செவ்வாய், 3 ஏப்ரல், 2012

பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்




சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


வால்மீன்கள் தென்படா யாசிப்போர் மரித்தால் !
வானகமே மின்னி முழக்கும் மாவேந்தர் சாவை !
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

காலவெளிப் பிரபஞ்சத்தில்
வால்மீன்கள்
பால் ஒளிவீசும் விந்தையாய் !
பரிதி ஈர்ப்பு வலையில்
ஈசலாய்த்
திரிபவை வால்மீன்கள் !
வையகத்தில் உயிரினம் வளர
விதை யிட்டவை !
பரிதியை நெருங்கும் போது
வால்மீனின்
நீண்ட ஒளிவால்
நமது பூமியைத் தொடுமென
நர்லிகர் கூறுகிறார் !
வால்மீன் ஹார்ட்லியில்
சையனைடு
வாயு வெளியேறும் !
வால்மீனில் எழுந்திடும்
வாயுத் தூள்களை
வடிகட்டிப் பிடித்து வந்தார் !
வால்மீன்
வயிற்றில் எறிகணை ஏவி
உட்கருவை ஆராயும்
ஓர் விண்ணுளவி !
அதே ஆழ்மோதி விண்கப்பல்
அடுத்தோர்
வால்மீனைச் சுற்றி
ஆய்வு செய்யும் இப்போது !

++++++++++++++++

வால்மீன்கள் பூமியில் மோதிய அந்தப் பேரதிர்ச்சி உதைப்படியிலும், பூதளக் கொந்தளிப்பு நிலையிலும் உயிரின ஆக்கச் செங்கல்கள் உடையாமல், சிதறாமல் அப்படியே திரட்சியாய் இருந்தன என்பது மெய்யென்று எமது ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.  வால்மீன்கள் என்பவை உயிர்த் தோற்ற இரசாயன வளர்ச்சிக்கு மூலாதாரமான அந்த உட்கூறுகளைக் பூமியில் கொட்டும் ஓர் பூரணப் பெட்டகம்.  நாங்கள் வால்மீன்களை நாடுவதற்குக் காரணம், அவற்றில் அமினோ அமிலங்கள், நீர் வெள்ளம், எரிசக்தி (Amino Acids, Water, Energy) ஆகிய மூன்றும் பேரளவில் இருப்பதால்.
டாக்டர் ஜென்னிஃபர் பிளாங்க் (ஆய்வுக் குழு தலைவி)


முன்னுரை :  பல மில்லியன் மைல்கள் நீண்ட வாலுடைய வால்மீன்கள் உறைந்து போன வாயுக்கட்டிகள், பனிநீர்த் தொட்டிகள், தூசிக் களஞ்சியங்கள், பாறைகள் சுமந்து கொண்டு சூரியனைச் சுற்றிப் போகும் ஒருவித அண்டவெளிக் கோள்கள்.  அது பரிதியைச் சுற்றும் போது அதன் நீண்ட வால் பூமியைத் தடவிச் செல்கிறது என்று இந்திய வானியல் விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். விஞ்ஞானிகள் அண்டவெளி வால்மீன்களை “அழுக்குப் பனிப் பந்துகள்” (Dirty Snowballs) என்று கேலியாகக் கூறுவார்.  இந்த் பனிப் பந்துகள் 10 அல்லது 10 மைலுக்கு மேற்பட்ட விட்டம் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்.  பரிதி மண்டலத்துக்கு அப்பால் உள்ள ஓர்ட் முகில் தொகுப்பிலிருந்து (Oort Cloud) அவை கிளம்பி வழிதவறி நழுவி நமது சூரிய மண்டலத்தின் ஈர்ப்பில் பிடிபட்டுச் சுற்றுபவை என்றும் அறியப்படுகிறது.  ஒரு சீரிய சுற்று விதியைப் பின்பற்றி ஒருசில வால்மீன்கள் மீண்டும் மீண்டும் பரிதியை வலம் வருபவை என்பது தெரிகிறது.
2012 மார்ச்சில் கூடும் அமெரிக்கன் இரசாயனக் குழுவகம் (American Chemical Sosiety) தனது 243 குழு ஒருங்கிணைப்பில் மேலும் சில புதிய கருத்துகளுக்கு ஆதாரம் அளிக்கிறது.  பில்லியக் கணக்கான ஆண்டுகட்டு முன்பு பூமியை அடுத்தடுத்துத் தாக்கிக் கொண்டிருந்த வால்மீன்கள் பூதள உயிரினங்களின் விருத்திக்கு வேண்டிய உபரி இரசாயன மூலங்களையும், உட்கூறுகளையும் (Ingredients) சுமந்து போய்ப் பூமிக் கோளில் உயிர்கள் பூத்தெழக் கொட்டின என்பதை உறுதிப் படுத்துகிறது.  உலகிலே மிகப்பெரிய அந்த அமெரிக்கக் கருத்தரங்குக்குச் சுமார் 15,000 விஞ்ஞானிகள் வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவர்கள் வாசித்து வெளியிடப் போகும் விஞ்ஞானத தலைப்புகள், கண்டுபிடிப்புகள் சுமார் 11,700 அளவு எண்ணிக்கை என்றும் தெரிகிறது.


விஞ்ஞானி ஜென்னிஃபர் பிளாங்க்கின் சமீபத்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன ?
மூன்றரை பில்லியன் ஆண்டுகட்கு ஈசல்கள் போல் வால்மீன்களும், முரண்கோள்களும் (Asteroids) பூமியை மீண்டும் மீண்டும் பேரளவில் தாக்கின.  அவற்றின் ஆழ் தடங்கள், குழிகள் இப்போதும் நிலாவின் பின்புறத்தில் தெரிகின்றன.  விஞ்ஞான ஆதாரங்கள் மூலம் பூமியில் உயிரினங்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உதித்தாக அறிய வருகிறது.  அப்படியானால அப்போது நீர், அல்லது புரோட்டின் ஆக்கும் அமினோ அமிலங்கள் இருக்க எந்த ஆதாரமுமின்றி அத்தனை சீக்கிரம் எப்படி உயிரினம் தோன்றி இருக்க முடியும் ?  காலிஃபோர்னியா நாசா-அமெஸ் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஜென்னிஃபர் பிளாங்க்கும் அவரது சகாக்களும் வால்மீன் மோதலுக்குப் பிறகு உயிரினச் செங்கற்கள் எனப்படும் அமினோ அமிலங்கள் முழுமைத் திரட்சியாய் இருந்தனவா என்று சோதிக்க ஆரம்பித்தனர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நாசா விண்ணுளவி பூமிக்குக் கொண்டுவந்த வால்மீன் தூசியில் விஞ்ஞானிகள் அமினோ அமிலங்கள் இருப்பதை உறுதிப் படுத்தினார்.  இப்போது ஆய்வாளர் ஒரு சோதனையில் ஆற்றல் மிக்க எரிவாயுத் துப்பாக்கிகளைப் (Gas Guns) பயன்படுத்திப் பூர்வ பூமியில் அப்போதிருந்த பேரளவு உஷ்ணத்தை உண்டாக்கவும், பேரதிர்ச்சி எழுப்பவும் ஆய்வுக் கூடத்தில் பெரு முயற்சி செய்தார்கள்.
ஆயிரக் கணக்கான கிலோ கிராம் எடையுள்ள எரிவாயுத் துப்பாக்கிகளைப் போலி அண்டங்களில் ஒலிகடந்த வேகத்தில் (Supersonic Speed) மோத விட்டுப் பேரழுத்தத்தில் வெடி அதிர்ச்சிகள் ஏற்படுத்தினர். அந்த வேகத்தில் எரிவாயுத் துப்பாக்கிகள் அமினோ ஆசிடுகள், நீர் மற்ற பண்டங்கள் இட்ட சிமிழ்களைச் சுட்டன.  விளைவுகள் என்ன ? அமினோ ஆசிடுகள் உஷ்ணத்தாலோ, அதிர்ச்சியாலோ மோதலில் உடைய வில்லை.  அவை அமினோ ஆசிட்களைப் பிணைத்து புரோடின் ஆக்கும் ‘பெப்டைடு இணைப்புகளை’ (Peptide Bonds) உண்டாக்கின.  பல்லாண்டுகளாக வால்மீன்கள், முரண்கோள்கள், எரிகற்கள் (Comets, Asteroids amd Meteorites) ஆகிய மூன்றும் பன்முறை தம் பளுக்களை இறக்கி விதைத்தன வென்று ஜென்னிஃபர் பிளாங்க் ஆலோசனை கூறுகிறார். புதிய ஆய்வின் மற்றோர் கண்டுபிடிப்பு என்ன வென்றால் 2.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னேதான் கொந்தளிப்பு ஏறி இறங்கிய சூழ்நிலையில் உயிர்வளி என்னும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) நமது புவிக்கோளில் சேரத் துவங்கியது என்றும் அறியப் படுகிறது.

பூர்வ பூமி மீது வால்மீன்கள் மோதிய கணிப்பு வேகம் சுமார் மணிக்கு 25,000 மைல். வால்மீன்கள் ஆய்வுக் குழுவின் தலைவி ஜென்னிஃபர் பிளாங்க ஆய்வுக் கூடத்தில் சோதனை முறைகளை உருவகித்துக் வான்மீன்களின் உடலிலுள்ள் நிபந்தனை நிலைகளை உண்டாக்கிக் கணனி மாடல்களைத் தயாரித்துப் புதிதாய்க் கூறுவெதன்ன இப்போது ?  அவரது ஆய்வு முடிவுகள் விரிவான விஞ்ஞான் முயற்சியின் ஒரு பகுதியே யாகும்.  பல பில்லியன் ஆண்டுகட்கு முன்னே பாலையாய்க் கிடந்த பூர்வ பூமியில் எவ்விதம் அமினோ அமிலங்கள் புரோட்டின்களை உண்டாக்கின என்பதே அவரது ஆய்வின் முக்கியக் குறிக்கோள். அந்தப் புரோட்டின்களே நுட்ப ஜந்துக்கள் முதல் மானிடர் வரை எல்லாவித உயிரினங்களைப் படைக்கும் “வினைக் குதிரைகள்” (workhorses) என்பதும் தெளிவாய் உறுதியாயின.
அண்டார்க்டிக் ஏரியில் உயிரின மூலவிகள் எப்படிப் பூமியில் தடம் வைத்தன என்பதற்குச் சான்றுகள்
2011 ஏப்ரலில் அண்டார்க்டிக் ஏரியில் பூர்வ பூமியின் அடிப்படை ஜீவ மூலவிகள் (Primitive Life Forms) வளர்ச்சி யுற்றதற்குச் சான்றுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  காலிஃபோர்மனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதள உயிரியல் விஞ்ஞானி (Geobiologist) டான் ஸம்னரும் (Dawn Sumner) அவரது துணைக் குழுவினரும் அண்டார்க்டிக்கில் உள்ள அண்டர்சீ ஏரியில் (Lake Untersee) ‘ஒளிச்சேர்க்கை நுண்ணுயிர் நீர்த்தடாக வளர்ச்சிகளைக்’ (Photosynthetic Microbial Stromatolites) கண்டுபிடித்துள்ளார்.  அந்தக் கடல் வளர்ச்சிகளை அடுக்கடுக்காய் கடல் அடித்தளத்திலிருந்து மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வளர்த்திருப் பவை பாக்டீரியாக்கள்.  அவை இப்போது புராதனப் பழஞ் சின்னமாய்ப் (Fossil) பூர்வ ஜந்துக்களின் சான்றாய்ப் பதிவு செய்யப் பட்டுள்ளன.  கிழக்கு அண்டாக்டிகாவின் மிகப் பெரிய பரப்பளவு ஏரியான அண்டர்சீ ஏரி கடல் மட்டத்துக்குச் சுமார் 560 மீடர் (1900 அடி) உயரத்தில் உள்ளது,  அதன் பரப்பு 11.5 சதுர கி.மீடர்.  கடலில் பாக்டீரியாக்கள் விளைவிக்கும் பவளக் கொத்துகளை ஒத்தவை இந்த் நீர்த்தடாக வளர்ச்சித் தூண்கள்.  இவை பஹாமாஸ், தென்கரை ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில கடற் பகுதிகளில் மட்டுமே இப்போது காணப் படுகின்றன.  அண்டார்க்டிக் தூயநீர் ஏரியிலும், ஆன்டிஸ் மலை உப்புநீர் ஏரிகளிலும் அவை தென்படுகின்றன.


வால்மீன்களின் வானியல் போக்கை வகுத்த விஞ்ஞான மேதைகள்
2300 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க மேதை அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)]  வால்மீன்களைப் பற்றித் தெளிவாகத் தனது அரிய கருத்துக்களைக் கூறி யிருக்கிறார்!  வால்மீன்கள் விண்வெளி நிற வீச்சு [Aurora, Northern Lights] எரிமீன் [Shooting Star] போன்றவை  என்று அரிஸ்டாடில் விளக்கினார்! ‘பித்தகோரியர் [Pythagoreans] எனப்படும் சில இத்தாலியர்  வால்மீனை அண்டக் கோள் எனக் கருதியது சரியல்ல! வால்மீன்கள் நீண்ட கால  இடைவெளியில் தோன்றி மறைபவை. அவை தொடுவானுக்குச் சற்று மேலே மட்டும்  தென்படு பவை. வால்மீன்கள் வாயுக் கற்களும், ஆவிகளும் [Airy Meteors & Vapours]  கொண்டவை ‘ என்றும் அரிஸ்டாடில் கூறினார்! புதிரான வால்மீன்களைப் பற்றிய அரிய  கருத்துக்கள் பண்டைக் காலம் தொட்டே கிரேக்கர்களிடம் இருப்பினும், பிற்காலத்தில்  மகத்தான அதன் விஞ்ஞானம் தொடரப் படாமல் புறக்கணிக்கப் பட்டு விட்டது என்று  கவலைப் படுகிறார், வானியல் வல்லுநர் எட்மண்ட் ஹாலி!
1540 இல் முதன் முதலாக வால்மீன் நகர்ச்சியைத் தொடர்ந்து கண்களால் நோக்கிப் படங்கள்  வரைந்தவர், ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் [Peter Appian (1501-52)]. வால்மீனின்  வால் எப்போதும் பரிதிக்கு எதிராகவே நீண்டிருக்கும் என்பதை முதலில் எடுத்துக்  காட்டியவரும் அப்பையனே!


1577 இல் டென்மார்க் விஞ்ஞானி டைசோ பிராஹே [Tycho Brahe] ஒளி மிக்க ஓர்  வால்மீனைக் கண்டு, ஒரு நாள் தொடர்ந்து நோக்கியதில் இடத்திரிபு [Diural Parallax]  இல்லாமல் இருப்பதைப் பார்த்து, அது பூமிக்கு நிலவை விட வெகு தூரத்தில்  இருப்பதாகவும், அது சூரிய மண்டலத்தின் ஓரண்டம் என்றும் கூறினார்! நூறாண்டுகள்  கழித்து நியூட்டனின் ஆப்த நண்பர், எட்மண்ட் ஹாலி வால்மீன்கள் யாவும் சூரிய  குடும்பத்தின் கோள்கள் என்பதை முதன் முதல் நிலைநாட்டினார்! வான வீதியில் சென்ற  24 வால்மீன்களின் நகர்ச்சி வீதிகளை [Orbits] 1705 இல் நியூட்டன் நியதிப்படிக் கணக்கிட்டு  எட்மண்ட் ஹாலி, அவற்றின் சுற்று வீதிகளைக் கணித்து, ‘வால்மீன்களின் வானியல்  சுருக்க வரலாறு ‘ [A Synopsis of the Astronomy of Comets] என்னும் அரிய விஞ்ஞான நூலைப்  படைத்தார்!
வால்மீன்களின் போக்கை ஆராய்ந்த விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி
முதலில் நியூட்டன்தான் வால்மீன்கள், அண்டக் கோள்களைப் போல் நீள்வட்ட வீதியில்  செல்கின்றன என்று கணித்துக் காட்டியவர்! சில வால்மீன்களின் பாதை வளைநீட்சி [Ellipticity] நீண்டு பிறைவளைவு வீதியை [Parabolic Orbit] நெருங்குகிறது என்று கூறினார்!  வால்மீனின் மூன்று நகர்ச்சி இடங்களை நோக்கிக் குறித்து, அதன் சுற்று வீதியைக்  கணித்திட நியூட்டனே முதலில் வழி வகுத்தார்!
ஆனால் எட்மண்ட் ஹாலியே வால்மீன்களின் போக்கை வரையறுத்து, விபரங்களைச்  சேமித்து நூல் எழுதி வெற்றி பெற்றவர்! ஹாலி நியூட்டனின் தத்துவங்களைப்  பயன்படுத்தி, மெய்வருந்தி உழைத்து 24 வால்மீன்களின் நகர்ச்சிகளை ஒப்பிட்டுக் கணித்து  சுற்று வீதிகளைத் தீர்மானித்தார்! அவற்றில் மூன்று வால்மீன்கள் ஒரே மாதிரியானவை  எனக் கண்டு மூன்றும் ஒன்றே என்று முடிவு செய்தார்! மூன்றில் முதலான வால்மீனை  1531 இல் ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் நோக்கினார்! இரண்டாவது ஒன்றை 1607  இல் ஜொஹான் கெப்ளர் [Kepler] கண்டார்! மூன்றாவது ஒன்றை ஹாலியே 1682 ஆம்  ஆண்டில் கண்டார்! அதுவே ஹாலின் பெயரைப் பெற்றது! ஹாலி கண்டு பிடித்ததால்  அந்த வால்மீன், அவரது பெயரை அடைய வில்லை! மீண்டும் 1758 இல் அது வரும்  என்று ஹாலி உறுதியாகக் கூறி, அது மெய்யாக 1758 இல் திரும்பியதால், அந்த  வால்மீனுக்கு ஹாலியின் பெயர் இடப் பட்டது! 1758 ஆண்டில் ஐந்து மாதங்களுக்கு  வால்மீன் பலரது கண்ணில் தென்பட்டது!


நீள்வட்ட வீதியில் பரிதியை மையமாகக் கொண்டு பெரும் பான்மையான வால்மீன்கள்,  குறிமையத்திலிருந்து [Focus] பல மில்லியன் மைல் தூர நீள் ஆரத்தில் [Aphelion] சுற்றி  மீண்டும் பூமியை நோக்கி வருகின்றன! ஆனால் அவை சுற்றி வரும் பாதைகள், பரிதிக்குச்  சீரான முறையில் இல்லாது, முரணாகவே அமைகின்றன! விண்வெளிச் [Interstellar] சேர்ந்த  வால்மீன்களாக இருந்தால், அவை இணையும் நீள்வட்டத்தில் [Closed Ellipse] சுற்றாமல்,  பிறைவளைவு [Parabola] அல்லது விரிவளைவு [Hyperbolic Orbits] வீதிகளில் பயணம் செய்து,  பரிதியை ஒரு முறை வலம் வந்த பின், மீண்டும் அவை வரமாட்டா! மேலும்  விண்வெளியைச் சேர்ந்த வால்மீன்கள், பரிதி நகரும் அதே திசையில்தான் அவையும்  பயணம் செய்து, சூரிய மண்டலத்தில் நுழைகின்றன! சூரியனின் சுழலீர்ப்பு விசையால்  [Centripetal Force] தூரத்தில் பயணம் செய்யும் அன்னிய வால்மீன்கள், பரிதியை நோக்கி  இழுக்கப் படுகின்றன! பூதக்கோள் வியாழன் மூட்டும் சனிக்கோளின் ஒழுங்கற்ற  நகர்ச்சியால், அருகே நீள்வட்டத்தில் செல்லும் ஓர் வால்மீனின் நகர்ச்சி தடுமாறி, வேகம்  மாறுபட்டு, பாதை வேறுபட்டு பிறைவளை வாகிறது.
வால்மீன்களின் பிறப்பும், அவற்றின் விந்தை அமைப்பும்!
வானியல் வல்லுநர் ஃபிரெட் விப்பிள் [Fred Whipple], வால்மீன்கள் விண்கற்களும், தூசிப்  பனிக்கட்டிகளும் [Rocks & Dusty Ice] மண்டிய ‘குப்பைப் பனிப்பந்துகள் ‘ [Dirty Snowballs] என்று  கூறுகிறார்! புதிராகவும், மர்மமாகவும் காணப்படும் வால்மீன்கள் எப்படித் தோன்றுகின்றன  ? விண்வெளியில் புற்றீசல்கள் போலக் கிளம்பும் வால்மீன்கள் எங்கிருந்து எழும்புகின்றன  ? வால்மீன் உடம்பில் என்ன பொருட்கள் இருக்கின்றன ? கண்கவரும் ஒளி அதற்கு எப்படி  உண்டாகிறது ? வால்மீன்களை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் சேமிப்புக்  கோளம் பரிதிக்குப் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால், புளுடோவைத் [Pluto] தாண்டி  இருப்பதாக யூகிக்கப் படுகிறது! அந்த சேமிப்புக் கோளம் ‘ஓர்ட் மேகம் ‘ [Oort Cloud] என்று  அழைக்கப் படுகிறது! அதை யூகித்த ஜான் ஓர்ட் [Jan H. Oort] வானியல் வல்லுநரின்  பெயரில் அது குறிப்பிடப் பட்டது. தேனீக்களின் கூடு போன்ற அந்த கூண்டில் சுமார் 100  பில்லியன் வால்மீன்கள் அடங்கி இருக்கலாம் என்று ஓர்ட் கருதினார்! அடுத்து நெப்டியூன்  கோளைத் தாண்டி ‘கியூப்பர் வளையம் ‘ [Kuiper] ஒன்று இருப்பதாக யூகிக்கப் பட்டது!  சுற்றுக் காலம் [Period] 200 ஆண்டுகளுக்கு மேலான வால்மீன்கள் ஓர்ட் மேகத்திலிருந்து  வருவதாகவும், சுற்றுக் காலம் 200 ஆண்டுகளுக்குக் குறைந்தவை கியூப்பர்  வளையத்திலிருந்து கிளம்புவதாகவும் அனுமானிக்கப் படுகிறது!


ஓர்ட் மேகக் கூண்டுக்கு அருகிலோ, அல்லது கியூப்பர் வளையத்திற்கு அண்டையிலோ  போகும் விண்மீன்கள் வால்மீன் ஒன்றை இழுத்து வீசி எறியும் போது, சூரிய  மண்டலத்துள் விழுந்தால், அதன் ஈர்ப்பியல் பிடியில் மாட்டிக் கொண்டு, அது நீள்வட்ட  வீதியில் சுற்ற ஆரம்பிக்கிறது! வீசி எறியும் வேகம் அதிகமானால், வால்மீனின் சுற்று வீதி  பிறைவளைவிலோ, அல்லது விரிவளைவிலோ மாறிச் பரிதியைச் சுற்றிச் செல்கிறது!
வால்மீன் தலையின் நடுவே திடவமான ‘உட்கரு ‘ [Nucleus] உள்ளது. ஹாலி வால்மீனின்  உட்கரு சுமார் 9 மைல் அகண்டது! அட்டக் கரியான உட்கருவில் கரி [Carbon] மிகுதியாக  உள்ளது! கரியை மூடிய பனித் தோல் மீது, கற்தூசிகள் படிந்துள்ளது போல் தோன்றுகிறது!  அதன் வாலின் நீளம் 1910 இல் வந்த போது 37 மில்லியன் மைல் நீண்டிருந்தது! ஹாலி  வால்மீனின் முழு நிறை 25 மில்லியன் டன் என்று அமெரிக்க வானியல் நிபுணர் ஹென்ரி  ரஸ்ஸெல் [Henry N. Russell (1877-1957)] விஞ்ஞானி மதிப்பீடு செய்தார்! வால்மீனின் தலைப்  பரிதியை நெருங்கும் போது, அதன் உஷ்ணம் 330 டிகிரி கெல்வின் [330 K] ஏறியதாக  அறியப்படுகிறது! பரியின் ஒளியை எதிர்ப்படுத்தியே வால்மீன் ஒளி வீசுகிறது! அதற்குச்  சுய ஒளி கிடையாது! 400 மைல் அகண்ட உட்கரு கொண்ட விண்மீன்களும்  விண்வெளியில் உள்ளன! துணைக் கோள் [Satellite] மூலம் நோக்கியதில் உட்கருவைச்  சுற்றிலும் ஹைடிரஜன் வாயுக் கோளம் பேரளவில் சூழ்ந்துள்ளது என்று அறியப் பட்டது!  உட்கருவைச் சுற்றியுள்ள வாயுக் கோமா [Gaseous Coma] 80,000 மைல் விட்டமுள்ளது!  வாயுக் கோமாவில் மீதேன் [CH4], கார்பன் மொனாக்ஸைடு [CO], சையனஜென் [C2N2  Cyanogen] போன்ற வாயுக்கள் அடங்கி யுள்ளன!


வாலின் நீளம் 200 மில்லியன் மைல் கூட  விண்வெளியில் நீண்டிருக்கும்! பரிதியை நெருங்க நெருங்க வாலின் நீளம் அதிகமாகி,  அதை விட்டு விலக விலக வாலின் நீளம் குன்றிப் பரிதிக்கு வெகு தொலைவில்  வால்மீன் செல்லும் போது, வால் முழுவதும் இல்லாமல் போகிறது! அத்துடன் சூரிய ஒளி  மங்குவதால், வால்மீன் ஒளி யிழந்து சுற்றுகிறது. அப்போது மிகக் குளிர்ந்து போகும்  வால்மீன், தானாகச் சுய ஒளி வீசும் திறனற்றுப் போகிறது!
சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure]  வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது  சிறிதாய் நீள்கிறது! பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசியையும்  வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன! வாயுக்களும் மின் கொடை [Electrically charged]  பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன!


மெதுவாய் ஊர்ந்து வரும் வால்மீன், பரிதிக்கு அருகே வருகையில் வேகம் அதிகரிக்கப்  பட்டு, உச்சமாகி பரிதிக்கு அப்பால் போகும் போது, வேகம் சிறிது சிறிதாய்க் குறைகிறது!  வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச்  சுருங்கியும் போகிறது! அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின்  வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது! சூரியக் கதிரழுத்தம் வாலை அப்பால் தள்ளுவதால்,  வால்மீனுக்கு முன்னோக்கி உந்து விசை உண்டாகி, ஏவுகணை [Rocket] போல் விரைவாகச்  செல்கிறது!
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் [1986 February 9th] ஹாலி வால்மீன் கடைசியாகச்  சூரியனச் சுற்றிச் சென்றது. அதே ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ரஷ்ய விண்வெளி  ஆய்வுச்சிமிழ்கள் [Soviet Probes], வேகா-1, வேகா-2 [Vega-1, Vega-2], ஈரோப்பிய விண்வெளி  ஆணையகத்தின் [European Space Agency] ஆய்வுச்சிமிழ் கியாட்டோ [Giotto], இரண்டு ஜப்பானியரின் விண்சிமிழ்கள் ஆகியவை யாவும், வெகு தூரத்தில் ஹாலி வால்மீன்  போவதைப் படம் எடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக