வெள்ளி, 14 மார்ச், 2014

குரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்


ihsas star

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 25

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: நட்சத்திரங்களும் நகைப்புக்குறிய வாதங்களும்

நட்சத்திரங்கள் குறித்து குரான் கூறியிருக்கும் சில வசனங்கள் நகைப்புக்கிடமானவைகளாக இருக்கின்றன, அறிவியல் பார்வையாக இல்லை என்பது எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தப் பதிவில் மூன்று கருத்துகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்று கருத்துக்களையும் நண்பர் இஹ்சாஸ் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது முதன்மையான விசயமாக இருக்கிறது.

முதலாவதாக, 53:1 நட்சத்திரங்கள் விழ முடியுமா? என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் இஹ்சாஸ் கூறியிருப்பது என்ன? ‘விழுகின்ற’ என்று தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கும் சொல்லின் மூலம் ‘ஹவா’ எனும் அரபுச் சொல். இச்சொல்லுக்கு விழுகின்ற என்பது நேரடிப் பொருள். ஆனால் இந்த இடத்தில் மறைகின்ற எனும் துணைப் பொருளை பயன்படுத்த வேண்டும். அது தான் பொருத்தமான பொருள், இது தான் நண்பர் இஹ்சாஸின் வாதம்.

இது மதவாதிகளுக்கு வாடிக்கையான ஒன்று தான். எங்கு விமர்சனம் வருகிறதோ அந்த இடத்தில் இதற்கு இப்படி பொருள் கொள்ளக் கூடாது, அப்படி பொருள் கொள்ளக் கூடாது என்று வியாக்கியானம் கூறுவது. இதைத்தான் கருத்து முதல்வாதம் என்பது. அதாவது, சொல் அப்படியே இருக்கும், அந்தச் சொல்லுக்கான பொருளை மட்டும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வது. கருத்துமுதல்வாதிகள் கருத்துமுதல்வாதத்தை பற்றிக் கொள்வதில் வியப்பொன்றுமில்லை. என்றாலும், இப்படி இவர்கள் கூறுவதன் மூலம் சில கேள்விகள் எழுகின்றன. அவற்றில் மூன்றை மட்டும் பார்ப்போம்.

அல்லா முக்காலமும் உணர்ந்தவர் தானே. குரான் மக்கள் விளங்கிங் கொள்ள வேண்டும் என்பதால் எளிமையாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை தானே. பின் ஏன் இது போன்ற சிக்கல்களில் எல்லாம் மக்கள் பொருள் கூறி சரி செய்யும் அளவுக்கு குரானை அல்லா விட்டு வைக்க வேண்டும்? குறிப்பிட்ட அந்த ஹவா எனும் சொல்லுக்கு விழ்கின்ற என்று பொருள் இருக்கிறது. பின்னர் அதைப் படிப்பவர்கள் விழுகின்ற நடத்திரம் என்று தவறாக பொருள் விளங்கிக் கொள்ள வாய்ப்பிருகிறது என்பது அல்லாவுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியும் என்றால் மறைகின்ற சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தாமல் விழுகின்ற எனும் சொல்லை பயன்படுத்தியது ஏன்? எந்தச் சொல்லை பயன்படுத்துவது என்பது அல்லாவின் அதிகாரம் அதில் தலையிட முடியாது என்றால், மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எளிமையாக ஆக்கியிருக்கிறேன் என்று அல்லா பீற்றிக் கொள்வது ஏன்?

குரானை மொழிபெயர்த்தவர்கள், தமிழ்ப்படுத்தியவர்கள் அரபு, தமிழ் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் தாமே. அந்தச் சொல்லுக்கு மறைகின்ற என்ற பொருள் தான் பொருத்தமாக இருக்கும் எனும் போது விழுகின்ற என்று தமிழ்ப்படுத்தியது ஏன்? இதை மொழி பெயர்த்தவர்களின் அறியாமை என்று எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா? எல்லாம் வல்ல அல்லா உலக மக்களையெல்லாம் உய்விக்கும்(!) விதமாக இறக்கியருளியிருக்கும்(!) குரானை அல்லாவை பயந்து ஒழுகுபவர்கள் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு போகிறபோக்கில் மொழிபெயர்த்து விடுவார்களா? என்னவிதமான அறியாமை அவர்களுக்கு இருந்தது? அவர்களுக்கு அறியாமை இருந்தது என்றால் அது அறிவியவல் அறியாமை தான். நவீன அறிவியலின்படி விழுகின்ற என்று மொழிபெயர்த்தால் அது அறிவியலுக்கு ஒவ்வாததாக இருக்கும். எனவே, அதற்கு மறைகின்ற என்று பொருள் கொடுப்பது தான் சரியானது எனும் அறிவியல் அறிவு அவர்களிடம் இல்லை. இது தான் அவர்களிடம் இருந்த அறியாமை அல்லவா? அப்படியென்றால் அறிவியல் அறிவு உயர உயர குரானில் இருக்கும் சொற்களின் பொருளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி காலத்தை உணர்ந்து பொருளை மாற்றாதவர்கள் அறியாதவர்கள். அப்படியென்றால் இது குரானின் பிழையா? மொழிபெயர்த்தவர்களின் பிழையா? மொழிபெயர்த்தவர்களின் பிழைதான் என்றால், குரானின் வசனங்களை காலத்திற்கு தகுத்தாற்போல் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் குரான் பயனற்றதாகி விடும், முரண்பாடுகள் மலிந்து விடும், தவறுகள் குவிந்து குப்பையாகி விடும் என்று குரானை தூக்கிப் பிடிப்பபவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றாகும். இதை ஏற்றுக் கொள்வார்களா?

விமர்சனம் என்று வந்ததும் அந்தச் சொல்லுக்கு இந்தப் பொருளைத்தான் பயன்படுத்த வேண்டும், அது தான் சரியானது என்று அடம்பிடிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். குரான் 1400 ஆண்டுகளுக்கு முன் இறங்கி(!) அந்தப்படியே பாதுகாக்கப் படுகிறது என்று நம்புகிறீர்கள் தானே. குரான் இறங்கியபோதே நவீன அறிவியல் கூறுகளை தன்னுள் கொண்டிருந்தது என்று நம்புகிறீர்கள் தானே. அப்படி என்றால் குரான் இறங்கிய காலத்தில் இந்த ஹவா எனும் சொல்லுக்கு மறைகின்ற எனும் பொருள் இருந்தது என்று காட்ட வேண்டியது உங்கள் கடமையல்லவா? எங்கே, 1400 ஆண்டுகளுக்கு முன் அரபு மொழியில் இருந்த இலக்கண, இலக்கிய நூல்களில் ஹவா எனும் சொல்லுக்கு மறைகின்ற எனும் பொருள் இருந்தது என்று ஒற்றை ஒரு மேற்கோளையேனும் காட்ட முடியுமா உங்களால்? அப்படி எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது என்றால் – அது நண்பர் இஹ்சாஸ் என்றாலும், எப்பேற்பட்ட மத அறிஞராக இருந்தாலும் சரி – நீங்கள் கூறுவது வெறும் சப்பைக்கட்டு என்பதைத்தாண்டி வேறொன்றுமில்லை.

இப்போது நேரடியாக அந்த வசனத்துக்கு வருவோம். இதுவரை அந்த வசனத்தை மொழிபெயர்த்தவர்கள் மறைகின்ற எனும் பொருளில் மொழிபெயர்த்திருக்கிறார்களா? விழுகின்ற எனும் பொருளில் மொழிபெயர்த்திருக்கிறார்களா? அந்த வசனத்தை மொழிபெயர்த்த பெரும்பாலானோர் வீழ்கின்ற நட்சத்திரம் என்றே மொழிபெயர்த்திருக்கின்றனர். ஆனால் பிஜே மறைகின்ற என்று மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் இஹ்சாஸ் போன்றோருக்கு பிஜே கடைசி நபியல்லவா? அதனால் தான் அந்த சொல்லுக்கு மறைகின்ற என்பது தான் பொருள் என அடம்பிடிக்கிறார். அந்தச் சொல்லை இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால் குரானில் ஏறக்குறைய 39 இடங்களில் ஹவா எனும் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளில் ஓரிரு இடங்களைத் தவிர ஏனைய இடங்கள் அனைத்திலும் ஆசை கொள்ளுதல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு இடத்தில் மறைதல் எனும் பொருளுக்கு நெருக்கமான பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 20:81 ல் 17 ஆவது சொல்லாக ஹவா எனும் சொல் அழிந்து விடுவான் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வேடிக்கை என்ன தெரியுமா? இந்த வசனத்தை மொழிபெயர்த்த பிஜே அவன் வீழ்ந்து விட்டான் என்று மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி என்றால் மறையும் நட்சத்திரம் எனும் பொருளை எப்படி எடுத்தாண்டார் பிஜே. வேறொன்றுமில்லை, அந்த இடத்தில் வீழ்கின்ற என்று குரான் பயன்படுத்தியிருக்கும் சொல்லாட்சி தவறானது பொருத்தமற்றது என்பதை பிஜே உணர்ந்திருக்கிறார். அறிவியல் ரீதியாக அது தவறான சொல் என அவர் உணர்ந்ததால் தான் பொருளை மாற்றி விட்டார். இதனை பிடித்துக் கொண்ட இஹ்சாஸ் போன்றோர் அது மறைகின்ற நட்சத்திரம் என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். என்ன சொல்வது? பரிதாபம் தான்.
 ihsas star hathith
இரண்டாவதாக, 67:5 இல் குறிப்பிடப்பட்டிருக்கும் சைத்தானை விரட்டப்பயன்படும் எறிகற்கள் தான் நட்சத்திரங்கள் என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் நண்பர் இஹ்சாஸ் கூறியிருப்பது என்ன? சைத்தானை நட்சத்திரங்கள் துரத்தும் நிகழ்வு பூமிக்கு மேலாக இருக்கும் வானத்தில் இல்லை, அது நம் கண்னுக்கு தெரியாத எல்லையில் நிகழும் நிகழ்வு என்று மட்டும் கூறிவிட்டு கடந்து செல்கிறார். முதல் கருத்துக்கு பொருள்மாறாட்டம் குறித்து மட்டும் கூறிவிட்டு அது எப்படி அறிவியல் பார்வையாக இல்லாமலிருக்கிறது என்பது குறித்து எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டாரோ அதுபோலவே இதிலும் நம் கண்ணுக்கு தெரியாத எல்லையில் நடப்பது என்று மட்டும் கூறிவிட்டு கடந்து செல்கிறார்.

நண்பர் இஹ்சாஸ் பூமிக்கு அருகிலுள்ள வானம், முதல் வானத்தில் எல்லை. என்றெல்லாம் வானம் குறித்த தன்னுடைய விசாலமான அறிவை வெளிப்படுத்துகிறார். ஆதாவது ஏழு வானங்கள் இருப்பதாக கூறப்படும் இஸ்லாமிய கருத்தியலைத்தான் நண்பர் இங்கு குறிப்பிடுகிறார். வானம் எனும் சொல்லை குரான் என்னென்ன பொருளிலெல்லாம் பயன்படுத்தியிருக்கிறது என்பதை ஊன்றிக் கவனிக்கட்டும், நண்பர் இஹ்சாஸ் தலை சுற்றி விழுந்துவிடுவார். அந்த அளவுக்கு குழப்புகிறது குரான்.

நட்சத்திரம், சைத்தான் ஆகியவற்றின் அளவுகள் என்ன? ஒரு மனிதனின் மனதில், எண்ணத்தில் அல்லாவின் நினைவை மறக்கடிக்கடிப்பது தான் சைத்தானின் முதன்மையான நோக்கம் எனும்போது சைத்தானின் அளவு பிரமாண்டமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நட்சத்திரங்களின் அளவோ சைத்தானுடன் ஒப்பிடும் போது மிகப் பிரமாண்டமானது. பூமியொடு ஒப்பிடும் போது மனிதனின் (சைத்தானின்) அளவு தூசு. நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது பூமியே தூசு. இப்படி அற்பத்திலும் அற்பமான ஒன்றை விரட்ட எரிந்து கொண்டிருக்கும் பிரமாண்டத்திலும் பிரம்மாண்டமானதை கொண்டு விரட்டுகிறான் என்றால் அப்படியானவனை மனநோயாளி என்று குறிப்பிட்டால் அதில் பிழை இருக்க முடியுமா? சிற்றெறும்பை நசுக்க பூமியோடு சந்திரன் மோத வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அறிவீனவோ அதைவிட அறிவீனமானது சைத்தானை விரட்ட நட்சத்திரங்கள் என்பது.

மூன்றாவதாக 81 வது அத்தியாயத்தில் இருக்கும் முதலிரண்டு வசனங்களை எடுத்துக் கொள்வோம். சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிரும் போது. இதற்கு நண்பர் இஹ்சாஸ் கூறிய பதில் என்ன? ஒரே ஒரு எடுத்துக்காட்டு அவ்வளவு தான் வேறொன்றுமில்லை. எடுத்துக்காட்டு கொடுக்கும் போதுகூட பொருத்தத் தெளிவு வேண்டும் என்பது நண்பர் இஹ்சாஸுக்கு தெரியாத விசயம் போலும். செங்கொடிக்கு நினைவுச் சின்னமும், ஏனைய கம்யூனிஸ்டுகளுக்கு பொன்னாடையும் அணிவித்தால் (இவ்வாறு செய்வதில் உடன்பாடில்லை என்பது வேறு விசயம் – இது வாதத்திற்காக) அவர்கல் வேறு வேறு என்று யாருக்கும் ஐயம் வராது. அனைவரும் கம்யுஜ்னிஸ்டுகள் என்பதிலும் சிக்கல் ஒன்றுமில்லை. ஆனால், குரானின் நிலை அப்படி அல்லவே. குரான் எந்த இடத்திலாவது சூரியனும் ஒரு நட்சத்திரம் எனும் பொருளில் குறிப்பிட்டுள்ளதா? இல்லை, எந்த மதவாத அறிஞரும் அப்படி ஒரு வசனத்தை குரானிலிருந்து காட்ட முடியாது. அதேநேரம் குரான் சூரியனையும் நட்சத்திரங்களையும் பிரித்தே குறிப்பிடுகிறது என்பதற்கு அனேக வசனங்களைக் காட்ட முடியும். இந்த அடிப்படையிலிருந்து பார்த்தால் தான் அல்லா ஏன் சூரியனைச் சுருட்டுகிறான், நட்சத்திரங்களை உதிரச் செய்கிறான் என்பதற்கான பொருள் முழுமைப்படும். நட்சத்திரங்கள் புள்ளியைப் போல் மினுக்கிக் கொண்டிருக்கின்றன எனவே அவைகளை சுருட்டமுடியாததாகையால் உதிரவைக்கப்படுகின்றன. ஆனால் சூரியன் உருவத்தில் பெரியதாயிருக்கிறதே, அதனால் தான் சுருட்டப்படுகிறது. இதைத்தவிர வேறு விளக்கங்கள் எதுவும் இல்லை. இருப்பதாக கருதினால் நண்பர் இஹ்சாஸ் முன்வைத்துப் பார்க்கட்டும், பின்னர் பார்க்கலாம்.

இந்த மூன்று அம்சங்களும் அல்லாது, நட்சத்திரங்கள் ஏன் உருவாக்கப்பட்டிருக்கின்றன? எனும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமான புஹாரியில் காணப்படும் குறிப்பையும் முன்வைத்திருந்தேன். இதை முன்வைத்ததற்கு தனிச்சிறப்பான காரணமும் இருக்கிறது. அதாவது சூரியன் நட்சத்திரம் அல்ல என்பதற்கும் இது ஒருவிதத்தில்க் ஆதாரமாக இருக்கிறது. எப்படி என்றால், நட்சத்திரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பலன்கள் எனக் குறிப்பிடப்படும் மூன்றில் சூரியனின் பயன் சேரவில்லை என்பதற்காகத்தான் அதைக் குறிப்பிட்டிருந்தேன். இவை குறித்தெல்லாம் நண்பர் இஹ்சாஸுக்கு சிந்திப்பதற்கு நேரமிருக்குமா என்ன? மண்டபத்தில் யாரோ இதற்கு மறுப்பெழுதுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார்கள். அதனால் எழுதத் தொடங்கி பின் பாதியிலேயே கைவிட்டுவிட்டார். இதற்கும் ஏதாவது மறுப்பு தெரிவித்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. பரிதாபமாகத்தான் இருக்கிறது நண்பர் இஹ்சாஸைப் படிக்கும் போது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக