ஞாயிறு, 28 அக்டோபர், 2012

படைப்புவாதிகளின் முட்டாள் தனமான கேள்விகள் சில ?


படைப்புவாதிகள் என அறியப்படும் மதம் சார்ந்த போலி - அறிவியலாளர்கள் பரிணாம உயிரியலை நோக்கி பல கேள்விகளை முன் வைத்து வருகின்றார்கள். ஆனால் நாம் எதாவது கேள்வியினை திருப்பிக் கேட்டால் அங்கே சொல்லப்பட்டது இங்கே சொல்லப்பட்டது என்று தான் சொல்வார்களே ஒழிய ஏரணப் பூர்வமான ஆதாரங்களை வழங்குவதே இல்லை. அதாவது படைப்புவாதிகள் எப்போதுமே தருமிகளாகத் ( பதிவுலகத் தருமி இல்லை .. நக்கீரர் காலத்து தருமி ) தான் உலா வர விரும்புகின்றனர். சரி அவர்கள் கேட்கும் கேள்விகளாகவது அறிவுப் பூர்வமாக இருக்கின்றதா ? அதுவும் இல்லை ! அவர்களின் வினாக்களுக்கு பள்ளியில் படிக்கும் அறிவியல் மாணவர்களே பதில் சொல்லிவிடுவார்கள். இருந்த போதிலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில்களை கொடுக்கின்ற போது இறுதியில் செல்லாது செல்லாது ! தீர்ப்பை மாத்திச் சொல்லுங்கள் நாட்டாமை என ஓடிவிடுகின்றார்கள். 
படைப்புவாதிகளால் பெரும்பாலும் பரிணாம அறிவியல் நோக்கிய சில்லித் தனமான கேள்விகளில் சில்வற்றை நாம் காண்போம். 
கே1. உயிர்கள் எப்படி தோன்றின ?
படைப்புவாதிகள் பரிணாம உயிரியலாளர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது தவறான ஒன்றாகும். ஏனெனில் பரிணாம அறிவியலின் வேலையே உயிர்கள் எப்படி உருவாகின என்று கண்டுப் பிடிப்பது என்பதல்ல, மாறாக உருவாகிய உயிரனங்கள் எப்படி பரிணமித்தன என்பதே ஆகும். சரி ! இருந்த போதிலும் உயிர்கள் எப்படி உருவாகின என்பதற்கு எண்ணற்ற அறிவியல் ஆய்வுகள் பதில் சொல்கின்றன. கூகிளில் தேடினாலே இதற்கான விரிவான ஆய்வுக் கட்டுரைகள் பல கிடைக்கின்றன. 
ஆனால் படைப்புவாதிகள் பரிணாம உயிரியலாளர்களிட இக்கேள்வியை கேட்பதற்கு முக்கிய காரணம், பரிணாமத்தின் நம்பகத் தன்மையை மக்களிடம் குறைப்பதற்கு தான். பரிணாம கோட்பாட்டின் அடிப்படைகளே எவ்வாறு உயிரினங்கள் படிப்படியாக மாற்றங்களுக்கு உள்ளாகின என்பதையும், அவ்வாறு ஏற்பட்ட மாற்றங்கள் அடுதடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டும், நீக்கப்பட்டும் வந்துள்ளன என்பதை விளக்குவதே ஆகும். 
படைப்புவாதிகளின் எண்ணமே அறிவியலால் சில விளக்கங்களை இப்போது தர முடியவில்லை எனில் எப்போதுமே தர முடியாது என்பது தான். அதனாலேயே தமது படைப்புவாதங்களுக்கு ஆதாரங்களை சேர்க்காமல், பரிணாம கோட்பாட்டின் மீது கேள்விகளை வைக்கின்றார்கள். ஒரு வகையில் இதுவும் நல்லதே ஏனெனில் அவர்கள் கேட்கும் சில கேள்விகள் உண்மையான பதில்களை மேலும் ஆராயும் உத்வேகத்தை ஆய்வாளர்களுக்கு கொடுக்கின்றது. 
இதில் என்ன விடயம் என்றால் கேள்விகள் கேட்கும் பாணியில் கோட்பாடுகளைத் திரித்து மக்களிடம் பொய் பிரச்சாரங்களை செய்வதே இவர்களின் நோக்கமாக உள்ளது.
கே2. DNA கோட்கள் எப்படி உருவாகின ?
இந்தக் கேள்விகளை எழுப்புவோர் அத்தோடு நின்றுவிடுவதில்லை தமது குழப்பவாதங்களை நிலை நிறுத்த அடுத்தக் கட்ட கேள்விகள் ( விளக்கங்கள் ) எடுத்து வைக்கின்றார். 
'' DNA வின் குறியீட்டு எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள் சொற்களின் அர்த்தங்களை விளக்குவதாக அமையாமல், இரசாயன பண்புகளுக்குத் தொடர்பில்லாமல் சிக்கலான மொழி அமைப்பில் இருக்கின்றதே '' என ஒரு படைப்புவாதி தமது அறிவுத் திறனைக் காட்டினார். 
இது மாதிரி பரிணாம எதிர் கேள்விகளை கேட்கும் பல அறிவுக் கொழுந்துகள் பலரும் முறையான உயிரியலையோ அல்லது ஜெனடிக்கினையோ பற்றி ஒன்றும் தெரியாதவர்களாகவே இருப்பார்கள். எங்கேயோ யாரோ சொன்ன சில கேள்விகளை தேடி எடுத்து நம்மிடம் கேட்பார்கள். ஆனால் இவற்றுக்கான விடைகளை நாம் கொஞ்சம் மூளையை பயன்படுத்தினால் எளிதாக சொல்லிவிடலாம்.
மேற்கண்ட கேள்வியை கேட்டவருக்கும் ஜெனிட்டிக் கோட் பற்றிய அறிவு கம்மி என்பதை நாம் உணரலாம். பூரணமான ஜெனிட்டிக் கோட்களை இங்கே சென்று பார்க்கலாம். ஜெனிட்டிக் கோட்களை முழுமையாக படித்தவர்கள் இப்படியான கேள்விகளை கேட்க மாட்டார்கள். கேள்விகள் கேட்பவரின் முக்கியக் குறிக்கோளே பரிணாம அறிவியல் பிழையானது என்று நிறுவுவதே ஒழிய சரியான விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கான எண்ணமில்லை. 
இவர் கேட்டக் கேள்விகளுக்கு நமது கூகிள் ஆண்டவரிடமே பதில்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கான பதில்களை பொறுமையாக படித்து தெரிந்துக் கொள்வதில் படைப்புவாதிகளுக்கு ஆர்வம் இருப்பதில்லை. கேள்விகள் மட்டுமே கேட்போம் என்பார்கள் - பதில்களை சொல்ல நாம் தயாரனாலும் அதனை கேட்டு தெளிவடைய தயாராக இருப்பதில்லை அவர்கள். 
கே3. மரபணுத் திடீர் மாற்றம் ( Mutation ) எப்படி DNA -களில் இருக்கும் கோட்களை பாரிய அளவு மாற்றி அமைத்துள்ளன. மரபணுத் திடிர் மாற்றங்கள் DNA கோட்களை காப்பி செய்வதில் ஏற்படும் பிழைகள் என்றால் இவ்வளவு பெரிய மாற்றங்கள் எப்படி ஏற்பட்டன. ஒரு கிருமியாக இருந்தவன் இன்று கிருமியை ஆராய்பவனாக மாறியது எப்படி ?
இந்தக் கேள்வியை எழுப்பியவர் மறுபடியும் குழப்பங்களை ஏற்படுத்தவே ஆசைப்படுகின்றார் என்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். ஒன்றும் அறியாத மக்கள் மத்தியில் பார் நாம் கேட்ட புத்திக் கூர்மையான கேள்விக்கு இந்த பரிணாமக் காரர்களால் விளக்கம் தரமுடியவில்லை அப்போ அது பொய் ! பொய் ! என்று பிரச்சாரம் செய்வதற்கான உத்தியே இப்படியான கேள்விகள். 
ஆனால் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை .. அல்லது மாற்றங்கள் நிகழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற எந்தக் கட்டளைகளும் இல்லை. மாற்றங்கள் நிகழக் கூடாது என்ற எந்த தடைகளும் இல்லை. கோடிக் கணக்கான ஆண்டுகள் இந்த பூமியில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மாற்றம் ஒவ்வொரு உயிர்களிடையும் கொஞ்சம் கொஞ்சமாகவே நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு மாற்றமும் அந்த உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு உகந்தத்தாக இயற்கைத் தெரிவால் ஏற்பட்டவை. சில சமயங்களில் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் தவறாகி விடுவதும் உண்டு. அப்படி தவறாகும் பட்சத்தில் அதன் சந்ததிகள் அழியும் நிலைக்கு சென்றுவிடும். அப்படி அழியும் பட்சத்தில் தவறான மாற்றங்கள் கடத்தப்படுவதில்லை மாறாக நின்றுவிடுகின்றன. 
அதாவது ஒரு களிமண்ணை எடுத்து கண் தெரியாத குயவனிடம் கொடுத்து பானை செய் என்பது போன்றது தான் இந்த இயற்கை மாற்றங்களும். பானையை கண் தெரியாதவன் ஒருக் கணப் பொழுதில் செய்து முடிக்க முடியாது, அவனது புரிதலுக்கு ஏற்ப களி மண்ணை உருட்டுகின்றான். சில சமயம் அது பானையாக மாறலாம், அல்லது எதோ ஒரு உருவாக மாறலாம். அப்படித் தான் இயற்கையும் அதன் மாற்றங்களும். 
ஆனால் இயற்கையின் ஒரே எண்ணம் உயிரினங்கள் உயிர் வாழ வேண்டும் என்பது தான். உயிர் வாழ உகந்ததாக இல்லாமல் போகும் சங்கதிகளை DNA -க்களில் இருந்து அழிப்பதும், மாற்றிப் பார்ப்பதும், குழப்பிப் பார்ப்பதுமே இதன் வேலை. அதாவது அறிவில்லாத குரங்குகிடம் கொடுக்கப்பட்ட ஒரு பென்சிலை போலத் தான். அது அதன்பாட்டுக்கு கிறுக்கிக் கொண்டிருக்கின்றது. அது ஓவியமாகவும் மாறலாம் கிறுக்கல்களாகவும் மாறலாம். இந்த கிறுக்கல்களை செய்வது மகா புத்தியுள்ள ஒரு குரங்கு ( சாரி ! கடவுள் ) என்று வைத்துக் கொண்டால் அவன் எதனையும் தெள்ளத் தெளிவாக வடிவமைத்துவிடலாம். கண்பார்வை நிறைந்த குயவனைப் போல அழகிய பானையை உருவாக்கி விடலாம். ஆனால் இயற்கையின் படைப்புகள் எவை பூரணமற்றவை. அனைத்திலும் அனைத்திலும் உங்களிடமும் என்னிடமும் குறைகள் இருக்கின்றன. அது குறை என்பதை உணர்ந்து அதனை DNA-க்களிடம் இருந்து நீக்கவே இயற்கைக்கு பல ஆயிரம் லட்சம் ஆண்டுகள் தேவைப்படுகின்றது. சில நேரம் குறைகளை நீக்கவே முடியாமல் தவிக்கவும் செய்கின்றது. குறையை நிவர்த்தி செய்ய முக்கி முனகுகின்றது. 
அட இதைச் சொல்லவே பதிவு நீண்டு விட்டது மிச்சக் கேள்விகளை அடுத்தடுத்தப் பதிவுகளில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக