செவ்வாய், 22 அக்டோபர், 2013

முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?


Badr

முகம்மது மதீனாவின் மன்னராக தம்மை முடிசூட்டிக் கொண்ட பிறகிலிருந்து மரணிக்கும் வரையிலான பத்து ஆண்டுகளில் தோராயமாக பத்தொன்பது போர்களை நடத்தியிருக்கிறார். முகம்மதின் சமகாலத்தில் உலகின் பிற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட போர்களோடு ஒப்பிட்டால் முகம்மது நடத்தியது போர்களல்ல, குழுச் சண்டைகள். ஆனாலும் ஒரு நிலப்பகுதியின் மன்னர் எனும் ஹோதாவில் நடத்தப்பட்டதால் அவைகள் போர்களாகவே குறிப்பிடப்படுகின்றன. போர்களோ, குழுச் சண்டைகளோ அவைகளின் நோக்கம் என்னவாக இருந்தது? அவை அரசியலை முன்னெடுத்து நடத்தப்பட்டவைகளா? அல்லது ஆன்மீகத்தை முன்வைத்து நடத்தப்பட்டவைகளா? என்பதே இன்றியமையாத கேள்வி. ஏனென்றால் முஸ்லீம்களின் விவரிப்பின்படி முகம்மதின் நோக்கம் ஒரு புதிய மதத்தைப் பரப்பும் ஆன்மீகத் தலைவராக இருப்பது தான். அவர் ஒரு மன்னராக அரசியல் தலைமைப் பாத்திரத்தை ஏற்கவில்லை என்றாலும்கூட அவர் ஆன்மீகத் தலைவராக இருந்திருப்பார். மாறாக ஆன்மீகத் தலைமையை நிராகரித்துவிட்டு ஒருபோதும் அவர் அரசியல் தலைவராக நீடித்திருந்திருக்க மாட்டார். அவர் ஆன்மீகத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் ஒருசேர இருந்ததாக கருதப்பட்டாலும் இது தான் இஸ்லாமியப் புரிதல்.

முகம்மதின் காலத்தில் அரேபியா அரசுகளைக் கொண்டிருக்கவில்லை. மக்காவில் ஹில்ஃப் அல் ஃபுலூல், மாலா போன்ற அமைப்புகள் இருந்தாலும் அரசு எனும் தகுதியில் அவை இல்லை. மதினாவில் இது போன்ற அமைப்புகளும் கூட கிடையாது. அதேநேரம் அரேபியாவுக்கு வெளியே முறையான அரசமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் அரேபிய பாலைவனப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த நாடோடிகள், விவசாயம் செய்து ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தவர்கள், பண்டமாற்று வணிகர்கள் ஆகிய மூன்று இனக் குழுக்களையும் இணைத்து வணிகர்களின் மேலாதிக்கத்தில் ஒரு அரசமைப்பை முகம்மது மதீனாவில் ஏற்படுத்தினார். இந்த அடிப்படையிலிருந்து தான் அந்தப் போர்கள் நிகழ்த்தப்பட்டன.

இந்தப் போர்கள் ஏன் நடத்தப்பட்டன என்பதற்கு இஸ்லாமிய பரப்புரையாளர்கள் சில காரணங்களைக் கூறுகிறார்கள்.
1. மக்காவிலிருந்து முஸ்லீம்களின் சொத்துகளை பறித்து அவர்களை விரட்டியடித்தார்கள். எனவே, அதற்குப் பதிலடியாக போர்கள் நடத்தப்பட்டன.
2. புலம் பெயர்ந்து மதீனா சென்றபிறகும் மக்கா குரைஷிகளின் இன்னல்கள் தொடர்ந்தன. எனவே, அதைத் தடுப்பதற்காக போர்கள் நடத்தப்பட்டன.
3. இஸ்லாமிய நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் எனவே போர்கள் நடத்தப்பட்டன.
4. பலமான படை திரட்டி ஆயுதங்களுடன் முஸ்லீம்களைத் தாக்க வந்தார்கள். எனவே அவர்களை எதிர்கொள்ளும் விதமாக போர்கள் நடத்தப்பட்டன.
இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மதவாதிகள் கூறும் மேற்கண்ட காரணங்கள் பொருந்தாதவை, பொய்யானவை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

மக்காவிலிருந்து சொத்துக்களை பறித்துவிட்டு விரட்டியடித்தனரா? இல்லை, சொத்துக்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கவில்லை என்பதை கீழ்காணும் ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.

.. .. .. தங்களுடன் இருக்கும் முஜாஹிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள் .. .. .. புஹாரி 4274

நீளமான இந்த ஹதீஸில் இருக்கும் இந்த வாக்கியம் புலம் பெயர்ந்து சென்றவர்கள் தங்கள் சொத்துகளை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. இது மட்டுமின்றி புலம்பெயர்ந்து சென்றவர்கள் விரட்டப்பட்டு சென்றவர்களில்லை என்பதையும் ஒரு குரான் வசனம் கோடி காட்டுகிறது.

.. .. .. நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ் மீது ஈமான் கொண்டதற்காக இத்தூதரையும் உங்களையும் வெளியேற்றுகிறார்கள். என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்) நீங்கள் பயத்தால் அவர்களிடம் ரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள் .. .. .. குரான் 60:1

அதாவது சொத்துக்களை பிடுங்கி விரட்டப்பட்டு வெளியேறியவர்கள் என்று கூறப்படுபவர்கள் யார் அவர்களை வெளியேற்றினார்களோ அவர்களுடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு குடி பெயர்ந்தவர்களில் சிலர் மதீனாவின் ரகசியங்களை மக்காவாசிகளிடம் வெளிப்படுத்தி விடுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறது இந்த வசனம். இது மட்டுமா? இன்னொரு வசனம் மக்காவிலுள்ளவர்கள் புலம் பெயர்ந்தவர்களை விரட்டவில்லை மாறாக விருப்பமின்றி முகம்மதின் நிர்ப்பந்தத்தினாலேயே வெளியேறினார்கள் என்பதையும் போட்டு உடைக்கிறது.

.. .. .. எவர் ஈமான் கொண்டு ஊரை விட்டு வெளியேறவில்லையோ அவர்கள் நாடு துறக்கும் வரையில் நீங்கள் அவர்களுடைய எந்த விசயத்திலும் பொறுப்பாளியல்ல .. .. .. குரான் 8:72

அதாவது மக்காவை விட்டு வெளியேறும் எண்ணமில்லாதவர்கள் மக்காவை விட்டு வெளியேறி மதீனா வராதவரை தாம் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்று மிரட்டுகிறார் முகம்மது. அதாவது முகம்மது தன்னுடைய சுய விருப்பத்தின் பேரிலேயே தன்னைச் சார்ந்தவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம் பெயரச் செய்திருக்கிறார் என்பதை மிகத் தெளிவாகவே இந்த வசனம் புரியவைத்து விடுகிறது.

இதுமட்டுமா? புலம்பெயர்ந்து மதீனா சென்ற பிறகும் கூட மதீனாவாசிகள் மக்காவாசிகளை மிரட்டும் நிலையிலேயே இருந்திருக்கிறார்கள் என்று இன்னொரு ஹதீஸ் நமக்கு தெரிவிக்கிறது. புஹாரி 3632ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் மிக நீளமான அந்த ஹதீஸ் முகம்மது மதீனவுக்கு புலம் பெயர்ந்து சென்றபின் மதினாவிலிருந்து ஒருவர் மக்கவுக்கு வந்து காஅபாவை வலம் வந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய்த் தகராறையும், போர் நடைபெறுவதற்கு முன்னரே முகம்மது மக்காவிலிருக்கும் உமய்யா என்பவரை கொல்ல திட்டம் தீட்டியிருந்ததையும் உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி போரை திட்டமிட்டவர்கள் முகம்மதும் அவரின் சீடர்களுமேயன்றி மக்காவிலுள்ளவர்களல்ல என்பதையும் அந்த ஹதீஸிலுள்ள ஒரு வாக்கியம் மிகத் துல்லியமாக விளக்குகிறது.

.. .. .. அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன் என்று சொன்னார்கள் .. .. .. புஹாரி 3632

இஸ்லாத்தின் முதல் போர் என வர்ணிக்கப்படும் பத்ரு போர் மக்காவின் வணிகர்கள் ஷாம் நாட்டிற்குச் செல்லும் பாதையை தடுக்கும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டது என்பது வரலாற்றுத் தகவல்.

இஸ்லாத்தின் முதல் போர் என்று பத்ரு போர் வர்ணிக்கப்பட்டாலும் அதற்கு முன்பாக சிறிய அளவில் ஒன்பது போர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சற்றேறக் குறைய பத்து மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஒன்பது போர்களின் நோக்கம் என்ன? ஐயமில்லாமல் மக்காவின் வணிகக் கூட்டத்தை தாக்கிக் கொள்ளையடிப்பது தான் என்பதை இப்ன் இஷாக் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.

…..இதோ குறைஷிகளின் வியாபாரக்கூட்டம் அவர்களது 
பொருட்களுடன் வருகிறது.அக்கூட்டத்தை நோக்கி நீங்கள்
 புறப்படுங்கள், அல்லாஹ், அவைகளைக் கொள்ளைப் 
பொருட்களாக  உங்களுக்கு அளிக்கக் கூடும் .. .. ..
சிராஅத் ரஸூலல்லாஹ் – இப்ன் இஷாக்
ஆங்கில மொழிபெயர்ப்பு

அகழிப் போர் என்றொரு போரைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். மதீனாவில் முஸ்லீம்களின் எதிரிகளுக்கு உதவுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறி குறைஜா எனும் யூத இனக்குழுவினருக்கு எதிராக அகழி வெட்டி நடத்தப்பட்ட முற்றுகைப் போர். யூதர்கள் சண்டையிடாமலேயே சரணடைந்து விட்ட பின்னரும், அந்த இனக்குழுவில் இருந்த ஆண்கள் அனைவரும் சுமார் அறுநூறு பேர் கொல்லப்படுகிறார்கள். பெண்களும் சிறுவர்களும் அடிமைகளாக பிடித்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் செல்வங்கங்கள் கொள்ளையிடப்பட்டு பங்கிடப்படுகிறது. பெரும் நிலப் பரப்புகளையும் செல்வச் செழிப்பையும் முஸ்லீம்களுக்கு வழங்கியது இந்தப் போர் தான் என்று குரானே குறிப்பிடுகிறது. இதை குரான் வசனம் 33:26,27 ல் காணலாம்.

இன்னும் வேதக்காரர்களிலிருந்தும் உதவி புரிந்தார்களோ அவர்களை அவர்களது கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான். ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள். இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப் பிடித்தீர்கள்
 இன்னும் அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருட்களுக்கும், நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கிவிட்டான். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கல் மீதும் சக்தியுடையவன்

போரில் கிடைக்கும் பொருட்களை யாராருக்கு எவ்வளவு பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கு அல் அன்ஃபால் என்று ஒரு அத்தியாத்தையே குரான் தன்னிடம் கொண்டுள்ளது. அதன்படி முகம்மது போரில் நேரடியாக கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் போரில் கிடைக்கும் பொருட்களில் இருபது விழுக்காடு பொருட்கள் முகம்மதுக்கு சொந்தமாகும். இவைகளெல்லாம் உணர்த்துவது என்ன?

முகம்மதின் காலத்தில் நடத்தப்பட்ட போர்களில் இருந்தது அரசியலா? ஆன்மீகமா? என்றால் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கே அதில் ஆன்மீகம் கொஞ்சமும் இல்லை என்பது எளிதில் விளங்கும். முகம்மது மக்காவிலிருந்தவரை அவரும் சில சீடர்களும் தான். ஆனால் மதினா வந்த பின்னரோ அவர் ஒரு மன்னர், ஒரு அரசமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது, ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் இருந்தது. இவைகளின் நிர்வாகச் செலவுகளுக்கு முகம்மதுவிடம் இருந்த திட்டம் குறித்தும், விதிக்கப்பட்ட வரிகளின் மூலம் கிடைத்த வருவாய் குறித்தும் விளக்குவதற்கு முஸ்லீம்களிடம் ஆவணம் ஏதேனும் இருக்கிறதா? அல்லது மதவாதிகள் இது குறித்து விளக்குவார்களா? போரில் தோற்றவர்களை இஸ்லாத்திற்குள் கொண்டு வருவதற்கு முகம்மது ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டார் என்று யாராவது கூற முடியுமா? முஸ்லீம்களிடம் அன்று இருந்த செல்வங்களெல்லாம் போரில் கைப்பற்றப்பட்டவைகளே.

வேறு வழியில்லாமல் தற்காத்துக் கொள்வதற்காகவே முஸ்லீம்கள் போரிட்டார்கள் என்றால் தாக்க வந்தவர்கள் ஆயுதங்களுக்குப் பதிலாக செல்வங்களை அள்ளி வந்தார்களா? புதிதாக ஏற்படுத்திய அரசைக் காப்பதற்கு தேவைப்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும், தன்னை நம்பி வந்தவர்களை தொடர்ந்து தக்க வைக்கவும் அவர்களுக்கு பொருளாதார வளத்தை ஏற்படுத்தவுமே முகம்மது போர்களை நடத்தினாரேயன்றி மதக் கொள்கைகளை பரப்புவதற்காக அல்ல. அந்த வகையில் முகம்மது ஆன்மீகவாதியாக அல்ல அரசியல்வாதியாகவே திகழ்ந்திருக்கிறார். இதில் ஐயம் ஒன்றுமில்லை.