்கள் எல்லை மீறி முகம்மதை கொலை செய்யுமளவுக்கு செல்லவே மக்காவை விட்டு சென்றுவிட முடிவெடுத்து மதீனா என்று இன்று அழைக்கப்படும் (மதீனத்துன் நபி – தூதரின் நகரம் என்பதன் சுருக்கமே மதீனா) யாத்ரிப் நகருக்கு தன் சீடர்களுடன் செல்கிறார் முகம்மது. இந்த நிகழ்ச்சி தான் ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆண்டு இந்த நிகழ்ச்சியிலிருந்து தான் தொடங்குகிறது. ஆனால் இஸ்லாமியர்கள் கூறுவது போல் பரப்புரை செய்யமுடியாத அளவுக்கு நிர்ப்பந்தம் அதிகரித்ததாலும், உயிர் பயத்தினாலும் தான் முகம்மது மதீனாவுக்கு தப்பிச் சென்றாரா?

.. .. .. அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான் .. .. .. குரான் 5:67

என்று குரான் வசனம் குறிப்பிடுகிறது. அதாவது முகம்மதை மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது. மனிதர்களால் கொல்லப்படுவதினின்று முகம்மதை அல்லா பாதுகாக்கிறான் என்பது இதன் பொருள். முகம்மதின் பாதுகாப்பிற்கு அல்லா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முகம்மது நகரம் விட்டு நகரம் ஓட வேண்டிய அவசியம் என்ன? பிரச்சனை என்னவென்றால், இந்த வசனம் முகம்மது மக்காவில் இருந்த போது அல்ல மதீனாவில் இருக்கும்போது தான் வெளிப்பட்டது. மக்காவில் இருக்கும் போது முகம்மது ஒரு கலகக்காரர். அந்த மக்களின் மதப் பண்பாடுகளை எதிர்த்தவர். அதனாலேயே உறவினர்கள் உள்ளிட்டு அனைவரின் பகைமையை சம்பாதித்தவர். முஸ்லீம்களின் கூற்றுப்படி கொலை செய்யப்படும் அளவிற்கு அடிவாங்கியவர். ஆனால் மதீனாவில் அவர் ஒரு மன்னர். ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் இயங்கிக் கொண்டிருந்தது. மதீனாவாசிகளில் பெரும்பாலானோர் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்த இருவேறு நிலமைகளில் எந்த இடத்தில் அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டிருக்கும்? ஐயத்துக்கு இடமின்றி மக்காவில் தான். ஆனால் மதினாவில் சர்வ வல்லமை பொருந்திய மன்னராக வலம்வரும் போது அல்லா உனக்கு நான் பாதுகாப்பு என்று கூறுகிறானென்றால் அதனை எப்படி புரிந்து கொள்வது? எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அல்லாவுக்கு தெரிந்திருக்கவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?

இது ஒருபுறமிருக்க ஒரு ஹதீஸ் புதிதாக வேறொரு சங்கதியை அவிழ்த்து விடுகிறது.

.. .. .. அபூஜஹ்ல், “உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?” என்று கேட்டான். அப்போது “ஆம்’ என்று சொல்லப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான். அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், “உனக்கு என்ன நேர்ந்தது?”என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைகளையும் கண்டேன்” என்று சொன்னான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள் .. .. .. முஸ்லிம் 5390

முஸ்லிமில் இடம்பெற்றிருக்கும் இந்த ஹதீஸ் மக்காவிலும் முகம்மதுக்கு பாதுகாப்பு இருந்ததாக கூறுகிறது. அப்படியென்றால் ஏன் அவர் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஓடவேண்டும்? இந்த ஹதீஸின் நாயகனான அபுஜஹ்ல் என்பவர் தான் முகம்மதின் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் என்பது முஸ்லீம்களின் கூற்று. அப்படியென்றால் முகம்மது மக்காவிலிருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணம் தான் என்ன?

பெரும் செல்வந்தராக இருந்த முகம்மது தன் செல்வத்தையெல்லாம் செலவு செய்து பத்தாண்டு காலமாக பரப்புரை செய்கிறார். ஆனாலும் அவரால் தோராயமாக எழுபது பேர்வரைதான் திரட்ட முடிகிறது. இதனால் சலிப்புற்ற முகம்மது, மக்கா புனிதப் பயணத்துக்கு வரும் ஏனைய பகுதி அரபிகளிடமும் பரப்புரை செய்கிறார். (மக்காவிலிருக்கும் காஅபா ஆலயத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இஸ்லாத்திற்கு முன்பிருந்தே நடைபெற்று வரும் ஒரு மதக் கடமை) இதனால்  யாத்ரிப் நகரின் நிலமை முகம்மதுக்கு தெரியவருகிறது. மக்காவின் சூழலைவிட யாத்ரிப்பின் சூழல் தமக்கு பொருத்தமானதாக இருக்கும் என கருதிய முகம்மது அங்கு செல்லத் தீர்மானிக்கிறார். இதைத்தான் முஸ்லீம்கள் முகம்மதின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும், அதனால் தான் முகம்மது தான் பிறந்த ஊரைத் துறந்து யாத்ரிப் செல்ல நேர்ந்ததாகவும் திரிக்கிறார்கள். அப்படி என்ன சூழல் நிலவியது யாத்ரிப்பில்?

யாத்ரிப்பில் அவ்ஸ், கஸ்ரஜ் எனும் இரண்டு குலத்தவர்கள் இருந்தார்கள். அரபுகளான இவர்களே பெரும்பான்மையாக இருந்தாலும் அங்கு சிறுபான்மையினராக இருந்த யூதர்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. ஏனென்றால் அவ்ஸ், கஸ்ரஜ் இனத்தவர்களிடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதல்கள். நீண்டகால மோதலால் இரு குலத்தவருமே களைத்திருந்தனர். அதேநேரம் தங்களின் ஆதிக்கத்திற்காக இருவருக்குமிடையே பகைமையை யூதர்கள் மூட்டி வந்தனர். மட்டுமல்லாது தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றி உங்களை வெளியேற்றிவிட்டு யாத்ரிபை எங்களுக்கு சொந்தமாக்குவார் என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில் தான் முகம்மது தன்னை கடவுளின் தூதர் என்று கூறிக் கொண்டிருந்தது அவர்களை எட்டுகிறது. அதுமட்டுமன்றி முகம்மதுவுக்கும் கஸ்ரஜ் குலத்தினருக்குமிடையே உறவு உண்டு. முகம்மதின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் தந்தை ஹாஷிம் கஸ்ரஜ் குலத்திலேயே திருமணம் செய்திருந்தார். முகம்மதின் தந்தை அப்துல்லா யாத்ரிபின் கஸ்ரஜ் குலத்தினிடையே தான் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த அடிப்படையில் அவ்ஸ், கஸ்ரஜ் குலத்தினரிடையே ஒற்றுமையையும், யூதர்களை ஒடுக்குவதற்கும் ஒரு பொதுவான தலைமையை தேடிக் கொண்டிருந்த அவர்களுக்கு முகம்மது பொருத்தமானவராக தெரிந்தார்.

இதுதான் முகம்மது மக்காவைத் துறந்து மதீனா வந்தடைந்த கதை. இதைத்தான் முகம்மது உயிருக்கு அஞ்சி ஓடி வந்ததைப் போல இஸ்லாமியர்கள் உருவகிக்கிறார்கள். ஆனால் மக்காவில் இருந்தது வரை அவர் சுதந்திரமாக அங்கிருந்த ஏனைய மத நம்பிக்கைகளை விமர்சித்தே வந்திருக்கிறார். இன்றைய இஸ்லாமியர்களின் செயல்களோடு ஒப்பிட்டால் முகம்மது மக்காவில் மிகவும் பத்திரமாகவே இருந்திருக்கிறார்.