வியாழன், 20 அக்டோபர், 2011

புத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்



அமெரிக்காவில் இரண்டாயிரம் பவுத்த நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தில் மூன்று லட்ச ரூபாய் செலவில் பவுத்த விகார் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும்கூட மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் பவுத்த நிறுவனங்கள் உள்ளன. புத்தரின் கொள்கைகள் காலத்தால் அழிக்க முடியாதவை. இது கடவுளின் மதம் என்று புத்தர் ஒருபோதும் சொன்னதில்லை. புத்தர் தனது தந்தையை சாதாரண மனிதர் என்றும், தாயை சாதாரண பெண்மணி என்றும் கூறியுள்ளார். நீங்கள் இதை உணர்ந்தால் இம்மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்களுடைய பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருந்தால், நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இத்தகைய பெருந்தன்மை எந்த மதத்திலும் இல்லை.

பவுத்தத்தின் உண்மையான அடித்தளம் என்ன? புத்தரின் மதத்திற்கும் பிற மதத்திற்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. பிற மதங்களில் எந்த மாற்றங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில், அம்மதங்கள் எல்லாம் மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவை சொல்லுகின்றன. இயற்கையை உருவாக்கியது கடவுள்தான் என்று பிற மதங்கள் கூறுகின்றன. வானம், காற்று, நிலவு, சூரியன் என அனைத்தையும் கடவுளே உருவாக்கியதாக அவை கூறுகின்றன. நாம் எதையும் செய்யத் தேவையில்லாத வகையில் கடவுளே எல்லாவற்றையும் செய்துவிட்டார். எனவே, நாம் கடவுளை வணங்க வேண்டும்.

கிறித்துவ மதத்தின்படி, இறந்த பிறகு தீர்ப்பு சொல்லும் நாள் வரும். அந்தத் தீர்ப்பைப் பொறுத்து தான் எல்லாம் அமையும். பவுத்த மதத்தில் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் இடமில்லை. புத்தர் சொன்னார் : உலகம் முழுவதும் துன்பம் நிறைந்துள்ளது. 90 சதவிகித மக்கள் துன்புறுகின்றனர். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை துன்பத்திலிருந்து விடுதலை செய்வதற்கு முக்கிய காரணியாக பவுத்த மதம் இருக்கிறது. புத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்? புத்தர் எதையும் சுற்றி வளைத்துச் சொல்லவில்லை. சகோதரர்களே! நான் சொல்ல விரும்பியவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்து வகையிலும் பவுத்த மதமே முழுமையானது. இந்து மதத் தத்துவத்தின்படி நீங்கள் புத்துணர்வை உருவாக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்றுவரை ஒரு பட்டதாரியையோ, படித்தவரையோகூட இந்த சமூகம் உருவாக்கவில்லை.

மாரத்தா என்ற ஒரு பெண்மணி எங்களுடைய பள்ளியில் பெருக்குவார். அவர் என்னைத் தொட்டதில்லை. என்னுடைய தாய் மூத்தவர்களை மாமா என்று அழைக்கும்படி சொன்னார். நான் அஞ்சல்காரரை மாமா என்று அழைத்தேன். நான் குழந்தையாக இருந்தபோது பள்ளியில் தாகத்தால் தவித்தபோது என்னுடைய ஆசிரியரிடம் கூறினேன். அந்த ஆசிரியர் கடைநிலை ஊழியரை அழைத்து என்னைப் பாதுகாப்பாக குழாயின் அருகில் அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார். நாங்கள் குழாய் அருகில் சென்றோம். அந்த உதவியாளர் குழாயைத் திறந்தார். நான் தண்ணீர் குடித்தேன்.

பள்ளிக்கூடங்களில் பொதுவாக எனக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் அந்தப் பணியில் சேர விரும்பவில்லை. நான் அந்த வேலையில் இருந்தால், என்னுடைய சகோதரர்களை இந்த மாபெரும் பணிக்கு அழைத்துவர முடியாமல் போய்விடும்.

ஒரு தனி மனிதனாகப் பார்த்தால், இந்த நாட்டில் என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால், உங்கள் தலைமேல் உள்ள வைசியர், சத்ரியர் மற்றும் பார்ப்பனரை எப்படி கீழே வீழ்த்துவது என்பதுதான் என் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. எனவே, இம்மதத்தின் கொள்கைகளை உங்களுக்குச் சொல்லுவது என்னுடைய கடமை. நான் எழுதக் கூடிய புத்தகங்கள் மூலம் உங்களுடைய அனைத்து வகை சந்தேகங்களையும் தயக்கங்களையும் போக்கி விடுவேன்.

எனவே, அது வரையிலாவது என் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய நடவடிக்கை, மற்ற மக்கள் உங்கள் மீது மரியாதை வைக்கும்படி இருக்க வேண்டும். நம் கழுத்தில் ஏதோ கடிவாளம் போட்டதாக நீங்கள் இம்மதத்தை நினைக்க வேண்டாம். பவுத்த மதத்தை சிறப்பான முறையில் பின்பற்ற முடிவெடுப்போம். மகர் மக்கள் புத்த மதத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று பெயர் எடுக்காத வண்ணம் நாம் உறுதியுடன் செயல்படுவோம். இதை நாம் நிறைவேற்றிவிட்டால், இந்த நாட்டை, ஏன் இந்த உலகையே நாம் ஆட்கொள்வோம். ஏனெனில், பவுத்த மதமே உலகைக் காப்பாற்றும். நீதியற்ற உலகில் அமைதி நிலவ முடியாது.

நாம் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புதிய பாதை முழுக்க முழுக்க பொறுப்புகளையுடையது. இளைஞர்கள் நாம் மேற்கொண்ட சில தீர்மானங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும். அவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிடக் கூடாது. நம்முடைய வருமானத்தில் இருபதில் ஒரு பகுதியையாவது நாம் அளிக்க முன் வர வேண்டும். நான் உங்கள் அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த மதத்தைப் (பவுத்தம்) பரப்புங்கள்.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக