விஸ்வரூபம் படம், கமலஹாசன் சொல்லிக் கொள்வது போல ஒரு “ஸ்பை த்ரில்லர்” ஆக இருக்கப்போகிறதோ இல்லையோ, தற்போது தமிழகத்தில் அரங்கேறி வரும் கூத்துகள் கிட்டத்தட்ட அவ்வாறுதான் இருக்கின்றன.
படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் பதறியிருக்கிறார் அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன். நீதிபதி அதை ஏற்கவில்லை. எனவே இரவோடு இரவாக தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று, அவரைத் தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘இன்று காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.
நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.
“இத்திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.
“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இஸ்லாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.
தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.
“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.
“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.
அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.
32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே Application Of Mind  என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.
“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.
“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.
கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
பல இஸ்லாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.
நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.
000
1980 களில் ஷா பானு என்ற மண விலக்கு செய்யப்பட்ட ஏழை இசுலாமியப் பெண்மணி, ‘ஷாரியத் சட்டத்தின் கீழ் தனக்கு மறுக்கப்பட்ட ஜீவனாம்சத்தை, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கவேண்டும்’ என்று கோரினார். ஷாபானுவுக்கு ஆதரவாக அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சையது சகாபுதீன் தலைமையில் இஸ்லாமிய மதவெறியர்கள் வட இந்தியாவெங்கும் சாமியாடினர். இதனைக்காட்டி, இந்து மதவெறியை மிகச் சுலபமாகத் தூண்டியது ஆர்.எஸ்.எஸ்.
உடனே அதனை சமாளிப்பதற்கும், இந்துக்களின் வாக்குகளைக் கவருவதற்கும், பாபர் மசூதியின் கதவுகளை இந்துக்களுக்கு திறந்து விட்டார் ராஜீவ் காந்தி. அதன் பின்னர்தான் அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது.
“ஷா பானு விவகாரத்தில் முஸ்லிம் மதவெறியர்கள் வைத்த கொள்ளிதான், இந்து மதவெறியர்கள் அரசியலில் தலையெடுப்பதற்கு சாதகமாக அமைந்தது” என்பதை ஆய்வாளர் அஸ்கர் அலி எஞ்சினியர் தனது பல கட்டுரைகளில் விளக்கி கூறியிருக்கிறார்.
அதனை ஒத்த விபரீதம்தான் தமிழகத்தில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
000
பின் குறிப்பு:
இதனைப் படித்தவுடன் “நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? கமலின் கைக்கூலியே” என்பன போன்ற வசைகளை இஸ்லாமிய மதவெறியர்கள் தொடங்குவார்கள் என்பதை அறிவோம்.
இதுவரை தெரியவந்துள்ள கதையின்படி விஸ்வரூபம் ஒரு அமெரிக்க அடிவருடித் திரைப்படம். அது மட்டுமல்ல, தெற்காசியாவில் அமெரிக்காவின் புதிய அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு “கலைப் படைப்பு” என்றும் தெரிகிறது. அதாவது இந்திய ராம்போ. இதுதான் இப்படத்தில் நாம் எதிர்க்க வேண்டிய முக்கியமான விடயமாகத் தெரிகிறது.
படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்டியிருப்பதன் மூலம் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. ஒரு இந்திய முஸ்லிமை (கதாநாயகன் கமலஹாசன்) ரா உளவாளியாகவும், அமெரிக்க அடிவருடியாகவும் காட்டியிருப்பதுதான் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்டுள்ள பெருத்த அவமதிப்பு என்று எங்களுக்குத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அடியாளும், இசுரேலின் கையாளுமான சவூதி அரசுக்கு அடியாள் வேலை பார்க்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கு இப்படித் தோன்றாததில் வியப்பில்லை.
இப்போது  ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் பேசும் வசனங்கள், அவர்களுடைய சொந்த சரக்குகளா அல்லது மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டவையா என்பதை மட்டும் அவர்கள் சொன்னால் போதும்.
மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இந்த உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு யாரும் விஸ்வரூபம் படமெல்லாம் பார்க்கத் தேவையில்லை.