திங்கள், 19 செப்டம்பர், 2011

அறிவியல்

 

pan_summer2010/universe%20(2).jpg
பூமிமைப் போன்றே மேலும் கிரகங்கள்!
இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் உறுதியாகியுள்ளது. புதிதாக கண்டறியப்பட்டுள்ள சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே அமைந்துள்ளன என்பது கூடுதல் ஆச்சரியம்.

நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள சூரிய மண்டலங்களில் 140 கிரகங்கள் நிலம், நீருடன் பூமியைப் போன்றே அமைப்புடன் உள்ளனவாம். உயிர்கள் உருவாகத் தேவையான நீர் உள்ளதால் இங்கு அடிப்படை உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரத்திங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உயிரினங்கள் வாழ சாத்தியமான கிரங்களாக இருக்கலாம் என்று கெப்லர் விண்வெளி்க் கலத்தை அனுப்பிய ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி்ன் விண்வெளி ஆய்வுப் பிரிவின் தலைவரான பேராசிரியர் டிமிடார் சசலேவ் தெரிவித்துள்ளார்.
பால்வெளி மண்டலத்தில் உளள சிக்னஸ், லைரா, டிராகோ நட்சத்திர மண்டலங்களில் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் சுமார் 1 லட்சம் நட்சத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த விண்கலம், அதன் ஒளி அளவில் ஏற்படும் மாற்றங்களை தனது 95 மெகா பிக்சல் கேமராக்கள் உதவியோடு பதிவு செய்து, பல்வேறு அலைவரிசைகளில் பிரித்து ஆய்வு செய்து, நாஸாவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ள பூமியைப் போன்ற கிரகங்களில் CoRoT - 7b மற்றும் Wasp-17b ஆகியவை முக்கியமானவை. இவை பூமியோடு மிகவும் ஒத்துள்ளன. இதில் CoRoT - 7b பூமியை விட 5 மடங்கு பெரியது. Wasp-17b யின் விட்டம் 2 லட்சம் கி.மீயாகும் (பூமியின் விட்டம் 12,000 கி.மீ தான்). இந்த கெப்லர் விண்கலத்தின் வாழ்நாள் 4 ஆண்டு காலமாகும்.
பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள்
பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
“வைஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், “வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்’ என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது. 11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. “வைஸ்’ தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை.
“வைஸ்’ தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, “வைஸ்’ ஆய்வு செய்துள்ளது. இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, “வைஸ்’ கண்டுபிடித்துள்ளது.
சாதாரண தொலைநோக்கியை விட, “வைஸ்’ தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், “வைஸ்’ தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது.
“விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும். ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், “வைஸ்’ விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!’ என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி. “பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!’ என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு

ஒலி அலைகள்:
நம்மைச் சுற்றிலும் காற்று இல்லாவிடில், எவ்வளவு உரத்த ஒலியானாலும் நம்மால் அதனைக் கேட்க இயலாது. நீர்வாழ் உயிரினங்களின் காதுகள் தண்ணீர் அலைகளின் ஊடே வரும் ஒலியைக் கேட்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஆனால் மனிதர்களின் செவிப்பறைகள் காற்று அல்லது வாயுக்களின் ஊடே வரும் ஒலியை மட்டுமே கேட்கும் வண்ணம் அமைந்து உள்ளவை. எனவே நம்மைச் சுற்றிக் காற்றோ, புகையோ இல்லாத நிலையில் நம் காதுகளுக்கு ஒலியைக் கேட்கும் ஆற்றல் கிடையாது.

நாம் சாதாரணமாகக் கேட்கும் ஒலி நம்மைச் சுற்றியுள்ள காற்று, புகை ஆகியவை ஊடே பயணம் செய்து வரும் ஒலி அலைகளால் உண்டாகின்றவை. இந்த ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. இந்த அடிப்படை உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டு விட்டால் ஒலியின் உண்மைகள் பற்றியும், அதன் புதிர்கள் பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றின் ஒலி அலைகளை உருவாக்குமா, அவற்றை நாம் ஒலியாகக் கேட்க இயலுமா? இவ்வினாவின் முதற் பகுதிக்கு 'ஆம்' எனவும், இரண்டாம் பகுதிக்கு 'இல்லை' எனவும் விடையளிக்க வேண்டும். நாம் ஒலியைக் கேட்பதற்கு, ஒரு பொருளால் உண்டாக்கப்படும் அதிர்வுகளும், அவ்வதிர்வுகளால் காற்றில் உண்டாகும் ஒலி அலைகளும் குறைந்த அளவு நொடிக்கு 16 அதிர்வுகளை, அதாவது அதிர்வெண்ணைக் கொண்டிருக்க வேண்டும். இதற்கும் குறைவாக அதிர்வெண் இருப்பின், அந்த ஒலியைக் கேட்க இயலாது,

இதனால் ஒலி அலைகளது அதிர்வெண்களின் எல்லை 0 இலிருந்து எல்லையற்ற முடிவிலி (infinity) ஆக இருக்க முடியும் என நினைக்கக் கூடாது. உண்மையில் அதிர்வுகளின் ஒரு வரம்பிலும் அதற்கு மேற்பட்ட நிலையிலும் ஒலி நமக்குக் கேட்கும்; மற்றொரு வரம்பில் காற்றில் அதிர்வுகள் தாமே உருவாக இயலாத நிலை.

இந்த வரம்பு "கேட்கும் வரம்பு (hearing limit)" என அறிவியல் மொழியில் கூறப்படும். இவ்வரம்பு எல்லையின் முடிவு நொடிக்கு 20,000 அதிர்வுகளாகும். அதாவது இதற்கு மேற்பட்ட அதிர்வெண் நிலையில் நம்மால் ஒலியைக் கேட்க இயலாது. 

எனவே கேட்கும் திறனின் எல்லை நொடிக்கு 16 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும்; இவை முறையே தாழ் ஒலி (infrasonic), மிகை ஒலி (ultra-sonic) என அழைக்கப்படுகின்றன.
ஒலி விரைவு பற்றி முதன்முதலாக ஆர்வம் காட்டியவர், பிரிட்டனைச் சேர்ந்த சர் ஐசக் நியூட்டன் ஆவார். அவர் தமது முதல் ஆய்வை 1686இல் மேற்கொண்டார். மின்னலின் ஒளிக்கீற்றும், இடியின் ஒலியும் தோன்றுவதற்கான கால அளவிலுள்ள வேற்றுமையைக் கணக்கிடும் அளவீடாக அமைந்திருந்த ஆய்வு அது. ஒளி, ஒலி வேகங்களின் வேக வேறுபாட்டைக் கணக்கிட நீண்ட தூரச் செயல்பாட்டிற்குரிய பீரங்கி ஒன்றை அவர் பயன்படுத்தினார். அவர் தமது கடிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு நேரங்களைக் குறித்துக் கொண்டார்; முதலாவது பீரங்கி வெடிப்பதும் அதன் ஒளி தோன்றுவதுமான நேரம்; அடுத்தது பீரங்கி எழுப்பும் வெடிப்பொலி கேட்கும் நேரம். இரு நேரங்களுக்கு இடையேயான நேர வேறுபாடு, பீரங்கிக்கும் அவர் நின்றிருக்கும் இடத்திற்கும் இடையேயுள்ள தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நொடிக்கு ஒலி பயணம் செய்யும் தூரம் அதாவது ஒலியின் வேகம் எவ்வளவு என்பதைக் கண்டறிந்தார்.

நியூட்டனுக்குப் பின்னர் சுமார் 130 ஆண்டுகள் கழித்து, காற்றின் வெப்பநிலை பற்றி, பிரெஞ்சுக் கணிதவியல் அறிஞர் லாப்லாஸ் என்பவர் கண்டறிந்தார். ஒலியின் வேகத்தில் வெப்பநிலைக்கு முக்கிய பங்கிருப்பதாகத் தமது ஆய்வுகள் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார். குளிர்ந்த காற்றை விட வெப்பக் காற்றில் ஒலி விரைந்து செல்வதாக அவர் கூறினார். காற்றில், கடல் மட்டத்தில், 0o செ.கி. வெப்ப அளவில் ஒலியின் இயல்பான வேகம் (நொடிக்கு 1088 அடி அல்லது மணிக்கு 744 மைல் என்று) இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

ஒலி அலைகள் எவ்வளவு தூரம் பயணம் செய்யக்கூடியவை? இவ்வினா மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாகும். ஒலி பல ஆயிரம் மைல் தூரத்திற்குச் செல்லக்கூடியது என்பது வரலாற்று நிகழ்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் கிரகடோ தீவுப் பகுதியில் 1883ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு எரிமலை வெடிப்பின் ஒலி உலகின் மூன்றின் ஒரு பகுதிக்குக் கேட்டதாம்.

காற்றின் ஊடே பயணம் செய்யும் போது ஒலி அலைகள் அளவிலும், வடிவத்திலும் ஒளி அலைகளையே ஒத்துள்ளன. கடினமான மலை போன்ற பகுதியை நோக்கிச் செல்லும் ஒலி அலைகள் அதைத் தாக்கி மேற்கொண்டு செல்ல இயலாமல் மீண்டும் தோன்றிய பகுதிக்கே வரும். இந்த எதிர்ச் செயற்பாடுதான் 'எதிரொலி' என அழைக்கப்படுகிறது.

****************************************************************************************************************************************************************************

அணு உட்கருவிலிருந்து வெளிவரும் கதிர்கள்:

இயல்பான ஒளி அல்லது சிலவகைக் கதிர்வீச்சின் முன்னர் வெளிப்படுத்தி, பின்னர் இருளில் கொண்டுசென்ற பின்னரும்கூட, சில பொருட்கள் தொடர்ந்து சற்று நேரத்திற்கு ஒளியை உமிழக்கூடியனவாய் இருப்பதுண்டு. அத்தகைய பொருட்கள் நின்றொளிர் பொருட்கள் (phosphorescents) எனப்படும்; அவை எக்ஸ் கதிர்களால் பெருமளவு பாதிக்கப்படும். ராண்ட்ஜன் அவர்களால் எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், எத்தகைய ஒளிக்கதிர்களின் தொடர்பில்லாத நிலையிலும், கதிர்வீச்சை மேற்கொள்ளும் அத்தகைய பொருட்களைக் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரெஞ்சு இயற்பியல் அறிஞர் ஹென்ரி பெக்குரல் என்பவர் 1896ம் ஆண்டு யுரேனியம் உப்புகள் அல்லது யுரேனியம் மட்டுமே கூட தொடர்ந்து அத்தகைய கதிர்வீச்சை மேற்கொள்ளும் எனக் கண்டறிந்தார். கருப்புக் காகிதத்தால் சுற்றப்பட்ட பிலிம் சுருள்களையும் அவை பாதிப்பவையாய் இருந்தன; மேலும் இக்கதிர்கள் புகைகளை மின்கடத்திகளாய் மாற்றும் திறனையும் கொண்டிருந்தன.

கியூரி அம்மையாரும், அவர் கணவரும் 1900ம் ஆண்டு இத்துறையில் முக்கியமானதோர் கண்டுபிடிப்பை வெளியிட்டனர்; கதிர்வீச்சுகளை வெளியிடும் வேதியியல் தனிமங்கள், சேர்மங்கள், இயற்கைப் பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் கண்டறிந்தனர். பிட்ச்பிளெண்டில் யுரேனியம் இருப்பதையும், வேறு சில கனிமங்கள் இக்கதிர்வீச்சைப் பொறுத்தவரை யுரேனியத்தைவிடத் தீவிரமாக இருப்பதையும் அவர்கள் கண்டறிந்து வெளியிட்டனர். இவற்றை உரைகல்லாகக் கொண்டு, கதிர்வீச்சை மிகப் பெருமளவில் வெளியிடும் வேதியியல் தனிமம் ஒன்றையும் கண்டறிந்தனர். இத்தனிமம் "ரேடியம்" என அழைக்கப்பட்டது. பிற வேதியியல் அறிஞர்கள் "பொலோனியம்" மற்றும் "ஆக்டீனியம்" என்னும் கதிர்வீச்சுடைய வேறு இரண்டு தனிமங்களைக் கண்டனர். பிட்ச்பிளெண்டில் குறைந்த அளவிலான ரேடியம் இருப்பதும் அறியப்பட்டது. பல டன் எடையுள்ள பிட்ச்பிளெண்டில் ஒரு கிராமுக்கும் குறைவான எடையுள்ள ரேடியம் உட்கரு மட்டுமே உள்ளது.

யுரேனியம் கதிர்வீச்சில் மூன்று வகைக் கதிர்கள் இருப்பதை 1899ம் ஆண்டில் எர்னெஸ்ட் ரூத்தர்ஃபோர்ட் என்பவர் கண்டுபிடித்தார். அவற்றை முறையே ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்கள் என அவர் பெயரிட்டு அழைத்தார். ஆல்ஃபா கதிர்களுக்குக் குறைந்த அளவிலான ஊடுருவிச் செல்லும் ஆற்றல் மட்டுமே உள்ளது; எனவே மிக மெல்லிய படலங்களை மட்டுமே அவை ஊடுருவிச் செல்லும். பீட்டா கதிர்கள் ஓரளவு கூடுதல் ஊடுருவிச் செல்லும் ஆற்றலைப் பெற்றுள்ளன; அரை மில்லிமீட்டர் தடிமனான அலுமினியம் படலத்தை ஊடுருவிச் சென்றால் இக்கதிர்கள் தமது ஆற்றலில் அரைப் பங்கை மட்டுமே செலவழிக்கும். காமா கதிர்களுக்கு ஊடுருவிச் செல்லும் ஆற்றல் மிகவும் உயர்ந்த அளவில் இருக்கிறது. இம்முடிவுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எட்டப்பட்டன. ஆல்ஃபா கதிர்கள் இரண்டு நேர்க்குறி மின்னேற்றங்களை உடைய ஹீலியம் அணுக்களால் ஆனவை; பீட்டா கதிர்கள் உயர் திசைவேகம் கொண்ட எதிர்க்குறித் துகள்களால் ஆனவை; மாறாக காமா கதிர்களில் பெரிய துகள் இல்லை. ஆனால் அவை ஒளி அலைகள் போன்றவற்றால் ஆனவை. இருப்பினும் இக்கதிர்களின் அலை நீளம் சாதாரண ஒளிக்கதிர்களின் அலை நீளத்தை விட மிக மிகக் குறைவானது.

கியூரியும், லெப்போர்டும் 1903ம் ஆண்டு ரேடியத்தை உடைய பொருள்கள் தொடர்ந்து வெப்பத்தை வெளியிடுகின்றன என்னும் மிக முக்கியமான உண்மையைக் கண்டுபிடித்தனர். ஒரு கிராம் ரேடியம் ஒரு மணி நேரத்தில் 100 கிராம் கலோரி அளவுள்ள வெப்பத்தை வெளியிடுவதாக அவர்கள் கணக்கிட்டனர். வெளிப்புற வெப்பம் உயர்வாகவோ, தாழ்வாகவோ இருப்பின், அது ரேடியத்தின் வெப்பக் கதிர்வீச்சுத் திறனைப் பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டது. கதிர்வீச்சின்போது வெளியாகும் வெப்ப ஆற்றல், மிகத் தீவிரமான வேதியியல் செயற்பாடுகளால் உண்டாகும் வெப்பத்தை விடப் பல ஆயிரம் மடங்கு அதிகம் எனவும் அறியப்பட்டது.

ஒரு வேதியியல் செயல்பாட்டில் கதிர்களின் வீச்சு நடைபெறும்போது அணுக்கள் தனித்தனியே அதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு மாற்றமும் ஒரு புதிய தனிமத்தை உருவாக்குவதோடு ஏராளமான ஆற்றலும் வெளியாகிறது. கதிர்களின் வீச்சைப் பற்றிய இவ்வுண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ரூத்தர்ஃபோர்டும், சாடி என்பவரும் "ஒவ்வொரு அணுவும் தனித்தனியே சிதைவுறும்போது கதிர்களின் கதிர்வீச்சானது உருவாகிறது" என்ற உண்மையை வெளியிட்டனர். கோடிக்கணக்கான அணுக்களில், சில நேரங்களில் ஒரே ஒரு அணு மட்டும் சிதைவுற்று, அந்நிலையில் காமா கதிர்களில் உள்ள ஆல்ஃபா மற்றும் பீட்டா துகள்கள் வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறு சிதைவுற்ற அணு, அப்போது வேறொரு தனிமமாக மாற்றமடைகிறது.

****************************************************************************************************************************************************************************

ஆபத்தை உண்டு பண்ணும் செல் போன் அலைகள்:

இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.

இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.
இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.
சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.
அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.
அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.
இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :
பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.


****************************************************************************************************************************************************************************
சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையலாம்?
2012 என்ற படம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாவரும் அறிந்தது. ஆனால் அதில் காட்டப்பட்ட விஞ்ஞான கருத்துக்கள் ஒவ்வொன்றும் தற்காலத்தில் உண்மையாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது காரணம் விஞ்ஞானிகள் அறிவியலாளர்கள் எச்சரிக்கை ஆகும்.  அதில் ஒன்று சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை வந்தடையும் அபாயம் உள்ளதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
வாசிங்டனில் கடந்த ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திட்டமிடல் அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.
நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும் என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும் தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும். இருந்தாலும் 'பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்' மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.
அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக