செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 3




ஆண்டான் அடிமை காலகட்டத்தில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த, பல அடிமைகளை உடமையாய் வைத்திருந்த ஓர் உயர் குல வணிகர், தம் வணிகர் குல மேலாதிக்கத்திற்காக உருவாக்கிய ஓர் அரசின் சட்டதிட்டங்கள் அடிமைமுறையை நீக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது என்பது இயல்பாகவே முரண்பாடுடையது. மட்டுமல்லாது நகைப்பிற்கும் இடமானது. இஸ்லாமே அடிமை முறையை ஒழித்தது எனும் மதவாதிகளின் புழகத்தை ஒதுக்கி வைத்து விட்டு அடிமைகள் குறித்து இஸ்லாம் என்ன கருத்து கொண்டிருந்தது என்பதை பார்க்கலாம்.

அடிமைகளும் அவர்களின் எஜமானர்களும் – அவர்களும் மனிதர்கள் தாம் என்றபோதிலும் – ஒருபோதும் சமமாக மாட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.

.. .. .. பிரிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவும் பொருளும் கொடுத்திருக்கின்றோம், அவனும் அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறான். இருவரும் சமமாவாரா? .. .. .. குரான் 16:75

.. .. .. உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் எவரையும் நாம் உங்களுக்கு அளித்திருப்பதில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப் போல் அவர்களை பயப்படுகிறீர்களா? .. .. .. குரான் 30:28

இஸ்லாமியர்கள் அனைவரும் சகோதரரகள் என்று இன்றைய மதவாதிகள் ஓதித் திரிவதை மேற்கண்ட வசனங்களுடன் ஒப்பு நோக்குங்கள். முஸ்லீமாக இருந்தாலும் இல்லா விட்டாலும் அடிமையும் சுதந்திரமானவனும் சமமாக மாட்டார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் தெளிவாக எடுத்து வைக்கின்றன. முதல் வசனம் பொருளாதார ரீதியாக அடிமைக்கும் சுதந்திரமானவனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை விவரிக்கிறது. இதில் இன்னொரு தொனியும் இருக்கிறது. அல்லா கொடுத்திருப்பதனாலேயே ஒருவன் ஆண்டையாக இருக்கிறான் என்பதையும் அழுத்திச் சொல்கிறது. இரண்டாவது வசனமோ, பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அடிமையும் ஆண்டையும் ஒன்றல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. 

இன்னொன்றையும் இதில் கவனிக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு வசனங்களும் நேரடியாக கூறப்பட்டவைகள் அல்ல.  இஸ்லாத்தில் இணைந்தவர்களே நேர்வழி பெற்றவர்கள். இஸ்லாத்தில் இணைய மறுப்பவர்களான யூதர்களும் கிருஸ்தவர்களும் வழிகேட்டில் இருப்பவர்கள். நேர்வழி பெற்றவர்களும் வழிகேட்டில் இருப்பவர்களும் சமமாக முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு உதாரணமாய் கூறப்பட்ட வசனங்களே அவைகள். தன்னால் கூறப்படும் தத்துவத்தை பின்பற்றாதவர்கள் எங்களுக்கு சமமானவர்கள் அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்கு முகம்மதுக்கு உதாரணமாய் சிக்கியிருப்பதே அடிமைகளின் தகுதிக் குறைவுதான் என்றால்; அடிமைகள் குறித்தும், அடிமை முறை குறித்தும் முகம்மது கொண்டிருந்த உளவியல் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதையும் மேலதிக தகவலாக இந்த வசனங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் ஒன்று அடிமைகள் குறித்து இஸ்லாம் எவ்வளவு கண்ணியமான(!) கருத்து கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் பற்றி பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியவையாகும். அடிமையும் பண்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும். புஹாரி: 2203

அதாவது தோப்பு ஒன்றை ஒருவர் மற்றொருவருக்கு விற்பதாகக் கொள்வோம். அந்த நேரத்தில் அதிலுள்ள மரங்கள் பூக்கத் தொடங்கியிருக்குமேயானால் காய்க்கப் போகும் காய்கள் யாருக்கு உரியது என்பதை வியாபாரம் நடக்கும் போதே பேசிவிட வேண்டும். அப்படி பேசாத பொழுது, காய்க்கும் கனிகள் விற்றவருக்கே சொந்தமாகும். இதுபோலவே அடிமையும். விற்கும் போது ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லையென்றால் அந்த அடிமைக்குப் பிறக்கும் குழந்தைகள் விற்றவரிடம் அடிமையாகத் தொடர வேண்டும். இந்த உயரிய(!) சிந்தனை தான் மனித குலத்துக்கே முன்மாதிரியாக இருப்பவரின் சிந்தனை. அடிமையின் மகனும் அடிமையே என்பதை இன்னொரு ஹதீஸ் மிகத் துல்லியமாக விளக்குகிறது.

ஸம் ஆ என்பவருடைய அடிமைப் பெண்ணுக்கு பிறந்த மகன் எனக்குப் பிறந்தவன் எனவே நீ அவனைக் கைப்பற்றிக் கொள் என்று உத்பா என்பவர் தன்னுடைய மரண வேளையில் சகோதரனிடம் கூறுகிறார். அந்த சகோதரரும் அவ்வாறே கைப்பற்றிக் கொள்ள அவருக்கும் ஸம் ஆவுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த வழக்கு முகம்மதிடம் வருகிறது. முகம்மது அளிக்கும் தீர்ப்பு என்ன? உத்பா என்பவர் வேறொருவனின் அடிமையுடன் உடலுறவு கொண்டதால் அது விபச்சாரம் என்றும் யாருடைய ஆளுமைக்கு கீழே அந்த அடிமைப் பெண் இருக்கிறாளோ அந்த ஆண்டைக்கே மகன் அடிமைப்பட்டவன் என்றும் தீர்ப்பளிக்கிறார். இந்த ஹதீஸ் புஹாரி 2053 ல் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு விபச்சாரத்திற்கான தண்டனையும் அளிக்கப்படவில்லை. அடிமைக்கு குழந்தை பிறந்ததால் அவள் விடுவிக்கப்படவும் இல்லை. மாறாக, அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்பது உறுதி செய்யப்படுகிறது.



அடிமை குறித்த இன்னொரு குரான் வசனம் அடிமைகளை விலங்கினும் கீழான நிலைக்கு தள்ளுகிறது. குரான் வசனம் 2:178 இப்படிக் குறிப்பிடுகிறது

ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். .. .. ..

ஒருவன் தன்னுடைய அடிமையைக் கொண்றால் அதற்கு பழி வாங்கும் விதமாக கொன்றவனுடைய அடிமை ஒருவனைக் கொல் என்று பணிக்கிறது குரான். பெண்களும் இந்த வகையிலேயே வகைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதில் உள்ளாடி நிற்கும் பொருள் என்னவென்றால் ஆண்களுக்கு அடிமைகளும், பெண்களும், குழந்தைகளும் சொத்துகளே. உன் சொத்துகளை ஒருவன் சூரையாடினால் பதிலுக்கு அவனுடைய சொத்தை நீ சூரையாடு என்று சட்டம் போட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தில் தான் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது என்று சான்றிதழ் வேறு அளிக்கிறது குரான்.

குரான் பல இடங்களில் அடிமைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று தன்னுடைய வசனங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக்குகிறது. அடிமைகள் முறையாக திருமணம் செய்து குடும்ப பந்தத்தில் இணைந்திருந்தாலும் கூட அவர்களை ஆண்டைகள் தம் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட குரான் வசனங்கள், ஹதீஸ்கள் மூலம் நமக்கு தெரிவதென்ன? அன்றைய சமூகம் எந்தெந்த வகைகளிலெல்லாம் அடிமைகள் உழைப்பைச் சுரண்டி கொடூரங்கள் செய்ததோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் முகம்மதும் அவர் உருவாக்கிய சமூகமும் செயல்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் சில அடிமைகளின் மீது இரக்கம் மேலிட்டுச் செய்த சில செயல்களையும், ஆண்டைகளுக்கு தண்டனை தரும் வகையில் சொல்லப்பட்ட அடிமை விடுவிப்பையும் வைத்துக் கொண்டு இன்றைய மதவாத புரட்டல்காரர்கள் முகம்மதை அடிமைத்தளையை உடைத்த புரட்சி நாயகன் போல் சித்தரிக்கிறார்கள்.

ஆனால் அடிமை முறை என்பது என்ன? இன்றளவில் அது முழுமையாக நீங்கி விட்டதா? இல்லை. மனிதன் உழைப்பை மனிதன் உண்டு கொழுக்கும் சுரண்டலின் முதல் வடிவம் அடிமை முறை. பல்லாயிரம் ஆண்டு காலம் நீடித்த அந்த வடிவம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதேவேளை சுரண்டல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடிமை முறையிலிருந்து பண்ணையடிமையாக, அதிலிருந்து கூலி உழைப்பாளியாக வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன, சுரண்டல் மாறவில்லை. சோசலிசத்தின் வழியாக கம்யூனிசத்தை நோக்கி பயணிக்கும் போதே மனிதன் உழைப்பை மனிதன் சுரண்டுவது முற்றிலுமாக ஒழியும். இது தான் சமூகவியல் உண்மை. இயங்கியல் தேற்றம். இதை மதவாதிகள் புரிந்து கொள்ள அறிந்து கொள்ள முன்வர வேண்டும். மறுத்தால் காலம் கருணையற்று அவர்களுக்கு கற்பிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக