ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

முகம்மதும் ஆய்ஷாவும்


child marriage
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 55
முகம்மது புரிந்த மூன்றாவது திருமணம் விவகாரமானதும், இதை சரி காண முஸ்லீம்கள் திணறிக் கொண்டிருக்கும் திருமணமாகவும் அமைந்து விட்டது. அது தான் ஆய்ஷாவுடனான திருமணம். இந்த திருமணம் நடக்கும் போது முகம்மதின் வயது ஐம்பதுக்கும் அதிகம். ஆனால், ஆய்ஷாவின் வயதோ வெறும் ஆறு தான். இந்தத் திருமணம் தான் இஸ்லாத்தை விமர்சிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மட்டுமல்லாது முகம்மதின் வாழ்க்கை முஸ்லீம்களுக்கு ஒரு முன்மாதிரி என்பதாலும் குழந்தத் திருமணம் கூடாது என்று குரான் வசனங்கள் எதுவும் தடுக்கவில்லை என்பதாலும் இன்றும் முஸ்லீம்கள் இது போன்று குழந்தைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு குழந்தையைத் திருமணம் செய்து கொள்ள மத ரீதியாக இஸ்லாமியர்களுக்கு தடை ஒன்றும் இல்லை.

முகம்மதின் மக்கா வாழ்வின் இறுதியில் நடந்த இந்த திருமணம் முகம்மதினுடைய ஆசையின் பேரிலேயே நடந்திருக்கிறது என்பதை ஒரு ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. தன்னுடைய நெருங்கிய நண்பரும், தனக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவருமான அபூபக்கரின் மகள் தான் ஆய்ஷா. ஆய்ஷா குழந்தையாக இருக்கும் போது தன்னுடைய ஆசையை அபூபக்கரிடம் வெளிப்படுத்துகிறார் முகம்மது.

நபி அவர்கள் அபூபக்ர் அவர்களிடம் ஆயிஷா அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம் என்று சொன்னார்கள். புஹாரி 5081

சிறுமியின் தந்தையான அபூபக்கருக்கு விருப்பமில்லை என்றாலும் முகம்மதின் வற்புறுத்தலினாலேயே சம்மதிக்கிறார் அதும் சிறுமியாக இருப்பதால் மூன்று ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்கிறார். முகம்மது பெருந்தன்மையுடன்(!) அதனை ஏற்று ஆறு வயதில் புறத் திருமணம் முடிந்தாலும் ஒன்பது வயதிலேயே மெய்யான திருமண வாழ்வை தொடங்குகிறார்.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! நற்பேறு உண்டாகட்டும் என்று கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். புஹாரி 3894

மேலுள்ள ஹதீஸ்கள் முகம்மதின் விருப்பத்தினால் ஆறு வயதில் திருமணம் செய்யப்பட்டு ஒன்பது வயதில் முதலிரவு (முதல் பகல்) நடந்திருக்கிறது என்பதை தெரிவிக்கின்றன. இந்த மூன்று ஆண்டு இடைவெளி கூட அபூபக்கர் விதித்த நிபந்தனையினால் தான். ஆனால் முகம்மது குழந்தைத் திருமணம் செய்ததன் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்ய முஸ்லீம்கள் பல காரணங்களை அடுக்குகிறார்கள். இப்படி குழந்தத் திருமணம் செய்வது கூடாது என்று பின்னாளில் தடுக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். ஆனால் அப்படியான தடை எதுவும் குரானிலோ ஹதீஸ்களிலோ இல்லை. இன்றும் இது போன்ற திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மட்டுமல்லாது முகம்மதின் பேத்தி உம்மு குல்ஸுமை உமர் திருமணம் செய்யும் போது அவள் சிறுமி தான்.

இஸ்லாமிய மதவாதிகள் இந்தத் திருமணம் குறித்து வாதிடும் போது முதன்மையானதாக இரண்டு விசயங்களை முன்வைக்கிறார்கள். 1. குழந்தைத் திருமணம் என்பது அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்று தான் 2. புத்திக் கூர்மை கொண்ட ஆய்ஷாவை திருமணம் செய்ததன் மூலம் இஸ்லாமின் இல்லற வாழ்வியல் குறித்த நுணுக்கமான தகவல்கள் தெரியவந்தன. இந்த இரண்டுமே பொருத்தமற்றவை.

குழந்தைத் திருமணம் பழங்காலத்தில் நடைமுறையில் இருந்தது தான் என்றாலும் முகம்மது புரிந்தது வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணத்துடன் இணைக்க முடியாதது. வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணம் என்பது ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே நடத்தி வைக்கும் அல்லது ஒப்பந்தம் செய்யும் திருமணம். இன்னும் ஒரு வழக்கம் கூட இருந்தது. வயது முதிர்ந்த கிழவர்கள் தங்கள் பொருளாதார பலம் கொடுக்கும் திமிரினால் இளவயது கன்னிப் பெண்களை திருமணம் புரிந்தார்கள். ஆனால் முகம்மதுவின் திருமணம் ஐம்பதுக்கும் அதிகமான வயதுடைய கிழவராக இருக்கும் போது ஆறு வயதாக இருந்த சிறுமியை மணந்த திருமணம். இது வழக்கத்தில் இருந்திராதது. எனவே, இதை வழக்கத்தில் இருந்தது தான் என கடந்து போக முடியாது. அல்லது முகம்மதுக்கு முன்பு இவ்வாறான திருமணம் நடந்திருக்கிறது அரபு இலக்கியங்களிலிருந்து எதையாவது எடுத்துக்காட்ட முடியுமா இஸ்லாமிய மதவாதிகளால்? அது யுக முன்மாதிரியான முகம்மதுதின் தகுதிக்கு ஏற்றதா?

ஆய்ஷா எனும் பெண்ணுக்கு மிகுந்த புத்திக் கூர்மை இருக்கும், அது இஸ்லாமிய இல்லற விழுமியங்களுக்கு பயன்படும் என்று ஆறு வயதேயான சிறுமியை கண்டு முகம்மது தெரிந்து கொண்டாரா? என்றொரு கேள்வியை எழுப்பினால் இஸ்லாமிய மதவாதிகள் இப்போது கூறிக் கொண்டிருக்கும் காரணங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பது புரியும். ஆய்ஷா அறிவித்த ஹதீஸ்களில் இஸ்லாமிய இல்லறவியலுக்கான என்ன நுணுக்கமான தகவல்கள் இருக்கின்றன? ஆய்ஷ அறிவித்த ஹதீஸ்களை அறிவிக்க புத்திக் கூர்மை இருக்க வேண்டியது அவசியமா? அப்படி ஒன்றுமில்லை. ஆய்ஷா அறிவித்த ஹதீஸ்களின் கருத்துக்கள் வெகு சாதாரணமானவை. எந்தப் பெண்ணும் எளிதில் அறிவிக்க முடிந்தவை. தவிரவும் ஒரே செய்திய கூறும் போது கூட தவறான தகவல்களை கூறக் கூடிய நிலைமையிலேயே ஆய்ஷா இருந்திருக்கிறார். எடுத்துக்காட்டு புஹாரி 4912 மற்றும் புஹாரி 5268 (இந்த இரண்டு ஹதீஸ்களைப் பற்றிய விபரம் அடுத்த தலைப்பில் விரிவாக இடம்பெறவிருக்கிறது) ஆகவே, அந்தக் கால வழக்கம், ஆய்ஷாவின் புத்திக்கூர்மை இஸ்லாத்துக்கு பயன்பட்டிருக்கிறது என இஸ்லாமிய மதவாதிகள் செய்யும் பரப்புரைகள் நடந்த தவறை நியாயப்படுத்தும் சமாளிப்புகள் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை.

அந்தக் கால வழக்கம், புத்திக் கூர்மை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முகம்மது திருமணம் செய்த பெண்களிலேயே கன்னிப் பெண் ஆய்ஷா மட்டும் தான். முகம்மதின் விருப்பத்திற்குறிய மனைவியும் ஆய்ஷா தான். எந்த அளவுக்கு என்றால் ஆய்ஷாவுடனிருக்கும் நாளை அதிகம் விரும்பியவராகவும், மரண வேளையில் ஆய்ஷாவின் மடியிலேயே என் உயிர் பிரிய வேண்டும் என விரும்பியவராகவும் இருந்திருக்கிறார். இவ்வளவு நேசத்துக்குறிய மனைவியான ஆய்ஷா ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்ட போது முகம்மது சராசரிக்கும் கீழான ஒரு மனிதராக நடந்து கொண்டார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

ஒரு போரை முடித்து விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் முகம்மதும் அவரது படையினரும். முகம்மதுவுடன் ஆய்ஷாவும் இருக்கிறார். ஒரு இடத்தில் ஓய்வுக்காக தங்குகிறார்கள். அங்கு ஆய்ஷா தன்னுடைய நகை ஒன்றை காணாமல் தேடிச் செல்ல, திரும்பி வருவதற்குள் இராணுவக் கூட்டம் கிளம்பி விடுகிறது. திரும்பி வந்து பார்த்து கூட்டத்தைக் காணாததால் யாரேனும் தேடி வரக் கூடும் என எண்ணி அங்கேயே இருந்து தூங்கி விடுகிறார் ஆய்ஷா. பின்னர் தாமதமாக வந்த ஸுப்வான் பின் முஅத்தல் என்பவர் ஆய்ஷாவைக் கண்டு தன் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டு வருகிறார். மதிய உணவிற்காக வேறொரு இடத்தில் தங்கியிருந்த போது ஆய்ஷாவும் ஸுப்வான் பின் முஅத்தலும் இராணுவக் கூட்டத்தோடு சென்று சேர்கின்றனர். இதை காரணமாக வைத்து ஆய்ஷாவுக்கும் ஸுப்வான் பின் முஅத்தலுக்கும் இடையே முறைகேடான உறவுகள் இருப்பதாக கதை கட்டப்பட்டு வதந்திகள் உலா வந்தது. இதை முகம்மதுவும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பத் தொடங்குகிறார். அதனால் ஆய்ஷாவை விவாகரத்து செய்வதற்கும் எண்ணுகிறார். இந்த நிலையில் தான் குரான் வசனங்கள் ஆய்ஷா குற்றமற்றவர் எனக் கூறுகிறது அதன்பிறகே முகம்மது நிம்மதியடைகிறார்.  நீளமான ஹதீஸான புஹாரி 2661 ன் சுருக்கம் இது.

இந்த விசயத்தில் முகம்மது நடந்து கொண்ட முறை எப்படிப்பட்டதாக இருந்தது? ஒரு யுக முன்மாதிரி மனிதர் நடந்து கொள்ள வேண்டிய தன்மையில் இருந்ததா? முகம்மதின் நண்பர்கள், ஒரு மனைவி, ஒரு பணிப்பெண் இவர்களெல்லாம் திடமாக ஆய்ஷா அப்படிப்பட்டவர் இல்லை. என்று கூறும் போது தன் காதல் மனைவி மீது அப்படியான எண்ணம் ஏன் முகம்மதுவுக்கு இல்லாமல் போயிற்று? ஆய்ஷாவிடம் சென்று நீ பாவம் செய்தவளாக இருந்தால் அல்லாவிடம் பாவ மன்னிப்பு தேடிக் கொள் என்று கூறுவது எத்தனை வன்மமானது? குரூரமானது? இந்த விவகாரத்தில் வெளிப்பட்ட குரான் வசனங்கள் மக்களைப் பார்த்து கீழ்க்கண்டவாறு கேள்விகளை எழுப்புகிறது. தொடர்ச்சியாக பதினோரு வசனங்களில் அன்றைய மக்களைப் பார்த்து அல்லா கேள்விகளை எழுப்புகிறான்.

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதைக் கேள்வியுற்ற போது தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டு “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” எனக் கூறியிருக்க வேண்டாமா? குரான் 24:12

அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில் அவர்கள் தாம் அல்லாவிடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். குரான் 24:13

இன்னும் இதை நீங்கள் செவியுற்றபோது “இதைப்பற்றி பேசுவது நமக்கு இல்லை. நீயே தூயவன். இது பெரும்பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா? குரான் 24:16

என்றெல்லாம் அன்றைய மக்களை நோக்கி குரான் வினவுகிறது. ஆனால் மக்களை நோக்கி குரான் இப்படி கேள்வி எழுப்புவதில் ஏதாவது நேர்மை இருக்கிறதா? நேர்மை இருந்திருந்தால் இந்தக் கேள்விகள் முகம்மதை நோக்கியல்லவா எழுப்பப் பட்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் மீது அவதூறு கொண்டு வருபவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்று குரான் கூறியிருந்த விதியை முகம்மது மறந்து விட்டாரா? முகம்மது ஒரு சராசரி மனிதராகவாவது இருந்தால் அவதூறு கூறியவர்களை நோக்கி நீங்கள் கூறுவதற்க்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதையுமே செய்யாமல் மாதக்கணக்காய் குழம்பிக் கொண்டிருந்துவிட்டு, விவாகரத்து எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டு, (இந்த நேரத்தில் இறைச் செய்தி வருவதும் தற்காலிகமாக நின்று போனது என்பது தான் வேடிக்கை – அல்லாவுக்கே குழப்பம் வந்து விட்டது போலும்) கடைசியில் நீங்கள் அவதூறு என்று கூறியிருக்க வேண்டாமா? என்று மக்களைப் பார்த்து கேள்வி கேட்பது எந்த விதத்தில் சரி? இதில் என்ன முன்மாதிரி இருக்கிறது?

சொந்த மனைவி மீது சிலர் அவதூறு பேசும் போது அதில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை அலசிப் பார்த்து  உறுதியாக நின்று சரியான முடிவு எடுக்க இயலாத வெகு சதாரணமான ஒரு மனிதர், லேசான நெருக்குதல் வந்த உடனேயே உடைந்து போய் விட்ட ஒரு மனிதர் தானா இனி உலகம் உள்ளவரை வரும் அனைத்து பிரிவினருக்கும், சந்ததிகளுக்கும் வழிகாட்டக் கூடியவர்? முஸ்லீம்கள் பரிதாபமானவர்கள் தாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக