சனி, 1 டிசம்பர், 2012

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா? அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா? இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி விட்டார். இதற்கிடையில் நிரூபிக்க முடியுமா என்று சவடால் வேறு. பாவம் என்ன செய்வார், அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி மறுத்து எழுத வேண்டும் என்பது, அதேநேரம் எதை மறுப்பது எப்படி மறுப்பது என்பதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போலும். ஐயன்மீர், முதலில் கட்டுரையை படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். எது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது? எது மறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது? என்பதை அறிந்து எதை எப்படி மறுப்பது என்பதை ஆய்ந்தறிந்து அதன் பின்பு மறுப்பை கூறுங்கள்.

அந்த வசனத்தில் எதை அறிவியல் என்று கூறுகிறார்களோ அது உவமையாக கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி அல்லது தூண்களின்றி வானம் படைக்கப் பட்டிருக்கின்றது. குரானில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமை பொருத்தமானதில்லை. எனவே. அது புவியீர்ப்பை குறிக்காது என்பது என்னுடைய வாதம். எந்த விதத்தில் அந்த உவமை பொருத்தமானதில்லை? புவியீர்ப்பு விசை என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறதோ அந்த தன்மைகளை உவமையும் கொண்டிருந்தால் தான் அது பொருத்தமான உவமையாகும். புவியீர்ப்பு விசையின் தன்மை என்ன? புவியின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொருட்களைத் தன்வசம் ஈர்க்கிறது. இந்த இரண்டு தன்மைகளையும் அந்த உவமை எதிரொலிக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதில். ஒரு கட்டிடத்தின் தளங்களை தூண் தாங்கிப் பிடித்தால் அது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஓரிரு இடங்களில் இருந்தால் போதும். ஒரு தூண் ஒருபோதும் பொருட்களை தன் வசம் ஈர்க்காது. எனவே அது பொருத்தமானதில்லை, ஆகவே அது புவியீர்ப்பு விசையை குறிக்காது என்று விளக்கினால், நமக்கு மண்ணாங்கட்டி பாடம் எடுக்கிறார் நண்பர். நானும் அதே மண்ணாங்கட்டியை எடுத்துக் கொள்கிறேன்.

இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம், என்றால் என்ன தன்மையில் அந்த உவமையைக் கூறுவோம்? இஹ்சாஸ் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவராக இருக்கிறார் அதுபோல மண்ணாங்கட்டியும் புரிந்து கொள்ளாது. எனவே, இஹ்சாஸின் புரிந்து கொள்ளாத தன்மை மண்ணாங்கட்டியிலும் இருப்பதால் மண்ணாங்கட்டியை அவருக்கு உவமையாக கூறுவோம். இது பொருத்தமான உவமை. இஃதன்றி, இஹ்சாஸ் சட்டை அணியாமல் நிற்கிறார், மண்ணாங்கட்டியும் சட்டை அணியாது எனவே அவர் மண்ணாங்கட்டி என்று யாரேனும் உவமை கூறுவார்களா? அப்படிக் கூறினால் அது பொருந்தாத உவமை. ஆனால் குரானின் தூண் விவகாரத்தில் எத்தன்மைக்கு உவமை கூறப்பட்டுள்ளதோ அத்தன்மைக்கே பொருந்தவில்லை என்று தான் நான் கூறியிருக்கிறேன். தந்தை ஒரு குடும்பத்துக்கு தூணாக இருக்கிறார் என்றால் அந்த தன்மைக்கு மட்டும் தானே உதாரணமும் உவமையும். சட்டை போடவில்லை, கைலி உடுத்தவில்லை என்று பொருத்தமற்று கூறிக் கொண்டிருப்பது யார்? பதில் கூற வக்கற்றிருந்தால் அதற்காக திசை திருப்பக் கூடாது.

இன்னொரு கோணத்திலும் அந்த வசனத்தைப் பார்க்கலாம். ஈர்ப்பு விசை என்பது கோளோடு தொடர்புடையது. புவியீர்ப்பு விசை என்றால் அது புவியோடு தொடர்புடையது. இதில் வானம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்பதற்குத்தான் பார்க்கின்ற தூண்களின்றி என்ற பதில் வருகிறது. அதாவது இந்த உவமையின் உண்மை வானம் பார்க்கின்ற தூண்களால் அல்லாது பார்க்க முடியாத தூண்களால் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. தெளிவாகச் சொன்னால் அவ்வாறான தூண்கள் இல்லாது போனால் வானம் விழுந்துவிடும் என்பது தான் அதில் உட்பொதிந்திருப்பது. இதில் புவியீர்ப்பு எங்கிருந்து வந்தது? இதில் அறிவியல் இருக்கிறதா? குறைந்தபட்சம் அவியலாவது இருக்கிறதா? இதைத்தான் புனைவாக குறிப்பிட்டிருந்தேன். இதை நிரூபிக்க முடியுமா? என்று சவடால் விட்ட இஹ்சாஸ், நேர்மையானவராக இருந்திருந்தால் அதில் என்ன அறிவியல் இருக்கிறது என்பதையல்லவா வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு மொழிபெயர்ப்பில் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ படைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. பிரிதொன்றிலோ ‘வானம் தூண்களின்றி படைக்கப்பட்டிருக்கிறது அதை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது மட்டுமா? குரானுக்கு உரையெழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தூண்களின்றி படைக்கப் பட்டிருப்பதாகவே மொழி பெயர்த்திருக்கிறார்கள். என்றால் அதை பார்க்கின்ற தூண்களின்றி என உருமாற்றி புவியீர்ப்பு விசையோடு திருமணம் செய்வித்தது யார்? எதற்காக? வேறொன்றுமில்லை இக்கால அறிவியல் உண்மைகளையெல்லாம் முகம்மது ஆறாம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டாராக்கும் என்று அப்பாவி மக்களை ஏய்த்து மதவாத ஜல்லியடிப்பதற்குத் தானேயன்றி வேறெதற்காகவும் இல்லை.

அதுசரி, நண்பர் கூறுவதை பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம், நான் தெளிவாக இப்படி எழுதியிருக்கிறேன், \\\தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது?/// என்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறேன். பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தும் இதற்கான பதில் இல்லையே ஏன்? இது தான் மதவாதம் என்பது, எதையும் பரிசீலித்துப் பார்ப்பதில்லை. சாதகமான இடங்களில் சவடால் அடிப்பது, பாதகமான இடங்களில் கள்ள மௌனம் சாதிப்பது. இதைத்தானே தொடக்கத்திலிருந்து பார்த்து வருகிறோம்.

அடுத்து குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும் என்று குரான் வசனம் கூறுவதன் பொருள் என்ன? இதில் குறிப்பிட்ட காலம் வரை என்பது கோள்களின் இயக்கம்; அதாவது பூமியோ சந்திரனோ மட்டுமல்லாது சூரியனும் விரைந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கோள்களும் விண்மீன்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன, விரைந்து கொண்டிருக்கின்றன எனும் அறிவியல் உண்மையை அந்த வசனம் கூறுவதாக கதையடிக்கிறார்கள். இதை மறுத்து குரான் வசனங்களில் அறிவியல் இருப்பதாக ஜம்பமடிப்பதற்கு மதவாதிகள் என்ன உத்தியை பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக சில குறிப்புகளைக் கூறியிருந்தேன். பூமி தட்டை என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் குரான் உருண்டை என்றது என்பார்கள். ஆனால், உண்மையில் குரான் தயாரிக்கப் பட்டுக் கொண்டிருந்த போது பூமி உருண்டை எனும் புரிதல் மக்களுக்கு இருந்தது என்பது மட்டுமல்லாமல் குரான் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறவும் இல்லை. அது போலவே கோள்கள் விண்மீன்களின் இயக்கம் குறித்து இந்த வசனம் கூறவும் இல்லை; அதேநேரம் குரானுக்கு வெகு காலத்துக்கு முன்பே கோள்களின் இயக்கம் குறித்த அறிவு மனிதனுக்கு இருக்கவும் செய்தது. இதைக் குறிப்பிட்டு விட்டுத் தான் \\\எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// என்று முத்தாய்ப்பாகவும் கூறியிருந்தேன். இவை எதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாத நண்பர் மறுப்பு கூற வேண்டுமே என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கிறார். ஒருவேளை இவைகளையெல்லாம் படித்து நண்பருக்கு ரோசம் வந்து, மெய்யாகவெ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்பதை நிரூபித்தால் அதன் பின்னர் நான் விளாக்கங்களுடன் வருகிறேன்.

அடுத்து நான் மப்பில் உளறுவதாக நண்பர் எழுதியிருந்தார். எழுதுவதற்கு ஒன்றுமில்லாத போது, பதில் கூற முடியாத போது அவதூறு பொழிவது மதவாதிகளின் வழக்கம். அதை தவறாமல் பின்பற்றியிருக்கிறார் இஹ்சாஸ். ஆனால் மெய்யாகவே மப்படித்தது போல் இஹ்சாஸ் உளறிக் கொட்டியிருக்கிறார், அவைகளைப் பார்க்கலாமா? 1. \\\இவர்களுக்கும் அரேபியாவில் வாழ்ந்த முகம்மது நபிக்கும் என்ன தொடர்பு/// அப்படி ஏதேனும் தொடர்பு இருப்பதாக நான் எங்கேனும் கூறியிருக்கிறேனா? அறிவியலுக்கும் முகம்மதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் கூறியதில்  அறிவியலும் இல்லை. இதைத்தான் நான் தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். 2. \\\இவர்கள் ஏற்கனவே கூறியிருந்தால் ஏன் கொப்பர்னிகஸ் போன்றோர் கூறும்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்?/// கோப்பர்நிகஸ் சூரியக் குடும்பத்தின் மையத்தை பூமியிலிருந்து சூரியனுக்கு நகர்த்தியதால் விமர்சிக்கப்பட்டார்.

அடுத்து, குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதன் பொருள் என்பதாக மதவாதிகள் கூறுவதென்ன? இப்பேரண்டத்தின் அனைத்து பருப் பொருட்களும் விரைந்து கொண்டிருக்கின்றன என்பது அண்மை கண்டுபிடிப்பு. இதைத்தான் இந்த வசனம் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் இந்த வசனம் கூறுவதென்ன? குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் அதன் பிறகு செல்லாது என்றால் அது குறிப்பிடுவது அறிவியலை அல்ல மதக் கற்பனையை. இதைத்தான் நான் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன், \\\நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// இது எப்படி அறிவியல் கண்டுபிடிப்போடு தொடர்பு படுத்தப்படுகிறது என்றால் எந்த விளக்கமும் கிடைக்காது, ஆனாலும் மதவாதிகளுக்கு அது அறிவியல் அவ்வளவு தான்.

அடுத்து சூரியன் அதற்குறிய இடத்தை நோக்கிச் செல்கிறது என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மதவாதிகள் புனையும் அறிவியலை புஹாரி 3199 வெடி வைத்து தகர்க்கிறது. அதனால் தான் நண்பர் மெதுவாக அது ஏற்கமுடியாத ஹதீஸ் என்று நூல்விட்டுப் பார்க்கிறார். அது ஏற்க முடியாதது என்பதற்கு அவர் கூறும் காரணம், அது குரான் கூறும் ஒரு தகவலோடு முரண்படுவது என்கிறார். அதாவது அர்ஷ் பூமி, சூரியனுக்கு மேலே இருப்பதாக குரான் குறிப்பிடுகிறதாம், இந்த ஹதீஸில் கீழே இருப்பதாக பொருள் வருகிறதாம். இது முரண்பாடு என்பதால் செல்லாது என்று தீர்ப்புக் கூறுகிறார். எந்த அடிப்படையில் அர்ஷ் கீழே இருப்பதாக பொருள் வருகிறது? விளக்க முடியுமா நண்பரால்?

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்

இஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள். இந்தச் சட்டங்களை மனிதர்களுக்காக இயற்றித் தந்தது அல்லா தான். மனிதர்களில் எவருக்கும் சட்டங்கள் இயற்றும் தகுதி இல்லை மட்டுமல்லாது அவைகளை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எந்த மனிதருக்கும் அறுகதை இல்லை. இதை குரான் வசனங்கள் 5:48; 5:50 தெளிவுபடுத்துகிறது,

.. .. .. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் அவர்களின் மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். .. .. ..

அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?

ஆக சட்டம் என்றால் அது முக்காலமும் உணர்ந்த, எல்லாவித ஆற்றல்களையும் தன்னில் அடக்கிக் கொண்டிருக்கிற அல்லாவால் மனிதர்களின் நல்வாழ்வுக்காக கொடுக்கப்பட்டது என்பதே பொருள். அதனால் தான் இஸ்லாமியர்கள் நடப்பிலிருக்கும் சட்டங்களை அவைகள் மனிதச் சட்டங்கள் எனும் போக்கில் அணுகுகிறார்கள். ஆனால் சட்டம் என்றால் என்ன? வரலாற்று அடிப்படையில் சட்டம் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?

மனிதர்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், ஒழுக்கமான, குறைகளற்ற வாழ்வை வாழ்வதற்கு தேவையான ஒழுங்கு நெறிகளைக் கொண்டது தான் சட்டம் என்று பெரும்பாலானோர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் மனிதன் ஓரளவுக்கு சமூகமாக வாழத் தொடங்கியது முதல் இன்று வரை சட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. என்றால் மனிதர்களிடையே பிணக்குகள் தீர்ந்து மகிழ்வான வாழ்வு வாய்க்கப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? உலகம் அவ்வாறு இல்லை என்பது தானே யதார்த்தமாக இருக்கிறது. இதற்கு இஸ்லாமிய மதவாதிகள் ஒரு விளக்கம் கூறக் கூடும், அவைகளெல்லாம் மனிதச் சட்டங்கள் இறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அவ்வாறான நிலை உருவாகிவிடும் என்று. ஆனால் இஸ்லாம் தோன்றிய காலம் முதல் அதாவது கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக சௌதி அரேபியாவில் (இஸ்லாம் எனும் மதம் தோன்றிய இடம்) இறைச் சட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. அங்கே நிலமை என்ன?

மனிதகுல வரலாற்றில் சட்டங்களின் பங்களிப்பு எப்போது தொடங்கியது? மனிதர்களிடையே வர்க்க பேதம் ஏற்பட்டு அவர்களிடையே மோதலும் ‘அரசு’ எனும் அமைப்பும் தோன்றிய பிறகே சடங்கள் தோன்றின. சட்டங்களின் பணி வர்க்க ஆட்சிக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் கிளர்ந்து விடாமல் அடக்குவதும், ஆட்சியை தக்கவைப்பதுமே. அதேநேரம் சட்டம் அனைவருக்குமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் பிரேமைகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டங்களின் நோக்கம் அனைவருக்கும் சமநீதியும், நியாயமும் வழங்குவது என்றால் அதன் விளைவுகள் சமூகத்தில் நிலவியிருக்க வேண்டும், சட்டத்தின் தேவை தீர்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் இன்னும் சட்டத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது என்றால், அதன் பொருள் சட்டங்களின் தேவை என்று மக்கள் எதை கருதுகிறார்களோ அதுவாக இல்லாமல் சட்டத்தின் உட்கிடை வேறாக இருக்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா? மட்டுமல்லாது, சமூகம் இன்னமும் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே சட்டத்தின் பயன் வர்க்க ஒடுக்குமுறை தானேயன்றி, சமநீதியல்ல என்பது புலனாகும். ஆனால் முக்காலமும் உணர்ந்தவராக, முக்காலத்தையும் உருவாக்குபவராக கூறப்படும் அல்லா சட்டத்தின் இந்த தன்மைகள் எதனையும் உணராது, அனைத்து மக்களுக்கும் பொது வானது, எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியது என்று கூறுவது பொருத்தமானதா? அல்லது முகம்மது தன்னுடைய வர்க்க நலன் பேணும் அரசை உருவாக்குவதற்காக சொல்லிய புனைவுகளா?

இப்போது திருமணம் செய்வது குறித்த சட்டங்களைப் பார்ப்போம். குரான் வசனம் 4:3 இப்படிக் கூறுகிறது,

அநாதைகளிடம் நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் வலக்கரங்களுக்கு சொந்தமானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அநியாயம் செய்யப்படாமலிப்பதற்குச் சுலபமான வழிமுறையாகும்.

இந்த வசனம் ஒரு ஆண் யாரை எப்படி திருமணம் செய்யலாம் என்பதைப் போதிக்கிறது. நான்கு பெண்கள் வரை ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கும் சட்டம் இது. மட்டுமல்லாது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களை திருமணத்திற்கு வெளியே பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்கிறது. வெளிப்படையான அடிமை முறை நடைமுறையில் இருந்தது இஸ்லாம் தோன்றி வளர்ந்த காலகட்டத்தில் தான். அதனால் தான் குரான் பல வசனங்களில் ஒரு மனிதனும்  அடிமையும் சமமல்ல என்று கூறியிருக்கிறது.

முதலில், இது எக்காலத்திற்கும் பொருந்தும் சட்டமா? இப்போது வெளிப்படையான அடிமைகள் என்று யாருமில்லை. ஆனால் அல்லாவுக்கும் குரானுக்கும் இஸ்லாமியர்கள் கொடுக்கும் தகுதியின்படி பார்த்தால் வெளிப்படையான அடிமைகள் இல்லாத இன்றைய நிலை குறித்து அல்லா அன்று அறிந்திருக்கவில்லை. அல்லது, இது அன்றைய நிலையை மட்டுமே குறிக்கும் வசனம் என்றால் இன்றைக்கு பொருந்தாது. இரண்டில் எது சரி?

நான்கு திருமணம் வரை செய்து கொள்ள ஆண்களுக்கு ஏன் அனுமதி தந்திருக்கிறது என்றால் ஆணின் இச்சை தீர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்பதே. ஆணின் இந்த பலதார வேட்கையே இங்கு பொது விதியாக்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் இது ஆணின் நீதி தானே தவிர பெண்ணின் நீதியல்ல.

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்வதற்கு ஆணுக்கு என்ன தகுதிகள் வேண்டும்? நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது குரான். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் புரிந்தால் முதல் மனைவிக்கு கொடுத்திருக்கும் அத்தனை வசதிகளையும் இரண்டாவது மூன்றாவது நான்காவது மனைவிகளுக்கும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க முடியாது போனால் அது அநீதி. இது தான் குரானின் நீதி. வெளிப்படையாகச் சொன்னால் காசு இருந்தால் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள். காசு இல்லாவிட்டால் .. .. ? ‘பட்டினி கிடந்து உன் இச்சையை குறைத்துக் கொள்’ என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இது பணக்காரனுக்கான நீதியா? ஏழைக்கான நீதியா?

எக்காலத்துக்கும் பொருந்தும் இறைவனின் நீதி என எம்பிக் குதிக்கும் மதவாதிகள், இப்படி பச்சையாக காசு உள்ளவனுக்கு ஒரு நீதி அது இல்லாதவனுக்கு ஒரு நீதி என்று பிரித்து பேதம் காட்டும் இந்த ஆண்டைகளின் நீதியைத் தான் எல்லோருக்கும் பொது நீதி என்று சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

சார்ல்ஸ் டார்வினும் உயிரின மரமும் (வீடியோ )

'Charles Darwin and the Tree of Life' - என்ன ஒரு பொருத்தமான தலைப்பு! பரிணாமம் என்றவுடன் 'மனிதன் குரங்கிலிருந்து வந்தவன்' என்ற ஒரு வரிச் செய்தித்தான் பலரின் மனதில் வந்து நிற்கிறது. அது எவ்வளவுப் பெரிய அறிவியல் பிரிவு என்பது மறக்கவோ, மறைக்கவோப் படுகிறது.இன்னும் பலர் நினைத்துக்கொண்டிருப்பதுப்போல், பழைய விட்டலாச்சாரியா படங்களில் உருமாருவதுப்போல குரங்கு திடீரென மனிதனாக மாறிவிடவில்லை.

உயிரின வளர்ச்சியை ஒரு மரமாக சித்தரிதுக்கொண்டால், மரம் என்பது வேர்களையும், கிளைகளையும், இலைகளையும் கொண்டதுப்போல,  உயிரினம் பரிணாம வளர்ச்சியின் மூலம், அமினோ ஆசிட்கள் சேர்ந்து, ஒரு செல் உயிரினமாக உருவாகி, பின் அதே ஒரு செல் பல செல் உயிரினமாகி, அவைகள் பன்மடங்குப்  பெருகி, இனப்பெருக்கம் செய்து, தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளன. வேர்கள் என்பவை ஓரணு உயிர்களையும், மரத்தின் தண்டுப்பகுதி பல செல் உயிரினங்களையும், கிளைகள் பறவைகள், நீர்வாழ் உயிர்கள், நிலவாழ் உயிர்கள், போன்றவற்றையும், இலைகள் மற்றும் பூக்கள், கனிகள், போன்றவை, இவைகளிலேயே சிறந்த உயிரினத்தையும் குறிக்கும். இங்கேத்தான் மனிதன் இந்த உயிரின மரத்தின் உச்சாணிக்கொம்பில் மமதையுடன் கூடிய பெருமையோடு அமர்ந்திருக்கிறான். ஏறக்குறைய அவனுக்கும் கொஞ்ச கீழே, வேறொரு கிளையில் சிம்பான்சி, உறங்குட்டான், கொரில்லா போன்ற குரங்குவகைகளும், மற்றும் பல்வேறு கிளைகளில் ஏனைய மிருகங்களும் உள்ளன. மனிதனும், குரங்கினமும் ஒரே கிளையிலிருந்து கிளம்பிய, இரு வேறு பழங்கள்.( அல்லது பூக்கள்/ இலைகள்).

இதை இன்னொரு மாதிரியும் கூறலாம்.  ஒரே பேஸ்மேண்டில் கட்டப்பட்ட இரு வீடுகள். ஒன்றில் வசதி அதிகம், ஒன்றில் அதுக் குறைவு. இந்த பேஸ்மென்ட் போடப்பட்டதிலிருந்து, வீடு தற்போதுள்ள நிலைவரையில் கட்டி  முடிக்க ஆன  காலம்தான் கொஞ்ச நீளம். ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் பலக்கோடி ஆண்டுகள்! இன்னும் முடியவில்லை. இப்போதும்  அது கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கால சூழ்நிலைகளுக்கேற்ப தேவையுள்ளவை வைத்துக்கொள்ளப்[பட்டு, தேவை இல்லாதவை நிராகரிக்கப்படும். ஒருக்காலத்தில் வீட்டிற்கு புகைப்போக்க பெரிய சிம்னி இருந்தது. பிற்காலத்தில் யாரும் அதை வைத்துக்கொள்ளுவது இல்லை. அதுப்போலத்தான் மனிதனுக்கு வால்! [ என்னங்க வால்... சரிதானே...?  என்ன தருமிசார்... உங்களின் அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்!]
இப்படியே இன்னும் ஏதாவது எழுதிக்கொண்டேப் போகலாம். ஆனால் நான் அதற்காக இங்கே வரவில்லை. ஆனால் நான் பார்த்த, பிபிசி வழங்கிய  ' Charles Darwin and the Tree of Life' என்ற  அற்புதக் காணொளியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுவே எல்லா விளக்கக்களையும் தந்துவிடும். அதிலும் இந்த மரத்தைப் பற்றி, இங்கே  நமக்கு விளக்கப்போவது சர்.டேவிட் அட்டன்பரோ என்றால் சொல்லவும் வேண்டுமோ !

இந்தக் காணொளியில் அட்டன்பரோ மூன்று கேள்விகளை முன் வைக்கிறார். டார்வின் ஏன் இந்தக் பரிணாமக் கொள்கையை உருவாக்கினார்?...., அவர் கூறுவது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?...., சமீபக் காலமாக  இந்தக் கொள்கை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
டேவிட் தன் பயணத்தை டார்வின் தன் சிறு வயதில், உயிரினத் துவக்கம் பற்றி உன்னிப்பாக கவனிக்கத்தொடங்கிய, இங்கிலாந்தின், கென்ட் நகரில் இருந்த அவரின் பண்ணை  வீட்டில் துவக்குகிறார். பின் டார்வின் சிறுவனாக இருந்தபோது, பழங்கால படிமங்களை தேடித்திரிந்த லேசிச்டர்ஷயர் பகுதிக்குச் சென்று திருபி, டார்வின் கல்வி பயின்ற, பின்னர் தானும் மேற்படிப்பு பயின்ற, ஜெனிடிக்ஸ் என்ற புதிய அறிவியலின் கண்களைத் திறந்த, 'DNA Double Helix' என்ற புதிய பாதையை கண்டுப்பிடிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தையும் விஜயம் செய்கிறார்.  கடைசியாக தன் பயணத்தை பெருமைவாய்ந்த, லண்டனின் இயற்கை அருக்காட்சியகத்தில் முடிக்கிறார். டார்வினின் புரட்சிகரமான இந்தத்  தொலைநோக்கு கொள்கை, நாம் இப்போது காணும் உலகின் காட்சியை, நாம் ஒத்துக்கொண்டாலும், மறுத்தாலும், எப்படி நிரந்தரமாக மாற்றிவிட்டது என்பதை விவரிக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, டார்வின், ' நாம் ஒன்றும் இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை.... அதன்மேல் நமக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது, நாமும், நாம் ஆட்சி செலுத்தும் மற்ற மிருகங்களும் ஒருவகையில் உறவுமுறைதான்!' என அடித்துச் சொல்லுவதும் விளங்குகிறது. ( 'சக மனுசனையே நேசிக்க முடியாத இவர்கள் எல்லாம் எங்கேபோய்.....' என்று யாரோ புலம்புவது கேட்கிறது!]
காணொளியை பார்த்துவிட்டு, கண்டுக்காம போவதற்கு முன்... ஓட்டு போட்டுவிடுங்களேன் நண்பர்களே. இது எல்லோரையும் சேர்ந்தால் உங்களுக்கும் புண்ணியம். பின்னூட்டம்.... ஓகே ....  நன்றி.

ஹோமோ சேபியன்கள் யார்? மனித பரிணாமம் குறித்த காணொளி

வணக்கம் நண்பர்களே,
 பரிணாமம் குறித்த கடந்த‌ (எதிர்)பதிவில் மனித பரிணாமம் குறித்த பல தவறான புரிதல்களை விளக்க முயன்றோம். எதிர் பதிவுகளில் எதிர்வினையாற்றுவதே முக்கிய கடமையாகிவிடுவதால் பலருக்கு சில எளிய அடிப்படைகளை விளக்க முடிவது இல்லை.

காணொளி மூலம் பார்க்கும் போது பல விடயங்கள் எளிதாக புரியும்.அவ்வகையில் மனித பரிணாமம் குறித்த ஒரு விளக்க காணொளி சமீபத்தில் பார்த்ததை கொஞ்சம் விளக்கங்களுடன் பகிர்கிறோம்.பல அடிப்படை விடயங்கள் முதல் பல படிமங்கள் பற்றிய விபரங்கள், சமீபத்திய ஆய்வுகள் என பல அம்சங்களையும் அழகாக எடுத்து சொல்கிறது. மொத்தம் பத்து ப்குதிகளைக் கொண்டது.ஒவ்வொரு ப‌குதிக்கும் சில குறிப்புகளை தருகிறோம். ஆங்கிலம் அறியாதோர் கூட பார்த்து புரிய ஏதுவாக இருக்கும் என நம்புகிறோம்.

பகுதி1

1.1. நாம் யார் என்னும் கேள்வியின் விடையின் முதல் பகுதி 1859ஆம் சார்லசு டார்வின் எழுதிய origin of species என்னும் புத்தகத்தின் மூலம் கிடைத்தது .உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து பரிணாம வளர்ச்சியால் கிளைத்து தழைத்தன என்பதும், இது நடக்க காரணம் இயற்கைத் தேர்வே[natural selection] என்பதையும் பல சான்றுகள்,வாதங்களுடன் விளக்கினார் டார்வின்.
 *****
 1.2.விடையின் இரண்டாம் பகுதி தொல் மனிதவியல் [paleoanthropology] துறையிடம் இருந்துவந்தது. கிடைத்த படிம்ங்களை, ஒப்பீட்டு அளவுகள்,கால பரிசோதனை மூலம்மனித பரிணாம மரம்[hominid evolution tree அமைக்கப்பட்டது.

A).ஹோமோ சேபியன் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன தோற்றம் _ இன்று வரை

B). ஹோமோ நியாண்டர்தால் 3 இலட்சம் ஆண்டுகள் முதல் 30,000 ஆண்டுகள் முன்புவரை

C). ஹோமோ ஹைடெல்பெர்ஜெனெசிஸ் 8 இலட்சம் ஆண்டுகள் முதல் 3 இலட்சம் ஆண்டுகள் முன்பு வரை.

D). ஹோமோ எரக்டஸ் 19 இலட்சம் ஆண்டுகள் முதல் 70,000 ஆண்டுகள் முன்புவரை.முதன்முதலில் நெருப்பின் பயன்பாடு, சமூக அமைப்புடன் வாழ்ந்த மனித இனம்.இந்தியா,சீனா  உள்ளிட்ட பல இடங்களில் இதன் படிமங்கள் கிடைத்தன.
E). ஹோமோ ஹீபிலஸ் 25 இலட்சம் ஆண்டுகள் முதல்14 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை.முதல் கல் கருவி  பயன்படுத்தியவர் .

F) ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரிகனாஸ்  30 இலட்சம் ஆண்டுகள் முதல்20 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை.
G)ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரான்சிஸ்   38 இலட்சம் ஆண்டுகள் முதல் 29 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை. இதில் லூசி எனப்படும் படிமம் மனித பரிணாம வரலாற்றையே மாற்றி அமைத்தது.

.....

*****
1.3.விடையின் மூன்றாம் பகுதி  மரபியல்  ஆய்வில் இருந்து வந்தது. மனித ஜீனோம் குறியீடுகள்[சுமார் 320 கோடி நுயுக்ளியோடைடுகள்) ஆவணப்படுத்தப் பட்டது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.அது பல பரிணாம செயலாக்கங்களுக்கு விளக்கம் அளித்தது. தலைமுறைரீதியான ஜீனோம் மாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டன. 
1.4 இறுதிப்பகுதி மானுடவியல்[anthropology] எனப்படும்நடைமுறை வாழ்வில்  மனித உடல்,மனம் ,அறிவு குறித்த ஆய்வுகள்.இதன் மூலமே மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்தே உலக முழுதும் பரவினான் என்பது கண்டறியப்பட்டது. உலகின் பழமையான வாழும் மனித இனம் புஷ்மேன்[bushmen] எனப்படும் ஆப்பிரிக்க நாட்டவர்.இவர்கள் பேசும் மொழியே[khoslan] தொன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் ,இது பல ஒலிவகைகளைக் கொண்டது.

மனித இனம் முதலில் வேட்டையாடியே பிழைப்பு நடத்தினர்,விவசாயம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
 ....
பகுதி2
இரண்டாம் பகுதியில் பூமியில் உயிரின வரலாற்றில் கால ரீதியான பிரிவுகளை விளக்கி, மனிதப் படிம்ங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளைக் காட்டுகின்றனர்.
.....

பகுதி 3.பரிணாம செயலாக்கம் என்பதை ஜீனோமின் அடைப்படையில் விள்க்குகின்றார்கள். ஒவொரு உயிரினமும் இனவிருத்தி செய்யும் போது ஆண்,பெண் ஜீனோம்(குரோமோசோம்கள்) இணைந்து புதிய உயிர் தோன்றுகிறது. ஜீனோம்கள் இணைவின் போது  நிகழும் தவறுகள்(சிறு மாற்றங்கள் mutations) கொஞ்சம் விதியாசமான் வாரிசை உருவாக்குகிறது. நீண்ட கால்த்தில் இது பலவகையான் உயிர் இனங்களை[species] உருவாக்குகின்றன. இதில் சூழலுக்கு பொருந்துபவை மட்டுமே வாழ்கின்றன.மற்றவை அழிகின்றன[natural selection].
...
பகுதி 4.&6 மீண்டும் மனித முன்னோர்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு பற்றி விளக்குகிறார்.
பகுதி 5.புவியியல் காலக் கணக்கீட்டு அடிப்படைகளையும்,அப்போதைய புவி சூழல்களையும்  விளக்குகிறார் 
...
இதர பகுதிகளிலும் மனித பரிணாமம் குறித்த பெரும்பானமை அறிவியல் விடயங்கள் விளக்குகிறார். இக்காணொளி போல் மனித பரிணாமத்தை தெளிவாக விளக்கிய காணொளி  இதுவரை கண்டது இல்லை.இக்காணொளியை தயாரித்த ப்ளாக் ரைடர்[Black Ryder] ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகள்  பல.
அனைவரும் கண்டு மகிழ்க.
நன்றி

படைப்புவாதிகளின் முட்டாள் தனமான கேள்விகள் சில ?

படைப்புவாதிகள் என அறியப்படும் மதம் சார்ந்த போலி - அறிவியலாளர்கள் பரிணாம உயிரியலை நோக்கி பல கேள்விகளை முன் வைத்து வருகின்றார்கள். ஆனால் நாம் எதாவது கேள்வியினை திருப்பிக் கேட்டால் அங்கே சொல்லப்பட்டது இங்கே சொல்லப்பட்டது என்று தான் சொல்வார்களே ஒழிய ஏரணப் பூர்வமான ஆதாரங்களை வழங்குவதே இல்லை. அதாவது படைப்புவாதிகள் எப்போதுமே தருமிகளாகத் ( பதிவுலகத் தருமி இல்லை .. நக்கீரர் காலத்து தருமி ) தான் உலா வர விரும்புகின்றனர். சரி அவர்கள் கேட்கும் கேள்விகளாகவது அறிவுப் பூர்வமாக இருக்கின்றதா ? அதுவும் இல்லை ! அவர்களின் வினாக்களுக்கு பள்ளியில் படிக்கும் அறிவியல் மாணவர்களே பதில் சொல்லிவிடுவார்கள். இருந்த போதிலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில்களை கொடுக்கின்ற போது இறுதியில் செல்லாது செல்லாது ! தீர்ப்பை மாத்திச் சொல்லுங்கள் நாட்டாமை என ஓடிவிடுகின்றார்கள். 
படைப்புவாதிகளால் பெரும்பாலும் பரிணாம அறிவியல் நோக்கிய சில்லித் தனமான கேள்விகளில் சில்வற்றை நாம் காண்போம். 
கே1. உயிர்கள் எப்படி தோன்றின ?
படைப்புவாதிகள் பரிணாம உயிரியலாளர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது தவறான ஒன்றாகும். ஏனெனில் பரிணாம அறிவியலின் வேலையே உயிர்கள் எப்படி உருவாகின என்று கண்டுப் பிடிப்பது என்பதல்ல, மாறாக உருவாகிய உயிரனங்கள் எப்படி பரிணமித்தன என்பதே ஆகும். சரி ! இருந்த போதிலும் உயிர்கள் எப்படி உருவாகின என்பதற்கு எண்ணற்ற அறிவியல் ஆய்வுகள் பதில் சொல்கின்றன. கூகிளில் தேடினாலே இதற்கான விரிவான ஆய்வுக் கட்டுரைகள் பல கிடைக்கின்றன. 
ஆனால் படைப்புவாதிகள் பரிணாம உயிரியலாளர்களிட இக்கேள்வியை கேட்பதற்கு முக்கிய காரணம், பரிணாமத்தின் நம்பகத் தன்மையை மக்களிடம் குறைப்பதற்கு தான். பரிணாம கோட்பாட்டின் அடிப்படைகளே எவ்வாறு உயிரினங்கள் படிப்படியாக மாற்றங்களுக்கு உள்ளாகின என்பதையும், அவ்வாறு ஏற்பட்ட மாற்றங்கள் அடுதடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டும், நீக்கப்பட்டும் வந்துள்ளன என்பதை விளக்குவதே ஆகும். 
படைப்புவாதிகளின் எண்ணமே அறிவியலால் சில விளக்கங்களை இப்போது தர முடியவில்லை எனில் எப்போதுமே தர முடியாது என்பது தான். அதனாலேயே தமது படைப்புவாதங்களுக்கு ஆதாரங்களை சேர்க்காமல், பரிணாம கோட்பாட்டின் மீது கேள்விகளை வைக்கின்றார்கள். ஒரு வகையில் இதுவும் நல்லதே ஏனெனில் அவர்கள் கேட்கும் சில கேள்விகள் உண்மையான பதில்களை மேலும் ஆராயும் உத்வேகத்தை ஆய்வாளர்களுக்கு கொடுக்கின்றது. 
இதில் என்ன விடயம் என்றால் கேள்விகள் கேட்கும் பாணியில் கோட்பாடுகளைத் திரித்து மக்களிடம் பொய் பிரச்சாரங்களை செய்வதே இவர்களின் நோக்கமாக உள்ளது.
கே2. DNA கோட்கள் எப்படி உருவாகின ?
இந்தக் கேள்விகளை எழுப்புவோர் அத்தோடு நின்றுவிடுவதில்லை தமது குழப்பவாதங்களை நிலை நிறுத்த அடுத்தக் கட்ட கேள்விகள் ( விளக்கங்கள் ) எடுத்து வைக்கின்றார். 
'' DNA வின் குறியீட்டு எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள் சொற்களின் அர்த்தங்களை விளக்குவதாக அமையாமல், இரசாயன பண்புகளுக்குத் தொடர்பில்லாமல் சிக்கலான மொழி அமைப்பில் இருக்கின்றதே '' என ஒரு படைப்புவாதி தமது அறிவுத் திறனைக் காட்டினார். 
இது மாதிரி பரிணாம எதிர் கேள்விகளை கேட்கும் பல அறிவுக் கொழுந்துகள் பலரும் முறையான உயிரியலையோ அல்லது ஜெனடிக்கினையோ பற்றி ஒன்றும் தெரியாதவர்களாகவே இருப்பார்கள். எங்கேயோ யாரோ சொன்ன சில கேள்விகளை தேடி எடுத்து நம்மிடம் கேட்பார்கள். ஆனால் இவற்றுக்கான விடைகளை நாம் கொஞ்சம் மூளையை பயன்படுத்தினால் எளிதாக சொல்லிவிடலாம்.
மேற்கண்ட கேள்வியை கேட்டவருக்கும் ஜெனிட்டிக் கோட் பற்றிய அறிவு கம்மி என்பதை நாம் உணரலாம். பூரணமான ஜெனிட்டிக் கோட்களை இங்கே சென்று பார்க்கலாம். ஜெனிட்டிக் கோட்களை முழுமையாக படித்தவர்கள் இப்படியான கேள்விகளை கேட்க மாட்டார்கள். கேள்விகள் கேட்பவரின் முக்கியக் குறிக்கோளே பரிணாம அறிவியல் பிழையானது என்று நிறுவுவதே ஒழிய சரியான விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கான எண்ணமில்லை. 
இவர் கேட்டக் கேள்விகளுக்கு நமது கூகிள் ஆண்டவரிடமே பதில்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கான பதில்களை பொறுமையாக படித்து தெரிந்துக் கொள்வதில் படைப்புவாதிகளுக்கு ஆர்வம் இருப்பதில்லை. கேள்விகள் மட்டுமே கேட்போம் என்பார்கள் - பதில்களை சொல்ல நாம் தயாரனாலும் அதனை கேட்டு தெளிவடைய தயாராக இருப்பதில்லை அவர்கள். 
கே3. மரபணுத் திடீர் மாற்றம் ( Mutation ) எப்படி DNA -களில் இருக்கும் கோட்களை பாரிய அளவு மாற்றி அமைத்துள்ளன. மரபணுத் திடிர் மாற்றங்கள் DNA கோட்களை காப்பி செய்வதில் ஏற்படும் பிழைகள் என்றால் இவ்வளவு பெரிய மாற்றங்கள் எப்படி ஏற்பட்டன. ஒரு கிருமியாக இருந்தவன் இன்று கிருமியை ஆராய்பவனாக மாறியது எப்படி ?
இந்தக் கேள்வியை எழுப்பியவர் மறுபடியும் குழப்பங்களை ஏற்படுத்தவே ஆசைப்படுகின்றார் என்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். ஒன்றும் அறியாத மக்கள் மத்தியில் பார் நாம் கேட்ட புத்திக் கூர்மையான கேள்விக்கு இந்த பரிணாமக் காரர்களால் விளக்கம் தரமுடியவில்லை அப்போ அது பொய் ! பொய் ! என்று பிரச்சாரம் செய்வதற்கான உத்தியே இப்படியான கேள்விகள். 
ஆனால் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை .. அல்லது மாற்றங்கள் நிகழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற எந்தக் கட்டளைகளும் இல்லை. மாற்றங்கள் நிகழக் கூடாது என்ற எந்த தடைகளும் இல்லை. கோடிக் கணக்கான ஆண்டுகள் இந்த பூமியில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மாற்றம் ஒவ்வொரு உயிர்களிடையும் கொஞ்சம் கொஞ்சமாகவே நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு மாற்றமும் அந்த உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு உகந்தத்தாக இயற்கைத் தெரிவால் ஏற்பட்டவை. சில சமயங்களில் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் தவறாகி விடுவதும் உண்டு. அப்படி தவறாகும் பட்சத்தில் அதன் சந்ததிகள் அழியும் நிலைக்கு சென்றுவிடும். அப்படி அழியும் பட்சத்தில் தவறான மாற்றங்கள் கடத்தப்படுவதில்லை மாறாக நின்றுவிடுகின்றன. 
அதாவது ஒரு களிமண்ணை எடுத்து கண் தெரியாத குயவனிடம் கொடுத்து பானை செய் என்பது போன்றது தான் இந்த இயற்கை மாற்றங்களும். பானையை கண் தெரியாதவன் ஒருக் கணப் பொழுதில் செய்து முடிக்க முடியாது, அவனது புரிதலுக்கு ஏற்ப களி மண்ணை உருட்டுகின்றான். சில சமயம் அது பானையாக மாறலாம், அல்லது எதோ ஒரு உருவாக மாறலாம். அப்படித் தான் இயற்கையும் அதன் மாற்றங்களும். 
ஆனால் இயற்கையின் ஒரே எண்ணம் உயிரினங்கள் உயிர் வாழ வேண்டும் என்பது தான். உயிர் வாழ உகந்ததாக இல்லாமல் போகும் சங்கதிகளை DNA -க்களில் இருந்து அழிப்பதும், மாற்றிப் பார்ப்பதும், குழப்பிப் பார்ப்பதுமே இதன் வேலை. அதாவது அறிவில்லாத குரங்குகிடம் கொடுக்கப்பட்ட ஒரு பென்சிலை போலத் தான். அது அதன்பாட்டுக்கு கிறுக்கிக் கொண்டிருக்கின்றது. அது ஓவியமாகவும் மாறலாம் கிறுக்கல்களாகவும் மாறலாம். இந்த கிறுக்கல்களை செய்வது மகா புத்தியுள்ள ஒரு குரங்கு ( சாரி ! கடவுள் ) என்று வைத்துக் கொண்டால் அவன் எதனையும் தெள்ளத் தெளிவாக வடிவமைத்துவிடலாம். கண்பார்வை நிறைந்த குயவனைப் போல அழகிய பானையை உருவாக்கி விடலாம். ஆனால் இயற்கையின் படைப்புகள் எவை பூரணமற்றவை. அனைத்திலும் அனைத்திலும் உங்களிடமும் என்னிடமும் குறைகள் இருக்கின்றன. அது குறை என்பதை உணர்ந்து அதனை DNA-க்களிடம் இருந்து நீக்கவே இயற்கைக்கு பல ஆயிரம் லட்சம் ஆண்டுகள் தேவைப்படுகின்றது. சில நேரம் குறைகளை நீக்கவே முடியாமல் தவிக்கவும் செய்கின்றது. குறையை நிவர்த்தி செய்ய முக்கி முனகுகின்றது. 
அட இதைச் சொல்லவே பதிவு நீண்டு விட்டது மிச்சக் கேள்விகளை அடுத்தடுத்தப் பதிவுகளில் பார்ப்போம்.

சர்ச்சையைக் கிளப்பும் கடவுளின் பரிணாமம்

கடவுளைக் காப்பாற்றுவதற்காக உலகெங்கும் பல குழுக்கள் பரிணாம உயிரியலை எதிர்த்து வருகின்றனர். பெரும்பாலும் பரிணாமத்தை எதிர்ப்பவர்கள் பரிணாமத்தில் இருக்கும் குறைகளை மட்டுமே எடுத்து வைப்பார்கள். ஆனால் அதற்கு மாற்றாக அவர்களால் வைக்கப்படும் படைப்புவாதக் கொள்கையைக் கூட அவர்களால் நிரூபிக்க முடிவதில்லை. அவர்கள் பழைய புத்தகங்களில் படைக்கப்பட்டது என்ற வார்த்தையைத் தவிர அறிவியல் நிரூபணம் எதனையும் தருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் எடுத்து வைக்கும் மதங்களும், மதம் கூறும் கடவுளர்களும் எவ்வாறு காலப் போக்கில் பரிணாமம் அடைந்தார்கள் என்பதை விளக்கும் அற்புதமான நூல் '' கடவுளின் பரிணாமம் '' ஆகும். ராபர்ட் ரைட் என்பவரால் எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டியதொரு அற்புத நூலாகும். மனிதர்கள் காட்டில் வாழ்ந்தக் காலங்களில் மத நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பது தொடங்கி பல அரிய தகவல்களைக் கூறுகின்றனர். பசிபிக் பெருங்கடலில் வாழும் மக்கள், அமெரிக்கப் பழங்குடிகள் என உலகின் பல பூர்வக் குடிகளில் மத நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பது பற்றியும் விளக்கமாகக் கூறுகின்றார். 
அத்தோடு மட்டுமல்லாமல் பண்டைய எகிப்து, சுமேரியாவில் எப்படி மதங்கள் பரிணாமம் அடைந்தன என்பது பற்றியும். சுமேரியாவில் தோற்றம் பெற்ற ஓரிறைக் கோட்பாடுக் குறித்தும் கூறுகின்றார். 
இஸ்ரேலியர்கள் ஆரம்பக் காலங்களில் எவ்வாறு பல தெய்வங்களை வழிப்பட்டுக் காலப் போக்கில் யெகோவா என்னும் கடவுள் எப்படி உருவானார் எனவும் வரலாற்றுப் பூர்வமாக எடுத்துக் கூறுகின்றார். பிற்காலங்களில் வரலாற்று இயேசு எவ்வாறு கடவுளாக மாற்றப்பட்டார் என்பது பற்றியும். அனைத்துலக அன்பு என்பது இயேசு பிரச்சாரம் செய்யாத ஒன்று எனவும் இந்நூல் கூறுகின்றது. முகமது நபி எவ்வாறு அரசியல் மற்றும் சமூகக் காரணங்களுக்காக யூதர்களின் மதத்தினைத் திரித்து அரேபியர்களுக்குப் பிரச்சாரம் செய்தார் எனவும் கூறுகின்றார். கிருத்துவத்தின் பவுல் எவ்வாறு கிருத்தவ மதத்தினை உருவாக்கினார், அதே போலத் தான் முகமது நபியும் ஒரு மதத்தினை உருவாக்கினார். ஆனால் முகமது நபி அரசியலை துணையாக எடுத்துக் கொண்டார் எனவும் இந்நூல் கூறுகின்றது. எவ்வாறு முகமது பிற்காலங்களில் யூதர்களுக்கு எதிராகக் குரானை மாற்றினார் போன்ற விடயங்களை இந்நூல் மேலும் கூறுகின்றது.
  • யெகோவா கடவுளுக்கு மனைவி இருந்தாரா ? 
  • முகமது இஸ்லாம் அல்லாதோரைக் கொல்லச் சொன்னாரா ?
  • யூத மதம் பல தெய்வ வழிப்பாட்டினை திரித்து ஓரிறைக் கோட்பாட்டை உருவாக்கியதா ? 
  • கடவுள் நம்பிக்கை நமது ஜீன்களில் உள்ளனவா ? 
  • இயேசு அன்பு வழியைப் போதித்தாரா ? 
என்ற பல கேள்விகளுக்கு இந்நூலை நீங்களே படித்துப் புரிந்து கொள்ளுங்கள். 
பெரும்பாலும் ஆபிரகாமிய மதங்களைப் பற்றியே இந்நூல் விவரிக்கின்றது. தாத்தாச்சாரியர் எழுதிய இந்து மதம் எங்கே செல்கின்றது என்ற நூல் இந்து மதத்தின் உண்மைகளைப் பிட்டு பிட்டு வைத்தது போல, இந்நூல் ஆபிரகாமிய மதங்களில் புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக் கொண்டு வருகின்றது. 
Robert Wright
இந்நூலின் ஆசிரியர் ராபர்ட் ரைட் ஆரம்பக் காலங்களில் ஒரு கிருத்துவராக இருந்தவர். கடவுளின் பரிணாமம் என்ற நூல் நியு யோர்க் டைமிஸின் சிறந்த விற்பனையாகும் நூலாகவும், புலிட்சர் பரிசு பெற பரிந்துரைக்கப்பட்ட நூலாகவும் விளங்குகின்றது. இவர் ஏற்கனவே தி மோரல் அனிமல், நான் ஜீரோ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். பல முன்னணி பத்திரிக்கையில் எழுதியும் வருகின்றார். பென்னிசில்வானியா பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் மற்றும் சமயங்கள் குறித்துப் பாடங்கள் எடுத்துள்ளார். நியு அமெரிக்கா பவுண்டேசனின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். ப்ளாக்கிங்க் ஹெட்ஸ்.டிவி மற்றும் தி புரோக்கிரசிவ் ரியாலிஸ்ட் இணையத் தளங்களின் முதன்மை நிர்வாகியாகவும் இருக்கின்றார்.

சனி, 20 அக்டோபர், 2012

தந்தை பெரியார் தமிழினத்தின் துரோகியா?

எழுகதிர் அருகோவின் அடாவடித்தனம்
                   தந்தை பெரியார் அவர்கள் தமிழின விடுதலைக்குக் குரல் கொடுத்த தலைவராவர். தமிழ்நாட்டு விடுதலைக்கு அவர் அளவுக்குக் குரல் கொடுத்தவர்களோ அதற்காகப் போராடியவர்களோ வேறு யாரும் இல்லை என்பதே உண்மை. அப்படிப் போராடிய பெரியாரை ‘எழுகதிர்’ இதழின் ஆசிரியர் அருகோ, “பெரியார் திட்டமிட்டே தமிழினத்தைச் சீரழித்த கன்னடியர் என்றும் பெரியார் வேண்டுமென்றே திராவிட நாட்டு கோரிக்கையை வைத்துத் தமிழினத்தைப் பலவீனப்படுத்தினார் என்றும், காஞ்சி பெரியவாள், பெரியார் என்ற இரு கன்னடர்களும் தான் தமிழகத்தை மேய்ந்து நாசம் செய்தவர்கள் என்றும் அக்டோபர் எழுகதிரில் எழுதியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் திரையுலகினரின் காவிரிப் போராட்டத்தை வலுவிழக்க வைக்க ரஜினி செய்த கீழ் அறுப்பு வேலைகளைக் கூறவந்த அருகோ வேண்டுமென்றே பெரியாரை வம்புக்கு இழுக்கிறார். இதோ அருகோவின் கூற்று:
“இக்கொடுமை இன்றல்ல, சென்ற நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. சென்ற 20ஆம் நூற்றாண்டிலும் இரு கன்னடர்கள்தாம் தமிழகத்தை மேய்ந்தார்கள். இதைச் சொல்கிறபோது பல தமிழர்களே நம்மீது பாய்வார்கள் என்று தெரியும் என்றாலும் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒருவர் காஞ்சி சங்கர மடத்திற்குத் தலைமை வகித்த மகாப் பெரியவாள் என்று அவர்களால் கொண்டாடப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் எனப்படும் கன்னடப் பார்ப்பனர். மற்றவர் பெரியார் ஈ.வெ.ரா எனும் பார்ப்பனரல்லாதாரின் படைத் தளபதி. ஆம்; இந்த சந்திரசேகரக் கன்னடர் தமிழ்நாட்டின் ‘மகாப் பெரியவாளாய்’ இவர் தலையெடுக்கும் வரை தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஓரளவு தமிழ்ப் பற்றுடனேயே இருந்து வந்தனர். இந்த ஆள் தான் முதன்முதலாக “தமிழை நீசபாஷை, ‘பூஜை வேளையில் அதிலே பேச மாட்டேன்’ என்று கூறியதுடன், ஆண்டாளின் திருப்பாவைப் பாடலில் வரும் “தீக்குறளைச் சென்றோதீர்” என்ற சொற்றொடரும் ‘தீமை பயக்கும் புறம் பேசாதீர்’ என்ற பொருளுக்கு மாறாக. ‘தீய திருக்குறளைப் படிக்க கூடாது’ என்று பொருள் சொன்னவராவர். அதுவரை தமிழ்ச் சைவ சிந்தாத்தத்திலும் ஆழ்வார்களின் அருளிச் செயல் வழிவந்த வைணவத்திலும் பிடிப்புக் கொண்டிருந்த தமிழ்ப் பிராமணர்களை வடமொழி மயப்பட்ட வைதிக சமயம் என்று தமிழுக்கு முற்றிலும் பகைவர்களாகவே மாற்றியதில் இக்கன்னடருக்கே பெரும் பங்குண்டு.
அதைப் போலவே பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் தான் பெருந்தலைவராக வளருகிற வரை தமிழிசை இயக்கம், தமிழ்மறை (திருக்குறள் பரப்பு) இயக்கம், தமிழ்நாடு விடுதலை இயக்கம் என்று தீவிரம் காட்டி முதலாவது இந்தி எதிர்ப்புக்குத் தலைமை தாங்கித் தமிழர் தந்தையாகவே பரிணமித்தவர். ஆந்திரரும் கன்னடரும் மலையாளிகளும் அன்றைக்கு நடைமுறையில் இருந்த திராவிட நாட்டை (சென்னைத் தலை மாகாணத்தை) மொழி வழியில் பிரிக்க வேண்டும் என்று போராடியபோது, திராவிட நாட்டுக் கோரிக்கையை முன் வைத்துத் தமிழர்களைத் திசை திருப்பினார் என்பதையும் மறந்து விட முடியாது. மற்றவர்கள் மொழிவழி மாநிலப் பிரிவினைக்காகக் களமிறங்கிய நேரத்தில் அதற்கு எதிர் திசையில் தமிழர்களைத் திராவிட நாட்டு பிரிவினைக்காகக் களமிறங்கச் செய்தவர் பெரியாரேயாவர்.
சரி! திராவிட நாட்டுக்காகக் குரல் கொடுப்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழ்ப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட குரல் கொடுத்தாரா என்றால் அதுவுமில்லை. மாறாகத் தேவிகுளம் பீர்மேட்டுத் தமிழர்கள் தாய்த் தமிழகத்துடன் இணையப் போராடிய போது அவை மலையாளிகளுக்கே சொந்தமானவை எனக் கூறினார். அதுமட்டுமல்ல அண்டை மாநிலத் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்த மா.பொ.சி. போன்றவர்களைப் “பார்ப்பனக் கைக் கூலிகள்” என்று கொச்சைப்படுத்தி எல்லை மீட்புப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தினார்...... கருநாடகத்தைச் சேர்ந்த தமிழ் பகுதிகளைத் தாய் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று போராட்டமே எழவில்லை என்பதையும் எண்ணிப் பார்த்தால் ஒரு கன்னடர் அன்று தமிழினத் தலைவராகக் காட்சியளித்ததுதான் காரணம் என்பது விளங்கும்.
இன்னும் சொன்னால் வளமான தமிழ்ப் பகுதிகள் தாய்த் தமிழகத்துடன் சேர்ந்து, தமிழகம் தன் சொந்தக் கால்களில் நின்றுவிடக் கூடாது; என்றைக்கும் தமிழ்நாடு அண்டை மாநிலங்களின் தயவில்தான் வாழ்ந்து வரவேண்டும் என்று திட்டம் போட்டே இந்த இரு கன்னடரும், ஆன்மீகத்திலும் லௌகீகத்திலும் தமிழர்களைத் திசை திருப்பினார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது” (எழுகதிர், அக்டோபர், பக். 10-12)
periyar_450பெரியாரையும் காஞ்சி சங்கராச்சாரியையும் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்பதற்காகவே பல வரலாறுகளை மூடி மறைக்கிறார் அருகோ. தமிழகத்தில் பல்லவராட்சியில் தொடங்கிய பார்ப்பனர் ஆதிக்கம் சோழர் ஆட்சியில் உச்சகட்டத்தை அடைந்தது. இராசராச சோழன் ஆட்சியில் பல ஆயிரம் பார்ப்பனக் குடும்பங்களை வரவழைத்து ஆலயங்களில் சமசுகிருதம் ஓதுவதற்காக அவர்களுக்குச் சமசுகிருத வேதப் பாடசாலைகளையும், ஏற்படுத்திக் கொடுத்து, கோவில்களில் முன்னர் இருந்த தமிழ் வழிபாட்டை முற்றும் அழித்தான். சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் தமிழில் வழிபாடு இல்லை என்பதே உண்மை வரலாறு.
அருகோ கூறுவது போல் கடந்த நூற்றாண்டு வரை பார்ப்பனர்கள் தமிழில் வழிபாடு செய்ததாகவும் காஞ்சி பெரியவாள் வந்த பிறகுதான் தமிழகப் பார்ப்பனர் வடமொழியை ஏற்றனர் என்பதுவும் அண்ட புளுகும் ஆகாசப் புளுகுமாகும். தமிழக வரலாற்றையே திரிப்பதுமாகும். பெரியாரையும், பெரியவாளையும் ஒப்பிடவே இவ்வரலாற்றைத் திரிக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் 1919லேயே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தமிழகத்தில் மிகப் பெரும் தலைவராக உருவாகி விட்டார். பார்ப்பனன் மற்றும் வடநாட்டான் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க அவர் அரும்பாடு பட்டார். அருகோ கூறுவது போல் திருக்குறள் மாநாடுகளை நடத்தி அவர் தமிழர் தலைவராக வரவில்லை. 1938லேயே தமிழர் தலைவராக வந்த அவர் 1948க்குப் பிறகே திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். அவருக்குத் தலைவர் பதவியின் மேல் ஆசையில்லை என்பதை அப்போதே அவர் கூறிவிட்டார்.
“தோழர்களே! நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை.” (ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதற் பதிப்பு, 1974, பக். 2027. ‘குடியரசு’ 13-10-1940)
சென்னை கன்னிமரா ஓட்டலில் 6-10-1940 அன்று பெரியார் கூறிய மேலே கண்ட கருத்துகளில் இருந்தே அவர் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டவரல்ல என்பதை அறியலாம்.
1938இல் 'தமிழ்நாடு தமிழர்க்கே' என முழங்கிய அவர் அன்று இருந்த நீதிகட்சியினரின் கட்டாயப்படுத்தலாலும் அன்று இருந்த அரசியல் சூழ்நிலையாலும் 1939 முதல் 'திராவிட நாடு திராவிடர்க்கே' எனக் குரல் கொடுத்தார். 1953இல் ஆந்திர மாநிலம் பிரிவினை அடைந்தவுடன் அவர் மீண்டும் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தையே முன் வைத்தார். பெரியார் கடைசிவரை திராவிட நாடு கோரிக்கை வைத்ததைப் போல அருகோ எழுதியுள்ளது வரலாற்றுத் திரிபாகும். ஆந்திரர்கள் மொழிவாரி மாநிலப் பிரிவினைக் கோரிக்கையை 1921இல் தொடங்கினாலும் 1950க்குப் பிறகே வலிமையாகப் போராடினார்கள். பெரியார் 1939 முதல் திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தார். அப்போது மலையாளிகளோ, கன்னடர்களோ தமிழர்களோ தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை. எல்லோரும் மொழிவழி மாநிலம் கோரியபோது பெரியார் திராவிட நாடு கோரிக்கையை வைத்துத் தமிழர்களை திசை திருப்பினார் என்பது உண்மைக்குப் புறம்பானதாகும்.
மொழிவழி மாநில எல்லைப் பிரிவினையின் போது பெரியார் பிற மாநிலத்தவர்களுக்குச் சார்பாக இருந்தார் என்று அருகோ எழுதியுள்ளது உண்மைக்கு மாறானதாகும். தமிழ் பேசும் மக்கள் உள்ள பகுதியை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பெரியார் கண்டித்தார்.
“பிரிவினைக்குப் பெயர் மொழிவாரி நாட்டுப் பிரிவினை: இதில் பிரிந்து போக வேண்டுமென்று வாதாடுகிறவர்கள் மொழியை ஆதாரமாகக் கொண்டு தானே பிரிவினை கேட்க வேண்டும். அதை விட்டு விட்டு வேறு மொழி 100க்கு 60, 70, 80 வீதம் பேசுகிற மக்கள் உள்ள நிலையை தங்கள் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று கேட்பது எப்படி யோக்கியமாகும்....? ஆந்திர மொழி பேசுகிற மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்த்துக் கொள்வதில் ஆட்சேபமில்லை. தமிழ் மொழி பேசும் மக்களைப் பெருவாரியாகக் கொண்ட நாட்டை ஆந்திராவோடு சேர்க்க வேண்டும் என்பது எப்படி 'மொழிவாரி மாகாணப் பிரிவினை என்று சொல்ல முடியும்?' மொழி வாரிப் பிரதேசப் பிரச்சினையின் தன்மை இவ்வாறு இருக்க, இனி மற்றப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்போம். அவை ஆந்திர இராஜ்யத்தின் தலைநகர் சென்னையில் இருக்க வேண்டும் என்பதும்; பொது கவர்னர் பொது அய்கோர்ட் இருக்க வேண்டும் என்பதும்; சிறிது காலத்திற்காவது ஆந்திர அரசாங்கக் காரியாலயம் சென்னையிலே இருக்க வசதியளிக்க வேண்டுமென்பதும் இவை ஒன்றுமே முடியாவிட்டால் சென்னையைத் தனி இராஜ்யம் ஆகச் செய்து அது ஆந்திராவுக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமில்லாத, டெல்லியைப் போன்ற ஒரு யூனியன் ஆக்க வேண்டுமென்றும் கேட்பவைகளாகும்.
இவைகளைப் பார்க்கும்போது, ஆந்திரர்களுக்கு இந்த விஷயங்களில் பொறுப்புள்ளதும் குறிப்பிட்டதுமான ஒரு யோசனையோ, இலட்சியமோ இல்லை என்பதாகவே தெரிய வருகிறது. ஆந்திராவின் தலைநகரம் சென்னையில் எதற்காக இருக்க வேண்டும்? இப்போது ஆந்திர நாடு அமைப்பு என்கிற பிரச்சினை ஒரு விடுதலைப் பிரச்சினையே யொழிய, பாகப் பிரச்சினை அல்ல, எப்படியெனில் சென்னை இராஜ்யம் 4 மொழிவாரிப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாலில் ஒன்றுதான் ஆந்திரா. இப்போது ஆந்திராதான் மற்ற மூன்றையும் விட்டு விலகிக் கொள்கிறது. ஆகவே இந்த விலகிக் கொள்ளுதல் சென்னை இராஜ்யத்திலிருந்து விடுதலை பெறுதல் என்று அர்த்தமாகும். விடுதலை செய்து கொண்டு போகிறவர்கள் விடுதலை செய்து கொண்டு போக வேண்டுமே தவிர மறுபடியும் ஒன்றாக இருக்க வசதி கேட்பது பொருத்தமற்ற காரியமாகும். அது போலவே பொது கவர்னர், பொது அய்கோர்ட் இருப்பது என்பதும் அரசியல் சட்டப்படி அனுமதிக்க முடியாது. சில நாளைக்காவது சர்க்கார் நிர்வாக காரியாலயம் சென்னையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதும் அர்த்தமற்றதாகும். இவைகளையெல்லாம் ஒன்றாகவே, ஒன்றிலேயோ இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள் எதற்காகப் பிரிய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் தொல்லை ஏற்படும்படி செய்ய வேண்டும் அல்லது தந்திரமான வழியில் ஆக்கிரமிப்பு செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு உண்மையான எண்ணம் ஒன்றும் இருக்க முடியாது என்பதுதான் என் கருத்து.
இவைகளையெல்லாம் விட நாம் கவனிக்க வேண்டிய சங்கதி ஒன்று இருக்கிறது. ஏதோ காரணம் சொல்லி நாம் இவர்களை உள்ளே இருக்கச் சம்மதிப்போமேயானால் பிறகு இவர்களை எப்படி வெளியேற்றுவது? அதற்கு என்ன சட்டம் இருக்கிறது? ஆந்திரா நாடு பிரிந்தது என்றால் ஆந்திரர்கள் சென்னையை விட்டு விட்டு வெளியேறி விட்டார்கள் என்றே அர்த்தம். வெளியேறினவர்களுக்கு இந்த ராஜ்யத்தைப் பற்றி பேச என்ன உரிமை உள்ளது? மடத்தை விட்டு வெளியேறின ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றிய கவலை ஏன்? என்று சொல்வது போல சென்னையைப் பற்றி யோசனை கூற இவர்கள் யார்? தமிழ்நாட்டாராவது சென்னை நகரத்தாராவது தான் இதைப் பற்றிப் பேச உரிமை உள்ளவர்கள்." (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதற்பதிப்பு, 1974, பக்கம் 724-726) (விடுதலை 7, 8-1-1953)
ஆந்திரா பிரிவினையின் போது பெரியார் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்க்கு ஆதரவான கருத்துதானே தவிர தமிழருக்கு எதிரான கருத்தல்லவே. ஆந்திரா பிரிந்தவுடன் எஞ்சியுள்ள பகுதியைத் தமிழகம் - கர்நாடகம், மலையாளம் மூன்றையும் இணைத்து ‘தட்சண பிரதேசம்’ என்கிற புதிய மாநிலத்தை உருவாக்க அன்றைய மத்திய அரசும் இராசாசியும் முயன்றபோது அதை உருவாக்க விடாமல் தடுத்து நிறுத்தித் தமிழ் மக்களின் நலத்தைக் காத்தவர் பெரியார். தட்சணப் பிரதேசம் அமைந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால், பார்ப்பனர்களால் கழித்து விடப்பட்டு நம்மவருக்குக் கிடைத்து வரும் உத்தியோகங்களெல்லாம் மலையாளிகளின் கைக்குள் போய்விடும் என்று கூறித் தடுத்தார். அப்போது பெங்களூரில் இருந்த தமிழக முதல்வர் காமராசருக்குப் பெரியார் பின்வரும் தந்தியை அனுப்பினார்.
“தட்சணப் பிரதேசம் ஏற்படுவதென்பது தமிழர்களுக்கு வாழ்வா? சாவா? என்பது போன்ற உயிர் பிரச்சினையாகும். உங்களுக்கும் மற்றெல்லோருக்கும் இது தற்கொலையானது ஆகும். தட்சணப் பிரதேசம் ஏற்படுமானால் முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகி விடும். அருள் கூர்ந்து நம் எல்லோரையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன்" (ஈ. வெ. ரா. சி. பக்கம் 729)
காமராசர் மூலமாக தட்சணப் பிரதேசம் அமைவதைக் தடுத்தார் பெரியார். ஆந்திரா பிரிந்த பிறகு கர்நாடகமும் மலையாளமும் பிரிய வேண்டும் என்றே பெரியார் விரும்பினார்.
“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகவும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால் ஒன்று, கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப் பற்றோ இனச் சுயமரியாதையோ பகுத்தறிவு வளர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்புக்கிடையாது; சூத்திரன் என்பது பற்றி இழிவோ வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. அவர்கள் மத மூட நம்பிக்கையில் ஊறி விட்டார்கள்.
இரண்டு, அவர்கள் இருவருமே மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் கவலைப் படாதவர்கள். ஆகவே இவ்விரு துறைகளிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள்; எதிரிகள் என்றே சொல்லலாம். மூன்றாவது, இவர்கள் இரு நாட்டவர்களும் பெயரளவில் இரு நாட்டவர்களானாலும் அளவில், எஞ்சிய சென்னை இராச்சியம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்களாவார்கள். அப்படி 14இல் 7இல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3இல் ஒரு பாகத்தை அடைந்து, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் “தமிழ்நாடு” என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதலே சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால் இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாகப் பிரிய நேர்ந்து விட்டது. ஆதலால் இந்தப் பிரிவினையை நான் வரவேற்கிறேன்!" (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்.730, விடுதலை அறிக்கை 11-10-55)
தமிழ்நாட்டுற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட முடியவில்லையே என்று பெரியார் 1955லேயே ஆதங்கப்பட்டார். இது குறித்த பெரியாரின் கருத்துக்கள்
“அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்பு கூட மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கூட இருக்கக் கூடதென்று பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரிவினையில், ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்ட தமிழனானாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த, தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ், மேல் சபை அங்கீகத்தினர்களையும் மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் முயற்சிக்கும்படி அதுபோலவே வேண்டிக் கொள்கிறேன். ‘தமிழ்’, ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமூதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமான காரியம் என்பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். நம்நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.” (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்கம்.731, விடுதலை அறிக்கை, 11.10.55)
தமிழ்நாடு பிரிவதற்கு முன்பே மாநில சீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையைப் பார்த்த உடனேயே பெரியார் இந்த அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் மொழிவாரி மாநிலம் பிரிந்த 1956 முதல் தமிழ் நாடு தமிழருக்கே என்றுதான் கூறி வந்தார். “விடுதலையில்” தினமும் முதல் பக்கத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற இலட்சிய முழக்கத்தை இடம் பெறச் செய்தார்.
“என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும். அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்!" (ஈ.வெ.ரா. சி. பக். 1874) (விடுதலை தலையங்கம் 15.12.1957)
சிறைபுகும் முன் பெரியார் விடுத்த அறிக்கை. தமிழ்நாடு நீங்களாக இந்திய படத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தியவர் பெரியார்.. 1963இல் சுதந்திரத் தமிழ்நாடு ஏன்? என்ற புத்தகத்தைக் குடியரசுப் பதிப்பக வெளியீடாக வெளியிட்டவர் பெரியார். 1973இல் பிறந்த நாள் அறிக்கையில் கூட தள்ளாத 95 வயதிலும் தமிழ்நாடு தமிழருக்கே எனச் சிங்கம் போல் கர்ஜித்தார்.
“நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். ‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே! இளைஞர்களே! பள்ளி, கல்லுhரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்." (ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்.1981, 17-9-1973)
1938ல் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று குரல் கொடுத்த பெரியார் 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று போராடிய போது ஒரு போதும் தமிழர் அல்லாதவர்களை ஆதரித்துப் பேசியது கிடையாது. அவர் திராவிட நாடு என்று சொன்னாலும் தமிழகத்தை அதாவது அன்றைய சென்னை மாகாணத்தைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தி வந்தார். மொழி வாரி மாநிலம் பிரிந்தவுடன் சுதந்திரத் தமிழ்நாடு என்ற கோரிக்கையை வைத்துப் போராடிய அவரை எழுகதிர் அருகோ தமிழ் இனத்துரோகி என்பதும், திட்டம் போட்டே பெரியாரும் சங்கராச்சாரியும் தமிழர்களைச் சீரழித்தார்கள் என்று பேசுவதும் எழுதுவதும் விஷமப் பிரச்சாரமேயாகும்.
“பார்ப்பன எதிர்ப்பு அதுவும் தமிழ்நாட்டுப் பார்ப்பனரையே கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு எதிர்ப்பது என்ற திராவிடப் பார்வையால் இன்று தமிழ்நாட்டின் அதிகார வர்க்கமும் ஆதிக்க வர்க்கமும் தமிழரல்லாதவர்களையே பெரும்பான்மையாய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்” என்று எழுதும் அருகோ என்றைக்காவது திராவிடர் கழகம், தமிழ்நாட்டுப் பார்ப்பான் பிற மொழிப்பார்ப்பான் என்று பிரித்துப் பார்த்து திட்டியதைப் பார்த்ததுண்டா? அப்படி எத்தனைத் தமிழ்நாட்டுப் பார்ப்பான் தமிழின் மேல் தமிழ் இனத்தின்மேல் பற்று வைத்துள்ளான் என்று காட்ட முடியுமா? அல்லது அருகோவின் குருநாதர் மா.பொ.சிக்குக் குருவான ராஜாஜி தான் தமிழ்நாட்டின் மேல் பற்றாக இருந்தாரா? தமிழ் இனத்தை அழித்ததில் பார்ப்பனர்கள் அனைவருமே ஒன்றுதானே? பார்ப்பனரை எதிர்த்தால் இவருக்கு ஏன் கோபம் வர வேண்டும்? ‘தமிழ் நீச பாஷை’, ‘தமிழன் தீண்டத்தகாதவன்’ என்று கூறும் சங்கராச்சாரியும், தமிழனுடைய விடியலுக்காகப் பாடுபட்ட பெரியாரும் ஒன்றா?
“1950களில் திராவிடக் கட்சிகளை விமர்சித்ததில் - எதிர்த்ததில் அவருக்கு (மா.பொ.சி.) நிகர் யாரும் கிடையாது. 1960கள் வரை காங்கிரஸ் கட்சியே மா.பொ.சி.யின் பிரச்சாரத்தில்தான் திராவிடக் கட்சிகளைத் தாக்கு பிடித்ததென்றால் மிகையாகாது!” என்கிறார் அருகோ.
பெரியார் மா.பொ.சி.யை “காங்கிரசின் கையாள், பார்ப்பனர்களின் கைக்கூலி” என்று பேசியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்பதை மேலே கண்ட அருகோவின் மா.பொ.சி.யைப் பற்றிய மதிப்பீடே போதுமானதாகும். நான் ஒன்றும் கூறத் தேவையில்லை. அது சரி, அருகோ தலை மேல் துhக்கி வைத்தாடும் மா.பொ.சி. ஒரு மேலவைத் தலைவர் பதவிக்காக மலையாளி எம்.ஜி.ஆரின் காலடியில் விழுந்து கிடக்கவில்லையா? என்ன ஆச்சு மா.பொ.சி.யின் கொள்கை? பதவி எதையும் நாடாமல், தன்னைத் தேடி வந்த முதல்வர் பதவியையும் வேண்டாமென உதறிய பெரியார் எங்கே? பதவிக்காகக் கொள்கையை விட்டு ஓடிவிட்ட மா.பொ.சி. எங்கே? இனிமேலும் பொய்யான தகவல்களையும் விஷமப் பிரச்சாரங்களையும் அருகோ செய்யாமல் இருப்பதே அவருக்கு நல்லது. இன்றைய தமிழ்த் தேசிய உணர்ச்சி என்பது திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே தவிர, மா.பொ.சி. யால் வந்ததது அல்ல என்பதை அருகோ உணர வேண்டும்.
(குறிப்பு : பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிந்தனையாளன் நவம்பர் 2002 ஏட்டில் அருகோவின் அடாவடிதனத்தைக் கண்டித்து வாலாசா வல்லவன் எழுதிய கட்டுரை)

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்

இஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள். இந்தச் சட்டங்களை மனிதர்களுக்காக இயற்றித் தந்தது அல்லா தான். மனிதர்களில் எவருக்கும் சட்டங்கள் இயற்றும் தகுதி இல்லை மட்டுமல்லாது அவைகளை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எந்த மனிதருக்கும் அறுகதை இல்லை. இதை குரான் வசனங்கள் 5:48; 5:50 தெளிவுபடுத்துகிறது,

.. .. .. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் அவர்களின் மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். .. .. ..

அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?

ஆக சட்டம் என்றால் அது முக்காலமும் உணர்ந்த, எல்லாவித ஆற்றல்களையும் தன்னில் அடக்கிக் கொண்டிருக்கிற அல்லாவால் மனிதர்களின் நல்வாழ்வுக்காக கொடுக்கப்பட்டது என்பதே பொருள். அதனால் தான் இஸ்லாமியர்கள் நடப்பிலிருக்கும் சட்டங்களை அவைகள் மனிதச் சட்டங்கள் எனும் போக்கில் அணுகுகிறார்கள். ஆனால் சட்டம் என்றால் என்ன? வரலாற்று அடிப்படையில் சட்டம் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?

மனிதர்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், ஒழுக்கமான, குறைகளற்ற வாழ்வை வாழ்வதற்கு தேவையான ஒழுங்கு நெறிகளைக் கொண்டது தான் சட்டம் என்று பெரும்பாலானோர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் மனிதன் ஓரளவுக்கு சமூகமாக வாழத் தொடங்கியது முதல் இன்று வரை சட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. என்றால் மனிதர்களிடையே பிணக்குகள் தீர்ந்து மகிழ்வான வாழ்வு வாய்க்கப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? உலகம் அவ்வாறு இல்லை என்பது தானே யதார்த்தமாக இருக்கிறது. இதற்கு இஸ்லாமிய மதவாதிகள் ஒரு விளக்கம் கூறக் கூடும், அவைகளெல்லாம் மனிதச் சட்டங்கள் இறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அவ்வாறான நிலை உருவாகிவிடும் என்று. ஆனால் இஸ்லாம் தோன்றிய காலம் முதல் அதாவது கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக சௌதி அரேபியாவில் (இஸ்லாம் எனும் மதம் தோன்றிய இடம்) இறைச் சட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. அங்கே நிலமை என்ன?

மனிதகுல வரலாற்றில் சட்டங்களின் பங்களிப்பு எப்போது தொடங்கியது? மனிதர்களிடையே வர்க்க பேதம் ஏற்பட்டு அவர்களிடையே மோதலும் ‘அரசு’ எனும் அமைப்பும் தோன்றிய பிறகே சடங்கள் தோன்றின. சட்டங்களின் பணி வர்க்க ஆட்சிக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் கிளர்ந்து விடாமல் அடக்குவதும், ஆட்சியை தக்கவைப்பதுமே. அதேநேரம் சட்டம் அனைவருக்குமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் பிரேமைகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டங்களின் நோக்கம் அனைவருக்கும் சமநீதியும், நியாயமும் வழங்குவது என்றால் அதன் விளைவுகள் சமூகத்தில் நிலவியிருக்க வேண்டும், சட்டத்தின் தேவை தீர்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் இன்னும் சட்டத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது என்றால், அதன் பொருள் சட்டங்களின் தேவை என்று மக்கள் எதை கருதுகிறார்களோ அதுவாக இல்லாமல் சட்டத்தின் உட்கிடை வேறாக இருக்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா? மட்டுமல்லாது, சமூகம் இன்னமும் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே சட்டத்தின் பயன் வர்க்க ஒடுக்குமுறை தானேயன்றி, சமநீதியல்ல என்பது புலனாகும். ஆனால் முக்காலமும் உணர்ந்தவராக, முக்காலத்தையும் உருவாக்குபவராக கூறப்படும் அல்லா சட்டத்தின் இந்த தன்மைகள் எதனையும் உணராது, அனைத்து மக்களுக்கும் பொது வானது, எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியது என்று கூறுவது பொருத்தமானதா? அல்லது முகம்மது தன்னுடைய வர்க்க நலன் பேணும் அரசை உருவாக்குவதற்காக சொல்லிய புனைவுகளா?

இப்போது திருமணம் செய்வது குறித்த சட்டங்களைப் பார்ப்போம். குரான் வசனம் 4:3 இப்படிக் கூறுகிறது,

அநாதைகளிடம் நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் வலக்கரங்களுக்கு சொந்தமானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அநியாயம் செய்யப்படாமலிப்பதற்குச் சுலபமான வழிமுறையாகும்.

இந்த வசனம் ஒரு ஆண் யாரை எப்படி திருமணம் செய்யலாம் என்பதைப் போதிக்கிறது. நான்கு பெண்கள் வரை ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கும் சட்டம் இது. மட்டுமல்லாது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களை திருமணத்திற்கு வெளியே பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்கிறது. வெளிப்படையான அடிமை முறை நடைமுறையில் இருந்தது இஸ்லாம் தோன்றி வளர்ந்த காலகட்டத்தில் தான். அதனால் தான் குரான் பல வசனங்களில் ஒரு மனிதனும்  அடிமையும் சமமல்ல என்று கூறியிருக்கிறது.

முதலில், இது எக்காலத்திற்கும் பொருந்தும் சட்டமா? இப்போது வெளிப்படையான அடிமைகள் என்று யாருமில்லை. ஆனால் அல்லாவுக்கும் குரானுக்கும் இஸ்லாமியர்கள் கொடுக்கும் தகுதியின்படி பார்த்தால் வெளிப்படையான அடிமைகள் இல்லாத இன்றைய நிலை குறித்து அல்லா அன்று அறிந்திருக்கவில்லை. அல்லது, இது அன்றைய நிலையை மட்டுமே குறிக்கும் வசனம் என்றால் இன்றைக்கு பொருந்தாது. இரண்டில் எது சரி?

நான்கு திருமணம் வரை செய்து கொள்ள ஆண்களுக்கு ஏன் அனுமதி தந்திருக்கிறது என்றால் ஆணின் இச்சை தீர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்பதே. ஆணின் இந்த பலதார வேட்கையே இங்கு பொது விதியாக்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் இது ஆணின் நீதி தானே தவிர பெண்ணின் நீதியல்ல.

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்வதற்கு ஆணுக்கு என்ன தகுதிகள் வேண்டும்? நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது குரான். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் புரிந்தால் முதல் மனைவிக்கு கொடுத்திருக்கும் அத்தனை வசதிகளையும் இரண்டாவது மூன்றாவது நான்காவது மனைவிகளுக்கும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க முடியாது போனால் அது அநீதி. இது தான் குரானின் நீதி. வெளிப்படையாகச் சொன்னால் காசு இருந்தால் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள். காசு இல்லாவிட்டால் .. .. ? ‘பட்டினி கிடந்து உன் இச்சையை குறைத்துக் கொள்’ என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இது பணக்காரனுக்கான நீதியா? ஏழைக்கான நீதியா?

எக்காலத்துக்கும் பொருந்தும் இறைவனின் நீதி என எம்பிக் குதிக்கும் மதவாதிகள், இப்படி பச்சையாக காசு உள்ளவனுக்கு ஒரு நீதி அது இல்லாதவனுக்கு ஒரு நீதி என்று பிரித்து பேதம் காட்டும் இந்த ஆண்டைகளின் நீதியைத் தான் எல்லோருக்கும் பொது நீதி என்று சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

புதன், 10 அக்டோபர், 2012

முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா?

தீண்டாமையும் இஸ்லாமும்

இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஜாதி பேதங்களையும், தீண்டாமையையும் ஒழிக்க இந்து மதம் இடம் கொடுக்குமானால் இந்து மதத்துக்கும் இஸ்லாம் மதத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நாம் பந்தயம் கட்டி கேட்கின்றோம். மதத்தின் பேரால் வயிறு வளர்த்து மரியாதை சம்பாதித்துத் திரியும் சோம்பேறிகள், எல்லா மதங்களிலும் இருக்கலாம். அதனால் மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நாம் எங்கும் நிரூபிக்கமுடியும்.

இந்த நிலைமையில் தீண்டாதார் என்று இழிவாய் கருதப்படும் மக்கள் ஜாதிபேதத்தையும் தீண்டாமையையும் முக்கியத்துவமாய்க் கொண்ட இந்து மதத்தைவிட்டு அதில்லாத மதத்துக்குப் போவதால் என்ன கெடுதியென்று கேட்கின்றோம்.

முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா? என்று ஒரு தலைவர் கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் இருந்தால் மாத்திரம் இவர் தன் பெண்ணைக் கொடுக்கக்கூடுமா என்று நாம் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனமாய்விடும் என்று அஞ்சுகிறோம்.

பெண்கொடுப்பது வாங்குவது கர்னாடகக் காலம் ஆகப்போகிறது. புதிய உலகில் அவனவனுக்குப் பிடித்தது தானாகவே ஜோடி சேரப்போகிறது. அப்படியே சில இடங்களில் சேர்ந்தும் வருகிறது.

ஆனால் ஒரு தீண்டாதவன் முஸ்லீமானாலும் ஒரு கூட்ட தீண்டாதவர்கள் முஸ்லீம்களானாலும் அவர்களைப் பொறுத்தவரை தீண்டாமை அந்த நிமிடமே ஒழிந்துவிடுகிறது மாத்திரம் நேரில் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம்.

இஸ்லாம் மதத்தில் பெண்கள் மூடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அது மத சம்பிரதாயமல்ல. ஏனெனில் இந்து சமூகத்திலும் சிறிது பணமோ வலிமையோ சந்தேகமோ இருந்தால், பெண்கள் மூடித்தான் வைக்கப்படுகிறார்கள். இது பெண் அடிமையைப் பொறுத்ததாகும். தீண்டாமை, அதாவது ஆண் அடிமை தீர்ந்த உடன் பெண் அடிமை தீரப்போகிறது. அதற்காகப் போர் நடக்கப் போகிறது. அந்தக் காலம் வெகுதூரத்தில்இல்லை. ஆதலால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் வைப்பது தகுந்த நியாயம் சொல்ல முடியாத பயங்காளித்தனமே ஆகும்.

ஆதலால் இதுவரை தீண்டாமை விலக்குக்காக சமூக சீர்திருத்தக்காரர்களும், அரசியல் கிளர்ச்சிக்காரரும் செய்த சகலவித முயற்சிகளிலும் கிளர்ச்சிகளிலும் தோல்வியே அடைந்துவிட்டார்கள்.

அம்பேத்கார் உபதேசமே இப்போது தீண்டாமை ஒழிவதற்கு உண்மையான சாதனமாய் இருக்கிறது. சுமார் 6,7 கோடி பேர்கள் ஏற்கனவே அனுபவித்துப் பார்த்துவிட்டார்கள்.

தீண்டாதவர்கள் இஸ்லாமாகிமுஸ்லீமாகி மனிதர்களாவதுதான் யோக்கியமான மார்க்கம் என்று கூறுகிறோம்.

இதை ஆட்சேபிப்பவர்கள் தங்களால் இதுவரை இது விஷயத்தில் செய்யப்பட்ட காரியம் இன்னது, அதனால் ஏற்பட்ட பயன் இன்னது, அல்லது காந்தியார் ஈறான மற்ற சீர்திருத்தக்காரர்களால் ஏற்பட்ட காரியம் இன்னது என்று அனுபவரீதியாய் எடுத்துக்காட்டி ஆட்சேபிக்கத் தாழ்மையாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.

-------------- தந்தைபெரியார் -”குடி அரசு” துணைத்தலையங்கம் 09.08.1936

இஸ்லாம் ஒரு தேசியக் கற்ப்பிதமா?

Sixth
இந்துமதம் என்பது எப்படி ஒரு தேசியக் கற்ப்பிதமோ அதைப் போலவே இஸ்லாமிய வழியும் ஒரு தேசியக் கற்ப்பிதம், இன்று இந்துத்துவா வெறியர்களின்  முகங்களான ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க்தல், பாரதீய ஜனதா போன்றவை என்ன வழியை இந்துமதக் கூட்டத்திற்குக் கற்றுக் கொடுக்கிறதோ அதையே தான் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் எதிர்வினை செய்கின்றன. உலகெங்கும் நடக்கும் தீவிரவாதங்கள் வெவ்வேறு அடக்குமுறைகளின் வடிவங்களாகவே இருக்கிறது அல்லது கருத்தியல் சார்ந்த நெருக்கடிக்கு ஆளான மக்கள் குழுவின் ஒரு குறிப்பிட்ட செயலுக்கான எதிர் வினையாகவே இருக்க முடியும்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா? அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா? இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி விட்டார். இதற்கிடையில் நிரூபிக்க முடியுமா என்று சவடால் வேறு. பாவம் என்ன செய்வார், அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி மறுத்து எழுத வேண்டும் என்பது, அதேநேரம் எதை மறுப்பது எப்படி மறுப்பது என்பதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போலும். ஐயன்மீர், முதலில் கட்டுரையை படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். எது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது? எது மறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது? என்பதை அறிந்து எதை எப்படி மறுப்பது என்பதை ஆய்ந்தறிந்து அதன் பின்பு மறுப்பை கூறுங்கள்.

அந்த வசனத்தில் எதை அறிவியல் என்று கூறுகிறார்களோ அது உவமையாக கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி அல்லது தூண்களின்றி வானம் படைக்கப் பட்டிருக்கின்றது. குரானில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமை பொருத்தமானதில்லை. எனவே. அது புவியீர்ப்பை குறிக்காது என்பது என்னுடைய வாதம். எந்த விதத்தில் அந்த உவமை பொருத்தமானதில்லை? புவியீர்ப்பு விசை என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறதோ அந்த தன்மைகளை உவமையும் கொண்டிருந்தால் தான் அது பொருத்தமான உவமையாகும். புவியீர்ப்பு விசையின் தன்மை என்ன? புவியின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொருட்களைத் தன்வசம் ஈர்க்கிறது. இந்த இரண்டு தன்மைகளையும் அந்த உவமை எதிரொலிக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதில். ஒரு கட்டிடத்தின் தளங்களை தூண் தாங்கிப் பிடித்தால் அது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஓரிரு இடங்களில் இருந்தால் போதும். ஒரு தூண் ஒருபோதும் பொருட்களை தன் வசம் ஈர்க்காது. எனவே அது பொருத்தமானதில்லை, ஆகவே அது புவியீர்ப்பு விசையை குறிக்காது என்று விளக்கினால், நமக்கு மண்ணாங்கட்டி பாடம் எடுக்கிறார் நண்பர். நானும் அதே மண்ணாங்கட்டியை எடுத்துக் கொள்கிறேன்.

இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம், என்றால் என்ன தன்மையில் அந்த உவமையைக் கூறுவோம்? இஹ்சாஸ் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவராக இருக்கிறார் அதுபோல மண்ணாங்கட்டியும் புரிந்து கொள்ளாது. எனவே, இஹ்சாஸின் புரிந்து கொள்ளாத தன்மை மண்ணாங்கட்டியிலும் இருப்பதால் மண்ணாங்கட்டியை அவருக்கு உவமையாக கூறுவோம். இது பொருத்தமான உவமை. இஃதன்றி, இஹ்சாஸ் சட்டை அணியாமல் நிற்கிறார், மண்ணாங்கட்டியும் சட்டை அணியாது எனவே அவர் மண்ணாங்கட்டி என்று யாரேனும் உவமை கூறுவார்களா? அப்படிக் கூறினால் அது பொருந்தாத உவமை. ஆனால் குரானின் தூண் விவகாரத்தில் எத்தன்மைக்கு உவமை கூறப்பட்டுள்ளதோ அத்தன்மைக்கே பொருந்தவில்லை என்று தான் நான் கூறியிருக்கிறேன். தந்தை ஒரு குடும்பத்துக்கு தூணாக இருக்கிறார் என்றால் அந்த தன்மைக்கு மட்டும் தானே உதாரணமும் உவமையும். சட்டை போடவில்லை, கைலி உடுத்தவில்லை என்று பொருத்தமற்று கூறிக் கொண்டிருப்பது யார்? பதில் கூற வக்கற்றிருந்தால் அதற்காக திசை திருப்பக் கூடாது.

இன்னொரு கோணத்திலும் அந்த வசனத்தைப் பார்க்கலாம். ஈர்ப்பு விசை என்பது கோளோடு தொடர்புடையது. புவியீர்ப்பு விசை என்றால் அது புவியோடு தொடர்புடையது. இதில் வானம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்பதற்குத்தான் பார்க்கின்ற தூண்களின்றி என்ற பதில் வருகிறது. அதாவது இந்த உவமையின் உண்மை வானம் பார்க்கின்ற தூண்களால் அல்லாது பார்க்க முடியாத தூண்களால் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. தெளிவாகச் சொன்னால் அவ்வாறான தூண்கள் இல்லாது போனால் வானம் விழுந்துவிடும் என்பது தான் அதில் உட்பொதிந்திருப்பது. இதில் புவியீர்ப்பு எங்கிருந்து வந்தது? இதில் அறிவியல் இருக்கிறதா? குறைந்தபட்சம் அவியலாவது இருக்கிறதா? இதைத்தான் புனைவாக குறிப்பிட்டிருந்தேன். இதை நிரூபிக்க முடியுமா? என்று சவடால் விட்ட இஹ்சாஸ், நேர்மையானவராக இருந்திருந்தால் அதில் என்ன அறிவியல் இருக்கிறது என்பதையல்லவா வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு மொழிபெயர்ப்பில் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ படைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. பிரிதொன்றிலோ ‘வானம் தூண்களின்றி படைக்கப்பட்டிருக்கிறது அதை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது மட்டுமா? குரானுக்கு உரையெழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தூண்களின்றி படைக்கப் பட்டிருப்பதாகவே மொழி பெயர்த்திருக்கிறார்கள். என்றால் அதை பார்க்கின்ற தூண்களின்றி என உருமாற்றி புவியீர்ப்பு விசையோடு திருமணம் செய்வித்தது யார்? எதற்காக? வேறொன்றுமில்லை இக்கால அறிவியல் உண்மைகளையெல்லாம் முகம்மது ஆறாம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டாராக்கும் என்று அப்பாவி மக்களை ஏய்த்து மதவாத ஜல்லியடிப்பதற்குத் தானேயன்றி வேறெதற்காகவும் இல்லை.

அதுசரி, நண்பர் கூறுவதை பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம், நான் தெளிவாக இப்படி எழுதியிருக்கிறேன், \\\தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது?/// என்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறேன். பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தும் இதற்கான பதில் இல்லையே ஏன்? இது தான் மதவாதம் என்பது, எதையும் பரிசீலித்துப் பார்ப்பதில்லை. சாதகமான இடங்களில் சவடால் அடிப்பது, பாதகமான இடங்களில் கள்ள மௌனம் சாதிப்பது. இதைத்தானே தொடக்கத்திலிருந்து பார்த்து வருகிறோம்.

அடுத்து குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும் என்று குரான் வசனம் கூறுவதன் பொருள் என்ன? இதில் குறிப்பிட்ட காலம் வரை என்பது கோள்களின் இயக்கம்; அதாவது பூமியோ சந்திரனோ மட்டுமல்லாது சூரியனும் விரைந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கோள்களும் விண்மீன்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன, விரைந்து கொண்டிருக்கின்றன எனும் அறிவியல் உண்மையை அந்த வசனம் கூறுவதாக கதையடிக்கிறார்கள். இதை மறுத்து குரான் வசனங்களில் அறிவியல் இருப்பதாக ஜம்பமடிப்பதற்கு மதவாதிகள் என்ன உத்தியை பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக சில குறிப்புகளைக் கூறியிருந்தேன். பூமி தட்டை என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் குரான் உருண்டை என்றது என்பார்கள். ஆனால், உண்மையில் குரான் தயாரிக்கப் பட்டுக் கொண்டிருந்த போது பூமி உருண்டை எனும் புரிதல் மக்களுக்கு இருந்தது என்பது மட்டுமல்லாமல் குரான் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறவும் இல்லை. அது போலவே கோள்கள் விண்மீன்களின் இயக்கம் குறித்து இந்த வசனம் கூறவும் இல்லை; அதேநேரம் குரானுக்கு வெகு காலத்துக்கு முன்பே கோள்களின் இயக்கம் குறித்த அறிவு மனிதனுக்கு இருக்கவும் செய்தது. இதைக் குறிப்பிட்டு விட்டுத் தான் \\\எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// என்று முத்தாய்ப்பாகவும் கூறியிருந்தேன். இவை எதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாத நண்பர் மறுப்பு கூற வேண்டுமே என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கிறார். ஒருவேளை இவைகளையெல்லாம் படித்து நண்பருக்கு ரோசம் வந்து, மெய்யாகவெ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்பதை நிரூபித்தால் அதன் பின்னர் நான் விளாக்கங்களுடன் வருகிறேன்.

அடுத்து நான் மப்பில் உளறுவதாக நண்பர் எழுதியிருந்தார். எழுதுவதற்கு ஒன்றுமில்லாத போது, பதில் கூற முடியாத போது அவதூறு பொழிவது மதவாதிகளின் வழக்கம். அதை தவறாமல் பின்பற்றியிருக்கிறார் இஹ்சாஸ். ஆனால் மெய்யாகவே மப்படித்தது போல் இஹ்சாஸ் உளறிக் கொட்டியிருக்கிறார், அவைகளைப் பார்க்கலாமா? 1. \\\இவர்களுக்கும் அரேபியாவில் வாழ்ந்த முகம்மது நபிக்கும் என்ன தொடர்பு/// அப்படி ஏதேனும் தொடர்பு இருப்பதாக நான் எங்கேனும் கூறியிருக்கிறேனா? அறிவியலுக்கும் முகம்மதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் கூறியதில்  அறிவியலும் இல்லை. இதைத்தான் நான் தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். 2. \\\இவர்கள் ஏற்கனவே கூறியிருந்தால் ஏன் கொப்பர்னிகஸ் போன்றோர் கூறும்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்?/// கோப்பர்நிகஸ் சூரியக் குடும்பத்தின் மையத்தை பூமியிலிருந்து சூரியனுக்கு நகர்த்தியதால் விமர்சிக்கப்பட்டார்.

அடுத்து, குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதன் பொருள் என்பதாக மதவாதிகள் கூறுவதென்ன? இப்பேரண்டத்தின் அனைத்து பருப் பொருட்களும் விரைந்து கொண்டிருக்கின்றன என்பது அண்மை கண்டுபிடிப்பு. இதைத்தான் இந்த வசனம் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் இந்த வசனம் கூறுவதென்ன? குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் அதன் பிறகு செல்லாது என்றால் அது குறிப்பிடுவது அறிவியலை அல்ல மதக் கற்பனையை. இதைத்தான் நான் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன், \\\நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// இது எப்படி அறிவியல் கண்டுபிடிப்போடு தொடர்பு படுத்தப்படுகிறது என்றால் எந்த விளக்கமும் கிடைக்காது, ஆனாலும் மதவாதிகளுக்கு அது அறிவியல் அவ்வளவு தான்.

அடுத்து சூரியன் அதற்குறிய இடத்தை நோக்கிச் செல்கிறது என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மதவாதிகள் புனையும் அறிவியலை புஹாரி 3199 வெடி வைத்து தகர்க்கிறது. அதனால் தான் நண்பர் மெதுவாக அது ஏற்கமுடியாத ஹதீஸ் என்று நூல்விட்டுப் பார்க்கிறார். அது ஏற்க முடியாதது என்பதற்கு அவர் கூறும் காரணம், அது குரான் கூறும் ஒரு தகவலோடு முரண்படுவது என்கிறார். அதாவது அர்ஷ் பூமி, சூரியனுக்கு மேலே இருப்பதாக குரான் குறிப்பிடுகிறதாம், இந்த ஹதீஸில் கீழே இருப்பதாக பொருள் வருகிறதாம். இது முரண்பாடு என்பதால் செல்லாது என்று தீர்ப்புக் கூறுகிறார். எந்த அடிப்படையில் அர்ஷ் கீழே இருப்பதாக பொருள் வருகிறது? விளக்க முடியுமா நண்பரால்?

பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.09.2012 அன்று மாலை பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலை பாரதிதாசன் சிலையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேரணி ராயப்பேட்டை வி.எம்.தெருவில் முடிவடைந்தது.

இந்த பேரணி குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது, இளைய தலைமுறையினர் மத்தியில் பெரியாரின் சிந்தனைகள், சமூக சீர்திருத்த கருத்துகள், கொள்கைகளை பரப்பும் நோக்கத்தில் இந்த பேரணியை நடத்தி உள்ளோம் என்றார்.

படங்கள்: அசோக்
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :