வெள்ளி, 14 அக்டோபர், 2011

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா




எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் ஆணாதிக்க மதமே. அதன் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் அதை தக்கவைக்கும் விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பெண்களை கண்ணியப்படுத்துவதாக கூறப்படும், இஸ்லாமிய ஆணாதிக்கத்தின் குறியீடாக இருக்கும் புர்கா கலாச்சாரத்தை கொண்டே இதை பார்க்கலாம்.

புர்கா, பர்தா, துப்பட்டி, ஹிஜாப் என்று பலவிதங்களில் அழைக்கப்படும் பெண்களுக்கான மேலதிக ஆடை தமிழ்ச் சூழலில் 80களுக்கு முன்பு வெகு சில ஊர்களில் மட்டும் மரபாக இருந்தது. கடுங்கோட்பாட்டுவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கியதன் பின்னர் தற்போது அனைத்து இடங்களிலும் இந்த ஆடைமுறை இஸ்லாமியப் பெண்களின் மீது ஒரு உறுப்பாகவே படிந்து விட்டது. எந்த அளவுக்கு இந்த ஆடை பெண்களுக்கான கண்ணியமாக இஸ்லாமியர்களால் திணிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. இதை இஸ்லாமியர்கள்  இரண்டு விதங்களில் எதிர்கொள்கிறார்கள். ஒன்று. புர்காவை மறுப்பவர்கள், மேற்குலகின் ஆகக் குறைந்த ஆடை அணிவதையே சுதந்திரமாக கொண்டிருக்கும் போக்கிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது. இரண்டு, புர்காவை மறுப்பவர்கள், பெண்களுக்கு வேறு என்ன அளவில் ஆடை அணிய வேண்டும் என்பதை வரையறுத்திருக்கிறார்களா? என்பது.

பெண்களுக்கான இந்த மேலதிக ஆடைய அணியச் செய்வதற்கு கூறப்படும் காரணம், ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களை காக்கும் என்பது தான். பெண்ணுக்கு எதிரான பாலியல் மீறல் என்பது ஆணின் குற்றம். ஆண் செய்யும் இந்த குற்றம் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெண் மேலதிக கருவிகளுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சாரம்சத்தில் பெண்ணை சக மனிதப் பிறவியாக எண்ணாததன் வெளிப்பாடு தான். எவ்வாறெனின், குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களிடமே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. உடலுறுப்புகள் வெளித்தெரியும்படி ஆடையணிவது ஒரு ஆணை பாலியல் குற்றத்திற்கு தூண்டும் எனக் கூறி குற்றத்தின் பங்களிப்பை பாதிக்கப்படும் பெண்களிடமும் பகிர்வது.

பொதுவாக பாலியல் உறவு என்பது இருபாலாரும் விரும்பி ஈடுபடுவது. மனைவியாயியினும், வேறு பெண்களாயினும்; முழுவதுமாக மறைத்துக் கொண்டிருந்தாலும், நிர்வாணமாக இருந்தாலும் அவளை வற்புறுத்துவது ஆணுக்கு உரிமையல்ல. ஒரு ஆண் மேலாடையின்றி இருந்தான் என்பதால் அவன் முதுகில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு; சுவரொட்டி ஒட்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நீ முதுகை மறைத்திருப்பது உன்னுடைய கடமை என்றால், அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் தங்களை கவசமிட்டு மறைத்துக் கொள்ள வேண்டுமென்பது.

பணமோ, பொருளோ திருடப்படாமல் தடுக்க வேண்டுமென்றால் அதை பெட்டியில் பூட்டிவைத்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் போல் பெண்களையும் பார்த்தால்; பணத்தின், பொருளின் மதிப்பு அதன் பரிமாற்ற பயன்பாட்டில் இருப்பதைப் போல் பெண்களின் மதிப்பு அவர்களின் பாலியல் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டவர்களாவார்கள். பெண்கள் சக பிறவிகள் இல்லை, பாலியல் பண்டம் தான் எனக் கூறுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, கடவுளோ, மதமோ, வேதமோ எதற்கும் உரிமையில்லை.

இஸ்லாம் ஆண்களுக்கு ஆடைவரம்பு விதித்திருப்பதைப் போல், பெண்களுக்கும் விதித்திருக்கிறது இதில் அடிமைத்தனம் ஒன்றுமில்லை என்பது முஸ்லீம்களின் பிரபலமான வாதம். இது உண்மையா? குரான் 24:30,31 இப்படி குறிப்பிடுகிறது.

மூமீன்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்….. இன்னும் மூமீன்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று தெரியக் கூடியதைத் தவிர வெளிக் காட்டலாகது. இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தம் கணவர்கள், தம் தந்தையர்கள், தம் கணவர்களின் தந்தையர்கள், தம் புதல்வர்கள், தம் கணவர்களின் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் பெண்கள், தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர தங்கள் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது……

இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன, முஸ்லீம்கள் கூறுவது போல் ஆண்களுக்கான ஆடை பெண்களுக்கான ஆடை என்று வரையரை செய்வதாக இல்லாமல் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளுடன் குறிப்பிட்ட சில ஆண்களை தவிர ஏனைய ஆண்களுக்கு முன் வரக்கூடாது என்பதையே அந்த வசனம் குறிக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் உடலுறுப்புகளை மறைத்து என்ன ஆடை உடுத்தியிருந்தாலும் அந்த ஆடை அலங்காரங்களுடன் அவற்றை மறைத்துக் கொண்டே வெளிப்பட வேண்டும். இது ஆடை சார்ந்த விசயமா? அடிமைத்தனம் சார்ந்த விசயமா?

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப, உடலை முழுவதும் மறைக்கக் கூடிய சுடிதார் போன்ற ஆடைகளும் ஹிஜாப் போன்றது தான் என்று முஸ்லீம்கள் வைக்கும் வாதத்தையும் மேற்கண்ட வசனம் தகர்த்து விடுகிறது. ஆக உடலை முழுவதும் மறைக்கக் கூடிய எந்த ஆடையாக இருந்தாலும் அது அலங்காரமாகவும் இருப்பதால் அதை மறைக்கும் படியாக மேலதிக ஆடையுடன் தான் பொது இடங்களுக்கோ, அன்னியர்களுக்கு முன்போ வரவேண்டும் என்பது தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. இது ஆண்களுக்கு இல்லை.

முகத்தையும் முன்கைகளையும் தவிர ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்ளுங்கள் எனும் ஹதீஸை பெண்களின் ஆடைகளுக்கான வரம்பாக காட்டினாலும், முகத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் குரான் வசனங்கள், ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

நபியே நீர் உம் மனைவிகளுக்கும்,உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக…….. குரான் 33:59

இந்த வசனம் வந்த சூழலை புஹாரி 146 துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கழிப்பிடம் நாடி திறந்த வெளிகளுக்கு இரவு நேரங்களில் பெண்கள் செல்வார்கள். முகம்மதின் மனைவியருள் ஒருவராகிய ஸவ்தா அவ்வாறு வெளியில் செல்கிறார். அப்போது முகம்மதுடன் அமர்ந்திருக்கும் நண்பரான உமர் ஸவ்தாவே உங்களை அடையாளம் தெரிந்து கொண்டோம் என்கிறார். முக்காடிடுவது குறித்த வசனம் இறங்க(!) வேண்டுமென்பதற்காக சப்தமிட்டு இவ்வாறு கூறுகிறார்.அப்போது தான் மேற்கூறிய வசனம் இறங்குகிறது. இந்த ஹதீஸை அறிவிப்பவர் முகம்மதின் இன்னொரு மனைவியான ஆயிஷா. ஸவ்தா முகம்மதின் மனைவியரில் உயரமானவர் எனவே இங்கு முகத்தை மறைப்பது பற்றியே கூறப்படுகிறது என்பது உறுதியாகிறது. ஆக பெண்கள் தங்கள் பாலியல் அங்கங்களை மறைக்கும் வழமையான ஆடைகளால் உடுத்திக் கொள்வது போதாது. ஆடைக்கு மேலாக முகம் உட்பட அனைத்தையும் மறைத்துக் கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் முடிவு. இதை தற்போதைய நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு ஆடைகளையே ஹிஜாபாக கொள்ளலாம் என்றும், முகத்தை மறைப்பது முக்கியமில்லை என்றும் சமரசம் செய்து கொள்கிறார்கள்.

புர்கா குறித்த பிரச்சனை எழுப்பபட்டால், ஆண்களின் அளவைவிட பெண்கள் அதிகமாக ஆடை அணிய வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள், இதற்கு இஸ்லாம் ஒரு அளவை நிர்ணயித்திருக்கிறது. இதை ஏன் விமர்சிக்க வேண்டும் என்பது போல் திசை திருப்புவார்கள். இங்கு பிரச்சனை ஆடையின் அளவு அல்ல. போதுமான அளவு ஆடை அணிந்திருந்தாலும் அதையும் மறைத்துக் கொண்டு தான் அன்னியருக்குமுன் அல்லது வெளியில் வரவேண்டும் என்பது தான். இதுமட்டுமன்றி புர்கா அணிந்து கொண்டு வாழும் பெண்களின் மூலம் அது தங்களுக்கு படிப்பதற்கோ, வேலை செய்வதற்கோ, பொது இடங்களுக்கு சென்று வருவதற்கோ எந்தவித இடையூறும் இல்லை என்றும், அதை ஆணாதிக்கமாக நாங்கள் கருதவில்லை என்றும் பதில் கூறச் செய்து அதனைக் கொண்டும் இதை எதிர் கொள்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு புர்கா அணியும் பெண்களுக்கு அது இடையூறாக இருக்குமா? அவர்கள் அதை ஆணாதிக்கமாக கருதுகிறார்களா என்பதெல்லாம் இங்கு பிரச்சனை இல்லை. இதை நாங்கள் மதச் சடங்காக அணிகிறோம் என்றால் அதில் விமர்சனத்திற்கு இடம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெண்களுக்கு கண்ணியம் தரும் ஆடை, பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கிறது என்று கூறுவது தான் பிரச்சனை.

பாலியல் வரம்புமீறல்கள் ஒரு குற்ற நடவடிக்கை. ஆண்களின் அந்த குற்ற நடவடிக்கைக்கு தனியுடமையே காரணமாக இருக்கிறது. ஆணாதிக்கமும் தனியுடமையும் இணையும் புள்ளியிலிருந்து தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடக்கம் பெறுகிறது. ஆனால் இஸ்லாம் இந்த அடிப்படைகளை காண மறுக்கிறது. பாலியல் குற்றங்களை தனிப்பட்ட குற்ற நடவடிக்கையாக காணும் அதேநேரம் அந்தக் குற்றத்தில் பெண்களையும் இணைக்கிறது. இந்த குற்றங்களுக்கு தீர்வாக புர்காவை முன் தள்ளுகிறது, அதுவும் ஆணின் பலதார வேட்கையை சட்டமாக அங்கீகரித்துக் கொண்டு. அதாவது ஆணின் காமப்பசிக்கு நான்கு மனைவிகள் கூடுதலாக வேண்டிய அளவுக்கு அடிமைகள் என்று அனுமதியளித்துவிட்டு அதற்கு எதிராக பெண்களை புர்காக்களுக்குள் மறைந்து கொள்ள உத்தரவிடுகிறது. இதை ஆணாதிக்கம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

ஆண்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புர்கா பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா?  ஒரு பாலியல் குற்றத்தை நிகழ்த்தும் துணிவுடனும், சமூகப் பாதுகாப்புடனும் ஆண் இருக்கும்போது அதற்கு எதிராக பெண்ணின் கவச ஆடை என்ன சலனத்தை நிகழ்த்திவிட முடியும்?  சுட்டுவிரல் நகம் தெரிந்தாலும் அதையும் பாலியல் நுகர்வோடு அணுக சமூகம் ஆணை அனுமதிக்கும் போது ஒரு ஆடை அதற்கு எதிராக என்ன செய்துவிட முடியும்? தன்னின் எந்தப்பகுதி வெளிப்பட்டு ஆணின் பார்வையில் கிளர்ச்சியை தூண்டுமோ என்னும் பதைப்பையே இந்த ஆடைகள் பெண்களுக்கு வழங்குகிறது. அது மேலும் மேலும் ஆணின் காமப் பதுமையாக பெண்ணை மனதளவில் இருத்தி வைக்கிறது.

பாலியல் குற்றமென்பது பார்வையோடு மட்டும் தொடர்புடையதல்ல. பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க் கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக் கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌து போல் தைத்துக் கொள்ள‌  வேண்டும் என‌த் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

அல்லாவின் பெயரை உச்சரிக்கக் கேட்டுவிட்டால் முஸ்லீம்கள் அடையும் புளகம் சொல்லி மாளாது. எல்லாம் அறிந்த, எக்காலமும் அறிந்த கடவுளின் பார்வை பெண்களின் விசயத்தில் இவ்வளவு மட்டமாக இருக்க முடியுமா? ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆணாதிக்கம் மிகுந்த ஒரு சராசரி மனிதனின் பார்வையைத் தாண்டி இஸ்லாத்திலோ, குரானிலோ ஒன்றுமில்லை என்பதற்கு இந்த புர்காவை விட வேறு சான்று ஒன்றும் தேவையில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக