ஞாயிறு, 30 அக்டோபர், 2011

புத்தர் ஒரு நாத்திகர்

 

புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாத்திகர். புத்தருக்கு முன்பும் நாத்திகர்கள் இருந்துள்ளனர். புத்த மதம் ஒரு மதமுமல்ல. புத்தரை ஆத்தி கர், தேவர் என்று யாராவது கூறுவார் களாயின் அவர்கள் மன்னிக்கவியலாத தவறு அல்ல _ குற்றம் செய்தவர் ஆவார்.

புத்தர் அன்றைய நாளிலேயே பார்ப்பனத்துவேஷி ஆரியப்பகைவர் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் என்று கூறிப் பார்ப்பனத் திருக்கூட்டம் புத்தரைத் தங்கள் பஜனை கோஷ்டியில் சேர்த்துவிட்டது. ஒரு சதிவலையின் பின்னல் விஷ்ணு அவதாரம் புத்தர் என்றால், பார்ப்பனருக்கு உறுதுணை யாக இருக்கவேண்டுமேயன்றிப் பார்ப்பனப் பகைவராய் இருக்க முடியாது என்கிறார் ஈ.பி. ஹாவெல்.

மறுபிறவி, மோட்சம், ஆத்மா உண்டு எனும் கொள்கை, இறை பக்தி இல்லாத புத்தரை இவற்றையுடையவர் என்று கூறுவது மிலேச்சத்தனமாகும் என்பர் நல்லறிஞர்.
புத்தர் புகன்றவை மதக் கோட் பாடுகளா? வழிபாட்டு வழிமுறைகளா என்றால் _ இல்லை _ இல்லவே இல்லை. அவை நன்னெறிகள். அவை கற்றுத் தெளியப்பட்டு அன்றாட வாழ்வில் கைக்கொள்ளப்பட வேண்டிய அன்றாட நடவடிக்கைகள்.

அறத்தை ஆழ்ந்து கற்கவேண்டும். கற்றபின் அதற்கும் மேலாகப் பட்டறிவில் உணர்ந்து பட்டறிவில் நுகரவேண்டும் தன் அனுபவம் எனும் தன் பட்டறிவுதான் அதனுடைய முடிவு. அந்த அறிவு ஆற்றைக் கடக்கப் பயன்படும் படகு, கடலைக் கடக்கப் பயன்படும் கப்பல். அந்த நெறி என்றும் கொள்ளப்படும் _ என்றும் தள்ளப்படா நெறி.

ஆராதனை, அகல்விளக்கு, கற்பூரம் ஏற்றிப் பூசை, பக்தி என்பனவெல்லாம் கொள்ளாத அமைப்பு -_ இயக்கம் _ கூட்டம் _ சங்கம்தான் பவுத்தம். தந்தை பெரியார் இன்று கூறிவந்ததைத் தம்மைப் பின்பற்றுகிறவர் களைக் குருட்டுத்தனமாக நம்பிக்கையும், பக்தியும், பின்பற்றலும் மேற்கொள்ள ஒருபோதும் பவுத்தம் கூறியதில்லை.

குருட்டு நம்பிக்கையை ஒழித்து, அறிவை அடிப் படையாகக் கொண்ட உறுதியைக் (சந்தா) கொள் ளும்படி தான் பவுத்தம் போதிக்கிறது.

உய்த்துணர்ந்தறிவது அதாவது சம்மாதிட்டி என்பது பவுத்தத்தின் தொடக்கக் கொள்கை.
பவுத்தம் பகுத்தறிவையே அடிப்படையாக ஏற்றுள்ள கோட்பாடு.

பவுத்த நெறிப்படி பவுத்தர் சிலை வணக்கம் செய்தல் கூடாது. பவுத்தர் புத்தரின் சற்குணங்கட்கும் அரசமரத்திற் கும் வணக்கம் செலுத்தத் தேவையில்லை. மனத்தை ஒருமுகப்படி அடக்க வல் லார்க்கு இவை தேவையில்லை சிந் தனையை அடக்கி நிறுத்திப் பகுத்தறியக் கூடிய அறி வாளிகட்கு வெளிப்படை யான வணக்கங்கள் வேண் டியதில்லை. பவுத்தத்தில் வேண்டுதல்கள் விண்ணப் பங்கள், பிரார்த்தனைகள் எல்லாம் கிடையாது.

பவுத்தரின் வழி அய்யா வலியுறுத்து வது ஒழுக்கமே. அதனையே பவுத்தமும் முதற்படியாக வலியுறுத்துகிறது. இதனை ஸிகாலோ வாத ஸுத்த வியக்க பஜ்ஜ ஸுத்த, மங்க ஸுத்த முதலிய நூல்கள் வாயிலாக அறியலாம். எனவே பவுத்தம் மதமல்ல; அஃது ஒரு சத்திய உபதேசம் அல்லது ஒழுக்க நெறி.

நால்வகை வருணம் _ நாலாயிரம் ஜாதிகள் என்று எண்ணற்ற ஆரியர் விதைத்த ஜாதி எனும் நச்சு மரத்தையும், அடிமைத் தொழிலையும் முதலில் ஒழித்தவர் புத்தர்தான்.

ஜாதி ஒழியவேண்டும் என்றார் புத்தர். ஏன்? பெண் ஒருத்தியிடம் _ தாழ்ந்த குலத்தவள் என்று தனித்துக் காட்டப்பட்ட பெண்ணிடம், பருகிட நீர் கேட்டார் பகவான் புத்தர். உயர்ந்த குலம் எனப்பட்ட புத்தருக்கு தாழ்ந்த குலப்பெண் தண்ணீர் அளிப்பது தகுமா? எனத் தறிகெட்ட உலகம், நெறி கெட்டுப் பேசுமே எனத் தயங்கினாள் அப்பெண். புத்தர் அப்பெண்ணின் தயக்கம் போக்கித் தனக்கு ஜாதி வேண்டாம், தண்ணீர்தான் வேண்டும் என்றதை வரலாறு பதிந்து வைத் துள்ளது. இது மட்டுமா?

ஓடும் உதிரத்தில் வடிந்தொழுகும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும் ஜாதி தெரிவதில்லை என்ற புத்தர், இடை ஜாதி இளைஞரிடம் பால் வாங்கிப் பருகினார்.

பிறர் தனக்குத் தந்த திட்டுகளையும், தட்டுகளையும், தொல்லைகளையும் எவன் பொறுத்துக் கொள்கிறானோ, பொறுமையே எவனுக்கு வலிமையோ அவனையே நான் அந்தணன் என்கிறேன். தாமரையிலையின் மேல் நீர்போல இவ்வுலகத்து இன்பங்களோடு ஒன்றாதவன் எவனோ அவனை நான் அந்தணன் என்கிறேன்.

பிறப்பினாலே எவனும் பிரா மணனோ அப்பிராமணனோ ஆவ தில்லை; செயலினாற்றான் ஒருவன் பிராமணன் ஆகிறான். இன்னொருவன் அப்பிராமணன் ஆகிறான். அச்சைச் சார்ந்தே தேர் ஓடுவது போல் உயிர்கள் யாவும் தங்கள் செயலையே சார்ந்திருக் கின்றன என்று சரியாக அறிவுறுத்திய பகுத்தறிவுவாதி அவர்.

புத்தருக்கு ஆன்மா, ஆத்மா எனும் எதிலும் நம்பிக்கை கிடையாது. என்றும் அதனை நம்பியதோ, ஏற்றுக்கொண் டதோ கிடையாது. இது போதும் அவர் முதல் நாத்திகர் என்பதற்கு.

வாய் வேதாந்தம் பேசவில்லை, வறட்டு வேதாந்தம் பேசவில்லை. செயல் வழி காண்பித்த பகுத்தறிவுச் செம்மல் புத்தர்.

உபாலி எனும் முடி திருத்துவோ னையும் (பிக்குக் குழுத் தலைவன்) ஸீனிதன் எனும் தோட்டியையும், அங்குவிழாவன், ஆலைகன் எனும் சண்டாளரையும் தன் குழாத்தில் சேர்த்துப் பார்ப்பனரின் தலையில் ஓங்கி. அடிவிழச் செய்தார்.

ஆரிய மிலேச்சர்கள் அன்பு புத்தரை ஸ்திரீதுவேஷ என்று குறை கூறவும் தான் செய்தனர். பஜாபதீ கோதமை என்பவரின் வேண்டுகோள் பொருட்டுப் பிக்குணி _ பெண் துறவியர் மன்றத்தை நிறுவிய புத்தரா ஸ்திரீதுவேஷி?

கேமை, உப்பவ வண்னை எனும் பெண்டிரைத் தம் மாணவியராக ஏற்றுப் பெண்மை போற்றும் கோட்பாட்டிலும் முன் வரிசையில் நிற்கிறார் புத்தர். கோசல நாட்டரசனுக்குப் பெண் சேய் பிறந்தது.

அரசனுக்கோ ஆண்சேய்தான் வேண்டுமென்ற தணியாத ஆவல். அவனிடம் பெண் குழவி ஆண் சிசுவை விட மேலானதாக விளங்கக் கூடும் என்று அறிவுறுத்தியவர் புத்தர்.

ஆரியர்களின் வேள்விகள், அந்த ணரின் சடங்குகள், ஓம குண்டங்கள் ஒரு பயனும் விளைவிப்பவை அல்ல, அவற்றினால் பயன் ஏதும் இல்லை என்று துணிவுடன் பகன்றவர் இந்தத் தூய ஞானி.

திரி பீடகத்திலும் அதன் பிரிவாகிய சூத்திர பீடத்திலும் உலகக் கட்டுகளை யெல்லாம் விடுத்து, எந்தத் துன்பத்துக் கும் அஞ்சாதவன், எதிலும் பற்றுக் கொள்ளாதவன் எவனோ அவனையே அந்தணன் என்று அந்தணனுக்குப் புத்தர் அளித்த விளக்கம்தான்.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்
எனத் திருவள்ளுவரின் குறளிலும் எதிரொலிக்கிறது.

அதைப் பற்றிக் கூறியவருமில்லை ஒரு சமயம் மாலுங்கிய புத்தர் என்பான் என் உடலும் ஆன்மாவும் ஒன்றா -_ வேறுபட்டதா?என்று புத்தரி டம் வினவினான். புத்தர் அதற்குப் பதிலளிக்கையில், நான் இவ்வாராய்ச் சியில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் அதனால் மனித இனத்துக்கு நன்மை உண்டாவதில்லை நான் நான்கு வாய்மைகளைப் பற்றிக் (ஆர்யசத்யாஸ் Four Noble Truth) கூறியுள்ளேன்; தோழரே! நான் சொல்லாதவற்றைப் பற்றிப் பேசாதீர்கள். நான் எவற்றை விளக்கியிருக்கிறேனோ அவையே விளக்கத்துக்கேற்றவை எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பதில் கூறினார். இந்த விளக்கத்தினை நிதான சம்யுத்தம் ஸூத்தம் 5_பக்கம் 2 இல் காணலாம்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர் புத்தர். அவருக்குக் கடவுள் நம்பிக்கை என்பது இல்லவே இல்லை. உலகில் காணப்படுகிற அனைத்தும் பொறுப் பற்ற விதமாய் படைக்கும் கடவுள் ஒருவர் விதித்த கட்டளையா? இங்குக் காணப்படுகிற தார தம்மியங்களை, அநியாயங்களை நீதியும், பரம காருணியமும் உள்ள மாம் பிதாவாகிய ஒரு கடவுளின் செயல் என்று கூறுவது சரி என்று நம்பக்கூடாது.

அவர் நித்தியமாயும், எங்கும் நிறைந்தவராயும், முழுமுதற் பொருளாகவுமிருந்தால் அவர் எக்காலத்திலும் எல்லா விடங்களிலும் திடீரென்று எல்லா தர்மங்களையும் உண்டாக்க வேண்டும். ஒருவன் செல்வனாகவும், மற்றவன் வறியனாகவும் ஏன் விளங்கவேண்டும்? இவ்வாறு படைத்திருப்பது கடவுள் நியாயம் உள்ளவர் என்பதைக் காட்டு கிறதா?

உலகெங்கும் இந்த ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றமையாலே அவரைச் சமநோக்கம் உள்ளவர் என்று கூறமுடியுமா? எல்லாப் பொருள்களை யும் கடவுள் படைத்தார் என்று கூறப் படுகிறது. அப்படியானால் கடவுள் நன் மையையும், தீமையையும் படைத்தார் எனல்வேண்டும். கடவுள் எல்லாவற் றையும் பார்க்கிறவர் என்றும், எல்லாம் தெரிந்தவர் என்றும் கூறப்படுகிறது.

நம்மைப் படைத்தபோது நமது எதிர்கால நிலையைக் கடவுள் அறிவார். அவ்வாறாயின் குற்றவாளிகளையும், கொலை பாதகர்களையும் இவர்கள் போன்ற விரும்பத்தகாதவர்களையும் கடவுள் ஏன் படைத்தார்? அவர் எல்லாம் செய்ய வல்லவர் என்றால் தொற்று நோய்களையும், ஒட்டுவா ரொட்டு நோய்களையும், நிலநடுக்கங் களையும், வெள்ளத்தையும் அவரால் தடைசெய்ய முடியும். முடியாதபடியால் அவர் எல்லாம் செய்ய வல்லவர் அல்லர் என்பது தெளிவு.

அவர் கருணையுடை யவர் என்றால் உலகினைத் துன்பமும் இன்பமும் இல்லாதபடி செய்ய வேண்டும். இவ்வுலகத்தில் துக்கம் இருப்பதால் அவர் கருணையுடைய வரல்லர் என்பது தேற்றம். ஆதலால் உலகைப் படைத்த கடவுள் ஒருவர் உண்டு என்பது கற்பனை. கடவுள் ஒருவர் தேவையில்லை.

மனிதனைக் கடவுள் உண்டாக்கினார் என்றால் அக்கடவுள் தோன்றியதற்கும் காரணம் வேண்டும். அக் கடவுளின் குணங்கள் நம்மால் அறிய முடியாதவை என்றால் அவரைப் படைப்புக் கர்த்தர் எனவும் கற்பிக்கவும் முடியாது. (அங்குதார நிங்காயம் திக நிபாதம்)
இதைவிட 2500 ஆண்டுகளுக்கு முன் கடவுளை, கடவுள்கோட்பாடை விமர் சித்த ஒருவர் உலகில் இருக்கவே முடி யாது. இப்போது சொல்லுங்கள் புத்தர் எவ்வளவு தலை சிறந்த நாத்திகர் என்று.

கடவுளோடு புத்தர் நிறுத்திக் கொள்ளவில்லை, மோட்சம், நரகம் என்று விடும் கப்சாக்கள், கதைகளுக்கு ஆப்பு வைத்துவிடுகிறார்

மறுபிறப்பு என்பதற்குப் புத்தர் அளிக்கும் விளக்கமும் ஒவ்வொருவரும் உணர்ந்து சிந்திக்கத்தக்கது.

இன்ப உணர்ச்சி காமம் உள்ள பெண்ணும், ஆணும் கூடுங்காலை இருவருக்கும் படிசந்தி விஞ்ஞானம் (இணைப்புணர்ச்சி) ஏற்பட்டுப் பெண்ணுக்கு உயிரின் அங்கிசம் (கரு) உண்டாகிறது. இணை உருவமாகவும் தோன்றுகின்றவையும், மறைகின்றவை யும் ஆகிய செயல்கள் காமத்தினுடைய ஆற்றலால் ஏற்படுகின்றன. ஒரு மன உணர்ச்சி இன்னொரு மன உணர்ச் சியை ஏற்படுத்துகிறது. புதிய மன உணர்ச்சி அதை உருவாக்கிய பழைய மன உணர்ச்சியில்லை. அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதுமன்று இது தான் மறுபிறப்பிற்குப் புத்தரின் விளக்கம்.

புத்த சமயம் என்றால் ஒருவர் மனதில் நிழலாடுவது நிர்வாணம் எனும் சொல். இதை மோட்சம் என்று பலர் தவறாகப் பொருள் புரிந்து கொள்கிறார்கள்.

புத்தரே நோய்களில் கொடிய நோய் பசி. உடலின் தேவைகள்தாம் பெருந் துன்பங்கள். இதை நன்கு உணர்வதே பேரின்பம். அதுதான் நிர்வாணம் என்று நிர்வாணம் என்பதற்குப் பவுத்தத்தில் என்ன பொருள் என்று விளக்கமளிக் கிறார் புத்தர். நிர்வாணம் என்பது ஒரு சொல் போலத் தோன்றினாலும் அது ஒரு சொல் அன்று.

அச்சொல்லை நிர்+வாணம் என்று பிரிக்கின்றனர்.

வாணம் என்றால் ஆசை என்று பொருள். நிர் என்றால் இன்மை என்பது பொருள். ஆக நிர்வாணம் என்றால் ஆசையின்மை என்பது பொருள்.

புத்தருடைய போதனைகள் புத்தர் வலியுறுத்தியவை நான்கு சத்தியங்கள் எனப்படும் ஆர்ய சத்தியங்கள், அஷ்டாங்கித மார்க்கம் எனப்படும் எண்வழிப்பாதை, மத்ய மாபாத் எனப்படும் பத்துக் கட்டளைகள்.

_ இவைதாம் புத்தரின் போதனைகள். இதில் கடவுள். ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம், தான, தர்மப் பலன் ஏதும் கிடையாது.

ஆனால், புத்தர் தம் சொற்பொழிவு களில் ஆரியக் கருத்துகளால் பார்ப் பனரைக் கடுமையாகச் சாடினார். புத்தர் ஆரிய அல்லது பார்ப்பன எதிர்ப்பாளர் _ ஜாதி மறுப்பாளர் _ எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுள்கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்.

பின்னால் வந்தவர்கள் புத்தரைக் கடவுளாக்கி, விஷ்ணுவின் அவதாரமாக் கிச் சடங்குகளைச் செய்து புத்தத்தைச் சமயமாக்கி விட்டார்கள்.
----பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக