வியாழன், 9 பிப்ரவரி, 2012

Share இந்துமத வேதநூல்களில் அறிவியல் இருகிறதாமே?




(பொள்ளாச்சியாரின் கட்டுரைக்கு மறுப்பு)

இந்துமதம் அறிவியலின் இருக்கையாமே?
இந்து வேத இதிகாச புராணங்களில் அறிவியல் கருத்துகள் அப்படியே கொட்டிக் கிடக்கின்றன என்று, கதைவிட்டுக்கொண்டு அவற்றின் மகாத்மியம் பற்றி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏடுகளில் இறுமாப்புடன் எழுதியும், மேடைகளில் மிடுக்காக உரையாற்றியும் திரிகின்றனர் அறிவியல் படித்ததாகக் கருதிக்கொள்ளும் இந்துமதப் பார்ப்பனத் தலைவர்களும் அவர்களின் பாதம் தாங்கிகளாக உள்ள தொண்டரடிப் பொடியாழ்வார்கள் ஆக விளங்கும் தமிழறிஞர்களும்.
அவர்களுள் ஒருவராக உள்ளவர்தாம் அருட்செல்வர் என அழைக்கப்பெறும் ஒருவர்.
புறப்பட்டிருக்கிறார் பொள்ளாச்சியார்!
அவர்தாம், திரு.நா.மகாலிங்கம் அவர்கள். அண்மையில் வெளிவந்துள்ள அவர் எழுதிய நூல் சிந்தனைப் புதையல்கள். பல கட்டுரைகள் அதில் உள்ளன. அவற்றுள் ஒன்று, வேதப் பழமையில் ஹிந்து மதத் தொன்மை என்பது. அக்கட்டுரையில், வேதத்தின் பழமை என்னும் குறுந்தலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார்.
என்ன பழமை? உந்தன் பழமை?
ஹிந்து சமயக் கலாச்சாரத்தின்படி கல்பம் என்பதுதான் காலத்தின் மிகப்பெரிய பகுதி. ஒரு கல்பம் என்றால் அதில் 4 இலட்சத்து 32 ஆயிரம் வருஷங்கள் உள்ளன என்று பொருள். இந்தக் கணக்கின்படிப் பார்த்தால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் 38ஆவது கல்பம் ஆகும். ஒரு கல்பத்தில் 16 மன்வந்த்ரம் உண்டு. ஒரு மன்வந்த்ரம் 27 ஆயிரம் வருடம். இதற்கு, ஸ்வாத வராக கல்பம் எனப் பெயர். ஒரு கல்பத்துக்கு 4 இலட்சத்து 32 ஆயிரம் வீதம் 38 கல்பங்களுக்கு 1 கோடி 64 லட்சம் 16 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நமது நாகரிகத்தின் பழமை இத்தனை தொன்மையுடையது! புல்லரித்துப் போகிறார் பொள்ளாச்சியார்.
கல்பமாம்! மன்வந்த்ரமாம்!!
கல்பம் ஒன்றுக்கு இத்தனை ஆண்டுகள் என்று கூறி, நாம் வாழும் கல்பம் 38ஆவது கல்பம் என்று எய்தி ஒரு கல்பம் 16 மன்வந்தரம் எனக் குறிப்பிட்டு ஒரு மன்வந்த்ரத்திற்கு இத்தனை ஆண்டு மேனி 16க்கும் மொத்தம் இத்தனை ஆண்டுகள். அதாவது 1 கோடி 64 இலட்சம் 16 ஆயிரம் ஆண்டுகள் என்று கனகச்சிதமாகக் கணக்குப் பண்ணி - இல்லை கணக்குப் போட்டிருக்கிறார் அருட்செல்வர். நல்ல கணக்குச் செல்வர் இவர்!
இந்தக் கணக்கு சரியா? இந்து மதத்தின் - நாகரிகத்தின் தொன்மைக்குப் பொருந்துமா? என, இப்பொழுது பார்ப்போம்!
உயிரின மலர்ச்சி (Evolution) பற்றி நினைவுபடுத்திப் பார்ப்போம்.
உலகம் பிறந்தது நமக்காக!
இந்தப் பேரண்டத்தின் (Universe) தோற்றம் நிகழ்ந்தது 1500 கோடி ஆண்டுகளுக்குமுன். ஞாயிறு (சூரியன்) தோன்றியது 500 கோடி ஆண்டுகளுக்குமுன். நமது புவி (Earth) உருவாகியது 450 கோடி ஆண்டுகளுக்குமுன்.
உயிர் எனப்படுவது
மறையுயிர் என்னும் உயிர்த்துணுக்குகள் தோன்றியது - 350 கோடி ஆண்டுகளுக்குமுன். உயிரின் தோற்றம் - 40 கோடி ஆண்டுகளுக்குமுன்; உயிர்களின் படிநிலைத் திரிபாக்கத்தின் ஒரு கட்டமாக முதனிலைப் பாலூட்டிகள் (Primates) தோன்றின. அவற்றுள் குரங்கினமும் ஒன்று.
முன் குரங்கும் / பின் குரங்கும்
குரங்கின் முன் தோன்றிகள் (Presimians) தோன்றியது 5 கோடி ஆண்டுகளுக்குமுன். குரங்குகள் தோன்றியது 4 கோடி ஆண்டுகளுக்குமுன். வாலில்லாக் குரங்குகள் (Apes) எனப்பட்ட மாந்தக் குரங்குகள் (Pongidae) தோன்றியது 3 கோடி ஆண்டுகளுக்குமுன். அவற்றுள், இராமா பிதிகஸ் (Rama Pithecus) தோன்றியது 1½ கோடி - 8 இலட்சம் ஆண்டுகளுக்குமுன்.
மாந்த இன முன்னோடிகள்
கைப்பாடு மாந்த இனம் (Homo Habilis) தோன்றியது - 17லு இலட்சம் ஆண்டுகளுக்குமுன். நிமிர் நடை மாந்தன் (Homosapier Sapiens) எனப்படும் ஜாவா மாந்தன் தோன்றியது 15 இலட்சம் ஆண்டுகளுக்குமுன்.
மாந்த இன மலர்ச்சி நிலை
பீகிங் மாந்தன் (Simanthropus Pekinensis) தோன்றியது 10 இலட்சம் ஆண்டுகளுக்குமுன். நியான்டர்தால் மாந்தன் (Neanderthalensis) தோன்றியது 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன். வளர்மதி மாந்தன் (Homosapier Sapiens) தோன்றியது 60 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன். தற்கால மாந்தன் (Holocene) தோன்றியது 10 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்.
ஏனிந்தக் கணக்கு வழக்கு?
இங்கே எதற்காக இந்த உலக, உயிரினத்தோற்ற வளர்ச்சி, மலர்ச்சி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது?
38 கல்பங்கள், அதாவது, 1 கோடி 64 லட்சம் 16 ஆயிரங்கள் ஆண்டுத் தொன்மை வாய்ந்ததாம் இந்து நாகரிகத் தொன்மையாம்! மெய்மறந்து மேனி சிலிர்த்துப் போகிறார் அருட்செல்வர். 1½ கோடி ஆண்டுகளுக்குமுன் மாந்த இனமே தோன்றவில்லை! அந்தக் காலகட்டத்தில், இராமாபிதிகஸ் எனப்படும் மாந்தக் குரங்குகள் உலவின. அவை, வாலில்லாக் குரங்குகள்!
இதுதான் இந்து நாகரிகத் தொன்மையா?
வளர்மதி மாந்தன் (Homo Sapiens) உருவாகிய காலமே 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தானே? மாந்தனே மலர்ச்சிபெறவில்லை! மதமே உருவாக வாய்ப்பில்லை!
இந்து மதம் என்பதற்கு இடமே இல்லை! அப்படி ஒரு மதம் உண்மையில் இல்லவே இல்லை என்பது வேறு சங்கதி. பின் எப்படி, இந்து நாகரிகம் வந்து இருக்கும்? அதுவும் 1லு கோடி ஆண்டுகளுக்குமுன்? பொள்ளாச்சியார் ஏன் இப்படி, புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்? அறிவியல் அவருக்கு, சரியான அறைகூவல் விடுத்திருக்கிறதே! மாந்த இனமே மலர்ச்சி பெற்றிராதபோது மதம் எங்கே? இந்து எங்கே? இந்து நாகரிகம் எங்கே? இந்து நாகரிகத் தொன்மை என்பது எங்கே? இந்து மகாலிங்கனார் விடை இறுப்பாரா?
வேதபுராணங்கள் சூரிய சுழற்சியைப் பற்றி விளம்புகிறதாமே?
இன்னொரு செய்தி. சூரியனின் சுழற்சி பற்றி அவர் எழுதுகிறார். நமது முன்னோர்கள், எத்தனை பெரிய மதிநுட்பத்தோடு இருந்தார்கள் என்பதற்கு அவர்கள் இந்தச் சூரிய சுழற்சியின் கால அளவைக்கூட கணக்கிட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தால் புரிந்து கொள்ள முடியும்! பூரித்துப் போகிறார் பொள்ளாச்சியார்!
சூரியனின் சுற்றுப்பயணம்
மேலும் எழுதுகிறார் அருட்செல்வர்: சூரியன் ஒரு நட்சத்திரத்திலிருந்து இன்னொரு நட்சத்திரம் செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலஅளவு 1000 ஆண்டுகளாகுமாம். இவ்வாறு, சூரியன் தனது சுற்றுப்பயணத்தை ஒருமுறை முடிப்பதற்கு 27,000 ஆண்டுகள் ஆகுமாம். சூரியனும் நவக்கிரகங்களும் ஒன்றாகச் சுற்றிவரும் காலம் மன்வந்த்ரம். 27 நட்சத்திரத்திற்கு தலா 1000 வருடங்கள் விகிதமாக 27,000 வருடங்கள் ஆகின்றன!
அடேயப்பா! அப்பப்பா! என்ன கணக்கு? என்ன புள்ளி விவரம்!
என் கேள்விக் கென்ன பதில்?
ஒரே ஒரு கேள்வி.
சூரியன், ஒரு நட்சத்திரத்திலிருந்து இன்னொரு நட்சத்திரம் செல்வதற்கு... என்கிறாரே, அப்படியானால் சூரியன் கோளா? நட்சத்திரமா? சூரியன் ஒரு நட்சத்திரம் என்று எந்த வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது? இருக்கு வேதத்தில் இருக்கிறதா அப்படி? பதில் சொல்வீர்களா? சூரியன் ஒரு விண்மீன் என்று வானியல் தெளிவாகக் கூறுகிறது. நமது புவிக்கு மிக அண்மையில் இருக்கும் கோள்தான் சூரியன் (The nearest star to the earth, is Sun). இந்து வேத புராண சாத்திரங்கள் என்ன கூறியுள்ளன? அய்யத்துக்கு இடமின்றி அது ஒரு கோள் என்றுதானே கூறியுள்ளன! அதாவது, கிரகம் என்றுதான் கூறுகின்றன.
கோள் எனக் கூறுவதைப் பாரீர்!
க்ரஹாணாம் ஆதித்யோ - அதாவது, கிரகங்களுள் முதன்மையானவன் சூரியன் என, ஸ்ரீசூர்யஸ்தோத்திரம் - என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.
ஓம் க்ரஹணாம்பதயே நம: அதாவது, 108 பெயர் வரிசையுள்ள 89ஆவது சூரியனின் பெயர் வரிசையாக ஸ்ரீ சூர்ய அஷ்டோத்திர சத நாமாவளி என்னும் நூல் கூறுகிறது. கோள்களின் தலைவனே! வணக்கம்! என்பதுதான் இதன் பொருள். ஜோதிட நூலும் சூரியனை ஒரு கோளாக வைத்தே நவகிரகம் என்கிறது.
எப்படி? எப்படி? மொழிந்தது எப்படி?
அருட்செல்வர், சூரியனும் நவக்கிரங்களும் ஒன்றாகச் சுற்றிவரும் காலம்... என்கிறாரே சூரியன் நீங்கலாக நவக்கிரகங்களா? அந்த நவக்கிரகங்களுள் சூரியன் இல்லையா? சூரியன் இல்லாத நவகிரகமா? அப்படியானால் நவ(ஒன்பது) கிரகங்களுள் சூரியன் இல்லையா? கோள்களுள் முதன்மையானவே! என்றுதானே சாத்திரம் கூறுகிறது? அப்படியானால், நவ (ஒன்பது) கிரகங்கள் யாவை என்று சொல்வாரா பொள்ளாச்சியார்? அப்படியானால், சூரியன் என்பது என்ன? ஏன் சொன்னார்? எப்படிச் சொன்னார்?
சொன்னது நீர்தானா சொல்லுங்கள்!
சூரியன் ஒவ்வொரு நட்சத்திரமாகச் சுற்றி வருகிறதாமே? அவ்வாறு 27 நட்சத்திரங்களைச் சுற்றுகிறதாமே? சொன்னீர்களே அய்யா? நமது, பால்வழி (Milky Way) விண்மீன் குடும்பத்தில் மட்டும் 10 ஆயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. இன்னும் ஏராளமான விண்மீன் தொகுதிகள் (Galaxies) உள்ளன. அங்கெல்லாம் கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன. சூரியன் பிற விண்மீன்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு வெறும் 27 விண்மீன்களை மட்டும் சுற்றி வருகிறதாமே? இது எப்படி?
சூரியன் பற்றி அறிவியல் சொல்வது என்ன?
சூரியனின் குறுக்குவிட்டம் 14 லட்சம் கி.மீ. வெளிப்புற வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ். உட்புற வெப்பம் 2 கோடி டிகிரி செல்சியஸ். சூரியனின் எடை 2 X 103 கிராம். அதாவது, 2க்குப் பின்னால் 13 - 0 போட்டால் வரும் தொகையின் அளவுள்ள கிராம்கள். இந்தச் சூரியன் வெறும் ஆவி நிலையில் உள்ள விண்மீன். இது, சூரியனைப்பற்றி வானியல் கூறும் சில குறிப்புகள். அருட்செல்வர் பெரிதாகப் பீற்றிக் கொள்ளும் எந்த இந்து வேதத்திலாவது சொல்லப்பட்டிருக்கிறதா? அறைகூவிக் கேட்கிறோம்!
இருக்கு - இதில் இருக்கிறதா?
அருட்செல்வர் சொல்கிறார்: சூரியனும் கிரகங்களும் நட்சத்திரம் ஒன்றுக்கு 1000 வருஷம் வீதம் 27 நட்சத்திரங்களையும் சுற்றி ஒரு வட்டம் வர 27 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இது உண்மையா? எல்லாம் சரி, வானிலுள்ள விண்மீன்கள், கோள்கள், குறுங்கோள் எல்லாம் தன் சுற்றுப் பாதையில் சுற்றிவரும் அதேவேளையில் தங்களைத் தாங்களே ஒருமுறை சுழன்று வரும் (Rotation - சுழற்சி) என்கிறது வானியல். இப்படி வேதம் எதுவாயினும் விளம்பியுள்ளதா?
சுழற்சி - சுற்று எனும் 2 வகை இயக்கங்கள் பற்றி ஏதாவது குறிப்பு இந்த இருக்கு முதலிய வேதங்களில் இருக்கிறதா? இல்லையே? இல்லையே? இல்லவே இல்லையே?
சூரியனின் சுற்று நிலை:
வான் (அறிவியல்) இயல் சூரியன் மற்ற வான் பொருள்கள் (Celestial Bodies) போலவே தன்னை ஒருமுறை சுழன்று கொள்ளும்.
அது, நொடிக்கு 250 கி.மீ. வேகத்தில் தன்னை ஒருமுறை சுழன்று கொள்ள 25 நாள்கள் 6 மணி பிடிக்கிறது. இதே சமயம், விண்மீன் மண்டல மய்யத்தில் உள்ள வேகா (Vega) என்ற மாபெரும் விண்மீன் ஒன்றைச் சுற்றி வருகிறது. ஒருமுறை அதனைச் சூரியன் சுற்றிவர 25 கோடி ஆண்டுகள் ஆகிறது.
சொல்லச்சொல்ல இடிக்குதடா!
அறிவியல், சூரியன் ஒருமுறை மற்றொரு விண்மீனை பால்வழியில் தன் குடும்பத்துக் கோள்களோடு சுற்ற 25 கோடி ஆண்டு ஆகிறது என்று சொல்ல, அருட்செல்வர் மகாலிங்கனார் வியந்து வியந்து உள்ளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து, மிகவும் மகிழ்ந்து மகிழ்ந்து 27 நட்சத்திரங்களையும் நவக்கிரகத்தைச் சேர்த்துக் கொண்டு ஒருமுறை சுற்றிவர 27,000 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்கிறாரே, இது அறிவியலோடு இடிக்கிறதே? அறிவியலுக்கு மாறாக இருக்கிறதே? இந்துமதம் இவ்வாறு சொல்வது வெறும் பிதற்றல் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்வாரா பொள்ளாச்சியார்?
வேண்டாமே, இந்த வேலை!
இந்து வேதங்கள் - புராணங்கள் என்ற பெயரில் அவற்றுள் கூறப்பட்டுள்ள அபத்தங்களை (Absurdity) அறிவியல் உண்மைகள் போல மக்களிடையே அரங்கேற்றும் வெட்டி வீண்வேலையை அருட்செல்வர் மகாலிங்கம் போன்ற தமிழறிஞர் இனியேனும் தொடராமல் வாளா இருப்பது அவர்களுக்கு மிக நல்லது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறோம்

1 கருத்து:

  1. முந்தைய காலங்களில் சிந்தைனையாளர்கள் இருந்தார்கள். அறிவியலும் ஒரு நாளில் தோன்றியதல்ல. அணுவைப்பிளக்க முடியாது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டபோது உள்ள விஞஞனிகளை முட்டாள் என்பது சரியல்ல. பழையன கழிவதும் புதியன சேர்வதும்தான் வாழ்க்கை. இது எல்லா துறைக்கும் பொருந்தும். அறிவியல் பரிசோதனைகள் இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது.பதிய தெளிவுகள பிறந்துக் கொண்டேயிருக்கின்றது.பழையவற்றை ஒரேபடியாக பழிப்பதும் தவறு. அப்படியே அள்ளிவைத்துக்கொண்டு சிலாகிப்பதும் தவறு.

    பதிலளிநீக்கு