திங்கள், 17 அக்டோபர், 2011

கிறித்துவ,முஸ்லிம் மதத்தில் ஆயுத பூஜை உண்டா?



மூடப் பழக்கம்தான் கலாச்சாரமா?

ஆயுத பூஜையை அரசு அலுவலகங்களில் கொண்டாடுவது தவறா? அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாமா? மதச் சார்பற்ற அரசு என்கிற காரணத்தால் நாட்டிற்கென்று ஒரு பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை இருக்கக் கூடாதா என்ற வினாவைத் தொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். சின் ஏடான விஜயபாரதம் (21-10-2011)
மதசார்பற்ற அரசு என்றால், எந்தவித மதப் பண்டிகையையும் கொண்டாடக் கூடாதுதான்.
ஆயுத பூஜை குறிப்பிட்ட இந்து மதத்தின் பூஜை இல்லையா? கிறித்துவ மதத்தில் ஆயுத பூஜை உண்டா? முஸ்லிம் மதத்தில் ஆயுத பூஜை உண்டா? நவராத்திரி என்று சொல்லப்படும் ஒன்பது இரவுகளில் நடத்தப்படும் இந்த விழா இந்து மதப் பண்டிகைதானே? உங்கள் வீட்டுக்குள் கொண்டாடுவதையா தடுக்கிறோம்?
வீட்டில், பூஜை அறைக்குள் நடத்திக் கொள்ள வேண்டிய ஒரு சமாச்சாரத்தை எல்லா மதத்திற்கும் பொதுவான, மதச் சார்பற்ற கொள்கையுடையவர்களுக்கும் பொதுவான அரசு அலுவலகங்களுக்குள் குறிப்பிட்ட மதப்பண்டிகை விழாவைக் கொண்டாடக் கூடாது என்பது எப்படித் தவறாகும்?
அரசு அலுவலக நேரத்தில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அலுவலர் ஆறு வேளை தொழுதால் இந்த இந்துத்துவாவாதிகள் ஏற்றுக் கொள்வார்களா?
பண்பாடு பற்றிப் பேசுகிறார்களே - அந்தப் பண்பாடு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறதா? ஒருவருக்கு உருவ வணக்கம் உண்டு; இன்னொரு வருக்கு உருவ வணக்கத்தில் நம்பிக்கை கிடையாது.
ஒருவர் நெற்றியில் குறியீடுகள் (னுசயறபே) உண்டு; மற்றொரு மதக்காரருக்கு எவ்விதக் குறியீடுகளும் கிடையாது.
ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் கூட குறியீடுகளில் வேறுபாடுகள் உண்டு. சண்டைகள் உண்டு. யானைக்கு நாமம் போடுவதில்கூட வழக்குகள் உண்டு.
உண்மை இவ்வாறு இருக்கும்போது ஒரே பண்பாடு, பழக்க வழக்கம் என்று சொல்லுவதெல்லாம் பொய் தானே!
விநாயகர் சதுர்த்தியின்போது நீர்நிலைகளில் விநாயகரைக் கரைப்பது சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் என்று கூச்சல் போடுகிறார்கள் என்றும் குமுறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஏடு.
யார் கூச்சல் போடுகிறார்களாம்? கறுப்புச் சட்டைக்காரர்களா? சுற்றுச் சூழல் பற்றிக் கற்றுத் தேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கருத்தைச் சொல்லுகிறார்கள். அவர்களையும் நாத்திகர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாமா?
சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது இங்கு மட்டும் தானா? உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள காலகட்டம் இது. சுற்றுச் சூழல் பாதிப்பதால் மனிதர் கள் முதல் விலங்குகள்வரை பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்று கூறுவது விஞ்ஞானிகள்தான். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்கு - பார்வதி தேவியாரின் உடல் அழுக்கில் பிறந்த பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பதுதான் முக்கியம் என்று கூறுவார்களே யானால், அவர்களை மனித நலனுக்கு விரோதிகள் என்று கூறக் கூடிய பட்டியலில்தான் அடைக்க வேண்டும்.
இவையெல்லாம் தொடருமேயானால் அரசு விழாக்களில் விளக்கேற்றித் துவக்கி வைப்பது, கடவுள் வாழ்த்துப் பாடுவது, நாதஸ்வரம் இசைப்பது கூடாது என்றும் சொல்வார்களே என்று மூக்கால் அழுகிறது விஜயபாரதம்.
உண்மைதானே? எதற்காகக் கடவுள் வாழ்த்துப் பாடல்? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நிலைமை என்ன? இப்பொழுது கூட தமிழ்நாட்டில் கடவுள் வாழ்த்து தி.மு.க.ஆட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டதே - மொழி வாழ்த்துத்தானே நடைமுறையில் உள்ளது.
பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது சரஸ்வதி வந்தனா என்ற ஒன்றைத் திணிக்க முயன்று, மூக்கறுபட்டதுதான் மிச்சம்.

கோயில் கருவறைக்குள் சூடம் கொளுத்தப்படக் கூடாது என்று ஏற்கெனவே உத்தரவு அமலில்தான் உள்ளது. அதனால் புற்று நோய் ஏற்படுகிறது என்கிற மருத்துவ ஆய்வின் அடிப்படையில் தடுக்கப்பட்டு விட்டதே!
மக்கள் நலன்தான் முக்கியமே தவிர மூட நம்பிக்கையாளர்களின் பழக்க வழக்கங்களோ, அவர்கள் மொழியில் அந்தக் கலாச்சாரங்களோ முக்கியமானவை யல்ல - அல்லவே அல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக