ஆரம்பத்தை நோக்கி: பகுதி 21
(Answering Islam.com இணைதளத்தின் கட்டுரையைத் தழுவியது)
ஈஸா நபி (இயேசு) பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்துவந்தார் என்று குர்ஆன் சொல்கிறது.
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறினார்.
(குர்ஆன் 19:23)
(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினான்.
(குர்ஆன் 19:24)
“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
(குர்ஆன் 19:25)
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
(குர்ஆன் 19:26)
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
(குர்ஆன் 19:30)
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
(குர்ஆன் 19:31)
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
(குர்ஆன் 19:32)
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
(குர்ஆன் 19:33)
ஈஸா நபி தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லாஹ் தன்னை தன் அளவில் உயர்த்திக் கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்து வந்தார். குர் ஆனின்படி ஈஸா நபி கொண்டுவந்த இஞ்ஜில் (பைபிள்) என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த நபிமார்கள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. ஈஸா நபி அல்லாஹ்வின் நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்’ என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
(குர்ஆன் 42:13)
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
(குர்ஆன் 43:59)
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் – ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
(குர்ஆன் 43:63)
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
(குர்ஆன் 43:64)
ஆக, ஈஸா நபி தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாஹ்விடம் எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் யூத மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டு போகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப் பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
ஈஸா நபி தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு அல்லது கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் குர் ஆன், ஈஸா நபியைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது :
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
(குர்ஆன் 3:52)
“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
(குர்ஆன் 5:111)
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.
(குர்ஆன் 57:26)
ஈஸா நபி, “லாஹிலாஹா இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலில்லாஹி” என்ற கலீமாவையே போதித்தர், என்று முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்தக் கலீமா ஆதமை படைப்பதற்கு முன்பே உள்ளதாகும், அல்லாஹ்வின் அர்ஷில் எழுதப்பட்டிருந்த இந்த கலீமாவின் உதவியின் காரணமாகவே ஆதம் மன்னிக்கப்பட்டார் என்பதை முன்பு நான் கூறியிருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவும். பர்னபாஸ் சுவிசேஷத்தின் 39-ம் அதிகாரத்தில் ஒளிரும் பிரகாசமான எழுத்துக்களைக் ஆதம் கண்டதாக கூறுகிறது. அதன் உட்பொருள் இன்று முஸ்லீம்களால் கூறப்படும் கலீமாவைத் தவிரவேறில்லை. ஈஸா நபி தினமும் ஐவேளை தொழுததாகவும் பர்னபாஸ் சுவிசேஷம் கூறுகிறது.
ஆகவே, ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை ஏற்றுக் கொண்ட முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அல்லாஹ், அவர்களுக்கு செய்த உதவியால் வெற்றியாளர்களாய் ஆகிவிட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது.
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியது போல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
(குர்ஆன் 61:14)
இந்த வசனத்தின்படி “ஈஸா நபியின் சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. ஈஸா நபியின் போதனைகளை ஏற்றுக் கொண்டு “வெற்றியாளர்கள் ஆகிவிட்ட” இந்த முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?
ஈஸா நபியின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக் கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இப்படிப்பட்ட முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை?
வாதத்திற்காக, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், ஈஸா நபியை கடவுளாக்கிய கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் முஸ்லீம்கள் கூறலாம்.
அல்லாஹ்வால் “வெற்றியாளர்கள்” என்று அறிவிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை எவ்வித சிறு ஆதாரமுமின்றி அழிக்கமுடியுமா?
எந்த ஒரு நம்பிக்கையையோ, சமுதாயத்தையோ அவ்வாறு அழிக்கமுடியாது. உதாரணத்திற்கு, ஸ்பெயின் நாட்டிலிருந்து இஸ்லாம் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். அன்றைய ஸ்பெயின் ஆட்சியாளர்கள், முஸ்லீம்களை அதிகாரத்தையும், அடக்குமுறைகளைக் கொண்டும் கிருஸ்துவமதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்தனர். ஸ்பெயினிலிருந்து இஸ்லாமின் சுவடுகளை முற்றிலும் அகற்ற முடியவில்லையே?
முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்ட “தீன்இலாஹி” என்ற மதம் அவருக்குப்பின் ஒருவராலும் பின்பற்றப்படவில்லை. அக்பரின் வாரிசுகள் கூட அவரது புதிய மதத்தை ஏற்கவில்லை. அக்பரின் மரணத்திற்குப் பிறகு “தீன்இலாஹி” முற்றிலும் அழிந்தது. ஆயினும் “தீன்இலாஹி” பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், ஆதாரங்கள் இன்றும் உள்ளது. மிக மிக பலவீனமான, அக்பரின் கற்பனையில் உருவான மதம் “தீன்இலாஹி”யின் குறிப்புகள் இருக்கையில், அல்லாஹ்வினால் அற்புதங்களுடன் அனுப்பப்பட்ட ஈஸா நபியின் போதனைகளின் அடிப்படை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது, முட்டாள்த்தனத்தின் உச்சம்…! ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை கிருஸ்துவர்கள் அழித்ததாகவோ, அல்லது அழிக்க முயற்சி செய்ததாகவோ எவ்விதமான வரலாற்று குறிப்புகளும் இல்லை. இது முஹம்மது நபியின் வெற்று வார்த்தைகளைத் தவிர வேறில்லை…!
எனவே, கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாக கூறுவது, அர்த்தமற்றது. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும் ஒரு “முஸ்லீம்-கிறிஸ்தவன்” இருந்ததாக ஒரு தகவலும் இல்லை.
ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது “இயேசுவின் மரணம்” பற்றிய விவரம் அந்த காலத்து சமுதாயத்தினருக்கு தெரிந்த விவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர். இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்து கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு : அப்போஸ்தர் பேதுரு “ரோம பேராயராக” நியமித்த “ரோம் கிளமண்ட் (Clement of Rome)” என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய “இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்” பற்றி பலமுறை எழுதியுள்ளார். அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப் (Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார். இன்னும் பல “கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள் (Non-Christian Writings)” இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் “ஜோசபாஸ் (Josephus)” மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ் (Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சி செய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார். ஒரு கிரேக்க நகைச்சுவை (Satirist) எழுத்தாளர் “Lucian of Samosata” என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், “இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும் அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார்”. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது.
இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?
ஈஸா நபியின் போதனைகள் என்ன ஆனது?
இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல “கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் போதனையை மாற்றி விட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் ஈஸா நபியின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்து விட்டார்கள்” என்று பதில் சொல்ல முடியாது.
ஈஸா நபிக்கு என்ன நடந்தது என்று குர் ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.
குர்ஆனின் கூற்றுப்படி, ஈஸா நபி சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக கொள்ளலாம். இருந்தாலும், ஈஸா நபி வானத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு ஏன் “ஒரு முஸ்லீம் கூட” இல்லை? அவர்களது நம்பிக்கை என்ன ஆனது ? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், ஈஸா நபியை பின்பற்றிய எல்லாரும் “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார் என்றும் அவர் மறுபடியும் உயிரோடு எழுந்தார்” என்றும் நம்பினார்.
ஈஸா நபியைப் பின்பற்றியவர்களுக்கு, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார் ” என்ற நிகழ்ச்சியை உருவாக்கியது யார்? குர்ஆனின் கூற்றுப்படி, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற எண்ணத்தை மனிதர்களிடையே உருவாக்கியதே அல்லாஹ் தான்.
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்று விட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(குர்ஆன் 4:157)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(குர்ஆன் 4:158)
குர்ஆனின் இந்த வாதத்திற்கு வேறு ஆதாரம் ?
இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் என்பவரின் பெயரில் எழுதப்பட்ட சுவிசேஷம் கூறும் செய்திகள் அவர் வானத்துக்கு உயர்த்தப்ட்டார் என்றும் அவருக்கு வேறொருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றும் குறிப்பிடும் குர்ஆனின் செய்தியைக் கூறுகிறது.
பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)
இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவை பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்கு கட்டளையிட்டார். தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக்கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்கு பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!”
இப்படிக் கூறிக்கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவி கொடுத்து, பதினொன்று பேரும் காப்பாற்றப்பட்டார்கள்.
படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்படவேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”
(The Gospel of Barnabas: Translated by Lonsdale and Laura Ragg, Chapter 215,217)
“The Gospel of Barnabas”-பர்னபாஸ் என்ற சீடரால் எழுதப்பட்டதல்ல. இது மிக பலவீனமான ஆதாரமாகும். இந்த சுவிசேஷம் கிபி 1585 ல் எழுதப்பட்டதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. பர்னபாஸ் சுவிசேஷம் இட்டுக்கட்டி எழுப்பட்ட புத்தகமென்பதற்கு ஏராளமான ஆதரங்கள் இருக்கின்றன. பர்னபாஸ் எழுதிய கடிதங்கள் இந்த சுவிசேஷத்திற்கு எதிரான செய்திகளைக் கூறுகிறது. இருப்பினும், குர்ஆன் கூறும் ஆள்மாறாட்டம் எவ்வாறு நிகழ்ததென்பதைக் அறிந்து கொள்வதற்காகவே இதையும் முன்வைக்கிறேன். )
அல்லாஹ்வால் நிகழ்தப்பட்ட ஆள்மாற்றத்தை, ஈஸா நபியின் (இயேசுவின்) தாயாரான மரியம் அவர்களாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரும் தன்மகன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவே நம்பினர். அல்லாஹ்வால், ஈஸா நபி வானிற்கு உயர்த்தப்பட்டதாகக் கொண்டு நாம் விவாத்தைத் தொடர்வோம்.
அதாவது, மனித உடலுடன் அவர் இரண்டாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டார். இது ஒருமுரண்பாடான செய்தியாகும். எந்த வகையான சொர்க்கத்தைப் (வானம்) பற்றி முஹம்மது நபி கூறுகிறார் என்பது புரியவில்லை. சொர்க்கம் என்பது ஆன்மாக்கள் வாழும் பகுதியாக இருந்தால், ஈஸா நபி மனித உடலுடன் அங்கு எப்படி வாழ முடியும்? ஈஸா நபி, உணவு, உடை, இயற்கைத் தேவைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சராசரி மனிதர். பூமியை போன்ற ஒரு இடத்தில்தான் அவரது உடலால் வாழ முடியும். எனவே முஹம்மது நபிகூறும் சொர்க்கம் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த உலகமாகவே தோன்றுகிறது. இதன் அடிப்படையில் நோக்கினால், ஈஸா நபி மட்டுமே மிக நீண்ட காலமாக, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதராவர். அப்படியானால் அல்லாஹ்வும் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த பகுதியில்தான் தனது இருக்கையை (அர்ஷ்) அமைத்து அமர்ந்து கொண்டிருக்கிறானா?.
ஈஸா நபியை எதற்காக தன்அளவில் (வானத்திற்கு) உயர்த்திக் கொண்டான்?
ஈஸா நபியை, தீய யூதர்கள் மற்றும் ரோம ஆட்சியாளர்களின் கைகளிலிருந்து காப்பாற்றுவதே மைய நோக்கமென்றால், தனது நேசத்திற்குரிய ஒரு நபியை அநியாயமாகக் கொடூரமான முறையில் கொல்லத் துணிந்தவர்களின் மனதை மாற்றியிருக்கலாம், அல்லது மற்றவர்களையும் எச்சரிக்கும் முறையில் அவர்களை தண்டிக்கலாம் அல்லது யூத மற்றும் ரோம ஆட்சியார்களை ஏமாற்றாமல், ஈஸா நபியை அப்படியே எல்லாருக்கும் முன்பாக எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் தன் அளவில் உயர்த்திக் கொள்ளலாம். மனிதர்கள் தங்களது இயலாமையின் காரணமாக எதிராளியை ஏமாற்றி தங்களது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக செய்யும் ஆள்மாறாட்ட வித்தையை சர்வவல்லமையுடைய அல்லாஹ்வும் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
அல்லாஹ் “ஈஸா நபியை பாதுகாப்பாக” தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்து விட்டானே. ஆள்மாறாட்டம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
நள்ளிரவில் மிக ரகசியமாகச் செய்யப்பட்ட இந்த ஆள்மாறாட்டத்தின் நோக்கம், ஈஸா நபியின் எதிரிகள் ” ஈஸா நபியை சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம்” என்று நம்பி ஏமாற வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. (இயேசுவின் தாயார் உட்பட ஒருவருமே அறியாத, அல்லாஹ்வால் ரகசியமாகச் செய்யப்பட்ட ஆள்மாறட்ட நிகழ்ச்சியை பர்னபாஸ் மட்டும் எப்படி அறிந்து கொண்டார்?) சர்வ வல்லமையுடையவனாகிய அல்லாஹ்விற்கு, ஆள்மாறாட்டம் செய்துதான் தன்னுடைய தூதரைக் காப்பாற்ற முடியுமா? அப்படி ஒரு கட்டாயம் என்ன?
அல்லாஹ்வின் திட்டப்படி வானவர்களால், ஈஸா நபி காப்பாற்றி அழைத்துச் செல்லப்படுவதை யூத ரோமானியப் படைவீரர்கள் அறிந்து, வானவர்களை வழிமறித்து ஈஸா நபியை திரும்பவும் பூமிக்கு கொண்டுவந்து சிலுவையில் அடித்து கொன்று விடுவார்களோ என்று அல்லாஹ் அஞ்சியிருக்க வேண்டும். எனவே படையாட்களின் கவனத்தை முற்றிலும் திசைதிருப்பி ஏமாற்றி ஈஸா நபியைக் காப்ற்றியிருக்கிறான் என்ற காரணத்தைத்தவிர வேறு எதுவுமில்லை.
குர்ஆனின் கூற்றில் மறைந்துள்ள முட்டாள்தனத்தை உங்களால் அறிய முடிகிறதா?
எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் ஈஸா நபியைத் தன் அளவில் உயர்த்தி எடுத்துக் கொண்டிருந்தால், இப்படி பல மக்களை ஏமாற வேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாஹ்வின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று குர்ஆன் நம்மை நம்பச் சொல்கிறது.
ஈஸா நபியை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், ஈஸா நபியின் சீடர்கள் உட்பட அனைவரும் அல்லாஹவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளலாம்.