செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 24
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் அம்பலம்.
முதலில்
இரண்டு அம்சங்களை விளக்கி விடலாம் என எண்ணுகிறேன். 1) ஒரு கருத்தை
எழுதுவதற்கு ஒரே நேரத்தில் எல்லா தரவுகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை.
எல்லா தரவுகளையும் கவனத்தில் கொண்டு ஒருசிலவற்றை ஆதாரங்களாக தந்து எழுதுவது
இயல்பானது. அதுபோல அதற்கு மறுப்பு எழுதும் போது எடுத்துக்காட்டப்பட்ட
ஆதாரத்தை மட்டுமல்லாது கட்டுரையின் தன்மையிலிருந்து பதிலளிக்க வேண்டும்
அப்போது தான் முழுமையான மறுப்பாக இருக்கும். மாறாக எடுத்துக்காட்டப்பட்ட
ஆதாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு
வேறு ஆதாரங்களே இல்லை எனும் ஹோதாவில் மறுப்பை எழுதுவது முழுமையானதாக ஆகாது.
2) பொதுவாகவே முகம்மதியர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒரு ஹதீஸோ, குரான்
வசனமோ எடுத்துக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் எதற்காக எடுத்துக்
காட்டுகிறோமோ அந்தப்பகுதியை மட்டும் எடுத்துக்காட்டுவது போதுமானது. ஆனால்
இப்படி போதுமான பகுதியை மட்டும் எடுத்துக் காட்டுவதை ஏதோ பிறபகுதிகளை
மறைத்துவிட்டு எழுதியிருப்பதாக கூறுவது முகம்மதியர்களின் பழக்கம். அப்படிக்
கூறும் போது எழுதியதற்கு எதிரான விசயங்கள் மறைக்கப்பட்டதில் இருக்கிறது
எனக் காட்ட வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து
விடுகிறார்கள். இந்த இரண்டு அம்சங்களும் நண்பர் இஹ்சாஸின் மறுப்பில்
இருக்கிறது என்பதால் இதைக் குறிப்பிட்டேன். இனின் அவரின் மறுப்பிற்குள்
செல்லலாம்.
முதலில்
மக்கா எனும் நகரம் புனிதமான இடமாக, பாதுகாப்பான இடமாக, அபயமளிக்கும் இடமாக
முகம்மதின் காலத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்குள்ள
மக்களால் நம்பப்பட்டு வந்திருக்கிறது. இந்த நம்பிக்கை முகம்மதின்
காலத்திற்குப் பிறகும் தொடர்கிறது. இப்படி ஒரு நம்பிக்கை மக்களிடையே
இருப்பது குறித்த விவாதம் கட்டுரையில் நடத்தப்படவில்லை. மக்களின் இந்த
நம்பிக்கையை முகம்மது தன்னுடைய அல்லாவின் கட்டளையாக உருமாற்றுகிறாரே, அதை
குரான் இறை வேதம் என்பதற்கான சான்றாக மக்களை மூளைச்சலவை செய்கிறார்களே
இன்றைய மதவாதிகள், அது தான் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்கிறது.
இவைகளை
உள்வாங்கிக் கொள்ளாமல் நண்பர் இஹ்சாஸ் எடுத்துக் காட்டப்பட்ட இரண்டுமே
போர்களல்ல என்கிறார். அதாவது, முகம்மது போர் புரியாமலேயே எதிரிகள்
சரணடைந்து விட்டார்கள் என்றும், மக்காவின் உள்ளே நுழைந்து சிலர் கத்திக்
கொண்டிருந்தார்கள் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று 1979
ஐயும் குறிப்பிடுகிறார்.இதன் மூலம் அங்கு போர் நடைபெறவில்லை நடைபெறவும்
செய்யாது எனும் மதவாத மூளைச் சலவையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார்.
முதலில் அந்த
ஹதீஸை எடுத்துக் கொள்வோம். புஹாரி 112ல் நமக்கு வெளிப்படும் உண்மை என்ன?
முகம்மது போர் புரிய ஆயத்தமாக இருக்கிறார், எதிரிகள் பலமாக இருந்திருந்தால்
அங்கு இரத்த ஆறு ஓட்டப்பட்டிருக்கும். இதைக் கருத்தில் கொண்டு தான்
முகம்மது எனக்கும் மட்டும் அதுவும் பகலில் சில மணித்துளிகளுக்கு
அனுமதிக்கப்பட்டதாகவும், முன்னரும் அனுமதி இல்லை பின்னரும் அனுமதி இல்லை
என்றெல்லாம் பீலா விடுகிறார். இதற்காகத்தான் அந்த ஹதீஸ் எடுத்துக்
காட்டப்பட்டிருந்தது. ஆனால் முகம்மதுவிற்கு முன்னரும் பின்னரும் பல போர்கள்
அங்கு நடந்துள்ளன என்பது தான் வரலாறு. ஆனாலும் அது அந்த நகரின் மீதான
புனிதம் அபயம் எனும் மக்களின் கருத்தை காயப்படுத்தவில்லை. ஏனென்றால்
அவர்களின் புனிதம் ஆன்மீகம் தொடர்பானது. போரோ, சண்டையோ கொலையோ நடந்து
விட்டால் அந்த நகரின் அபயம் கெட்டுப் போய்விடுவதான பொருளில் அந்த மக்கள்
அந்த நகரின் புனிதத்தை கருதியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் முகம்மது புல்லைக்
கூட வெட்டக் கூடாது என்கிறார். இந்த அடிப்படையிலிருந்து தான் முகம்மது
எனக்கு மட்டும் அனுமதி எனக்குப்பிறகு யாருக்கும் இல்லை என்கிறார். அதன்
பிறகு பல போர்கள் நடந்திருக்கிறது என்றாலும் அண்மையில் நடந்ததை மட்டும்
எடுத்துக் கொண்டு சௌதி அரசு அல்லாவின் அனுமதியை மீறி போரிட்டிருக்கிறது
என்று எழுதியிருந்தேன். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால்
முகம்மதுவுக்குப் பிறகு போரிட்டவர்கள் அல்லாவின் அனுமதியின்மையை மீறி
போரிட்டிருக்கிறார்கள். அல்லது, அனுமதி இல்லை என முகம்மது கூறியதை பொய்
என்று போரிட்டவர்கள் கருதியிருக்கிறார்கள். இந்த இரண்டிலொன்றுதானே உண்மையாக
இருக்க முடியும். ஆனால் இன்றைய மதவாதிகளோ நிகழ்ந்த போர்களையெல்லாம்
மறைத்து இன்றுவரை அங்கு போரே நடைபெறவில்லை அதனால் குரான் இறை வேதம் என்பது
உறுதியாகிறது என்று முகம்மதை விட ஒருபடி மேலேறிச் சென்று பீலா
விடுகிறார்கள்.
கட்டுரையின்
இந்த உள்ளார்ந்த அம்சங்களுக்கு நண்பர் இஹ்சாஸ் பதிலளித்திருக்கிறாரா? அவர்
கூறியிருப்பதெல்லாம் அங்கு போரே நடக்கவில்லை என்பதைத்தான். முகம்மது போர்
புரிய வந்தார் ஆனால் போர் புரியாமலேயே எதிரிகள் சரணடைந்து விட்டதால் போர்
நடக்கவில்லை. 1979ல் சிலர் உள்ளே நுழைந்து கூச்சல் போட்டார்கள் பின்னர்
வெளியேற்றப்பட்டார்கள் என்கிறார். கட்டுரையிலேயே படங்களை இணைத்திருக்கிறேன்
பார்க்கவில்லயா? ஒரு வாரமாக கவச வாகனங்களுடன் போராடிப்பார்த்து விட்டு
முடியாமல் பிரான்சிலிருந்து வந்து சௌதி துருப்புகளுக்கு பயிற்சியளித்து
சுவர்களைத் துளைத்து நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேதிஆயுதங்களைப்
பயன்படுத்தி பலரைக் கொன்று முடிக்கப்பட்ட போரை வெகு எளிதாக கூச்சல்
போட்டார்கள் வெளியேற்றினார்கள் என்று கூறுகிறாரே இஹ்சாஸ். எந்த அளவுக்கு மத
போதை அவர் தலைக்கு ஏறி நாளங்களிலெல்லாம் பரவியிருக்கும்?
அடுத்து அந்த
கனிகள் கொண்டு வரப்படும் முன்னறிவிப்பு குறித்தும் எழுதியிருக்கிறார்.
குறிப்பிட்ட அந்த வசனம் (குரான் 28:57) கூறுவது என்ன? மக்காவில் முகம்மதின்
வழியில் வருவதற்கு தயங்கும் சிலர் அதற்கு காரணமாக தாங்கள் மக்காவை விட்டு
துரத்தப்பட்டு விடுவோம் என பயப்படுவதாக கூறுவதற்கு பதில் கூறும் விதத்தில்
அமைந்திருக்கிறது. அவர்களை நாம் பாதுகாப்பாக வாழவைக்கவில்லையா கனிவகைகளை
அவர்களுக்காக கொண்டு வரவில்லையா? அதுபோல முகம்மதின் வழிக்கு வந்தபின்னும்
ஆக்கி வைப்போம் என்பதாக அந்த வசனம் கூறப்பட்டிருக்கிறது. மக்கா என்பது
வணிகப்பாதைகளின் சந்திப்பு. அந்த அடிப்படையில் பலவகைப்பட்ட வியாபாரப்
பொருட்கள் மக்காவில் கிடைத்து வந்தன. இதைத்தான் அந்த வசனம் கடந்தகால
வினையில் கூறுகிறது. ஒருவேளை எதிர்கால வினையில் கூறியிருந்தால் கூட இப்போது
கனி வகைகள் இறக்குமதி செய்வதோடு தொடர்புபடுத்தலாம். அப்படி இல்லாமல்
வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் இது முன்னறிவிப்பு என்று
புழகமடைந்தால் அது உண்மையாகி விடுமா? அரபிகளின் வாழ்வில் அனைத்து
விதங்களிலும் திருப்பு முனையை ஏற்படுத்திய எண்ணெய் வளம் குறித்து
முன்னறிவிப்போ பின்னறிவிப்போ மேல் கீழ் அறிவிப்புகளோ செய்ய முடியாத குரான்
கடந்த கால வினையில் கனிவகைகளை கூறியதை முன்னறிவிப்பு என்றால் எந்த வாயால்
சிரிப்பது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக