செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 23
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: குகைவாசிகளும் குழப்பும் செங்கொடியும்
எத்தனை
தெளிவாக இருந்தாலும் குழப்பம் இருப்பதாய் கற்பித்துக் கொண்டால் தான்
மதவாதம் நீடிக்க முடியும். இதற்கு தெளிவான சான்றாய் இருப்பது தான் நண்பர்
இஹ்சாஸின் பதிவு. முதலில் குறிப்பிட்ட கட்டுரையில் என்ன கூறப்பட்டிருந்தது
என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம். குரானை மெய்ப்படுத்தும் திட
ஆதாரங்களில் ஒன்றான ‘சாக்கடல் சாசனச் சுருள்கள்’ கிருஸ்தவர்களால்
மறைக்கப்படுவது ஏன்? ஏனென்றால், ஏசு அதாவது ஈசா போதித்தது இஸ்லாம் தான்
என்பதை அது உறுதிப்படுத்துகிறது என்பதால் தான். இது தான் இஸ்லாமியர்களின்
பிரச்சாரம். இதை மறுத்து அந்தச் சுருள்கள் இஸ்லாத்தை உண்மைப்படுத்தவில்லை
பௌத்தத்தை உண்மைப்படுத்துகிறது என்றும், ஏசு என்றொருவர் வரலாற்றில்
வாழ்ந்ததற்கான தடயமில்லை. பௌத்தத்திலிருந்து உருவப்பட்ட கதைகளிலிருந்து
உருவகிக்கப்பட்ட ஒரு பாத்திரம் என்றும் எழுதப்பட்டிருந்தது. நம்மை
குழப்புவதாக கூறிய நண்பர் இஹ்சாஸ் தெளிவாகக் கூறுவது என்ன?
முதலில்
முன்னர் கூறியிருந்தது போலவே கடவுளை மறுத்துவிட்டு பின்னர் பிறவற்றை பேச
வேண்டும் என்கிறார். இத்தொடரின் சென்ற பதிவிலேயே இது குறித்த பதிலும்
கேள்விகளும் கேட்கப்பட்டு இருப்பதால் நாம் அடுத்தவைகளுக்கு
நகர்ந்துவிடலாம். கண்டெடுக்கப்பட்ட ஏடுகளின் காலம் என்ன? கட்டுரையில் கிமு
மூன்றாம் நூற்றாண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நண்பர் அவைகளின்
காலம் என கிமு 150 லிருந்து கிபி 75 வரை என்கிறார். எது சரியானது? நண்பர்
இஹ்சாஸ் குறிப்பிட்டிருப்பது கிருஸ்தவ தளங்கள் குறிப்பிடும் காலம். அவை
இந்த காலத்தை மட்டுமல்ல கண்டெடுக்கப்பட்ட ஏடுகளில் இருந்தது பழைய
ஏற்பாட்டின் வாசகங்கள் தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறனர். இவைகளை எப்படி
ஏற்றுக் கொள்வது என்பதை நண்பர் இஹ்சாஸ் தான் கூற வேண்டும். குறிப்பிட்ட
அந்தக் கட்டுரையிலேயே நண்பர் கூறியிருப்பதைப் போன்ற காலம் குறித்து
அன்பரொருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலும்
அளிக்கப்பட்டிருந்தது. நண்பர் அதை பார்க்கவில்லை போலும். நண்பருக்காக அந்த
பதிலை இப்போது மீள்பதிவு செய்து விடலாம்.
\\\அந்தச்
சுருள்களின் காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன.
ஏசுவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக
என்றும் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் மாறுபட்டாலும் அனைவரும்
ஏசுவுக்கு முன்னர் என்றுதான் குறிப்பிடுகின்றனர். இணையத்தில் பல தளங்கள்
கிமு 150 லிருந்து 70 வரை காலம் என்றும், அவற்றில் இருந்தவை பழைய
ஏற்பாட்டின் படிகள் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றில் உண்மையில்லை. அவை
எஸ்ஸீனர்களுடையவை என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள்
இல்லை. எஸ்ஸீனர்கள் கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்தே அந்தப்பகுதிகளில்
இருந்து வந்திருக்கிறார்கள். நாசரேத் எனும் பெயரும் நாசரேயனாகிய கிருஸ்து
எனும் சொற்றொடரும் எஸ்ஸீனர்களுக்குறியவை. அதே நேரம் கிமு முதல்
நூற்றாண்டுக்குப் பிறகு எஸ்ஸீனர்களைப் பற்றி குறிப்புகளில்லை. இந்தப்
பின்னணியையும் சேர்த்து கணக்கிலெடுத்துக்கொண்டே வரலாற்றாய்வாளர்கள் கிமு
நான்காம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் நூற்றாண்டு வரை என கணிக்கிறார்கள்.
இதையே நான் கிமு மூன்றாம் நூற்றாண்டு என்று எடுத்துக்கொண்டேன். இதில்
பிழையிருப்பதாக நான் கருதவில்லை.///
அடுத்து
மறைக்கப்பட்ட அந்த ஏடுகள் குரானை உண்மைப்படுத்துகிறது அதனால் தான்
கிருஸ்தவர்கள் அதை மறைத்துவிட்டார்கள் என இஸ்லாமியர்கள் பிரச்சாரம்
செய்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி இஸ்லாமியர்கள் எவரும்
பிரச்சாரம் செய்யவில்லை என்று நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறல்ல,
நண்பர் இஹ்சாஸ் போல பல இஸ்லாமிய ஊற்றளித்துக் கொண்டிருக்கும் பிஜே
தளத்தில் குரானுக்கான விளக்கவுரையாக இலக்கம் 271ல் இது தெளிவாகவே
குறிப்பிடப்பட்டிருக்கிறது. \\\அந்தச்
செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம். ஈஸா
(அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத்
திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம்
அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம். ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது
இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள்
எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு. “ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு
பிரசங்கித்தார்” என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க: மத்தேயு 4:23,
மாற்கு 1:14) எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த
நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று
முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது. “குர்ஆனை ஒத்திருக்கின்றது”
என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல
இடங்களில் குறிப்பிடுகின்றது. அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு
மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது. மனிதர்களால் எழுதப்பட்ட
ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான்
என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது./// எனவே நண்பர் இஹ்சாஸ் தன் பி(டிவாத)ரச்சாரத்தை அந்த தளத்திலிருந்து தொடங்கட்டும்.
அடுத்து,
புத்தருக்கும் ஏசுவுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை போகிறபோக்கில் குறிப்பிட்டு
காட்டுவதைப் போல நண்பர் இஹ்சாஸ் கருதியிருக்கிறார். அவ்வாறல்ல. ஏசு
என்பதற்கு வரலாற்றில் வாழ்ந்ததற்கான எந்த தடயமும் இல்லை என்பதை கட்டுரை
தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறது. இவைகளை நண்பர் இஹ்சாஸ் கண்டு கொள்ளாமல்
நகர்ந்து விட்ட மர்மம் என்ன? \\\அங்கு
கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ்
சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர்
வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர்
(கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன்
(கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள்
இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347)
அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு
525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385)
போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால்
இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு
குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி? ஏசு எனும் ஒருவர்
வரலாற்றில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களான
ரோமர்கள் யூதர்கள் ஆகியோரின் நூல்களான பிலாவியஸ் ஜோசபஸ் எழுதிய தி
ஆன்டிகுடீஸ் ஆப் தி ஜெவ்ஸ்(The Antiquities of the Jews), யூதர்களின்
சிறப்பைக் கூறும் டால்முட்(Talmud), பிளீனிதியங்கர் ரோமப் பேரரசன்
டார்ஜானுக்கு எழுதிய கடிதம், டாஸிடஸ் எழுதிய அன்னல்ஸ் (Annals) போன்ற
அனைத்தும் ஐயத்திற்கிடமானவை என வரலாற்றாசிரியர்களால் தெளிவுபடுத்தப்
பட்டிருக்கின்றன. மாக்ஸ்முல்லர் இவை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்
“புத்தரும் அவருடைய சீடர்களும் சொல்லிய மொழி நடைக்கும், கிருஸ்துவும்
அவருடைய சீடரும் சொல்லிய மொழி நடைக்கும் பெரும் ஒற்றுமை இருப்பதைக்
காணலாம். புத்தமத நூல்களில் காணப்படுகின்ற சில உவமைகளும் கதைகளும் புதிய
ஏற்பாட்டிலிருந்து எடுத்தது தானோ என்று ஐயம் தோன்றலாம், ஆனால் அவையெல்லாம்
கிருஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை” 2000 ஆண்டுகளுக்கு முன்பு
பாலஸ்தீனத்தில் நாசரேத் எனும் ஊர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பழைய
ஏற்பாடில் எந்த இடத்திலும் நாசரேத் எனும் ஊரைப்பற்றிய குறிப்பும் இல்லை.
எனவே நாசரேயனாகிய கிருஸ்து எனும் பதம் நாசரேயர்கள் என்றழைக்கப்பட்ட
புத்தக்கொள்கைகளால் கவரப்பட்ட குழுக்களையே குறிக்கும்.///
இவ்வளவு வரலாற்று ஆதாரங்களுக்குப் பிறகு தான் நிகழ்வுகளின் ஒற்றுமை காட்டப்
பட்டிருக்கிறதேயன்றி வெறுமனே ஒற்றுமையை மட்டுமே வைத்துக் கொண்டு இருவரும்
ஒருவரே என்று கூறப்பட்டதல்ல.
இந்த
இடத்தில் இன்னும் இரண்டு அம்சங்கள்யும் தெளிவுபடுத்த வேண்டும். 1)
வரலாற்றில் வாழ்ந்ததாக கருதப்படும் அனேகருக்கு வரலாற்றுத் தடங்களைக்
கண்டுபிடிப்பது அரிது. அப்படியான எல்லோரையையும் உறுதிப்படுத்த முடியாதது
என்பது போலவே ஏசுவும். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது ஏசு
வரலாற்று மனிதரா? கற்பனைப் பாத்திரமா? என்பதல்ல. ஒரு இஸ்லாமிய பொய்ப்
பிரச்சாரத்தை உடைக்கும் வழியில் ஏசுவின் பாத்திரம் குறுக்கிடுகிறது
என்பதால் தான். ரோமப் பேரரசை எதிர்த்து அடிமைகளின் எழுச்சி வரலாற்றில்
தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது. இந்த எழுச்சி நாயகர்களின் வரலாறு தான்
ஏசுவின் உயிர். அடிமைகளின் எழுச்சியை அடக்க அந்த நாயகர்களின் நினைவைக்
கொண்டே செய்யப்பட்ட முயற்சிக்கு உடலாக வாய்த்தது தான் புத்தரின் கதைகளும்
உரையாடல்களும். இந்தப் பின்புலத்திலிருந்து தான் ஏசுவைப் புரிந்து கொள்ள
வேண்டுமேயல்லாது. புத்தரும் ஏசுவும் ஒருவரே என்பதுபோல் குறுக்கிக் கொள்வது
தங்களைத் தாங்களே ஏமற்றிக் கொள்வது போலாகும். 2) ஏசு புத்தரின்
நூல்களிலுள்ள கதைகளிலிருந்து பிறப்பெடுத்த பாத்திரம் என்பது போலவே,
கிருஷ்ணனும் பௌத்த நூல்களிலிருந்து உருவப்பட்ட பாத்திரம் தான்.
கிருஸ்துவும் கிருஷ்ணனும் ஒன்றுதான். புத்தரின் நகல்கள், கிருஷ்ணன்
இந்தியாவின் ஏசு; ஏசு அரேபிய பகுதியின் கிருஷ்ணன்.
அடுத்து
புத்தரையும் ஏசுவையும் ஒப்பிட்டுக் கூறியவற்றில் நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய
கருத்துகளை மறுப்பாக வைக்கிறார். அவரும் சில ஒப்பீடுகளைச் செய்துள்ளார்.
அதிலும் புத்தரின் வரலாற்றுச் செய்திகளையும், ஏசுவின் மதக் கருத்துகளையும்
எடுத்துக் கொண்டு ஒப்பீடு செய்திருக்கிறார். தந்தையின்றி யாரும்
பிறந்திருக்க முடியாது அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஏசுவுக்கு
தந்தை இருந்ததாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இருவருக்குமான வரலாற்று
செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது இருவருக்குமான மதச் செய்திகளை
எடுத்துக் கொள்ளலாம். மாறாக ஒருவருக்கு வரலாற்றுச் செய்தியையும்
மற்றொருவருக்கு மதச் செய்தியையும் எடுத்துக் கொண்டால் வேறுபாடு வருவது
தவிர்க்கவியலாதது. இவைகளை விரிவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
ஏனென்றால் எது வரலாறு எது புனைவு என்பதில் நமக்கு எந்த மயக்கமும் இல்லை.
அதனால் தான் புத்தர் உண்மையில் வாழ்ந்தவர் ஏசு பொய் கதை என்பது போல்
எழுதவில்லை. மீண்டும் ஒருமுறை இவற்றைக் குறிப்பிடும் போது எவ்வாறு
எழுதப்பட்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டி விடலாம். \\\புத்தரின்
வாழ்வை விவரிக்கும் நூலகளான திரிபீடகங்கள், லலிதவிஸ்தாரம், தம்மபதம் போன்ற
நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் .. ..
.. புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் .. .. .///
அதாவது பௌத்த நூல்களில் கூறப்படும் புத்தரின் நிகழ்வுகளுக்கும் பைபிளில்
கூறப்படும் ஏசுவின் நிகழ்வுகளுக்குமான ஒற்றுமை தான் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது. என்ன எழுதப்பட்டுள்ளது எப்படி எழுதப்பட்டுள்ளது என்பதை
உள்வாங்காமலேயே மேலெழுந்தவாரியாக \\\யாருடைய
வாழக்கையாக இருப்பினும் ஏதாவது ஒரு சில விடயங்களில் ஒரு ஒற்றுமை
இருக்கத்தான் செய்யும் அதை வைத்துக்கொண்டு இவ்விருவரும் ஒருவர்தான் என்பது
மடத்தனம்/// என்று தங்கள் மடத்தனங்களை தாங்களே வெளிக்காட்டிக் கொள்வது மதவாதிகளுக்கு கைவந்த கலை.
மற்றும் இவை குறித்த மேலதிக விபரங்களுக்கு ஜோசஃப் இடமருகு எழுதிய கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே எனும் நூலைக் காண்க.
சரி
முதன்மையானவற்றுக்குத் திரும்புவோம். கண்டெடுக்கப்பட்ட அந்த ஏடுகள் குரானை
உண்மைப்படுத்துகிறதா? என்பது தானே பிரச்சனை. குரான் இது குறித்து என்ன
கூறுகிறது? குரான் குறிப்பிடும் அந்தக் கதையில் ஏடுடையவர்கள் என்ற ஒற்றை
வார்த்தையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அந்த வசனங்களில் இது குரானை
மெய்ப்படுத்துவதற்கான அத்தாட்சி என்று பொருள் படும் எந்த வசனமும் அதில்
இல்லை. மாறாக அந்தக் கதை விவரிப்பதெல்லாம் அவர்கள் அங்கு தங்கி மறைந்து
வாழ்ந்தார்களா இல்லையா என்பதைத்தான் மையமாக எடுத்துக் கொண்டு கதை
சொல்லியிருக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.தெளிவாகச் சொன்னால் தங்கள் மன்னனை
எதிர்த்து தங்கள் மதக்கொள்கையை சமரசமின்றி எடுத்துவைத்து அதனால் தொடர்ந்து
வாழ முடியாமல் போகவே நாடுகடந்து பாலைவன மலைக்குகையில் வந்து
தங்கியிருக்கிறார்கள். இது தான் அந்தக் கதையில் முக்கியத்துவம் வாய்ந்ததாய்
குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர ஏடு குறித்த கதையல்ல. ஏடுடையோர்கள் என்று
ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்கிறார்கள். அது மட்டுமா
குறிப்பிடப்பட்டிருக்கிறது ஏட்டைவிட அதிகமாய் அவர்களின் நாய் பற்றி
குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்றால் அந்த நாய்க்கு ஏதேனும் கதை
வைத்திருக்கிறார்களா??
ஒருவேளை
சாக்கடல் சாசனங்கள் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இது போல்
எந்தவிதமான புளகமடைதல்களும் வந்திருக்காது. கண்டுபிடித்து அவர்கள் அது
பழைய ஏற்பாடு என்கிறார்கள். இவர்களோ குரான் என்கிறார்கள். இரண்டு
குப்பைகளையிம் ஒதுக்கிவிட்டு வர்லாற்றின் ஒளியிலிருந்து பார்த்தால் தான்
உண்மை புரியும். இதைத்தவிர வேறு வழியில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக