செங்கொடி
இஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள். இந்தச் சட்டங்களை மனிதர்களுக்காக இயற்றித் தந்தது அல்லா தான். மனிதர்களில் எவருக்கும் சட்டங்கள் இயற்றும் தகுதி இல்லை மட்டுமல்லாது அவைகளை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எந்த மனிதருக்கும் அறுகதை இல்லை. இதை குரான் வசனங்கள் 5:48; 5:50 தெளிவுபடுத்துகிறது,
.. .. .. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் அவர்களின் மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். .. .. ..
அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
ஆக சட்டம் என்றால் அது முக்காலமும் உணர்ந்த, எல்லாவித ஆற்றல்களையும் தன்னில் அடக்கிக் கொண்டிருக்கிற அல்லாவால் மனிதர்களின் நல்வாழ்வுக்காக கொடுக்கப்பட்டது என்பதே பொருள். அதனால் தான் இஸ்லாமியர்கள் நடப்பிலிருக்கும் சட்டங்களை அவைகள் மனிதச் சட்டங்கள் எனும் போக்கில் அணுகுகிறார்கள். ஆனால் சட்டம் என்றால் என்ன? வரலாற்று அடிப்படையில் சட்டம் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?
மனிதர்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், ஒழுக்கமான, குறைகளற்ற வாழ்வை வாழ்வதற்கு தேவையான ஒழுங்கு நெறிகளைக் கொண்டது தான் சட்டம் என்று பெரும்பாலானோர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் மனிதன் ஓரளவுக்கு சமூகமாக வாழத் தொடங்கியது முதல் இன்று வரை சட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. என்றால் மனிதர்களிடையே பிணக்குகள் தீர்ந்து மகிழ்வான வாழ்வு வாய்க்கப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? உலகம் அவ்வாறு இல்லை என்பது தானே யதார்த்தமாக இருக்கிறது. இதற்கு இஸ்லாமிய மதவாதிகள் ஒரு விளக்கம் கூறக் கூடும், அவைகளெல்லாம் மனிதச் சட்டங்கள் இறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அவ்வாறான நிலை உருவாகிவிடும் என்று. ஆனால் இஸ்லாம் தோன்றிய காலம் முதல் அதாவது கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக சௌதி அரேபியாவில் (இஸ்லாம் எனும் மதம் தோன்றிய இடம்) இறைச் சட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. அங்கே நிலமை என்ன?
மனிதகுல வரலாற்றில் சட்டங்களின் பங்களிப்பு எப்போது தொடங்கியது? மனிதர்களிடையே வர்க்க பேதம் ஏற்பட்டு அவர்களிடையே மோதலும் ‘அரசு’ எனும் அமைப்பும் தோன்றிய பிறகே சடங்கள் தோன்றின. சட்டங்களின் பணி வர்க்க ஆட்சிக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் கிளர்ந்து விடாமல் அடக்குவதும், ஆட்சியை தக்கவைப்பதுமே. அதேநேரம் சட்டம் அனைவருக்குமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் பிரேமைகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டங்களின் நோக்கம் அனைவருக்கும் சமநீதியும், நியாயமும் வழங்குவது என்றால் அதன் விளைவுகள் சமூகத்தில் நிலவியிருக்க வேண்டும், சட்டத்தின் தேவை தீர்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் இன்னும் சட்டத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது என்றால், அதன் பொருள் சட்டங்களின் தேவை என்று மக்கள் எதை கருதுகிறார்களோ அதுவாக இல்லாமல் சட்டத்தின் உட்கிடை வேறாக இருக்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா? மட்டுமல்லாது, சமூகம் இன்னமும் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே சட்டத்தின் பயன் வர்க்க ஒடுக்குமுறை தானேயன்றி, சமநீதியல்ல என்பது புலனாகும். ஆனால் முக்காலமும் உணர்ந்தவராக, முக்காலத்தையும் உருவாக்குபவராக கூறப்படும் அல்லா சட்டத்தின் இந்த தன்மைகள் எதனையும் உணராது, அனைத்து மக்களுக்கும் பொது வானது, எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியது என்று கூறுவது பொருத்தமானதா? அல்லது முகம்மது தன்னுடைய வர்க்க நலன் பேணும் அரசை உருவாக்குவதற்காக சொல்லிய புனைவுகளா?
இப்போது திருமணம் செய்வது குறித்த சட்டங்களைப் பார்ப்போம். குரான் வசனம் 4:3 இப்படிக் கூறுகிறது,
அநாதைகளிடம் நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் வலக்கரங்களுக்கு சொந்தமானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அநியாயம் செய்யப்படாமலிப்பதற்குச் சுலபமான வழிமுறையாகும்.
இந்த வசனம் ஒரு ஆண் யாரை எப்படி திருமணம் செய்யலாம் என்பதைப் போதிக்கிறது. நான்கு பெண்கள் வரை ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கும் சட்டம் இது. மட்டுமல்லாது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களை திருமணத்திற்கு வெளியே பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்கிறது. வெளிப்படையான அடிமை முறை நடைமுறையில் இருந்தது இஸ்லாம் தோன்றி வளர்ந்த காலகட்டத்தில் தான். அதனால் தான் குரான் பல வசனங்களில் ஒரு மனிதனும் அடிமையும் சமமல்ல என்று கூறியிருக்கிறது.
முதலில், இது எக்காலத்திற்கும் பொருந்தும் சட்டமா? இப்போது வெளிப்படையான அடிமைகள் என்று யாருமில்லை. ஆனால் அல்லாவுக்கும் குரானுக்கும் இஸ்லாமியர்கள் கொடுக்கும் தகுதியின்படி பார்த்தால் வெளிப்படையான அடிமைகள் இல்லாத இன்றைய நிலை குறித்து அல்லா அன்று அறிந்திருக்கவில்லை. அல்லது, இது அன்றைய நிலையை மட்டுமே குறிக்கும் வசனம் என்றால் இன்றைக்கு பொருந்தாது. இரண்டில் எது சரி?
நான்கு திருமணம் வரை செய்து கொள்ள ஆண்களுக்கு ஏன் அனுமதி தந்திருக்கிறது என்றால் ஆணின் இச்சை தீர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்பதே. ஆணின் இந்த பலதார வேட்கையே இங்கு பொது விதியாக்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் இது ஆணின் நீதி தானே தவிர பெண்ணின் நீதியல்ல.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்வதற்கு ஆணுக்கு என்ன தகுதிகள் வேண்டும்? நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது குரான். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் புரிந்தால் முதல் மனைவிக்கு கொடுத்திருக்கும் அத்தனை வசதிகளையும் இரண்டாவது மூன்றாவது நான்காவது மனைவிகளுக்கும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க முடியாது போனால் அது அநீதி. இது தான் குரானின் நீதி. வெளிப்படையாகச் சொன்னால் காசு இருந்தால் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள். காசு இல்லாவிட்டால் .. .. ? ‘பட்டினி கிடந்து உன் இச்சையை குறைத்துக் கொள்’ என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இது பணக்காரனுக்கான நீதியா? ஏழைக்கான நீதியா?
எக்காலத்துக்கும் பொருந்தும் இறைவனின் நீதி என எம்பிக் குதிக்கும் மதவாதிகள், இப்படி பச்சையாக காசு உள்ளவனுக்கு ஒரு நீதி அது இல்லாதவனுக்கு ஒரு நீதி என்று பிரித்து பேதம் காட்டும் இந்த ஆண்டைகளின் நீதியைத் தான் எல்லோருக்கும் பொது நீதி என்று சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக