இந்தியப் பெண்களுக்கு புத்தர் வழங்கிய சுதந்திரம், மிக மிக மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த உண்மையாகும். இது, பிக்குணிகள் (பெண் துறவிகள்) பிக்கு (ஆண் துறவி) சங்கத்திற்கு கீழ்படிந்து இருக்க வேண்டும் என்று கூறியதில் களங்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுவதைக் கடந்து, மேலோங்கி நிற்கிறது. இது ஒரு பொருளற்ற சுதந்திரம் அல்ல. இச்சுதந்திரத்தை கண்டு அவர்கள் அகமகிழ்ந்தனர். “ஓ, உண்மையிலேயே விடுதலை பெற்றேன், ஓ, நான் புகழார்ந்த சுதந்திரமடைந்துள்ளேன்...'' என்று மூட்டா என்ற ஒரு பார்ப்பனப் பெண் பிக்குணி பாடினார். மெட்டிகா என்ற மற்றொரு பிக்குணி – அவரும் ஒரு பார்ப்பனப் பெண்தான் – “... நான் இங்கு ஒரு பாறையின் மீது உட்காருகிறேன். என்னுடைய ஆன்மாவின் மீது சுதந்திரக் காற்று வீசுகிறது'' என்று பாடினார்.
திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பின்வருமாறு கூறுகிறார் :
“தனது நடமாட்ட சுதந்திரத்தைப் பெறுவதற்கு... அவர்கள், தமது பிந்தைய கிறித்துவ அருள் சகோதரிகளைப் போன்றே, அனைத்து சமூக நிலையையும், அனைத்து குடும்ப வெற்றிகளையும் விட்டுக் கொடுத்தனர். அவர்கள் தங்களுடைய உலகை இழந்தனர். ஆனால் அதற்கு மாற்றாக, அவர்கள் ஒட்டுண்ணியாக இருப்பதற்கு பதிலாக, ஒரு தனிநபர் என்ற தகுதியை வென்றனர். ஒட்டுண்ணியாக இருப்பது எவ்வளவு பாராட்டப்பட்டாலும் ஒரு தனிநபர் தகுதி மேம்பட்டதே. மழிக்கப்பட்ட தலை, மேலங்கியால் போர்த்தப்பட்டு, தனியாகப் பிரித்துப் பார்க்கப்பட முடியாத உடை, தளர் வெளியாடை, ஆண் மதகுருவின் துணிகளால் இறுகக் கட்டப்பட்ட ஆடையுடன் கூடிய – சகோதரி சுதந்திரமாக வந்து போகலாம், வனத்தினூடே தனியாகப் பயணம் செய்யலாம் அல்லது மலைமுகட்டில் ஏறலாம்.''
பெண்களை பிக்குணிகளாவதற்கு அனுமதித்ததன் மூலம் புத்தர் அவர்களுக்கு சுதந்திரத்திற்கான பாதையைத் திறந்துவிட்டது மட்டுமின்றி – இன வேறுபாடின்றி அவர்கள்பால் கண்ணியத்தை, உயர்வைப் பெறவும் அனுமதித்தார். பெண் விடுதலை பெற்றதை திருமதி ரைஸ் டேவிட்ஸ் இவ்வாறு கூறுகிறார் :
“பாலின வேறுபாடுகளின்றி, ஓர் அறிவார்ந்த பிறவியாக, குறைந்தபட்சம் அவளுடைய சகோதரர் அரஹான்ட்ஸினால் அங்கீகரிக்கப்பட்டதால் அவள் மகிழ்ச்சியடைந்தாள். அந்த அளவில் அவள் ஆன்மிகச் சூழலை சுவாசித்தாள். ‘பிடகா'க்களில் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட மத மேட்டுக் குடியினருடன் அறிவுத் துறை ஒன்றிணைப்பை அவள் பகிர்ந்து கொண்டாள். அவர்களுடன் அவள், எல்லா வற்றையும் அவை மெய்யாக இருக்கும் வகையிலேயே காணும் சக்தியைப் பெற்றாள். இதை பவுத் தர்கள் விழிப்புடன் இருத்தல் என்றழைக்கின்றனர்.
பெண்ணின் இயல்பு ஆரியர்களாகிய நம்மை எவ்வாறு பாதிக்கிறது? இது குறித்து சோமா என்ற ஒரு பிக்குணி இவ்வாறு கூறுகிறார் :
“ஊடுருவி அறியும் ஆற்றல் நியதியை மெய்யாகவே புரிந்து கொள்வது எதைக் குறிப்பிடுகிறது? ஒருவரிடம் பின்வரும் கேள்வி நிச்சயமாக எழுகிறது : ‘அத்தகைய விஷயங்களில் நான் ஒரு பெண்ணா அல்லது ஓர் ஆணா? அப்படியெனில் நான் எதுவாக இல்லை? அத்தகைய ஒருவரிடம் பேசுவதற்கு மாராதான் பொருத்தமானவர்!''
இத்துடன் முடிந்துவிடவில்லை. பெண்களை பிக்குணிகளாவதற்கு அனுமதித்ததன் மூலம் புத்தர் ஆண்களுடன் சமத்துவத்திற்கான வழியை திறந்து வைத்தார். திருமதி ரைஸ் டேவிட்ஸ் குறிப்பிட்டபடி, “பிக்குணிகள் பிக்குகளுக்கு நிரந்தரமாக மூப்பு அடிப்படையில் இளையவர்களாக நியமிக்கப்பட்டனர் என்பது மெய்யே. அறிவு ரீதியிலும் கூடுதல் மேம்பட்ட தன்மையிலும் ஒரு ‘தேரி', மிக உயர்வான சகோதரத்துவத்துடன் சமத்துவத்தைக் கோரக்கூடும் என்பதும் அதே அளவு தெளிவானதாகும்.
“இறைவணக்கப் பாடல்களில் ஓர் எடுத்துக்காட்டு வருகிறது. ஙீஙீஙீ, ஙஐஐஇல் இதில் பத்தா, மூலவருக்கே வாரிசும் (வழித்தோன்றல்) சமயத்தின் தலைவருமான மகத்தான கஸ்ஸப்பாவின் ஆன்மிக சாதனையுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். இது தொடர்பாக, புத்தர் கன்னித் தன்மைக்கு சிறப்பு ஊக்கம் எதுவும் தரவில்லையென்பது கவனிக்கத்தக்கது. அனைத்துப் பிரிவுப் பெண்களுக்கும் – திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள், விதவைகள், விபச்சாரிகளுக்கும்கூட – தனது பாதையைத் திறந்து வைத்தார். அனைவரும் ஆண்களோடு சட்டத் தகுதி, சுதந்திரம், உயர்வு மற்றும் சமத்துவத்தையும் பெற முடியும்.''
இந்தியாவில் பெண்களின் நிலை – ஒரு காலத்தில் இருந்ததிலிருந்து பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பண்டைக் காலத்தில் ஆட்சி நிர்வாகக் கலையில் அவர்கள் ஆற்றிய பங்கு குறித்து அதிகம் கூற முடியாது. ஆனால், நாட்டின் அறிவுத்துறை மற்றும் சமூக வாழ்க்கையில் அவர்கள் மிகவும் உயர் நிலையை வகிக்கவே செய்தார்கள் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.
– தொடரும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(2), பக்கம் – 120)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக