செவ்வாய், 25 அக்டோபர், 2011

வெளிநாடுகளில் பெரியார்


பெரியாரின் சிந்தனைகள் இந்தியாவிற்கு வெளியே பாராட்டப்பட்டன. வெளிநாட்டார் அவரைக் காணவும் அவரது சொற்பொழிவுகளைக் கேட்கவும் அவர்கள் ஆவலாய் இருந்தனர்.
1929இல் துணைவியாருடன் மலேயா சென்றிருந்ததை சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். இங்கு அதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மலேயா நாட்டில் ஈப்போ நகரில் தமிழர் சீர்திருத்தச் சங்க மாநாடு ஒன்று நடைபெற இருந்தது. அதன் பொறுப்பாளர் மாநாட்டைத் திறந்து வைக்கப் பெரியாரை அழைத்திருந்தார். பெரியாரும் அழைப்பை ஏற்றுப் புறப்பட்டார்.
பெரியாரும் அவர் துணைவியார் நாகம்மையார் மற்றும் பெரியாரின் தோழர்கள் என். ராமநாதன், அ. பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், சி. நடராஜன் ஆகிய்யோர்களும் உடன் சென்றனர்.
நாகப்பட்டினத்திலிருந்து கப்பலில் பயணம் மேற்கொண்டார்கள். 20.19.1929 பினாங்கு சென்றடைந்தார்கள். ஈப்போ மாநாட்டில் கலந்துகொண்டார்கள். பினாங்கில் மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உற்சாகத்துடன் திரண்டு வந்து வரவேற்பு நல்கினார்கள்.
பினாங்கு பத்திரிகைகள் பெரியாரின் வருகை குறித்து இசறப்புச் செய்தி வெளியிட்டன.
26-12-1929 அன்று சிங்கப்பூர் சென்றடைந்தார். மலேயா இந்திய சங்க மாநாடு நடைபெற்றது. அதில் அவர் விரிவுரை ஆற்றினார். அம்மாநாட்டில சுயமரியாதை சிந்தனைகளை அவருக்கே உரிய நகைச்சுவையுடன் எடுத்து வைத்தார்.
சிங்கப்பூரைச் சுற்றியுள்ள பெரிய ஊர்களிலும் கிராமங்களிலும் ஓய்வின்றி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். காலையில் ஓர் ஊரில் பேசுவார். பிற்பகலில் மற்றொரு கிராமத்தில் உரை நிகழ்த்துவார். பின்னர் மாலையில் அடுத்த ஊர். இரவில் வேறு ஒரு இடம் என தொடர்ந்து சொற்பொழிவுகள் செய்வார். அவரது கருத்துகள் கேட்போரை தன்வயப்படுத்தின. சிலர் இவரை சாமியார் என்று எண்ணி காலில் விழுந்து வழிபட்டதும் உண்டு. பெரியார் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுவார். உடன் இருந்தவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு சிரித்து மகிழ்வார்கள்.
பெரியாரின் வருகையால் மலேயா நாட்டு மக்களிடம் புதிய கிளர்ச்சியும், சமூக சிந்தனையும் தோன்றின.
மலேயாவில் வாழும் சீனர்கள், ஜப்பானியர்கள் பெரியாரிடம் வந்து வினா-விடை மூலம் சுயமரியாதை இயக்கம்பற்றிக் கேட்டுத்தெளிவு பெற்றார்கள்.
மலேயா சுற்றுப்பயணத்தை மனநிறைவுடன் முடித்துக்கொண்டு பெரியாரும் அவருடன் சென்றவர்களும் 16-01-1930இல் இந்தியாவிற்குத் திரும்பினார்கள்.
இந்த சமயம் ‘ரிவோல்ட்’ பத்திரிகை நிறுத்தப்பட்டது.
ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடு 1930ஆம் ஆண்டு மே மாதம் 10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாடு,
இளைஞர் மாநாடு
பெண்கள் மாநாடு
மதுவிலக்கு மாநாடு
சங்கீத மாநாடு எனப் பல பிரிவுகளிலும் சிறப்பாக நடத்தப்பட்டது.
“திரு. ஈ.வெ.ராசாமியார் அவர்கள் சட்டசபைகளைப் பற்றியோ, அரசாங்கத்தைப்பற்றிலோ கவலை கொள்ளாதவர். அவர் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதே தமது பிறவியின் பயன் என்று கருதியிருப்பவர்.” இவ்வாறு பெரியார்பற்றி மாநாட்டுத் தலைவர் திரு. ஜெயக்கர் கூறினார்.
அக்கூற்று உண்மைதான். தன் வாழ்வின் இறுதி நாள்வரை அமைச்சர் பதவிக்கோ வேறு அரசாங்கப் பதவிக்கோ கனவில்கூட ஆசைப்படாதவர் பெரியார்; அவர்தான் பெரியார்.
1931-ஆகஸ்டில் மூன்றாவது சுயமரியாதை மாநாடு விருதுநகரில் நடைபெற்றது.
“மதங்கள் மனித ஒற்றுமைக்குத் தடை செய்கின்றன; மூடநம்பிக்கைகளை வேரூன்றச் செய்கின்றன. ஆதலால் அவைகளை அழிக்க வேண்டும்.
கதர் கைத்தொழில் இந்தியாவின் பொருளாதார நிலையை வளர்க்காது. கைத்தொழில் வளர்ச்சிக்கு இயந்திர சாதனங்களே ஏற்றவை” என்று தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மத அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன என்றாலும் சுயமரியாதை இயக்கத்தில் ஆர்வத்தோடு இளைஞர்கள் சேர்ந்த வண்ணம் இருந்தனர்.
மேலை நாடுகளில் அரசியல் அமைப்பு எவ்வாறு இயங்கி வருகிறது; சமுதாய இயக்கங்கள் என்னென்ன பணிகள் செய்து வருகின்றன என்பன போன்றவற்றை பெரியார் அறிந்துவர விரும்பினார். எனவே, பெரியார் மேல்நாடுகள் பயணம் ஒன்றினை மேற்கொண்டார்.
1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பெரியார் சென்னையிலிருந்து புறப்பட்டார். கப்பலில்தான் பயணம் செய்தார். அப்போது பெரியாரின் வயது 52. அந்த சமயம் இடைவிடாத பணிகள் காரணமாக பெரியாரின் உடல் நலம் குறைந்தது. மருந்துவர்கள் சுற்றுப்பயணங்கள் கூடாது; முழு ஒய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தார்கள். மருத்துவர்களின் அறிவுரையை அவர் ஏற்கவில்லை. தான் திட்டமிட்டபடி பயணமானார். அவருடன் தேழர் எஸ். ராமநாதன், ஈரோடு ராமு ஆகியோரும் பயணம் செய்தார்கள்.
எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஃபிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார். அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, அரசியல் கோட்பாடு, பழக்கவழக்கங்கள், நாகரிகம் போன்ற அனைத்து அம்சங்களையும் கூர்ந்து கவனித்தார் பெரியார்.
பொது இயக்கங்களைக் கண்டார். அவற்றின் தலைவர்களோடு கலந்து உரையாடினார். உலக நடப்புகளை நுணுக்கமாக ஆராய்ந்தார்.
பெரியார் அவர்கள் சோவியத் ரஷ்யாவில் மட்டும் மூன்று மாதங்கள் முழுமையாக சுற்றுப்பயணம் செய்தார்.
ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், விவசாயப் பண்ணைகள் என பல்வேறு அமைப்புகளைப் பார்வையிட்டார். அரசாங்க விருந்தினராக பெரியார் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமைப்புகள் வரவேற்பு மடல்கள் வழங்கிப் பாராட்டின. சென்ற இடமெல்லாம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை விளக்கிக் கூறினார்.
இங்கிலாந்திற்கு 20-6-1932இல் சென்றார். அங்கு மெக்ஸ்பரோ லேக் பார்க்கில் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் சொற்பொழிவாற்றினார்.
இந்தியர்களாகிய எங்களை நீங்கள் பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால், நாங்கள் பிரிட்டிஷ் தொழிற்கட்சியை மிகமிக பரிகசிக்கத்தக்க விஷயமாகக் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு ஐம்பது காசு கூலி கொடுக்கப்படுகிறது. சுமார் நாற்பதாயிரம் பெண்கள் தினமும் முப்பது காசு கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது?
அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், மிதலாளிமார்களும், ஐரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும்; குடித்தனக்காரர்களுக்கு பாத்தியமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபைமூலம் நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள்.
ஆதலால், யார்க்-ஷையர் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல், மனித சமூக விடுதலைக்கும், சுதந்தரத்துக்கும், சமத்துவத்துக்கும் உண்மையாக போராடுவதற்காகவே உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள்.” என்று இங்கிலாந்து நாட்டில் இருந்துகொண்டே இங்கிலாந்து ஆட்சி செய்து வரும் தொழிற்கட்சியைத் தாக்கிப் பேசினார். தொழிலாளர்களும், மற்றவர்களும் பெரியாரின் மன தைரியத்தை வியந்து பாராட்டினார்கள்.
பெரியார் அவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கச் செயல்பாட்டினை கண்ணும் கருத்துமாய் நடத்தி வந்தவர் அவரது துணைவியார் ஆவார். அவருக்குத் துணையாக பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் இயக்கப் பணிகளில் ஈடுபட்டார்.
கிட்டதட்ட பன்னிரண்டு மாதங்கள், மேலைநாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு இறுதியாக இலங்கை வந்து சேர்ந்தார். தொழிலாளிக்கு உண்டாகும் புன்பங்கள் அத்துன்பங்களை நீக்கி முன்னேறும் வழிகள்பற்றி இலங்கையில் அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பெரியாரின் இலங்கைச் சொற்பொழிவு சிறு நூலாகவும் அங்கு வெளியிடப்பட்டது.
பெரியார் இலங்கை வந்தவுடன், தமிழ்நாட்டிலிருந்து அவர் துணைவியார் நாகம்மையார், மாயவரம் தோழர் சி. நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரியார் தம் துணைவியாருடனும் மற்றத் தோழர்களுடனும் 11-11-1932 இல் ஈரோடு வந்து சேர்ந்தார்.
நாடு திரும்பிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்ய விரும்பினார். வழக்கம்போல் மாநாடுகள் நடைபெற்றன.
காலம் ஓடியது.
திடீரென ஒருநாள் பெரியாரின் துணைவியார் நாகம்மையார் நோய்வாய்ப்பட்டார். ஈரோடு மிஷன் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இயக்கத்திற்காகவே, இயக்கமாகவே வாழ்ந்து வரும் பெரியார் துணைவியாரின் இயக்கம் நின்றுவிடக்கூடாது எனத் துயருற்றார். மனைவியின் கூடவே இருந்தார். மருத்தவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். இந்த சமயத்தில் வடார்க்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சுயமரியாதை மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரியார் உடனே திருப்பத்தூர் செல்ல வேண்டிய கட்டாயம். ஈரோட்டிலோ உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார் நாகம்மையார். பெரியார் சுயநலம் பேணுவது இல்லை.
பொதுநலத் தொண்டு. அதையே பெரிது எனக் கருதுபவர். எனவே, மனைவியின் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது திருப்பத்தூர் புறப்பட்டுவிட்டார். உறவினர்கள் தடுத்தார்கள். பெரியார் யார் சொல்வதையும் கேட்கவில்லை. திருப்பத்தூர் மாநாடு முடிந்து ஊர் திரும்பினார். நாகம்மையார் இறந்து போனார். 1933 ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி நாகம்மையார் இறந்து போனார். பெரியார் துயரக்கடலில் ஆழ்ந்தார். மனைவியின் மறைவு குறித்து “குடிஅரசு” இதழில் இரங்கல் தெரிவித்துக் கட்டுரை எழுதினார். அன்று மாலையே திருச்சிக்குப் புறப்பட்டார்.
திருச்சியில் 12-5-1933 அரசாங்கத் தடை உத்தரவைமீறி கிறிஸ்தவ திருமணம் ஒன்றுக்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அரசாங்கம் இந்த வழக்கை வாபஸ் வாங்கிவிட்டது.
காலையில் அன்பு மனைவியின் மரணம். மாலையில் பொதுக்கூட்டத்திற்கு கிளம்புகிறார். பெரியாரின் மனம் கல்மனம் என்றுதான் எண்ணத்தோன்றும். நாட்டிற்காக – சமூகநலனுக்காக தன்னையே வருத்திக்கொண்டு போராடும் நல்மனம் என்றுதான் நாடு பாராட்டியது; பாராட்டுகிறது.
மரணங்கள் அவர் போராட்டப் பாதையில் தடைக்கற்களாக இருந்தது உண்டு. ஆனால், அதை பொருட்படுத்தியதே இல்லை.
பெரியார் குடும்பத்திற்கு என ஒரே பையன் இருந்தான். அவன் படிப்புக்காக பத்து வயதில் லண்டனுக்கு அனுப்பப்பட்டான். லண்டனில் இருந்து திரும்பியவன் காசநோயால் பீடிக்கப்பட்டு மாண்டு போனான். அப்போது பெரியார் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.
பெரியாரின் மாமனார் உடல்நலம் குன்றி ஈரோட்டில் இவர் வீட்டில் தங்கியிருந்தார். அவர் இறந்து போனார். அப்போது பெரியார் சென்னையில் இருந்தார்.
அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் மனைவியார் இறந்த அன்றே பெரியார் பிரசாரத்திற்காக வெளியூர் புறப்பட்டுவிட்டார்.
பெற்று வளர்த்து சீராட்டிய தாயார் இறந்தபோதும் பெரியார் அருகில் இல்லை.
குடும்ப நலன்களை பெரியார் கடுகளவும் எண்ணினார் இல்லை. மாறாக நாட்டு நலன்களை பெரிதாக எண்ணி நாளும் உழைத்து வந்தார்.
துயரங்களும், துன்பங்களும் பெரியாரைக் கண்டு துவண்டு போயின. இன்னல்களுக்கு இன்னல் கொடுத்தவர் பெரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக