பிஜே ஆன்லைன் எனும் இணையதளத்தில் 'போலிபகுத்தறிவாளர்களுக்கு....' என்னும் தலைப்பில் மூன்று பாகங்களாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். அதாவது சேதுக்கால்வாய் தொடர்பான பிரச்சனையில் ராமன் கற்பனை பாத்திரமா என்ற வாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம், ராமகோபாலனுக்கு மறுப்பாக 'உணர்வு' இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை உண்மை இதழில் விமர்சனம் செய்து வெளியிட்டிருந்த ஒரு கட்டுரைக்கு மறுப்பாக மேற்கண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். நண்பரொருவர் இதை மறுக்க முடியுமா உங்களால்? என்றார் நானும் கடவுள் மறுப்பாளன் என்ற முறையில். இதன் மூலம் உண்மை இதழின் சார்பில் இதை எழுதுகிறேன் என்றோ, நான் திராவிடர் கழகத்தை சார்ந்தவன் என்றோ கருதிவிடலாகாது. இன்னும், திராவிடர் கழகம் குறித்தான கேள்விகளை அவர்களிடமே விட்டுவிட்டு ஏனயவற்றிற்கு மட்டுமே பதில்தர முயலுகிறேன். முன்னதாக, ராமன் குறித்தும், சேதுக்கால்வாய் தொடர்பான பிரச்சனை குறித்தும் நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பில் (மகஇக)பல்வேறு இடங்களில் பிரச்சார கூட்டங்களும், வெளியீடுகளும், துண்டறிக்கைகளும், கவிதை நூலும் வெளியிட்டுள்ளோம் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். பிஜே ஆன்லைன் எனும் இணையதளத்தில் பின்னூட்டமிடுவதற்கோ, மறுப்பு தெரிவிப்பதற்கோ வசதியிருப்பதாக தெரியவில்லை. எனவே இந்த மறுப்பை என்னுடைய தளத்திலேயே பதிவிடுகிறேன். அந்த தளத்திற்கும் இது குறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த கட்டுரையை படிக்க நினைப்பவர்கள் அங்கு சென்று படித்துக்கொள்ளவும் (இதில் எப்படி இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை).
கடவுள், உயிர்த்தெழுப்புதல், சொர்க்கம் நரகம், மிஹ்ராஜ் பயணம் இவைகளையெல்லம் அறிவியல் போர்வமாக நிரூபிக்க முடியுமா? என்பது கேள்வி. இதற்கு "எதையெடுத்தாலும் அறிவியல் போர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேட்பது மூடர்களின் கேள்வி" என்று எழுதியுள்ளீர்கள், இதுதான் உங்கள் பதிலா? நாங்கள் நம்புகிறோம் என உங்கள் நிலைப்பாடு இருந்தால் அதில் யாரும் குறுக்கிட மாட்டார்கள். ஆனால் அறிவியல் உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறது குரான் என்று அறிவியலை துணைக்கழைப்பது தான் வாதத்தின் மையப்புள்ளி. ஐயம் என்று வந்துவிட்டால் அதை தீர்ப்பதற்கு அறிவியலை தவிர வேறு சிறந்த வழியுண்டா? இருந்தால் கூறுங்கள் அதையும் பரிசீலிக்கலாம்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விரும்புகிறான், முன்னிருக்கும் சுவையான உணவின் மீது ஒருவன் ஆசைப்படுகிறான். இதை அறிவியல் பூர்வமாக எப்படி நிரூபிப்பது என்று உங்கள் வாதத்திற்கு துணைசேர்த்துள்ளீர்கள். ஏன் இவைகளை நிரூபிக்க முடியாதா? ஆசை, கோபம், பாசம், விருப்பு, வெறுப்பு எல்லாமே மூளையின் நியூரான்களின் செயல்பாடு தான். குறிப்பிட்ட பகுதியில் அவற்றை அளவிடுவதன் மூலம் விருப்பு, வெறுப்பை தெரிந்துகொள்ள முடியும்.
பூமி உருண்டை என நபிகள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தெரியாது என்று எல்ல இடங்களிலும், எல்ல நூல்களிலும் கூசாமல் கூறியும், எழுதியும் வருகிறீர்கள். இதற்கு அனேக முறை பதிலும் கூறப்பட்டு விட்டது என்றாலும், நீங்கள் இப்படி கூறுவதை மற்றுவதாக இல்லை. பூமி உருண்டை என முதலில் கூறியவர் ஃபைலோலாஸ் ஆண்டு கிமு 450ல் அதாவது உங்கள் நபிகளார் பிறப்பதற்கு சற்றேறக்குறைய 1050 ஆண்டுகளுக்கு முன்பு. கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரோட்டஸ்தனிஸ் என்பவர் பூமியின் சுற்றளவை தோராயமாக கணக்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய துல்லியமான கணக்கீடு 24902.4 மைல். இன்தக் கணக்கீட்டை அவர் கூறியது உங்கள் நபிகள் பிறப்பதற்கு சற்றேறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பு. எனவெ நபிகளின் காலத்தில் பூமி உருண்டை என்ற அறிவு மக்களுக்கு இருக்கவில்லை என கூறிவருவதற்கு வெட்கப்படுங்கள். மேலும் குரானில் பூமி தட்டை எனும் பொருள் தரும்படியான வசனங்கள் உள்ளன. பூமியை பாயைப்போல் சுருட்டி விட எம்மால் முடியும் என்பது போன்ற வசனங்கள் சில இடங்களில் வருகின்றன. இதன் பொருள் என்ன கூறுவீர்களா?
சூரியன் பல்லாயிரக்கணக்கான மைல் வேகத்தோடு கோள்களை இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்றா குரான் கூறுகிறது? அப்படியென்றால் "வானங்களும் பூமியும் இடம்பெயராதபடிக்கு அவனே தடுத்து வைத்துள்ளான்" என்ற குரான் வசனத்தின் பொருள் என்ன கூறுங்கள்.
புவியீர்ப்பு விசை குறித்து குரான் கூறியிருப்பதென்ன? நீங்கள் பார்க்கக்கூடிய தூண் இன்றி வானங்களை படைத்தான் என்பது தானே? பழங்கால நம்பிக்கையான பூமியையும் வானத்தையும் ராட்சசர்கள் தாங்கி நிற்கிறார்கள் என்பதன் திருந்திய வடிவம் தானே இது.
எதுவும் தாங்கி நிற்கவில்லையென்றால் விழுந்துவிடாதா என்ற எண்ணத்தின் மேம்பட்ட வெளிப்பாடு தானே இது. இதோடு மனிதன் பலவிதமான சோதனையின் வாயிலாக கண்டுபிடித்த பிவியீர்ப்பு விசையுடன் முடிச்சுப்போடுவது உங்களுடைய சுவையான கற்பனை. ஏன் புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இன்த வசனத்தின் முக்கியத்துவம் பற்றி யாராவது கூறியதுண்டா?
வானமும் பூமியும் இணைன்திருந்தனவென்றும், வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான் விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. இதில் எங்கிருந்து பெருவெடிப்புக்கொள்கை வருகிறது? ஒரு சிங்குலாரிடியிலிருந்து, ஒரு புள்ளியிலிருந்து வெடித்துப்பரவியது தான், பரவிக்கொண்டிருப்பது தான் பிரபஞ்சம் என்பது பெருவெடிப்புக்கொள்கை. மேற்கூறிய வசனங்கள் இப்பொருளை தருகின்றனவா? வானம் என்பது ஒன்றுமில்லா வெளி தான் பூமியைப்போல் பொருளல்ல ஆனால் குரான் எதோ பொருள் போல எண்ணிக்கொண்டு இணைந்திருந்தது பிரித்தோம் என்றெல்லாம் கூறுகிறது. இதற்கு என்ன விளக்கம் கூறுவீர்கள்?
தேனி வயிற்றிலிருந்து தேன் வருகிறது என்பது இருக்கட்டும், தேனி கனிகளை சாப்பிடுகிறது என்று குரான் கூறுகிறதே அதை முதலில் விளக்குங்கள்.
இன்றைய, இன்னும் எதிர்காலத்தைய அறிவியல் ஆய்வுகளையெல்லாம், மனிதன் பல்வேறு ஆய்வுகள், அனுபவங்கள், சிரமங்கள் பரிசோதனைகள் மூலம் முயன்று, முயன்று உறுதிப்படுத்தி கண்டுபிடித்தவைகளை, எல்லாம் முடிந்தபின் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் தந்துவிட்டது என்று கூறுவது மக்களுக்கு என்ன பலனைத்தரும்? ஏனைய மதங்கள் அறிவியலுக்கு எதிராக இருந்தன எங்கள் மதம் அப்படியில்லை என நிலைப்படுத்த முயல்வது ஏன்? எங்கள் மதமே உயர்ந்தது அதில் இணைந்து கொள்ளுங்கள் எனும் பிரச்சாரத்திற்காகத்தானே. அறிவியலோடு உங்கள் மதத்தை இணைக்கவிரும்பினால், முதலில் நீங்கள் பரிசீலனைக்கு தயாராகவேண்டும். எந்தக்காலத்திலும் மாறாதது என்று கூறிக்கொண்டு அறிவியல் என்று கூறுவதிலுள்ள முரண்பாடு தெரியவில்லையா? மாறவே மாறாத விதியென்று பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை. காலமும், சூழலும், வெளியும் தான் தீர்மானிக்கின்றன. அவைகளையெல்லம் இறைவன் தீர்மானிக்கிறார் என்று கூறுவீர்களாயின் அறிவியல் நிரூபணங்கள் வேண்டும்.
குவாண்டம் மெக்கானிசத்தையும், ரிலேட்டிவிடி தியரியையும், ஸ்ட்ரிங் தியரியையும் இணைப்பதற்கு அறிவியலாளர்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். குரானிலிருந்து ஒரு தீர்வை சொல்ல முடியுமா?
"குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற மூட நம்பிக்கைக்கு" என்று குறிப்பிட்டுள்ளீர்களே களிமண்ணீலிருந்தும் நீரிலிருந்தும் ஆண்டவன் படைத்தான் என்பது தான் பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கையா? மனிதனின் மூதாதையர் குரங்கு என்ற டார்வின் சித்தாந்தம் யூகம் தான், கோட்பாடு தான். ஆனால் அதை மல்லாக்கப் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டு செய்யும் யூகம் என்பது போல் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். அந்த யூகத்திற்கு ஆதாரமாய் இருப்பது அறிவியல் ஆய்வுகளே. பல ஆண்டுகளாக 'பீகிள்' கப்பல் பயணத்தின் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்து; தாவரவியலுக்கு உதவியாக அறிவியலாளர் ஜொசப் டால்டன் கூக்கரும், புதைபடிவ, பாஸில்கள் துறை ஆய்வாளர் சார்லஸ் லையெல்லுடனும், நிலவியல் ஆய்வாளர் செட்ஜ்விக்குடனும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் விளைவு தான் டார்வின் கோட்பாடு. இன்றுவரை டார்வின் கோட்பாட்டை மேம்படுத்தியவர்கள் உண்டே தவிர, மறுத்து அறிவியல் ரீதியாக நிரூபித்தவரில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மூடநம்பிக்கைதான். மாறாக குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையர் என்பது தான் சரியானது. அது தான் டார்வின் கோட்பாடின் வழி. சுருக்கமாகச்சொன்னால், பாலூட்டியும், மண்டையோட்டின் கீழ்பகுதியில் இணைந்த முதுகெலும்புடனுமான ஹோமினாய்டியா பேரினத்திலிருந்து ஹோமினிடே சிற்றினம். அதிலிருந்து பாங்கிடே, ஹோமினினே என்று இரண்டு கிளைகள். பாங்கிடே கிளையிலிருந்து உராங்உடானும், ஹோமினினே கிளையிலிருந்து ஹோமினினி என்றும், ஆப்பிரிக்க மனிதக்குரங்குகள் என்றும் இரண்டு பிரிவுகள். ஆப்பிரிக்க மனிதக்குரங்கிலிருந்து கொரில்லா, சிம்பன்சி,போனபோ போன்றவையும், ஹோமினினியிலிருந்து நம்முடைய அழிந்துபட்ட மூதாதையரும், இன்றைய மனிதனும் உருவானார்கள். இதுதான் மனித மூதாதையர்களின் வரலாறு. நம்முடைய அழிந்துபட்ட மூதாதையர்களைப் பார்த்தால் பிந்திக்காந்திரோப்பஸ், ஆஸ்ட்ரலோபிதஸின், ஹோமாஹெபிலைன், ஹோமாஎரக்டஸ், ஹோமாசெபியன், ஹோமாசெபியன்செபியன், நியாண்டர்தால், க்ரோமாக்னன். இது தான் மனிதனின் வரிசை, இதில் க்ரோமாக்னன் என்பது தான் தற்கால மனிதன் அதாவது நாம். இன்றைக்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை நியாண்டர்தால்கள் வாழ்ந்திருந்தனர். பிந்திக்காந்திரோப்பஸிலிருந்து நியாண்டர்தால்கள் வரையிலான எலும்புகளும், மண்டையோடுகளும் பற்கள், கல்லாயுதங்கள் போன்றவையெல்லம் ஆதாரங்களாக உள்ளன. மறுக்க முடியுமா உங்களால்?
தற்போதைய மனித மூளையின் மேல் மையலின் என்ற மெலிதான உறை அமைந்திருக்கின்றது. நாற்பதாயிரம் ஆண்டுகளுக்குமுன் இன்த உறை கிடையாது கூறுகின்றனர் அறிவியலாளர்கள். அதாவது மனிதனின் பரிணாமவளர்ச்சியில் மூளை பெற்றிருக்கும் உறை. படைப்புக்கொள்கைக்கு சம்மட்டி அடிக்கவில்லையா இது?
குரானில் ஒரு வசனம், வானவர்களை அழைத்து படைக்கப்பட்ட ஆதாமைக்காட்டி வணங்கச்சொல்லிவிட்டு சில பொருட்களின் பெயரை கூறுமாறு கேட்க, வானவர்கள் நீயே தெரிந்தவன் எனக்கூற, ஆண்டவன் ஆதாமைக்கூறுமாறு பணிக்க ஆதம் எல்லாப்பெயரையும் கூறுமாறு வருகிறது. அதாவது ஆதி மனிதன் மொழிபேசியதாக குரான் கூறுகிறது. ஆனால் நியாண்டர்தால்கள் தாம் ஒற்றை வல்லொலிகளை எழுப்பி பேசமுயன்ற இனம் என்று அறிவியல் கூறுகிறது. குரானின் கூற்றை நேரடியாக மறுக்கிறது அறிவியல். இதற்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம்? அவ்வளவு ஏன்? சிம்பன்சிக்கும் நமக்கும் மரபணுக்களில் 97 விழுக்காடு ஒற்றுமை உண்டு, 3 விழுக்காடு தான் வித்தியாசம்.
ஆப்பிரிக்காவில் ஒரு தாயிலிருந்து மனித இனம் உருவானதாக இந்தியாடுடே கட்டுரையில் வன்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் தோன்றியது என்பது தான் சரி. அறிவியல் அப்படித்தான் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரே தாயிலிருந்து என்று நீங்களாக கற்பனைசெய்துகொள்ள வேண்டாம். அதுசரி, ஆதாமும் ஏவாளும் இலங்கையில் வாழ்ந்ததாக ஒரு இஸ்லாமிய ஆய்வுக்(!)கட்டுரை படித்ததாக ஞாபகம். இதுவும் ஆப்பிரிக்காவும் முரண்படுகிறதே எப்படி சரிசெய்வீர்கள்?
இந்த அறிவியலெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், டார்வின் கொள்கையை யூகம் என்று ஒதுக்கும் நீங்கள், பெரு வெடிப்புக்கொள்கையை 1400 ஆண்டுகளுக்கு முன் குரான் கூறியுள்ளது என்று ஏற்றுக்கொள்கிறீர்களே எப்படி? அதுமட்டுமென்ன நிரூபிக்கப்பட்ட ஒன்றா? அதுவும் கோட்பாடு தானே அதைமட்டும் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்? குரான் வசனத்தோடு எதோவகையில் பொருத்திக்கொள்ள முடிகிறது என்பதாலா? அப்படியென்றால், குரான் வசனத்துடன் பொருத்தமுடிந்தால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்பீர்கள், பொருத்தமுடியாவிட்டால் யூகம், கோட்பாடு என்பீர்கள் இது தானே உங்கள் நிலைப்பாடு? இதுதானே உங்கள் அறிவியல்? கோட்பாடா நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்பதெல்லாம் உங்களுக்கு பொருட்டல்ல, குரான் வசனங்களோடு பொருத்த முடிகிறதா? முடியவில்லையா? என்பதுதான் நீங்கள் அறிவியலை பார்க்கும் பார்வை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக