சனி, 21 செப்டம்பர், 2013

நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே


செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22



எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை!

நூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் இவை குறித்து கூறுவதென்ன? நங்கூரக் கல் நங்கூரக் கல்லல்ல என ஒப்புக் கொள்கிறார். கப்பலில் அளவுகள் பைபிளில் இருப்பவை எனவே நாங்கள் அதை ஏற்பதில்லை என்கிறார். டேவிட் ஃபசோல்ட் மீண்டும் மாறிவிட்டார் என்கிறார், (ஃபசோல்ட் மட்டுமல்ல, அது கப்பலல்ல என்று கூறிய அறிவியலாளர்களின் பட்டியலே இருக்கிறது என்பதை நண்பர் தன்னுடைய வசதிக்காக மறந்துவிட்டார்) ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டதை நம்ப வேண்டும் என்கிறார். இது தான் இஹ்சாஸ் கூறியிருப்பது. பின் எப்படி கப்பல் உண்மை என்கிறார். ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், பின் எப்படி அந்தக் கப்பல் அவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும்? ஐயா! அது கப்பலே இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு ஆதாரங்களையும் தந்திருக்கிறேன். இதை அந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை படித்துப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேவை கருதி அந்த பின்னூட்ட விபரங்களை சுருக்கமாக பார்க்கலாம்.

1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர் என்று கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற பல ஆய்வாளர்கள் அங்கு கப்பல் என்று குறிப்பிடத்தகுத்ததாக ஒன்றுமில்லை என பதிவு செய்திருக்கிறார்கள். அனால் நண்பர் இஹ்சாஸ் அவ்வளவு உயரத்துக்கு அந்தக் கப்பல் எப்படி சென்றிருக்க முடியும் என்று கேட்கிறார். முதலில் அது கப்பல் தான் என்பதை உறுதிப்படுத்துங்கள் பின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்.

நண்பர் இஹ்சாஸ் கப்பல் உண்மை என்பதற்கு எந்தவிதமான தரவுகளையும் முன்வைக்கவில்லை என்றாலும் அந்த பதிவின் பின்னூட்டங்களில் சலாஹுத்தீன் என்பவருடன் நடந்த விவாதத்தை சுருக்கி தருகிறேன். அது, நூஹின் கப்பல் எந்த அளவுக்கு புராணப் புரட்டாக இருக்கிறது என்பதை காண்பவர்களுக்கு தூலமாக உணர்த்தும்.

அனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக நீங்களும் நம்பினால் அந்த கிருஸ்தவ தளங்களில் ஆதாரங்களை கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்கே புரியவரும்.
அலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

பைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது? அராராத்தா? ஜூதியா? அராராத்திற்கு அருகிலேயே ஜூதி என்றொரு மலை இருக்க, மலைக்கு ஜபல் என்ற சொல்லும் இருந்திருக்க எந்த இடத்தில் கப்பல் தரை தட்டியது என்பதை தெரிவிக்க குழப்பமே ஏற்படாமல் ஜூதி எனும் சொல்லை தேர்ந்தெடுத்த அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்னே தீர்க்கதரிசனம். ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள். இரண்டில் எதை சரி என்பது. ஒன்று செய்யுங்கள் ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா?

உலகின் பல பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கின் அடையாளங்கள் இருக்கின்றன. சிசிலியில், சிவாலிக் பகுதிகளில் வெள்ளத்தின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நோவாவின் பெருவெள்ளத்தோடு தொடர்புடையனவா? அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா? உலகம் முழுமைக்குமா? இந்தக்கதையின் படி வெள்ளம் உலகம் முழுமைக்கும் தான். இல்லையென்றால் அனைத்து மிருகங்களிலும் பறவைகளிலும் புள்ளினங்களிலும் சதைசதையாக ஏற்றிக்கொள்ளச் சொல்லவேண்டிய அவசியமென்ன? உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான விலங்குகள் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் அந்தந்தப் பகுதிக்கேயான சிறப்பு விலங்குகளாக இருக்கும். ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன்? இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (மின் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா? ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும்? அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா?

இன்றைய அராராத் மலையின் உயரம் நான் கூற வேண்டிய அவசியமின்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு உய்ரத்திலுள்ள மலையில் கப்பல் தங்கவேண்டுமென்றால் அந்த உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்திருக்கவேண்டும். கடல் மட்டத்தில் ஒரு சில மீட்டர்கள் கூடினாலே பாதி உலகம் காணாமல் போய்விடும் தெரியுமா உங்களுக்கு? மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா? எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே. அப்போது இதுபோன்ற வெகுசில மலைகளின் உயரத்தில் தங்கியிருந்த மக்களை தவிர ஏனையவர்களெல்லாம் அழிந்திருப்பார்கள் அப்படித்தானே. இப்படிப்பட்ட வெள்ளத்தை உலகம் முழுமைக்கும் வந்த வெள்ளமாக சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை மொசபட்டோமியா பகுதிக்கு மட்டும் வந்த வெள்ளம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா?

ராண் யாட் கண்டெடுத்ததாக சொல்லப்படும் மட்கிப்போன பலகையில் இருந்த கார்பனின் அளவு அவர் கொடுத்திருக்கும் இரண்டு பரிசோதனை கூடங்களின் அளவும் மாறுபாடாக இருக்கிறது. ஒன்றில் 1.88 விழுக்காடு மற்றொன்றில் 4.95 விழுக்காடு. மேலும் இந்த அளவு கார்பன் தான் அந்த பகுதியெங்கும் அதாவது அந்த மலைப்பகுதி முழுவதும் கிடைக்கிறது என்பதை முனைவர் பௌம் கார்ட்னெர் சோதனை செய்து காட்டியிருக்கிறார். எனவே ரான் யாட் கண்டெடுத்ததாக குறிப்பிடப்படுவது மரமல்ல. இன்னும் அந்த மலை எரிமலை குளம்புகளாலானது, எனவே மாங்கனீஸ் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் இதைத்தான் உலோகமாகவும் காட்டுகிறார்.

கல்லாய்ச்சமைந்த மரம் என ரான் யாட் காட்டுவதும் கல்மரமல்ல. இதுவரை உலகில் கண்டெடுக்கப்பட்ட எந்த கல்லாய்ச் சமைந்த மரத்தின் வகையிலும் சாராமலிருக்கிறது. முக்கியமான விசயம் என்னவென்றால் கல்லாய் மாறிய மரம் எனக் காட்டப்படும் ஒன்றில் வளர்வளையங்கள் காணப்படவில்லை. எந்த மரத்துண்டிலும் வளர்ச்சியை குறிக்கும் வரைகள் காணப்படும், கல்லாய் சமைந்த மரத்திலும் இவ்வரைகள் மாறுவதில்லை. ஆனால் இவ்வாறான வரைகள் எதுவும் கண்டெடுக்கப்பட்ட அதில் காணப்படவில்லை. இதுவரை 200 கல்லாய்ச் சமைந்த மரங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அனைத்தும் இன்றைய மரவகைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன, ஆனால் இதில் மட்டும் எந்த தொடர்பையும் காணமுடியவில்லை. ஏன்? ஆக சாதாரணமாக மலைப்பகுதிகளில் காணப்படும் எடை குறைந்த கூடிய கற்களை மரம் என்றும் கல்லாய்ப் போன மரம் என்றும் காட்டியிருக்கிறார்.

ரான் யாட்டுடன் ஜி பி ஆர் (தரை துளைக்கும் ரேடார்) பணியில் ஈடுபட்டிருந்த டாம் ஃபென்னர் கூறுகிறார், “பலமுறை நாங்கள் பரிசோதனை செய்தும் ஒவ்வொறு முறையும் வேறுவேறான முடிவுகளே கிடைத்தன, ஒரே மாதிரியான முடிவு திரும்பவும் கிடைக்கவில்லை எனவே ஒன்றரை நாளில் ரேடார் பணியை நாங்கள் முடித்துக்கொண்டோம்” என்று. மேலும் அதே இடங்களில் முனைவர் பௌம் கார்ட்னெர் மூலக்கூறு அதிர்வு கருவியை கொண்டு சோதித்துப்பார்த்துவிட்டு “மனித கரங்களினால் பணியப்பட்ட எதுவும் இங்கு இருப்பதற்கு 10விழுக்காடிற்கும் குறைவான வாய்ப்பே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

1959ல் அந்த இடம் நோவாவின் கப்பலாக அறியப்பட்டதிலிருந்து அங்கு ஆய்வுகளைச் செய்த பலர் இங்கு நோவாவின் கப்பல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் வன்டேமன்
டான் லாவரிட்ஜ்
டேவிட் மெர்லிங்
டேவிட் ஃபசோல்டு
டாம் ஃபென்னர்
பௌம் கார்ட்னெர்
ஜான் மோரிஸ்
ஹெரால்ட் கஃபின்
இன்னும் பலர். இதன் பிறகும் அங்கு நோவாவின் கப்பல் இருப்பதாக நம்பத்தான் முடியும், ஏற்கமுடியாது.

ஆக மிகத்தெளிவாக அங்கு கப்பலோ படகோ அல்லது அது போன்ற எதுவுமே இல்லை என்பது மட்டுமல்லாமல் அவ்வாறு கூறுபவர்களெல்லாம் தங்கள் மதவாத பொய்களை நிலை நிறுத்துவதற்காக மூளையை மூடிக் கொண்டு முனங்கிக் கொண்டிருப்பவர்களே என்பதும் உறுதி.

நண்பர் இஹ்சாஸின் பதிவில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதாவது நூஹ் என்பவர் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார் என்று குரான் கூறுகிறது. இவ்வளவு நீண்ட காலம் மனிதன் பூமியில் வாழ்வதாக இருந்தால் அதுவரை மனித உடலின் வேதிப்பொருட்கள் தாக்குப்பிடிக்காது எனக் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு நண்பர் இஹ்சாஸ் \\\இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்/// கடவுள் இல்லை எனும் அறுதியிலிருந்து தான் நான் வாதிட்டுக் கொண்டிருக்கிறேன். இது வெறும் வாதமல்ல. முடிந்தால் நான் ஏற்கனவே பலரிடம் கடவுளின் இருப்பை மறுத்து கூறியவற்றை மீண்டும் இங்கே கூறுகிறேன். நண்பர் இஹ்சாஸுக்கு திறனிருந்தால் இவைகளுக்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.

கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள்:
1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

கடவுள் இல்லை என்பதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள்:
1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

கடவுள் இல்லை என்பதற்கு சமூக ரீதியான காரணங்கள்:
1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.
2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக