ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -7

 




நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...
மதவாதிகள் பதில் சொல்வார்களா?
ஈசா(யேசு)வின் பிறப்பு பற்றி மரியத்திடம் (மேரி) மலக்குகள் கூறியபோது, மரியம் கேட்டாராம் , என்னை இதுவரை எந்த ஆணும் தொட்டதில்லையே, அப்படியிருக்க நான் எப்படிக் குழந்தைக்குத் தாயாக முடியும் என்று கேட்டாராம். (சூரா 3_47). (அதற்கு) அவன் கூறினான், அப்படித்தான் அல்லா தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால் அவன் அதனிடம் ஆகுக எனக் கூறுகிறார். உடனே அது ஆகிவிடுகிறது (அதே சூரா.)
(நினைத்ததை... முடிப்பவன்... நான்... நான் என்று சினிமாப் பாடல் பாணியில் கடவுள் செயல்படுவாராம்.)
நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்) என்று கூறினார். (கூறியவர் கடவுளால் அனுப்பப்பட்ட ஜிப்ரயீல்.
அதற்கு அவர் (மரியம்) எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும் நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்? என்று கூறினார்.
அவ்வாறேயாகும். இது எனக்கு மிகவும் சுலபமானதே. மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம். இது விதிக்கப்பட்ட விசயமாகும் என்று உம் இறைவன் கூறுகிறான் எனக் கூறினார்.
அப்பால், மரியம் ஈசாவை கருக் கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தைச் சென்று அடைந்தார் (சூரா 19. 17, 1, 19, 20,21, 22).
கன்னிப் பெண்ணுக்குக் கல்யாணம் நடக்காமலே குழந்தை பிறந்துவிட்டது. இதைப் பற்றி மார்ட்டின் லூதர் (இவர்தான் லுத்தரன் சர்ச் எனும் கிறித்துவப் பிரிவுக்குக் காரணமானவர்) கூறினார்: இந்தக் குழந்தை மேரிதான் தாய் என்று நாங்கள் நம்பினால், உலகத்தாரின் முன்னால் கிறித்துவர்களாகிய நாங்கள் முட்டாள்கள் ஆவோம். இக்கதை அறிவு வாதத்திற்கு எந்த வகையிலும் ஒத்து வராதது. கர்ப்பமுற்று பல்கிப் பெருகுவீராக என்று ஆதாமையும், ஏவாளையும் வாழ்த்திய(?) கடவுள் இப்படிப்பட்ட முறையில் பிள்ளைகள் பெறுவதை எப்படி ஏற்க முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார். பதில் கிடைக்கவில்லை.
எல்லா மனிதர்களும் இறந்தபின் செத்துப் போனவர்களையெல்லாம் எழுப்பித் தீர்ப்பு வழங்குமாம் கடவுள். இந்நாளை கியாமத் நாள் என்கிறது குர்ஆன். அன்றைய நாளில் புதைக்கப்-பட்ட இடங்களிலிருந்து எல்லா பிணங்களும் எழுந்து வெட்டுக் கிளிகள் பறப்பதைப் போல் பறந்து கூடுமாம். நிற்கும் நாள், பிரிந்து நிற்கும் நாள், பகுத்துப் பிரிக்கும் நாள், விழிப்பு உணர்வு நாள், தீர்ப்பு நாள் என்று பல வகைகளைக் குர்ஆன் கூறுகிறது.
நியாயத் தராசில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்கள் எடை போடப்பட்டு சொர்க்கத்தில் நிலையான வாழ்வோ, நரகத்தில் கொடுமைகளை அனுபவிப்பதோ தீர்ப்பாகக் கூறும் கடமையைக் கடவுள் செய்யுமாம். சிலரை உயிர்ப்பித்து மீண்டும் உலவ விடுமாம். அழுகிய சதை, மட்கிய எலும்பு, வற்றிப் போன இரத்தம், அறுந்துபோன நரம்பு இவைகளைப் புதுப்பித்து உயிர்ப்பித்து நடமாடச் செய்யும் கடவுள், புதிதாக மனிதனைப் படைத்திடும் ஆற்றலை இழந்து விட்டதா?
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய அல்லா அவற்றைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான். இதில் சந்தேகமே இல்லை. எனினும் அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை என்று சூரா 17_ 99 மூலம் பதில் கிடைக்கிறது.
எனவே கியாமத் நாள் இறுதியான நாள் அல்ல என்ற முடிவுக்குத்தானே வர முடியும்?
குர்ஆன் காட்டும் வழி என்பது மனிதர்களை அச்சுறுத்தும் வழியே! தன் வழிக்கு வராதவர்களை, வேறு வழியைப் பின்பற்றுபவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறது. தன் வழியில் இருப்பவர்களையும் சாகும் வரை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டே இருக்கிறது. கடவுள் சர்வசக்தி படைத்த எஜமானாகவும் மனிதன் தினம் தினம் பயத்தினால் மடிந்து கொண்டே இருக்க வேண்டியவனாகவும் இசுலாத்தின் மதக் கொள்கையும் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன என்று சர். ஹாமில்டன் கிப் குறிப்பிட்டது இங்கே கவனிக்கத் தக்கது.
அருளாளன் எனப் புகழப்பட்டாலும் குறிக்கப்பட்டுள்ள தண்டனைகளைப் பார்க்கும் போது, அதற்குத் தகுதியற்ற ஆளாகவே, கடவுள் தென்படுகிறது. அச்ச உணர்வு ஒழுக்கச் சிதைவை ஏற்படுத்துகிறது. திருட்டுக்கு வலது கையை வெட்டு, இரண்டு முறை திருடினால் இடது பாதத்தை வெட்டு என்கிற தண்டனை காட்டுமிராண்டி காலத்தை நினைவு படுத்துகின்றது. கடும் தண்டனையினால் குற்றம் தொடர வாய்ப்பு இருக்காது என வாதம் செய்தால் இரண்டாம் திருட்டுக்கு தண்டனை மூன்றாம் திருட்டுக்குச் சிறைத் தண்டனை என விதித்திருப்பது எப்படி எனக் கேட்டால்... என்ன பதில் கூறுவார்கள்?
------------------------- சு. அறிவுக்கரசு அவர்கள் 11-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக