ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஜோதிடம் - பெரியார்

 

ஜோசியம் என்பது உலக வழக்கில், அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை, அதன் சம்பவம், பலன் முதலாகியவைகளை மொத்தமாய் வருஷ பலனாயும், மாத பலனாயும், தின பலனாயும், நிமிஷப் பலனாயும் சொல்லுவதும், அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோதம் நீங்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்வதாகும்.  இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு, மற்றும் வேறு பல வழிகளிலும், அதாவது போர்நாமத்தைக் கொண்டும், கேட்கப்பட்ட நேரம், கேட்பவரின் இருப்புநிலை, கேட்ட சங்கதி, ஜோசியனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய் தகப்பன், சகோதரம், பந்து முதலானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியனவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு.  இன்னும் இது போன்ற பல வகை, அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து, ஆகியவைகளைக் கேட்டால் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலானவைகளின் மூலமும் பலன் சொல்வதும் உண்டு.  ஆகவே, மேற்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா முடியாதா என்பதைப்பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்துப் பலன் சொல்லக் கூடுமா? என்பதைப்பற்றி முதலில் ஆராய்வோம்.
பிறந்த காலம்?
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா?  அல்லது வயிற்றிலிருந்து 7,8,9,10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா?  அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா?  அல்லது ஒருநாள், அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில், தலை வெளியாகி நிலத்தில்பட்டு, கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா?  அல்லது கால், தலை ஆகிய எல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமா?  அல்லது மருத்துவச்சி கையில் இருந்து கீழே விழுந்த நேரமா?  என்பனவாகிய கேள்விகள் ஒருபுறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக்கொண்டே பார்ப்போமானாலும், இந்த நேரத்தைச் சரியாக எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா?  இல்லையா?  ஆணா, பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும்.  பிறகு அந்தச் சேதியைக் கொண்டுவந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்தச் சேதியைக் கேட்டவுடன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும்.
அந்தக் கடிகாரம் சரியான மணியா என்பதும் தெரியவேண்டும்.  கடிகாரமில்லாவிட்டால், வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால், அதற்குப் படிக்கும் நேரம் முதலியவை, அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும், பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்?  இவை ஒருபுறமிருக்க, அந்த நேரத்தில் பலன் சொல்லுவதானால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன் எத்தனை இருக்கக் கூடும்.  மற்ற ஜீவன்களை யெல்லாம் தள்ளிவிட்டு, வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக்கொண்டாலும் உலகத்தில் 270 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படிப் பார்ப்போமானால், சென்னை முதலிய பட்டணங்களின் சாதாரண அனுபவங்களின்படிக்கும் உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று அறுபத்து ஆறு) குழந்தைகள் பிறப்பதாகக் கணக்கு ஏற்படுகின்றது.  (இந்தக் கணக்கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70 (எழுபது) குழந்தைகள் பிறப்பதாக கணக்குப் போடப்பட்டிருக்கிறது).
இதைத்தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், கணவன் சமீபத்தில் இல்லாத பெண்களின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்கு அதிகமாகும். இது ஒருபுறமிருக்க, மேற்படி சாதாரணக் கணக்குப்படிப் பார்த்தாலே ஒரு நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டுப் பார்த்தால், ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாகக் கணக்கு ஏற்படுகிறது.  இதில் 33 கோடி கொண்ட நமது இந்தியாவிற்கு மாத்திரம் கணக்குப்படிப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம் பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது.  ஆகவே, இந்த 33 குழந்தைகளுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா?  இவைகளுக்குச் சரியான நேரம் கண்டு பிடிக்க முடியுமா?  என்பதை யோசிக்க வேண்டும்.
1 நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்பதாயிருக்கும் பொழுது, ஒரு ஜோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய லக்கினம், நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்தமற்ற தென்பதாகவே காணலாம்.
சாதாரணமாய் ஒரு ஜாதகம் என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சமயத்தில் லக்கினம், நட்சத்திரம் ஆகியவைகளைக் குறித்துள்ளதேயாகும்.  உதாரணமாக, பிரமாதி வருஷம், புரட்டாசி மாதம் 2_ஆந்தேதி புதன்கிழமை காலை சுமார் 10 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்துவிட்டால், இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லிவிடக்கூடும் என்பதே அநேகமாக ஜோசியத்தின் லட்சணம்.
ஆகவே, இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும்.  இந்த அய்ந்தே கால் நாழிகைக்குள், அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபது ஆயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும்.  இது ஒருபுறமிருக்க, மேலும் இந்த லக்கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன ஆகிய பூதக் கண்ணாடிப் பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடி ஜீவன்களுக்கு மேல் பிறந்திருக்க வேண்டும்.  இது ஒருபுறமிருக்க,
இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப்படிக்கு 4,158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்து எட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும்.
ஆகவே, அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக 4,158 பேருக்கும் வாழ்க்கையில் ஒருவிதமான பலன் அனுபவமிருக்க முடியுமா?  அந்தப்படி இருக்கின்றதா?  என்பதை முதலில் யோசிக்க வேண்டும்
(2.10.49 விடுதலை)
(இருபது ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதியது).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக