வெள்ளி, 31 மே, 2013

கடவுளும், மதமும் கடைத்தேறப் போவதில்லை




கடவுள் நம்பிக்கை இனி கரையத்தான் செய்யும். ஏதோ எந்தக் காலத்திலோ இடிக்கும் மின்னலுக்கும் பயந்து கற்பித்துக் கொண்ட கடவுள் மீதான பயம் இந்தக் காலத்தில் காலாவதியான ஒன்றாகும்.

கடவுள் படைப்புக் கொள்கை எல்லாம் பழைய பஞ்சாங்கமாகி விட்டது. டார்வினின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மதம்  தன் தவறை உணர்ந்து திருத்திக் கொண்டு விட்டது.

பைபிளுக்கு விரோதமாக உலகம் உருண்டை என்று சொன்னதற்காக விஞ்ஞானி கலிலியோ தண்டிக்கப்பட்டார். 360 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகன் போப் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

இது அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்

 உயிர் களைப் படைத்தான் கடவுள் என்பதுதான் கடவுள் இருப்பதற்குக் கூறப்பட்ட மகத்தான காரணமாகும்.

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) விஞ்ஞானிகள் உண்டாக்கி உலகை வியக்க வைத்து விட்டனர். மதவாதிகளை வியர்க்கவும் வைத்து விட்டனர்.

நகலாக்கம் கண்டுபிடிக்கப்பட்ட போதே அந்தக் குலை நடுக்கம் கடவுள் மத வியாபாரிகள் மத்தியில் தொடங்கி விட்டது.

இது ஒரு புறம் இருந்தாலும் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரைச் சொல்லி நாட்டில் ஓட விடப்படும் மனித ரத்த வெள்ளம் கடவுள், மதங்களின் குரூரத்தை மக்கள் உணரும்படிச் செய்து வருகிறது.

ஈராக்கில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ்புஷ் படைஎடுத்து பல லட்ச மக்களைக் கொன்று குவித்ததற்கு என்ன காரணத்தைச் சொன்னார்? 

கடவுளிடம் அனுமதி பெற்றுத்தான் இந்தப் போரைத் தொடுத்தேன்! என்று சொல்லவில்லையா?

ஈழத்திலே பல லட்சக்கணக்கில் தமிழர்களின் உயிரைக் குடித்த வெறி சிங்கள வெறி மட்டு மல்லவே  மத வெறியும் அல்லவா கூட்டணி சேர்ந்து விட்டது! 

இவ்வளவுக்கும் கருணை, அன்பின் வடிவமான பவுத்த நெறி மதவெறியாகக் கூர் தீட்டப்பட்டு தமிழன் கழுத்துகளுக்கல்லவா அரிவாளாக, கோடரியாக மாற்றுருப் பெற்றது? 

இந்தியாவில் இந்துத்துவா கூட்டம் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு ராம் ராம் என்று உச்சரித்து அல்லவா இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தைத் துவம்சம் செய்தது?

குஜராத் மாநிலத்தில் என்ன நடந்தது? எத்தனை இலட்சம் அப்பாவி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டனர். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட வில்லையா? அந்தக் கருவை உருவி நெருப்பில் தூக்கியெறிந்து குதியாட்டம் போடவில்லையா? இந்தக் கொடியவர்களுக்கு வெறியூட்டி எரி நெருப்பைக் கையில் கொடுத்ததும் இந்து மதம் அல்லவா? இஸ்லாம் நாடுகளில்கூட நாத்திகம் முளைக்கக் காரணம் என்ன?

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் மீதும், மதத்தின்மீதும் மக்களுக்கு நம்பிக்கை எப்படி ஏற்பட முடியும்?

அதன் விளைவுதான் உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகி வரும் அறிகுறிகள்!

கடவுள் - மதம் கூட்டணி வன்முறைகளை மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை, ஒழுக்கக் கேட்டையும் அல்லவா ஊட்டி வளர்க்கிறது.

சாமியார்களும் சாமியாரிணிகளும் செய்யும் அட்டகாசம் என்ன?

ஜெகத்குரு என்று சொல்லப்படுபவரே கொலைக் குற்றத்திற்கு ஆளாகி சிறையில் கம்பி எண்ணவில்லையா?

தப்பித் தவறி மதங்களும், கடவுள்களும் நிலைத் திருப்பதற்கு என்ன காரணம்?
இதோ தந்தை பெரியார் சொல்லுகிறார்:

மதங்களுக்குச் சீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமும் அல்லாமல் அவற்றின் உயர்ந்த கொள்கைகளோ, தத்துவங் களோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லி விட முடியாது

(தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் - 1928 நவம்பர் 26,27).

இனி அடுத்த கட்டம் பணமும், பிரச்சாரமும்கூட எடுபடாமல் போகும் நிலைதான்; எவ்வளவு காலத்திற்குத் தான் மக்கள் மயக்கத்திலேயே இருப்பார்கள்?
               ------------------------------"விடுதலை” தலையங்கம் 30-5-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக