திங்கள், 16 ஏப்ரல், 2012

இனிவரும் உலகத்தில் கடவுளின் கதி!

 



இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப் படாமல் இருக்க மாட்டார்கள். அதைச்சற்று இங்கு ஆராய்வோம்.
கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால் சிறார்களுக்குப் போதிக்கப்பட் டும், காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவகமு மாகும். ஆனதால் இனிவரும் உலகத்தில் கடவுளைப் பற்றி போதிக்கிறவர்களும், காட்டிக் கொடுப்பவர்களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப் போகும்.
ஏனெனில், கடவுளை நினைக்க மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால்தானே நினைப்பான்? சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்து விடுவதாகவும் சகல தேவைகளும் மனித னுக்கு கஷ்டப்படாமல் பூர்த்தியாகவும் இருந்தால், ஒரு மனிதனுக்குக் கடவுளைக் கற்பித்துக் கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்?
மனிதன் உயிரோடு இருக்குமிடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால் விஞ்ஞானப் பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக் காது.
சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத் திற்கு ஒரே ஒரு காரணம் தானே சொல்லப்படுகிறது? அக்காரணம் என்னவென்றால், இந்த உலகத் தோற்றத் துக்கு காரணம் என்ன? காரண பூதமாக இருப்பது எது? அதுதான் கடவுள் என்று சொல்லப்படுகின்றது.
இது விஞ்ஞானிகளுக்கு சுலபத்தில் அற்றுப் போன விஷயம் பஞ்சபூதங்களின் சேர்க்கையே உலகம் என்பர். நம்முடைய வாழ்வில் நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்கிறோம்; தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறோம். தெரிந்ததை தெரிந்தது என்று சொல்லுகிறோம். இதுவேதான் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அதற்காக ஒரு காரியத்துக்கும் ஆகாத தேவையில்லாத கடவுளை எவனும் வணங்க மாட்டான்.
புதிய உலகத்தில் மோட்ச, நரகத்துக்கு இடம் இருக்காது; நன்மை, தீமை செய்ய இடமிருந்தால்தானே மோட்சமும், நரகமும் வேண்டும்? எவருக்கும் யாருடைய நன்மையும் தேவையிருக்காது. புத்திக் கோளாறு இருந்தால் ஒழிய, ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்ய மாட்டான். ஒழுக்கக் கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச, நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?
எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும் இனிவரும் சங்கதிகள் அடைந்த மாறுதல்களைக் காண வேண்டுமென்றும். இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக் கொண்டும் வாழ்க்கை என்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய்.
வாழ்க்கை என்றால் மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்னும் ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.
நம்மால் என்ன ஆகும்? அவனின்றி ஓரணுவும் அசையாதே! என்று வாய் வேதாந்தம் பேச மாட் டார்கள். நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும், அவர்களின் எண்ண மாகவும் இருக்கும். எப்போதோ, யாரோ, எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்க மாட்டார்கள். சுயசிந்தனையோடு கூடியதாகவே அவர்களின் செயல்கள் இருக்கும் மனித அறிவீனத்தினால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும், நம்பிக்கையும் கொண்டு உழைப்பார்கள்.
அவர்களின் தொண்டு; மனித சமுதாயத்தை நாளுக்கு நாள் முன்னுக்குக் கொண்டு வந்தவண் ணமாகவே இருக்கும் சுய சிந்தனைக்கு இலாயக்கற்ற வர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், காலம் வரவரக் கெட்டுப் போச்சு என்று கதறுவதுமாக இருப்பார்கள்.
இன்றைய மக்களிலே பலருக்கு பழமையிலே இருக்கும் மோசம் அறிவையே பாழ் செய்து விடு கிறது. புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்து விடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்பு களால் இலாபமடையும் கூட்டம் புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும், பாமரரின் ஞானசூன்யம், அறியாமை, சுயநலக்காரரின் எதிர்ப்பு எனும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே. இனிவரும் உலக சிற்பிகளாக முடியும். அந்த சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று வாலிபர்கள் பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டுகிறேன்.
நூல்:இனிவரும் உலகம்

1 கருத்து:

  1. குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகு என்ற தத்துவத்தை உறுதியுடன் அனைவரும் பின்பற்றினால், மேற்படி அமைப்பை நிலை நாட்ட ஒவ்வொரு தனிமனிதனும் மனக்கட்டுப்பாட்டோடு தியாகம் செய்ய முன்வந்தால் இறை நம்பிக்கை தேவையற்றுப் போகும். ஆனால் குடும்பம் என்ற அமைப்பை உறுதி செய்யும் அமைப்பாக மதமே வலிமையாக உள்ளது.எனவே கடவுள் கொள்கையை நீக்கிவிடும் அளவிற்கு நாத்திக இயக்கங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. ஒருபோதும் பெறாது.ஆக உண்மையோ பொய்யோ கடவுளுக்கு மரணம் ஏற்படாது என்றே நினைக்கின்றேன்

    பதிலளிநீக்கு