சனி, 13 ஜூலை, 2013

பரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்?


  எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 4
 darwin
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?

இந்தக் கட்டுரையின் தலைப்பில் ‘ஜல்லியடிப்புகள்’ எனும் சொல்லை ஏன் பாவித்திருக்கிறேன்? ஏனென்றால் மெய்யாகவே நண்பர் ஆஷிக்கின் கட்டுரையில் படைப்புவாதத்தை நிருவுவதாக கருதிக் கொண்டு அத்தனை ஜல்லியடிப்புகளை செய்திருக்கிறார் என்பதால் தான். தலைப்பை எடுத்துக் கொள்வோம், “பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?” பரிணாமம் உண்மையென்றால் இந்த சொற்களின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ஆஷிக்? பரிணாமம் குறித்த அறிவியல் நிலை என்ன? புவியில் உயிரினப் பரவலை விளக்கும் சிறந்த கோட்பாடு.கவனிக்கவும் அறிவியல் கோட்பாடு தானேயன்றி அறிவியல் உண்மையல்ல. பெருவெடிப்புக் கொள்கை எப்படி ஓர் அறிவியல் கோட்பாடோ அதே போல் பரிணாமக் கொள்கையும் ஓர் அறிவியல் கோட்பாடு. பெருவெடிப்புக் கொள்கையைவிட சிறந்த கோட்பாடு ஒன்று தோன்றினால் எப்படி பெருவெடிப்புக் கொள்கை காலங்கடந்ததாய் போய்விடுமோ அதேபோன்று சிறந்த வேறொரு கோட்பாடு தோன்றினால் பரிணாமக் கொள்கையும் காலங்கடந்த ஒன்றாகிவிடும். ஆனால் இன்றைய நிலையில் உயிரினப் பரவலை விளக்க பரிணாமத்தை விட சிறந்த கோட்பாடு ஒன்று இல்லை. மட்டுமன்றி டார்வின் கூறிய அதே அடிப்படைகளோடு இன்றைய பரிணாமக் கொள்கையும் இல்லை. பின்னர் வந்த அறிவியலாளர்களால் மேம்படுத்தப்பட்டிருக்கிறது, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருகிறது. அலோபதி மருத்துவ முறை தொடங்கி உடற்கூறியல் ஆய்வுகள் வரை அனைத்தும் பரிணாமத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் அறிவியலுக்கும் மதவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு. ஒரு சிறு சான்று கிடைத்தாலும் அதைக் கொண்டு தான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை மீளாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்வது அல்லது தள்ளி விடுவது தான் அறிவியலின் இயல்பு.இந்த அடிப்படையில் தான் பரிணாமம் அறிவியல் உண்மையல்ல, அறிவியல் கோட்பாடு எனப்படுகிறது. ஆனால் இதை அறிவியல் உண்மை போல திரிப்பது எதற்காக? அப்போது தான் தங்கள் மதவாத புரட்டுகளை உண்மைபோல திணிக்கமுடியும் அதற்காக.

தலைப்பை அடுத்து ஒரு மீப்பெரும் பொய்யுடன் தன் கட்டுரையை தொடங்குகிறார் ஆஷிக். படைப்புவாதிகளின் வாதங்களுக்கு பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் தகுந்த பதிலளிக்கவில்லையாம். அறிவியலாளர்களை விட்டுவிடுங்கள்,மதவாதிகளுக்கு பதில் கூறும் சுமையெல்லாம் அவர்களுக்கு இல்லை. அந்தப் பொறுப்பை பொருள்முதல்வாதிகள் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்கே உங்கள் வாதங்களை எடுத்து விடுங்கள் பார்க்கலாம். அதாவது பொருள்முதல்வாதிகள் பதிலளிக்காத மதவியாதிகளின் கேள்விகள் ஏதேனும் மிச்சம் இருந்தால் .. .. .. அப்படி எந்த வாதமேனும் இருக்கிறதா?பொருள்முதல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தான் அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி எழுப்பியவர்களை தாக்கியும், முடக்கியும், கொன்றும் வருகிறார்கள் மதவாதிகள். இதற்கு எந்த மதமும் விதிவிலக்கில்லை. அறிவியலாளன் முதல் சாமானியன் வரை மதவியாதிகளின் தாக்குதலுக்கும் வெறியாட்டத்துக்கும் ஆளானவர்களின் பட்டியல் வேண்டுமா?வரலாற்றில் தேடிப்பாருங்கள், பக்கங்கள் போதாது. இப்படி ஒரு அறுவெறுக்கத்தக்க பக்கத்தை தாங்கி நிற்கும் மதவாதிகளா தங்களின் வாதங்களுக்கு பதிலில்லை என்று பேசுவது?

அடுத்து, அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பதால் பரிணாமத்தை நிராகரிக்க முடியுமா? பெருவெடிப்புக் கொள்கை குறித்தும் அறிவியலாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இதன் காரணத்தைக் கொண்டு மதவாதிகள் ஏன் அதை நிராகரிக்கக் கூடாது? இந்த இடத்தில் ஒப்பீட்டளவில் ஏன் பெருவெடிப்பை மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்கிறேன் எனும் கேள்வி எழக் கூடும். ஏனென்றால் நண்பர் ஆஷிக் போன்ற மதவாதிகள் பெருவெடிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாலும், பரிணாமத்திற்கான காரண கரியங்கள் பெருவெடிப்புக்கும் பொருந்தும் என்பதாலும், மதவாதிகளின் அறிவியல் பார்வை அவர்களின் வேதத்தில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது மட்டும் தானேயன்றி அறிவியல் இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தவும் தான்.

ஒரு ஆய்வில் கருத்து வேறுபாடு இருக்கிறதா இல்லையா என்பதைக் கொண்டு அந்த ஆய்வின் தன்மைகள் ஒரு போதும் தீர்மானிக்கப் பட்டதில்லை. அது நடைமுறையோடு பொருந்துகிறதா? மீண்டும் மீண்டும் சோதித்தறிய ஏதுவாய் இருக்கிறதா?சரியாய் இருக்கிறதா? என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஆனால் பரிணாமத்தை நிராகரிக்கக் கோரும் மதவாதிகள் கூறும் காரணங்கள் இந்த எல்லைக்குள் இருப்பதே இல்லை. அறிவியல் செய்யும் அனைத்து ஆய்வுகள் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கருத்து வேறுபாடுகள் அந்த ஆய்வை மேலும் செழுமைப்படுத்துவதற்கு உதவுகின்றன.ஆனாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் பரிணாமத்தை ஏற்றிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமன்றி பரிணாமத்தை எதிர்க்கும் அறிவியலாளர்களும் கூட பரிணாமவியல் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். பிற கோட்பாடுகளின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகளை விட பரிணாமத்தின் மீது இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம். இதற்கான காரணம் என்ன?

அறிவியல் உண்மைகளின் மீது கருத்து வேறுபாடுகள் எதுவும் எழுவதில்லை. கோட்பாடுகளில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் எழும். அறிவியல் கோட்பாடுகளின் மீதான கருத்து வேறுபாடுகள் எதில் குறைவாக இருக்கிறது எதில் அதிகமாக இருக்கிறது என்பதை பகுத்துப் பார்த்தால் இதற்கான காரணம் விளங்கி விடும். அந்த வகையில் கடவுளை மதங்களை நேரடியாகத் தாக்கும் எந்தக் கோட்பாடுகளின் மீதும் கருத்து வேறுபாடுகள் கடுமையாக எழுந்திருக்கின்றன. கலிலியோவின் கண்டுபிடிப்புகள் மீது எழாத கருத்து வேறுபாடுகளா? புரூணோவின் மீது செய்யப்படாத விமர்சனங்களா? கம்யூனிசத்தின் மீது செய்யப்படாத அவதூறுகளா? (கம்யூனிசம் என்பது அரசியல் கட்சிக் கோட்பாடு அல்ல, இயங்கியல் பொருள்முதல்வாதம்,வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக அறிவியல் என்பதை அறிக) இந்த அடிப்படையில் தான் பரிணாமத்தின் மீதும் கருத்து வேறுபாடுகள் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதாவது பன்னெடுங்காலமாக தாங்கள் நம்பிவரும் நம்பிக்கையின் மீதான பற்றுறுதியின் விளைவே பரிணாமத்தின் மீதான இவ்வளவு கருத்து வேறுபாடுகளுக்குமான காரணம். அறிவியலாளர்களிலும் அனேகர் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

அறிவியலாளர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் அல்லர். அவர்கள் எதை ஆய்வு செய்கிறார்களோ அதில் மட்டுமே அவர்கள் சிறந்தவர்கள். அறிவியலாளர்களுக்கும் மூடநம்பிக்கைகள் உண்டு. எடுத்துக்காட்டு ஒவ்வொரு முறை ஏவூர்தியை(ராக்கெட்) ஏவும்போதும் பூஜை செய்து ஏவுவது ஸ்ரீஹரிகோட்டாவில் வாடிக்கை, அவ்வளவு ஏன் சந்திராயன்1ஏவூர்தி மாதிரியை திருப்பதி பாலாஜியின் காலடியில் வைத்து விட்டு பின்னர் ஏவியிருக்கிறார்கள். இதைச் செய்தது அறிவியலாளர்கள் என்பதால் அவர்களின் செய்கைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? எது அறிவியலின் அடிப்படையில் சரியாக இருக்கிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். இப்போது நண்பர் ஆஷிக் கொடுத்திருக்கும் பட்டியலிலுள்ள இருநூற்றுக்கும் அதிகமான அறிவியலாளர்கள் பரிணாமத்தை எதிர்க்கிறார்கள் என்றால் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள்? கூறுங்கள் பரிசீலிக்கலாம். ஐ.டி.யை ஏற்பவர்கள் பரிணாமத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை.அவர்கள் எந்த அடிப்படையில் ஏற்கவில்லை என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் பரிசீலிப்பதற்கு வசதியாக இருக்கும்.ஏனைய கோட்பாட்டை ஏற்பவர்கள் எனும் அடிப்படையில் பரிணாமத்தை மறுக்கிறார்களா? அல்லது பாலாஜியின் காலில் வைத்தார்களே அந்த அடிப்படையில் மறுக்கிறார்களா? பாலாஜியின் காலில் வைத்த அடிப்படை என்றால் அதை புறந்தள்ளுவதைத்தவிர வேறு வழியில்லை.

அடுத்து நண்பர் ஆஷிக் மேற்கோள் காட்டும் கட்டுரையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு உள்ளாக்கும் அம்சங்களும் அந்த கட்டுரையில் இருக்கிறது. நண்பர் ஆஷிக்கின் மொழிபெயர்ப்பு வாயிலாகவே பார்ப்போம். \\\ஆச்சர்யமளிக்கும் வகையில்,தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் படைப்பு கோட்பாடை நம்புகின்றனர்/// \\\இந்த அறிவியலாளர்கள் அனைவரும், கடவுள்தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார், இவைகள் தற்செயலாக வந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறார்கள்/// இந்த இரண்டு கூற்றுகளையும் பாருங்கள். நிச்சயமாக இவை அறிவியலாளர்களின் கூற்றுகளாய் இருந்திருக்க முடியாது. படைப்புக் கோட்பாட்டை நம்புபவர்கள் அதை அறிவியல் அடிப்படையில் நம்ப முடியுமா?பாலாஜியின் காலில் வைத்த அடிப்படையில் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்பினால் அது அறிவியலின் வழியில் வந்த முடிவாக இருக்க முடியாது. அறிவியலின் வழி பார்த்தால் நிச்சயம் ஓர் அறிவியலாளர் கடவுளை நம்ப வாய்ப்பில்லை.தற்செயலாக இவ்வுலகம் வந்தது என்பது மதவாதிகள் பாவிக்கும் சொல். இச்சொல் ஒரு அறிவியலாளனின் வாயிலிருந்து வந்திருக்க முடியாது. ஏனென்றால் அறிவியலாளர்கள் எல்லாம் ஒரு சிங்குலாரிடியிலிருந்து வந்தது அதற்கு முன் அதற்கு முன் என்னவென்றி இன்னும் அறியப்படவில்லை என்று தான் கூறுவார்களேயன்றி பேரண்டம் தற்செயலாக வந்தது என்று கூற மாட்டார்கள். அப்படிக் கூறுவது அறிவியலே அல்ல. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் எளிமையாக விளக்கலாம்.இருவர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் புதுச் சட்டை அணிந்திருக்கிறார், மற்றொருவரோ நைந்து கிழிந்து இற்றுப் போயிருக்கும் சட்டையை அணிந்து கொண்டிருக்கிறார். இப்போது இன்னொருவர் வந்து கையில் உருப் பெருக்கியுடன் புதுச் சட்டையை உற்றுப் பார்த்து இந்த இடத்தில் ஒரு நூல் அருந்திருக்கிறது, அந்த இடத்தில் ஒரு நூல் வண்ணம் மாற்றி நெய்யப்பட்டிருக்கிறது, இன்னொரு இடத்தில் ஒரு நூலின் முறுக்கு குறைவாக இருக்கிறது. பிறிதொரு இடத்திலோ ஒரு நூல் எதிர்முறுக்காக இருக்கிறது. எனவே, நான் நைந்து போன சட்டையை ஏற்கிறேன் என்று அவர் கூறினால் அது எப்படி இருக்குமோ அவ்வளவு அபத்தமாக இருக்கிறது. இப்போது கூறுங்கள் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

இன்னொரு அம்சத்தையும் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இன்றைய நிலையில் அறிவியல் ஆய்வு என்பவை, அறிவியலாளர்கள் என்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கி இருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு ஒப்பவே அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நலன் காக்காத, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எந்த ஒரு ஆய்வையும் எந்த ஒரு அறிவியலாளனும் நிகழ்த்திவிட முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தம்.ஏகாதிபத்தியங்களுக்கு கடவுள் நம்பிக்கை உதவி செய்ய வல்லது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.

அடுத்து, ஒரு முக்கியமான இடத்துக்கு வருவோம். குறிப்பிட்ட அந்த டெலிகிராப் நாளிதழில் வெளியிட்ப்பட்ட அறிக்கை டார்வினின் சொந்த வாழ்வை முன்வைத்து எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தினை முன்வைத்து எழுதப்பட்டது என்பதை நண்பர் ஆஷிக் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டால் அது ஓர் அறிவியல் கட்டுரை போன்ற தோற்றத்துக்கு உதவாது என நண்பர் நினைத்திருக்கலாம். பரவாயில்லை அதை விட்டு விடுவோம். ஆனால் அந்தக் கட்டுரையில் தவிர்க்க முடியாத அம்சம் பரிணாமத்தை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் கூறப்படும் ஐந்து காரணங்கள். இவைகளை நண்பர் ஆஷிக் லேசாக தொட்டு விட்டு கடந்து சென்று விட்டார். அந்த காரணங்களைப் பார்க்கலாம்.

பரிணாம ஆதரவு வாதங்கள்:
  1. உயிரினப் பரவலை பரிணாமக் கோட்பாடுபோல் வேறெதுவும் விளக்கவில்லை.
  1. பரிணாமக் கோட்பாடு விளக்கமாகவும் பொருள் சார்ந்தும் இருக்கிறது.
  1. பெரும்பாலான அறிவியல் சமூகமும் கல்விக்கூடங்களும் பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வுவங்களும் பரிணாம கோட்பாட்டை ஆதரிக்கிறது.
  1. பேரண்டம் தோன்றிய காலம் குறித்து வேதங்கள் கொடுக்கும் கணக்கு ஏற்புடையதாக இல்லை.
  1. நோவாவின் கப்பலைக் காட்டுங்கள்.

பரிணாம எதிர்ப்பு வாதங்கள்:
  1. பரிணாமக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை. இருந்திருந்தால் நமக்கு இன்னும் அதிகம் உயிரினப் படிவங்கள் கிடைத்திருக்கும்.
  1. பரிணாமவாதிகளின் கூற்றுப்படி உலகம் பழையது என்றால் கிடைத்திருப்பதை விட இன்னும் அதிகம் எலும்புக் கூடுகளும், குகை ஓவியங்களும் கிடைத்திருக்க வேண்டும். கடலில் இன்னும் அதிகம் சோடியம் குளோரைடும், அதிக வண்டலும் சேர்ந்திருக்க வேண்டும்.
  1. இருட்டில் பார்ப்பதற்கு சில உயிரினங்கள் செயல்படுத்தும் கூட்டுக் கண் குறித்து பரிணாமத்தில் தெளிவான விளக்கங்கள் இல்லை.
  1. வேதத்தில் பூமியின் படைப்பில் வரும் நாட்கள் என்பதை காலங்கள் என்று கொள்ள வேண்டும்.
  1. என்ன நோக்கத்திற்காக இவைகளெல்லாம் ஏற்பட வேண்டும்?

இந்தக் காரணங்களை மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்து விடுகிறது, இவை கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களாக இருக்கிறது என்று. பரிணாமத்தை முதன்மைப்படுத்தி கேட்கப்பட்ட கடவுள் ஏற்பு மறுப்பு வாதங்களை அந்தக் கட்டுரை பரிணாமத்திற்கான காரணங்களாக குறுக்க வேண்டிய அவசியமென்ன? எளிமையான காரணம் தான். பரிணாமத்தை திரித்துப் புரட்டி ஆஷிக் பாய் தமிழில் எழுதும் கட்டுரைகள் போலவே ஆங்கிலத்தில் யாரோ ஒரு மஹானுபாவர் கட்டுரை எழுத அதை டெலிகிராப் பத்திரிக்கை பிரசுரிக்க அதைப் பார்த்த ஆஷிக் புளகமடைந்து போய் கொஞ்சம் கூட்டிக் குறைத்து தமிழ்க் கட்டுரையாக்கி விட்டார். அவ்வளவு தான்.

இந்தக் கட்டுரையில் நண்பர் ஆஷிக் பிம்பமாக்கல் ஒன்றையும் செய்திருக்கிறார். பரிணாமத்தை எதிர்க்கிறேன் என்று எந்த ஆய்வாளரும் கருத்து தெரிவித்து விட்டால் அவர் பல இன்னல்களுக்கு ஆளாவாராம் அதனால் பரிணாம எதிர்ப்பை வெளிப்படையாக கூற தயங்குகிறார்களாம். இதற்கு பின்னூட்டத்திலும் விளக்கங்கள் அளித்திருக்கிறார். படித்தால் வேடிக்கையாக இருக்கிறது.யார் எதை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்குவார்கள் என்பதற்கு நிகழ் காலத்திலும் வரலாறுகளிலும் அனேக சான்றுகள் உண்டு, எனவே அவைகளை விட்டு விட்டு ஆஷிக்கின் பின்னூட்ட பதில்களிலிருந்து பார்ப்போம். பரிணாமவியலை எதிர்த்து கருத்து கூறினால் என்ன நடக்கும்? அவர்களது கட்டுரை பிரசுரிக்கப்படாது அதிகபட்சம் வேலை இழக்கலாம். ஆனால் இது எங்கே நடக்கிறது என்று ஆஷிக் கூறுகிறார்? NAS போன்ற பரிணாமத்தை ஆதரிக்கும் அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்போர். அதை எதிர்த்து கருத்து கூறமுடியாது. கூறினால் கட்டுரைகள் பிரசுரிக்கப்படாதாம் வேலையிழப்பார்களாம். திமுகவில் இருந்து கொண்டு கருணாநிதியை எதிர்த்து கட்டுரை எழுதி அதை முரசொலியில் பிரசுரிக்கவில்லை, திமுகவை விட்டு தூக்கிவிட்டார்கள் என்று கூக்குரலிட்டால் அது எப்படி இருக்கும்?ஜனநாயக அமைப்பாக இருந்தால் அது விமர்சனங்களைப் பரிசீலிக்கும் இல்லாவிட்டால் அதன் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும். இதை பரிணாமத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உலகில் இருக்கமுடியாத நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது நேர்மையாளர்களின் செயலா? நண்பர் ஆஷிக்கிற்கு நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான், வரலாற்றை திரும்பிப் பாருங்கள் ஆத்திகர்களின் கைகளில் சிக்கி நாத்திகர்கள் அனுபவித்த ரத்தக்கரை படிந்த நீண்ட நெடிய வரலாற்றை திரும்பிப் பாருங்கள். அது ஏன் என்பதற்கான பதிலை தேடிப் பாருங்கள். புரியாமல் நீங்கள் மதவாதியாக இருந்தால் அது உங்களுக்கு புரிதலைத் தரும். தரவேண்டும்.
ஆஷிக் உட்பட அத்தனை மதவாதிகளும் பதிலளிக்காத, பதிலளிக்க விரும்பாத, பதிலளிக்க முடியாத நம்முடைய ஆதாரக் கேள்வி – பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். எங்கே உங்களின் படைப்புக் கொள்கை சரி என்பதற்கான ஆதாரங்கள்?

இதற்கு மேலும் இந்தக் கட்டுரையை நீட்டிக்க விரும்பவில்லை. ஒருவேளை நண்பர் ஆஷிக் மேற்கண்ட ஐந்து காரணங்களுக்கும் விளக்கம் வேண்டும் எனக் கோரினால் அப்போது இந்தக் கட்டுரையின் பின் இணைப்பாக அவைகளை விளக்கி அடுத்த கட்டுரையாக எழுதிக் கொல்ளலாம்.