ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

உயிரினங்களின் தோற்றம் – சார்லஸ் டார்வின்


“ஈ, எறும்பு எண்ணாயிரம் கோடி ஜீவராசிகளை இறைவன் படைத்தான்’’ என்று பல்லாயிரம் ஆண்டுகளாய் கதைக்கப்பட்டது பொய் என்பதை விஞ்ஞானி சார்லஸ் டார்வின் நிரூபித்தார். உயிரினங்களின் தோற்றம் என்ற இந்த நூல் இறை நம்பிக்கைகளையும், மதவாதிகளின் போதனைகளையும் தகர்த்தது. இது ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய நூலாகும்.
மார்க்சியம் உருவாவதற்கு உதவிபுரிந்த மூன்று விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் இது முதலாவது கண்டுபிடிப்பாகும். மார்க்ஸ் தனது மூலதனம் நூலை டார்வினுக்கு சமர்ப்பணம் செய்ய விரும்பினார். டார்வினிடம் மார்க்சே நேரில் சென்று இந்த தகவலைக் கூறினார். அதற்கு டார்வின் தனது வீட்டார் மத நம்பிக்கை உள்ளவர்கள் என்றும், மார்க்ஸ் கடவுளை நம்பாதவராகையால் இந்த சமர்ப்பணம் அவர்களது மனதைப் புண்படுத்திவிடும் என்று கூறி டார்வின் வேண்டாமென்று மறுத்துவிட்டார். டார்வின் தனது மகத்தான இந்த நூலை வெளியிட்டால் மதவாதிகளின் கோபத்துக்கு இலக்காக நேருமென்று பயந்து வெளியிடாமலேயே வைத்திருந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்றிருந்த சமயம் இந்த நுலை எடுத்துப்போய் 1000 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டார். பரபரப்பாக இந்த நூல் விற்பனையாகிப் பலபதிப்புகள் வெளிவந்தன. மதவாதிகள் கோபத்துக்கு ஆளாக நேருமென்று டார்வின் பயந்து மாதாகோவிலில் சென்று இப்படி ஒரு நூல் எழுதியதற்காகப் பாவமன்னிப்புக் கேட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
சார்லஸ் ராபர்ட் டார்வின் (1809_1882) ஒரு ஆங்கில இயற்கை விஞ்ஞானி. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திப் படித்தவர். உயிரின உலகின் பரிணாம வளர்ச்சி பற்றி அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சி பற்றிய தத்துவத்தைக் கண்டு பிடித்தார். இன்றைய உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைத் தத்துவமே டார்வினியமாகும். பரிணாம வளர்ச்சி பற்றிய தனது ஆய்வுகளை உண்மை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நிரூபித்தார். இதற்கென அவர் 1931 முதல் 1836 வரை உலகின் பல பகுதிகளிலுள்ள தீவுகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
உயிரினங்களின் தோற்றம் நூலில் இயற்கைத் தேர்வு, வாழ்க்கைப் போராட்டத்தில் மாறியவை, அழிந்தவை, நின்று நிலைத்தவை குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்தும் தனது அபூர்வக் கண்டுபிடிப்புகளை டார்வின் எழுதியுள்ளார். மேலும் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் அடிப்படையான பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியுள்ளார். விலங்குகளைப் பழக்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விதம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். விலங்கினங்களின் பரம்பரைத் தேர்வு, பாலியல் உறவுகள் பற்றியும், மிருக இனமாக மனிதக் குரங்குகளிலிருந்து மனித இனம் தோன்றிய விதம் பற்றியும் விஞ்ஞானப் பூர்வமாகப் பரிணாம வளர்ச்சி மூலம் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். டார்வின் ஒரு தன்னிச்சையான தர்க்கவியல் இயங்கியல் வாதியாகவும், நாத்திகவாதியாகவும் இந்நூலில் வெட்ட வெளிச்சமாய் காட்சியளிக்கிறார்.
பரிணாமம் என்ற சொல்லுக்குப் பிரிதல் அல்லது அவிழ்தல் என்பது பொருளாகும். செடியில் மொட்டாக இருந்து மலர் விரிந்து மலர்கிறது. காட்டு மிராண்டிகளாய் திரிந்த மக்கள் உழைப்பைப் பிரயோகித்து உற்பத்தியில் ஈடுபட்டு நாகரிகச் சமூகமாய் பரிணமித்தனர். இந்த சமூகத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பரிணாமம் ஆகும். நெருப்புப் பிழம்பாக இருந்த பூமி சிறிது சிறிதாய் குளிர்ந்து உயிர்கள் தோன்றி வளரத் தகுந்ததாக மாறியது. இது இயற்பியல் பரிணாமம் ஆகும். எளிய நிலையில் தோன்றிய உயிரினங்கள் படிப்படியாய் ஒன்றிலிருந்து ஒன்றாகப் புதிய உயிரினங்கள் உருவான நிகழ்வை உயிரினங்களின் பரிணாமம் என்கிறோம்.
இன்று பூமியிலுள்ள விலங்கினங்களும் தாவர இனங்களும் அவை தோன்றிய போது இன்றிருப்பவைபோல் இருக்கவில்லை. எல்லாம் மாறியுள்ளன. ஆதி ஆரம்ப காலத்தில் இத்தனை உயிரினங்கள் இருந்ததில்லை. மாறிமாறி சிக்கலான அமைப்புகளை ஏற்றுப் புதிய இனங்களாகி இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன. இதுவே டார்வின் கண்டுபிடித்த பரிணாமத் தத்துவத்தின் மூலக் கருத்தாகும். இன்று நாம் காணும் எல்லா உயிரினங்களும் பரிணாமத் தத்தவத்தின் அடிப்படையில் இயற்கைச் சக்திகளாய் உருவாக்கப்பட்டவைதான். அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினரால் படைக்கப்பட்டவையல்ல என்பதையே டார்வினுடைய இந்த நூல் நிரூபணம் செய்கிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் பிரட்ரிக் எங்கெல்ஸ் என்ற மாபெரும் சமூக விஞ்ஞானி குரங்கினத்திலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் குறித்த புதிய தத்துவத்தை உருவாக்கினார். முதுகு நிமிர்ந்ததும், முன் கால்கள் கைகளால் மாறியதும், கட்டைவிரல் தோன்றியதும், மூளையின் செயல்பாடு வளர்ச்சியடைந்ததற்கும் உழைப்பே முக்கியப் பங்காற்றியது என்று எங்கெல்ஸ் நிரூபித்தார்.
பரிணாமக் கொள்கையைப் பற்றிய ஆய்வுகள் கிரேக்கத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டிலேயே இருந்தது. அனாக்சிமாண்டர் (கி.மு 611_547) எம்பிடாகிர்ஸ் (இ.மு 495_435) அரிஸ்டாட்டில் (கி.மு 384_322) முதலிய கிரேக்க அறிஞர்கள் உயிரினங்களின் தோற்றத்தை விளக்க முயற்சித்தனர். இந்தியாவிலும் சாங்கியவாதிகள் முயற்சித்தனர். ஆனால் எல்லாம் கடவுளின் படைப்பு என்ற மதபீடங்களை எதிர்த்து இவை வெளிவர முடியவில்லை. மதநூல்கள், மதபோதனைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியவர்கள் மதபீடங்களால் கொல்லப்பட்டனர். உயிரோடு எரிக்கப்பட்டனர். இதனால் பல நூற்றாண்டுகள் வரை பரிணாமக் கொள்கை புதைந்தே கிடந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த பயம் நீடித்தது. இதனால் சிலர் உயிரினங்கள் கடவுளின் படைப்பு என்பதை ஒப்புக் கொண்டு அவை மாறிய முறைகளை மட்டும் ஆய்வு செய்தனர். டார்வின் தனது ஆய்வு, கடவுளின் படைப்பு என்பதை ஏற்கவே இல்லை. பிற்காலத்தில் மதபீடங்களுக்கு பயந்து கடவுளையும் ஏற்பதாய் கூறினார்.
பரிணாமக் கொள்கை கடவுளை நீக்கிவிடாமல் அவருக்குப் புகழைத் தருகிறது. அவரது உன்னதமான நிலையும் குறையவில்லை என்பதே டார்வின் கூற்றாகும்.
டார்வினுடைய இந்த நூலின் அடிப்படை அம்சங்கள்:
1. பரிணாம வளர்ச்சிக் கொள்கை
2. சூழ்நிலையும் வேறுபாடுகளும்
3. பாரம்பரியம் அல்லது பரம்பரை
4. இயற்கைத் தேர்வுடார்வினுடைய பரிணாமக் கொள்கை இன்று நிலைத்த உண்மையாகிவிட்டது. விலங்குகளும் தாவரங்களும் கோடிக்கணக்கான ஆண்டுகளில் எண்ணற்ற மாற்றங்களுக்குப் பின்பு இன்றைய அமைப்பை அடைந்தன. இயற்கைத் தேர்வில் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியானவை நீடித்தன. தகுதியற்றவை அழிந்தன. தகுதியானவை பலவீனமானதாக இருந்தாலும் வளர்ந்தே தீரும் வெல்வதற்கரியதாகும். தகுதியற்றவை பலமானதாக இருந்தாலும் அழிந்தேதீரும் மறைந்து விடும், டைனோசர்களை இதற்கு உதாரணமாய் கூறலாம்.நம்மைச் சுற்றிச் சூழ்வதை சூழ்நிலை என்கிறோம். பிறப்பினால் உண்டான உடலமைப்பு, குணங்கள், தன்மைகள் தவிர மற்ற அனைத்தையும் சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. உணவு, உறைவிடம், பருவநிலை, சுற்றியிருக்கும் உயிரினங்கள் இவை சூழ்நிலையின் அம்சங்களாகும். சூழ்நிலை இல்லையேல் பரிணாமமே இல்லை. இதையே கார்ல் மார்க்ஸ் “வாழ்நிலையும் சூழ்நிலையும்தான் மனித சிந்தனைகளைத் தீர்மானிக்கிறது’’ என்று கூறினார்.
உயிருக்கும் அதன் சூழ்நிலைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பது இயற்கையின் இயல்பு. பௌதீகச் சூழ்நிலையை சமவெளி, சதுப்புநிலம், பீடபூமி, மலைகள், பள்ளத்தாக்குகள், காடு, புல்வெளி, பாலைவனம், பனிப்பகுதி, கடல், ஆறுகள், காற்று மண்டலம் எனப்பலவகையாகக் காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழும் உயிரினங்கள் அந்தச் சூழலுக்கு முற்றிலும் பொருந்தியவையாகவே வாழ்கின்றன. அங்கே கிடைக்கும் உணவு, வெப்ப நிலைக்கேற்ப உடலமைப்புகள் விரோதிகளிடமிருந்து தப்ப வேண்டிய தற்காப்பு முறைகளை உருவாக்கிக் கொள்கின்றன. பல விலங்குகள், பறவைகளின் நிறம் சுற்றுப்புறத்தின் நிறத்தை ஒத்திருக்கிறது.
பாலைவனத்தில் கிடைக்கும் குறைந்த நீரைக் கொண்டு வாழும் உயிரினங்கள் உள்ளன. நதிகள், கடலில் வாழும் உயிரினங்கள் உள்ளன. அவை சூழ்நிலைகளுக்கேற்பத் தங்கள் வாழ்நிலையைத் தகவமைத்துக் கொள்கின்றன. சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக இருந்தாலன்றி உயிரினங்கள் தொடர்ந்து வாழ முடியாது. சூழ்நிலையில் சிறிய மாறுதல் ஏற்பட்டாலும் அது அங்குவாழும் உயிர்களை பாதிக்கிறது. புதிய நிலைகளுக்கு ஏற்றவாறு அவை மாறி வேறுபாடு அடைகின்றன. உயிரினங்களின் நீண்ட வரலாற்றில் ஏற்பட்ட மாறுதல்கள் அனைத்தும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தினால் ஏற்பட்டவைதான்.பெற்றோரின் லட்சணங்கள் குழந்தைகளிடம் தொடர்ந்து வருவதையே பரம்பரை அல்லது பாரம்பரியம் என்கிறோம். பரிணாமம் பெறுவதற்கு இந்தப் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும். இதில் வேறுபாடுகள் உயிரினங்களிடம் ஏற்படாவிட்டால் புதிய இனங்கள் தோன்ற வழியில்லை இந்த வேறுபாடுகள் புதிய குணங்களைத் தோற்றுவிக்கலாம். அந்த வேறுபாடு பரம்பரையாக சந்ததிகளிடம் தொடர்ந்து வந்தால்தான் புதிய இனம் நிலைத்து நிற்க முடியும். இல்லையேல் விரைவில் அழியநேரும்.
வாழ்க்கைப் போராட்டத்தில் உயிரினங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவது உண்டு. உண்ணக் கிடைக்காமல் பட்டினியால் செத்து மடிவோம், காட்டு விலங்குகள் பாம்புகள் கடித்துச் சாகிறவர்கள் என்ற பலரும் உண்டு. இயற்கையை எதிர்த்த போராட்டங்களில் வெற்றி பெறுவது எளிதானதில்லை. இப்போராட்டங்களில் பங்கேற்று தோற்று அழியும் உயிரினங்கள் எண்ணற்றவையாகும். போராடி வாழச்சக்தியற்றவர்களுக்கு வாழும் உரிமையை இயற்கை அளிப்பதில்லை. இது ஒரு இரக்கமற்ற விதியாகும். ஆனால் இயற்கை இவ்வாறு சக்தியற்றவர்களை வடிகட்டாவிட்டால் அழிவு நிச்சயம். தனக்குத் தகுதிஉண்டு என்று நிரூபித்த உயிரினங்களையே தொடர்ந்து வாழ்வதற்கு இயற்கை தேர்ந்தெடுக்கிறது. இதையே டார்வின் இயற்கைக் தேர்வு என்கிறார்.
மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தது குறித்து டார்வின் ஏராளமான ஆய்வுகளையும், ஆதாரங்களையும் இந்த நூலில் வழங்கியுள்ளார். ஆயிரங்காலத்து மூடநம்பிக்கைகளை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தகர்த்தெறிகிறது இந்த நூல். பல விஞ்ஞானங்கள் தோன்ற வழிவகுத்த விஞ்ஞான நூல் இது. அதனால்தான் உலகை மாற்றிய புத்தகங்களில் இந்நூல் முதல் வரிசையில் நிலைத்து நிற்கிறது..விடியல் பதிப்பகம் டார்வினின் "உயிரினங்களின் தோற்றம்' புத்தகத்தை தமிழில் கொண்டுவந்துள்ளது.
மொழியாக்கம்: ராஜ்கௌதமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக