இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 8
நான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை? செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவுஇது இரண்டாவது சுற்று மறுப்பு. இதில் நண்பர் நேரடி விவாதத்திற்கு நான் ஏன் ஆயத்தமாக இல்லை என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து பலமுறை விளக்கமளித்த பின்பும், மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. எனவே, காத்திரமான பதில்களோ, மறுப்புகளோ முன்வைக்காத பட்சத்தில் இனி இந்தத் தலைப்பை எடுத்துக் கொள்வதில்லை என முடிவு செய்திருக்கிறேன். ஆகவே கடைசியாக மீண்டும்.
அதற்கு முன்னால் சில விளக்கங்களையும் அளிக்க வேண்டியதிருக்கிறது. நண்பர் இஹ்சாஸ் நான் கடைசி இரண்டு முறையாக என்னுடைய பதிவுகளை முறைப்படி அவரிடம் அவரது தளத்தில் தெரிவிக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். அது தவறான குற்றச்சாட்டு. நான் எப்போதும் போல் அவருடைய தளத்தில் அதை தெரிவிக்க முயன்றேன். ஆனால் அவருடைய தளத்தில் அது பின்னுட்டமாக ஏற்கப்படவில்லை. பலமுறை முயன்றும் அதுதான் நிலை என்பதால் விட்டுவிட்டேன். இப்படி ஒரு குற்றச்சாட்டு எழக்கூடும் என எதிர்பார்த்ததால் அதை படமாகவும் எடுத்து வைத்திருக்கிறேன். இதோ,
அடுத்து, நண்பர் இஹ்சாஸ் முதலில் அவருடைய கட்டுரையிலும், பிறகு இங்கு பின்னூட்டமாகவும், பின்னர் கூகிள் அரட்டையிலும் நேரடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு முறைப்படி நான் பின்னுட்டத்திலும், மின்னஞ்சலிலும், அரட்டையிலும் பதில் கூறினேன். ஆனாலும் அவர் தொடர்ந்து நேரடி விவாதத்திற்கு நீங்கள் வர மறுப்பதற்கான காரணங்களை எல்லாம் வீரியமான பதில்கள் மூலம் தகர்த்து விட்டதாகவும், எனவே நேரடி விவாதத்திற்கு வந்தே தீரவேண்டும் என்றும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தார். அதன் பிறகு அவருக்கு இது குறித்து நான் பதில் கூறுவதை நிறுத்தி விட்டேன். அதன் பின்னர் என்னை அம்பலப்படுத்தப் போவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கும் நான் பதிலளிக்கவில்லை. இயன்றால் அவர் அம்பலப்படுத்தலாம், நானும் காத்திருக்கிறேன், அவரின் அம்பலப்படுத்தலுக்காக.
நண்பர் இஹ்சாஸ் முதலில் ஒரு தளத்தை நடத்தி வந்தார். அதில் தன்னுடைய மின்னஞ்சல் யாரோ சிலரால் முடக்கப்பட்டு விட்டதாகவும், அதை தொடர்ந்து பயன்படுத்த இயலாததால் வேறொரு மின்னஞ்சலை ஏற்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவருடைய (பழைய) தளமே முடக்கப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்து பயன்படுத்த இயலாததால் வேறொரு தளத்தில் எழுதுவதாகவும் குறிப்பிட்டு அதே பெயரில் வேறொரு தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது “இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் தொடருக்கு தான் மறுப்பெழுதப் போவதில்லை என்றும் அவருக்கான என்னுடைய மறுப்பை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனாலும் அவருடைய இரண்டு தளங்களும் தொடர்ந்து இயக்கத்தில் தான் இருக்கின்றன, யாரும் முடக்கவில்லை. இவைகளையெல்லாம் ஏன் அவர் செய்திருக்கிறார் என்பது தெளிவாக புரியவில்லை என்றாலும், வெளிப்படுத்திவிடுவது நல்லது என்பதால் ஒரு தகவலாக தெரிவித்துக் கொள்கிறேன். மட்டுமல்லாது அவருடைய மறுப்புகள் அனைத்திற்கும் வழக்கம்போல் நான் விளக்கமளிப்பேன் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அவருடைய கட்டுரைகளில் பல இடங்களில் இறைவன் இருக்கிறானா எனும் தலைப்பில் விவாதம் செய்துவிட்டு அதன் பிறகே விமர்சனங்களைச் செய்ய வேண்டும் எனும் பொருளில் குறிப்பிட்டிருக்கிறார். நான் செய்யும் யூகம் சரியாக இருக்கும் பட்சத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இறைவன் இருக்கிறானா எனும் தலைப்பில் விவாதம் செய்தது நண்பர் இஹ்சாஸாகத்தான் இருக்க வேண்டும். என்னுடைய இந்த யூகம் தவறாகவும் இருக்கலாம். இதை எங்கனமேனும் நான் அறிந்துவிடக் கூடும் என்பதால் தானோ என்னவோ தன்னுடைய மின்னஞ்சல் முகவரி முடக்கப்பட்டு விட்டதாக அறிவித்துக் கொண்டார், இன்னும் அவருடைய பழைய மறுப்புகளுக்கு நான் பதிலளிக்கக் கூடாது எனும் எண்ணத்தில் தளமே முடக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துக் கொண்டார். ஒருவேளை என்னுடைய இந்த யூகங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் என்னை நேரடி விவாதத்திற்கு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருப்பதற்கான எதிர்வினையாக அவரை எழுத்து விவாதம் செய்ய வருமாறு அழைக்கிறேன். இது பிடிவாதமல்ல, ஓர் எதிர்வினை அவ்வளவே, ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவரின் வசதிகளை, விருப்பத்தைச் சார்ந்தது.
இஸ்லாத்தை விமர்சித்து நான் தொடர்கட்டுரைகள் எழுதுகிறேன். இதில் ஏற்பில்லாத யாரும் இக் கட்டுரைகளை மறுத்து தங்கள் விமர்சனங்களை, எதிர்வினைகளை எடுத்துவைக்கலாம். அப்படி எதிர்வினை புரிபவர்களை குறிப்பிட்ட ஒரு வடிவத்தில் தான் நீங்கள் உங்கள் மறுப்புகளை கூறவேண்டும் அப்போது தான் நான் அதற்கு பதிலளிப்பேன் என்று கூறுவது சரியாக இருக்குமா? நான் எனக்கு வசதியான ஒரு வடிவத்தில் எழுத்து வடிவத்தில் என்னுடைய விமர்சனங்களை வைக்கிறேன். இதற்க்கு மறுப்பு தெரிவிக்க விரும்புபவர்கள் எந்த வடிவத்திலும் அதை தெரிவிக்கலாம், மேடைப் பேச்சாக தெரிவிக்கலாம், எழுத்தில் தெரிவிக்கலாம், – கடிதம் எழுதலாம், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் – நேரடியாக என்னிடம் கூறலாம், அவரவர்களுக்கு எப்படி வசதிப்படுகிறதோ அதன்படி அவர்கள் தெரிவிப்பார்கள். அது என்னுடைய கவனத்திற்கு வரும் போது என்னுடைய வசதிப்படி அவர்களுக்கு பதிலளிப்பேன். இதில் முக்கியமானது கேள்விக்கு என்ன பதில், விமர்சனத்திற்கு என்ன விளக்கம் என்பதுதான். மாறாக என்ன வடிவத்தில் அந்த பதில் அல்லது விளக்கம் இருக்கிறது என்பதல்ல. எனவே இவர்கள் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என அழைப்பது அடிப்படையிலேயே தவறானது.
இனி நண்பரின் மறுப்புகளுக்குள் கடப்போம். இஸ்லாமியர்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுவதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் “இஸ்லாம் கற்பனைக் கோட்டைகளின் விரிசல்கள் வழியே” எனும் தொடரில் இதுவரை நான் அவ்வாறான கட்டுரைகள் எதையும் எழுதாமல் இஸ்லாத்தை விமர்சிப்பதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன் என்பதாக தன் மறுப்பை தொடங்குகிறார். \\ இன்னும் சொல்லப்போனால் அது பற்றி இதுவரை வாய்கூட திறக்கவில்லை// என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது சரியா? நான் அந்தத் தொடரின் நுழைவாயில் பகுதியிலேயே தெளிவாக இப்படி குறிப்பிட்டிருக்கிறேன். \\ தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும், தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை ….. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது// எனவே எது முன்நிபந்தனையாக இருக்கிறதோ அதையே தற்போது செய்து கொண்டிருக்கிறேன். உழைக்கும் மக்களாய் தாங்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் இந்த உலகிலிருந்து கிளைத்து வருபவை என்பதை உணர்ந்து வீரியமாய் போராட வரவேண்டுமானால்; இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நானே காரணம் எனும் கடவுளின் கூற்றை மறுத்தாக வேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இன்னொரு பக்கம், இந்தத் தொடருக்கு வெளியே நான் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் மக்களுக்கு போராடவேண்டிய அவசியத்தை, அவசரத்தை உணர்த்தும் வண்ணமே அமைந்திருக்கிறது. இந்தக் கட்டுரைகள் இஸ்லாமியர்களையும் உள்ளடக்கியே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே நான் வாய் திறக்கவில்லை என்று கூறமுடியாது. மட்டுமல்லாது, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கென நான் வாய்திறந்தவைகள் கீழே சுட்டிகளாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முதலில் நேரடியாக வருகிறேன் என்றும், பின்னர் முடியாது என்றும் கூறியது ஏன்? காலம் கடந்த ஞானமா? என்கிறார். ஆம். அதில் தவறென்ன இருக்கிறது. முதலில் உத்தேசித்த ஒன்று இறுதி இலக்கிற்கு மாற்றமாக போகும் என பின்னர் உணர்ந்தால் முன்னர் அறிவித்ததிலிருந்து மாறிக் கொள்வதில் தவறொன்றுமில்லை. நான் எழுதும் அனைத்திற்கும் பதிலளிக்கப் போகிறேன் என முன்னர் தொடங்கிவிட்டு பின்னர் மறுப்புக்கு மட்டும் மறுப்பு என பின்னர் நண்பர் மாறிக் கொள்ளவில்லையா, அந்த வகையிலான காலம் கடந்த ஞானம் தான். அடுத்து வடிவம் குறித்தும் பேசியிருக்கிறார். வடிவம் முதன்மையானதல்ல, பதிலே முதன்மையானது. அதனால் தான் எனக்கு வசதியான வடிவத்தில் பதிலலிக்கிறேன். ஆனால் அவர்களுக்கு வடிவமே முதன்மையானதாக இருக்கிறது, அதனால் தான் நேரடியிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து சில அழகிய பதில்களையும் அபத்தங்களையும் பார்க்கலாம்.
1. உடனுக்குடன் பதில் கூற வேண்டிய தேவை இருப்பதால் துல்லியமான தெளிவான வாதங்களை வைக்க வியலாமல் போகலாம். இது நேரடியில் உள்ள குறைபாடு. நண்பரின் அழகிய பதிலோ, ஐந்தோ பத்தோ நிமிடங்கள் பதில் கூறுவதற்கு அவகாசம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்லலாமே என்பது. ஆக நேரடியில் குறை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார் கூடவே அதை சரி செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது என்கிறார். ஐந்தோ பத்தோ நிமிடங்கள் எடுத்துக் கொண்டு பதில் கூறினால் அது விவாதமாக இருக்குமா? சரி அதற்கும் கூடுதலாக அவகாசம் தேவைப்பட்டால், எடுத்துக் காட்டாக அவர்கள் ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள் என்று கொள்வோம் அதற்கு இன்னொரு ஹதீஸையே பதிலாக கூறினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆனால் அது முஸ்லிமிலா, புஹாரியிலா, திர்மிதியிலா எதில் இருக்கிறது என்று நினைவில் இல்லை. தேடிப்பார்த்துத்தான் கூறவேண்டும். இதற்கு நேரடியில் வசதி இருக்கிறதா? அப்படியே கூறினாலும் கண்ணுறுபவர்கள் மீது கூறப்படும் பதில் தாக்கம் செலுத்துமா? பதில் கூற எடுத்துக் கொள்ளும் நேரம் தாக்கம் செலுத்துமா?
2. நம்பிக்கையோடு ஊடாடி நிற்கும் ஒன்றில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது எனவே குறுகிய காலத்தில் முடிந்துவிடும் என்பதால் நேரடி சிறந்தது என்று கூறமுடியாது காலம் நீண்டாலும் அனைத்து தளங்களிலும் ஊடுருவி செய்யப்படும் விவாதமே சிறந்ததாக இருக்கும் அதற்கு நேரடி சிறந்ததல்ல. நண்பரின் அழகிய பதிலோ, பிரச்சனையை தீர்ப்பதற்கு பல ஆண்டுகள் கழிந்தாலும் கழியுமே தவிர கொள்கை சரியா தவறா என்பதற்கு நீண்ட நாள் தேவைப்படாது என்பது. இங்கு பிரச்சனையே கொள்கை சரியா தவறா என்பது தான். கொள்கையின் அடிப்படையில் பிரச்சனை ஏற்படும் போது பிரச்சனையும் கொள்கையும் வேறு வேறு என்றாகுமா? மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கும் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு குறைந்த காலம் தேவைப்படும். நேரடிக்கு ஆயத்தமாக இருப்பவர்களுக்கு மீளாய்வு இருக்கிறதா? எனும் கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் இஸ்லாத்திலேயே மீளாய்வுக்கு இடமில்லை. இஸ்லாமே அனைத்தையும் விட சிறப்பானது என்று மாளா நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கூறுகிறார்கள் கொள்கை சரியா தவறா என்பதற்கு நீண்ட நாள் தேவைப்படாது என்று. பிரச்சனையை விட கொள்கையே ஆழமானது. எடுத்துக்காட்டாக குடிக்கும் பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை தொடர்ந்து குடிக்காதே என்று நடைமுறை சார்ந்து பிரச்சனையை எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு சிறகில் நஞ்சும் மறு சிறகில் அதை தீர்க்கும் மருந்தும் இருக்கிறது எனவே பானத்தில் ஈ விழுந்தால் அதை நன்றாக அந்த பானத்திற்குள் அமுக்கி எடுத்துப் போட்டு விட்டு குடியுங்கள் எனும் ஹதீஸை தவறு என எப்படி புரியவைப்பது?
3. இதுவரை அவர்கள் நடத்திய விவாதத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை, எனவே நேரடியே சிறந்தது என்று கூற முடியாது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ இங்கு நடந்த எழுத்து விவாதத்திலும் முடிவு எட்டப்படவில்லையே என்பது. இந்த தளத்தில் சில விவாதஙக்ள் நடந்துள்ளன. அவைகளை படித்துப் பார்க்கும் எவரும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும், எழுப்பப்டும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திசை திருப்பி, சுற்றி வளைத்து, அவதூறு கூறி விலகி ஓடியவர்கள், குழப்பம் ஏற்படுத்தி தொடரமுடியாமல் செய்தவர்கள் யார்? என்பது. இதற்கு அவர்கள் கூறிய சாக்குப் போக்கு தான் மூன்றாம்வர் எழுதுகிறார், வேறொருவர் விவாதிக்கிறார் என்பது. அதையே நண்பரும் கூறியிருக்கிறார். விவாதத்தில் நேர்மை இல்லாவிட்டால் எங்கும் முடிவை எட்டமுடியாது, நேரடியாக இருந்தாலும் எழுத்து விவாதமாக இருந்தாலும்.
4. வெளியில் விமர்சனம் செய்வதற்கு முன்னால் எங்களிடம் விவாதம் செய்ய வரட்டும் என பிஜே தளத்தில் இருக்கிறது, இது தவறானது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ விவரம் தெரியாத மக்களிடம் செய்வதை விட எங்களிடம் செய்யுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது என்பது. விவாதம் செய்ய முஸ்லீம்கள் தயாராக இருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் தயாராக இல்லையா? விவாதம் இங்கு பிரச்சனையல்ல. நேரடியாக என்று வடிவத்தை முதன்மைப்படுத்துவது தான் பிரச்சனை. மட்டுமல்லாது பிஜே தளத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது \\ விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும்// இதன் பொருள் என்ன? வெளியில் அதாவது வேறு ஊடகங்களில் வேறு வடிவங்களில் விமர்சிப்பதற்கு முன்னால் இவர்களிடம் விவாதம் செய்திருக்க வேண்டும் என்பது தான். அதிலும், பொதுவாக முஸ்லீம்கள் விவாதம் செய்ய முன்வராத போது என்று எழுதி எந்த வடிவத்திலும் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பது போல் எழுதிவிட்டு அடுத்த வரியிலேயே பகிரங்க விவாதம் என்று நேரடியை குறிப்பிடுவது எழுத்துச் சித்து.
5. நாங்கள் வென்றுவிட்டோம் என மிகைப்படுத்தி கூறுவது, விளம்பர, வியாபார நோக்கங்களுக்காக தான் நேரடிகள் நடத்தப்படுகின்றன. நண்பரின் அழகிய பதிலோ வெல்லாமல் வென்று விட்டோம் என்று கூற முடியாது, வியாபார நோக்கம் இல்லை என்பது. திகவுடன் நடந்த விவாதத்தை எடுத்துக் கொள்வோம். அறிவியலை முன்னறிவிப்பு செய்திருக்கிறது என்று கூறப்படும் வசனங்கள் எல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன, அறிவியல் விளக்கங்கள் வந்த பின் அவற்றை அந்த வசனங்களில் ஏற்றிக் கூறுகிறீகள் என்பது திக வினரின் ஒரு குற்றச்சாட்டு. ஆனால் பிஜேவினரோ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது, இந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினார்களேயன்றி திகவினரின் குற்றச்சாட்டை கண்டு கொள்ளவே இல்லை. இதை எப்படி வெற்றி என்று கொள்ள முடியும்? நண்பர் வியாபார நோக்கமல்ல என்கிறார் ஒரு ரியால் பெறாத சிடியை 20 ரியாலுக்கு விற்பது தான் செலவை ஈடுகட்டுவது போல. சாப்பாடு போட்டு தங்க வைத்தோம் என்று வீர வசனம் பேசிய தார்மீகத்தை வளைகுடா நாடுகளிலும், இலங்கையிலும் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கில் சிடி விற்று வந்த காசில் ஈடுகட்டிக் கொண்டார்கள் போலும்.
6. மத அமைப்புகளுடன் விவாதம் செய்வதைவிட உழைக்கும் மக்களிடம் நேரடியாக அவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளுனூடாக விவாதம் செய்து அம்பலப்படுத்துவதே அவசியமாய் இருக்கிறது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ இணைய விவாதத்தை விட நேரடி விவாதமே பொருளாதார ரீதியிலும் உழைக்கும் மக்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பது. இங்கு இணைய விவாதம் சுட்டப்படவே இல்லை, மத அமைப்புகளிடம் நேரடி விவாதம் செய்வதைவிட உழைக்கும் மக்களிடம் நேரடியாக பேசி அவர்களின் நம்பிக்கைகளின் பிடி வாழ்வோடு எவ்வாறு முரண்பாடாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதே சிறப்பானது. அதை தொடராக செய்து வருகிறோம்.
இங்கு எது அபத்தமாக இருக்கிறது எது அழகிய பதிலாக இருக்கிறது என்பதை நண்பரே தீர்மானிக்கட்டும். ஆனாலும் அவைகளை தீர்மானிப்பதற்கு முன்னால் எழுத்து விவாதமே சிறந்தது என்பதற்கு முன்வைக்கப்பட்டு நண்பரால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளட்டும். \\ தான் நிற்கும் நிலை சரியானதா? தவறானதா? எனும் மீளாய்வுக்கு அப்பாற்பட்டு அது வெல்ல வேண்டும் என்பதே தேவையானது என ஒருவன் நினைத்துவிட்டால் அவனிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியாது, அது இணையத்தில் என்றாலும், நேரடியாக என்றாலும் ஒன்றுதான். இதில் முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டியது விவாத நேர்மைதானேயன்றி இணையமா? நேரடியா என்பதல்ல// \\ நேரடியாக விவாதிப்பது அந்த நேரத்தில் நினைவில் இருக்கும் விவரங்கள், குறிப்புகள், சான்றுகள், உணர்ச்சிகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கும். இணையத்தில் புதிதாக குறிப்புகளை விவரங்களை சான்றுகளை தேடித்தேடி சரியான திசையில் விவாதத்தை நடத்தமுடியும். மட்டுமன்றி நடத்தும் விவாதத்தில் உணர்ச்சிக் கலப்பின்றி நிதானமாகவும் அறிவார்த்தமாகவும் விவாதிக்க முடியும். நேரடி விவாதத்தில் பலம் பலவீனங்களைக் குறிப்பறிந்து, பலமான இடங்களைத் தவிர்த்தும் பலவீனமான இடங்களை விரித்தும் விவாதத்தின் போக்கை மாற்ற முடியும். அதாவது எடுத்துக்கொண்ட தலைப்பின் விவரங்களைவிட செயல்படுத்தும் உத்தி அதிகப்பங்காற்றும். அவ்வாறில்லாமல் இணைய விவாதத்தில் ஏனைய எதுவும் முக்கியப்படுத்தப்படாமல் எடுத்துக்கொண்ட தலைப்பிலான விவரங்கள் மட்டுமே விவாதத்தை நகர்த்தும்//
இதில் இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கிறது. என்னுடைய தொடர் குறித்த தகவலை பிஜேவின் தளத்திற்கு எடுத்துச் சொன்னவரின் கோரிக்கையே நேரடி விவாதத்திற்கு மறுத்துவிட்ட நிலையில் அவரின் கட்டுரைகளுக்கு பதிலளியுங்கள் என்பது தான். பதிலளிப்பது குறித்து எதுவும் கூறாத பிஜே நேரடியாக வரட்டும் என்கிறார். ஏன்? திக வின் கட்டுரைக்கு மாய்ந்து மாய்ந்து உணர்வில் 17 வாரங்களுக்கு எழுதித்தள்ளிய அவர்கள் இப்போது மட்டும் நேரடி எனும் ஒற்றை திரையில் மறைந்து கொள்வதேன்? எத்தனை முறை விளக்கினாலும் நேரடி நேரடி என்று கூப்பாடு போடும் ரசிகமணிகளுக்கு எதிராக எழுத்தில் பதில் கூறட்டும் என நான் கேட்பதில் ஒன்றும் தவறில்லை.
\\ விமர்சனத்தை எதிர்த்துவளர்வதென்றால் அதை ஒதுக்குவது என்பதல்ல! தன்னை நோக்கிவரும் விமர்சனத்தை எதிர்கொண்டு எந்த விமர்சனமும் சரியல்ல என்று நிரூபிப்பதுதான்// இப்படியும் நண்பர் எழுதியிருக்கிறார். வள்ர்ச்சி என்றால் என்ன என்பதே நண்பருக்கு விளங்கவில்லை. இஸ்லாத்திற்கு வளர்ச்சி இருக்கிறதா? எந்த மாற்றத்திற்கு அவசியப்படாமல் 1400 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்ட ஒன்றில் என்ன வளர்ச்சி? எந்த விமர்சனம் என்றாலும் அது தவறு என்று நிரூபிப்பார்களாம். அதாவது விமர்சனம் எழுவதற்கு முன்பே அது தவறாகத்தான் இருக்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்றால் அது தேக்கமாகத்தான் இருக்க முடியும் வளர்ச்சியாக இருக்க முடியாது.
\\ பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.
தவறாக இருப்பின் மாற்றிக்கொள்வதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஒரு விடயம் தனக்கு பிடிக்காவிடின் மற்றவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது அறியாமை//
இதில் நான் கூறவருவது என்ன என்பதை நண்பர் விளங்கிக் கொண்டாரா என்பதே புரியவில்லை. நான் குறிப்பிடும் தொனி என்ன? கோழைத்தனமானது, அறிவில்லாமல் இருக்கிறார்கள், முட்டாள்தனமாக உளறுகிறார்கள் என்பதுபோல் எழுதுவதெல்லாம் பிஜேவுடைய பாணி. நாம் ஒரு கருத்தைக் கூறுகிறோம், அதற்கு எதிராக அவர்கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள் எனும் பார்வையே அங்கு இருப்பதில்லை. நாம் மட்டுமே சரியாக கூறுகிறோம் மற்றவர்களெல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் எனும் தரத்தில் தான் அவருடைய நடை இருக்கும். அதே போன்றதொரு நடை நண்பரிடத்திலும் தென்படுகிறது அதை மாற்றிக் கொள்ளலாம் என நான் கேட்டுக் கொண்டால் தனக்குப் பிடிக்காவிட்டால் அதை மாற்றக் கோருவது அறியாமை என்கிறார். இதோ இந்தப் பதிவிலும் கூட நண்பர் இப்படி எழுதியிருக்கிறார், \\ முடியாவிட்டால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்// இது போன்று எழுதுவதையெல்லாம் தங்களின் அடிப்படை உரிமை என்று கருதுகிறாரா நண்பர். என்றால் வெளிப்படையாக அதை தெரிவிக்கட்டும், நானும் அந்த நாராச நடைக்கு மாறிக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக