சனி, 20 அக்டோபர், 2012

தந்தை பெரியார் தமிழினத்தின் துரோகியா?

எழுகதிர் அருகோவின் அடாவடித்தனம்
                   தந்தை பெரியார் அவர்கள் தமிழின விடுதலைக்குக் குரல் கொடுத்த தலைவராவர். தமிழ்நாட்டு விடுதலைக்கு அவர் அளவுக்குக் குரல் கொடுத்தவர்களோ அதற்காகப் போராடியவர்களோ வேறு யாரும் இல்லை என்பதே உண்மை. அப்படிப் போராடிய பெரியாரை ‘எழுகதிர்’ இதழின் ஆசிரியர் அருகோ, “பெரியார் திட்டமிட்டே தமிழினத்தைச் சீரழித்த கன்னடியர் என்றும் பெரியார் வேண்டுமென்றே திராவிட நாட்டு கோரிக்கையை வைத்துத் தமிழினத்தைப் பலவீனப்படுத்தினார் என்றும், காஞ்சி பெரியவாள், பெரியார் என்ற இரு கன்னடர்களும் தான் தமிழகத்தை மேய்ந்து நாசம் செய்தவர்கள் என்றும் அக்டோபர் எழுகதிரில் எழுதியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் திரையுலகினரின் காவிரிப் போராட்டத்தை வலுவிழக்க வைக்க ரஜினி செய்த கீழ் அறுப்பு வேலைகளைக் கூறவந்த அருகோ வேண்டுமென்றே பெரியாரை வம்புக்கு இழுக்கிறார். இதோ அருகோவின் கூற்று:
“இக்கொடுமை இன்றல்ல, சென்ற நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. சென்ற 20ஆம் நூற்றாண்டிலும் இரு கன்னடர்கள்தாம் தமிழகத்தை மேய்ந்தார்கள். இதைச் சொல்கிறபோது பல தமிழர்களே நம்மீது பாய்வார்கள் என்று தெரியும் என்றாலும் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒருவர் காஞ்சி சங்கர மடத்திற்குத் தலைமை வகித்த மகாப் பெரியவாள் என்று அவர்களால் கொண்டாடப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் எனப்படும் கன்னடப் பார்ப்பனர். மற்றவர் பெரியார் ஈ.வெ.ரா எனும் பார்ப்பனரல்லாதாரின் படைத் தளபதி. ஆம்; இந்த சந்திரசேகரக் கன்னடர் தமிழ்நாட்டின் ‘மகாப் பெரியவாளாய்’ இவர் தலையெடுக்கும் வரை தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஓரளவு தமிழ்ப் பற்றுடனேயே இருந்து வந்தனர். இந்த ஆள் தான் முதன்முதலாக “தமிழை நீசபாஷை, ‘பூஜை வேளையில் அதிலே பேச மாட்டேன்’ என்று கூறியதுடன், ஆண்டாளின் திருப்பாவைப் பாடலில் வரும் “தீக்குறளைச் சென்றோதீர்” என்ற சொற்றொடரும் ‘தீமை பயக்கும் புறம் பேசாதீர்’ என்ற பொருளுக்கு மாறாக. ‘தீய திருக்குறளைப் படிக்க கூடாது’ என்று பொருள் சொன்னவராவர். அதுவரை தமிழ்ச் சைவ சிந்தாத்தத்திலும் ஆழ்வார்களின் அருளிச் செயல் வழிவந்த வைணவத்திலும் பிடிப்புக் கொண்டிருந்த தமிழ்ப் பிராமணர்களை வடமொழி மயப்பட்ட வைதிக சமயம் என்று தமிழுக்கு முற்றிலும் பகைவர்களாகவே மாற்றியதில் இக்கன்னடருக்கே பெரும் பங்குண்டு.
அதைப் போலவே பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் தான் பெருந்தலைவராக வளருகிற வரை தமிழிசை இயக்கம், தமிழ்மறை (திருக்குறள் பரப்பு) இயக்கம், தமிழ்நாடு விடுதலை இயக்கம் என்று தீவிரம் காட்டி முதலாவது இந்தி எதிர்ப்புக்குத் தலைமை தாங்கித் தமிழர் தந்தையாகவே பரிணமித்தவர். ஆந்திரரும் கன்னடரும் மலையாளிகளும் அன்றைக்கு நடைமுறையில் இருந்த திராவிட நாட்டை (சென்னைத் தலை மாகாணத்தை) மொழி வழியில் பிரிக்க வேண்டும் என்று போராடியபோது, திராவிட நாட்டுக் கோரிக்கையை முன் வைத்துத் தமிழர்களைத் திசை திருப்பினார் என்பதையும் மறந்து விட முடியாது. மற்றவர்கள் மொழிவழி மாநிலப் பிரிவினைக்காகக் களமிறங்கிய நேரத்தில் அதற்கு எதிர் திசையில் தமிழர்களைத் திராவிட நாட்டு பிரிவினைக்காகக் களமிறங்கச் செய்தவர் பெரியாரேயாவர்.
சரி! திராவிட நாட்டுக்காகக் குரல் கொடுப்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழ்ப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட குரல் கொடுத்தாரா என்றால் அதுவுமில்லை. மாறாகத் தேவிகுளம் பீர்மேட்டுத் தமிழர்கள் தாய்த் தமிழகத்துடன் இணையப் போராடிய போது அவை மலையாளிகளுக்கே சொந்தமானவை எனக் கூறினார். அதுமட்டுமல்ல அண்டை மாநிலத் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்த மா.பொ.சி. போன்றவர்களைப் “பார்ப்பனக் கைக் கூலிகள்” என்று கொச்சைப்படுத்தி எல்லை மீட்புப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தினார்...... கருநாடகத்தைச் சேர்ந்த தமிழ் பகுதிகளைத் தாய் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று போராட்டமே எழவில்லை என்பதையும் எண்ணிப் பார்த்தால் ஒரு கன்னடர் அன்று தமிழினத் தலைவராகக் காட்சியளித்ததுதான் காரணம் என்பது விளங்கும்.
இன்னும் சொன்னால் வளமான தமிழ்ப் பகுதிகள் தாய்த் தமிழகத்துடன் சேர்ந்து, தமிழகம் தன் சொந்தக் கால்களில் நின்றுவிடக் கூடாது; என்றைக்கும் தமிழ்நாடு அண்டை மாநிலங்களின் தயவில்தான் வாழ்ந்து வரவேண்டும் என்று திட்டம் போட்டே இந்த இரு கன்னடரும், ஆன்மீகத்திலும் லௌகீகத்திலும் தமிழர்களைத் திசை திருப்பினார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது” (எழுகதிர், அக்டோபர், பக். 10-12)
periyar_450பெரியாரையும் காஞ்சி சங்கராச்சாரியையும் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்பதற்காகவே பல வரலாறுகளை மூடி மறைக்கிறார் அருகோ. தமிழகத்தில் பல்லவராட்சியில் தொடங்கிய பார்ப்பனர் ஆதிக்கம் சோழர் ஆட்சியில் உச்சகட்டத்தை அடைந்தது. இராசராச சோழன் ஆட்சியில் பல ஆயிரம் பார்ப்பனக் குடும்பங்களை வரவழைத்து ஆலயங்களில் சமசுகிருதம் ஓதுவதற்காக அவர்களுக்குச் சமசுகிருத வேதப் பாடசாலைகளையும், ஏற்படுத்திக் கொடுத்து, கோவில்களில் முன்னர் இருந்த தமிழ் வழிபாட்டை முற்றும் அழித்தான். சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் தமிழில் வழிபாடு இல்லை என்பதே உண்மை வரலாறு.
அருகோ கூறுவது போல் கடந்த நூற்றாண்டு வரை பார்ப்பனர்கள் தமிழில் வழிபாடு செய்ததாகவும் காஞ்சி பெரியவாள் வந்த பிறகுதான் தமிழகப் பார்ப்பனர் வடமொழியை ஏற்றனர் என்பதுவும் அண்ட புளுகும் ஆகாசப் புளுகுமாகும். தமிழக வரலாற்றையே திரிப்பதுமாகும். பெரியாரையும், பெரியவாளையும் ஒப்பிடவே இவ்வரலாற்றைத் திரிக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் 1919லேயே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தமிழகத்தில் மிகப் பெரும் தலைவராக உருவாகி விட்டார். பார்ப்பனன் மற்றும் வடநாட்டான் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க அவர் அரும்பாடு பட்டார். அருகோ கூறுவது போல் திருக்குறள் மாநாடுகளை நடத்தி அவர் தமிழர் தலைவராக வரவில்லை. 1938லேயே தமிழர் தலைவராக வந்த அவர் 1948க்குப் பிறகே திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். அவருக்குத் தலைவர் பதவியின் மேல் ஆசையில்லை என்பதை அப்போதே அவர் கூறிவிட்டார்.
“தோழர்களே! நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை.” (ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதற் பதிப்பு, 1974, பக். 2027. ‘குடியரசு’ 13-10-1940)
சென்னை கன்னிமரா ஓட்டலில் 6-10-1940 அன்று பெரியார் கூறிய மேலே கண்ட கருத்துகளில் இருந்தே அவர் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டவரல்ல என்பதை அறியலாம்.
1938இல் 'தமிழ்நாடு தமிழர்க்கே' என முழங்கிய அவர் அன்று இருந்த நீதிகட்சியினரின் கட்டாயப்படுத்தலாலும் அன்று இருந்த அரசியல் சூழ்நிலையாலும் 1939 முதல் 'திராவிட நாடு திராவிடர்க்கே' எனக் குரல் கொடுத்தார். 1953இல் ஆந்திர மாநிலம் பிரிவினை அடைந்தவுடன் அவர் மீண்டும் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தையே முன் வைத்தார். பெரியார் கடைசிவரை திராவிட நாடு கோரிக்கை வைத்ததைப் போல அருகோ எழுதியுள்ளது வரலாற்றுத் திரிபாகும். ஆந்திரர்கள் மொழிவாரி மாநிலப் பிரிவினைக் கோரிக்கையை 1921இல் தொடங்கினாலும் 1950க்குப் பிறகே வலிமையாகப் போராடினார்கள். பெரியார் 1939 முதல் திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தார். அப்போது மலையாளிகளோ, கன்னடர்களோ தமிழர்களோ தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை. எல்லோரும் மொழிவழி மாநிலம் கோரியபோது பெரியார் திராவிட நாடு கோரிக்கையை வைத்துத் தமிழர்களை திசை திருப்பினார் என்பது உண்மைக்குப் புறம்பானதாகும்.
மொழிவழி மாநில எல்லைப் பிரிவினையின் போது பெரியார் பிற மாநிலத்தவர்களுக்குச் சார்பாக இருந்தார் என்று அருகோ எழுதியுள்ளது உண்மைக்கு மாறானதாகும். தமிழ் பேசும் மக்கள் உள்ள பகுதியை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பெரியார் கண்டித்தார்.
“பிரிவினைக்குப் பெயர் மொழிவாரி நாட்டுப் பிரிவினை: இதில் பிரிந்து போக வேண்டுமென்று வாதாடுகிறவர்கள் மொழியை ஆதாரமாகக் கொண்டு தானே பிரிவினை கேட்க வேண்டும். அதை விட்டு விட்டு வேறு மொழி 100க்கு 60, 70, 80 வீதம் பேசுகிற மக்கள் உள்ள நிலையை தங்கள் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று கேட்பது எப்படி யோக்கியமாகும்....? ஆந்திர மொழி பேசுகிற மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்த்துக் கொள்வதில் ஆட்சேபமில்லை. தமிழ் மொழி பேசும் மக்களைப் பெருவாரியாகக் கொண்ட நாட்டை ஆந்திராவோடு சேர்க்க வேண்டும் என்பது எப்படி 'மொழிவாரி மாகாணப் பிரிவினை என்று சொல்ல முடியும்?' மொழி வாரிப் பிரதேசப் பிரச்சினையின் தன்மை இவ்வாறு இருக்க, இனி மற்றப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்போம். அவை ஆந்திர இராஜ்யத்தின் தலைநகர் சென்னையில் இருக்க வேண்டும் என்பதும்; பொது கவர்னர் பொது அய்கோர்ட் இருக்க வேண்டும் என்பதும்; சிறிது காலத்திற்காவது ஆந்திர அரசாங்கக் காரியாலயம் சென்னையிலே இருக்க வசதியளிக்க வேண்டுமென்பதும் இவை ஒன்றுமே முடியாவிட்டால் சென்னையைத் தனி இராஜ்யம் ஆகச் செய்து அது ஆந்திராவுக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமில்லாத, டெல்லியைப் போன்ற ஒரு யூனியன் ஆக்க வேண்டுமென்றும் கேட்பவைகளாகும்.
இவைகளைப் பார்க்கும்போது, ஆந்திரர்களுக்கு இந்த விஷயங்களில் பொறுப்புள்ளதும் குறிப்பிட்டதுமான ஒரு யோசனையோ, இலட்சியமோ இல்லை என்பதாகவே தெரிய வருகிறது. ஆந்திராவின் தலைநகரம் சென்னையில் எதற்காக இருக்க வேண்டும்? இப்போது ஆந்திர நாடு அமைப்பு என்கிற பிரச்சினை ஒரு விடுதலைப் பிரச்சினையே யொழிய, பாகப் பிரச்சினை அல்ல, எப்படியெனில் சென்னை இராஜ்யம் 4 மொழிவாரிப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாலில் ஒன்றுதான் ஆந்திரா. இப்போது ஆந்திராதான் மற்ற மூன்றையும் விட்டு விலகிக் கொள்கிறது. ஆகவே இந்த விலகிக் கொள்ளுதல் சென்னை இராஜ்யத்திலிருந்து விடுதலை பெறுதல் என்று அர்த்தமாகும். விடுதலை செய்து கொண்டு போகிறவர்கள் விடுதலை செய்து கொண்டு போக வேண்டுமே தவிர மறுபடியும் ஒன்றாக இருக்க வசதி கேட்பது பொருத்தமற்ற காரியமாகும். அது போலவே பொது கவர்னர், பொது அய்கோர்ட் இருப்பது என்பதும் அரசியல் சட்டப்படி அனுமதிக்க முடியாது. சில நாளைக்காவது சர்க்கார் நிர்வாக காரியாலயம் சென்னையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதும் அர்த்தமற்றதாகும். இவைகளையெல்லாம் ஒன்றாகவே, ஒன்றிலேயோ இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள் எதற்காகப் பிரிய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் தொல்லை ஏற்படும்படி செய்ய வேண்டும் அல்லது தந்திரமான வழியில் ஆக்கிரமிப்பு செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு உண்மையான எண்ணம் ஒன்றும் இருக்க முடியாது என்பதுதான் என் கருத்து.
இவைகளையெல்லாம் விட நாம் கவனிக்க வேண்டிய சங்கதி ஒன்று இருக்கிறது. ஏதோ காரணம் சொல்லி நாம் இவர்களை உள்ளே இருக்கச் சம்மதிப்போமேயானால் பிறகு இவர்களை எப்படி வெளியேற்றுவது? அதற்கு என்ன சட்டம் இருக்கிறது? ஆந்திரா நாடு பிரிந்தது என்றால் ஆந்திரர்கள் சென்னையை விட்டு விட்டு வெளியேறி விட்டார்கள் என்றே அர்த்தம். வெளியேறினவர்களுக்கு இந்த ராஜ்யத்தைப் பற்றி பேச என்ன உரிமை உள்ளது? மடத்தை விட்டு வெளியேறின ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றிய கவலை ஏன்? என்று சொல்வது போல சென்னையைப் பற்றி யோசனை கூற இவர்கள் யார்? தமிழ்நாட்டாராவது சென்னை நகரத்தாராவது தான் இதைப் பற்றிப் பேச உரிமை உள்ளவர்கள்." (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதற்பதிப்பு, 1974, பக்கம் 724-726) (விடுதலை 7, 8-1-1953)
ஆந்திரா பிரிவினையின் போது பெரியார் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்க்கு ஆதரவான கருத்துதானே தவிர தமிழருக்கு எதிரான கருத்தல்லவே. ஆந்திரா பிரிந்தவுடன் எஞ்சியுள்ள பகுதியைத் தமிழகம் - கர்நாடகம், மலையாளம் மூன்றையும் இணைத்து ‘தட்சண பிரதேசம்’ என்கிற புதிய மாநிலத்தை உருவாக்க அன்றைய மத்திய அரசும் இராசாசியும் முயன்றபோது அதை உருவாக்க விடாமல் தடுத்து நிறுத்தித் தமிழ் மக்களின் நலத்தைக் காத்தவர் பெரியார். தட்சணப் பிரதேசம் அமைந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால், பார்ப்பனர்களால் கழித்து விடப்பட்டு நம்மவருக்குக் கிடைத்து வரும் உத்தியோகங்களெல்லாம் மலையாளிகளின் கைக்குள் போய்விடும் என்று கூறித் தடுத்தார். அப்போது பெங்களூரில் இருந்த தமிழக முதல்வர் காமராசருக்குப் பெரியார் பின்வரும் தந்தியை அனுப்பினார்.
“தட்சணப் பிரதேசம் ஏற்படுவதென்பது தமிழர்களுக்கு வாழ்வா? சாவா? என்பது போன்ற உயிர் பிரச்சினையாகும். உங்களுக்கும் மற்றெல்லோருக்கும் இது தற்கொலையானது ஆகும். தட்சணப் பிரதேசம் ஏற்படுமானால் முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகி விடும். அருள் கூர்ந்து நம் எல்லோரையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன்" (ஈ. வெ. ரா. சி. பக்கம் 729)
காமராசர் மூலமாக தட்சணப் பிரதேசம் அமைவதைக் தடுத்தார் பெரியார். ஆந்திரா பிரிந்த பிறகு கர்நாடகமும் மலையாளமும் பிரிய வேண்டும் என்றே பெரியார் விரும்பினார்.
“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகவும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால் ஒன்று, கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப் பற்றோ இனச் சுயமரியாதையோ பகுத்தறிவு வளர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்புக்கிடையாது; சூத்திரன் என்பது பற்றி இழிவோ வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. அவர்கள் மத மூட நம்பிக்கையில் ஊறி விட்டார்கள்.
இரண்டு, அவர்கள் இருவருமே மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் கவலைப் படாதவர்கள். ஆகவே இவ்விரு துறைகளிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள்; எதிரிகள் என்றே சொல்லலாம். மூன்றாவது, இவர்கள் இரு நாட்டவர்களும் பெயரளவில் இரு நாட்டவர்களானாலும் அளவில், எஞ்சிய சென்னை இராச்சியம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்களாவார்கள். அப்படி 14இல் 7இல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3இல் ஒரு பாகத்தை அடைந்து, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் “தமிழ்நாடு” என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதலே சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால் இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாகப் பிரிய நேர்ந்து விட்டது. ஆதலால் இந்தப் பிரிவினையை நான் வரவேற்கிறேன்!" (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்.730, விடுதலை அறிக்கை 11-10-55)
தமிழ்நாட்டுற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட முடியவில்லையே என்று பெரியார் 1955லேயே ஆதங்கப்பட்டார். இது குறித்த பெரியாரின் கருத்துக்கள்
“அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்பு கூட மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கூட இருக்கக் கூடதென்று பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரிவினையில், ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்ட தமிழனானாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த, தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ், மேல் சபை அங்கீகத்தினர்களையும் மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் முயற்சிக்கும்படி அதுபோலவே வேண்டிக் கொள்கிறேன். ‘தமிழ்’, ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமூதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமான காரியம் என்பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். நம்நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.” (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்கம்.731, விடுதலை அறிக்கை, 11.10.55)
தமிழ்நாடு பிரிவதற்கு முன்பே மாநில சீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையைப் பார்த்த உடனேயே பெரியார் இந்த அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் மொழிவாரி மாநிலம் பிரிந்த 1956 முதல் தமிழ் நாடு தமிழருக்கே என்றுதான் கூறி வந்தார். “விடுதலையில்” தினமும் முதல் பக்கத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற இலட்சிய முழக்கத்தை இடம் பெறச் செய்தார்.
“என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும். அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்!" (ஈ.வெ.ரா. சி. பக். 1874) (விடுதலை தலையங்கம் 15.12.1957)
சிறைபுகும் முன் பெரியார் விடுத்த அறிக்கை. தமிழ்நாடு நீங்களாக இந்திய படத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தியவர் பெரியார்.. 1963இல் சுதந்திரத் தமிழ்நாடு ஏன்? என்ற புத்தகத்தைக் குடியரசுப் பதிப்பக வெளியீடாக வெளியிட்டவர் பெரியார். 1973இல் பிறந்த நாள் அறிக்கையில் கூட தள்ளாத 95 வயதிலும் தமிழ்நாடு தமிழருக்கே எனச் சிங்கம் போல் கர்ஜித்தார்.
“நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். ‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே! இளைஞர்களே! பள்ளி, கல்லுhரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்." (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்.1981, 17-9-1973)
1938ல் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று குரல் கொடுத்த பெரியார் 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று போராடிய போது ஒரு போதும் தமிழர் அல்லாதவர்களை ஆதரித்துப் பேசியது கிடையாது. அவர் திராவிட நாடு என்று சொன்னாலும் தமிழகத்தை அதாவது அன்றைய சென்னை மாகாணத்தைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தி வந்தார். மொழி வாரி மாநிலம் பிரிந்தவுடன் சுதந்திரத் தமிழ்நாடு என்ற கோரிக்கையை வைத்துப் போராடிய அவரை எழுகதிர் அருகோ தமிழ் இனத்துரோகி என்பதும், திட்டம் போட்டே பெரியாரும் சங்கராச்சாரியும் தமிழர்களைச் சீரழித்தார்கள் என்று பேசுவதும் எழுதுவதும் விஷமப் பிரச்சாரமேயாகும்.
“பார்ப்பன எதிர்ப்பு அதுவும் தமிழ்நாட்டுப் பார்ப்பனரையே கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு எதிர்ப்பது என்ற திராவிடப் பார்வையால் இன்று தமிழ்நாட்டின் அதிகார வர்க்கமும் ஆதிக்க வர்க்கமும் தமிழரல்லாதவர்களையே பெரும்பான்மையாய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்” என்று எழுதும் அருகோ என்றைக்காவது திராவிடர் கழகம், தமிழ்நாட்டுப் பார்ப்பான் பிற மொழிப்பார்ப்பான் என்று பிரித்துப் பார்த்து திட்டியதைப் பார்த்ததுண்டா? அப்படி எத்தனைத் தமிழ்நாட்டுப் பார்ப்பான் தமிழின் மேல் தமிழ் இனத்தின்மேல் பற்று வைத்துள்ளான் என்று காட்ட முடியுமா? அல்லது அருகோவின் குருநாதர் மா.பொ.சிக்குக் குருவான ராஜாஜி தான் தமிழ்நாட்டின் மேல் பற்றாக இருந்தாரா? தமிழ் இனத்தை அழித்ததில் பார்ப்பனர்கள் அனைவருமே ஒன்றுதானே? பார்ப்பனரை எதிர்த்தால் இவருக்கு ஏன் கோபம் வர வேண்டும்? ‘தமிழ் நீச பாஷை’, ‘தமிழன் தீண்டத்தகாதவன்’ என்று கூறும் சங்கராச்சாரியும், தமிழனுடைய விடியலுக்காகப் பாடுபட்ட பெரியாரும் ஒன்றா?
“1950களில் திராவிடக் கட்சிகளை விமர்சித்ததில் - எதிர்த்ததில் அவருக்கு (மா.பொ.சி.) நிகர் யாரும் கிடையாது. 1960கள் வரை காங்கிரஸ் கட்சியே மா.பொ.சி.யின் பிரச்சாரத்தில்தான் திராவிடக் கட்சிகளைத் தாக்கு பிடித்ததென்றால் மிகையாகாது!” என்கிறார் அருகோ.
பெரியார் மா.பொ.சி.யை “காங்கிரசின் கையாள், பார்ப்பனர்களின் கைக்கூலி” என்று பேசியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்பதை மேலே கண்ட அருகோவின் மா.பொ.சி.யைப் பற்றிய மதிப்பீடே போதுமானதாகும். நான் ஒன்றும் கூறத் தேவையில்லை. அது சரி, அருகோ தலை மேல் துhக்கி வைத்தாடும் மா.பொ.சி. ஒரு மேலவைத் தலைவர் பதவிக்காக மலையாளி எம்.ஜி.ஆரின் காலடியில் விழுந்து கிடக்கவில்லையா? என்ன ஆச்சு மா.பொ.சி.யின் கொள்கை? பதவி எதையும் நாடாமல், தன்னைத் தேடி வந்த முதல்வர் பதவியையும் வேண்டாமென உதறிய பெரியார் எங்கே? பதவிக்காகக் கொள்கையை விட்டு ஓடிவிட்ட மா.பொ.சி. எங்கே? இனிமேலும் பொய்யான தகவல்களையும் விஷமப் பிரச்சாரங்களையும் அருகோ செய்யாமல் இருப்பதே அவருக்கு நல்லது. இன்றைய தமிழ்த் தேசிய உணர்ச்சி என்பது திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே தவிர, மா.பொ.சி. யால் வந்ததது அல்ல என்பதை அருகோ உணர வேண்டும்.
(குறிப்பு : பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிந்தனையாளன் நவம்பர் 2002 ஏட்டில் அருகோவின் அடாவடிதனத்தைக் கண்டித்து வாலாசா வல்லவன் எழுதிய கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக