ஞாயிறு, 28 அக்டோபர், 2012

சர்ச்சையைக் கிளப்பும் கடவுளின் பரிணாமம்


கடவுளைக் காப்பாற்றுவதற்காக உலகெங்கும் பல குழுக்கள் பரிணாம உயிரியலை எதிர்த்து வருகின்றனர். பெரும்பாலும் பரிணாமத்தை எதிர்ப்பவர்கள் பரிணாமத்தில் இருக்கும் குறைகளை மட்டுமே எடுத்து வைப்பார்கள். ஆனால் அதற்கு மாற்றாக அவர்களால் வைக்கப்படும் படைப்புவாதக் கொள்கையைக் கூட அவர்களால் நிரூபிக்க முடிவதில்லை. அவர்கள் பழைய புத்தகங்களில் படைக்கப்பட்டது என்ற வார்த்தையைத் தவிர அறிவியல் நிரூபணம் எதனையும் தருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் எடுத்து வைக்கும் மதங்களும், மதம் கூறும் கடவுளர்களும் எவ்வாறு காலப் போக்கில் பரிணாமம் அடைந்தார்கள் என்பதை விளக்கும் அற்புதமான நூல் '' கடவுளின் பரிணாமம் '' ஆகும். ராபர்ட் ரைட் என்பவரால் எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டியதொரு அற்புத நூலாகும். மனிதர்கள் காட்டில் வாழ்ந்தக் காலங்களில் மத நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பது தொடங்கி பல அரிய தகவல்களைக் கூறுகின்றனர். பசிபிக் பெருங்கடலில் வாழும் மக்கள், அமெரிக்கப் பழங்குடிகள் என உலகின் பல பூர்வக் குடிகளில் மத நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பது பற்றியும் விளக்கமாகக் கூறுகின்றார். 
அத்தோடு மட்டுமல்லாமல் பண்டைய எகிப்து, சுமேரியாவில் எப்படி மதங்கள் பரிணாமம் அடைந்தன என்பது பற்றியும். சுமேரியாவில் தோற்றம் பெற்ற ஓரிறைக் கோட்பாடுக் குறித்தும் கூறுகின்றார். 
இஸ்ரேலியர்கள் ஆரம்பக் காலங்களில் எவ்வாறு பல தெய்வங்களை வழிப்பட்டுக் காலப் போக்கில் யெகோவா என்னும் கடவுள் எப்படி உருவானார் எனவும் வரலாற்றுப் பூர்வமாக எடுத்துக் கூறுகின்றார். பிற்காலங்களில் வரலாற்று இயேசு எவ்வாறு கடவுளாக மாற்றப்பட்டார் என்பது பற்றியும். அனைத்துலக அன்பு என்பது இயேசு பிரச்சாரம் செய்யாத ஒன்று எனவும் இந்நூல் கூறுகின்றது. முகமது நபி எவ்வாறு அரசியல் மற்றும் சமூகக் காரணங்களுக்காக யூதர்களின் மதத்தினைத் திரித்து அரேபியர்களுக்குப் பிரச்சாரம் செய்தார் எனவும் கூறுகின்றார். கிருத்துவத்தின் பவுல் எவ்வாறு கிருத்தவ மதத்தினை உருவாக்கினார், அதே போலத் தான் முகமது நபியும் ஒரு மதத்தினை உருவாக்கினார். ஆனால் முகமது நபி அரசியலை துணையாக எடுத்துக் கொண்டார் எனவும் இந்நூல் கூறுகின்றது. எவ்வாறு முகமது பிற்காலங்களில் யூதர்களுக்கு எதிராகக் குரானை மாற்றினார் போன்ற விடயங்களை இந்நூல் மேலும் கூறுகின்றது.
  • யெகோவா கடவுளுக்கு மனைவி இருந்தாரா ? 
  • முகமது இஸ்லாம் அல்லாதோரைக் கொல்லச் சொன்னாரா ?
  • யூத மதம் பல தெய்வ வழிப்பாட்டினை திரித்து ஓரிறைக் கோட்பாட்டை உருவாக்கியதா ? 
  • கடவுள் நம்பிக்கை நமது ஜீன்களில் உள்ளனவா ? 
  • இயேசு அன்பு வழியைப் போதித்தாரா ? 
என்ற பல கேள்விகளுக்கு இந்நூலை நீங்களே படித்துப் புரிந்து கொள்ளுங்கள். 
பெரும்பாலும் ஆபிரகாமிய மதங்களைப் பற்றியே இந்நூல் விவரிக்கின்றது. தாத்தாச்சாரியர் எழுதிய இந்து மதம் எங்கே செல்கின்றது என்ற நூல் இந்து மதத்தின் உண்மைகளைப் பிட்டு பிட்டு வைத்தது போல, இந்நூல் ஆபிரகாமிய மதங்களில் புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக் கொண்டு வருகின்றது. 
Robert Wright
இந்நூலின் ஆசிரியர் ராபர்ட் ரைட் ஆரம்பக் காலங்களில் ஒரு கிருத்துவராக இருந்தவர். கடவுளின் பரிணாமம் என்ற நூல் நியு யோர்க் டைமிஸின் சிறந்த விற்பனையாகும் நூலாகவும், புலிட்சர் பரிசு பெற பரிந்துரைக்கப்பட்ட நூலாகவும் விளங்குகின்றது. இவர் ஏற்கனவே தி மோரல் அனிமல், நான் ஜீரோ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். பல முன்னணி பத்திரிக்கையில் எழுதியும் வருகின்றார். பென்னிசில்வானியா பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் மற்றும் சமயங்கள் குறித்துப் பாடங்கள் எடுத்துள்ளார். நியு அமெரிக்கா பவுண்டேசனின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். ப்ளாக்கிங்க் ஹெட்ஸ்.டிவி மற்றும் தி புரோக்கிரசிவ் ரியாலிஸ்ட் இணையத் தளங்களின் முதன்மை நிர்வாகியாகவும் இருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக