ஞாயிறு, 6 நவம்பர், 2011

நான் நாத்திகன் ஏன்??



நான் என்னை நாத்திகன் என்று அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்கிறீர்களா??

பிறப்பால் நான் ஒரு ஹிந்து. இன்றும், எவ்வாறு பிறக்கும் போதே குழந்தைகளுக்கு மதம் திணிக்கப்படுகிறதோ, அதே போல் தான் எனக்கும் ஹிந்துக் கடவுள்களையும் புராண இதிகாசங்களையும் நம்பும் படி கூறி வளர்த்தனர். அதனால் சிறு வயதில் நானும் கடவுள் நம்பிக்கை உடையவனாகத்தான் இருந்தேன். ராமாயணம், மஹாபாரதக் கதைகளை கேட்டு வளர்ந்தவன் தான் நானும். எனது ஊரில் பத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன(உள்ளது). அதனால் அகிலத்தை காக்கின்ற கடவுள் நம்மையும் காப்பார் என்ற நம்பிக்கையில் தான் நானும் வளர்ந்தேன்.

முதன் முதலில் என் நம்பிக்கையில் விரிசல் ஏற்படுத்தியது சாதிய முறை தான். இன்றும் கிராமங்களில் நிலவி வரும் சாதிய முறை எனது ஊரிலும் அதன் ஆழமான வேரினை பரப்பி இருந்தது. எங்கள் கிராமத்தில் உயர்சாதியினர் என்று கூறிக் கொள்ளும் பிரிவினில் நான் பிறந்திருந்ததனால் எனக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எனது உறவினர்களை யாரையாவது பெயர் சொல்லியோ மரியாதை இல்லாமல் அழைத்தாலோ திட்டு வாங்கிய நான், எங்கள் ஊரிலுள்ள கீழ்சாதியினரை (அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர்களாக இருப்பினும்) பெயர் சொல்லி அழைக்குமாறு எனது உறவினர்களே என்னை அறிவுறுத்தியது, சாதிய முறை பற்றி என்னை சிந்திக்க வைத்தது. அவர்கள் என்னை விட வ்யதில் மூத்தவர்களாக இருந்தாலும் என்னை மரியாதையுடன் அழைப்பது, அவர்களை எங்களது வீட்டிற்குள் அனுமதிக்காதது, கோயில்களில் வழிபாடு செய்யத் தடை விதித்திருந்தது, அவர்கள் பயன்படுத்த மட்டும் தனி பாத்திரங்கள் (அதனையும் அவர்களே கொண்டுவருவது) ஆகிய பலவற்றை அவ்வயதில் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

இத்தகைய சூழலில், விசேஷ நாட்களில் பலர் எங்கள் ஊரில் இருந்து பழனி, திருச்செந்தூர், இராமேஸ்வரம் ஆகிய (புண்ணிய!) தளங்களுக்கு செல்வர். இத்தனைக்கும் பத்துக் கோயில்கள் உடைய எங்கள் ஊரிலேயே வழிபாடு நிகழ்த்தினால் என்ன என்று கேட்டதற்கு "இது சின்னக் கடவுள் (சக்தி குறைந்தது) , நான் (சக்தி நிறைந்த) பெரிய கடவுளை பார்க்கப் போகிறேன்" என்பதே பதிலாய் வந்தது. மனிதர்களிலே உயர்வு தாழ்வு கற்பித்தவர்கள் கடவுளிலும் உயர்வு தாழ்வு கற்பித்தது மேலும் எனக்கு குழப்பத்தையே ஏற்படுத்தியது.

மேலும் அவ்வயதில் கோயிலுக்கு சென்றால் கடவுளிடம், "அது கேட்டாயா, இது கேட்டாயா" , நான் "இதனைக் கேட்டேன், அதனைக் கேட்டேன்" என்று சிலர் கேட்பர். அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அனைத்தும் தெரிந்த, அனைத்தையும் ஆளுகிற கடவுளுக்கு எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா??


நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது இவ்வெண்ணங்கள் தீவிரமாகின. இச்சமூகம் எவ்வாறு இயங்குகிறது? நான் ஏன் பிறந்தேன்? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? போன்ற பல கேள்விகள் என்னுள் உதித்தது. இதனை தெரிந்து கொள்ளும் பொருட்டு நான் விவேகானந்தரின் சிந்தனைகள், பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு, பகவத் கீதை(புரியவில்லை என்றாலும்), என் நண்பனிடம் வாங்கிய பைபிள் மற்றும் ஆன்மிக உரைகளை தேடி தேடி படித்தேன். இதன் மூலம் நன்மை-தீமை, சொர்க்கம்-நரகம், இன்பம்-துன்பம், முற்பிறவி-மறுபிறவி, கர்மா போன்றவற்றை அறிய முடிந்தது. ஆனாலும் எனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.

இவ்வுலகை அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்றால்,  நன்மையை படைத்த அவர், ஏன் தீமையை படைத்தார்??
                                                                                                                        இன்பத்தை படைத்த அவர், ஏன் துன்பத்தை படைத்தார்?? 
நம்மை படைத்த அவர் ஏன் பாவங்கள் செய்ய வைத்து, மறு பிறவி ஒன்றை ஏற்படுத்தி அந்த பாவங்களை கழிக்க வேண்டும் என்றார்? அதற்கு முதல் பிறவியிலேயே நல்லவனாக படைத்து விட்டு போகலாமே??? அனைத்தும் வல்ல கடவுளினால் இதனை செய்ய முடியாதா?? போன்ற கேள்விகளுக்கு எனக்கு விடை கிட்டவில்லை.

இத்தனை சந்தேகங்கள் எழுந்தாலும், யாரிடமாவது கேட்டால் "கடவுள் மீதே சந்தேகம் கொள்கிறாயா, உனக்கு படிப்பு வராது பார்!!" என்று பயம் காட்டினர். ஆனாலும் என் வகுப்பில் நான் தான் முதல் மாணவனாக வருவேன்.

மேலும் அனைத்திற்கும் விதி, தலை எழுத்து என்று கூறி பிரச்சனையை முடிக்கும் வழக்கமே மேலோங்கி இருந்தது. ஒரு சிறு நிகழ்ச்சியினை கூறுகிறேன். எனது வீட்டிற்கு அருகில் இருப்பவர், தனது பெண்ணை பக்கத்து ஊரில் உள்ள ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார். அக்கணவரின் நடவடிக்கைகள் சரி இல்லாததால் அப்பெண் அடிக்கடி பிறந்த வீட்டிற்கு வந்து விடுவார். இதற்கு பரிகாரமாக ஜோசியம் பார்க்க சென்ற அவ்வீட்டாரிடம், ஜோசியர் "பெண் பிறந்த நேரம் அவ்வாறு, திருமண நாளினை தள்ளி வைத்திருந்தால் இவ்வாறு ஆகியிருக்காது" என்று சொன்னதாகவும் "என்ன பண்றது அது அவ விதி"என்றும் என் அம்மாவிடம் கூறிக் கொண்டிருந்தார். இதனைக் கேட்ட எனக்கு அக்கணவரின் செய்கைகளுக்கு இவளின் மீது பழி போட்டது எனக்கு சரியாய் படவில்லை.

அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றால், நான் ஒரு தவறு செய்கின்றேன் என்று வைத்துக் கொண்டால், அது முன்னரே தீர்மானிக்கப்பட்டதினால் செய்கிறேனா இல்லை நான் தான் வேண்டும் என்றே செய்தேனா?? எனது விதியினால் தான் செய்கிறேன் என்றானால், அதற்கு நான் எவ்வாறு பொறுப்பாளன் ஆவேன் என்று யோசித்தேன். விதியின் மேல் இருந்த நம்பிக்கை அன்றே போனது.
இத்தனை கடவுள்கள் இருந்தும் ஏன் இத்தனை பிரச்சனைகள்?? நான் பள்ளி செல்லும் வழியிலும் திரும்பும் வழியிலும் இதே சிந்தினையுடனே இருந்தேன்.

எனது தந்தை பொதுவுடைமை இயக்கத்தில் இருந்ததனால், அவருக்கு கடவுளின் மேல் அதிக நாட்டம் இருந்ததில்லை. இதனால் என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடிந்தது. மாற்று சிந்தனை உடையவனாக என்னை வார்த்தெடுக்க அந்த சுதந்திரம் பெரிதும் உதவி செய்தது. இந்நிலையில், திராவிடர் கழகத்தின் வெளீயிடுகள் எனக்கு கிடைக்கப் பெற்றது. அதனை படித்த போது தான் ஹிந்து மதத்தின் உண்மை முகம் தெரிந்தது.

பலர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய பெரியார்-தான் என் வாழ்விலும் அறிவொளி ஏற்படுத்தினார். அவரின் எழுத்தினை படித்த போதுதான் என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. எனக்கு கிடைத்த விடைகள் என்னவென்று பார்ப்போம்.

பல கேள்விகள் கேட்ட என்னை, "கேள்வி கேட்காதே, கடவுளை நம்பு" என்று சொன்னவர்கள் மத்தியில், "நான் சொல்வனவற்றை நம்பாதே, நீ சிந்தித்துப் பார், உனக்கு சரி என்று பட்டால் மட்டும் அதனை நம்பு" என்று சொன்னவர் தான் தந்தை பெரியார்.

உலகிலேயே மிகவும் தொன்மையான மற்றும் பல கோடி பேர் நம்பும் மதத்தினை நான் ஏன் வெறுக்க வேண்டும்??

இன்று பலர் ஹிந்து மதத்தினைப் பற்றி பேசும் போது "ஹிந்து மதமா, இங்கு தினமும் பூஜை செய்கிறவனும் ஹிந்து தான், பூஜை என்றால் என்னவென்றே தெரியாதவனும் ஹிந்து தான், இது போன்ற சுதந்திரமான மதம் வேறு உள்ளதா?" உண்மையிலேயே இம்மதம் சுதந்திரமானதா?? பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்று பிரித்து, இந்த சாதியா இது தான் செய்யணும், அந்த சாதியா அதுதான் செய்யணும் என்று வகுத்து, மனித உரிமைகளையே நசுக்கிய மதமா சுதந்திரமானது??
கார்ல் மார்க்ஸின் கூற்றுப்படி " அடிமைத்தனத்திலேயே பெரிய அடிமைத்தனம், தான் அடிமையாய் இருப்பதே தெரியாமல் இருப்பதுதான்" என்பார். அது போல் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு தனது சமூகத்தில் பெரும்பாலோனோரை அடிமையாய் நடத்திய மதம் வேறுண்டா?? 
இந்து மததர்மம் என்ன சொல்கிறது?

நீ ஏழையா, முற்பிறவியில் பாவங்கள் செய்தாய்.
நீ கீழ்சாதியா, போன பிறவியில் செய்த கர்மவினை தான் இதற்கு காரணம் என்று கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வித்தை.
அனைத்தினையும் துறந்து பற்றற்று கடவுளை அடைவதே நம் பிறப்பின் நோக்கம் என்பது மிகப் பெரும் பொய்யாகத் தான் எனக்கு பட்டது.

இந்தியாவில் ஆயிரமாயிரம் ரிஷிகள், முனிவர்கள், கடவுளிடமே பேசுபவர்கள், கடவுளை பார்த்தவர்கள் - இவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் இருந்தும் அதனால் நமக்கு விளைந்த பயன் என்ன?? பெரியாரின் கூற்றுப்படி "தீக்குச்சிக் கூட ஆங்கிலேயன் தான் கொண்டு வந்தான். இன்று நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சி, ஃபோன், மின்சாரம், கணினி, செயற்கை கோள் முதல் அனைத்தினையும் உருவாக்கியது யார்??? கடவுள் கடவுள் என்று கூறிக் கொண்டிருந்தவனாலா இது நிகழ்ந்தது???
விதி என்ற ஒன்று உள்ளதா??

விதி மற்றும் தலை எழுத்தினைப் பொருத்தவரை இரண்டே இரண்டு நிச்சயத்தன்மைகள் தான் உள்ளன.
ஒன்று, அனைத்தும் விதிப்படி, நம்மால் மாற்ற இயலாது என்றால், அங்கு கடவுளின் பின்னால் செல்லவேண்டிய தேவை இல்லை(முன்னமே எழுதப்பட்டதனை மாற்ற முடியாதே, கடவுளிடம் வேண்டினாலும்).
இல்லை இல்லை, விதியினை மதியினால் வெல்லலாம் என்றால், அங்கு கடவுளின் இருப்பிடம் கேள்விக்குள்ளாகிறது.
எப்படி பார்த்தாலும், மனித வாழ்க்கைக்கு கடவுள் தேவையில்லை என்பது புலப்படும்.

இறுதியாக பகத்சிங்கின் வரிகளுடன் இப்பதிவினை முடிக்கிறேன்:


ஒருவேளை நீங்கள் நம்புவதுபோல, அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாவற்றுக்கும் மேலான, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன் உண்டு என்றால், இந்த பூமி அல்லது உலகத்தைப் படைத்தது யார்? அதைப் படைத்தது எதற்காக என்று தயவுசெய்து சொல்லுங்கள். துன்பங்களும் துயரங்களும், முடிவே இல்லாத எண்ணற்ற துயரச் சம்பவங்களும் நிறைந்த, உலகத்தில் உள்ள ஒரேயொரு மனிதன்கூட முழுக்கவும் திருப்தியடைய இயலாத உலகம் இது.


அதுதான் கடவுளின் சட்டம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்; இறைவன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றால், அவன் அனைத்திற்கும் மேலானவனாக இருக்க முடியாது; அவனும் நம்மைப் போலவே ஒரு அடிமைதான். அவனுடைய மகிழ்ச்சிக்கான திருவிளையாடல் என்று தயவுசெய்து கூறாதீர்கள்; நீரோ மன்னன் ஒரு ரோம் நகரை எரித்தான். அவன் கொன்றது எண்ணிக்கையில் அடங்கக்கூடிய அளவு மக்களைத்தான். சில துயரச் சம்பவங்களை நிகழ்த்தினான். எல்லாம் அவனுடைய மகிழ்ச்சிக்காக. ஆனால் வரலாற்றில் அவனுடைய இடம் எது? வரலாற்று ஆய்வாளர்கள் அவனை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? இருக்கிற வசைச் சொற்கள் அனைத்தும் அவன்மேல் பொழியப்படுகின்றன. அவன் கொடுமைக்காரன், இதயமற்றவன், வெறிபிடித்தவன் என்ற வசைச் சொற்களால் வரலாற்று நூல்களின் பக்கங்கள் எல்லாம் கறைபடிந்துள்ளன. ஒரு செங்கிஸ் கான் தன் மகிழ்ச்சிக்காக சில ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தான்; நாம் அவன் பெயரையே வெறுக்கிறோம். இப்படி இருக்கையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தி வந்திருக்கிற, இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற உங்களுடைய அந்த எல்லாம் வல்லானை, நிலைபேறுடைய நீரோவை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறோம்? செங்கிஸ்கான் செய்ததை விட அதிகமாக ஒவ்வொரு கணமும் செய்கிற கொடுமைகளை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? நரகம் என்ற பெயருக்கேற்ப எப்போதும் துன்பங்கள் நிலவுகிற இந்த உலகத்தை அவன் எதற்காகப் படைத்தான் என்று நான் கேட்கிறேன். இதெல்லாம் எப்படி நியாயமாகும்? துன்பப்படும் அப்பாவிகள் அடுத்த பிறப்பில் அதற்கான பரிசு பெறுவார்கள், தவறு செய்தவர்கள் அடுத்த பிறப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறீர்களா? சரி, இந்தப் பிறப்பில் உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தியவன் அடுத்த பிறப்பில் அதன்மீது மருந்தைத் தடவுவான் என்பதை எந்த அளவுக்கு நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்? கிளேடியேட்டர் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர்களும் அதன் ஆதரவாளர்களும் பசியோடு இருக்கிற சிங்கங்களின் முன்னால் மனிதர்களை வீசினார்கள்; அந்த விலங்குகளிடமிருந்து அவர்கள் தப்பி வந்தால் அவர்களை நன்றாகக் கவனித்து ஆதரவு அளிப்போம் என்றார்கள்; இதை எந்த அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்? அதனால்தான் நான் கேட்கிறேன்: ``அனைத்துக்கும் மேலான அந்தக் கடவுள் எதற்காக உலகையும் அதில் மனிதனையும் படைத்தான்? உல்லாசத்துக்காகவா? அப்படியானால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம்?''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக