ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பக்தர்களே, சிந்திப்பீர்-தந்தை பெரியார்

 

கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது - அரூபி என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே; எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.

பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?

அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இவ்வாண்டு சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?

ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

நேற்று மாலை ஏட்டில் ஒரு தகவல் வெளி வந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (23) ரங்கசாமி (28) கந்தசாமி (45) பூமிநாதன் (30) ஆகிய தொழிலாளிகள் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்குச் செல்லுவது வழக்கம். அதே போல நேற்றுமுன்தினம் கிரிவலத்துக்குச் சென்றனர்.

கிரிவலத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினர். சொந்தவூரில் ஆட்டையாம் பட்டிக்கு அவர்கள் நடந்து சென்றபோது சாலையைக் கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் வேகமாக வந்த வாகனம் மோதி நான்கு பேரும் தூக்கி எறியப்பட்டு பரிதாபகரமான முறையில் பலியானார்கள் என்ற சேதி வெளிவந்துள்ளதே.

அதே ஏட்டில் இன்னொரு சேதியும் வெளி வந்துள்ளது. பொள்ளாச்சியை யடுத்த ஆனைமலை மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக லக்சம்பட்டியைச் சேர்ந்த 27 பேர் ஒரு வாகனத்தில் (18.2.2011) ஆனைமலைக்குப் புறப்பட்டனர்.

விடியற்காலை 3.30 மணிக்கு உடுமலையைத் தாண்டி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக 4 பெண்கள் சித்ரா (28), கலைச்செல்வி (29), சாந்தி (35), வெள்ளையம்மாள் (35) ஆகியோர் அதே இடத்திலேயே துடிதுடித்துச் செத்தனர். 8 ஆண்களும், 6 பெண்களும் பலத்த காயம் அடைந்தனர் என்று ஒரே நாளில் இரு கோயில்களுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் பரிதாப கரமாகப் பலியானார்களே - இதுபற்றி பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?
சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?

கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?

தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால், அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?

பக்தர்களே, சிந்தியுங்கள்!

பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!

வீணாய் அறிவையும், பொருளையும், காலத்தையும், உயிரையும் பாழாக்காதீர்கள்!
கடவுளை மற - மனிதனை நினை

- தந்தை பெரியார்
http://viduthalai.in/new/page-2/3773.html 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக