சனி, 1 டிசம்பர், 2012

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்



எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு



கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா? அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா? இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி விட்டார். இதற்கிடையில் நிரூபிக்க முடியுமா என்று சவடால் வேறு. பாவம் என்ன செய்வார், அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி மறுத்து எழுத வேண்டும் என்பது, அதேநேரம் எதை மறுப்பது எப்படி மறுப்பது என்பதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போலும். ஐயன்மீர், முதலில் கட்டுரையை படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். எது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது? எது மறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது? என்பதை அறிந்து எதை எப்படி மறுப்பது என்பதை ஆய்ந்தறிந்து அதன் பின்பு மறுப்பை கூறுங்கள்.

அந்த வசனத்தில் எதை அறிவியல் என்று கூறுகிறார்களோ அது உவமையாக கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி அல்லது தூண்களின்றி வானம் படைக்கப் பட்டிருக்கின்றது. குரானில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமை பொருத்தமானதில்லை. எனவே. அது புவியீர்ப்பை குறிக்காது என்பது என்னுடைய வாதம். எந்த விதத்தில் அந்த உவமை பொருத்தமானதில்லை? புவியீர்ப்பு விசை என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறதோ அந்த தன்மைகளை உவமையும் கொண்டிருந்தால் தான் அது பொருத்தமான உவமையாகும். புவியீர்ப்பு விசையின் தன்மை என்ன? புவியின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொருட்களைத் தன்வசம் ஈர்க்கிறது. இந்த இரண்டு தன்மைகளையும் அந்த உவமை எதிரொலிக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதில். ஒரு கட்டிடத்தின் தளங்களை தூண் தாங்கிப் பிடித்தால் அது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஓரிரு இடங்களில் இருந்தால் போதும். ஒரு தூண் ஒருபோதும் பொருட்களை தன் வசம் ஈர்க்காது. எனவே அது பொருத்தமானதில்லை, ஆகவே அது புவியீர்ப்பு விசையை குறிக்காது என்று விளக்கினால், நமக்கு மண்ணாங்கட்டி பாடம் எடுக்கிறார் நண்பர். நானும் அதே மண்ணாங்கட்டியை எடுத்துக் கொள்கிறேன்.

இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம், என்றால் என்ன தன்மையில் அந்த உவமையைக் கூறுவோம்? இஹ்சாஸ் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவராக இருக்கிறார் அதுபோல மண்ணாங்கட்டியும் புரிந்து கொள்ளாது. எனவே, இஹ்சாஸின் புரிந்து கொள்ளாத தன்மை மண்ணாங்கட்டியிலும் இருப்பதால் மண்ணாங்கட்டியை அவருக்கு உவமையாக கூறுவோம். இது பொருத்தமான உவமை. இஃதன்றி, இஹ்சாஸ் சட்டை அணியாமல் நிற்கிறார், மண்ணாங்கட்டியும் சட்டை அணியாது எனவே அவர் மண்ணாங்கட்டி என்று யாரேனும் உவமை கூறுவார்களா? அப்படிக் கூறினால் அது பொருந்தாத உவமை. ஆனால் குரானின் தூண் விவகாரத்தில் எத்தன்மைக்கு உவமை கூறப்பட்டுள்ளதோ அத்தன்மைக்கே பொருந்தவில்லை என்று தான் நான் கூறியிருக்கிறேன். தந்தை ஒரு குடும்பத்துக்கு தூணாக இருக்கிறார் என்றால் அந்த தன்மைக்கு மட்டும் தானே உதாரணமும் உவமையும். சட்டை போடவில்லை, கைலி உடுத்தவில்லை என்று பொருத்தமற்று கூறிக் கொண்டிருப்பது யார்? பதில் கூற வக்கற்றிருந்தால் அதற்காக திசை திருப்பக் கூடாது.

இன்னொரு கோணத்திலும் அந்த வசனத்தைப் பார்க்கலாம். ஈர்ப்பு விசை என்பது கோளோடு தொடர்புடையது. புவியீர்ப்பு விசை என்றால் அது புவியோடு தொடர்புடையது. இதில் வானம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்பதற்குத்தான் பார்க்கின்ற தூண்களின்றி என்ற பதில் வருகிறது. அதாவது இந்த உவமையின் உண்மை வானம் பார்க்கின்ற தூண்களால் அல்லாது பார்க்க முடியாத தூண்களால் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. தெளிவாகச் சொன்னால் அவ்வாறான தூண்கள் இல்லாது போனால் வானம் விழுந்துவிடும் என்பது தான் அதில் உட்பொதிந்திருப்பது. இதில் புவியீர்ப்பு எங்கிருந்து வந்தது? இதில் அறிவியல் இருக்கிறதா? குறைந்தபட்சம் அவியலாவது இருக்கிறதா? இதைத்தான் புனைவாக குறிப்பிட்டிருந்தேன். இதை நிரூபிக்க முடியுமா? என்று சவடால் விட்ட இஹ்சாஸ், நேர்மையானவராக இருந்திருந்தால் அதில் என்ன அறிவியல் இருக்கிறது என்பதையல்லவா வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு மொழிபெயர்ப்பில் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ படைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. பிரிதொன்றிலோ ‘வானம் தூண்களின்றி படைக்கப்பட்டிருக்கிறது அதை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது மட்டுமா? குரானுக்கு உரையெழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தூண்களின்றி படைக்கப் பட்டிருப்பதாகவே மொழி பெயர்த்திருக்கிறார்கள். என்றால் அதை பார்க்கின்ற தூண்களின்றி என உருமாற்றி புவியீர்ப்பு விசையோடு திருமணம் செய்வித்தது யார்? எதற்காக? வேறொன்றுமில்லை இக்கால அறிவியல் உண்மைகளையெல்லாம் முகம்மது ஆறாம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டாராக்கும் என்று அப்பாவி மக்களை ஏய்த்து மதவாத ஜல்லியடிப்பதற்குத் தானேயன்றி வேறெதற்காகவும் இல்லை.

அதுசரி, நண்பர் கூறுவதை பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம், நான் தெளிவாக இப்படி எழுதியிருக்கிறேன், \\\தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது?/// என்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறேன். பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தும் இதற்கான பதில் இல்லையே ஏன்? இது தான் மதவாதம் என்பது, எதையும் பரிசீலித்துப் பார்ப்பதில்லை. சாதகமான இடங்களில் சவடால் அடிப்பது, பாதகமான இடங்களில் கள்ள மௌனம் சாதிப்பது. இதைத்தானே தொடக்கத்திலிருந்து பார்த்து வருகிறோம்.

அடுத்து குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும் என்று குரான் வசனம் கூறுவதன் பொருள் என்ன? இதில் குறிப்பிட்ட காலம் வரை என்பது கோள்களின் இயக்கம்; அதாவது பூமியோ சந்திரனோ மட்டுமல்லாது சூரியனும் விரைந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கோள்களும் விண்மீன்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன, விரைந்து கொண்டிருக்கின்றன எனும் அறிவியல் உண்மையை அந்த வசனம் கூறுவதாக கதையடிக்கிறார்கள். இதை மறுத்து குரான் வசனங்களில் அறிவியல் இருப்பதாக ஜம்பமடிப்பதற்கு மதவாதிகள் என்ன உத்தியை பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக சில குறிப்புகளைக் கூறியிருந்தேன். பூமி தட்டை என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் குரான் உருண்டை என்றது என்பார்கள். ஆனால், உண்மையில் குரான் தயாரிக்கப் பட்டுக் கொண்டிருந்த போது பூமி உருண்டை எனும் புரிதல் மக்களுக்கு இருந்தது என்பது மட்டுமல்லாமல் குரான் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறவும் இல்லை. அது போலவே கோள்கள் விண்மீன்களின் இயக்கம் குறித்து இந்த வசனம் கூறவும் இல்லை; அதேநேரம் குரானுக்கு வெகு காலத்துக்கு முன்பே கோள்களின் இயக்கம் குறித்த அறிவு மனிதனுக்கு இருக்கவும் செய்தது. இதைக் குறிப்பிட்டு விட்டுத் தான் \\\எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// என்று முத்தாய்ப்பாகவும் கூறியிருந்தேன். இவை எதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாத நண்பர் மறுப்பு கூற வேண்டுமே என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கிறார். ஒருவேளை இவைகளையெல்லாம் படித்து நண்பருக்கு ரோசம் வந்து, மெய்யாகவெ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்பதை நிரூபித்தால் அதன் பின்னர் நான் விளாக்கங்களுடன் வருகிறேன்.

அடுத்து நான் மப்பில் உளறுவதாக நண்பர் எழுதியிருந்தார். எழுதுவதற்கு ஒன்றுமில்லாத போது, பதில் கூற முடியாத போது அவதூறு பொழிவது மதவாதிகளின் வழக்கம். அதை தவறாமல் பின்பற்றியிருக்கிறார் இஹ்சாஸ். ஆனால் மெய்யாகவே மப்படித்தது போல் இஹ்சாஸ் உளறிக் கொட்டியிருக்கிறார், அவைகளைப் பார்க்கலாமா? 1. \\\இவர்களுக்கும் அரேபியாவில் வாழ்ந்த முகம்மது நபிக்கும் என்ன தொடர்பு/// அப்படி ஏதேனும் தொடர்பு இருப்பதாக நான் எங்கேனும் கூறியிருக்கிறேனா? அறிவியலுக்கும் முகம்மதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் கூறியதில்  அறிவியலும் இல்லை. இதைத்தான் நான் தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். 2. \\\இவர்கள் ஏற்கனவே கூறியிருந்தால் ஏன் கொப்பர்னிகஸ் போன்றோர் கூறும்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்?/// கோப்பர்நிகஸ் சூரியக் குடும்பத்தின் மையத்தை பூமியிலிருந்து சூரியனுக்கு நகர்த்தியதால் விமர்சிக்கப்பட்டார்.

அடுத்து, குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதன் பொருள் என்பதாக மதவாதிகள் கூறுவதென்ன? இப்பேரண்டத்தின் அனைத்து பருப் பொருட்களும் விரைந்து கொண்டிருக்கின்றன என்பது அண்மை கண்டுபிடிப்பு. இதைத்தான் இந்த வசனம் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் இந்த வசனம் கூறுவதென்ன? குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் அதன் பிறகு செல்லாது என்றால் அது குறிப்பிடுவது அறிவியலை அல்ல மதக் கற்பனையை. இதைத்தான் நான் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன், \\\நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// இது எப்படி அறிவியல் கண்டுபிடிப்போடு தொடர்பு படுத்தப்படுகிறது என்றால் எந்த விளக்கமும் கிடைக்காது, ஆனாலும் மதவாதிகளுக்கு அது அறிவியல் அவ்வளவு தான்.

அடுத்து சூரியன் அதற்குறிய இடத்தை நோக்கிச் செல்கிறது என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மதவாதிகள் புனையும் அறிவியலை புஹாரி 3199 வெடி வைத்து தகர்க்கிறது. அதனால் தான் நண்பர் மெதுவாக அது ஏற்கமுடியாத ஹதீஸ் என்று நூல்விட்டுப் பார்க்கிறார். அது ஏற்க முடியாதது என்பதற்கு அவர் கூறும் காரணம், அது குரான் கூறும் ஒரு தகவலோடு முரண்படுவது என்கிறார். அதாவது அர்ஷ் பூமி, சூரியனுக்கு மேலே இருப்பதாக குரான் குறிப்பிடுகிறதாம், இந்த ஹதீஸில் கீழே இருப்பதாக பொருள் வருகிறதாம். இது முரண்பாடு என்பதால் செல்லாது என்று தீர்ப்புக் கூறுகிறார். எந்த அடிப்படையில் அர்ஷ் கீழே இருப்பதாக பொருள் வருகிறது? விளக்க முடியுமா நண்பரால்?

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்



இஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள். இந்தச் சட்டங்களை மனிதர்களுக்காக இயற்றித் தந்தது அல்லா தான். மனிதர்களில் எவருக்கும் சட்டங்கள் இயற்றும் தகுதி இல்லை மட்டுமல்லாது அவைகளை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எந்த மனிதருக்கும் அறுகதை இல்லை. இதை குரான் வசனங்கள் 5:48; 5:50 தெளிவுபடுத்துகிறது,

.. .. .. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் அவர்களின் மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். .. .. ..

அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?

ஆக சட்டம் என்றால் அது முக்காலமும் உணர்ந்த, எல்லாவித ஆற்றல்களையும் தன்னில் அடக்கிக் கொண்டிருக்கிற அல்லாவால் மனிதர்களின் நல்வாழ்வுக்காக கொடுக்கப்பட்டது என்பதே பொருள். அதனால் தான் இஸ்லாமியர்கள் நடப்பிலிருக்கும் சட்டங்களை அவைகள் மனிதச் சட்டங்கள் எனும் போக்கில் அணுகுகிறார்கள். ஆனால் சட்டம் என்றால் என்ன? வரலாற்று அடிப்படையில் சட்டம் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?

மனிதர்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், ஒழுக்கமான, குறைகளற்ற வாழ்வை வாழ்வதற்கு தேவையான ஒழுங்கு நெறிகளைக் கொண்டது தான் சட்டம் என்று பெரும்பாலானோர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் மனிதன் ஓரளவுக்கு சமூகமாக வாழத் தொடங்கியது முதல் இன்று வரை சட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. என்றால் மனிதர்களிடையே பிணக்குகள் தீர்ந்து மகிழ்வான வாழ்வு வாய்க்கப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? உலகம் அவ்வாறு இல்லை என்பது தானே யதார்த்தமாக இருக்கிறது. இதற்கு இஸ்லாமிய மதவாதிகள் ஒரு விளக்கம் கூறக் கூடும், அவைகளெல்லாம் மனிதச் சட்டங்கள் இறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அவ்வாறான நிலை உருவாகிவிடும் என்று. ஆனால் இஸ்லாம் தோன்றிய காலம் முதல் அதாவது கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக சௌதி அரேபியாவில் (இஸ்லாம் எனும் மதம் தோன்றிய இடம்) இறைச் சட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. அங்கே நிலமை என்ன?

மனிதகுல வரலாற்றில் சட்டங்களின் பங்களிப்பு எப்போது தொடங்கியது? மனிதர்களிடையே வர்க்க பேதம் ஏற்பட்டு அவர்களிடையே மோதலும் ‘அரசு’ எனும் அமைப்பும் தோன்றிய பிறகே சடங்கள் தோன்றின. சட்டங்களின் பணி வர்க்க ஆட்சிக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் கிளர்ந்து விடாமல் அடக்குவதும், ஆட்சியை தக்கவைப்பதுமே. அதேநேரம் சட்டம் அனைவருக்குமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் பிரேமைகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டங்களின் நோக்கம் அனைவருக்கும் சமநீதியும், நியாயமும் வழங்குவது என்றால் அதன் விளைவுகள் சமூகத்தில் நிலவியிருக்க வேண்டும், சட்டத்தின் தேவை தீர்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் இன்னும் சட்டத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது என்றால், அதன் பொருள் சட்டங்களின் தேவை என்று மக்கள் எதை கருதுகிறார்களோ அதுவாக இல்லாமல் சட்டத்தின் உட்கிடை வேறாக இருக்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா? மட்டுமல்லாது, சமூகம் இன்னமும் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே சட்டத்தின் பயன் வர்க்க ஒடுக்குமுறை தானேயன்றி, சமநீதியல்ல என்பது புலனாகும். ஆனால் முக்காலமும் உணர்ந்தவராக, முக்காலத்தையும் உருவாக்குபவராக கூறப்படும் அல்லா சட்டத்தின் இந்த தன்மைகள் எதனையும் உணராது, அனைத்து மக்களுக்கும் பொது வானது, எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியது என்று கூறுவது பொருத்தமானதா? அல்லது முகம்மது தன்னுடைய வர்க்க நலன் பேணும் அரசை உருவாக்குவதற்காக சொல்லிய புனைவுகளா?

இப்போது திருமணம் செய்வது குறித்த சட்டங்களைப் பார்ப்போம். குரான் வசனம் 4:3 இப்படிக் கூறுகிறது,

அநாதைகளிடம் நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் வலக்கரங்களுக்கு சொந்தமானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அநியாயம் செய்யப்படாமலிப்பதற்குச் சுலபமான வழிமுறையாகும்.

இந்த வசனம் ஒரு ஆண் யாரை எப்படி திருமணம் செய்யலாம் என்பதைப் போதிக்கிறது. நான்கு பெண்கள் வரை ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கும் சட்டம் இது. மட்டுமல்லாது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களை திருமணத்திற்கு வெளியே பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்கிறது. வெளிப்படையான அடிமை முறை நடைமுறையில் இருந்தது இஸ்லாம் தோன்றி வளர்ந்த காலகட்டத்தில் தான். அதனால் தான் குரான் பல வசனங்களில் ஒரு மனிதனும்  அடிமையும் சமமல்ல என்று கூறியிருக்கிறது.

முதலில், இது எக்காலத்திற்கும் பொருந்தும் சட்டமா? இப்போது வெளிப்படையான அடிமைகள் என்று யாருமில்லை. ஆனால் அல்லாவுக்கும் குரானுக்கும் இஸ்லாமியர்கள் கொடுக்கும் தகுதியின்படி பார்த்தால் வெளிப்படையான அடிமைகள் இல்லாத இன்றைய நிலை குறித்து அல்லா அன்று அறிந்திருக்கவில்லை. அல்லது, இது அன்றைய நிலையை மட்டுமே குறிக்கும் வசனம் என்றால் இன்றைக்கு பொருந்தாது. இரண்டில் எது சரி?

நான்கு திருமணம் வரை செய்து கொள்ள ஆண்களுக்கு ஏன் அனுமதி தந்திருக்கிறது என்றால் ஆணின் இச்சை தீர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்பதே. ஆணின் இந்த பலதார வேட்கையே இங்கு பொது விதியாக்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் இது ஆணின் நீதி தானே தவிர பெண்ணின் நீதியல்ல.

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்வதற்கு ஆணுக்கு என்ன தகுதிகள் வேண்டும்? நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது குரான். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் புரிந்தால் முதல் மனைவிக்கு கொடுத்திருக்கும் அத்தனை வசதிகளையும் இரண்டாவது மூன்றாவது நான்காவது மனைவிகளுக்கும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க முடியாது போனால் அது அநீதி. இது தான் குரானின் நீதி. வெளிப்படையாகச் சொன்னால் காசு இருந்தால் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள். காசு இல்லாவிட்டால் .. .. ? ‘பட்டினி கிடந்து உன் இச்சையை குறைத்துக் கொள்’ என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இது பணக்காரனுக்கான நீதியா? ஏழைக்கான நீதியா?

எக்காலத்துக்கும் பொருந்தும் இறைவனின் நீதி என எம்பிக் குதிக்கும் மதவாதிகள், இப்படி பச்சையாக காசு உள்ளவனுக்கு ஒரு நீதி அது இல்லாதவனுக்கு ஒரு நீதி என்று பிரித்து பேதம் காட்டும் இந்த ஆண்டைகளின் நீதியைத் தான் எல்லோருக்கும் பொது நீதி என்று சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.