செவ்வாய், 31 ஜனவரி, 2012

விதியா? மதியா? என்னதான் கூறுகிறது குர் ஆன்


ஆரம்பத்தை நோக்கி: பகுதி 20


உலகில் தொடர்ந்து கெண்டிருக்கும் குழப்பங்களுக்கு, சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாடு, மதம், மொழி, நிறம், இனம், பொருளாதாரம் எனவும் இவற்றிற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து காணப்படுகிறது. இந்த பிரிவினைகள் ஏன்?   இவ்வினாவிற்கு, 
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; (அவ்வாறு) தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த பிறகும், தங்களுக்கிடையே இருந்த பொறாமையினால் அ(வ்வேதத்)தைக் கொடுக்கப்பட்டவர்களேயன்றி (வேற எவரும்) கருத்து வேறுபாடு கொள்ளவில்லை; ஆயினும் சத்தியத்தில் நின்றும் எதில் அவர்கள் மாறுட்டிருந்தனரோ அ(ந்த சத்தயத்)தின் பால் முஃமின்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு நேர்வழி காட்டினான். அல்லாஹ் தான் நாடியவரை நேரான வழியில் செலுத்துகிறான்.
(குர்ஆன் 2:213)
  மனிதன் பல சமுதாயங்களாக பிரிந்ததற்கு அவனது பொறாமை குணம் மட்டுமே காரணம். எனவே இறுதியாக மீண்டும் தூதுவர்களையும், வேதங்களையும் மனிதர்களிடையே அனுப்பி, பிளவுபட்ட சமுதாயத்தை இணைக்க நாடுவதாக கூறுகிறான். இங்கு அல்லாஹ் குறிப்பிடும் சமுதாயம்,  முஹம்மது நபிக்கு கட்டுப்பட்டு வாழும் கூட்டத்தையே குறிக்கிறது.
தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் வேதத்தைக்கொண்டும், இன்னும் மனிதர்களுக்கு அவர்களுக்காக இறக்கி வைக்கப்பட்டதை நீர் விளக்குவதற்காக திக்ரை உம்பால் இறக்கி வைத்தோம். அவர்கள் சிந்திப்பவர்களாகி விடலாம்.
(குர்ஆன் 16:44)
மேலும், எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்கு நீர் விளக்கி வைப்பதற்காகவும், முஃமீனான கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டியாகவும், ரஹ்மத்தாக இருப்பதற்காக தவிர வேதத்தை உம்மீது நாம் இறக்கவில்லை.
(குர்ஆன் 16:64)
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இந்தக் குர்ஆனில் திட்டமாக நாம் தெளிவாக்கியுள்ளோம்…
(குர்ஆன் 17:41)
(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை…
(குர்ஆன் 2:272)
 (இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பநதமும் இல்லை; …
(குர்ஆன் 2:256)
இதில் எவ்வித நிர்பந்தமும் இல்லையென மென்மையாகக் கூறிய அல்லாஹ், வழியைத் தேர்தெடுக்கும்  வாய்ப்பை மனிதனுக்கு வழங்கி, பொறுப்பிலிருந்து விலகியவன், குர்ஆனின் மற்றொரு பகுதியில் கூறுவதை கவனியுங்கள்,
…நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவட்டது எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்கிறாரோ அவர் (அறுந்து) போகாத உள்ள கயிற்றின் உறுதியான முடிச்சை திட்டமாக பற்றி பிடித்துக் கொண்டார்…
(குர்ஆன் 2:256)
அன்றியும் எவரேனும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை தேடுவாரானால் அவரிடமிருந்து அது ஏற்கப்படவே மாட்டாது; இன்னும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
(குர்ஆன் 3:85)
இஸ்லாம் மட்டுமே நேர்வழி. எனவே, அதைத் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கூறுகிறான். அவ்வாறு ஒரு மனிதன் நேரான வழியைத் தேர்ந்தெடுப்பதும்  தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் என வலியுறுத்தி மீண்டும் குழப்ப நாயனாகிறான். குர்ஆனில் பல வசனங்களில் “அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்” என்ற வாக்கியத்துடன் முடிவுறுவதை எல்லோரும் அறிந்த ஒன்று. எனவே மனிதன் நேர்வழியில் செல்வது அல்லாஹ்வின் நாட்டத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
…அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்
(குர்ஆன் 2:272)
…அல்லாஹ் நாடினால் அவர்களை நேர்வழியின் மீது ஒன்று சேர்த்து விடுவான் ஆகையால் அறியாதவர்களில் உள்ளவராக திண்ணமாக நீர்ஆகிவிடவேண்டாம்
(குர்ஆன் 6:35)
தான் நாடுபவரை தன் ரஹ்மத்தில் புகச் செய்வான்.
(குர்ஆன் 76:31)
நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது அவர்களுக்கு நீர் எச்சரிக்காவிட்டாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமமேயாகும் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 2:6)
…வழியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டு விட்டனர்; – அல்லாஹ் எவரை வழி தவறச் செய்கிறானோ அவரை நேர்வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
(குர்ஆன் 13:33)
…அல்லாஹ் தான் நாடியவரை வழி தவறச் செய்கிறான்; இன்னும் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்…
(குர்ஆன் 14:04)
அல்லாஹ் நாடினாலன்றி (எதையும்) நீங்கள் நாடமாட்டீர்கள்.
 (குர்ஆன் 76:30)
உம்முடைய ரப்பு நாடினால் மனிதர்களை ஒரே சமுதாயத்தவராய் அவன் ஆக்கியிருப்பான் (அவன் அப்படி நாடாமையினால்) அவர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்களாகவே இருந்து வருவார்கள்.
(குர்ஆன் 11:118)
வழி தவறச் செய்தது மட்டுமல்லாமல், மனிதன் நேர்வழியை அடைவதும் அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுக்கப்பட்ட மனிதனை திரும்ப நேர்வழியில் செலுத்த யாராலும் இயலாது. அல்லாஹ்வின்  இந்த நிலையை மெய்பிக்க மேலும் சில குர்ஆன் வசனங்களை காண்போம்.
அல்லாஹ் அவர்களின் இதயங்களின் மீதும் அவர்களின் செவிப்புலன்களின் மீதும் முத்திரை வைத்து விட்டான் இன்னும் அவர்களின் பார்வைகளின் மீது திரையிருக்கிறது. மேலும் மகத்தான வேதனையுண்டு.
(குர்ஆன் 2:7)
அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்கு பின்னால்  ஒரு தடுப்பையும் நாம் ஏற்படுத்தி விட்டோம்; (இவ்வாறே) நாம் அவர்களை மூடி விட்டோம், எனவே அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
(குர்ஆன் 36: 9)
…அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையட்டு விட்டான்
(குர்ஆன் 47:16)
அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களை சபித்து அவர்களை செவிடாக்கி அவர்களுடைய பார்வைகளையும் குருடாகவும் ஆக்கிவிட்டான்
(குர்ஆன் 47:23)
ஆனால்  அல்லாஹ்வால், தடுக்கப்பட்டவர்  -களையும், முடமாக்கியவர்களையும் இஸ்லாமெனும் பாதையில் மனிதர்களை  ஒன்றினைய அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. “நீர் அச்சமூட்டி எச்சரிப்பவர்” என அல்லாஹ்வினால் வர்ணிக்கப்பட்ட தன் தூதரிடம், தான் கூறும் வழியை அவ்வாறு பின்பற்ற இயலாத, தன்னால் முடமாக்கப்பட்டவர்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்ள உத்தரவிடுகிறான்.
ஃபித்னா நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்காகே ஆகும்வரை அவர்களிடம் போர் புரியுங்கள்
(குர்ஆன் 2:193)
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வேத வசனங்களை நிராகரித்திட்டார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் புகச் செய்வோம்; (அதில்) அவர்களுடை தோல்கள் கரிந்து விடும் போதெல்லாம் வேதனையை அவர்கள் அனுபவிப்பதற்காக அவையல்லா வேறு தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிடுவோம்.
(குர்ஆன் 4:56)
உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்துங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்குமேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள்…
(குர்ஆன் 8:12)
எந்த நபிக்கும் (விஷமங்களை தடுக்க) பூமியில் இரத்தத்தை ஓட்டுகின்றவரை (கொல்லாமல்) சிறைப்பிடித்து அவரிடத்தில் இருப்பது தகுமல்ல; உலகத்தின் (சொற்ப) நன்மையை விரும்புகிறீர்கள்.
(குர்ஆன் 8:67)
(போரிடுதல் தடைசெய்யப்பட்ட) புனிதமான மாதங்கள் சென்று விட்டால் முஷ்ரிக்கு (இணைவைப்பவர்)களை – அவர்களை நீங்கள் கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையிடுங்கள் (அவர்கள்)  நடமாடும் பாதைகளையெல்லாம் அவர்களுக்காக நீங்கள் நோட்டமிட்டவர்களாக உட்கார்ந்திருங்கள்.
(குர்ஆன் 22:9)
இவ்வாறாக அல்லாஹ்வினால் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டவர்கள் யார்? ஏன் அவ்வாறு தடுக்கப்பட்டார்கள்?
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிருகங்களில் கெட்டது (அல்லாஹ்வை) நிராகரித்தார்களே அத்தகையோராவர் எனவே அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 8:55)
எனவே எவனொருவன்-அவனுடைய தீய செயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை) அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்.
(குர்ஆன் 35:8)
எந்த ஒரு மனிதனும் சுயமாக செயல்பட எவ்விதமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. அனைத்தும் அல்லாஹ் இறுதி  செய்த விதிப்படியே நடக்கிறது.
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
(குர்ஆன் 57:22)
அவர்களில் பெரும்பாலானவர்களின் மீது (விதியின்) சொல் திட்டமாக உறுதியாகி விட்டது எனவே அவர்கள்  ஈமான்  கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 36:7)
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம்.
(குர்ஆன் 54:49)
புஹாரி ஹதீஸ்       : 3332         
உண்மையே  பேசுபவரும்,  உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாட்களில்) அந்தக் கரு (அட்டைப்போன்று கருப்பையின் சுவரைப்பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகின்றது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப் பட்டசக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறி விடுகின்றது. பிறகு அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான் (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுத்தப்படுகின்றது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகின்றது. இதனால் தான் மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளியிருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். இதைத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் விதியின் வலிமையைக் கூறுகிறது. பகுத்தறிவு  ஏற்கவில்லையென்றாலும் கட்டயமாக நம்பியே தீரவேண்டும். விதியை மறுப்பவர்களை  கடுமையாக எச்சரிக்கும் ஹதீஸ் ஒன்றைப்  பார்ப்போம்.
முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01
…(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் ‘ஹஜ்’ அல்லது ‘உம்ரா’ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: “அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்” என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, “ஆனால், அவர்கள் ‘விதி’ என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்” என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: “இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறி விடுங்கள்)”.
பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: “என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:…
குர்ஆனும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறது. உலகின் ஒவ்வொரு நிகழ்வும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. விதியை உண்மையான முஸ்லீம்களால் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. அது ஈமானின் (நம்பிக்கை) ஒரு பகுதியாகும்
முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01
…அடுத்து அவர், “ஈமான் (இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்” என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் “உண்மை உரைத்தீர்கள்” என்றார். …
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள்.
அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின்   ஒவ்வொரு அசைவும் நிகழ்கிறதென்றால்,  மனிதர்களை நேர்வழிப்படுத்துவதாகக் கூறி தூதர்களையும் வேதங்களையும் அனுப்ப வேண்டிய தேவை என்ன?  மனிதர்கள் எல்லோரையும் இஸ்லாமை ஏற்கும்படியான விதியை ஏன் எழுதவில்லை? மனிதர்கள் அனைவரும் இஸ்லாம் என்ற பாதையில் செல்ல, அல்லாஹ் ஒருபொழுதும் விரும்பவில்லை.  காரணம், நரகத்தை நிரப்புதல் மட்டுமே அல்லாஹ்வின் குறிக்கோள்.
நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம். எனினும் ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள சொல் உண்மையாகி  விட்டது.
(குர்ஆன் 32:13)
(அவர்களில்) உம்முடைய ரப்பு அருள் புரிந்தவரைத் தவிர இதற்காகவே அவர்களை படைத்திருக்கிறான். (பாவம் செய்த) ஜின்கள், மனிதர்கள் அனைவரினாலும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு பூர்த்தியாகிவிட்டது.
(குர்ஆன் 11:119)
நரகத்தை நோக்கி, நீ நிரம்பி விட்டாயா? என்று நாம் கேட்கும் நாளில், இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது கூறும்.
(குர்ஆன் 50:30)
மறுமையின் மிக மிக முக்கியமான கேள்வி மார்க்கத்தைக்  குறித்ததே. அப்படியானால் தீர்ப்பு நாளின் விசாரணை வேடிக்கையாக தோன்றவில்லையா? (தீர்ப்பு நாளின் வேடிக்கைகளை இத்தொடரின் இறுதியில் விரிவாகக் காணலாம்.) ஒருவர் இஸ்லாமை ஏற்பதும், மறுப்பதும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. எனவே இஸ்லாம் என்ற பாதையை தேர்ந்தெடுக்கத்தவறியவர்கள் தங்களது பாதை மாறிய பயணங்களுக்காக அல்லாஹ்வின் விதியின் மீது குற்றம் கூற முடியாது காரணம்,
துன்பத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது ஏற்படுமாயின் (அது) உங்களுடைய கரங்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றினாலேயாகும்.
(குர்ஆன் 42:30)
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இதுவே அல்லாஹ் உலகிற்கு ஏற்படுத்தித் தந்துள்ள விதியாகும்). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் (,உனக்குத் தரப்பட்டுள்ள தீர்மானிக்கும் அறிவு குறை பாட்டால்தான்) வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் – அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
(குர்ஆன் 4:79)
(இப்பகுதியை மீண்டும் படித்தால் ஒருவேளை தெளிவான முடிவிற்கு வர வாய்ப்பு இருக்கலாம் என்று நினைக்…கி…க…வி…#@#?@&?!!?) விதி குறித்து இவ்வளவு தெளிவாக குழப்பும் குர் ஆன் தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்க வந்த மனிதக் கரங்களால் கரைபடியாத ஒரே வேதமாம். யாராவது தலை சுற்றி மயங்கி விழுந்தால் கம்பனி பொறுப்பல்ல.

புதன், 25 ஜனவரி, 2012

கடவுள் ஏன் இருக்கக்கூடாது – விவாதம்: பகுதி 4

 




விவாதப் பகுதி 3 க்கு நண்பர் குலாம் ஒற்றை வரியில் தன் பதிலை முடித்துவிட்டிருக்கிறார். ”உங்கள் மீது நம்பகத்தன்மை இல்லை” அவ்வளவு தான். நம்பகத்தன்மை குறித்து கடந்தமுறை அவர் கூறிய பொருந்தாக் காரணத்தை, அது எவ்வாறு பொருந்தாமல் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கியிருந்தும், அதற்கு பதிலேதும் கூறாத நிலையில் மீண்டும் அதே காரணத்தைக் கூறி பதில் கூறும் கடமையை தட்டிக் கழித்திருக்கிறார். இதன் மூலம் அவர் மீது இரண்டுவித முடிவுகளுக்கு என்னால் வரமுடிகிறது.

1) என்னுடன் விவாதம் செய்ய குலாம் தயாராக இல்லை. காரணம், அவ்வாறு செய்தால் தன்னுடைய நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறி, அம்பலப்பட நேரலாம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். கடந்த பதிவுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பதைக் கொண்டு மட்டும் இதை கூறவில்லை. அவருடைய முறைமைகளைக் கொண்டே கூறுகிறேன். கடவுளுக்கான வரைவிலக்கணம் குறித்தும், சட்டப் போதாமை குறித்தும், தர்க்க ரீதியான கடவுள் இருப்பு குறித்தும் செங்கொடி தளத்தில் என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியாது என்று கூறி நழுவினார். பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதன் பிறகும்கூட வேறுசில தளங்களில் சென்று பின்னூட்ட விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார், அல்லது ஈடுபட ஆர்வம் தெரிவித்திருக்கிறார். ஆக பின்னூட்டங்களில் முழுமையாக விவாதிக்க முடியாது எனும் அவரது முடிவு எனக்கு மட்டுமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சரி, பின்னூட்டங்களில் முழுமையாக விவாதிக்க முடியாது என உணர்ந்ததன் பின்னர் அவருடைய தளத்தில் பல இடுகைகளை இதுவரை இட்டுள்ளார், அதில் கடவுளின் இருப்பு குறித்த இடுகைகளும் அடங்கும். ஆனால் அவைகள் எதிலும் நான் எழுப்பிய கேள்விகள் எவற்றுக்கும் பதிலில்லை. மட்டுமல்லாது அவ்வாறான பதிலை கூறும் ஆர்வம் இருப்பதாகவும் வெளிக்காட்டப் படவில்லை. இவைகளெல்லாம் செங்கொடி தளத்திற்கானவை.

நல்லூர் முழக்கம் தளத்திலும் பின்னூட்டங்களில் விவாதிக்க ஆர்வப்படுவதாக தெரிவித்திருந்தார். காரணம், செங்கொடியான நான் தான் நல்லூர் முழக்கம் தளத்தையும் நடத்துகிறேன் என்பது அவர் அறியாதது. நான் செங்கொடி என்பதை வெளிப்படுத்தி அவருக்கு பதிலளித்த பிறகு தான், விவாதத்தை தவிர்ப்பதற்காக மடக்கி, மடக்கி பொருந்தாத விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார். அதுவும் பலிக்காது என அறிந்ததும் மௌனமாகி விட்டார். அதிக பட்சம் ஒரு ஆண்டுக்கு ஒரு பதிவு என்றாலும் பதில் கூறுவதற்கு பிடிவாதமாக மறுக்கிறார். ஆகிய இவைகளிலிருந்து தான் அந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இது தொடர்பாக விளக்கம் ஒன்றையும் நண்பர் குலாமுக்காக இங்கு பதிவு செய்து விடலாம். விவாதம் என்பது ஒரு நிலைப்பாட்டில் எது சரியானது என்பதை தம்மளவில் தீர்த்துக் கொள்ள உதவும் ஒரு கருவி. அறிதல் எனும் நிலையில் வெற்றியும் தோல்வியும் சமமானதே. தோல்வி ஏற்புக்குறியதல்ல எனும் கருத்து இருப்பதால் தான் நண்பர் தவிர்க்க முயல்கிறார். ஆனால் அது தேவையற்றது. தோல்வி என்பது நம் தேடலை, அறிதலை அகலமாகவும், ஆழமாகவும் செய்வதற்கு உதவக்கூடியது. அதை முன்னிட்டு தவிர்க்காதிருப்பதே சிறந்தது.

2) மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் மீது கேள்வி எழுப்பும் தார்மீக உரிமை நண்பர் குலாமுக்கு இல்லை. தன்னுடைய கருத்தைத்தான் பிறரும் கொண்டிருக்க வேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது, அதேநேரம் பொதுவிலிருக்கும் ஒரு கருத்தை யாரும் விமர்சனம் செய்யலாம். ஆனால் ஒருவர் அவ்வாறு விமர்சனம் செய்கிறார் என்றால் அவருக்கு பதில் கூறும் கடமை இருக்கிறது என்பதே அதன் பொருள். பதில் கூறும் கடமையை கையில் எடுத்துக் கொள்ளாத யாரும் விமர்சனம் செய்வதற்கு தகுதியற்றவர்கள். குலாம் பதில் கூறும் கடமையிலிருந்து நழுவி விடுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்கிறார் என்பதால் விமர்சனம் செய்யும் உரிமையும் அவரிடமிருந்து நழுவி விடுகிறது.

தமிழ் இணைய உலகில் எகிறிக் குதிக்கும் இஸ்லாமிய பரப்புரை பதிவர்கள் அதிகம். அவர்களின் மத்தியில் நண்பர் குலாம் விதிவிலக்கானவர் என்று நான் மதிப்பிட்டிருந்தேன். காரணம், மதத்தில் அறிவியல் என்று இறுபூறெய்தாத தன்மை(வெகுசில பதிவுகள் அவ்வாறு இருந்த போதிலும்), உணர்ச்சி வயப்படாமல் அறிவுவயப்பட்டு பதில் கூறும் பாங்கு, தர்க்க ரீதியாக அணுகும் முறை போன்றவற்றால் அவ்வாறு கருதினேன். அதனால் தான் அவர் விவாதத்திற்கு வரமறுக்கிறார் என்பது புரிந்த பிறகும், தொடர்ச்சியாக விவாதத்தில் பங்கெடுக்குமாறு அவரை வற்புறுத்தினேன். என்னுடைய அந்த முயற்சியில் தோல்வி தான் என்றாலும் குலாமும் ஏனையோரைப் போல நேர்மை உணர்வற்ற மதப் பரப்புரை பதிவர் தான் என்பதை அறிந்து கொண்ட வகையில் மகிழ்ச்சியே.

இனி அவரின் ”கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?” எனும் பதிவை எதிர் கொள்ளலாம். கடவுளை விமர்சிக்கும் அறிவாளிகள் என்று பொதுத் தலைப்பை தன் பதிவுக்கு இட்டிருந்தால் அதை பொதுவானதாக கருதியிருக்கலாம். ஆனால் ‘ஓர்’ எனும் இலக்க உருபை பயன்படுத்தியிருப்பதால் தனிப்பட்ட யாரையோ உத்தேசித்துத்தான் தன் பதிவை இட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. ஆனால் அது யார் என்பதை அவர் வெளிப்படுத்தாததால் (வெளிப்படுத்தினால் பதில் கூறும் கடமை வந்துவிடுமே) பொதுவில் நானும் ஒருவன் என்பதாகவே அதை அணுகுகிறேன். நண்பர் குலாம் அந்த பதிவை எழுதி வெளியிடுவதற்கு முன் சற்று சீர்தூக்கி பார்த்திருக்கலாம். என்ன சொல்கிறோம்? அதை எந்த அடிப்படையில் நின்று சொல்கிறோம்? அவைகளில் உண்மையோ பொருத்தப்பாடோ இருக்கிறதா? போன்ற எதுவும் அவருக்கு அவசியமில்லை. கடவுள் இருக்கிறார், அவர் இந்த பேரண்டத்தை நிர்வகிக்கிறார் என்பது அவரது நம்பிக்கை. அதை உண்மைப்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கம். இந்த நம்பிக்கையும் நோக்கமும் தான் அதில் இருக்கிறதேயன்றி தர்க்கமோ, அறிவியலோ துளியும் இல்லை.

தன்னுடைய பதிவின் தொடக்கத்திலேயே குலாம் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், \\கடவுள்! மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை// மெய்தான். கடவுள் என்பது இயற்கையாக மனிதனுடன் பிணைந்த சொல்லல்ல, திட்டமிட்டு செயற்கையாக திணித்து பிணைக்கப்பட்ட ஒரு சொல்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ அல்லது வேறொந்த வடிவிலோ ஒரு நிரூபணமும் இல்லை. ஆனால் நம்பிக்கை சார்ந்த அந்த கற்பிதத்தை, அறிவியல் இன்னும் தொடாத உயரங்களில் நின்று கொண்டோ, மக்களின் அறிதல் ஐயங்களை பயன்படுத்திக் கொண்டோ சில கேள்விகளை எழுப்பிவிடுவதன் மூலம் மெய்ப்படுத்திவிட முனைகிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இது தான் நடந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கடவுள் இல்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம், அதுவே கடவுள் இருப்பதற்கான ஆதாரம், என்பது தான் அவர்களின் வாதமுறைமை. ஒன்று இருக்கிறது என உறுதியாக கூறவேண்டும் என்றாலே அதன் இருப்பு ஐயந்திரிபற நிரூபிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப் பட்டிருக்கவில்லை என்றால் அதை யூகமாக மட்டுமே கொள்ள முடியும். கடவுள் இருக்கிறார் என்பது ஐயந்திரிபற நீருபிக்கப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை என்பார்கள். கடவுள் மெய்யாக இருக்கிறாரா? என்றால் ஆம் என்பார்கள். இந்த முரண்பாடுகளுக்கு இடையில் நம்பிக்கை எனும் பாலத்தை கட்டிவைத்திருக்கும் வரையில், அவர்களால் உண்மைக்கு அருகில் வரமுடியாது.

கடவுள் மறுப்பு என்பது, கடவுள் இருப்பின் விளைவால் ஏற்பட்ட சீர்கேடுகளைக் கண்டு உருவானதல்ல. என்று கடவுள் எனும் சிந்தனை தோன்றியதோ அந்தக் கணமே அதன் மறுப்பும் தோன்றிவிட்டது. கடவுள் இருப்பு எப்படி மனிதச் சிந்தையில் தோன்றியதோ ஆதுபோலவே கடவுள் மறுப்பும் மனிதச் சிந்தையில் தோன்றியது தான். அதை மதத்தின் பெயரால் செய்யப்படும் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தான் தோன்றியது என்பது, கடவுள் இருப்பும் கடவுள் மறுப்பும் சமநிலையில் இருப்பதல்ல நிலை தாழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒருவித குறியீடு.

கடவுள் மறுப்பு அறிவியலை மட்டும் சார்ந்ததல்ல, சமூகவியல், பயன்பாடு உள்ளிட்டவைகளையும் சார்ந்தியங்குவது. ஆனால் கடவுள் மறுப்பு என்றதும் மக்களின் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தோன்றியது என்பதும், அறிவியல் விளக்கமளிக்காததையும்(இது குலாமின் விளக்கங்களை ஒட்டி பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்) நாம் ஏற்கவில்லையா என்பதும் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதைதான். கடவுள் மறுப்பு கடவுள் இருப்பு என்பதை அறிவியலை விளங்கி வாழ்பவர்கள், அறிவியலை விலக்கி வாழ்பவர்கள் என்று பிரிவினை செய்ய இயலாது. அனைவருமே அறிவியலை ஏற்று அறிவியலுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். அதேநேரம் சொந்த சாதக பாதகங்களை, கலாச்சார மரபுகளை முன்வைத்து சில நம்பிக்கைகளயும் கொண்டிருக்கிறார்கள். இது இருப்பு, மறுப்பு என்ற இரு நிலையிலுள்ளவர்களுக்கும் பொருந்தும். இதைக் கொண்டு அறிவியல் விளக்கமளிக்காதையும் கூட ஏற்றுக் கொள்பவர்கள் கடவுளை மறுக்கக் கூடாது என கூற முடியுமா?

அறிவியல் விளக்கமளிக்காததை ஏற்பதும், அறிவியலை மறுப்பதும் வேறுவேறான நிலைகள். கடவுளை ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலை. விளக்கமளிக்காததையும் ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலையல்ல. தெளிவாகச் சொன்னால் அறிவியல் விளக்கமளிக்காத நிலை என்று உலகில் எதுவுமில்லை. குலாம் எடுத்துக் காட்டியிருப்பவைகளையே நானும் எடுத்துக் கொள்கிறேன். கெடு தேதிக்கு முன்பே கெட்டுப் போகும் உணவு, கெடு தேதி முடிந்த பிறகும் நல்ல நிலையில் இயங்கும் மின்கலம்; இவைகள் அறிவியல் முரண்பாடா? ஒரு பொருளின் கெடுதேதி என்பது அந்தப் பொருளில் இருக்கும் சேர்மங்கள், அவற்றின் வேதி வினைபாடுகள், வினைபுரியும் வெளித்தனிமங்கள், நொதிகளால் ஏற்படும் பயன்மாற்றம் முதலியவைகளைக் கொண்டு எந்த தன்மையில் அது மக்களுக்கு பயன்படுகிறதோ அந்த தன்மையை எவ்வளவு காலத்தில் அது இழக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கணிப்பது. இந்த கணிப்புகள் வெகுசில போதுகளில் தவறிப்போகலாம். அப்படி தவறுவது அறிவியல் தவறல்ல. முன்னதாகவே கெட்டுப் போன உணவையோ, பின்னாலும் இயங்கும் மின்கலத்தையோ ஆய்வுக்கு உட்படுத்தினால் ஏன் அவை கணிப்பை மீறின என்பது புலப்படும். அவை கணிப்பை மீறிய காரணமும் அறிவியலுக்கு உட்பட்டு இருக்குமேயன்றி அறிவியல் முரண்பாடாக இருக்காது. இதை அறிவியல் முரண்பாடாக சுட்டுவதே சூழலை தனக்கு சாதகமாக வளைக்கும் நரித்தனம் தான்.

சுண்டி விடப்படும் நாணயத்தில் எந்தப்பக்கம் மேலாக விழும் என்பது வெற்று யூகமா? அல்ல அதுவும் அறிவியல் தான். எந்தப் பக்கம் விழுவதற்கும் 50:50 வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு பக்கத்திலும் தனித்தனியாக செய்யப்பட்டிருக்கும் அச்சுக்கோர்ப்புகளின் கனத்தைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் விழுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட அறிவியலால் கூறமுடியும். இதை அறிவியலல்லாத வெற்று யூகம் என்று கூற முடியுமா? அறிவியல்லாமல் செய்யப்படும் வெற்று யூகங்கள் கூட தன்னிச்சையாக மனிதனுக்குள்ளிருந்து கிளைத்து விடுவதில்லை. வாழ்ந்த சூழல், கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றின் துணைகொண்டே யூகங்கள் எழும். ஆக வெற்று யூகங்களைக்கூட அறிவியலுக்குள் வகைப்படுத்த முடியும்.. குறிப்பிட்ட மனிதன் ஒன்றை அறிந்திருக்கிறனா இல்லையா என்பதையும் தாண்டி வாழ்வில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் அதைவிட்டு எழும்போது தன் கால்களை செங்கோணத்திலோ, விரிகோணத்திலோ நிலத்தில் ஊன்றி எழுவதில்லை. உள்வசமாய் சற்று மடக்கி குறுங்கோணத்தில் வைத்தே எழுகிறான். இதன் அறிவியல் காரணத்தை எல்லா மனிதர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அமர்ந்திருக்கும் போது மனிதனின் மொத்த எடையும் பிட்டப் பகுதியிலுருந்து நாற்காலியின் நான்கு கால்களின் மையப்பகுதில் புவியீர்ப்பு நிலை கொண்டிருக்கும். எழும்போது எடையின் புவியீர்ப்பு மையத்தை நாற்காலியிலிருந்து பாதங்களுக்கு மாற்றும் போது புவியீர்ப்பு மையத்திற்கு வெளியிலிருந்தால் எழுவதில் சிரமம் ஏற்படும். அதனால் பாதங்களை அந்த மையத்திற்குள் கொண்டுவந்து எடையை மாற்றி பின் நகர்கிறார்கள். இந்த அறிவியல் விளக்கம் ஒருவருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த அறிவியல் விதிக்கு உட்பட்டே அவரின் செயல்கள் இருக்கும். இது போல் மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் அறிவியலுக்கு உட்பட்டே அமைகிறது. இவ்வாறு செயல்படும் அறிவியலை யாரும் மறுப்பதில்லை, மறுக்கவும் முடியாது, ஒருவர் கடவுளை ஏற்றாலும் மறுத்தாலும் இது தான் நிலை. இதில் எங்கிருந்து அறிவியல் மெய்பிக்காத நிலை வருகிறது?

மனிதன் மரபு ரீதியாக, கலாச்சார ரீதியாக சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறான். இதை காரணமாக காட்டியும், மக்களின் அறிதல் குறைகளை காரணமாக காட்டியும் கடவுளின் இருப்பை மெய்பிக்க முயல்வது ஒருவழியில் கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்வது தான். ஏனென்றால் ஒரு நிலைப்பாடு சரியா? தவறா? ஏற்கலாமா? கூடாதா? என்பதைத் தீர்மானிக்க அறிவியலைத் தவிர வேறொரு கருவி மக்களிடம் இல்லை. எந்த ஒன்றில் ஐயம் ஏற்பட்டாலும் அதை அறிவியலைக் கொண்டு தீர்ப்பது தான் சரியானதாக இருக்கும். அதேநேரம் அறிவியல் என்பது மனித அனுபவங்களை தொகுத்து சோதித்தறிந்து அந்த சோதனையின் முடிவுகளைக் கொண்டு பொதுவிதிகளை அடைவது. மீண்டும் மீண்டும் அவை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இயங்கியலுக்கு இயைபவை ஏற்றுக் கொள்ளப்படும், மாறானவை தள்ளப்படும். அறிவியல் மனித அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது தான் என்றாலும் அது விரிவடைந்து கொண்டே இருக்கிறது, புதிய உயரங்களை எட்டிக் கொண்டே இருக்கிறது. அது எட்டாத உயரங்கள் இருக்கிறதா? ஆம். அடுத்து அடுத்து என உயரங்களைத் தேடிக் கொண்டே இருப்பதால், நுண்ணியமாக நுழைந்து கொண்டே இருப்பதால் எப்போதும் அது தேடலிலேயே தொடரும், அதுதான் அறிவியலின் இயல்பு. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அறிவியல் இந்த இடத்திற்கு மேல் எட்டவில்லை எனவே, அதற்கு மேல் இருப்பதாக எங்களால் கூறப்படும் கடவுளை ஏற்றுக் கொள் என்பது இயலாமை. இயலாமை மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூட. எப்படியென்றால், எதையும் மக்களுக்கு விளக்கிக்கூறி புரியவைப்பதுதான் மக்களை உயர்த்துவதற்கான வழியேயன்றி, மக்களிடம் இருக்கும் அறியாமையை பயன்படுத்தி ஒருவரிடம் இருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கையை இன்னொருவரிடம் பதியவைப்பதல்ல.

சரி, ஒருவன் அறிவியலின் அடிப்படையில் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? இல்லை. எப்போதும் சரியாக இருப்பது சாத்தியமும் அல்ல. சரி, தவறு என்பதும் உண்மை என்பதும் எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்தக் கூடியதும் அல்ல. சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது பூமியில் தான் உண்மை வேறொரு சூரியக் குடும்பத்திலுள்ள கோளில் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று கூற முடியுமா? வேண்டுமானால் எந்த திசையில் உதிக்கிறதோ அந்த திசைக்கு கிழக்கு என பெயர் வைத்துக் கொள்ளலாம். பூமியிலேயே கூட பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் திசையை மாற்றிக் கொண்டால் (அப்படி மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது) அப்போது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது உண்மையாக இருக்காது. நிரந்தரமான உண்மை என்று எதுவுமில்லை. மனிதனின் சூழல், ஆற்றல், வாய்ப்புகள், தேவைகளைப் பொருத்து உண்மைகளும், சரியா தவறா என்பதும் மாறுபடும். இதை முகம்மதியர்களுக்கு குறிப்பாக குலாமுக்கு எளிமையாக புரியவைக்க ஒரு எடுத்துக்காட்டை கூறலாம். பன்றியை உண்ணக்கூடாது என்பது முகம்மதியர்களுக்கான விதி. இந்த விதி எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்துமா? முக்காலமும் அறிந்த எல்லாவற்றையும் செய்யும் திறனுள்ளதாக இவர்களால் கூறப்படும் அல்லாவுக்கே எல்லா நேரத்திலும் இது ஒன்றே சரியானது என்று கூற முடியவில்லை எனும்போது, மனிதர்களின் சிந்தனை எப்போதும் சரியாக இருக்காது என்பதை தன்னுடைய நம்பிக்கைக்கு சாதகமாக பயன்படுத்த முனைகிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன பெயரிடுவது? நடப்பு உலகில் அரசை எதிர்த்து போராடுவதும், போராடத் தூண்டுவதும் கம்யூனிஸ்டுகளின் கடமை, இதையே ஆளும் வர்க்க கோணத்திலிருந்து பார்த்தால் அது அரச துரோகம். இங்கு எது சரியானது என்று பார்த்து அதை ஆதரிக்க வேண்டுமேயல்லாது, சிந்தனை மனிதனுக்கு மனிதன் வேறுபடக் கூடியது எனவே கடவுளை நம்பு என்றால் அது எப்படி சரியாக இருக்க முடியும்?

பொதுவாக மனிதர்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் தனக்கு சாதகமானதா? பாதகமானதா? என்பதைக் கொண்டே முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது சரியா? தவறா? எனும் அடிப்படையில் எடுக்கும் முடிவே அவர்களை சரியான நிலைப்பாட்டில் இருத்தி வைக்கும். சரியான நிலைப்பாட்டில் தாம் இருக்க வேண்டும் எனும் நினைப்பு இருக்கும் வரை ஒருவனால் சொந்த சாதக பாதகங்கள் குறித்து கவலைப்பட முடியாது. கடவுள் இருப்பு மறுப்பு எனும் பிரச்சனையில் நம்பிக்கையாளர்களை விட மறுப்பாளர்களே சரியா தவறா எனும் கேள்விக்கு அருகில் நிற்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் தான் விமர்சனம் இருக்கிறது, அவர்களிடம் தான் மீளாய்வு இருக்கிறது. அவ்வாறன்றி குலாம் உள்ளிட்டவர்கள் தாங்களும் சாதகமான நிலைப்பாட்டில் அல்ல சரியான நிலைபாட்டில் இருக்கவே விரும்புகிறோம் என்று கூறுவார்களாயின் தங்களை மீளாய்வு செய்து கொள்ளட்டும்.

கடவுளை மனிதன் விமர்சிக்க முடியுமா? மனிதன் என்பவன் யார்? அவனது தகுதிகள், எல்லைகள் என்னென்ன? என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம். இது போன்ற தெளிவு கடவுளுக்கு இருக்கிறதா? மனிதன் எவ்வாறு ஐயங்களுக்கு ஆட்படாதவாறு தூலமாக இலங்குகிறானோ அது போன்று கடவுளும் தூலமாக இலங்கினால் தான் இரண்டையும் ஒப்பிட முடியும். அவ்வாறன்றி மனிதன் தூலமான நிலையிலும் கடவுள் மாயமான நிலையிலும் இருக்கும் போது இரண்டையும் ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்? மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளின் தகுதிக்கு அருகில் வருவதாக நம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? கடவுள் எனும் கருத்து மனிதனுக்கு தோன்றிய காலத்தில் கடவுளுக்கு என்னென்ன தகுதிகளை மனிதன் ஏற்படுத்தியிருந்தானோ அதைவிட அதிக தகுதிகளோடு இன்று மனிதன் இருக்கிறான். வேறு வடிவத்தில் கூறினால் மனிதனின் அறிவும் தகுதியும் உயர உயர கடவுளின் அறிவும் தகுதியும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

சிறு குழந்தைகள் ஒருவித கணித விளையாட்டொன்றை விளையாடுவார்கள். யார் அதிக மதிப்புள்ள எண்ணை கூறுவது என்பது போட்டியாக இருக்கும். மாறிமாறி அதிக மதிப்பை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து நீ எவ்வளவு கூறினாலும் அதைவிட ஒன்று அதிகம் என்று கூறினால் என்ன நிலை வருமோ அந்த நிலை தான் கடவுளின் தகுதி. அதாவது மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருப்பதாக கருதப்படும் இடைவெளி எப்போதும் குறையாது தக்கவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது கடவுளை விமர்சிக்கும் தகுதி மனிதனுக்கு இல்லை என்று கூறினால் அதன் பொருள் என்ன? கடவுளின் மீது என்ன கற்பனைகளை நாங்கள் ஏற்றிவைத்தாலும், ஏற்றுக் கொள் அல்லது விலகிச் செல் மாறாக அதை விமர்சிக்கக் கூடாது என்பது தான். இதைவிட கடவுளை வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. மனிதனுக்கு மனிதனே அடிமையாக இருத்தல் கூடாது எனும் போது ஆண்டவனுக்கு தான் அடிமை என அறிவித்துக் கொள்பவர்களிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?

ஒன்றின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால், அது சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான அணுகுமுறை. சரியாக செய்யப்பட்டிருந்தால் அதை எதிர்கொண்டு விளக்கம் கூறுங்கள். தவறாக செய்யப்பட்டிருந்தால் எந்த விதத்தில் அது தவறான விமர்சனம் என்று தெளிவியுங்கள். அதை விடுத்து, கடவுளை விமர்சிக்க மனிதனுக்கென்ன தகுதி இருக்கிறது என்றால் அது நாலாம்தர அரசியல் வியாதிகளின் அணுகுமுறை.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தில் ஒரு துளியைப் போன்ற சூரியக் குடும்பத்தில் அதனில் தூசைப் போன்ற பூமியில் பல லட்சம் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து பூண்டற்றுப் போன பின்னில் துணுக்கைப் போன்ற மனிதர்களுடைய மனதில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் இப்பேரண்டத்தை படைத்து பரிபாலித்துக் கொண்டு அதையும் தாண்டி வியாபித்திருக்கிறார் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை. அதிலும் அதை விமர்சிக்கவும் தகுதியில்லை என்பது அறியாமையினும் அடங்காமை. இவ்வாறு அடங்காத அறியாமையை கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்கள் அந்த அடங்காத அறியாமையையே முற்று முழுமை என்பது மனமுரண்டா அல்லது அதனிலும் மேலா?

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13



இதுவரை நண்பர் இஹ்சாஸின் பதிவுகளுக்கு தொடரின் மீதான விமர்சனம், மறுப்புக்கு மறுப்பு என இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையாக பதிலளித்து வந்தேன். ஆனால் இந்தமுறை அவரின் மறுப்புக்கு மறுப்பை விட்டு விட்டு தொடர் மீதான விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் கடந்த சில கட்டுரைகளுக்கு நண்பர் இஹ்சாஸ் பதில் எதையும் அளிக்கவில்லை. கைவிட்டுவிடுவதாக அறிவிக்கவும் இல்லை. பதில் கூறுவதிலிருந்து அவர் நழுவிக் கொண்ட பிறகு சாரமற்ற, வெற்றுகளுக்கு விளக்கமளித்து இத்தொடரை நீர்த்துப் போக வைப்பதை விட, இஸ்லாம் குறித்த தொடரின் மீதான விமர்சனங்களை மட்டும் கணக்கில் கொண்டு இத்தொடரை இன்னும் ஆழமாக கொண்டு செல்லலாம் என்று எண்ணியது தான். ஒருவேளை நண்பர் இஹ்சாஸ் மீண்டும் களத்திற்கு வந்து எல்லாவற்றுக்கும் பதிலளிக்க வேண்டும் எனக் கோரினால் அதை பின்னர் பரிசீலிக்கலாம்.

கடல்கள் பற்றிய அந்த கட்டுரையில் குரானின் கூற்றுகளான இரண்டு அம்சங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். 1) கடல்களுக்கு இடையிலான தடை. 2) ஆழ்கடலின் இருள். இந்த இரண்டு அம்சங்களில் நண்பரின் மறுப்பு என்ன? முதல் அம்சத்தில், இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு இல்லையென செங்கொடி மறுக்கவில்லை. மாறாக பண்டைய கடலாடிகளுக்கு தெரிந்திருந்ததை அறைகுறையாக முகம்மது கேட்டு கூறிவிட்டார் என்று நான் கூறியிருப்பதாக அவராகவே முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் அவ்வாறன்றி தெளிவாகவே கடல்களுக்கு இடையே தடுப்பு இருக்கிறது என்பதை மறுத்திருகிறேன். இரு கடல்களுக்கிடையே எல்லை இருக்கிறது என்பதே போர்வையில் வடிகட்டிய முட்டாள் தனமாக இருக்கும் போது, அங்கு தடுப்பு இருக்கிறது என்று எப்படி கூற முடியும்? இரு கடல்களுக்கு இடையே ஒரு தடுப்பு இருக்க முடியும் என்றால் முழுமையாக இரண்டு கடல்களும் தனித்தனியே பிரித்து காட்டப்பட வேண்டும். உலகில் இருக்கும் எந்த இரண்டு கடலையாவது தனித்தனியே பிரித்து அடையாளம் காட்ட முடியுமா? அந்தந்த பகுதிகளை முன்னிட்டு தனித்தனியான பெயர்களில் வழங்கி வருகிறோம். நிலங்களால் பிரிக்கப்படாதவரை தனித்தனியான இரண்டு கடல்கள் என உலகில் எதுவுமில்லை.

இதையே பர்சக் எனும் அரபுச் சொல்லை திணித்து நான் கூறியதை வேறொன்றாக திரித்திருக்கிறார். முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்ளும் போது மதவாதிகள் செய்யும் வழக்கமான உத்தி தான் இது. குறிப்பிட்ட அந்த 25:53 வசனத்திற்கு ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு பர்சக் எனும் சொல்லுக்கு வரம்பு என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள். திரை அல்லது தடுப்பு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த வரம்பு என்ற சொல்லைக் கொண்டா கடல்களுக்கு எல்லை இல்லை என கூறுகிறேன். கடல்களுக்கு இடையேயான தடுப்பு என்று தான் நானும் கூறியிருக்கிறேன். ஆனால் குரான் அந்த வசனத்தில் தெளிவாக இரண்டு கடல்கள் என்று தான் கூறியிருக்கிறது. அரபுச் சொல்லுக்கு அருஞ்சொற்பொருள் விளக்க வேண்டுமென்றால், இரண்டு கடல்கள் என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள் ஒரு கடல் என்று தான் மூலத்தில் இருக்கிறது என்று அடித்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி கூற வேண்டுமென்றால் திரை குறித்த வசனங்களே தேவையற்றுப் போய் குரானிலிருந்து நீக்க வேண்டியதிருக்குமே. அதனால் தான் பர்சக்கை பிடித்துக் கொண்டு பல்டியடித்திருக்கிறார்.

கடல்களுக்கிடையே திரையோ தடுப்போ இல்லை என்பதற்கு சில விளக்கங்களையும் அந்த கட்டுரையில் தந்திருந்தேன். கடலடி நீரோட்டங்கள் கண்டங்களைக் கூட கடந்து வெகுதூரம் செல்கின்றன. கடல்கள் கலக்கக் கூடாது என்பதற்குத்தான் தடுப்பு மற்றவற்றுக்கு இல்லை என்று கூறும் நண்பர், நீரோட்டங்கள் கடல் நீரல்ல என்றொரு அரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கலாமே. அருசொற்பொருள் விளக்கமோ, உருட்டி, நழுக்கும் மழுப்பலோ கூட செய்ய முடியாது என்பதால் தான் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டாரோ! ஒரே கடலின் இருவேறு பகுதிகளில் கூட கடல் நீரின் தன்மையில் வித்தியாசங்கள் இருக்கின்றன (எகா தமிழ்நாடு, அந்தமான்) என்பதை எடுத்துக் காட்டியிருந்தேன். அதற்கும் கள்ள மௌனம் தான் பதில். உண்மையிலேயே குரான் அல்லா கொடுத்தது தான் என நண்பர் இஹ்சாஸ் நம்பினால் இதற்கும் பதில் என்ற போரவையில் எதையாவது உளறியிருக்கலாமே. விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டக் கூட முடியாத அளவில் குரானே உளறிவிட்டது என்பதை அறிந்ததால் தான் மௌனமாகி விட்டாரோ!

வெவ்வேறு கடல் பகுதிகளின் தன்மைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை எனும் அனுபவ அறிவை செவியுற்று, கடல்களுக்கு இடையில் திரை அல்லது தடுப்பு இருக்கிறது என்று உருட்டிப் புரட்டி பொய்யை அரங்கேற்றியது. அதற்கு விளக்கமாக ஒருபுறம் உப்பாகவும் மறுபுறம் இனிமையான சுவையாகவும் இருப்பதாக சிறுபிள்ளையும் நகைக்கக்கூடிய வகையில் பிதற்றியிருப்பது. இவை போதாதா குரானும் அல்லாவும் முகம்மதின் உருவாக்கம் தான் என்பதற்கு?

இரண்டாவதாக ஆழ்கடலின் இருள், முகம்மது குரானில் சொல்வதற்கு முன்னால் கடலில் ஆழமாகச் செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து இருள் பரவும் என்பது யாருக்குமே தெரியாததா? ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் கடலுக்குள் செல்ல இயலாது என்றொரு அற்புத ஆழிமுத்தை கண்டெடுத்திருக்கிறார் நண்பர். முத்து எடுத்தவர்கள் எல்லாம் கடலின் மேல் மிதந்து கொண்டே தான் முத்தெடுத்தார்களா? கடலின் மேற்பரப்பில் பயணம் செய்தாலும் கூட அடியாழத்தில் வெளிச்சம் ஊடுருவாது என்பதை அறிந்து கொள்ள முடியும். கடலில் தவறி விழும் ஒரு பொருளை கவனித்தாலே தெரிந்துவிடுமே, முதலில் கண்ணாடி போல் தெளிவாக தெரியும் அந்தப் பொருள் கீழே செல்லச் செல்ல படிப்படியாக மங்கி பார்வையிலிருந்து மறைந்து விடும். அவ்வளவு ஏன், கடலின் மேற்பரப்பிலிருந்து பார்த்தால் வெவ்வேறு ஆழங்களில் நீந்தும் மீன்களின் காட்சித் தோற்றத்தைக் கொண்டே கூறிவிடலாமே கடல் நீரின் ஒளி ஊடுருவும் தன்மையை. இதற்கு மேலதிகமாக அந்த வசனத்தில் என்ன இருகிறது?

அறிவியல் கண்டுபிடிப்பான நிரப்பிரிகையின் ஒளி ஊடுருவும் தன்மைக்கும் அந்த வசனத்துக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் நுணுக்கமாக கேள்வி எழுப்பினால் குரான் ஒன்றும் அறிவியல் நூலல்ல என்று ஜல்லியடிக்கும் நண்பர், அதற்கு முன்னால் நவீன அறிவியலைத்தான் குறிப்பிட்ட வசனங்கள் பேசுகின்றன என்று கூறுவதற்கு அந்த வசனங்களில் தகுதி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டாமா? என்னிடம் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் நண்பர் அதற்கு முன்னால் அந்த வசனம் அறிவியலைத்தான் பேசுகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்க வேண்டாமா?

மதம் நுழைய நுழைய அறிவு வெளியேறிவிடும் என்று பெரியார் கூறியதற்கான நடப்பு எடுத்துக்காட்டுகள் இது போன்று இஸ்லாத்திற்காக எகிறிக் குதிக்கும் பதிவர்கள் தாம். என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்குவதில்லை, எப்படி அதை மறுக்க வேண்டும் என திட்டமிடுவதில்லை. இருப்பதெல்லாம் இஸ்லாத்தைக் குறை கூறுவதா எனும் உணர்ச்சிக் கொதிப்பு, மறுக்க வேண்டுமெனும் ஆர்வக் கோளாறு, கொஞ்சம் இரவல் தகவல், நிறைய நம்பிக்கை எல்லாவற்றையும் மொத்தமாக வெட்டிக் கலக்கி தாளித்து இறக்கி விடுவது. உண்டாலல்லவா தெரியும் உணவின் தரம்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

லூத் என்றொரு ”லூஸ்”




மனிதர்களை நல்வழிபடுத்த எண்ணற்ற தீர்க்கதரிசிகளை (நபி) மனிதர்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளதாகவும், அந்த தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடையே கூறி, ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் வாழ்ந்தனர் என்கிறது குர்ஆன்.
ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது. குர்ஆனைப் பொருளுணர்ந்து வாசிக்கும் எவராலும் இதை அறியமுடியும். இந்த முரண்பாட்டை, இஸ்லாமிய அறிஞர்கள் அடைப்புக்குறிகளுக்குள் மறைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
இவர்களின் ஏமாற்று வேலையை எளிதாக புரிந்துகொள்ள நாம் இன்று லூத் (லோத்து) என்பவரின் கதையைப் பார்க்கலாம். குர்ஆனில் மிகக் குறைவாக கூறப்பட்டுள்ள கதைகளில் லூத்துவின் கதையும் ஒன்று. அது இவ்வாறு கூறுகிறது,
லூத் (சோதோம்-தற்பொழுதைய ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில்) தூதராக அல்லாஹ்வால் நியமிக்கப்படுகிறார். இவர் அல்லாஹ்வின் மற்றொரு தூதரன இப்ராஹிமின் நெருங்கிய உறவினர்.
லூத் தனது தூதுப்பணியை செய்து கொண்டிருந்த சோதோம் பகுதில் இருந்த ஆண்கள் அனைவருமே மிகப்பெரிய அளவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். ஓரினச்சேர்க்கையை எதிர்த்து லூத் செய்த பிரச்சாரங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. அவர்கள் லூத்தின் அறிவுரைகளை தூக்கி எறிந்தனர். இந்நிலையில் அம்மக்களை அழிக்க அல்லஹ் முடிவு செய்து தனது உதவியாளர்களை (வானவர்கள்) அனுப்புகிறான்.
அந்த வானவர்கள்(உதவியாளர்கள்) முதலில் அல்லாஹ்வின் மற்றொரு தூதரான இப்ராஹிமை சந்திக்கின்றனர். தள்ளாத வயதிலும் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டு, லூத்தின் நகரத்தை அழிக்க இருப்பதையும் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.
குர் ஆன் 11:70
இப்ராஹிம் பதறியவாறு, அங்கு லூத் இருப்பதை கூறுகிறார்.
இப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்தி வந்த போது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.
குர் ஆன் 11:74
"அங்கே லூத் இருக்கிறாரே'' என்று அவர் கேட்டார். "அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள்'' என்றனர்.
குர் ஆன் 29:32
"இப்ராஹீமே! இதை நீர் விட்டு விடுவீராக! உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்'' (என்று இறைவன் கூறினான்.)
குர் ஆன் 11:76
"லூத்துடைய குடும்பத்தாரில் அவரது மனைவியைத் தவிர அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றுவோம். அவள் அழிபவள் என்று நிர்ணயித்து விட்டோம்'' என்றனர்
குர் ஆன் 15:59,60
என்று கூறி, அந்த வானவர்கள் சோதோம் நகருக்கு செல்கின்றனர்.
வானவர்கள் (அழகிய) ஆண்கள் உருவில் லூத்தை சந்திக்கின்றனர். தாங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அதிகாலையில் சோதோம் நகரை தலைகீழாக புரட்டியும், சூடான கற்களை வீசியும் அழிக்க இருக்கும் திட்டத்தை கூறி, லூத்தையும் அவரது குடும்பத்தினரையும் மட்டும் நகரைவிட்டு பாதுகாப்பாக வெளியேருமாறு அறிவுறுத்திக் கூறுகின்றனர்.
"லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'' என்றனர்.
குர் ஆன் 11:81
இதற்குள், லூத்தை சந்திக்க அழகிய ஆண்கள் வந்திருக்கின்றனர் என்ற செய்தி ஊருக்குள் பரவியது. சோதோமின் ஆண்களில் இளைஞர்களும், கிழவர்களும் லூத்தின் இல்லத்திற்குமுன் பெரும் கூட்டமாக கூடி, லூத்தை சந்திக்க வந்துள்ள ஆண்களிடம் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ள அனுமதிக்குமாறு லூத்தை வற்புறுத்துகின்றனர். தனது விருந்தினர்களுக்கு அவமானம் நேர்ந்துவிடக்கூடாது என்று பதறிய லூத், வெளியில் காத்திருக்கும் அக்கூட்டத்தினரிடம், விருந்தினருக்கு பதிலாக தனது (இரு) மகள்களை வழங்க முன்வருகிறார்.
"இவர்கள் எனது விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை இழிவுபடுத்தாதீர்கள்!'' என்று (லூத்) கூறினார்.
குர் ஆன் 15:68,69
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். "என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?'' என்று கேட்டார்.
குர் ஆன் 11:78
"நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்'' என்று அவர் கூறினார்.
குர் ஆன் 15:71
தனது விருந்தினர்களைப் பாதுகாப்பதே லூத்தின் நேக்கமாக இருந்தாலும், பெரும் இச்சையுடன் இருக்கும் மாபெரும் கூட்டத்தின் தேவையை, லூத்தின் இரண்டு அல்லது மூன்று மகள்கள் தீர்த்துவைக்க முடியுமா? ஒருவேளை அவர்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தாலும் அந்த உறவிற்கு என்ன பொருள்?
                அதாவது லூத் தனது மகள்களை பாலியல் அடிமைகளாக வழங்க முன்வந்திருக்கிறார் என்பதுதான் இதன் நேரடிபொருள் இதை விளங்க எந்த தப்ஸீர் விளக்கவுரையும் தேவையில்லை. முஹம்மதின் காலத்தில் அவருடன் வாழ்ந்த ஸாஹாபாக்களுக்கு இது எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில்    மனைவியர்கள் மட்டுமல்லாது எண்ணற்ற அடிமைப்பெண்கள் என்ற வைப்பாட்டிகளாக வைத்திருப்பது அவர்களின் கலாச்சாரமாக இருந்தது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அவர்களது வாழ்க்கைமுறையாகவே இருந்தது. பெண் என்ற பாலினத்தை  போகப்பொருளாகவே அவர்கள் நினைத்திருந்தனர். உதாரணத்திற்கு, முஹம்மது மெக்கவிலிருந்து தனது (70-80) தோழர்களுடன் குடிபெயர்ந்து மதீனா வந்தவுடன், அவர்களுக்கு பொருள்களையும் தங்களது மனைவியர்களையும் வழங்கி உதவி செய்தனர், என்பதை இன்றும் முஸ்லீம்களும் பெருமையாகக் கூறுவதை நீங்கள் காணலாம். முஹம்மதின் காலத்து மனைவியர்களின் நிலை அவ்வளவுதான். (அந்த விஷயத்தில் முஹம்மது ஒரு ‘Ultra Modern” பேர்வழிதான் போலும்!)
குர் ஆன் 11:78, 15:71-ன் மடத்தனம் பிற்கால இஸ்லாமிய அறிஞர்களுக்கு விளங்கியவுடன், லூத் தனது மகள்களை திருமணத்தின் மூலம் வழங்கவே முன் வந்தார் என்று விளக்கவுரைகளை எழுதி, அல்லாஹ்வின் உளறலை சரிக்கட்டினர்.
குர் ஆனின் 11:78, 15:71 வசனத்திற்கு என்னிடமுள்ள M.அப்துல் வஹ்ஹாப் M.A, B.Th,  K.A.நிஜாமுத்தீன் மன்பயீ, R.K.அப்துல் காதிர் பாகவி ஆகியோர் மொழிபெயர்ப்பு செய்துள்ள மற்றொரு தர்ஜமா இவ்வாறு கூறுகிறது.
... என்னுடைய சமூகத்தினரே! (இதோ!) இவர்கள் என்னுடைய புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணம் செய்து கொள்ள) மிக்க பரிசுத்தமானவர்கள்...
குர் ஆன் 11:78

"நீங்கள் (திருமணம்) ஏதும் செய்வதாக இருந்தால், இதோ என்னுடைய புதல்வியர்கள் இருக்கின்றனர்'' என்று அவர் கூறினார்கள்.
குர் ஆன் 15:71
லூத் திருமணம் செய்து தருவதாகவே கூறினார் என்பதை வாதத்திற்காக ஏற்பதாகக் கொண்டாலும், ஒரு பெரும் கூட்டத்திற்கு ஓரிரு பெண்களை எப்படி திருமணம் செய்து வைக்கமுடியும்? குர் ஆன் கூறும் ஒழுக்கநெறி உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் அந்த கூட்டத்தினர் தங்களது தேவையைக் குறித்து தெளிவாகவே இருந்தனர்.
"உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர்.
குர் ஆன் 11:79
மேலும், வானவர்கள் தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும், எவ்வாறு சோதோமை அழிக்க இருக்கிறோம் என்பதையும் லூத்திடம் தெளிவாகவே அறிவித்துள்ளனர். ஊரையே அழிக்க வந்தவர்களால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதா? இங்கு மடையர் அல்லாஹ்வா? இல்லை லூத்தா?
பின்னர் அல்லாஹ்வின் திட்டப்படி சோதோம் அழிக்கப்பட்டது.
 நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப் பகுதியாக்கினோம்.
குர் ஆன் 11:82
சோதோமிலிருந்து தப்பிச்சென்ற லூத் மற்றும் அவரது குடும்பத்தினரான (இரு) மகள்களைத் தவிர அந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் உயிரோடு சமாதியாயினர்.
தனக்குப் பிடிக்காத ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் லூத் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர சோதோமை அழித்ததாக கூறும் அல்லாஹ், ஒன்றை கவனிக்க மறந்துவிட்டான். சோதோம் பகுதியில் ஆண்கள்மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கென்று பெண்களையும், குழந்தைகளையும் உறுப்பினர்களாக உள்ளடக்கிய குடும்பங்களையும் அழித்ததாகவே இங்கு பொருள் விளங்குகிறது.
ஒரு பாவமும் அறியாத அப்பாவிகளும், பெண்களும், ஏதுமறியாத குழந்தைகளும் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனரா? கொடுமையாகத் தண்டிக்குமளவிற்கு இவர்கள் என்ன தவறு செய்தனர்? இந்த கதையின் மூலம் அல்லாஹ் தனது அடியார்களுக்குக் கூறும் நீதிதான் என்ன?
இனப்படுகொலை!
இது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ முஹம்மதுவிற்கு நன்றாகவே புரிந்தது. அவர் தனது இறுதி பத்து ஆண்டுகளில் இதைத்தான் மாற்று மத்தினர் மீது நிகழ்த்திக் காட்டினார்.
சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்?
இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.  அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து

81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த இறைத் தூதருக்கும் இல்லை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இறைத் தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
இதனால் தான் எத்தனையோ இறைத் தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை...
onlinepj.com
ஆக, மனிதர்களை நல்வழியை குறித்து சிந்திக்க விடாமல் நேர்வழிக்கு திரும்ப முடியாமல் செய்தது அல்லாஹ்தான். சோதோமின் ஆண்கள் ஓரினச்சேர்க்கையிலிருந்து மீளமுடியாதவாறு செய்ததும் அல்லாஹ்தான். நமது நபி அறிஞர் P.ஜைனுல் ஆபிதீனுக்குப் புரிந்த உண்மையை கூட உணராத லூத் ஒரு நபியா? இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு லூஸ்தானே?
சரி... தப்பிச்சென்ற லூசு (மன்னிக்கவும்) லூத் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் (மகள்கள்) என்ன ஆனார்கள்?
குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.
லோத்துவின் கதை பைபிள் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்திலிருந்து...
19:23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான்.
19:24 அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து,
19:25 அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
...
19:30 சோர்வாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர்.
19:31 ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை.
19:32 எனவே நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்கு சந்ததி உண்டாக்க நம் தந்தையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள்.

   
19;33 அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவுகொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.
19:34 மறுநாள் மூத்தவள் இளையவளிடம்:  “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவுகொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவு கொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும் என்றாள்.
19:35 அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான்.
19:36 லோத்தின் இருமகள்களும் கர்ப்ப முற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை.
அந்தப் பிள்ளைகளுக்கு லோத்து தந்தையா? தாத்தாவா? பதில் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
...
இதுதான் உலகின் இருபெரும் மதங்கள் தங்களது தீர்க்கதரிசிகள் மற்றும் வேதங்களின் வாயிலாக அடியார்களுக்கு போதிக்கும் மோட்சத்திற்குரிய வாழ்க்கைநெறி!

திங்கள், 23 ஜனவரி, 2012

பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!


ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.
தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.
-கீழைக்காற்று
இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி – தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)
vote-012கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?
பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.
1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, “”குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்” என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.
ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, “”இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?” என்று கேட்டார்.
அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.
இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.
இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.
சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?
இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?
பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்துதலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.
மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.
இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே “”இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “”ஜிந்தகிஇநவ்” என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.
கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?
பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.
மறுபுறம், இந்திய வரலாற்றில் “இஸ்லாமிய ஆட்சி’ என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் “உயர்சாதியினர்’ என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் “கீழ் சாதியினர்’ என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.
இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் “”முன்டாகாப் அல்தாவாரிக்”, மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் “”தாரிக்இஃபிரோஸ் ஷாஹி”, குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.
இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.
இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் “கீழ்’ சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“”குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!” இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது “”சிராஜுல் ஹேதயா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.
மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை “”மனுவாதிகள்” என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.
“மாபெரும்’ மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது “”முன்டகாப்அல்தாவாரிஹ்” நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட “”ஃபடாவாஇஆலம்கிரி” என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் “கீழ்’ சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.
பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட “”டெல்லி உருது அக்பர்”இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; “கீழ்’ சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் “இஸ்லாமிய’ ஆட்சிக் காலத்தின் “பொற்காலம்’ என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்”பொற்கால’ ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த “கீழ்’ சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.
பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் “”ராஜா” என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.
சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட “மேல்’ சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் “கீழ்’ சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.
கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த “”மனுவாதி உலேமாக்கள்என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?
பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் “புனித’ மற்றவர்களாக “அசுத்த’மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” நூலில் குறிப்பிடுகிறார்.
கேள்வி: “இஸ்லாமியஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?
பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “”ஜிந்தகிஇநவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.
சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.
ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, “”ஃபிக்இஉமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.
தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “”தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!
தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “”ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்” என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.
அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்’ சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்’ சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், “”முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்’ சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்’ சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்’ சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!
இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது “”அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்” நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் “”நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி “”வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்” என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் “”ஜுலாஹா” என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (“”உதவி செய்பவர்கள்”) என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.
இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.
ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் “மசாவத்இ பகார்இ ஷாரியத்” என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி “”பாஹிஸ்டி ஜேவார்” என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் “மரியாதைக்குரிய மேல்குடி’ (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் “கீழ்’ சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் “”இம்தாத் உல்ஃபடாவா” என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.
இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை “”நவ்முஸ்லிம்கள்” என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்
நூல்: இஸ்லாத்தில் மனுவாதிகள் – வெளியீடு: கீழைக்காற்று பதிப்பகம் – விலை ரூ. 6.00
கிடைக்குமிடம்:
கீழைக்காற்று. 10, ஔலியா சாகிப் தெரு,  எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி – 044 2841 23677