சனி, 25 பிப்ரவரி, 2012

ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?


எழில்
ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?
எழில்

காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி.

வழக்கம்போல யூ ட்யூபில் வீடியோ தேடி பார்த்துகொண்டிருந்த எனக்கு இந்த வீடியோ தட்டுப்பட்டது. இவர் ஒரு இஸ்லாமிய பிரச்சாரகர் போலிருக்கிறது. ஜாகிர் நாயக் என்ற பெயர். இந்தியாவில்தான் இருக்கிறார் போலிருக்கிறது.

http://www.youtube.com/watch?v=BwCn-IT_zZA

இந்த வீடியோவில் ஒருவர் இவரிடம் கேள்வி கேட்கிறார்.

"இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்கள் தங்கள் மதத்தை பரப்பவும், தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற கோவில்களும் கட்ட அனுமதிக்கப் படுவார்களா? அப்படியென்றால், ஏன் சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை? ஆனால் முஸ்லீம்கள் லண்டன் பாரீஸில் மசூதிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?"

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்

"ஒரு முஸ்லீமல்லாதவர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபாலாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கணித வாத்தியாரை நியமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் 2+2=3 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா, அல்லது 2+2 = 6 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அலல்து 2+2 = 4 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அவர் 2+2 = 4 என்று சொல்லும் நபரைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு சரியான கணித அறிவு இல்லை. அதே போல மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை. ஒரு முஸ்லீமுக்கு மட்டுமே மதத்தை பற்றிய சரியான அறிவு இருக்கிறது. மற்றவர்களின் மதமும் , மதத்தை பற்றிய அறிவும் தவறாக இருக்கும்போது, அவர்களது தவறான கருத்தை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் தங்கள் தவறான கோவிலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? "

கேள்வி கேட்டவர் தொடர்ந்து இதனை கேட்டார்.

"முஸ்லீமல்லாதவர்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். இல்லையா?"

இதற்கு ஜாகிர் நாயக் பதில் கூறியது

"முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுடைய குழந்தைகள் 2+2 = 3 என்று சொல்லித்தர எப்படி அனுமதிப்பார்கள்? ஏனெனில் அது தவறு என்று தெரியுமே? அதே போல எங்களுக்கும் இஸ்லாமே உண்மையான மதம் என்று தெரியும். ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்"

இதனை கேட்டு ஆடிப்போய் விட்டேன்.

--
இப்படி உளறும் ஜாகிர் நாயக் உண்மையிலேயே படித்த டாக்டர்தானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.

அவரது முதல் பதிலை எடுத்துக்கொள்வோம்.

2+2 = 4 என்பது கணித அறிவுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதமே 2+2 = 4 போன்ற உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்து மதம் அப்படி அல்ல. இந்து மதத்தில் 1+1 = 2 என்றும் இருக்கும். 1+1 = 10 என்றும் இருக்கும். ஏனெனில், இந்துமதம் ஒரு குருவுக்கோ ஒரு கொள்கைக்கோ இறுக்கமாக கட்டிக்கொண்டு, அதனையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஒரு மனிதன் அறியக்கூடிய விஷயமும் இருக்கும். பிரபந்தத்திலிருந்து நெகிழக்கூடிய விஷயமும் இருக்கும். தேவாரத்திலிருந்து பெறக்கூடிய ஆன்மீக உணர்வும் இருக்கும். இந்து மதத்தை பல்வேறு ரிஷிகள் வளப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ரிஷியும், குருவும் எனக்கு பின்னால் ஒரு குரு வரமாட்டார் என்றோ, எனக்கு பின்னால் வருபவன் எவனையும் நம்பாதே என்றோ சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னால், இந்துக்களும் அதனை மதிக்கப்போவதில்லை.

1 + 1 = 2 எப்போதுமே உண்மை அல்ல. ஒரு மேகமும் இன்னொரு மேகமும் இணைந்தால் அது 2 மேகங்கள் அல்ல. ஒரு மேகம் தான். நாம் எந்த கணிதம் போடுகிறோம் என்பதை பொறுத்து விடையும் மாறும். Fuzzy logic என்ற கணிதத்தில் இன்னும் வினோதங்கள் எல்லாம் இருக்கின்றன.

1+1 = 2 என்பது தசம (எண் 10 ஐ அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் ஒரு விடை. 1+ 1 = 10 என்பது இரும (பைனரி என்னும் 2 எண்ணை அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் விடை. இரண்டுமே சரியான விடைகள்தான். 1+1 = 2 என்று தான் கூற வேண்டும். 1+1 = 10 என்று சொன்னால் தலையை சீவிவிடுவேன். அப்படிப்பட்ட கணிதத்தை கண்டுபிடிக்கவோ, சொல்லிக்கொடுக்கவோ கூடாது என்று சொல்ல முடியுமா?

1+1 = 10 என்று சொல்லும் பைனரி கணிதத்தை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாம் இப்படி கம்ப்யூட்டரிலேயே எழுதிக்கொண்டிருக்க முடியாது. நாம் நிதர்சனமாக இப்படி கம்ப்யூட்டரில் எழுதிக்கொண்டிருப்பதற்கு பைனரி கணித வளர்ச்சி தானே அடிப்படை?

இவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், கடவுளை பற்றி நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். அதில் உள்ளதுதான் சரியான கடவுளைப் பற்றிய விளக்கம். கடவுளை சுருக்கி அந்த புத்தகத்துக்குள் வைத்து கட்டிவிட்டேன். கடவுளைப் பற்றி வேறொருவர் இனி சிந்திக்கவோ, அல்லது கடவுளின் மற்றைய பரிமாணங்களை பற்றி பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது போல இருக்கிறது.

சாதாரண கணிதத்துக்கே இத்தனை பரிமாணங்கள் இருக்குமென்றால், வரையறைக்குள் சிக்காத இறைக்கு எத்தனை பரிணாமங்கள் இருக்கும்?

கரையருகே நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி ஒரு டம்ளரிலே கடல் தண்ணீரை அள்ளிவிட்டு, அம்மா கடலை மொண்டுவிட்டேன் என்று சொல்வது போல இல்லை? சிறுமியாக இருந்தால், சிரிக்கலாம். தலையில் தட்டிவிட்டு போடி கண்ணு என்று சொல்லலாம். அதுவே பெரிய டாக்டராக இருந்தால் என்ன செய்வது?

--

இரண்டாவது பதிலை எடுத்துக்கொள்வோம்

மற்றவர்கள் இஸ்லாமை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதன் காரணம் தங்கள் மதங்கள் உண்மையானவை என்ற உறுதி இல்லாததால் தான் என்று சொல்கிறார்.

இதனை விட இஸ்லாமியர்களுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.

இந்துக்களும் கிறிஸ்துவர்களும் தங்கள் மதம் உண்மையானது என்று கருதினால், முஸ்லீம்கள் இஸ்லாத்தை பரப்புவதை, இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதை தடை செய்யவேண்டும், மசூதிகளை கட்ட அனுமதித்திருக்கக்கூடாது என்று கூறுகிறார். நீங்கள் உங்கள் மதம் உண்மையானது என்று நினைக்காததினால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறீர்கள் என்று கூறுகிறார்.

எனக்கு கிரிஸ்துவ மதத்தை பற்றி தெரியவில்லை என்றாலும், ஓரளவுக்கு இந்து மதம் பற்றி தெரியும் என்பதால் அதனது உலகப்பார்வையை பற்றி கூற முயல்கிறேன்.

இவர் இவ்வளவு காலம் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி புரிந்துகொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.

இந்து மதம், தான் சரியானது அல்ல என்ற காரணத்தால் மற்ற மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது என்று ஜாகிர் நாயக் கருதினால் அவருக்காக நான் பரிதாபப்படத்தான் முடியும்.

மேலே குறிப்பிட்ட எண் கணிதத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைக்கு 1+1 = 2 என்று நாம் புரிந்து வைத்திருந்தாலும், ஒரு ஆன்மீக குரு வந்து ஆன்மீகத்தில் 1+ 1 = 10 என்ற கணிதத்தையும் உருவாக்க முடியும் என்பதை இந்துமதம் அங்கீகரிக்கிறது.

அதனால்தான், குருக்களை பார்த்து இந்துமதம் அஞ்சுவதில்லை. இதனால்தான் பல மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது. புதிய ரிஷிகளையும், குருக்களையும் வரவேற்கிறது. ஒரு சில குருக்கள் தவறாக போதிக்கலாம். அவர்கள் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஒரு சில குருக்கள் ஆன்மீகத்தை மேலே கொண்டு செல்கிறார்கள். அவர்களை மக்கள் வரவேற்கிறார்கள். பிரேமானந்தாவும் இங்கு தோன்றலாம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் இங்கு தோன்றலாம். பிரேமானந்தாக்கள் இங்கே உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திகளும், மாதா அமிர்தானந்தமயிகளும் உலகத்துக்கே ஆன்மீக குருக்களாக உயருவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியோ மாதா அமிர்தானந்தமயியோ மனிதனின் ஆன்மீகப்பயணத்தின் முடிவல்ல. மனிதனின் ஆன்மீகப்பயணம் முடிவற்றது. மனிதனை தொடர்ந்து பரிணமிக்க வைக்கக்கூடியது.

--

பிரச்னை ஜாகிர் நாயக்கிடம் இருக்கிறது. ஏதோ இஸ்லாமை பரப்புவதாக நினைத்துக்கொண்டு இஸ்லாமியருக்கே உலை வைக்கிறார். இஸ்லாமியர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்றாக ஒரு சமூகத்தில் வாழ்வதையே கெடுக்கிறார்.

சாதாரண இந்துக்களை அவர் தூண்டி விடுகிறார். இந்துமதத்தினை பற்றி முழுமையான அறிவற்ற பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். பல இந்துக்கள் சாதாரணமாக கோவிலுக்கு போவது, தங்கள் சமூகத்து பழக்க வழக்கங்களில் திருவிழாக்களில் கலந்து கொள்வது தவிற வேறு அறியாதவர்கள். இவர்கள் இந்துத் தத்துவங்களை கரைத்துக்குடித்த போதகர்கள் அல்ல. அவர்களை ஜாகிர் நாயக் வெறியேற்றுகிறார். "நீ இந்துமதம்தான் உண்மை என்று நினைத்தால் இஸ்லாமை பரப்ப அனுமதிக்காதே" என்று உசுப்பேற்றுகிறார். "நீ என்னை அனுமதிப்பதற்கு காரணம், உன் மதம் சரி என்று நீ நினைக்காததால்தான்" என்று இந்துவை அசிங்கப்படுத்துகிறார்.

இவ்வாறு இவர் இப்படி பேசுவதைக் கேட்டால், "இந்துக்கள் தங்கள் மதம் உண்மை என்று நினைத்தால், முஸ்லீம்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றுதானே சொல்கிறீர்கள். ஆமாம் அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம். இனி முஸ்லீம்கள் இந்தியாவில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என்று சாதாரண இந்துக்கள் கூறமாட்டார்களா?

என்னுடைய மதம் நல்ல போதனைகளை வழங்குகிறது என்று சொல்வது எல்லோரும் செய்யக்கூடியது. என்னுடைய மதம்தான் உண்மையானது மற்றவர்களது மதம் எல்லாம் பொய்யானது என்று இந்த நவீன காலத்தில் ஒருவர் பேசுவது ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும், வருந்தத்தக்கது.

இப்படி ஒருவர் பேசினால், நிச்சயம் உங்களது மதம் பொய் என் மதம்தான் உண்மை என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதனைத்தான் இவர் தூண்டுகிறார்.

நான் என்னவேண்டுமானாலும் இந்துமதத்தை திட்டுவேன், அது பொய்யான மதம் என்று சொல்லுவேன், ஆனால் யாரும் இஸ்லாமை ஒன்றும் சொல்லக்கூடாது என்று அவர் நினைப்பாரேயானால், அவருக்காக பரிதாபப்படத்தான் முடியும். இவர் இந்துமதத்தை பொய்யானது, இஸ்லாம் மட்டுமே உண்மையானது என்று கூறினால், நிச்சயம் இந்துக்களில் சிலர் எழுந்து, இஸ்லாம்தான் பொய்யான மதம், இந்துமதம்தான் உண்மையானது என்று சொல்லத்தான் செய்வார்கள். அப்படி சில இந்துக்கள் சொல்லும்போது, இந்து மத தத்துவங்களை அறிந்த பல இந்துக்கள் அவ்வாறு சில இந்துக்கள் சொல்வதை தவறானது என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது எந்த காலத்திலும் ஜாகிர் நாயக் கூறியதை சரியாக்கி விடாது.

அப்படிப்பட்ட இந்துக்களை திட்டுவதை விட்டுவிட்டு, ஜாகிர் நாயக் போன்று தூண்டிவிடும் பேச்சு பேசும் நபர்களை கண்டிக்க அனைவரும் முன்வர வேண்டும். முக்கியமாக இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நபர்களை ஒதுக்க வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு இப்படிப்பட்ட உளறுவாயர்கள் ஆபத்தானவர்கள். இப்படிப்பட்ட கிறுக்கர்களை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக