செவ்வாய், 8 நவம்பர், 2011

இஸ்லாமே கற்பனைகளின் களம்.3



அல்லாவின் ஆற்றலிலிருக்கும் இடர்பாடுகள் குறித்த விளக்கங்களில் புகுமுன் ஒன்றை தெளிவுபடுத்திவிடலாம் என கருதுகிறேன். \\யாருடைய நம்பிக்கையை விமர்சிப்பதாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கை எத்தகையது என்பதை புரிந்து அதில் நின்று தான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நம்பாத வேறு கிரவுண்டில் இருந்து விமர்சிக்கக் கூடாது// என்று நண்பர் எழுதியிருக்கிறார். அதில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியில் எந்த விமர்சனமும் இடம்பெற்றிருக்கவில்லை. இஸ்லாம் குறித்த விமர்சனத்தை, இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியிலிருந்து வைக்கவும் முடியாது. எது அவர்களின் நம்பிக்கையோ அதில் தான் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் நம்பாத ஒன்றை விமர்சனமாக வைத்தால் “இது இஸ்லாமல்ல” எனும் ஒற்றைச் சொல்லில் அதைக் கடந்துவிட முடியும். ஆனால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடையளிக்க அவர் முயன்றிருக்கிறார் என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியே கேள்வியேதும் எழுப்பப்படவில்லை என்பதற்கு போதுமானதாகும்.

குரானில் சொல்லப்பட்டிருக்கும் சுயபாராட்டல்களின் அளவு அதிகம் என்பதை ஒரு தகவலுக்காக குறிப்பிட்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட தேவையில்லாமல் இருக்காது என இறும்பூறெய்தலாக குறிப்பிடப்படும் ஒரு வேதத்தில், அதன் அளவே பாதியாக குறைந்துவிடும் அளவுக்கு அந்த சுயபாராட்டல்கள் இருக்கின்றன. இதற்கு பகரமாக நண்பர் \\குர்ஆன் இறைவனுடைய வேதம். அதில் அவனைப்பற்றி அவனுக்கே உரிய வேறு யாருக்குமே இல்லாத அவனுடைய வல்லமைகளை கூறுகிறான். அது சில இடங்களில் விரிவாகவும் பல இடங்களில் சுருக்கமாகவும் உள்ளன// என்பதாக கூறுகிறார். அவனுடைய வல்லமைகளை, தன்மைகளை ஒவ்வொன்றையுமேகூட ஓரிரு முறை கூறினால் போதுமானது. ஆனால், சற்றேறக் குறைய‌ எல்லா வசனங்களின் பின்னாலும் ஒரு வாலைப்போல் அது ஒட்டியிருக்கிறது. எனவேதான் சோர்வடையவேண்டாம் என்று ஈறொட்டாக குறிப்பிட்டிருந்தேன்.

முதல் இடர்பாடாக நான் குறிப்பிட்டிருந்தது, எல்லாமே எழுதப்பட்ட ஏட்டில் இருப்பது தான் எனும்போது அது மனிதனுக்கு சிந்தனை இருக்கிறது என்பதை மறுக்கிறது என்பதை. அதை தெளிவாக கேள்வியாக எழுப்பியிருந்தேன், \\ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும்// இந்த முரண்பாடான தன்மையை நண்பர் விதிக்கொள்கை என கடந்து செல்கிறார். ஒருவனுக்கு இழப்பு ஏற்பட்டால் விதியின் தொழிற்படுதலால் அவன் ஆறுதலடையவும், செருக்கு கொள்ளாமலிருக்கவும் விதிக்கொள்கை பயன்படுகிறது என அதற்கு விளக்கமும் தருகிறார். இது மேம்போக்கானது. தனிப்பட்ட ஒருவனுக்கு இழப்பு என்பது தனியுடமையிலிருந்து எழுகிறது, வணிகர்களின் நலைனைப் பாதுகாக்க எழுந்த ஒரு கொள்கையால் இப்படித்தான் சிந்தித்திருக்க முடியும். தனக்கு ஏற்பட்ட இழப்பு எதனால் ஏற்பட்டது?, செயலின் பிழைகள் என்ன? என்னென்ன தாக்கங்கள் அந்த செயலில் வினையாற்றின? அவைகளின் எதிர்வினை என்ன? என்பதைக் கண்டுணர்ந்து அடுத்தமுறை அந்த தவறு மீள ஏற்படாமலிருக்க ஆவன செய்யவேண்டுமென்றால் அவன் விதிக்கொள்கையை மறுத்தாக வேண்டும். அல்லா எழுதிவைத்தபடி தான் தமக்கு நேர்ந்திருக்கிறது என ஒருவன் ஆறுதல் கொள்வானாயின், அவனிடம் தேடல் இருக்காது. தேடலிருக்கிற, வெற்றிகரமாக செயல்பட விரும்புகிற, எதிர்வினையாற்ற ஆவலுருகிற‌ எவரும் (முஸ்லீம்கள் உட்பட) சாராம்சத்தில் விதிக்கொள்கையை மறுக்கவே செய்கின்றனர், நம்பிக்கையளவிலேயே அவர்களிடம் விதிக்கொள்கை இருக்கிறது. இதை உணர்ந்துதான் இஸ்லாமும்; விதி இருக்கிறதா? எனும் கேள்விக்கு ஆம் என பதிலளிக்கிறது, அதேநேரம் பின்பாதியை நம்பு முன்பாதியை நம்பாதே என இரட்டை நிலையை மேற்கொள்கிறது.

\\விதி உள்ளதெனில் நான் நல்லவனாக,கெட்டவனாக நடப்பதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்பது என்ற கேள்வியும் விதி இல்லையெனில் நான் என்ன செய்வேன் என்று தெரியாதவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழும்// கடவுளை நம்புபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை இது. கடவுளின் இருப்பையே அசைத்துப்பார்க்கிற இந்தக் கேள்விக்கு விடைகூற முடியாது என்பதாலேயே முகம்மது இதுபற்றி தர்க்கிக்காதீர்கள் என அறிவுறுத்தியிருக்கிறார். அங்கும் இல்லாத, இங்கும் இல்லாத இரட்டை நிலையை மேற்கொண்டிருக்கிறார். இஸ்லாத்தை நம்புகிறவர்களுக்கு விதிக்கொள்கை போதுமானது. ஆனால் அதை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கும் அந்த நம்பிக்கையையே பதிலாக கூறுவீர்களென்றால், அது எல்லாருக்கும் பொதுவான மனிதனின் தோல்வியாக இருக்காது. மதத்தை கடவுளை நம்புகிறவர்களின் தோல்வியாக இருக்கும். முரண்பாடான இருவேறு நிலையை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என்றெல்லாம் நீட்டிமுழக்க முடியாது.

பொதுவாக இந்த இடர்பாட்டை விதிக்கொள்கை என கடந்து செல்வதும், சரியானதாக இருக்காது. விதிக்கொள்கை என்பது மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கக் கூடியது. மனிதன் மூளை எனும் பொருளைக்கொண்டு சிந்தித்து செயல்படுகிறான் என்பது அதன் எல்லாவித கூறுகளாலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மூளையின் செயல்பாடு, அதன் வேதியியல் மாற்றங்கள், இருமடி ரீதியான அதன் நினைவுத்திறன் என அனைத்தும் ஐயந்திரிபற விளக்கப்பட்டிருக்கிறது. கேள்வி எளிமையானது. நிரூபிக்கப்பட்டிருக்கும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை ஏற்கிறீர்களா? அதை மறுக்கும் விதிக்கொள்கையை ஏற்கிறீர்களா? என்பதுதான். இரண்டையும் ஏற்கிறோம் என்றெல்லாம் பசப்ப முடியாது. ஏனென்றால் ஒன்றை மற்றொன்று மறுக்கக்கூடியது.

இரண்டாவது இடர்பாடு, தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைப்புகள் எனும் நிலையில், எதனையும் படைத்திருக்காதபோது முதல் படைப்பை அல்லா எங்கிருந்து செய்திருக்க முடியும்? என்பது. நண்பர் இதை அல்லாவிடம் கேள்வியாக கேட்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை என எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருக்கிறார். அல்லாவின் இருப்பை ஏற்று இந்தக்கேள்வியை அல்லாவிடம் நாம் கேட்கவில்லை. மாறாக அல்லாவின் இருப்பை மறுக்கும் விதமாக மனிதர்களிடம் கேட்கிறோம். அல்லா எங்கிருந்தான் என இடம்சார்ந்த கேள்வியாக மட்டும் இதை கேட்கவில்லை, முழுமையான சாத்தியப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கேள்வி கேட்க்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் இடர்பாடுகள் குறித்த பதிவில் தெளிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது. \\எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம்// ஆனால் நண்பரோ வெறும் இடம்சார்ந்து முகவரி கேட்பதாக நினைத்துக்கொண்டே பதில் கூறியிருக்கிறார்.

அல்லா என்பது பொருளா? கருத்தா? பொருள் என்றால் அது இடம் சார்ந்தே இருந்தாக வேண்டும். கருத்து என்றால் ஒரு பொருளைச் சாராமல் கருத்து மட்டும் தனித்து உலவமுடியாது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு வேறொன்று என்றால் அது என்ன? எப்படி? என விளக்கும் கடமை நண்பருக்கு உள்ளது. மனிதனைப்போல் அல்லாவை அற்பமாக நினைக்கிறீர்களா? என நண்பர் விசனப்பட்டு கேள்வி எழுப்புகிறார். நண்பர் மறந்துவிட வேண்டாம், அல்லா என்ற ஒன்று இல்லை என்ற நிலையிலிருந்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அல்லாவின் இருப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் \\அவன் எப்படியும் இருக்க முடியும். எந்தப் பொருளீன் துனையும் இல்லாமல் இருக்க முடியும்// என தன் நம்பிக்கையை பதிலாக கூறுகிறார் நண்பர். உங்கள் நம்பிக்கையே போதுமானதாக இருக்கமுடியும் என்றால், இஸ்லாம் கற்பனை எனும் இந்த கட்டுரைத் தொடரே அவசியமில்லை.

இரண்டாவது இடர்பாட்டை எளிமையாக ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம், ஒருவர் ஒரு பேனாவை உருவாக்குகிறார் எனக் கொள்வோம். ஒருவர் அந்த பேனாவுக்குள் உட்கார்ந்துகொண்டு அந்த பேனாவை உருவாக்க முடியுமா? எந்த மூலப்பொருளுமின்றி ‘குன்’ ஆகுக என்று கூறியே அந்தப் பேனாவை உருவாக்கும் வல்லமை அந்த ஒருவருக்கு இருக்கிறது என்றே கொண்டாலும், பேனாவுக்குள் இருந்துகொண்டே பேனாவை உருவாக்க முடியுமா? இது கட்டுரையில் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது, \\ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது// என்று. தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் தன்னுடைய படைப்பு என்று எந்த ஆற்றலாலும் கூறமுடியாது. தன்னை மட்டுமே சுயம்பு என கூறிக்கொள்ளும் ஒன்று இடமில்லாத ஒரு இடத்தில் எப்படி இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வி. அதை அறிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என இதை ஒடுக்கிக் கொள்ளமுடியாது. ஏனென்றால், இடம்சார்ந்து மட்டுமே இந்தக் கேள்வி கேட்க்கப்படவில்லை. அப்படி இருக்கும் சாத்தியமில்லை என்பதே அந்தக் கேள்வியில் உள்ளார்ந்து இருப்பது.

இதை விளக்க நண்பர் அறிவியலையும் துணைக்கழைத்திருக்கிறார். பெருவெடிப்புக்கு முன்னர் என்ன நிலை இருந்தது என்பதை மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். தவறு. பெருவெடிப்புக்கு முந்திய கணம் வரை மனிதன் கண்டறிந்திருக்கிறான். அதற்கு முன்னர் என்ன? என்பது இன்றைய நிலையில் மனிதனுக்கு தெரியாது அவ்வளவுதான். நாளை கண்டறியப்படலாம். இதுதான் அறிவியலின் நிலை. ஆனால் அல்லாவின் நிலை இப்படியல்ல, என்றும் அதற்கு விடைகாண முடியாது என்பதே இஸ்லாத்தின் நிலை. அல்லது, முதல்படைப்பை அல்லா எப்படி படைத்தான் என்பது இன்று தெரியவில்லை, நாளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்பதை நண்பர் விளக்கட்டும். அப்போது இந்தக்கேள்வியை திரும்பப்பெற்றுக்கொண்டு தெரிந்து கொள்ளும் அந்த நாளுக்காக காத்திருக்கலாம். இன்னொன்றையும் நண்பர் தெரிந்துகொள்ள வேண்டும் பெருவெடிப்புக் கொள்கை என்பது அறிவியல் யூகம் தான், அறுதியான உண்மையல்ல. நாளை பெருவெடிப்புக் கொள்கையேகூட காணாமல் போகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக