செவ்வாய், 8 நவம்பர், 2011

இஸ்லாமே கற்பனைகளின் களம்.4

“குரானுக்கு சவாலுக்கு பதில்” எனும் கட்டுரையில் குரானில் பயன்படுத்தப்படும் அடைப்புக்குறிகளின் இலக்கு, குரானில் இருக்கும் ஒரு முரண்பாடு, குரானின் வசனங்களுக்கு நிகராக ஒரு குறள் என்று மூன்று குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்றையுமே நண்பர் மறுத்திருக்கிறார். அவைகளைப் பார்ப்போம்.
குரானில் இடம்பெற்றிருக்கும் அடைப்புக்குறிகள் மொழிபெயர்ப்புச் சிக்கல்களை தீர்ப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார். அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஆனால் அவை அதற்கானவையல்ல என்பதற்கு அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் எண்ணிக்கையே சான்றாக அமைந்திருக்கிறது. உலகில் குரான் மட்டுமல்ல ஏராளமான இலக்கியங்களும், புதினங்களும், ஆய்வுகளும், அறிவியல் நூல்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. கவிதைகளும் கூட வடிவம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த மொழிபெயர்ப்பிலும் பயன்படுத்தப்படாத அளவிற்கு குரானுக்கான மொழிபெயர்ப்புகளில் அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏன் அரபு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேறு நூல்களில் இந்த அளவுக்கு அதிகமான‌ அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்றால் குரான் மொழிபெயர்ப்புகளில் மட்டும் ஏன் இவ்வளவு அடைப்புக்குறிகள்? காரணம், அது மொழியியல் சிக்கல்களுக்காக மட்டும் கையாளப்பட்ட‌தில்லை. மேலதிகமாக தேவைப்படும் பொருளைக் கொண்டுவருவதற்காகவே கையாளப்பட்டிருக்கின்றன.
இதற்கு இன்னொரு விளக்கத்தையும் கொடுக்கிறார்கள். ஏனைய மொழிபெயர்ப்புகளெல்லாம் மூல மொழியின் பொருளை உள்வாங்கி அதை மாற்று மொழிக்கு இயைந்து பெயர்த்துக்கொள்வது, குரான் அப்படியல்ல, சொல்லுக்குச் சொல் அப்படியே மொழிபெயர்க்கப்படுவ‌தால் பொருள் புரிவதற்காக அடைப்புக்குறிகள் அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால் இதுவும் தவறான விளக்கமே. எந்த ஒரு மொழியிலிருந்தும் பிரிதொரு மொழிக்கு சொல்லுக்குச் சொல் அப்படியே மொழிபெயர்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணவிதிகள் வேறுபடுகின்றன. அப்படி மொழிபெயர்த்தால் குழப்பமே மிஞ்சும். குரான் வாக்கியங்கள் தமிழுக்கியைந்த கோர்வையுடன் இருப்பதால், குரான் அப்படி சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இருக்கமுடியாது. மட்டுமல்லாது, பல்வேறு தமிழ் குரான் மொழிபெயர்ப்புகள் ஒரேமாதிரியான வாக்கிய அமைப்பைக் கொண்டதாகவும் இல்லை. எனவே அரபு குரானின் கருத்துகளைத்தான் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளனர். என்றால் இவ்வளவு அதிகமான அடைப்புக் குறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அடைப்புக்குறிகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் வசனங்களின் பொருட்களில் பேதம் வருகிறது. அடைப்புக்குறிகளை குறைப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் கூட சமகால அறிவியல் பொருளை உள்வாங்கி வார்த்தைகளில், வாக்கியங்களில் நெகிழ்வுடன்தான் செய்யப்படுகின்றன. எனவே குரானின் பொருளில் அடைப்புக்குறிகள் மிகுந்த பங்களிப்பை கொண்டிருக்கின்றன, அதற்காகவே அவை பயன்படுத்தப்படுகின்றன.
கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட வசனத்தையே (குரான் 2:178) எடுத்துக்கொள்வோம். “சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை” என்பதன் பொருள் என்ன? சுதந்திரமான ஒருவன் கொல்லப்பட்டால் அதற்கு பகரமாக சுதந்திரமான ஒருவனும், அடிமை ஒருவன் கொல்லப்பட்டால் அதற்குப் பகரமாக அடிமை ஒருவனும் என்று நேரடியாகவும்; அடிமை ஒருவனை சுதந்திரமான ஒருவன் கொலை செய்தால் அதற்குப்பகரமாக கொலை செய்த சுதந்திரமானவனின் அடிமை ஒருவன் என்று மறைமுகமாகவும் பொருள் வருகிறது. இப்படி எதிர்மைறையான வகையில் யாரும் பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் “சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை” என்று ‘கொலை செய்த’ என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டு பயன்படுத்துகின்றனர். ஜான் டிரஸ்ட் வெளியீட்டிலும் இதே வசனத்தில் இதே அடைப்புக்குறி சில சொற்கள் தள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மொழியியல் சிக்கல்களுக்காக மட்டுமே அடைப்புக்குறிகள் பயன்படுத்தபட்டுள்ள‌ன என்பது ஏற்கத்தக்கதன்று.
அடுத்து முரண்பாடான வசனத்திற்கு வருவோம். கட்டுரையில், ஒரு வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும், வேறொரு வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் இருக்கிறது, இது முரண்பாடில்லையா? என்று கேட்க்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நண்பர், \\பூமியைப்படைத்தான்; பின்னர் வானத்தைப்படைத்தான்; பின்னர் அதை விரித்தான். இதில் எந்த முரண்பாடுமில்லை// என்று எழுதியுள்ளார். குறிப்பிட்ட கட்டுரைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை கவனித்துப்பார்த்தால் இதே கருத்தை வேறொரு நண்பர் ஏற்கனவே கூறியிருக்கிறார் என்பதை அறியலாம். ஆனால் அவர் வானத்தை இரண்டு முறையாகவும் பூமியை ஒரு முறையாகவும் குறிப்பிட்டார். நண்பர் இஹ்சாஸ் பூமியை இரண்டு முறையாகவும் வானத்தை ஒருமுறையாகவும் குறிப்பிடுகிறார். இவைகளெல்லாம் அந்த முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதற்காக சொல்லப்படும் விளக்கங்களேயன்றி வேறில்லை.
குரானில் பல இடங்களில் இந்த பேரண்டத்தை(பிரபஞ்சத்தை) ஆறு நாளில் படைத்தாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆறு நாட்களை 41:9,12 வசனங்கள் விவரிக்கின்றன. முதல் இரண்டு நாட்களில் பூமி நான்கு நாட்களில் ஏனைய தயாரிப்புகள் பின்னர் இரண்டு நாட்கள் வானம். (கணக்கிற்கு எட்டு நாட்கள் வருகிறது  என்பது அப்பாற்பட்ட விசயம்) இதில் முதல் முறை வானத்தை தோராயமாக படைத்து இரண்டாம் முறை சீராக்கியதாகவோ அல்லது முதல் முறை பூமியை மொத்தமாக படைத்து இரண்டாம் முறை விரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. குறிப்பிடவில்லை என்றாலும் அப்படித்தான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றால் ஆறு நாட்களைவிட அதிகமாகிறது, தவிரவும் குரானிலேயே எந்தெந்த நாட்களில் என்ன நடந்தது என வரிசைப்படுத்திக் கூறியிருக்கும் போது அதைக் குலைத்து மாறுபட்ட விளக்கங்களை அளிப்பது முரண்பாட்டை மூடிமறைக்கும் வேலையேயன்றி வேறில்லை.
அடுத்ததாக, குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக ஒரு குறள் கூறப்பப்படத்தை கொள்வோம். இந்த இடத்தில் ஒரு குறிப்பை பதிவு செய்து கொள்வது சரியானதாக இருக்கும். திருக்குறள் ஒரு ஆகச்சிறந்த நூல் என்றோ, போற்றப்படத்தக்கது என்றோ கருதுவ‌தால் அதிலிருந்து ஒரு குறளை குரானுக்கு மாற்றாக கூறவில்லை. குறளிலும் அறிவியலுக்கு எதிரான கருத்துகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் இருக்கின்றன. அதேபோல் குரானிலும் அறிவியலுக்கு எதிரான கருத்துகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் இருக்கின்றன. ஆனால் இதை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது தான் வித்தியாசம். குறளுக்கென்று ஒரு மதமோ, அதன் வேதமாக குறளும் இருந்திருக்குமேயானால் குறளின் தவறுகளை நியாயப்படுத்தவும் ஒரு கூட்டம் உருவாகியிருக்கும். குரான் ஒட்டுமொத்தமாக மாற்றாக ஒரு நூலைக் கொண்டுவரக் கூறவில்லை. ஒரு ‘அத்தியாயத்தையேனும்’ என்று தான் குறிப்பிட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் ஒரு வசனத்திற்கு மாற்றாக ஒரு குறள் தரப்பட்டது. எனவே தரப்பட்ட குறளை மட்டுமே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது, குறளின் தவறுகளை பின்புலத்தில் நிறுத்துவது தேவையற்றது.
எடுத்துக்காட்டப்பட்ட குறள் குரானின் வசனங்களுக்கு ஒப்பாகாது என்பதற்கு நண்பர் கையாண்டிருக்கும் ஒப்பீட்டில் ஒரு நேர்மையும் இல்லை. அந்தக் குறள் மருத்துவத்திற்கான இலக்கணத்தை வகுக்கிறது. நோய் என்னதென்று தெரிந்து, அந்த நோய் வந்ததற்கான காரணத்தை அறிந்து, அதை என்ன முறைமையில் போக்குவது என்பதை அறிந்துகொண்டு, செய்வதற்கு வயப்பட்டதைச் செய்யவேண்டும், என்பது அந்தக் குறளின் பொருள். இதை வெறுமனே நோய் வந்தால் மருத்துவம் பாருங்கள் என்பதாக குறுக்கிவிட முடியாது. குறள் கூறும் மருத்துவத்திற்கான இந்த இலக்கணம் இன்றுவரை பொருத்தமானதாக இருக்கிறது, எதிர்காலத்திலும் இது பொருத்தமானதாகவே இருக்கும்.
இதைக் கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். அலிஃப், லாம், மீம் என்று பொருளற்ற அசைச் சொற்களையெல்லாம் குரானில் வசனமாக இடம்பெற்றிருக்கிறது என்பதை நண்பர் மறந்துவிட்டாரா? பொருளற்ற அசைச் சொற்களை வசனமாக கூறமுடிந்த கடவுளுக்கு பொருளுடன் கூடிய ஒரு கருத்தைக் கூறுவது எந்த விதத்தில் தேவையின்றிப் போகமுடியும்? நண்பர் நம்பும் கடவுளே கொசுவையோ அதற்கும் அற்பமானதையோ உதாரணம் கூற தயங்கமாட்டேன் என்று கூறியிருக்கும் போது மருத்துவம் குறித்த ஒன்றை கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். இதுதான் என்னவகை ஒப்பீடோ?
இந்தக் குறளில் நோய்குறித்த முன்னறிவிப்பு இல்லையா? நோய் நாடி அதன்முதல் நாடி தணிக்கும் முறைநாடி அதைச் செய்வது என்று மட்டும் கூறியிருந்தால் அதில் முன்னறிவிப்பு ஒன்றுமில்லை. ஆனால் அதில் வாய்ப்பச் செயல் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நோயைத் தணிக்கும் முறையை அப்படியே செய்துவிடாமல் அதில் வாய்ப்பானதை செய்யவேண்டும் என்பதன் மூலம் ஒவ்வாமை என்னும் நோய் குறித்த முன்னறிவிப்பு அங்கு வருகிறது. நோய்க்கான மருந்தேயானாலும் அந்த மருந்தை உட்கொள்ளும் உடல் அந்த மருந்தை எற்றுக்கொள்கிறதா என்பதையும் கண்டறிந்து அதன் பின்னரே மருத்துவம் செய்ய வேண்டும் எனும் விவரணத்தை அதிலிருந்து பெறலாம். அந்த வகையில் அது ஒவ்வாமை எனும் நோய் குறித்த முன்னறிவிப்பாக இருக்கிறது.
குறளையும் குரானையும் இலக்கிய நயத்தில் எப்படி ஒப்பிட்டுப்பார்த்தார் என்பதை நண்பர் குறிப்பிடவே இல்லை. வெறுமனே அட்ரஸ் இல்லாமல் போய்விடும் என்கிறார். எப்படி என்பதையும் விவரிப்பார் என எதிர்பார்க்கிறேன். இலக்கிய நயம் மட்டுமல்ல இலக்கணக் கட்டும் கொண்டது குறள். அதன் யாப்பை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் 1330 குறட்பாக்களில் எந்த ஒரு குறளும் தளைதட்டாது. அதன் எல்லாக் குறளும் முச்சீர் ஈறாக எழுசீர் விருத்தமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் குரானில் இருக்கும் இலக்கிய, இலக்கண நயங்களில் ஒன்றிரண்டை நண்பர் எடுத்துவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.
ஒரு உயர்ந்த இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டுமென்றால் மிகையான உவமைகளும், உருவகங்களும், பொய்களும், புனைவுகளும் இருக்க வேண்டும் என்கிறார். ஆம் உலக இலக்கியங்களில் இவை இடம்பெற்றிருக்கிறன. அதேநேரம் குரானிலும் இவை இடம்பெற்றிருக்கின்றன. உவமைகள் இருக்கின்றன, உருவகங்கள் மிகைப்படுத்தல்கள் இருக்கின்றன. பொய்கள் இருக்கின்றன. நாங்கள் நம்புகிறோம் அதனால் அத்தனையும் சரி, நாங்கள் நம்பாததால் அத்தனையும் பழுது என்பது சரியான ஒப்பீடல்லவே.
உயர்ந்த தரமுள்ள படைப்புகள் பாமர மக்களை விட்டு விலகும், ஆனால் குரான் அப்படியல்லாமல் உயர்ந்த தரமாகவும், பாமர மக்களுக்கு அணுக்கமாகவும் இருக்கிறது என்கிறார் நண்பர். ஒருவருக்கு ஒன்று எளிமையாய் இருப்பதும் கடினமாய் தெரிவதும் அதில் அவர் காட்டும் ஈடுபாட்டிலேயே இருக்கிறது. குறளில் எளிமையானவையும் இருக்கின்றன, கடினமானவையும் இருக்கின்றன. இது எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவானது தான், குரானும் இதற்கு விலகில்லை. அரபு தெரிந்த ஆனால் குரான் குறித்து அறிமுகமில்லாத ஒருவரிடம் குரானை வாசித்துக்காட்டி பொருள் கூறச்சொன்னால் அது அவருக்கு கடினமானதாகத்தான் இருக்கும். ஏன் அரபு தெரிந்த முஸ்லீம்களுக்கு கூட விரிவுரைகள் இல்லாமல் குரானை விளங்கிக் கொள்வது கடினம் தான். அவ்வளவு ஏன்? முகம்மது குரானை கூறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் கூட மக்களுக்கு புரியாத இடங்களில் விளக்கம் கேட்டிருக்கிறார்கள், முகம்மதுவும் விளக்கியிருக்கிறார், அது ஹதீஸ்களாக பதிவு செய்யப்பட்டும் இருக்கிறது. மட்டுமல்லாது முஸ்லீம்கள் எல்லோருக்கும் குரானும் அதன் கருத்துகளும் பரவலாக்கம் செய்யப்பட்டிருப்பதுபோல், தமிழர்கள் அனைவருக்கும், குறளும் அதன் கருத்துகளும் பரவலாக்கம் செய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவைகளையெல்லாம் தெரிந்து கொண்டே பாமரர்களுக்கு புரியும்படி இருக்கும் இலக்கியம் குரான் என்பது பரிசீலனையற்ற உயர்வுந‌விற்சியாக மட்டுமே இருக்க முடியும்.
ஆக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் குறள் எல்லா விதத்திலும் ஒரு குரான் வசனத்திற்கு ஈடானதே. குரானுக்கு எதுவும் ஈடாக முடியாது என்பது எங்கள் நம்பிக்கை என்று நண்பர் கூறினால் அதை யாரும் மறுக்கப்போவதில்லை. எல்லா நம்பிக்கைகளும் சரியானதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், அதுதான் உண்மை என்றால் தகுந்த காரணங்கள் வேண்டும். மாறாக நம்பிக்கையையே உண்மைதான் என்று கூறிக்கொண்டிருந்தால் அதற்கு வேறு பெயர்தான் சூட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக