செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

நான் இந்த உலகத்துடன் முரண்படுவதில்லை; இவ்வுலகத்தில் உள்ள மனிதர்கள் தான் என்னுடன் முரண்படுகிறார்கள். உண்மையை நேசிக்கும் ஆசிரியன், பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் போது, கடவுள் கருத்துகளை இறுதியென நம்பி வாழும் மக்கள் முரண்படுவது இயல்பு. இம்முரண்பாட்டை நீக்க, நாம் மக்களை வெறுக்க வேண்டியதில்லை. அவர்களின் நெஞ்சங்களில் ‘தம்ம'த்தை விதையுங்கள். அவர்கள் மனம் தெளிவடையும். முரண்பாடுகள் நீக்கப்படும். - புத்தர்

Budha
என்னதான் செய்வது? எங்கிருந்து தொடங்குவது? யாரை, யார் எதிலிருந்து எவ்வாறு விடுதலை செய்வது? அச்சத்தினின்றும், அறியாமையினின்றும் விடுதலை பெற வேண்டியதுதான் - மானுட விடுதலையின் தற்படியாக அமையப் பெறுகிறது. அச்சமென்பது பசி, தாகம், உடலின்பம் போன்ற இயற்கை உணர்ச்சியன்று. இயற்கையின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள இயலாத போது, இந்தச் செயற்கை உணர்ச்சியான அச்சம், வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், மனித இன எதிரிகளால் நன்றாக உரமூட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நங்கூரம் போல் இறுகிக் கட்டப்பட்டிருக்கும் அச்ச உணர்ச்சி, ஆதிக்க வர்க்கம் புரியும் திசை திருப்பலின் விளைவால் ஏற்பட்டதாகும். அநீதியை எதிர்க்காமல் பின்வாங்குதல் என்பது, அச்ச உணர்ச்சியால் ஏற்படும் கொடுமையான நோய். அச்சம் என்பது, மனிதர்கள் மீது செயற்கையாக வலிந்து சுமத்தப்பட்டு ஏற்கப்படும் பண்பாகும்.

ஆனால், மனிதர்களது வீரம், குஞ்சுகளைக் கொத்த வரும் பருந்துகளை எதிர்க்கும் தாய்க் கோழி போல இயற்கையானது. மனிதருக்குள் அச்சம் வீரம் இணைந்தே இருக்கின்றன. வரலாற்றில் மனித வீரம் நேரிய சாதனைகளையே செய்திருக்கிறது. எனவேதான் வரலாற்று வளர்ச்சிகளின் முழுப்பயனையும் நுகர்வோர், தங்கள் வாழ்வு நலன்களைக் கட்டிக் காக்க மனிதருள் அச்சத்தைப் புதைக்கின்றனர். அச்சத்திற்குக் கட்டுப்பட்ட பிறகு, மனிதர்களது அகமும் முகமும் சிதைக்கப்படுகின்றன. மனித இன வரலாற்றில் சுயநல ஆசையிலிருந்து மட்டுமல்ல, அச்சத்திலிருந்து வெளிவரவும் முதன் முதலில் வழிவகுத்தவர் புத்தர் ஆவார்.

மலையை அல்லது பெரும் பாறாங்கல்லை உடைப்பதற்கு ஏதேனும் ஓரிடத்தில் உளியையோ, வெடியையோ வைக்க வேண்டியிருக்கிறது. எந்த இடத்தில் வெடி வைத்தால் உடைப்பதற்கு எளிதாக - பரவலாக வெடிப்புகள் விழும் என்பதைத் தெரிந்து வைக்க வேண்டும். மானுடத்தின் எதிர்மறைகளுக்கு எதிராக இந்த வியூகத்தை முதன் முதலில் கற்றுக் கொடுத்தவர் புத்தரே ஆவார். எங்கெல்லாம் மனிதர்கள் தம் ஆராய்ச்சி அறிவை இழந்து விடுகின்றனரோ, அங்கெல்லாம் ஆதிக்கத்தை வழிபடும் உணர்ச்சி இயல்பாகத் தோன்றி விடுகிறது. மனிதனின் சுயநல உணர்ச்சியும், பாதுகாப்பு உணர்ச்சியுமே வழிபாட்டு மனநோய்க்கு அரண்களாகி விடுகின்றன. மனிதர்கள் இந்த நோயிலிருந்து மீள முடியுமா? உறுதியாக மீள முடியுமென்று, மீட்சிக்கான வழியாக இருந்து, மானுடத்தை வழி நடத்தியவர் தான் புத்தர்.

புத்தர் மீட்சிக்கான வழியை, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விடையிலிருந்து தொடங்கினார். எப்படியும் சாகப் போகிறோம். எனவே, சமூக பயங்கரவாதங்களோடு மோதிவிட்டுச் சாவோம் என்ற கடமையை நோக்கி வாழ்க்கையைத் தொடங்க கற்றுக் கொடுத்தவர் புத்தர். அவர் கற்றுக் கொடுத்த வாழ்க்கையை நோக்கி வாழப் புறப்பட்டவர்கள் தான் - அச்சத்தின் நோயிலிருந்தும் வழிபாட்டின் மனநோயிலிருந்தும் மீள முடியும்; மற்றவர்கள் மீளுவதற்கும் துணைபுரிய முடியும்.

இத்துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, சமூக பயங்கரத்தையும், வழிபாட்டு உணர்ச்சி என்ற மனித இயல் குறைபாட்டையும் - பல நிலைகளில் கெட்டிப்படுத்தியது பார்ப்பன வேத (இந்து) மதமே ஆகும். இந்த பார்ப்பன - பார்ப்பனியக் கருத்தியலை அதன் மூலத்திலேயே முற்றுகையிட்டு, மக்களின் மனத்தில் கனறும் அச்சாம்பலால் மூடப்பட்டிருந்த வீரத்தை வெளியே கொண்டு வந்த முன்னோடி புத்தரே ஆவார். இயற்கையை உள்ளது உள்ளவாறே புரிந்து கொள்ள வேண்டும். அதைக் கயமை மனதோடு கூடிய கற்பனைத்திறன் கொண்டு முரண்பாடான அர்த்தத்தைக் கற்பித்து, அதற்குள் மக்களைச் சிக்க வைத்து மண்டியிடச் செய்யக் கூடாது என்றார் புத்தர். ஒரு தலைமுறையினரின் தவறான நம்பிக்கை, இனம் புரியாத அச்சம், ஒன்றிக் கொண்டிருக்கும் அறியாமை, பல தலைமுறைகளுக்கும் தொடரும். அதனால் பல தலைமுறை தொடர்ந்து கெடும் என்று எச்சரித்தார் புத்தர்.

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்க வழக்கம் என்பதற்காகவோ - நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டதனால் அது புனிதமானது என்பதற்காகவோ - தாய் - தந்தையர், ஆசிரியர் சொல்லியது பற்றி நடந்தது என்பதற்காகவோ - எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற புத்தர், நம்டைய அறிவார்ந்த சிந்தனை எப்படி வழி நடத்துகிறதோ, அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நமக்கு நம்முடைய அறிவுதான் வழிகாட்டி என்றார்.

மனிதர்கள் உண்மையையும், மெய்யான உண்மையையும் அறிய வேண்டும். அவர்களுக்குச் சுதந்திரம் மிக மிக அவசியமானதாகும். உண்மையைக் கண்டறிய ஒரே வழி கருத்துச் சுதந்திரமே என்றார் புத்தர். மனிதர்களின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானிலிருந்து விழுகின்றனவா இல்லை, மூளையில் இயல்பாக உள்ளனவா? அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன என்றார். மனிதர்களை அவர்களின் மனம் எத்தன்மை உடையதாய் ஆக்குகிறதோ அப்படியே அவர்களாவார்கள்.

மனதின் நன்மையை நாடும் பயிற்சியே அறவழியின் முதற்படிக்கட்டு என்றார் புத்தர். மனிதன் சிந்தனை, அவனியிலிருந்து புறப்பட்டு, கடவுள்களின் உலகத்தை நோக்கி திருப்பப்படுவதை புத்தர் தடை செய்தார். மனிதர்களின் தேடலை உள்நோக்கி வழிநடத்தி, அவர்களுக்குள்ளேயே ஆற்றலை உணரச் செய்தார்.

உலகின் எல்லா மதங்களும் அதனதன் வர்க்க நலன்களுக்கேற்ற வகையில் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. ஆனால், ஒழுக்கம் அவைகளின் அடிப்படையல்ல. ஒழுக்கமென்பது, மதம் என்ற எஞ்சினுடன் இணைக்கப்படும் தொடர்வண்டிப் பெட்டி போலத் தான். தேவைக்கேற்ப அது இணைக்கப்படும்; கழற்றப்படும். உண்மையில் மதத்தில் ஒழுக்கத்திற்கு இடமேயில்லை. உலகம் பிரம்மனாலோ, ஈசுவரனாலோ படைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கு கவலைகளும் தொல்லைகளும் ஏன் ஏற்படுகிறது? நன்மை, தீமை இரண்டுக்குமே கடவுளர்கள் பொறுப்பாளிகள் என்றால், அவர்களைவிட மோசடிக்காரர்கள் யார் இருக்க முடியும்? பிரம்மன், ஈசுவரன் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள் என்றார் புத்தர்.

“உலகின் துன்பங்கள் அனைத்தின் ஊற்றுக் கண்ணும் அயோக்கியத்தனம் என்பதைக் காட்டிலும், குருட்டு விசுவாசமென்னும் முட்டாள்தனமாகவே உள்ளது.'' புத்தர் இதை அனுமதிக்கவே இல்லை. “ஒருவருக்கு தன்னுணர்வு இருப்பின் அவர் தன்னை வெல்லட்டும்'' என்றார். ஒருவர் தனக்குத்தானே முழுமையில் தற்காப்போன் ஆவார்; வேறொரு காப்பாளர் யாருக்க முடியும்? தன்னைத் தான் தற்காக்கின்; பெறற்கய காவலை ஒருவர் பெற்றவனாகிறார் என்றார்.

பரிசீலனை என்பது கருத்தரித்து பத்து திங்கள் காத்திருப்பதற்கு ஒப்பானது. பிரச்சனையைத் தீர்ப்பது என்பது பிரசவ தினத்திற்கு நிகரானது. குறையற்றதென ஏதுமில்லை. இறுதியானது என ஏதுமில்லை. அனைத்தும் மறுபசீலனைக்கும், மறு சோதனைக்கும் உள்ளாக்கப்பட வேண்டும். மறுசோதனைக்கும் அவசியம் எழும் போதெல்லாம் மறுபசீலனை அவசியம் என்றார் புத்தர்.

மக்கள் மத்தியில் நாகரீகமும் தொடங்கிய காலத்தில் மக்களை முட்டாள்களாக்கி அடிமைகளாகச் செய்யவும், தங்கள் சொந்த நலன்களைப் பெருக்கி உரிமை - உடைமை - ஆண் முதலாளிகளாகவும், சில ஏமாற்றுக்காரர்களால், மனித அவமதிப்புக்காரர்களால், உழைப்புச் சுரண்டல்காரர்களால் உருவாக்கப்பட்டதே கடவுள் ஆகும். நமது அறிவுக்கு மேற்பட்ட ஆற்றல் என்று ஒன்று இல்லவே இல்லை. நன்மைக்கும் தீமைக்கும் நமது அறியாமையே முழு முதற்காரணம். பட்டறிவு மூலம்தான் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று மொழிந்த புத்தர் உலகத்திற்குப் பாதுகாவலரோ, பேணுபவரோ என்பதாக ஒருவரும் இல்லை என்றார். உலகமென்பது இடையறாது இயங்கிக் கொண்டும், அதே சமயம் மாறிக் கொண்டும் உள்ளது. மாற்றம் என்பதே உலகத்தின் பொதுவிதி என்றும் புத்தர் அறிவித்தார்.

Budhism
அறவொழுக்க ரீதியிலான சர்ச்சைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புத்தருக்கு, கடவுளின் தேவை ஏற்படவே இல்லை. கடவுளுக்கு ஒழுக்கத்தில் பங்கு இல்லை என்பதுதான் புத்தரின் முடிந்த முடிவு. இவ்வுலகில் கருணையே இல்லாமல் சில அடிதூரம் நடப்பவன், தானே தனக்குக் கோடித் துணி உடுத்திக் கொண்டு தனது சவத்தைத் தானே புதைக்கப் புறப்பட்டவன் ஆவான். ஆனால், கருணையே வடிவான புத்தர், ஒருவர் எல்லோருக்காகவும்; எல்லோரும் ஒருவருக்காகவுமான மானுட வரலாற்றில் எங்கெல்லாம் மனிதர்கள் தங்கள் ஆராய்ச்சி அறிவை இழந்திருந்தார்களோ, அங்கெல்லாம் வழிபாட்டு உணர்ச்சிக்கு அடிமையாக இருந்தார்கள். அச்சம் என்பது, மனிதர்கள் மீது ஆதிக்க மனிதர்களால் செயற்கையாக வலிந்து சுமத்தப்பட்டு ஏற்கச் செய்யும் ஓர் இழிவான செயலாகும்.

ஒழுக்க விதிகள் மனிதருக்கு நன்மை புரிபவையாகவும், அவை கடவுள் விருப்பத்தின் விளைவுகளாகவும் சொல்லப்படுகின்றன. கடவுளே உலகைப் படைத்தவர் - கடவுளே அதை ஆள்பவர் - கடவுளே பவுதீக விதிகளுக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் கர்த்தா என்கிறார்கள். மனிதர்கள், அவர்களைப் படைத்த கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அந்தக் கீழ்ப்படிதலே ஒழுக்க நியதியை நிர்வகிக்கிறது என்கிறார்கள். ஒழுக்க விதி கடவுளிடமிருந்து தோன்றியதென்றால், கடவுளே ஒழுக்க நியதியின் தொடக்கம் என்றால், மனிதர்கள் கீழ்ப்படியாமல் தப்பிக்க முடியாதென்றால், ஏன் இந்த உலகில் ஒழுக்கச் சீரழிவு மிகுந்துள்ளது என புத்தர் வினவினார். ஒழுக்க நியதி மனிதர்களைப் பொறுத்ததேயன்றி வேறெதையும் பொறுத்ததல்ல. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதாவதொரு மனிதச் செயல்பாட்டாலோ, இயற்கை இசைவாலோ விளைவதே என்றார் அவர்.

கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல்ல. கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த மதமும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எனவே, கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த வழியும் ஏற்பதற்கு உரியதல்ல. அவை மூட நம்பிக்கையை உருவாக்குகிறது. புத்தர், கடவுள் நம்பிக்கை என்பதை மிகவும் அபாயகரமானதாய்க் கருதினார். ஏனெனில், கடவுள் நம்பிக்கை பூசையிலும், பிரார்த்தனையிலும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பூசையிலும், பிரார்த்தனையிலும் கொண்ட நம்பிக்கை புரோகிதர் - பூசாரி நிலையைத் தோற்றுவிக்கிறது. புரோகிதர் -பூசாரி - குருமார் ஆகியோர் தீய புத்திசாலிகளாகி, மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் பகுத்தறிவு நோக்கின், சமநோக்கின் வளர்ச்சி முற்றாக அழிக்கப்படுகிறது என்றார் புத்தார்.

மதத்தின் மய்யப்புள்ளி மனிதர்களுக்கும் கடவுளர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்கக்கூடாது என்பதே புத்தன் கருத்தாகும். மதம் என்பது, மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும். எல்லோரும் இன்புறும் நோக்கில் ஒருவர் மற்றொருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே மதத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் புத்தர்.

“உலகம் என்பது இடை யறாது இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளது. உலகிற்குப் பாதுகாவலோ, பேணுபவரோ ஒருவருமில்லை. நமக்குரியது ஏதுமில்லை; நமக்குப் பிறகு நாம் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம். உலகம் குறைபாடு உடையதாய், சுயநிலம் மிக்கதாய், அடிமைப்படுத்துவதாய், அவாவுற்றதாய் உள்ளது என்ற வரையறையினைத் தந்த புத்தர் என்னிடம் தங்கமோ, வெள்ளியோ வேறெந்த செல்வமோ இல்லை. ஆனால், தூய வாழ்வுக்குரிய நற்செல்வங்கள் என்னிடம் உள்ளன. தூய வாழ்வுக்குய நன்னெறி, வாழ்க்கைப் பாதையே ஆகும். மனதைப் பண்படுத்தவும், மானுட இன்பங்களின் பேரின்பமான உன்னதத்தை அடையவும், ஒருவர் தம் வாழ்வை அர்ப்பணித்து பிறர் வாழ முயல வேண்டும் என்றார் புத்தர்.

புத்தரின் முதல் நோக்கம் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவது. ஏனென்றால், பகுத்தறிவின் நீட்சியே பொதுவுரிமை - பொதுவுடைமையாகும். இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச் செல்ல மக்களைச் சுதந்திர மனிதர்களாக்குவது. அவருடைய மூன்றாவது நோக்கம், மூடநம்பிக்கையின் பலமான மூலத்தை அதாவது எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையைத் தகர்த்தெறிவது ஆகும்.

இந்த பூமியில் மானுட வாழ்க்கைச் சூழல்கள், மனிதர்களோடு பிறந்த உணர்வின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளுதல், அந்த உணர்வுகளின் உருவாக்கம், வரலாறு மற்றும் மரபுகளின் விளைவாக மனித உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றால் மனிதர்களுக்கு விளையும் கேடுகள் ஆகியவை பற்றிய விசாரணை - ஆய்வு ஆகியவற்றால் விளைந்தது என்னும் பொருளில் புத்தரின் மார்க்கம் ஒரு புதிய கண்டுபிடிப்பேயாகும்.

பவுத்த நாத்திகத்தின் அய்ந்து முக்கியத் தத்துவங்கள்

* இயற்கையாகக் காணப்படும் திடப் பொருள், அதனுள்ளிருக்கும் உயிரிகள், அதன் ஆற்றல் இவைகளினால்தான் உலகம் என்று சொல்லக்கூடியது ஆனது.

*அனுபவங்களிலிருந்துதான் எல்லாவித அபிப்பிராயங்களும் தோன்றுகின்றன. ஆகையினால், கடவுளைப் பற்றிய ஓர் எண்ணத்தையோ அல்லது கருத்தையோ அல்லது காயத்தையோ மனிதர் கொள்ளவே கூடாது.

*அவயங்களின் அமைப்புகள் கற்பனை செய்யப்பட்டவை அல்ல; இயற்கையின் கோரிக்கைகளின்படி அவை வேறு துணையின்றி விருத்தியானவை.

*சர்வவல்லமை உள்ளவரும், மனிதர்களின் சுகத்தில் கவலை பூண்டு எப்பொழுதும் கவனித்துக் கொண்டு வருபவருமாகிய ஒருவர் உண்டு என்னும் எண்ணத்தை, உலகத்திலிருக்கக் கூடிய துன்பங்கள் - தீமைகள் பிரத்தியேகமான உண்மைகளால் தகர்த்தெறியப்பட வேண்டும்.

*இவ்வுலகத்தில் இப்பொழுது ஒருவர் அனுபவிக்கக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமேதான் - அவருடைய நடத்தைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக