செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

அனைத்து உயிர்களுக்கும் அமைதியையும், இன்பத்தையும் நல்கும் வாழ்க்கை நெறியே பவுத்தம். குருட்டு நம்பிக்கைகளை மறுத்து, அச்சத்தை அகற்றி, சிந்தனையை நெறிப்படுத்துவதோடு அவற்றை விவாதத்திற்குள்ளாக்குவதையும் பவுத்தம் வரவேற்கிறது. அது, நம்பிக்கை அடிப்படையிலான விசுவாசத்தை ஊக்கப்படுத்துவதில்லை. புத்தரின் போதனைகள் திபிடங்களாகத் (திபிடகம்) தொகுக்கப்பட்டு, மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.

Budha
சுத்த பிடகம் எனும் பேருரைப் பகுதி, அய்ந்து தொகுப்பு (நிகாயம்)களைக் கொண்டது. இவற்றிலிருந்து புத்தரின் தத்துவக் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகிறது. 1. தீகநிகாயம் (நீண்ட நேருரைகள்) 2. மச்சிம நிகாயம் (இடைப்பட்ட அளவு பேருரைகள்) 3. சம்யுக்த நிகாயம் (உறவுடைக் கூற்றுகள்) 4. அங்குத்தர நிகாயம் (படிப்படியான உரைகள்) 5. குத்தக நிகாயம் (சிற்றுரைத் தொகுப்பு) என்பனவாகும். விநயபிடகம் எனும் நன்னடத்தை மற்றும் மருத்துவப் பகுதி, பிக்குகள் ஒழுக்கம் பற்றிய நெறிகளை வரையறுத்துக் கூறும் அய்ந்து நூல்களாக உள்ளன. அபிதம்ம பிடகம் எனும் உன்னதக் கோட்பாட்டுப் பகுதி, ஏழுநூல்களைக் கொண்டது. இவை, புத்தருடைய கருத்துகளின் விளக்க உரைகள் உள்ளடங்கியவை.

அறிவுடையோர் தங்கத்தைச் சுட்டு, வெட்டி, உரைத்துப் பார்த்து ஏற்பது போலவே நீங்களும் என் சொற்களையும் ஆய்ந்த பின்னரே ஏற்க வேண்டும். என்பால் இருக்கும் மதிப்பால் ஏற்றுவிடக் கூடாது என்றார் புத்தர். மானுடச் சமநிலை விழைந்த புத்தர், தனது கருத்துகளை மக்களிடம் திணிக்கவில்லை. அவருடைய கருத்துகளை மக்கள் தங்கள் மீது திணித்துக் கொண்டனர். மனித இன வரலாற்றில் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முக்கியமான மனிதர் புத்தர். அவர் அறிவித்த நாகரீகம்தான் உயர்ந்த நாகரீகம் ஆகும். புத்தருடைய குணங்களை மூன்று விதமாகச் சொல்லலாம்: 1. எல்லையில்லாத அறிவு 2. முழுமை பெற்ற தூய்மை 3. உலகத்தோடு பொருத்தப்பாடு. புத்தர் உண்மையையே போதித்தார். அதனால் அது எக்காலத்துக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியதாக அமையப் பெற்றது.

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் தேசியக் கொள்கை என்ற கோணத்தில், கோட்பாடு என்ற ஒன்று இருந்ததேயில்லை. பவுத்த நெறியைத் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்ட அசோகரின் ஆட்சிக் காலத்தில்தான், புத்தருடைய அறவழியில் இம்மண்ணிற்கு ஒரு பரந்த கோட்பாட்டு எல்லை அமைந்தது. புத்தர், மனித யுகத்தில் மலர்ந்த கோட்பாடுகளின் முன்னோடி ஆவார். வேதகால அலங்கோலங்களை எதிர்த்துத் தோற்றுவிக்கப்பட்ட பவுத்த யுகம், கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தொடக்கம் பெற்றது. பவுத்தர்களின் சொல்லாலும், செயலாலும் வளர்க்கப்பட்ட புத்தரின் போதனைகள், 200 ஆண்டுகளைக் கடந்து பாலிமொழியில் பிரதியாக்கப்பட்டு பிரச்சாரக் கருவியாகியது. காலப்போக்கில் பவுத்தம் வளர வளர, ஆயப் பார்ப்பனர்களின் வேதமதம் கேள்விக்குறியாயிற்று.

பவுத்த தம்மத்தின் அடிப்படையான கொள்கை என்ன? இந்தக் கேள்விகளைப் புரிந்து கொள்ளாமல், புத்தரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ‘‘புத்தருடைய காலத்தில், பார்ப்பனியம் மூன்று தூண்களைக் கொண்டிருந்தது: 1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்ட அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா? இல்லையா? என்பதெல்லாம் பொருட்டல்ல அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில், அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது'' (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் - மராட்டிய நூல் தொகுப்பு : 20; பக் : 327).

பிறவி முதலாளிகளான பார்ப்பனர்களின் வாழ்க்கை முறை பற்றி புத்தர் குறிப்பிட்டதாவது: பார்ப்பனர்கள் எனது நற்கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களைத் திருத்திக் கொண்டு வாழ மாட்டார்கள். பார்ப்பன ரிஷிகள் என்பவர்களோ புறங்கூறுதல்,ஒருவருக்கொருவர் சண்டையை மூட்டி விடுதல், சாதிப் பிரிவைத் தூண்டி விடுதல், வருங்காலத்தைப் பற்றிக் கூறுவதாகப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுதல், அய்தீகம் சடங்குகள் என்ற பெயரால் மக்களை மடமையில் ஆழ்த்தி, அதன் மூலமே தங்கள் இனத்தின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

வேதத்தில் எந்தப் பாட்டிலாவது பிரம்மனை நேருக்கு நேராகப் பார்த்ததாகப் பாடியுள்ளார்களா? தெரியாத, பார்க்காத, காணடியாத ஒன்றுக்கு வேதம் வழிகாட்டும் என்பது மடத்தனமானது. ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு செல்லுகின்ற பார்க்க இயலாதோரின் தன்மையைப் போன்றதே வேதம் என்று சொல்லுவதும். முன்னால் செல்கின்றவனுக்கும் ஒன்றும் தெரியாது. நடுவில் செல்கின்றவனும் காணமுடியாது; இறுதியாகப் போகிறவனும் பார்க்க முடியாது. அது போலவே வேதப்பாடல்களும் குருட்டுத்தனமானது. பைத்தியக்காரத்தனமானது. பொருளற்ற வெற்றுச் சொற்களாலானது என்றார் புத்தர். இந்தப் பார்ப்பனர்கள், பொறாமை, கர்வம், வஞ்சகம் நிறைந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு நல்வழிகாட்ட முடியும் என்று நம்புகிறீர்களா? பார்ப்பனர் நல்லவராவது, அவர்கள் பிறவிக்குணத்திற்கே மாறுபட்டது. அவர்களுடைய வேதம் என்பது நீரற்ற பாலைவனம். வழியற்ற கோடு. பாழடைந்த வீடு. பொட்டல் காடு என்றார் புத்தர். மேலும் அவர், பார்ப்பனர்கள் தங்கள் சுகத்தை, தாங்கள் மட்டுமே அனுபவித்து வாழும் இன்பநுகர்ச்சியை கைவிட்டு, அறநெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டுமென்ற பாதையில் செல்லவே மாட்டார்கள் என்றார்.

பார்ப்பனர், சத்தியர், வைசியர், சூத்திரர் என்று மக்களைப் பிரிப்பதானது - விறகு, குச்சி, புல், வறட்டி ஆகியவைகளால் உண்டான நெருப்பை - விறகுத் தீ, குச்சித் தீ, புல் தீ, வறட்டித் தீ என்று கூறுவது போல் அல்லவா இருக்கிறது என்றார் புத்தர். பார்ப்பனர்களால் போற்றப்படும் ஏற்றத் தாழ்வு, அவர்களுக்கான அதிகாரப்பூர்வக் கோட்பாடாகும். பார்ப்பனியம் ஏற்றத்தாழ்வோடு திருப்தியடைந்து விடவில்லை. பார்ப்பனியத்தின் மூலம், படிநிலைப்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வான சமூகத்தை நிலைநிறுத்துவது. அது, வளர்ச்சி நிலையன்று. பார்ப்பனியம் சமத்துவத்திற்கு எதிரானது.

சதுர்வர்ண விதிகளைக் கவனமாய்ப் பரிசீலித்த புத்தர், பார்ப்பனியத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட சமூக அமைப்பு முறை தவறானது என்றார். உண்மை வாழ்முறைக்கு பார்ப்பனியம் எதிர்மறையாக இருப்பதால், புத்தர் அதை ஒழிப்பதைத் தன் தன்மையான செயல் திட்டமாகக் கொண்டார். பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட கர்மவிதியை முறியடித்து முன்னேறினால்தான் சமநீதிக்கானப் புரட்சி சாத்தியமாகும் என்றார். ஒரு சமூக - பொருளாதார - அரசியலமைப்பு என்ற முறையில், தான் எதிர்கொண்ட பிறவி முதலாளித்துவத்தின் (பார்ப்பனியத்தின்) முரண்பாடுகளைப் புலப்படுத்தினார். வர்ண - சாதி சமூக உறவுகளை ஒழித்து, புதிய சமூக உறவு முறைமைகளை உருவாக்கும் சமூகச் சக்திகளாக சூத்திரர்களையும் பெண்களையும் (வர்ணாசிரம அமைப்பில் இவர்கள்தான் அடிமைகள்) வரையறுத்துக் கூறினார்.

புத்தர், மானுடத்தில் ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தினார். அவர், பால் - இன - சாதி ஏற்றத்தாழ்விற்கும், பாரபட்சத்திற்கும் எதிரானவர். பிறப்பால் எவரும் கீழ்சாதி இல்லை; பிறப்பால் எவரும் உயர்சாதி இல்லை என்பதே அவரது பிரகடனமாகும். எவரொருவர் முன் கோபடையவரோ, வஞ்சகரோ, தன்னலடையவரோ அவரே கீழான மனிதர். எவரொருவர் வீணாக உயிர்களை வதைக்கிறாரோ, கொல்கிறாரோ, ஒடுக்குகிறாரோ, கருணையற்றவரோ அவரே கீழான மனிதர். எவரொருவர் பொய்யுரைப்பாரோ, களவாடுகிறாரோ, கடனைத் திருப்பித் தராதிருக்கிறாரோ, அவரே கீழான மனிதர். நண்பர், உறவினர் ஆகியோரிடத்தில் பிறன்மனை விழைபவர் எவரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் தாயை, தந்தையை, சகோதரர்களை, சகோதரிகளை, உற்றார் - உறவினரைத் தாக்குகிறாரோ, ஏசுகிறாரோ, இழிவுபடுத்துகிறாரோ அவரே கீழான மனிதர்.

எவரொருவர் நல்லறிவுகளை மறைத்து விடுகிறாரோ, பிறரைத் தவறாக வழிநடத்துகிறாரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் தீயவை புரிந்துவிட்டு நன்மை புரிந்ததுபோல் நடக்கிறாரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் பிறர் வீட்டிற்குச் சென்று நல்விருந்துண்பவராய், தம் வீட்டிற்கு வருபவரை விருந்தோம்பாதவராய் இருக்கிறாரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் பொது வாழ்வுத் தொண்டருக்கு தானமளிக்காமல், அவர்களை வஞ்சித்து வெறுப்பூட்டுகிறாரோ, அவரே கீழான மனிதர். எவரொருவர் தற்பெருமையால் தன்னை உயர்த்திப் பேசி பிறரைத் தாழ்த்துகிறாரோ, அவரே கீழான மனிதர்.

எவரொருவர் தீயவை புரிய வெட்கப்படாமல் அஞ்சாமல் இருக்கிறாரோ, அவரே கீழான மனிதர். இத்தகைய மனிதர்களையே ஒதுக்கி வைக்கப்படத்தக்க கீழான மனிதர்களாக புத்தர் வகைப்படுத்தினார். புத்தர், நல்ல நடத்தை மட்டுமே நிரந்தர நன்மைக்கு - நிரந்தரமான அடிப்படைக்கு உத்திரவாதம் ஆகுமென்றார். சமூக விளைவின் அடிப்படை நல்லவர்களை உருவாக்க வேண்டுமேயொழிய வல்லவர்களை, சூழ்ச்சியாளர்களை, சுயநலக்காரர்களை அல்ல என்றார். ஒரு மனிதன் நிலை, சூழ்நிலையில்தான் ஆளப்படுகிறதேயொழிய, பிறப்புரிமையில் ஆளப்படுவதில்லை என்றார். இந்தியத் துணைக்கண்டத்தில் பார்ப்பனியச் சமூக சூழ்நிலைமையில் மனித அந்தஸ்து, மனித வாழ்க்கை இழந்த வெகுமக்களுக்காகவே தன் சங்கத்தைத் தொடங்கினார்.

யாரொருவரும் பிறப்பினால் ஒதுக்கப்பட்டவர் இல்லை; யாரொருவரும் பிறப்பினால் உயர்ந்தவர் இல்லை. சாதியல்ல; சமத்துவமின்மையல்ல; உயர் குலம் - தாழ்ந்தகுலம் அல்ல. அனைவரும் சமமானவரே. இதுவே என் கடப்பாடு என்ற புத்தர் சமூகச் சமத்துவமின்மை வரலாற்று வளர்ச்சியின் விளைவன்று; சமத்துவமின்மை பிறவி முதலாளித்துவத்தின் (பார்ப்பனியத்தின்) ஆதிக்கக் கோட்பாடே என்று முன்மொழிந்தார். புத்தர், பார்ப்பனியத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கியெறியவே இயக்கமானார். வர்ண சாதியச் சமூக அமைப்பின் மிக வலியவையாகவும், சமத்துவத்திற்கான முன்னோடிகளில் எவருக்கும் முந்தியவராகவும், மிக முழுமையானவராகவும், மிக உறுதியானவராகவும் திகழ்ந்தார். ஆம். மனித இனத்தின் முதல் புரட்சியாளர் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக