சனி, 5 மே, 2012

அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 1


இஸ்லாம் அனைவரையும் சகோதரர்களாகக் கருதுகிறது, இஸ்லாம் அடிமைத் தனத்தை ஒழித்தது, விடுதலையை தூண்டியது என்றெல்லாம் பலவாறாக பரப்புரை செய்து வருகிறார்கள் இஸ்லாமிய மதவாதிகள். ஆனால் இஸ்லாம் அடிமைத்தனத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இன்று ஒரு இஸ்லாமியன் ஒருவனை அடிமையாக வைத்திருந்து அவன் உழைப்பைத் திருடினாலோ, பெண்ணை அடிமையாக வைத்திருந்து பாலியல் ரீதியாக பயன்படுத்தினாலோ அதை இஸ்லாமிய அடிப்படையில் குற்றம் என்று கூற முடியாது. ஆனால், உலகின் எந்த நாட்டுச் சட்டமும் இவைகளை அனுமதிக்காது. இதை தெளிவாக புரிந்து கொண்டிருப்பதால் தான் இஸ்லாமிய மதவாதிகள், அடிமைகளை படிப்படியாக குறைத்து இல்லாமலாக்க திட்டமிட்டது, குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்ய உத்தரவிட்டது என்பது போல் பசப்புவார்களேயன்றி; ஒருபோதும் இஸ்லாம் அடிமைத்தனத்தை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதை தெளிவாகக் கூறமாட்டார்கள்.

தவிர்க்கவியலாமல் ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதை கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அன்றைய நிலையில் வேறு வழியில்லை என்று கதைகளையும் காரணங்களையும் அடுக்குவார்கள். 1. போர்களில் பிடித்து வரப்படும் கைதிகள் தான் அடிமைகள். அந்தக் காலத்தில் சிறைகள் இல்லை, அதனால் அடிமைகளை பகிர்ந்தளிப்பது தவிர்க்க முடியாயதது. 2. எல்லா நாடுகளிலும் அடிமை முறை இருந்ததால் ஒரு நாட்டில் மட்டும் அதை சட்டம் போட்டு தடுக்க முடியாது. 3. ஏற்கனவே அடிமை முறை நடப்பில் இருந்ததால் திடீரென தடுக்கும் போது அதிக அளவில் அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். இது போன்ற பல காரணங்களினால் இஸ்லாம் அடிமை முறையை அங்கீகரிக்கிறது என்று நீண்ட விளக்கமளிப்பார்கள். இனிவரும் மனித குலம் முழுமைக்கும் இது தான் குரான் அதில் எந்த திருத்தமும் தேவைப்படாது என புளகமடைபவர்கள், இன்று மனிதர்களால் ஒழிக்கப்பட்டுவிட்ட னேரடி அடிமை முறை, அல்லாவினால் ஒழிக்கப்பட முடியாமல் போன அடிமை முறை குறித்த வசனங்கள் இன்றும் குரானில் இருப்பது காலத்திற்கு பொருத்தமானதா? என்பதை நேர்மையான இஸ்லாமியர்கள் மட்டும் சிந்தித்துப் பார்க்கலாம்.

வரலாற்றில் அடிமைகள் எப்படி தோன்றினர்? உற்பத்தியில் உபரி தோன்றிய போது, அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் தோன்றிய போது, மக்கள் அடிமைப் படுத்தப்படுவதற்கான விதை ஊன்றப்பட்டது. புராதன பொதுவுடமைச் சமுதாயத்தில் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிப் போக்கினாலும், விவசாய உற்பத்தி முறை அறியப்பட்டதாலும் உற்பத்தியில் உபரி தோன்றியது. அரசு வடிவம் தோன்றாத ஆனால் இனக் குழுக்களின் ஏற்றத்தாழ்வில் உபரியைக் கைப்பற்றும் போட்டியில் அடிமைகள் தோன்றினர். அடிமைத்தனம் என்பது தனிப்பட்ட மனித ஒழுக்கத்தின் பாற்பட்டது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது விரிந்த பொருளுடையது. இன்று எப்படி மக்களின் சிந்தனை, பொழுது போக்கு, கலை, அனைத்தும் முதலாளித்துவ வடிவத்தில் இருக்கிறதோ அதுபோன்று அன்று சமூகமே ஆண்டான் அடிமை சமூகமாக இருந்தது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி ஒரு கட்டத்திற்கு மேல் உற்பத்தி உறவுகளால் கட்டுப்படுத்தப்பட்டு உற்பத்தி முடங்கும் போது அதை உடைத்துக் கிளம்புவது தான் சமூக மாற்றம், உற்பத்தி உறவுகளின் மாற்றம். இது தான் அறிவியல், இது தான் மார்க்சியம். ஆனால் இஸ்லாம் இதை தனி மனித ஒழுங்கு எனும் அளவில் தான் அணுகுகிறது. இஸ்லாம் பேசும் அடிமைத்தளைக்கான அங்கீகாரமும், விடுதலை என்று கூறுவதும் தனி மனித தீர்வுகளாகத்தான் இருக்கிறது. இந்த பேதத்தை புரிந்து கொள்ளாதவரை அறிவியலுக்கும் மதத்துக்குமான இடைவெளியை புரிந்து கொள்வது கடினம்.

எளிமையாக சொல்வதானால், ஒரு மனிதனின் உழைப்பை இன்னொரு மனிதன் சுரண்டும் முதல் வடிவம் அடிமைமுறை. இந்த அடிமைமுறை தனி மனித விருப்பத்தினால் ஏற்பட்டதல்ல, சமூகப் போக்கில் ஏற்பட்ட மாற்றம். ஆதிநாட்களில் எல்லோரும் உழைத்து, எல்லோரும் உண்டு, கிடைக்காவிடின் எல்லோரும் பட்டினி கிடந்த உற்பத்தி முறையிலிருந்து ஏற்பட்ட சமூக ரீதியிலான மாற்றம். அந்த அடிமை முறையின் தொடர்ச்சி இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மனிதனின் உழைப்பை இன்னொரு மனிதன் சுரண்டுவது இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சுரண்டலின் வடிவங்கள் மாறிவிட்டன. எந்த வடிவில் இருந்தாலும் சுரண்டல் அநீதியானது தான். எதிர்க்க வேண்டியது தான். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இதை தனி மனித தீர்வுகள் மூலம் செய்ய முடியுமா? என்பது தான்.

மதவாதிகளின் சமாளிப்புகளுக்கு திரும்புவோம். முதலில் அடிமை முறையை ஏன் முற்றாக ஒழிக்க முடியவில்லை என்பதற்கு இன்றைய மதவாதிகள் கூறும் காரணங்கள் அனைத்தும் அவர்களின் சொந்தக் கருத்துகளே, இஸ்லாமிய இறையியலில் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. அல்லாவும் அவனது தூதரும் கூறாத எதுவும் இஸ்லாத்துக்கு புறம்பானது தான் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு. அடிமை முறையை ஒழிப்பது அல்லது அடிமை முறை ஏற்கத் தகாதது என்று முகம்மது கூறவே இல்லை. அடிமை விடுதலை என்று முகம்மது கூறுவதெல்லாம் குற்றங்களுக்கான பரிகார நடவடிக்கைகளேயன்றி அடிமை முறை தவறு அது களையப்பட வேண்டியது எனும் நோக்கில் அல்ல. அதாவது அடிமை என்பது தனிப்பட்ட ஒருவனின் சொத்து. தான் கூறும் மதக் கடமைகளை நிறைவேற்றத் தவறுபவன் இழப்பை சந்தித்தாக வேண்டும் எனும் நிர்ப்பந்தம், அந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தத்தில் – தெளிவாகச் சொன்னால் தமக்கு அடிமை இழப்பு, பொருள் இழப்பு ஏற்படும் எனும் பயத்திலேனும் – மதக் கடமைகளை நிறைவேற்றட்டும் என்பது தான் முகம்மதின் திட்டம். இதையும் சமூகத்தின் அநீதியான சுரண்டலின் வடிவத்தை ஒழிப்பதையும் முடிச்சுப் போடுவது வழக்கமான மதவாதிகளின் உட்டாலக்கடி வேலை தானேயன்றி வேறொன்றுமில்லை.

போர்களில் தோற்றவர்கள் தான் அடிமைகள் என்பது கருத்தியல் ரீதியில் பிழையில்லாத கூற்றுதான், முழுமையான கூற்றல்ல. முகம்மதுக்கு ஒரு அரசமைப்பு இருந்தது, அவர் பல போர்களை நடத்தியிருக்கிறார் எனும் அடிப்படையில் இருந்து தான் போரில் தோற்றவர்களை அடிமைகளாக்கினர் என்று கூறுகிறார்கள். ஆனால், அரசு எனும் அமைப்பு ஏற்படுவதற்கு முன்பே அடிமைகள் தோன்றி விட்டனர். மேலும் அக்காலத்தில் சிறைகள் இல்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். சிறை என்றால் என்ன? உயரமான சுற்றுச் சுவர், அதன் மேல் துப்பாக்கியுடன் காவலர்கள், நீதி மன்றம், காவல்துறை இப்படியான காட்சி தான் சிறையா? இது சிறையின் இன்றைய நவீன வடிவம். சிறை என்றால் தப்பிவிடாமல் பாதுகாப்பது. எகிப்தில் பிரமிடுகளைக் கட்டுவதற்கு அடிமைகளை பயன்படுத்தினார்கள் என்பது வரலாறு. அந்த அடிமைகளை எங்காவது உங்களுக்கு பிடித்த இடங்களில் தங்கியிருங்கள் என்று விட்டு விட்டார்களா? ஒரு இடத்தில் கூட்டி வைத்து தப்பிவிடாமல் பாதுகாத்தார்கள். கிபி முதல் நூற்றாண்டில் ரோமில் ஸ்பார்டகஸ் தலைமையில் அடிமைகள் அரசுக்கெதிராக புரட்சி செய்தார்கள். அவர்கள் தனித்தனி வீடுகளில் அடிமைகளாக இருந்தார்களா? ஒரே இடத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்களா? ஆகவே, அக்காலத்தில் சிறைகள் இல்லை அதனால் தான் தனி ஆட்களிடம் அடிமைகள் இருந்தார்கள் என்பது மதவாதப் பொய்.
 
சட்டம் போட்டு ஏன் இஸ்லாம் அடிமை முறையை நீக்கவில்லை என்பதற்கு மதவாதிகள் கூறும் பதில் தான் எல்லா நாடுகளிலும் அடிமை முறை இருந்ததால், இஸ்லாமிய நாட்டில் அடிமைகளை விடுவித்தால் அது நட்டுக்கு இழப்பை ஏற்படுத்தும். முஸ்லீம் அடிமைகள் பிற நாட்டிடம் சிக்கியிருக்க, முஸ்லீமல்லாத அடிமைகளை விடுவித்துக் கொண்டிருந்தால் அது பலவீனத்தையும் ஏற்படுத்தும். ஆகவே தான் இஸ்லாம் அடிமை முறையை நீக்கவில்லை என்பது. இந்தக் காரணத்திற்காகத் தான் முகம்மது அடிமை முறையை ஒழிக்கவில்லை என்று கூறினால் அது முகம்மதின் வாக்கை மீறிய அல்லது முகம்மதின் வார்த்தைகளுக்கு முகம்மதை விலக்கி வைத்துவிட்டு பொருள் கூறிய, முகம்மதுக்கு மேம்பட்ட தலைவர்களாக அவர்கள் காணப்படுவார்கள். எப்படியென்றால், முகம்மதின் முதன்மையான எதிரிகளாக இருந்த முகம்மதின் சொந்த குலத்தை சேர்ந்த குரைஷி குல சொந்தக்கார அடிமைகளை முகம்மது உடனடியாக விடுவித்திருக்கிறார். மேலும் நோன்பு நோற்காமலிப்பது போன்ற குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை விடுவிப்பதை ஊக்குவித்திருக்கிறார். பிற நாடுகளில் இப்படியானதொரு ஏற்பாடு இல்லாத போது முகம்மது இதைச் செய்திருக்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, இன்று மதவாதிகள் கூறும் இஸ்லாமிய நாடு பலவீனப்படும் என்பது முகம்மதுவுக்கு தெரிந்திருக்கவில்லை. இரண்டு, முகம்மது அடிமை முறையை ஒழிக்காததற்கு இன்று மதவாதிகள் கூறும் காரணம் தவறானது, பொய்யானது, முகம்மதின் சிந்தனையை மீறியது. இரண்டில் எது சரி?

ஏற்கனவே அடிமைகளை வைத்திருந்தவர்கள் பெருமளவில் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள், மட்டுமல்லாது, தவறில்லை என்ற நிலை இருக்கும் போது செய்யப்பட்ட அடிமை வியாபரத்தை பின்னாளில் தவறு என்று கூறுவது நியாயமற்றது அதனால் தான் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்கிறார்கள். ஆடுமாடுகளைப் போல் சந்தைகளில் விற்கப்படுவதும், அதுவரை கணவன் மனைவியாய், பெற்றோர் குழந்தைகளாய், உற்றோராய்,உறவினர்களாய் இருந்தவர்கள்  எல்லா உறவுகளையும் மறுத்து அவர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுப்பது இழப்பாய் தெரியவில்லை. ஆனால் அண்டைகள் வைத்திருக்கும் அடிமைகளை செல்லாது என்று அறிவித்தால் அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுமாம். என்னே உயரிய சிந்தனை. இந்த உயரிய சிந்தனைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே ஸ்பார்டகஸ் அடிமைகளின் விடுதலை குறித்து சிந்தித்தான் என்றால் முகம்மதின் சிந்தனை மனித குலத்தின் முழுமைக்குமான சிந்தனையாக இருக்க முடியுமா?

அடிமை குறித்து இன்று மதவாதிகள் பிதற்றித் திரிவதெல்லாம் அவர்களின் சொந்தக் கற்பனைகள் தானேயன்றி, இஸ்லாம் தெளிவாக அடிமை முறையை அங்கீகரிக்கிறது. நேரடியான அடிமை முறை கொடூரமானது, கொடுமையானது என்று சராசரி மனித மனம் கூறும் போது காலாகலத்துக்கும் இதுவே உண்மை எனக் கூறும் வேதம் அடிமைமுறையை ஆதரிக்கிறது என்றால் அது எல்லாம் தெரிந்த இறைவனின் கூற்றா? ஆண்டான் அடிமைக் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் கூற்றா? இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக