சனி, 2 பிப்ரவரி, 2013

அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதை இதுதான்!

அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதை இதுதான்!


நாகா சாதுக்களாம்! 
பக்தி - புத்தியை மட்டுமா கெடுக்கிறது; ஒழுக்கத்தைக் கெடுக்கிறது - நல் நாகரிகத்தைக் கெடுக்கிறது என்பதற்கு வெகு தூரம் சென்று ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டாம்.
இப்பொழுது உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் நடந்து கொண்டு இருக்கும் கும்பமேளா ஒன்று போதாதா? 12 கோடி பக்தர்கள் நீராடுகிறார்களாம். 
ஏற்கெனவே கங்கை நதி பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் அபாயகரமானவை.
உயிர்க்கொல்லி நோய்க் கிருமிகளின் உல்லாசப் பூந்தோட்டமாக கங்கை என்னும் சாக்கடை தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில் தான் கலக்கிறது. அது கிட்டத்தட்ட 20 மில்லியன் காலன் என்று கூறப்படுகிறது;  நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரை குறையாக எரிக்கப்பட்டு கங்கையில் தூக்கி எறியப்படுகின்றன - அந்த மனிதக் சடலங்கள் சொர்க்கத்திற்குப் போவதற் காக அந்த ஏற்பாடாம்!
பயன்படாத 9000 கிழட்டுப் பசுக்கள் உயிரோடு ஆண்டு ஒன்றுக்கு கங்கையில் தள்ளப்படுகின் றனவாம்! (கோமாதா, குலமாதா என்று பேசும் இந்துக்கள்தான் இந்த வேலையையும் செய்கிறார்  கள்) காசியில் 2 லட்சம் தொழிலாளர்கள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த இரசாயனக் கழிவுகள் எல்லாம் சங்கமம் ஆவதும் இந்தக் கங்கைப் புண்ணிய நதியில்தான்.
கும்பமேளா அன்னியில் நாள்தோறும் இந்தக் கங்கையில் புண்ணியம் தேடுவதற்காகக் குளிப் போரின் சராசரி எண்ணிக்கை 70 ஆயிரமாம்.
அடிக்கடி கொடும் நோய்கள் மூண்டு மக்கள் செத்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.
1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசியிலும், சுற்றுப்புறத்திலும் தொற்று நோய்ப் பற்றி ஆயிரக்கணக்கில் மாண்டு போனார்களே!
காலையில் புனித கங்கையில் முழுக்கு, இரவில் மது மாமிச விருந்து என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (19.6.2003) பட்டியல் போட்டதுண்டே!
உத்தரப்பிரதேச கோயில் நகரங்களில் எய்ட்ஸ் அச்சுறுத்தல் அதிகம் என்று தி பயனீர் (21.7.1997) விரிவாக எழுதியதுண்டே!
உண்மையிலே மக்கள் நல அரசு என்பது உண்மையென்றால் என்ன செய்திருக்க வேண் டும்? இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் அல்லவா?
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே புண்ணிய முழுக்கு போடுகிறார்கள் என்றால், இந்த நாடு உருப்படுமா?
இப்பொழுதுகூட இந்தக் கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் புண்ணிய முழுக்குப் போடப் போகிறார்களாம்.
மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான் மையைப் பரப்பும் இலட்சணம் இதுதான் போலும்!
இந்தக் கும்பமேளாவில் இன்னொரு அசிங்கம் பல்லாயிரக்கணக்கில் நிர்வாண சாமியார்கள் குளிப்பதாகும்.
எங்கு பார்த்தாலும் முழு நிர்வாணத்தோடு இந்தச் சாமியார்கள் திரிந்து கொண்டு இருப் பார்கள். இதை வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்தால் காரித் துப்ப மாட்டானா?

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் சொன்னால் ஆத்திரப்படும் ஆத்திகர்கள் இதுபற்றி எல்லாம் சிந்திக்க வேண்டாமா?
கும்பமேளாவையொட்டி ஏராளமான இளைஞர்கள் நாகா சாதுக்கள் மூத்த நிர்வாண சாமியார்கள் முன்னிலையில் தீட்சை பெற்று நிர்வாண சாமியார்கள் (நாகா சாமியார்களாக) ஆவார்களாம்.  உடல் முழுவதும் திருநீறுப் பூசிக் கொள்வார்களாம். தீட்சை பெற்றபின் வீட்டுக்குச் செல்லக் கூடாதாம். காடு, மேடுகளில் அலைந்து திரிவார்களாம்.
இளைஞர்களை இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்குப் பலி கொடுப்பதுபற்றி யாராவது சிந்திக் கிறார்களா? கருத்துத்தான் சொல்கிறார்களா?
உஷ்... பக்தி விஷயம் தலையிடக் கூடாது என்ற முட்டாள்தனத்தில் இளைஞர்களின் எதிர்காலம் அநியாயமாக பலிகடா ஆக்கப்படுகிறதே!
அர்த்தமுள்ள இந்து மதம் என்கிறார்களே, அதன் யோக்கியதை இதுதான்! வெட்கம்! மகா வெட்கம்!!
              ------------------------”விடுதலை” தலையங்கம்   1-2-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக