புதன், 20 ஜூன், 2012

மனிதனும் உயிர்களும் கடவுள் படைப்பு என்ற மதக் கோட்பாட்டை தகர்த்தெறிந்த சார்ல்ஸ் டார்வின் நக்கீரன்



(மனிதனும் உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை எனும் மதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கி, அவை படிப்படியாக உருவானவை எனும் உருமலர்ச்சிக் கொள்கையை உலகுக்கு அளித்த அறிவியலாளர் சார்ல்ஸ் டார்வின் 1809 பெப்ரவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர். இன்று அவரது 200 ஆம் ஆண்டு நிறைவும் அவரின் சிறந்த படைப்பான "உயிர்களின் தோற்றம்" என்ற நூலின் 150 ஆம் ஆண்டு நிறைவும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நூல்; டார்வினை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது)
அறிவியல், வானியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்ற கலைகள் இன்று மக்களது வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி அமைத்துள்ளன. ஆயிரம் ஆண்டுகள் காணாத மாற்றத்தை, புதிய கண்டு பிடிப்புக்களை கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் மனிதன் கண்டு பிடித்துவிட்டான். இதனால் ஆண்டாண்டு காலமாக வேதவாக்காக நம்பி வந்த பல நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டுள்ளன. இன்னும் பல நம்பிக்கைகள் ஆட்டம் கண்டுள்ளன.
அறிவியல் கண்டு பிடித்த நீராவி, மின்னாற்றல், அணுசக்தி தொழில்த்துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. அச்சுயந்திரத்தின் கண்டு பிடிப்பு (கிபி 1450) கல்வி ஒளி பரந்துபட்ட அடித்தட்டுப் பொது மக்களையும் சென்றடைய வழி வகுத்திருக்கிறது.
கப்பல்கள், மிதிவண்டிகள், ஊர்திகள், வானூர்திகள், தொடர்வண்டிகள் போக்குவரத்தைத் துரிதப்படுத்தியுள்ளன.
வானொலி, திரைப்படம், தொலைபேசி, தொலைப்படி, தொலைக்காட்சி, கணினி, செய்மதிகள் தகவல் புரட்சியைத் தோற்றுவித்துள்ளன.
அறிவியல் கண்டு பிடித்த ஏவுகணைகள், விண் ஓடங்கள், இராட்சத தொலைநோக்கிகள் இயலுலகின் (அண்டத்தின்) புதிர்களை அவிழ்க்கவும் மனிதனை நிலாவில் இறக்கவும் வழி வகுத்துள்ளன.
தீராத நோய்கள் எனக் கருதப்பட்ட நீரிழிவு, எலும்புருக்கி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்த மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை நோய் (Plague) அம்மை, இளம்பிள்ளை வாதம், குக்கல், தொண்டை அழற்சி ((Diphtheria) போன்ற நோய்களுக்குத் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு அவை முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன.
புதியவகை நெல், கோதுமை, காய்கறிகள், பழங்கள் உணவு உற்பத்தியைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இவற்றால் மனிதனது பொதுமேனி அகவை உயர்ந்துள்ளது. பொதுமேனி வருவாய் அதிகரித்துள்ளது.
எவ்வளவுதான் ‘அந்தக்காலம்’ பற்றி வாய் சப்பிக் கொண்டாலும் மனித வரலாற்றின் பொற்காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உறைப்பான உண்மையாகும்.
பண்டைக் காலத்தில் ஞாயிறு, நிலா, கோள்கள், விண்மீன்கள் (நட்சத்திரங்கள்), கிரகணம், அண்டவெளி, இடி, மின்னல், காற்று, புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை, கடல்கொந்தளிப்பு ஆகிய இயற்கை நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றைக் கண்டு ஆதி மனிதன் பயந்து நடுங்கினான். அவற்றைத் திருப்திப்படுத்த பொங்கல், படையல், உயிர்ப்பலி கொடுத்து வழிபட்டான். காலப்போக்கில் இந்த அச்சம் தரும் இயற்கையை ஆட்டுவிக்க சகல வல்லமை படைத்த உலகியற்றியான் (கருத்தா) ஒருவன் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து அதற்குக் கடவுள், இறைவன், தெய்வம், தேவன், பிரம்மம் எனப் பலவாறு பெயரிட்டான்.
மனிதன் பேசத் தெரிந்த பின்னரே கடவுட் பெயர்களைக் கண்டு பிடித்திருக்க வேண்டும்! இன்னும் நன்றாகப் பேசத் தெரிந்த பின்னரே தத்துவம் என்ற பெயரில் கடவுள் பற்றிய கற்பனைக் கதைகளை உருவாக்கி இருக்க வேண்டும்.
கடவுளின் சினத்தைத் தணிக்கவும் அருளைப் பெறவும் தூபதீப நிவேதனங்கள், ஆடல் பாடல், மேள தாளம், தேர் திருவிழா, சரிகை கிரிகை, செபம், தொழுகை எனச் சடங்குகளை மனிதன் உருவாக்கினான்.
கடவுளர் இருக்க இடம் வேண்டாமா? கோயில், குளம், கோபுரங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றைக் கட்டினான். அதில் அம்பு, வில், வேல், வாள், கத்தி, சூலம், கதை, சக்கரம், தண்டு ஆகியவற்றைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்த தன் முன்னோர்கள் உருவில் சிலைகளை வடித்து வைத்தான். தான் செய்வது போன்று அந்தச் சிலைகளைக் குளிப்பாட்டி, ஆடை உடுத்தி, ஆபரணம் பூட்டி, படையல் செய்தான். தனக்கு மனைவி மக்கள் இருப்பது போலத் தெய்வங்களுக்கும் மனைவி மக்களைக் கற்பி;த்துத் திருமணவிழாக்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வேட்டைத் திருவிழாக்கள் ஆகியவற்றை நடத்தினான்.
வேட்டையாடிப் பிழைக்கவும் உழுது பயிரிட்டு வாழவும் விரும்பாத ஒரு சோம்பேறிக்
கூட்டம், தங்களை வானத்தில் இருக்கும் கடவுளருக்கும் நிலத்தில் வாழும் மனிதர்களுக்கும் இடையிலான தரகர்கள் என்றும் கடவுளை வசப்படுத்தி, விரும்பியதை விரும்பியவாறு பெற்றுத் தரத் தங்களிடம் மந்திரம் தந்திரம் யந்திரம் போன்ற ஆற்றல் இருப்பதாகச் சொன்ன பூசாரிகள,; குருமார்கள் அதற்கான சடங்குகளை நடத்தி வைத்தார்கள்.
நாளடைவில் சரிகை கிரிகை, பூசை பிரார்த்தனை, பக்தி, முக்தி என விரிந்து கடவுள் என்ற கற்பனைச் சொல்லினைச் சுற்றி சிக்கலான தத்துவங்களும் மதங்களும் தோன்றின.
இன்று மனிதன் பல் கலைகளையும் கற்று முன்னேறி, இயற்கையின் மர்மங்களைத் தெரிந்து கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தவும் அடக்கி ஆளவும் கற்றுக் கொண்டு விட்டான். ஆன பொழுதும் பரம்பரைப் பழக்கத்தால் இந்தப் பொருளற்ற நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கற்றோரும் கல்லாதோரும் ஒரு சேரத் தொடர்ந்து கடைப்பிடித்;து வருகின்றனர்.
அண்டம், கடவுள், படைப்புப் பற்றிய சிந்தனையைத் தலைகீழாகப் புரட்டி எடுத்த பல அறிவியலாளர்களில் பத்தொன்பதாம் நூற்றண்டில் இங்கிலாந்தில் பிறந்த சார்ல்ஸ் டார்வின் (Charles Darwin  (1809-1882) முக்கிய பங்கினை வகிக்கிறார்.
உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு (Theory of Evolution) நீர் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப்படவில்லை என்பதை நிறுவியது.
குரங்கில் இருந்து மனிதன்

மேலும் நாம் காணும் உயிரினங்களின் உருவம் தொடக்க காலத்தில் இருந்தே வரவில்லை. அவை ஒரு கல
(Single Cell)   உயிரியிற் தொடங்கி இடையறாத மாற்றம், படிமுறை வளர்ச்சி, மலர்ச்சி, இனப் பெருக்கம், இடப் பெருக்கம், இயற்கைத் தேர்வு (Natural selection)  நிலத்தின் தன்மை, சூழல் முதலியவற்றுக்கு ஏற்ப வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்தல் காரணமாக உருமாற்றம் அடைந்து வந்துள்ளன.
இன்று நாம் காணும், மரம், செடி, கொடிகள் கடலில் இருந்து கரையில் விழுந்த சிறு சாதாளையின் உருமலர்ச்சி ஆகும்.
மனிதனை எடுத்துக் கொண்டால் அவன் “முழுசாகக் கடவுளால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமையால் ஒன்று கூடி உண்டான உயிரணுக்களின் உருமலர்ச்சியே (பரிமாண வளர்ச்சியே) மனிதன். அதாவது பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாய் மனிதன் தோன்றினான்” என டார்வின் உருமலர்ச்சிக் கோட்பாடு மூலம் நிறுவினார்.
மனிதன் ஊர்வன நிலையைக் கடந்து நாலு காலால் நடக்கும் குரங்கு நிலை எய்திப் பின்னர் வளைந்த முதுகை நேர் நிமிர்த்தி நாலு கால்களில் இரண்டைக் கைகளாகப் பயன்படுத்தி மீதி இரண்டு காலால் நடக்கக் கற்றுக் கொண்டு மரக் கொப்புகளுக்குப் பதில் குடிசை கட்டி சிற்சில கருவிகளைச் செய்து வாழப் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்தது என டார்வின் விளக்கினார்.
உலகத்தையும் அதிலுள்ள உயிர்களையும் கடவுள் படைத்தார், அரைகுறையாக அல்ல ஒவ்வொன்றையும் முழுதாகவே படைத்தார், அதே போல் ஆறறிவு படைத்த ஆணையும் பெண்ணையும் கடவுளே படைத்தார் என்றும் மதங்களும் மதவாதிகளும் சொல்லி வந்த படைப்புக் கோட்பாட்டை டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு தகர்த்து எறிந்தது.
விவிலிய வேதத்தின் முதற்பகுதி (Genisis1)  கடவுள் உலகத்தையும் உயிரினத்தையும் மனிதனையும் 6,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் படைத்த கதையைக் கூறுகிறது. கடவுள் புல், பூண்டு, செடி, கொடிகளையும் விலங்குகளையும் படைத்த பின்னர் ஆணையும் பெண்ணையும் ஆறாவது நாளில் ஒரேசமயத்தில் படைத்தார் என்கிறது. ஆனால். விவிலிய வேதத்தின் இரண்டாம் பகுதி (Genisis 2) கடவுள் புல், பூண்டு, செடி, கொடிகளைப் படைக்கு முன்னர் மூன்றாவது நாளில் முதலில் ஆதாமைப் படைத்தார் என்றும் பின்னர் ஆதாமை நித்திரைகொள்ளச் செய்து அவனது விலா எலும்பில் இருந்து ஏவாளைப் படைத்ததாகச் சொல்கிறது. தொடர்ந்து அவர்களுக்கு காயீன் மற்றும் ஆபேலு என இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும் ஆபேலு ; காயினைக் கொன்றதாகவும் கதை தொடர்கிறத. இது முழுதும் ஆதிமனிதனின் வளமான கற்பனை என்பது சொல்லாமலே விளங்கும் என நினைக்கிறேன்.
கடவுள் படைப்புக் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிர்மாறாக டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு உயிரினங்கள் தம் நிலை பேற்றுக்காகப் போராடுகின்றன, இறுதியில் தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப்பிழைக்கின்றன (The Struggle for Existence and Survival of the Fittest)  எனக் கூறியது.
டார்வின் பல ஆண்டுகள் நாடு நாடாகச் சென்று ஆய்வு செய்து எழுதிய உயிரினங்களின் மூலம் (The Origin of Speicies ) என்ற நூல் 1859 இல் வெளிவந்தபோது மனித வரலாற்றில் அதுவரை காலமும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டன. உயிரினங்களின் மூலம் முதல் பதிப்பு முழுதும் (1,250 படிகள்) ஒரே நாளில் விற்று முடிந்தன. உலகம் கண்டிராத ஒரு சிந்தனைப் புரட்சியை 230 பக்கங்கள் கொண்ட அந்த நூல் ஏற்படுத்தியது. அதற்கு முன்னர் 1842 ஆம் ஆண்டு இயற்கைத் தேர்வுக் கோட்பாடு (Theory of Natural Selection) என்ற சிறு நூலை எழுதி வெளியிட்டார். டார்வின் உருமலர்ச்சி பற்றி மொத்தம் 18 நூல்களை எழுதினார்.
டார்வின் 1874 ஆம் ஆண்டு மனிதன் குரங்கிலிருந்து உருமலர்ச்சி பெற்றவன் (Man is the Developed Monkey ) எனப் பல சான்றுகள் மூலமாக எடுத்துக் காட்டினார்.
டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு மதவாதிகள் மத்தியில், குறிப்பாகச் செல்வாக்குப் படைத்த கிறித்தவ மதவாதிகள் மத்தியில், திகைப்பையும் வியப்பையும் அச்சத்தையும் உருவாக்கியது. .பரமண்டலம் பற்றியும் சொர்க்கத்தைப் ;பற்றியும் நரகத்தைப் பற்றியும் பேசியும் எழுதியும் வந்த மதகுருமார்க்குச் சொல்லி மாளாத சினம் ஏற்பட்டது. .டார்வினும் அவர் எழுதிய நூலும் பலத்த கண்டனத்துக்கும் எதிர்புக்கும் உள்ளாகியது. மதவாதிகள் உருமலர்ச்சிக் கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்தார்கள். ‘அண்டம், அதில் அடங்கிய உலகம் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை அதனை மறுப்பவர்கள் சாத்தானின் அவதாரங்கள்’ என ஆயர் வில்பபோர்ஸ் (Bishop Wilburforce)  கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
உயிரினங்களின் மூலம் என்ற நூல் நூல் வெளிவந்த ஆறு மாதத்துக்குள் (யூன் 30, 1860) நடந்த சொற்போரில் ஆயர் வில்பபோர்ஸ் பின்வருமாறு பேசினார்-
“மதிப்புக்குரிய மகாசனங்களே! பரம பிதாவின் பெயரால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன், சாத்தானின் அவதாரமான சார்ல்ஸ் டார்வின் நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என்று கொஞ்சமும் நாக் கூசாமால் கூறியிருக்கிறான். நீங்களே சொல்லுங்கள்? உங்களைக் கால்மேலும் தோள்மேலும் போட்டுச் சீராட்டி வளர்த்த உங்களுடைய பாட்டன்மார்களும் முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் இத்தனை இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளுக்குப் பின்னும் எந்தவித உருமலர்ச்சி கொள்ளாமல் அப்படியே இருக்கின்றான்? ஏன் அவனுக்கு இன்னும் ஒரு கொம்போ, ஒரு இறக்கையோ, ஒரு வாலோ அல்லது வேறு எதுவுமே உண்.டாகவில்லை? குரங்கின் உருமலர்ச்சி மனிதன் என்றால் மனிதனின் உருமலர்ச்சி என்ன?
இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நம்மைப் படைத்த ஆண்டவனை ஏளனம் செய்வது எத்தனை பெரிய பாவம் என்பதை நீங்கள் உணரவில்லையா?”
இவ்வாறு சொல்லாடல் செய்கின்;ற மதவாதிகள் ஒன்றை மட்டும் மறந்து விடுகின்றனர். .உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் கடவுளைப் படைத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது. அவர் யாராலும் படைக்கப்படவில்லை என்றால் இயற்கையின் செயல்களில் ஏது (காரணம்) இன்றி விளைவு (காரியம்) இல்லை என்பதால் கடவுளும் படைக்கப்பட்டவரே என ஒப்புக் கொள்ள வேண்டி நேரிடும்.
டார்வினின் உருமலர்ச்சி கோட்பாட்டை மறுத்து பள்ளிகளில் படைப்புக் கோட்பாட்டுக்குப் பதில் அறிவார்ந்த வரைபடம் (iவெநடடபைநவெ னநளபைn) என்பதை படிப்பிக்க முன்னாள் அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ் எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. 13 மாநிலங்கள் மட்டும் அதனைக் கற்பிக்க சட்டம் இயற்றியுள்ளன. இருந்தும் கிறித்துவ தலிபான்களால் இன்னும் வெற்றிபெற முடியவில்லை.
இந்த ஆண்டு; "படைப்பு" (Creation) எனும் திரைப்படம் வெளிவர உள்ளது. பிபிசி நிறைய வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது. உலகம் முழுக்கத் தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் ஒளி, ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
"சார்லஸ் டார்வின் மற்றும் உயிர்மரம்" (Charles Darwin and Life Tree)  எனும் ஆவணப்படத்தை டேவின் அட்டன்பரோ தயாரித்து பிபிசி யில் ஒளிபரப்பினார். வாழ்வு (Life) என்ற பெயரிலும் 10 பாகங்கள் கொண்ட படத்தையும் அவர் தயாரித்துள்ளார். டார்வினின் அபாயகரமான வாழ்வு எனும் மூன்று பாகப் படமும் மார்ச் மாதத்தில் வெளிவரும்.
இன்று மதங்களின் "படைப்புக்" கோட்பாடு;களுக்கு எதிராக உருமலர்ச்சிக் கோட்பாடுகளை நிறுவிய சிறந்த அறிவியலாளரை உலகமே பாராட்டுகிறது. "கடவுள் நம்பிக்கை" கொண்டவர்களும் அறிவியலை ஏற்று வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். (Muzhakkam - February 13, 2009)

பிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்

உலகை மாற்றிய ஒரு புத்தகம் - இரா. நடராசன்




‘நேர்மையான ஒரு விமர்சகன் வரலாற்றை நேர்த்தியுடன் மறுவாசிப்பு செய்வானேயானால் ஒரே ஒரு புத்தகம் உலகம் குறித்த ஒட்டுமொத்த அணுகுமுறையையும் புரட்டிப் போட்டதை காண்பான். அந்த புத்தகம்தான் டார்வினின் ‘உயிரிகளின் தோற்றம் _ இயற்கை தேர்வு’ எனும் புத்தகம்’.
- ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்

நமது கட்டுரையின் நோக்கம் வேறு. இன்று டார்வின் பிறந்த இருநூறாவது வருடமும், உயிரிகளின் தோற்றம் _ நூல் வெளிவந்த 150 வது வருடமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த புத்தகத்தில் என்னவெல்லாம் இருந்தது, அதன் அத்தியாய அமைப்பு அறிவியல் ஆய்வு நேர்த்தி... அதன்வழி அடையப்பட்ட முடிவுகள், அது ஏற்படுத்திய பேரதிர்வு..... இதெல்லாம் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. நமது நோக்கம் டார்வின் பீகிள் பயணம் மேற்கொண்ட... பிறகு புத்தகம் எழுதிய... ‘அந்த’ வயது அனுபவங்கள்.

Book நமது வாக்களிப்பு வயதான 18 வயதில் சார்லஸ் டார்வின் கேம்பிரிட்ஜின் கிரைஸ்ட் கல்லூரியில் ஒரு இளம்கலை பட்டம் பெறவும் கூடவே பாதிரியார் ஆவதற்கு தயார் செய்யப்படுவதற்காகவும் சேர்க்கப்பட்டிருந்தார். எப்படியாவதுதான் மருத்துவர் ஆகாமல் இருப்பதற்காக, பாதிரியார் ஆகிவிடுவதை டார்வின் வாழ்வாக அப்போது ஏற்றிருந்தார். கத்தோலிக்க ஆச்சாரத்தோடு வளர்க்கப்பட்டிருந்த அவரது தாத்தா எராமஸ் டார்வின் இயற்கை அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த ஒரு வைத்தியர். அவர் வழிவந்த டார்வினின் தந்தை மருத்துவர் ராபர்ட் வார்ஸ் டார்வின் தனது மகனை தேவாலய திருத்தந்தை ஆக்கியே தீருவது என முடிவாக இருந்த வருடம் அது... 1827.

தாய்சுசன்னா வெட்ஜ்வுட் டார்வினுக்கு எட்டுவயதாக இருக்கும்போது 1817ல், அதாவது பத்தாண்டுகளுக்குமுன் காலமாகி இருந்தார். தனது மூத்த சகோதரி கரோலின் சாராவால் வளர்க்கப்பட்ட டார்வின் அண்ணன் எராமஸ் டார்வினால் (தாத்தா பெயர் கொண்டவர்) ஒரு பயந்தாரி என வர்ணிக்கப்பட்டார். கூழாங்கற்கள் திரட்டுவது தோட்ட வேலை தவிர மற்றபடி தனித்து விளையாடும் சிறுவனாக இயற்கையிடம் விடப்பட்ட டார்வின் விரைவில் ‘திருத்தந்தை’ ஆக்கப்படுவது தவிர வேறு ‘உருப்படியான’ வேலை எதற்குமே லாயக்கு இல்லாத ‘தருதலை’ யாக தன் தந்தையால் முன்மொழியப்பட்டார்.

அதற்கு காரணம் இருந்தது. நமது சராசரி பள்ளிக்கூட மாணவர்கள் போல பள்ளி _ பள்ளி விட்டால் வீடு, வீட்டுப்பாடம் பரீட்சை, ஐஸ்பாய் விளையாட்டு (டி.வி., பேல்பூரி, பீர், ரோட்டோர நூடுல்ஸ்... குல்ஃபி இதெல்லாம் அப்போது வந்திருக்கவில்லை) கேர்ல் பிரெண்டு என்று அவர் வாழவில்லை. ஆறேழு எலிக்குஞ்சுகளை தனது படுக்கைக்கு அடியில் போட்டு வளர்ப்பது... இரண்டு மூன்று வகை நாய்குட்டிகளை பிடித்து ஒன்றை கட்டிப்போட்டு ஒன்றை அவுத்துவிட்டு ‘வளர்த்து’ பார்ப்பது... விதவிதமான வண்டுகள் (டார்வின் 12 வயதில் 60 வகை வண்டுகள் 17 வகை நண்டுகள் உயிரோடு வீட்டில் வைத்திருந்தார்!) தனது பிரார்த்தனை சிலுவைக்கு அடியில் செத்த பாம்பு இரண்டு கிடப்பதை கண்ட கரோலின் சாதார அம்மையாரை நினைத்தால் வருத்தமாகத்தான் உள்ளது. தந்தை தனது ‘கருங்காலி’ மகனை அழைத்து... ‘குடும்பத்து மானத்தையே கப்பலேத்த வந்த தருதலை’ என்று வாயார வைது தள்ளிய அந்த நாளில் மேலும் குடும்ப மானத்தை சீர்குலைத்தபடி அப்பா மருத்துவம் பார்க்க மறுத்த ஆண்டவரின் தண்டனை பிறவிகளாக இரண்டு ‘கருப்பு’ அடிமைகளுக்கு அவருக்கு தெரியாமல் மருந்து மாத்திரைகளை ‘சுட்டு’ வைத்தியம் பார்த்து தருதலை பிள்ளையான டார்வின் மேலும் விட்டு விலக வேண்டிய மைக்ரேன் தலைவலி ஆனார்.

எடின்பரோவில் அவர் மேலும் மேலும் புழுபூச்சி வண்டுகளையே தேடிச்சென்றதோடு _ (அங்கே மருத்துவ படிப்புக்காக டார்வின் அனுப்பப்பட்டிருந்தார்) தனது வகுப்புகளை அவ்வப்போது கட் அடித்தும் அடுத்த புயலை வீட்டினை நோக்கி அனுப்பி வைத்தார். தன்னிடம் மருத்துவராவதற்கான குறைந்தபட்ச ஆர்வம்கூட இல்லாததை அவர் கண்டிருக்க வேண்டும். ‘இன்று ஒரு கடல் எலி கிடைத்தது. லீனஸ் ‘அப்ரோடியா அகுலிட்டா’ என பெயர் வைத்த உயிரி. மூன்று நாலு இன்ச் நீளம். ஆனால் அதற்கு நாலு உணர்வு மீசை உள்ளது. லீனஸ் கூறியது போல மூன்றல்ல’ என்கிற ரீதியில் அவரது மருத்துவக் கல்வியாக வீட்டுப்பாட நோட்டுகளில் எழுதப்பட்டு இருப்பதை படித்து மருத்துவப் பேராசிரியர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள். டார்வினின் இயல்பான பயம் வைத்திய படிப்பிலிருந்தே அவரை ஓட ஓட விரட்டி அடித்திருக்க வேண்டும். தவளை, எலி முதல் மனிதர் வரை அறுத்து உள்ளே என்ன இருக்கிறது என ரத்தம் சொட்ட சொட்ட படிப்பது அவருக்கு பெரிய சித்திரவதையாக தோன்றியது. ஒரு குழந்தைக்கு எடின்பரோவில் _ அப்போது மயக்கமருந்து கிடையாது _ கதறகதற அறுவை ‘சிகிச்சை’ நடந்த அன்று ஊருக்கு ஓடிவந்து விட்டமகனை என்ன செய்வதென்று ராபர்ட் டார்வினுக்கு தெரியவில்லை.

பிறகு சட்டம், படிக்க சேர்க்கப்பட்டு அங்கே வகுப்பில் ஆமையோடு போய்... கல்லூரியின் ‘சாவு கிராக்கி’யாகி ஒரு வழியாய் திருத்தந்தை ஆவதற்காக கேம்பிரிட்ஜின் கிறித்துவ கல்லூரி போன டார்வின் அங்கே மதபோதகராக ஆவதற்காக படித்த முதல் பாடம்... ‘ஆண்டவர் இந்த பூவுலகை கி.மு.4004, அக்டோபர் 23 அன்று காலை 9 மணிக்கு படைத்தார்’ என்பது எப்படியோ வைத்தியனாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக டார்வின் அதுபோன்ற பாடங்களை பயபக்தியோடு விழுந்து விழுந்து படித்தார். ‘பிறகு ஆறே நாட்களில் உலக ஐந்துக்கள் அனைத்தையும் ஆண்டவர் படைத்து அது முதல் இந்த உலகு மாறாதிருக்கிறது’ இந்த வருடத்தை கணித்து வெளியிட்டது. ஆர்மாக் எனும் ஊரின் ஆர்க்பிஷப் ஜேம்ஸ் யுஷர் 1701 முதல் எல்லா பைபிளிலும் அப்படித்தான் குறிக்கப்பட்டிருந்தது. தான் மருத்துவர் ஆவதை தவிர வேறு ‘எது வேண்டுமானாலும்’ ஆகும். பதட்டம் இதையெல்லாம் எந்தக் கேள்வியும் இன்றி அவரை ஏற்கவைத்தாலும் 1830 டைரிக் குறிப்புகளின் படி கூட அவர், ‘பூச்சிகளை பலவகைகளில் திரட்டவும், பறவைகளை வளர்க்கவும்,’ தனது விடுமுறைகளை பல்கலைகழக பாதிரிகல்வி சட்ட திட்டங்களுக்கு எதிராக) அழிக்கலானார் என்பதை அறிகிறோம்.

அவ்வகையில் வெறும் புழு பூச்சி சேகரிப்பதோடு டார்வினிடம் இன்னொரு விருப்பமான தேடலும் இருந்ததை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கூழாங்கற்கள்...! அதாவது இயற்கையிலோடு, புவியியலும்! ஜியாலஜியை பொருத்தவரை சார்லஸ் லைல், வில்லியம் டாலே ஆகியோரும், இயற்கையியலை பொருத்தவரை ஆடம் செட்விக் (பூச்சி நிபுணர்) மற்றும் அலெக்சாந்தர் வான் வரம்போல்ட்டுடனும் டார்வினுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர்கள் கேம்பிரிட்ஜில் டார்வினுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர்கள் டார்வின் புழுபூச்சி சேகரித்ததுபோல அவர்கள் ‘டார்வின்’ மாதிரி ஆட்களை சேகரித்தார்கள்.

1831 கோடையின் போது டார்வினை போதகராக அர்ப்பணிக்கும் திருப்பணிக்கு நாள்குறிப்பதென்று ராபர்ட்டார்வின் முடிவு செய்துவிட்டிருந்தார். டார்வினுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனது எதிர்காலம் குறித்து அவருக்கு எந்தத் தெளிவுமே இல்லாமல்தான் இருந்தது. அவரது இயல்பே, மிகவும் சாதுவான அதிகம் பேசாத, எந்த இடத்திலும் தன்னை முன்னிலை படுத்தி முந்திக் கொண்டு பேசாத, நடிக்கத் தெரியாத மொத்தத்தில் ‘இருக்கும் இடம் தெரியாத’ ஒரு மனிதர் என்பதாக இருந்தது. நல்லவேளை வைத்தியனாகவில்லை என்று நினைத்து மகிழ்ந்த டார்வின் ‘வேறு எதுவும்’ ஆகவும் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை.

ஆனால் திடீரென்று வாழ்வின் அற்புதமான ஒரு வாய்ப்பு கிராமத்திற்கே திரும்பிவிட்டிருந்த டார்வின் முன் வந்து கதவை தட்டியது. பத்து நாளில் திருப்பலி. ஆனால் இயற்கை தனது மர்ம புன்னகையோடு வேறு திட்டங்களை கொண்டதாக டார்வின் முன் காய் நகர்த்தியது. 1831ல் ஷ்ருஸ்பரியில் தனது வீட்டிற்கு பல்கலைகழகத்திலிருந்து திரும்பிய டார்வினுக்கு 22 வயது, பாதிரி ஆகப்போவதால் ஊரே பேசிக் கொண்டபோது திருட்டுத்தனமாக வாசித்தது சர்ஜான் ஹெஷலின் “Prelimilinary Discourse on the study of Natural Philiosophy” ஆனால் அவரிடம் தரப்படாமல் அவரது தந்தை மருத்துவ மேசை மீது அவருக்கு வந்த ஒரு வாய்ப்பு தரும் கடிதம் வழியே புதிய பாதையன்றுக்கான வழி திறக்க இருந்தது. அக்கடிதம் ஹென்ஸ்லோவிலிருந்து வந்திருந்தது. டெரியா டெல் பியூகோ வரை சென்று மேற்கிந்திய தீவு வழியே நாடு திரும்பும் ஒரு கப்பல் பிரயாணத்தில் கலந்து கொள்ளும் அழைப்பு! கப்பலின் பெயர் எச்.எம்.எஸ். பீகிள் காப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய் ஏற்கனவே 1828ல் கனிமவளம் தேடிச்சென்று திரும்பி இருந்தார். தென் அமெரிக்காவின் கனிம வளங்களை வரையங்களுக்கு உட்படுத்துவது பீகிள் கப்பல் பிரயாணத்தின் நோக்கம்.

சரி. அது என்ன பீகிள் நமது கணபதி டிராவல்ஸ், இன்சா அல்லா ரோடுவேல்ஸ் மாதிரி ஒருபெயர்தான். வேறு ஒரு விஷேசமும் கிடையாது. ஆங்கிலேய அரசு கனிமவளங்களை கண்டறிய கப்பலை மீண்டும் அனுப்ப முடிவெடுத்தபோது 1831ல் ஃபிட்ஸ்ராய்க்கு வயது 21. அந்த இளம் காப்டனுக்கு கப்பல் சிப்பந்திகளோடு சாதாரண ஒருவராக பழக முடியவில்லை. படித்த கனவான, ஜியாலஜி இயற்கைகல்வி படித்த கனவான் உணவு மேசையில் பேசிக் கொண்டிருக்க ஓர் இணையாக தேவைப்பட்டால் ஆடம் செட்விக்கும், வான்ஹம்போல்ட்டும் டார்வினை அனுப்ப சிபாரிசு செய்தார்கள். டார்வினின் தந்தையை ஒப்புக்க வைப்பது மிக கடினமாக இருந்தது. ‘இரண்டே வருடத்தில் வந்து விடுவேன்.... வந்ததும் பாதிரி ஆவதுதான் முதல் வேலை... அப்பா’ இந்த ஒரு பொய் சத்தியம் இல்லையேல் உலகின் இயற்கையியல் வேறுமாதிரி எழுதப்பட்டிருக்கும். எப்படியோ மானத்தை கப்பலேற்றிய பிள்ளையே கப்பல் ஏறியது.

‘எப்போதும் என்னோடு கடல் பிரயாணத்திற்கு வருபவர் வராததால் உங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது’ என்றபடி மணிக்கணக்கில் வெட்டிபேச்சு காப்டனை டார்வினுக்கு பிடிக்காததற்கு இன்னொரு காரணம் இருந்தது. சின்ன கப்பல் காபினில் இருவருமாக தங்க நேர்ந்தது... ஒவ்வொரு தீவிலிருந்தும் டார்வின் பிடித்து வந்த ஹ§க்கோ, புடுக்கி, டிக்கிட்டா... டாக்குமொடா என வகைவகையான பறவைகள பாலூட்டு இன மீன்.... பெரிய குழாய் மூக்கு கொண்ட குட்டி பன்றி என வைக்க இடம் இல்லாதது மட்டுமல்ல... அந்த ஆள் காப்டன் போட்ட கூச்சல் பெரிய அவஸ்த்தையாக இருந்தது.

ஃபிட்ஸ்ராயின் ஒரே பொழுதுபோக்கு பைபிள் முறையிலான உலக படைப்பிற்கு ஆதாரங்கள் தேடுதல். டார்வின் பாதிரியாக ஆவதற்கு கற்ற கல்வியால் அவர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான எண்ணம் கப்பல் பிரயாணத்தின் ஊடாக ஏழு தீவுகள் கடந்து ஓர் ஆண்டு முடிந்த கையோடு ஃபிட்ஸ்ராயிடமிருந்து விடைபெற்றிருந்தது. பெரும்பாலும் டார்வின் தானாக வாயை திறக்க மாட்டார் என்பதால் ...... பிழைத்தது. இயற்கையியலும் தான்.

1831 முதல் 1836 வரை ஐந்தாண்டுகள் மற்றும் இரண்டு நாள் சரியாக பயணித்த டார்வின் அப்போது தான் திரட்டிய பல நேரடி களப் பொருட்களை விலங்கு மாதிரிகள் தான் கண்டுநேரடி அச்செடுத்த புதை வடிவங்கள் சந்தித்த மனித இனங்கள் யாவற்றையும் கொண்டு உலகச் சிந்தனை போக்கையே மாற்றி அமைத்தார். உதாரணமாக காலபாக்கஸ் தீவில் பின்ச் பறவைகளை ஆய்வு செய்த அவர் தீவு தீவாக சென்றபோது ஒரு தீவில் அப்பறவையிடம் கடலையை கொத்திக்கொரிக்க பட்டமூக்கு அலகையும் அடுத்த தீவில் எலி தின்ன கூர்மூக்கு அலகையும் அதற்கு அடுத்த தீவில் புழுவை உண்ண வளைந்த மூக்கு அலகையும் கொண்டவையாக இருந்தன. ‘அப்பறவைகளை ஒரே மாதிரியாக இயற்கை உருவாக்கி இருந்தும் அவை தங்களது உணவு தேவைக்கு ஏற்ப உண்ணும் மூக்கை படைத்துக் கொண்டன’ எனும் சரியான முடிவுக்கு டார்வின் வந்தார். இயற்கை ஒரே நாளில் (அல்லது ஆறு நாளில்) படைக்கப்பட்டிருக்க முடியாது. அது படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தனது அந்தப் பயணத்தின் போது டார்வின் பரிணாமத்தத்துவம் எதையும் முன்மொழியவில்லை. அப்போது அவர் குரங்கிலிருந்து வந்தவனே மனிதனாவான் என்று முடிவுக்கு வரவும் இல்லை. கிட்டத்தட்ட 17,000 கடல் மற்றும் நில உயிர் மாதிரிகளுடன் கல்லாவோ, இக்குவிக், சான்டியாகோ, ஹாரன்வளைகுடா, ரியோடி ஜெனரோ டேவான்போர்ட், புயூனஸ் ஏரஸ், கனரிதீவுகள், புனிதவொலனா டவுன், குட்ஹோப் வளைகுடா, மொரிஷியஸ், கோகாஸ்தீவு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என சுற்றிய ஐந்தாண்டு பயணம் டார்வின் எனும் இயற்கை விஞ்ஞானியை அங்குலம் அங்குலமாக செதுக்கியது. எந்தத் தனிமனிதனுக்கும் அப்படி ஒரு பயண வாய்ப்பு அளப்பறிய கால அவகாசமும் கிடைத்தது இல்லை. அறிவியல் தனக்கு வராது... கணிதத்தில் அட்சம் கூட புரியாததான் ஒரு விஞ்ஞானியா என ஒருவித சுய தாழ்வு மதிப்பீடு டார்வினை மழுங்கடித்து இருந்தபோதிலும் இயற்கையை அருகே சென்று உற்றுநோக்குவதிலும் முடிவுகளுக்கு உட்படுத்துவதிலும் தேர்ந்த விஞ்ஞானியாக அவர் மிளிரவே செய்தார்.

நியூசிலாந்தின் காவிட்டி இன மனிதர்களையும் ஆஸ்திரேலியவின் அபோரிஜின் இனஆதி மனிதனையும் ஆப்பிரிக்க காடுகளின் கருப்பின புராதன மனிதனையும் ஒப்பிட்டு சமூக, கலாசார வாழ்வின் வளர்ச்சி நிலையை முதலில் விளங்கிக் கொள்ள டார்வினால் முடிந்தது என்றால் அது அந்தப் பயணத்தின் வெற்றி என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும். அவர்கள் குறித்த மொத்த குறிப்புகளையும் எடுத்துக் கொண்டு ஊர் திரும்பிய டார்வின் என்ன செய்தார் என்பதுதான் சுவாரசியமான கட்டமாகும்.

1842 (அதாவது பீகிள் பயணம் முடிந்த ஐந்தாண்டு கழித்து) டார்வின் தன் பீகிள் குறிப்புகளை எடுத்து மறுபதிவாக பொறுமையாக ஒரு மாதிரிபடிவம் ஏற்படுத்தி உலகின் முதல் உயிரிமரத்தை (ஜிக்ஷீமீமீ ஷீயீ றீவீயீமீ) வரைந்து பூனை, யானை, குதிரை என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மூதாதை இன விலங்கிலிருந்து வந்ததை தனது புரிதலுக்கு உட்படுத்தி நிச்சயப்படுத்திக் கொண்டு 230 பக்க கட்டுரை ‘சுருக்கம்’ ஒன்றை எழுதினார். அதை என்ன செய்தார்? பரிணாம தத்துவமான அந்தக் கண்டுபிடிப்பு அடங்கிய அரிய பொக்கிஷயத்தை தனது எழுது மேசை டிராயரில் போட்டு மூடினார்! அடுத்த பத்தாண்டுகளுக்கு எடுக்கவில்லை. அந்தப் பத்தாண்டுகள் என்ன செய்தார்?

1. திருமணம் செய்து கொண்டு பத்துபிள்ளை பெற்றார் 2. மண்புழு விவசாயியின் நண்பன் என்பதை நிரூபித்தார். 3. மனித மனம் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதினார். 4. விதவிதமாக உடல் உபாதைகளுக்கு ஆளாகி விதவிதமான மருந்து வைத்தியம் பார்த்துக் கொண்டார். 5. பென்சுகா எனும் கருவண்டு கடித்தால் டெங்கு காய்ச்சல் வரும் என்று கண்டுபிடித்தார். 6. தாவரங்கள் தன்னை தானே சேர்ந்து எப்படி அபிவிருத்தி செய்கின்றன என்பதை ஆராய்ந்தார். 7. நண்பர்கள் உயிரியலாளர்கள் பலருக்கு தனது பீகிள் பயணத் திரட்டுகளில் சிலதை அனுப்பிக் கொண்டிருந்தார். 8. ஏராளமான பக்கங்கள் நலம் விசாரிப்பு கடிதங்கள் பலருக்கு எழுதினார். 9. தனது குழந்தைகள் மற்றும் மனைவியோடு தேவாலய திருப்பணிகள் செய்த கொண்டிருந்தார். 10. தனக்கு மூதாதை வழி வந்த சொத்து அனுபவித்து ஒன்றிரண்டு வருடம் சும்மாவும் இருந்தார்.

ஆனால் தன் கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. அது வெளியானால் என்னமாதிரி புயல் கிளம்பும் என்று அவருக்கு தெரியும். பொதுவாகவே சாதுவாக இருந்துவிடும் இயல்வு அப்புயலை எதிர்கொள்ள அவரை தயங்க வைத்த படியே இருந்தது. 1858 இந்த நிலைமை முற்றிலும் மாறியது. ஆனால் இதேபோன்ற நிலைமை நியூட்டனுக்கும் இருந்தது. ஈர்ப்பு வகையிலிருந்து இயக்க விதிவரை யாவற்றையும் தான் தன் மட்டில் அறிந்து 18 வருடம் வெளியிடாத அமைதி காத்து வானவியலாளர் ஹபுல் எதேச்சையாக ஓர் உரையாடல் மூலம் அறிந்து நெருக்குதல் தந்ததால் தான் பிரின்சியாமாதமாட்டிக்காவை நியூட்டன் எழுதினார்.

டார்வின் விஷயத்தில் அதை தூண்டியது, ஆல்பிரட் ரஸல் வாலஸ். வாலஸ் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் அதே இயற்கை தேர்வு _ பரிணாம வளர்ச்சி ஆகிய விஷயங்களை அடைந்திருந்தார். டார்வினுக்கு அது குறித்து (டார்வின் அதை கண்டு பிடித்திருப்பது தெரியாமல்) 1858ல் கடிதமாக எழுதிட டார்வின் முழித்துக் கொண்டார். ஆனால் வழக்கம்போல அவருக்கு என்ன செய்வது என்பதில் மிகுந்த தயக்கம். வாலஸின் கண்டுபிடிப்பு வெறும் அனுமானம். தனது கண்டுபிடிப்போ பீகிள் பயண உழைப்பின் நேரடி ஆதாரம். டார்வினின் நெருங்கிய நண்பர்களான சார்லஸ் லையல் மற்றும் ஜோசப் ஹ§க்கர் போன்றோர் முதலில் விஷயத்தை அளிக்கிறார்கள். பிறகு டார்வின் _ வாலஸ் இருவரின் கண்டுபிடிப்பாக அதை 1858 ஜூலை 1 அன்று லீனியன் கல்வியக கூட்டத்தில் வெளியிட முடிவும் செய்தார்கள். ஆனால் அன்றைய தினம் டார்வினின் கடைகுட்டி சார்லஸ் ஸ்கார்லட் காய்ச்சலுக்கு பலியாகிட, தனது கண்டுபிடிப்பு வெளியான நாளில் டார்வின் தனது மகனின் இறுதி சடங்கில் இருந்தார்.

வாலஸ் தனது கண்டுபிடிப்பை உரிமை கோராமல் டார்வினின் நேரடி ஆதாரங்களுக்கு விட்டு கொடுத்தது போல இன்று நடக்க சாத்தியமே இல்லை. டார்வினியம் என்றே அது அழைக்கப்பட்டது. வாலஸ்ஸ§ அதை அப்படி அழைத்தது ஒற்றை அறிவியல் குரலாக அதை ஒலிக்க வைத்தது. தனது 230 பக்கக் கட்டுரை சுருக்கத்தை டார்வின் அடுத்த ஆறு மாதங்களில் முழு புத்தகமாக எழுதினார். ஆனால் அது சுவாரசியமற்ற தலைப்பாக இருந்தது. On the origin of species by, mean of Natural Selection , or the preservation of favoured races in the struggle of Life என்று ஒரு பாரா அளவு தலைப்பை பார்த்ததும் ஏழெட்டு புத்தக நிறுவனங்கள் ஜகா வாங்கின. அதற்கு பதில் புறாக்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி உடனடி விற்பனைக்கு உதவுமாறு குவார்டர்லி ரிவ்யூவின் விட்வால் எல்வின் டார்வினை வேண்டினர் (Everyone is interested in Pigeons!)

புத்தக தலைப்பை டார்வின் ஓரளவு குறைத்து On the origin of species by, mean of Natural Selection என்று வைத்தபோது அவரது பதிப்பாளர் ஜான்முர்ரே 500 பிரதி வெளியிடும் தன் திட்டத்தை 1200 பிரதி என்று விரிவாக்கி 15 சில்லிங் விலை நிர்ணயித்தார். மூன்னூறு பிரதிகள் டார்வின் நண்பர் குழுவுக்கு ஓசியில் கொடுத்து முர்ரேவின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டது வேறு விஷயம். ஆனால் இன்றுவரை ‘உயிரிகளின் தோற்றம் _ இயற்கையின் சுயத்தேர்வு’ புத்தகம் அச்சலிருந்து விடைபெறவே இல்லை.

உலகெங்கும் வீசியது டார்வினியம் எனும் சுனாமி. அறிவியல் முதல் அரசியல் வரை, மதசம்பிரதாயங்கள் முதல் உரிமைப் போராட்டங்கள் வரை அது உலுக்காத ஒரு விஷயம் பாக்கி இல்லை. ஆனால் அந்த புத்தகத்தில் டார்வின் ‘குரங்கிலிருந்து வந்தவனே மனிதன்’ என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. அது சம்பந்தமாக அதை தவிர மீதி எல்லாம் குறிப்பிட்டிருந்தார் என்பதே உண்மை. 1871ல் வெளியான ஜிலீமீ ஞிமீநீமீஸீt ஷீயீ விணீஸீ எனும் தனது நூலில் டார்வின் தனது சொந்த உயிரினத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து விவரித்தார். எந்தப் பாறை வடிவ முன் உதாரணமும் இல்லாத அந்தக் கால கட்டத்திலேயே தைரியமாக மனித குரங்கு மனிதாக மாறியதை மிக நேர்த்தியாக விவரித்து போகிறார்.

‘உயிரிகளின் தோற்றம்’ புத்தகம் ஐரோப்பாவை ஒரு உலுக்கு உலுக்கி மதவாதிகள் முதல் பழைய சித்தாந்த அறிவியல்வாதிகள் வரை யாவரையும் நீக்கமற அக்னி பரிட்சைக்கு உட்படுத்தியது. ‘அதில் புதிதாய் இருப்பவை எல்லாம் பொய்... உண்மையாய் இருப்பது எல்லாம் ஏற்கெனவே உள்ளது தான்’ என்று ஆடம் செட்ஜ்விக் அறிவித்தார். ஒரு படி மேலே போய் ‘குரங்கை மனிதனாக்கி காட்டுமாறு’ சவால் விட்டார். பிரான்சில் வால்டேர் வாதிகள் புனித மனிதன் கொள்கையில் ஆட்டம் கண்டனர். ஜெர்மனியில் மார்க்ஸ் டார்வினை முழுமையாய் உள்வாங்கிக் கொண்டு தனது மூலதனத்தை டார்வினுக்கு சமர்ப்பிக்க முன் வருகிறார். பல்வேறு இடங்களில் டார்வின் எதிர்ப்பு கருத்தரங்கங்களை மதவாதிகள் நடத்தினார்கள். பல்கலைக்கழகங்கள் செய்வதறியாத கையை பிசைந்து கொண்டு விழி பிதுங்கி நின்றின. லண்டன் மியூசியம் நிகழ்வில் சண்டை உச்சத்திற்கு போய் கைகலப்பான போது போப்பாண்டவர் டார்வின் ஆண்டவரின் முதல் எதிரி என்று வாட்டிகான் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இப்படிதான் கிளப்பிவிட்ட சர்ச்சைப்புயல் கண்டம் கண்டமாக மையம் கொண்டபோது டார்வின் விவாதக் கூட்டங்கள் எதிலுமே கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். அப்போது என்ன செய்தார்.

1. புவியியல் வரலாற்றில் மனிதனைத் தவிர பிற உயிரிகள் செய்த முக்கியப் பங்களிப்புகள் பற்றி ஆராய்ச்சி. 2. பூச்சிகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்கள் பட்டியல் தயாரிப்பு. 3. மனித விலங்கு உணர்ச்சிப் பெருக்கு வித்தியாசங்கள் பற்றிய ஆதாரப் பூர்வமான டேட்டா. 4. தாவரங்கள் நகரும் தன்மை இல்லாதிருப்பது ஏன்என்பது பற்றி செயல்விளக்கம். 5. உயிர் மரத்தின் மேலும் ஆழமான விரிவாக்கம். மேலும் தனக்கு தெரிந்த விஷயங்கள் பற்றி ஆறு புத்தகங்கள்.

1882ல் தான் இறக்கும் தருவாயில் டார்வின் தனது உயிரிகளின் தோற்றம் நூல் 12 மொழிகளில் மொழி பெயர்ப்பானதையும் சில லட்சம் பிரதி விற்றதையும் ஆராய்ந்து எப்படி அதை தாவர இனப்பெருக்கத்திற்கு உதவுகின்றன என்பதை கண்டறிய அவர் சுமார் ஏழு லிட்டர் பறவை மலம் சேகரித்து வைத்திருந்ததும், ஒரு 240 பக்கத்திற்கு அந்த ஆய்வு குறித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்ததும் அவரது மரண படுக்கை அடியிலிருந்து கிடைத்தது.

பின்குறிப்புகள்:

1. டார்வின் பிறந்த தினமான 1809 பிப்ரவரி 12ஐ, உலகில் பிசாசு (Devil) பிறந்தநாள் என்று கருத்து மதவாதிகள் பகிரங்கமாக அறிவித்தார்கள். அதே நாளில் பிறந்த மற்றொரு பிசாசு ஆபிரஹாம் லிங்கன்

2. பீகிள் கப்பலின் காப்டன் ஃபிட் ஸ்ராய் டார்வின் எதிர்ப்பாளராகி லண்டன் மியூசிய (1860) டார்வின் எதிர்ப்புக் கருத்தரங்களில் சண்டை சச்சரவில் கோதாவில் இறங்கி ‘தி புக்.... திபுக்’ என்று பைபிளை காட்டியபடி இங்கும் அங்கும் ஓடியதை சிலர் பார்த்ததாக கடைசி பதிவு. அய்ந்தாண்டு கழித்து டார்வின் புயல் உச்சத்திலிருந்தபோது காப்டன் ஃபிட்ஸ்ராய் தற்கொலை செய்துகொண்டார்.

3. ஒரே ஒரு புத்தகம் பற்றி அதன் ஆசிரியர் பற்றி இத்தனை எழுதப்பட்டது இதுவரை வரலாற்றில் இல்லை. சிறியதும் பெரியதுமாய் பரிணாமம் டார்வின் பற்றி 10 லட்சம் வெளிவந்துள்ளதாக Evolution.com சொல்கிறது. இக்கட்டுரைகள் ஒரு மில்லியனுக்கும் மேல்... இந்த கட்டுரையையும் சேர்த்து.

நவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா ? - தந்தை பெரியார்


நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்கால மும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராய ணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக் களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.



நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாச மிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடைய வர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண் டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங் களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப் பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்ப தால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென் றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங் களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கை களுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப் பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத் தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண் டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற் சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத் திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படு கிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழி யான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படு கின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக் கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக் களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பி லடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேக மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடு வதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண் ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்ச மெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத் திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதி யும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டி ருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.

கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ்வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ் வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடி கள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோ மாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயி ருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங் களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபி ஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக் களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களை யெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்க ளென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?

ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலை யில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலு வால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந் தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

நவராத்திரியைத் தடை செய்வார்களா?



காதலர் தினத்தால் கற்பு கெட்டுப் போய் விடுகிறது _ ஒழுக்கம் ஓடி ஒளிந்து விடுகிறது. நமது கலாச்சாரம் சீரழிகிறது! கூடாது! கூடவே கூடாது - _ அதனைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று தண்டால், பஸ்கி எடுக்கும் ராம்சேனா, இந்து முன்னணி வகையறாக்களுக்கு ஒரு கேள்வி. நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதத்தில் ஒன்பது நாள்கள் விழா கொண்டாடப்படுகிறதே தெரியுமா?
மூன்று நாள் சக்திக்கு (பார்வதிக்கு), மூன்று நாள் லட்சுமிக்கு, மூன்றுநாள் சரஸ்வதிக்கென்று கொலு வைத்துக் கும்மாளம் அடிக்கிறார்களே -_ அந்த ஒன்பது நாள்களில் நடக்கும் அசிங்கம், ஆபாசம் பற்றி அறியுமா இந்த இந்து முன்னணி சங்பரிவார் வட்டாரம்? மும்பையையே கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களை கட்டும். இவற்றில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம் பாட்டத்தில் ஜமாய்ப் பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இளை ஞர்கள், இளம் பெண்கள். வழக்கமாக இரவில் நீண்ட நேரத்துக்கு வெளியே இருக்க இளம் பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் தசரா கொண்டாட்ட சீசன் முழுதும் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரைகூட இளம்பெண்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு.

இந்தக் கொண்டாட்டங்களின் போது இளசுகளிடையே ஆண், பெண், தெரிந்தவர், தெரி யாதவர், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசங் கள் பார்க்கப்படுவதில்லை. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களுடன் இளம் பெண்கள் கைகோத்து ஆடுவதும் கச்சேரிகளில் ஆடிப் பாடுவதும் சகஜம். இதனால் இரவில் நீண்ட நேரம் வெளியில் தங்கும் இளம் பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஊர் சுற்றுவதும், காதலர் வீட்டில் தங்குவதும் நடப்பதால் பெண்கள் கற்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. தவிர, மும்பை நகரெங்கும் கட்டுக்கடங்காத கூட்டத்தை இரவு நேரத்தில் பார்க்கும் விபசாரப் பெண்களும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் குவிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களால் தசரா பண்டிகைக்குப் பிறகு கர்ப்பம் அடையும் திருமணம் ஆகாத இளம் பெண்கள் எண்ணிக்கையும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிக ரிப்பதாக மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

கடந்த ஆண்டு தசராவுக்குப் பிறகு திருமண மாகாமல் கர்ப்பம் அடைந்த இளம் பெண்கள் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தசராவுக்குப் பிறகு மூன்று மாத கால கட்டத்தில், ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது. 16 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.

இவ்வளவுத் தகவல்களையும் வெளியிட்டது. விடுதலை ஏடு அல்ல. 26.9.2005 நாளிட்ட தினகரன் தான். கலாச்சாரத்தைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத் ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிவசேனா என்ன செய்யப் போகிறது?

பால்தாக்கரே இந்தப் பாலியல் சமாச்சாரத்துக்குச் செய்யப் போகும் பரிகாரம் என்ன?

பகவான் கிருஷ்ணன் செய்ததுதானே என்று சமாதானம் சொல்லப் போகிறாரா?

காதலர் தினத்தால் போச்சு, போச்சு, கலாச்சாரம் போச்சு என்று கலவரக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் இந்த இந்துத்துவாவாதிகள் இந்துக்களின் நவராத்திரி விழாவில் இளம் பெண்கள் திருமணம் ஆகும் முன்பே சூறையாடப்படுகிறார்களே இதற்கு என்ன பதில்?

கடந்த ஆண்டு தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த ஆபாசம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (25.11.2009) விரிவாகவே செய்தி வெளியிட்டதே. பெண்கள் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (சிஷீஸீபீஷீனீ) வாங்குகிறார்களாம். இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு பெண்களுக்கான கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகமாம்.

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறார்களா சங்பரிவார்க் கும்பல்? அல்லது நவராத்திரிக்கு எதிராக மறியல் செய்வார்களா? நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது கருத்தடை உறை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறப்பு விற்பனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தின என்று கூறுகிறார். -_ அகமதாபாத் மருந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜஸ்வந்த் படேல். வெற்றிலைப் பாக்-குக் கடைகளிலும்கூட இந்தக் கருத்தடை உறைகள் விற்கப்பட்டனென்றும் அவர் கூறியுள்ளனர். இத் தகைய உறைகளை எந்தவிதக் கூச்சமோ வெட்கமோ இன்றிப் பெண்கள் கேட்டு வாங்கினார்களாம். சொல் வது விடுதலை அல்ல _ டைம்ஸ் ஆப் இந்தியா. காதலர் தினத்தால் கலாச்சாரம் கெட்டொழிந்துவிட்டது என்று கூச்சல் போடும் மானஸ்தர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்து ராஜ்ஜியம் உருவாக் குவதில் சேனாதிபதியாக வாள் தூக்கும் நரேந்திர மோடியின் குஜராத்திலே - _ நவராத்திரி நேரத்திலே காண்டம் விற்பனை அதிகம் என்று புள்ளி விவரம் பேசுகிறதே _ என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்து மதமே ஆபாசக் கிடங்குதானே! கற்பழிக் காத கடவுள் உண்டா? சோரம் போகாத கடவுளச்சி கள்தான் உண்டா? குரு பத்தினியைக் கற்பழிக்கும் சீடர்கள் வரை உண்டே!

இந்த யோக்கியதையில் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க கம்பும் தடியுமாகக் கிளம்புகிறார்களாம், வெட்கம்! மகாவெட்கம்!

திங்கள், 11 ஜூன், 2012

கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மம்மியின் செயற்கை உறுப்பு கண்டுபிடிப்பு



இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் ஜாக்கி பின்ச் எகிப்து நாட்டின் புகழ் பெற்ற மம்மிகள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதில் மனித உடலின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள மம்மி ஒன்றின் வலது கால் பெருவிரல் ஒன்று உறுப்பு மாற்று சிகிச்சையின்படி ஒன்றிணைக்கப்பட்டு உள்ளதாக கின்ச் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கார்பன் ரேட்டிங் அடிப்படையில் அதன் காலம் கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி பின்ச் கூறுகையில், 3 பங்கு மரத்தாலும் மற்றும் தோலாலும், ஒரு மனிதனின் 40 சதவீத உடல் எடையை தாங்க கூடிய அளவில் அந்த வலது கால் பெருவிரல் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இது உலகின் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை பெறுகிறது என்றார். எனினும், இந்த செயற்கை உறுப்பு குறிப்பிட்ட அந்த மனிதனால் பயன்படுத்தப்பட்ட ஒன்றா அல்லது மம்மியாக மாற்றுவதற்கு என வடிவமைக்கப்பட்டதா- என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். இதுவரையில், சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ரோமானிய செயற்கை கால் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனின் மூதாதையர்கள்





அமெரிக்காவின் மிசவுரி பல்கலைகழக பேராசிரியர் கேரல் வார்டு தலைமையில் மனித இனம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், உலகின் மிக பழமையான மனித மூதாதையர்கள் என ஹோமோ எரக்டஸ் இனம் கருதப்பட்டது. அவர்கள் வாழ்ந்த காலம் 1.8 மில்லியன் முதல் 70 ஆயிரம் வருடங்களுக்கு இடைப்பட்டவை ஆகும். தற்போது எத்தியோப்பியா நாட்டில் மனித கால் எலும்பு ஒன்று புதைபொருளாக கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வில் அதன் காலம் 3.2 மில்லியன் வருடங்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இது கடந்த 1974-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்ட லூசி என்ற பெயரிடப்பட்ட எலும்பு கூடுடன் பொருந்துகிறது.

மேலும் அந்த இனம் ஆஸ்டிராலொபிதிகஸ் அபாரென்சிஸ் வகையை சேர்ந்தது. மரத்திலிருந்து கீழிறங்கி தரையில் கால் பதித்து நடப்பதற்கு ஏற்ற கால் எலும்புகள் மற்றும் பழங்கள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றை நன்கு கடித்து உண்பதற்கு ஏற்ப அமைந்த பெரிய தாடைகள் ஆகியவை இந்த இனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். எனவே இதனடிப்படையில் பார்க்கும் போது, மனித இனத்தின் மூதாதையர்கள் சுமார் 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க கூடும் என பேராசிரியர் கேரல் தெரிவித்துள்ளார்.