இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௨
நுழைவாயில்எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
நுழைவாயில் பகுதியில் இஸ்லாம் குறித்த தொடரை நான் ஏன் எழுதவிருக்கிறேன் என்பதை விளக்கும் விதமாக, ஒரு தோராயமான முன்னோட்டமாக அமைத்திருந்தேன். அதில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைவது பயன்தரத்தக்கதாய் இருக்காது என்பதை குறியீட்டுக்காரணமாய் கொண்டிருந்தேன். ஏனென்றால் அது உத்தி ரீதியில் பார்ப்பனீயத்திற்கு உதவிகரமாகவே இருக்கும் என நான் குறிப்பிட்டிருந்தேன். இது நண்பருக்கு விளங்கவில்லை, அதை அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆக மதரீதியில் ஒன்றிணைவது தவறு என எந்த அடிப்படையில் நின்று நான் குறிப்பிட்டிருக்கிறேனோ அந்த அடிப்படை அவருக்கு விளங்கவில்லை. இருந்தாலும் அவர் என்னுடைய நிலைப்பாடுகளை மறுத்திருக்கிறார். ஆக அவருடைய எதிர்ப்பில் மதம் மட்டுமே முன்னிருத்தப்பட்டிருக்கிறது சமூகமல்ல. மெய். மதத்தை ஆராதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சமூக நிலைப்படு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. மதமே அனைத்தையும் தீர்மானிப்பதற்குப் போதுமானது எனும் நம்பிக்கையில் இருப்பவர்கள் அது எதிர்ப்புக்கு உள்ளாகும் போது எதிர்ப்பு மட்டுமே அவர்களின் பார்வையில் தென்படுமேயன்றி எதிர்ப்புக்கான காரணம் தென்படாது.
இந்தியாவைப் பொருத்தவரை பார்ப்பனீயம் என்பது ஒரு குலமோ, ஒரு மதமோ அல்ல, அது ஒரு அடக்குமுறைச் சட்டத்தொகுப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு அது நடப்பிலிருக்கிறது. அதை எதிர்த்துத்தோன்றிய கொள்கைகளும், கோட்பாடுககளும் பார்ப்பனீயத்தால் உள்வாங்கப்பட்டு தின்று செரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடக்குமுறைகளுக்கு பாதிக்கப்பட்ட மக்களை ஈர்க்கும் விதத்தில் இருப்பது தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியதற்கான காரணி. எனவே பார்ப்பனீயம் யாரை தனக்குக் கீழாக அடக்கிவைக்க விரும்புகிறதோ அவர்களே இந்தியாவில் இஸ்லாத்தின் ஆதாரம். எனவே பார்ப்பனீயம் யாரை அடக்கிவைக்க நினைக்கிறதோ அவர்களுக்கும்; அவர்களை எது ஈர்க்கிறதோ அவற்றுக்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இந்த அவசியத்திற்கான உத்தியாகவே இந்து எனும் மதவடிவம் பார்ப்பனியத்திற்கு பயன்படுகிறது. இந்து எனும் மத வடிவத்திற்குள் அனைவரையும் கட்டிப்போட்டால் தான் பார்ப்பனியத்தைப் பாதுகாக்க முடியும். இந்த வகைப்பாட்டில்தான் பௌத்தம் மதலான மதங்களை எதிரியாக சித்தரித்து வந்திருக்கிறது. எதிரி இல்லாவிட்டால் மேடுபள்ளமான அடக்குமுறைச் சட்டத்தொகுப்பில் ஒற்றுமை சாத்தியமில்லை. எனவே பெரும்பகுதி மக்களை அடக்குமுறைக் கொட்டடிக்குள் தக்கவைப்பதற்கு காலகாலமாக அதற்கு எதிரிகள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த எதிரித்ததத்துவத்தின் தற்போதைய பாத்திரம்தான் இஸ்லாம். இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒன்றிணைய ஒன்றிணைய அதைக் காட்டி ஒடுக்கப்பட்டவர்களை பார்ப்பனியம் இந்து மதமாய் ஒன்றிணைக்கும். அப்படி ஒன்றிணைப்பதற்கு இஸ்லாமியர்கள் சமூகப் பரப்பைக் கடந்து மதரீதியில் ஒன்றிணைந்திருப்பது அவசியம். பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த வேண்டுமென்றால் இந்து மதம் ஒடுக்கி வைத்திருக்கும் மக்கள் இந்து எனும் கூண்டை உடைக்க வேண்டும். அதற்கு இன்னொரு கூண்டு உதவ முடியாது. எல்லாக் கூண்டுக்குள் இருப்பவர்களும் சமூகத்தளத்தில் இணைந்து போராடாதவரை பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது. பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் விரோதி என்பதால், இஸ்லாமியர்கள் மதரீதியில் ஒன்றிணைவது அவர்களுக்கே எதிரான ஒன்றாய் அமைந்திருக்கிறது. எந்த மதமும் உழைக்கும் மக்கள் குறித்து கவலைப்பட்டதில்லை, இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை. அதனால் தான் துலக்கமான இந்த உண்மை விளங்காமல் மதம் மட்டுமே பிரதானப் படுத்தப்படுகிறது.
இனி அவரின் மறுப்புகளுக்கு வருவோம், கருத்தியலாக மதம் மனிதர்களை ஆதிக்கம் செலுத்தும் போதும் மக்களின் செயல்பாடுகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். வெங்காய விலை நூறைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது உழைக்கும் மக்களால் மதவிவகாரங்களில் சிக்கெடுத்துக்கொண்டிருக்க முடியாது. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். மத விளக்கங்களையும், அதன் நுணுக்கங்களையும் கற்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை, ஆனாலும் அவர்கள் மதங்களை ஒதுக்கி விடுவதில்லை. கேள்விபதில் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள் என்றால், ஒரு விதத்தில் அது ஹீரோயிச மனப்பான்மை, தான் சார்ந்த மதம் மேலோங்கி நிற்கும் நிகழ்ச்சிகளை விரும்புவது இயல்பு. இதை மதத்தை அறிவதில் முஸ்லீம்கள் காட்டும் ஆர்வம் என புரிந்துகொள்ள முடியாது கூடாது. எப்படியென்றால் தவ்ஹீத் ஜமாத்தில் பிரபலமல்லாத யாரோ ஒருவருக்கு, அவரின் நிகழ்ச்சிக்கு மக்கள் விரும்பிச் செல்ல மாட்டார்கள். ஆக அது மதத்தை அறியும் ஆவலல்ல. தவ்ஹீத் ஜமாத் அல்லது அதன் நிகழ்ச்சிகள் பிரபலமடைந்திருப்பதைக் கொண்டு அது மக்கள் மதத்தை அறிய விரும்புகிறார்கள் என்பதாகவும் கொள்ள முடியாது. ஏனென்றால் தவ்ஹீத் ஜமாத்தின் பிரபலம் என்பது முஸ்லீம்களின் மொத்தத்தில் ஒரு சிறுபகுதி தான். பிற இயக்கங்களோடு ஒப்பிடுகையில் அது பலமானது என்பதால் அது ஒட்டுமொத்தமாக மக்கள் மதத்தை அறிய விரும்புகிறார்கள் என்பதை பிரதிபலிப்பதாக கொள்ளமுடியாது.
நான் இப்படிக் கூறுவதால் மக்கள் இஸ்லாத்தின் மீது பற்றற்று இருப்பதாக பொருளல்ல. மதம் என்பது சிந்தித்து ஏற்றுக்கொண்ட ஒன்றல்ல. அது ஒரு மரபாக, கலாச்சாரமாக இருக்கிறது. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட எல்லையைத்தாண்டி சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்த முடியாது. ஆனால் இந்த எல்லை ஏனைய மதங்களை விட முஸ்லீம்களில் அதிக பரப்பில் இருக்கிறது. ஏனைய மதப்பிரச்சாரங்களைக் கேட்கும் ஒருவன் ஈர்க்கப்படுவதை விட முஸ்லீம் அதிகமாக ஈர்க்கப்படுகிறான். இது ஏனைய மதங்களில் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆன்மீகத்தையும் சமூகத்தையும் கலப்பதில்லை. மதத்தை விரோதிப்பது ஏனைய மதங்களில் சமூகக் குற்றமாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லீம்களில் அது சமூகக் குற்றமாக பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்சிகளின் இடையே வரும் விளம்பர நேரங்களில் அலைவரிசைகளை மற்றி மாற்றி தாவிச் செல்கையில் ஒரு மத நிகழ்ச்சி வந்தால் அதியும் ஒரு விளம்பரம்போல் தாவிச்செல்ல ஒரு இந்துவுக்கு மனச் சங்கடம் எதுவும் இருக்காது, ஆனால் ஒரு முஸ்லீம் அப்படி தாவிச் செல்ல சங்கடமடைகிறான், அதைக் கவனிக்கிறான். இஸ்லாமிய பிரச்சார உலகம் கைக்கொண்டிருக்கும் அறிவியல் தர்க்க உத்திகள் இதை மேலும் வலுப்படுத்துகின்றன. அவ்வளவுதான். இந்த வேறுபாட்டை முஸ்லீம்களின் அறிதல் ஆர்வம் என்பதைவிட மரபாக முஸ்லீம்களுக்கு இருக்கும் தாக்கம் என்பது தான் பொருத்தமாக இருக்கும். இந்த அடிப்படையைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். இதைத்தான் நண்பர் இஸ்லாத்தின் உண்மைக்குச் சான்று, இஸ்லாம் மட்டுமே கேட்டவுடன் ஈர்க்கும் என்றெல்லாம் புளகமடைகிறார். மதமே எல்லாமும் என இருப்பவர்களிடம் இதுபோன்ற மிகைகள் தவிர்க்கவியலாதவை.
\\அரசு, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் போது அவர்களின் மத அடையாளமே முன்னிறுத்தப்படுகிறது. இதனாலும்,அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது// இந்த என்னுடைய வாக்கியத்தை அவர் புரிந்து கொண்டதே தவறாக இருக்கிறது. அரசு பயங்கரவாதத்தினால் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுகள் கைக்கொண்டிருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பேதமின்றி அனைவரையும் பாதிக்கிறது. ஆனால் அதிகாரவர்க்கத்தின் பார்வையில் முஸ்லீம்கள் ஒதுக்கப்படுவதினாலும் அவர்கள் மதரீதியில் இணைவது துரிதப்படுத்தப்படுகிறது என்பது தான் நான் குறிப்பிட்டிருப்பது. எடுத்துக்காட்டாக அணமையில் அரசு வங்கிகள் கடன் கொடுக்கத் தகுதியற்ற பகுதிகள், அதாவது கொடுத்தால் திரும்ப வராது பயனுள்ள வழியில் செலவு செய்யப்படாது என பட்டியலிட்டு ஒதுக்கி வைத்த பகுதிகள் பெரும்பாலும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள். நண்பர் மேற்கோளுக்காக எடுத்த வாசகத்தின் முன்னால் உள்ள வாக்கியத்தில் இதை தளிவாக பதிவு செய்திருக்கிறேன், \\இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம்// ஆனாலும் நண்பர் இவர் அறிவோடுதான் எழுதுகிறாரா, விமர்சனம் செய்வதற்கு தகுதியிருக்கிறதா என்றெல்லாம் எகிறிக்குதிக்கிறார். குறைந்தபட்சம் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக்கூடவா விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.
உலக அளவில் முதலாளித்துவம் மக்களை வதைக்கிறது என்பதை உணர்ந்து போராட்டங்கள் பற்பல நாடுகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் முஸ்லீம் எனும் அடிப்படையில் நின்று முதலாளித்துவத்தை எதிர்க்க முடியுமா? வாழ்க்கைப் போராட்டம் என்பது இடஒதுக்கீடு கோசங்களோடு முடிந்துவிடுபவையல்ல. மக்களைக் கொல்லும் முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் மதக்கொள்கைகளை பரிசீலனைக்கு உள்ளாக்குவது அவசியம். ஏழையையும் பணக்காரனையும் நானே அப்படிப் படைத்தேன் எனக்கூவி அந்த ஏற்றத்தாழ்வை தக்கை வைக்கும் ஒரு கொள்கையை நம்பிக்கொண்டு அதற்கெதிராய் எப்படிப் போராட முடியும்?
\\இதன் மூலம் அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்பவை இஸ்லாமிய இறையியலாக சித்தரித்து காட்ட முற்படுகிறார். அரபு தேசியவாதம் என்பதும் அரபு மார்க்ஸியம் என்பதும் இஸ்லாமிய இறையியல் கிடையவே கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்// அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் போன்றவை இஸ்லாமிய இறையியலாக நான் சித்தரிக்கிறேனா? பொதுவாக முஸ்லீம்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் அதை எதிர்த்துச் சொல்லப்படும் முதல் வாக்கியமாக இஸ்லாத்தைப்பற்றிய சரியான அறிதல் இல்லாமல் கூறுகிறார் என்பதுதான் இருக்கும். ஆனால் நாம் என்ன சொல்கிறோம்? எதை விமர்சிக்கிறோம் என்பதை அறிவதற்கு குறைந்தபட்ச முயற்சிகளைக்கூட எடுக்க மாட்டார்கள். அரபு மார்க்சியம் என்றால் என்ன? அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரணடையும் இணைத்து, கடவுட் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மார்க்ஸிய தத்துவங்களை இஸ்லாத்துடன் இணைத்து உருவானது தான் அரபு மார்க்ஸியம். ஆனால் இவரோ அரபு மார்க்ஸியத்தை இஸ்லாமிய இறையியலாக நான் சித்தரித்துக்காட்டுவதாக கரடி விடுகிறார். அப்படி இணைத்தது பயன்படாது கடவுட்கொள்கையை கடாசிவிட்டு மார்க்ஸியமே இறைய தேவை என்றுதான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். (மார்க்ஸியம் புரட்சிகர மார்க்ஸியம் இரண்டும் ஒன்றுதான், மார்க்ஸியம் அதன் உள்ளடக்கத்தில் புரட்சிகரமானது)
நுழைவாயில் பகுதியை ஒரு வேண்டுகோளுடன் முடித்திருந்தேன், முன்முடிவுகளைத் தவிர்த்து விட்டு வாருங்கள் என்று. ஆனால் இவர் அதை தூக்கிக் கொண்டு வந்ததோடில்லாமல் அதையே கவசமாகவும் காட்டுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக