திங்கள், 2 ஜனவரி, 2012

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 2


நண்பர் குலாம் எந்த அறிவிப்பும் இன்றி எதிர்ப்பதிவை இட்டிருக்கிறார். எதிர்ப்பதிவு குறித்த விவரங்களுக்கு, விளக்கங்களுக்கு செல்லுமுன் பொதுவான வேறு விளக்கங்களும் தேவையாய் இருக்கிறது. எனவே இந்த இடுகையை பொது விளக்கங்கள், பின்னூட்டங்களுக்கான விளக்கங்கள், எதிர்பதிவுக்கான மறுப்பு என மூன்றாய் பிரித்துக் கொள்ளலாம்.
கடந்த இடுகையில் நான் இரண்டு விதிமுறைகளை முன்னிருத்தியிருந்தேன். ஒன்று, எதிர்ப்பதிவு இட்டவுடன் தொடர்புடைய பதிவில் இதற்கான மறுப்பு இடப்பட்டிருக்கிறது என்பதை பின்னூட்ட வாயிலாக தெரிவிக்க வேண்டும். இரண்டு, பதிவுகளை இடுவதற்கு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க வேண்டும். இவற்றில் கால அளவு குறித்து சில கருத்துக்களை நண்பர் கூறியிருந்தார். ஆனால் எதிர்பதிவை தெரிவிப்பது குறித்து எந்த மறுப்பும் நேரடியாக அவர் கூறாத நிலையில், பதிவிட்டதும் இத்தளத்தில் தெரிவிப்பார் என எண்ணியிருந்தேன். ஆனால், செங்கொடிக்கு பதிலளிப்பது எனது நோக்கமல்ல என அவர் வலியுறுத்தியதின் பின்னே தெரிவிப்பதற்கான மறுப்பும் அடங்கியிருக்கிறது என்பதை, அவர் தெரிவிக்காததன் பின்னரே உணர்ந்து கொண்டேன்.
முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், என்னை கடவுள் குறித்த விவாதத்திற்கு அழைத்தது நண்பர் குலாம் தான். அவர் அழைப்பை ஏற்றே நான் தொடர்ந்தேன். இந்த நிலையில் ஒரு ஒழுங்கில் உடன்பட மறுப்பது நேர்மையானவர்களின் செயலாக இருக்க முடியுமா? நான் குறிப்பிட்டிருந்த இரண்டு விதிமுறைகளும் ஒரு நேரிய விவாதத்திற்கு தேவையற்றவை என்றும் ஒதுக்கிவிட முடியாது. இதில் நண்பருக்கு மாற்றுக் கருத்து இருக்குமானால் அதை வெளிப்படுத்தி ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். அவ்வாறன்றி நண்பரின் வாதங்கள் இந்த விவாதத்தை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதே என்னுடைய புரிதல்.
நேரமின்மை என்பது தவிர்க்கவியலாதது. யாருக்கும் ஏற்படக் கூடியது. எனவே நண்பரின் நேரமின்மையில் நான் எந்தவித விமர்சனத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக நேரமின்மை என்பதை முன்னிருத்தி கால அளவு குறிப்பதை தள்ளிப்போட முனைவதையே விமர்சிக்கிறேன். தன்னுடைய அதிகபட்ச இலக்காக மாதத்திற்கு மூன்று பதிவுகள் என்று நண்பர் கூறியிருக்கிறார். என்றால் இரண்டு மாதத்திற்குள் ஒரு எதிர்ப்பதிவு போடுவதொன்றும் அவருக்கு கடினமாக இருக்கப் போவதில்லை. ஆனால் நான் குறைந்த அளவாக ஒரு வாரம் என்றும் அதிக அளவாக ஓர் ஆண்டு என்பதையும் முன்வைத்திருக்கிறேன். ஆயின் அவருக்கு ஏதுவான கால அளவை கூறுவதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?
நான் எழுப்பியவைகளுக்கான மறுப்பைத்தான் நண்பர் கூறியிருக்கிறார் எனும் போது அதை என்னிடம் தெரிவிப்பதில் அவருக்கு என்ன பிரச்சனை இருந்துவிட முடியும்? மட்டுமல்லாது, \\பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்// என்றே அவரது பதிவை முடித்திருக்கிறார். நான் எழுப்பியவைகளுக்கான பதிலைக் கூறி என்னிடமிருந்து பதிலையும் எதிர்பார்த்திருக்கும் நண்பர், அதை என்னிடம் தெரிவிக்கவில்லை என்றால், பதிலை எதிர்பார்ப்பதில் அவருக்கு தார்மீகம் இருக்க முடியுமா? இதற்கு, அது செங்கொடிக்கான பதிலோ, செங்கொடியிடமிருந்து பதிலை எதிர்பார்த்தோ எழுதப்பட்டதல்ல என நண்பர் கூறுவாராயின், \\அதில் உங்களின் கேள்வியும் உள்ளடக்கியிருந்தால் அதற்கான தெரிதல்களையும் சேர்த்து பதிவிடுவதற்காக அப்படி சொன்னேன்// என்று ஏற்கனவே அவர் கூறியிருந்ததற்கான பொருள் என்ன?
என்னுடன் விவாதம் செய்வதும், மறுப்பது நண்பரின் விருப்பு, வெறுப்புகளின் பாற்பட்டது. அதில் நான் எந்தவித வற்புறுத்தல்களையும் செய்வதற்கில்லை. ஆனால், அப்படியான விவாதத்திற்கு என்னை அழைத்து, அதை நானும் ஏற்றுக் கொண்டதன் பின், அதிலிருந்து நண்பர் பின்வாங்க விரும்புவாராயின்; அதை தெளிவாகவும், வெளிப்படையாகவும், அதற்கான காரணத்தையும் சேர்த்து அறிவிப்பது அவருடைய கடமை. ஏனென்றால், விவாதத்திற்கு அழைத்தது அவர் தான். மட்டுமல்லாது, செங்கொடி பின்னூட்ட விவாதத்திற்குப் பிறகு, பின்னூட்டங்களில் ஆழமாக விவாதிக்க முடியாது என்று கூறியதன் பிறகு, சில தளங்களில் நண்பர் பின்னூட்ட விவாதங்கள் செய்திருக்கிறார், அழைத்திருக்கிறர். பின்னூட்டமென்றாலும், எதிர்ப்பதிவு என்றாலும் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. இதை நான் ஏற்கனவே தெரிவித்தும் இருக்கிறேன். ஏனையவை நண்பரின் தெரிவுகளுக்கே. விவாதத்திற்கு வருவதாக இருந்தாலும் விலகுவதாக இருந்தாலும் அதை நண்பர் சுற்றிவளைக்காமல் வெளிப்படையாக கூறவேண்டும், அவ்வளவுதான். இதற்குமேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
அடுத்து நண்பரின் பின்னூட்டங்களுக்கான விளக்கங்களைக் காணலாம். அவரது முதல் பின்னூட்டத்தில் சலித்துக்கொண்டு சமூகத்தின் மீது அக்கரை கொள்ள வேண்டாம் என என்னைக் கோரியிருந்தார். மேற்கோள் காட்டப்பட்ட அந்த வாக்கியத்தில் சலிப்பு தென்படுகிறதா? கடவுள் குறித்த விவாதத்தைவிட சமூக அரசியல் விவாதங்களையே நான் விரும்புகிறேன் என்பதை ஒரு தகவலாக தெரிவித்திருக்கிறேன், அவ்வளவு தான். நண்பர் குறிப்பிடுவது போன்ற சலிப்பு மனோநிலை எனக்கு இருந்திருக்குமாயின் இந்த விவாதத்தை நான் ஏற்றிருக்கும் நிர்ப்பந்தம் ஏதும் என்மீது இருந்திருக்கவில்லை என்பது நண்பரின் கவனத்திற்கு.
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடர் இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூல். அதன் நோக்கம் இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் சார்ந்து அதை விமர்சிப்பது. எங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒன்றுதான். சகதியின் அடர்த்தியில் கூடுதல் குறைவு இருக்கலாமேயன்றி எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். நாங்கள் முன்வைக்கும் தீர்வு கம்யூனிசம். ஏன் இத்தொடரை எழுதுகிறேன் என்பதற்கு அதன் நுழைவுவாயில் பகுதியில் காரணங்களைக் கூறியிருக்கிறேன். மட்டுமல்லாது, நான் பிறந்து, குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்த மதம் என்பதால் சற்று கூடுதல் கவனம். நான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் நடப்புகளை விமர்சிப்பதினூடாக கம்யூனிச விழிப்புணர்வை நோக்கியே இருக்கும். எனவே கம்யூனிசத்தை எழுதுவதைவிட மதம் குறித்தே அதிகம் எழுதுகிறேன் என்று எளிதாக கூறிவிட முடியாது. நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளபடி மதங்களுக்கானவைகள் 10 நூற்றுமேனிக்கு அதிகமாக போய்விடக்கூடது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறேன்.
செங்கொடிக்கான பதிலல்ல என்பதை நண்பர் சில தடவைகள் கூறியுள்ளார். செங்கொடி குலாம் என்று பெயர் குறிப்பிடப்பட்டால் அதை படிக்கும் யாரும் அவற்றை ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றமாக கருதமாட்டார்களா? செங்கொடி குலாமின் கருத்தாக ஒதுங்கிவிடுமா? ஏன், பிஜே திக விவாதத்தில் அதை நீங்கள் தனிப்பட்ட இரண்டு குழுக்களின் கருத்தாகத்தான் கருதினீர்களா? குறிப்பாக எழுதினாலும் பொதுவாக எழுதினாலும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது தான் முதன்மையானதேயன்றி யாரை முன்னிருத்தி கூறப்பட்டிருக்கிறது என்பதல்ல. மட்டுமல்லாது, விவாதம் என்று வந்துவிட்டால் குறிப்பிட்டு எழுதுவது தான் இருவருக்கும் மறுப்புக்கான கடப்பாட்டை ஏற்படுத்தும்.
\\என்னிடம் முன்னிருத்தப்பட்ட கேள்விகளுக்கு- என் விளக்கங்களில் எதுவும் மிச்சமில்லை., மாறாக நான் முஸ்லிம் தள பதிவுகளுக்கு விளக்கம் இல்லை// என்றும் கூறியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டது தான். ஒன்றைத்தொட்டு ஒன்றாக தாவிச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்கள் பதிவு ஒன்றை பரிந்துரை செய்யுங்கள், அது குறித்து எது சரியானது? என்று விவாதம் செய்வோம். ஒரு முடிவுக்கு வந்தபின் அடுத்த தலைப்பை எடுத்துக் கொள்ளலாம். அப்படி நண்பர் பரிந்துரைத்த தலைப்பு தான் “கடவுள் ஏன் இருக்கக்கூடாது” என்பது. எனவே இதில் கவனம் செலுத்துமாறு நண்பரை கோருகிறேன்.
\\கடவுளை நம்புவதென்பது நம்பிக்கை சார்ந்த விசயம் – ஆனால் மறுப்பதென்பது ஒரு சாரார் கொண்ட நம்பிக்கையில் சிந்தனைரீதியான உடன்பாடில்லாமல் இருப்பது அப்படியான மறுப்புக்கு விளக்கம் முடிந்தவரை நேரடியாக விளக்கப்பட வேண்டும். ஏனெனில் நம்பிக்கை தான் விளக்கப்பட முடியாதது. ஆனால் அந்த நம்பிக்கை போலியானது என நிருபிக்க நேரடி நிருபணம் தந்தாக வேண்டும். அப்படியில்லாமல் “இருப்பதாக நம்பக்கூடாதென்றால்” அதுவும் அவர் சார்ந்த நம்பிக்கை எனும் வட்டத்திலே பதிவு செய்யக்கூடியது// இதன் உள்ளார்ந்த பொருள் என்ன? நம்பிக்கையாளர்கள் நிரூபிக்க வேண்டியதில்லை, அதை மறுப்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்பதா? இது பிறழ்தலான கருத்து. கடவுள் என்பது நம்பிக்கை என்றால் அங்கு எந்தவித விமர்சனத்திற்கும் இடமில்லை. பொதுவில் கடவுள் நம்பிக்கையை யாரும் விமர்சிப்பதுமில்லை. ஆனால், அதுதான் உண்மை எனும்போது தான் விமர்சனம் வருகிறது. உங்களின் அத்துனை ஆக்கங்களையும் எடுத்துக் கொண்டால் அவைகளின் ஆதாரப்புள்ளி கடவுள் நம்பிக்கையை மெய்ப்பிப்பதற்கான வாதங்களாகத்தான் இருக்கிறது. அந்த மெய்ப்பிப்புகள் தான் விமர்சனங்களைக் கிளப்புகிறதேயன்றி நம்பிக்கையல்ல. நீங்கள் அறிவித்து விடுங்களேன், ”கடவுள் மெய்யாக நிலவுகிறதா இல்லையா என்பது குறித்து எனக்கு கவலையில்லை, அது எனது நம்பிக்கை மட்டுமே” என்று. விவாதங்களுக்கு நாம் இங்கேயே முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அவ்வாறன்றி அது மெய்யாக நிலவுகிறது என்றால் அதை நிரூபிக்கும், மறுக்கும் கடமை இருவருக்கும் உண்டு.
இதுவரை கூறியவை தலைப்புக்கு வெளியிலான சுற்றாடல்கள். இனி தலைப்புக்குள் செல்லலாம். முதலில் ஒன்றை பதிவு செய்துவிடுவது சிறப்பு என கருதுகிறேன். இஸ்லாமிய நிலைப்பாட்டையே பொதுக்கருத்து போல் நண்பர் கூறியதற்கான எதிர்வினையில் பொதுவாக கூறப்பட்டவைகளை இஸ்லாத்தை முன்னிருத்தியே செங்கொடி பதிலிறுத்திருந்தார் என்று என்னை குற்றப்படுத்தியிருந்தார். அதனால் என்னுடைய முதல்பதிவில் இஸ்லாத்தை முன்னிருத்தாமல் பொதுவாகவே பதிவிட்டிருந்தேன். ஆனால் நண்பர் குலாம் இஸ்லாத்தை முன்னிருத்தியே தனது விளக்கங்களை இட்டிருக்கிறார். எனவே, முன்னர் கூறியது போன்ற குற்றச்சாட்டை இனி அவர் கூறும் வாய்ப்பற்றுப் போய்விட்டது.
என்னுடைய பதிவின் மையக்கருத்தாக ஐந்து கருத்துகளை நண்பர் பட்டியலிட்டிருக்கிறார். \\1. கடவுளின் பெயரால் மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள். 2. விதி என்ற ஒன்றை நம்புவதால் வாழ்வியல் முன்னற்றமின்மை 3. கடவுளை நம்புவோரும் சமூகத்தில் தவறு செய்தல் 4. மத குறுக்கீட்டால் அறிவியல் ரீதியான வளர்ச்சியின்மை. 5. ஏனைய உயிரனங்கள் போலல்லாமல் கடவுள் என்ற நிலை ஏன் மனித சமூகத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது//
இதில் முதல் கருத்து குறித்து நண்பர் கூறுவதென்ன? \\மனிதர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளுக்கு காரணம் மதம் தான் காரணமென்றால் மதங்களை பின்பற்றாவர்கள் வீடுகளிலும் தந்தை- மகன் அண்ணன்-தம்பிக்கு மத்தியில் சண்டைகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு கூட செல்கிறதே அதையும் நாம நியூஸ் பேப்பர்ல பார்க்கதான் செய்யுறோம். ஆனா அவர்கள் ஏதெனும் மதகுறீயிட்டு பெயர்களை சார்ந்திருப்பதால் அவர்கள் சார்ந்த கொள்கை முன்னிருத்தி பேசப்படுவதில்லை// ஆனால் இது தொடர்பாக நான் கூறியிருந்ததென்ன? \\கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது எனும் எண்ணம் மனிதர்களுக்கு ஏற்படவே இல்லை என்று கொண்டால் இன்று மனிதன் கண்டிருக்கும் எந்த முன்னேற்றமும் தடைபட்டிருக்காது என்பதோடு மட்டுமன்றி இன்னும் மேலதிக உயரங்களை மனிதன் எட்டியிருக்கக் கூடும். எப்படி என்றால், கடவுள் இருப்பு, கடவுள் மறுப்பு என்ற நிலை மட்டுமே பூமியில் இல்லை. கடவுள் இருப்பின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் கட்டமைக்கப் பட்டிருப்பதால், வரலாற்றில் மனிதனின் ஆற்றல் பெருமளவில் மதங்களுக்கிடையேயான முரண்பாட்டிற்காகவே செலவழிக்கப்பட்டிருக்கிறது, செலவு செய்யப்பட்டும் வருகிறது// மதங்கள் மட்டுமே மக்களிடையேயான சண்டை சச்சரவுகளுக்கு காரணம் என்று நான் கூறவும் இல்லை. மதங்களைப் பின்பற்றாதவர்களின் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லை என்றும் நான் கூறியிருக்கவில்லை. கடவுள் நம்பிக்கை மனிதர்களுக்கு ஏற்படவில்லை என்றால் இதுவரையான முன்னேற்றங்கள் தடைபட்டிருக்கும் என்று கூறமுடியாது. அதேநேரம் இதுவரையான வரலாற்றில் மனிதர்களின் ஆற்றல் பெருமளவில் மத ரீதியான சண்டை சச்சரவுகளில் செலவிடப்பட்டிருப்பதால் அஃதில்லாதிருந்தால், இன்னும் அதிக உயரங்களை பெற்றிருக்கக் கூடும். ஆக நான் கூறியதற்கும் நண்பர் கூறியிருப்பதற்கும் தொடர்பு ஒன்றுமில்லை. எழுப்பியவற்றுக்கு சரியான விளக்கங்களை நண்பர் வைத்த பிறகு மீண்டும் இது பற்றி விளக்கலாம்.
இரண்டாவதாக, விதி குறித்து நண்பர் கூறுவதில் பொருள் ஒன்றுமில்லை. நடந்து முடிந்தவற்றுக்குத்தான் விதி, நடக்கவேண்டியவைகளுக்கு விதி இல்லை என்று கூற வருகிறாரா? அப்படி ஒன்றுமில்லை என்பதை நண்பரை வைத்தே வெளிப்படுத்த முடியும். பின்னூட்டமானாலும், பதிவானாலும் ’இறை நாடினால்’ என்பதை நண்பர் எழுத மறப்பதில்லை. இஸ்லாத்தை ஏற்றிருக்கும் எந்த ஒருவரும், ”நடக்கவிருக்கும் காரியங்களில் மனித முயற்சியே முழுப்பங்கு வகிக்கிறது, இறையின் தெரிவு அதை ஆள்வதில்லை” எனும் எண்ணத்தில் செயல்படுவதில்லை. மாறாக, ’அவனன்றி அணுவும் அசையாது’ என்பதுதான் எல்லோரின் கருத்தாகவும் இருக்கிறது. நாளைக்குத் தேர்வென்றால் இன்றைக்கு படி என்பது தான் இஸ்லாமிய நிலைப்பாடு என்றால், இன்றைக்கு படிப்பதன் பலன் தான் தேர்வுகளில் வெளிப்படுமேயன்றி இறைவன் அதை முடிவு செய்வதில்லை என்று நண்பர் கூறுவாரா? அவரால் கூறமுடியாது. ஏனென்றால், அடுத்த கணத்தில் ஒரு இலை அசைவதிலிருந்து அனைத்தும் ஏற்கனவே ஏட்டில் எழுதப்பட்டுவிட்டது. ஏட்டில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அது தான் நடக்குமேயன்றி மனித முயற்சியினால் எதுவும் நடக்காது. இது தான் இஸ்லாமிய விதிக் கொள்கையின் சாராம்சம். இதற்கு மாறாக நடந்து முடிந்தவற்றிலிருந்து ஆறுதல், நடக்கவிருப்பதில் முயற்சி என்பதெல்லாம் அதை சமன் செய்வதற்காக கூறப்படும் மேலோட்டமான கருத்துகள். நண்பர் குலாம் உட்பட அம்மதத்தை பின்பற்றும் அனைவரும் விதியின் சாராம்சத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், அதேநேரம் மனிதமுயற்சி எனும் வெளி அலங்காரங்கள் மூலம் ஆறுதலடையவும் செய்கிறார்கள். இரண்டில் எது முதன்மையானது என்றால் சாராம்சம் தானேயன்றி அலங்காரமல்ல. ஆக நான் எழுப்பியிருக்கும் கேள்வி சாராம்சத்தில், பதில் தந்திருப்பது அலங்காரத்தில் இதை நண்பர் உணர வேண்டும்.
மூன்றாவதாக, கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் தவறு செய்தல் என்பதில், நான் எந்த அடிப்படையில் அதைக் கூறியிருந்தேன். கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களை தவறு செய்வதிலிருந்து தடுக்கிறது எனும் கூற்றுக்கு எதிராகவே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் தவறு செய்கிறார்கள் என்று கூறியிருந்தேன். இப்போது நண்பர் கடவுளை உண்மையாக நம்புபவர்கள், வெறுமனே மதத்தை பின்பற்றுபவர்கள் என்று பிரிவினை செய்திருக்கிறார். ஆனால் இங்கு சுட்டப்படவேண்டியது கடவுள் நம்பிக்கையைவிட அதிகமாக சமூக மதிப்பிழத்தலே குற்றம் செய்வதிலிருந்து மக்களை தடுக்கிறது என்பதே. குற்றம் செய்பவர்கள் மெய்யாக கடவுளை நம்புகிறார்களா? வெறுமனே மதத்தை பின்பற்றுகிறார்களா? என்பது தேவையற்ற விசாரணை. குற்றம் செய்வதிலிருந்து எது மக்களை தடுக்கிறது? கடவுள் நம்பிக்கையா? சமூகமா? இதில் சமூகமே அதிக பங்களிப்பை செய்கிறது என்பதால் அதை ஏற்றுக் கொள்வதும் மேலதிக இலக்குகளை எட்ட சீர் செய்வதும் தானே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.
நான்காவதாக மதக்குறுக்கீட்டால் அறிவியல் வளர்ச்சியின்மை என்பது. மதம் அறிவியல் சமூக வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று நான் நேரடியாக கூறவில்லை. வரலாற்றில் மத முரண்பாடுகளிலேயே மக்களின் பெரும் ஆற்றல் செலவிடப்பட்டிருக்கிறது. இது இல்லாமலிருந்தால் தற்போது மனிதன் கண்டிருக்கும் முன்னேற்றங்களை விட அதிக உயரங்களை எட்டியிருக்கக் கூடும். நான் கூறியிருப்பது இது தான், இதற்கு மறுப்பேதும் கூறமுடியாது. மாறாக இந்த விசயத்தில் நண்பர் கூறியிருப்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. அவை இந்த விவாதத்திற்கு வெளியில் அமைந்திருப்பதால் தேவை ஏற்படின் அது குறித்து பின்னர் பார்க்கலாம்.
ஐந்தாவதாக ஏனைய உயிரினங்கள் போலன்றி மனிதனுக்கு மட்டும் ஏன் கடவுள் எனும் கருத்தியல் தேவைப்படுகிறது? என்பது குறித்து, \\மனித – ஜீன் வர்கங்களுக்கு மட்டுமே இவ்வுலகை தேர்வு களமாக்கி வைத்திருக்கிறான் இறைவன். அதற்கு துணைப்பொருட்களாக தான் இவ்வுலக உயிர்களும் – அஃறிணைப்பொருட்களும். ஆக மனித சமூகத்தை இங்கு முன்னிருத்துவது தான் பிரதான செயலாக இருப்பதால் ஏனைய உயிரினங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அவைகளும் இறைவனுக்கான -இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயிரினம் தான். சரி பிற உயிரினங்களுக்கு கடவுளின் தாக்கம் இல்லை என்பதை எந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து கண்டறீந்தீர்கள் சகோ?// என்று கூறியிருக்கிறார் நண்பர். உலகில் பல்விதமான உயிரினங்கள் இருக்கின்றன. இவற்றில் மனிதன் மட்டுமே மேம்பட்ட நிலையை தன் முயற்சியின் மூலம் எட்டியிருப்பதால் அவன் ஏனைய உயிரினங்களையும் இயற்கையும் தனக்கு இசைந்த வழியில் பயன்படுத்திக் கொள்கிறான். இதை மனிதனின் வசதிக்காகவே அவைகள் இருக்கின்றன என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கடவுள் என்பது கருத்தியல் சார்ந்தது. மனிதனைத்தவிர ஏனைய உயிரினங்களுக்கு கருத்தியல் வளர்ச்சி வெகு சொற்பமான அளவே இருப்பதால் அவைகளுக்கு கடவுள் எனும் தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பில்லை. மட்டுமல்லாது, அவைகளின் செயல்கள் எதுவும் கடவுளின் இருப்பை பிரதிபலிப்பதில்லை.
\\இப்போதும் பாருங்கள் கடவுளின் பெயரால் மக்களுக்கு மத்தியில் நிலவும் சமூகரீதியான பிரச்சனைகள், மூட நம்பிக்கை தான் கடவுள் மறுப்புக்கு பிரதான காரணமாக சொல்கீறீர்கள் மாறாக நேரடியாக இல்லை// என்றும் நண்பர் கூறியிருக்கிறார். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? எனும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தால் தான் நேரடியாக கடவுள் இல்லை என்பதற்கான மறுப்பை கூற முடியும். இந்த விவாதம் கடவுள் ஏன் இருக்கக் கூடாது? எனும் கேள்வியை முன்வைத்து தொடங்கியிருக்கிறது. எனவே கடவுள் எனும் தாக்கம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகளைக் கொண்டே வாதங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
கடவுள் ஏன் இருக்கக்கூடாது என்பதற்கு, மையச் சரடில் கோர்க்கப்பட்டதாகவே என்னுடைய வாதங்களை வைத்திருந்தேன். ஆனால் நண்பர் மையச்சரடை உருவிவிட்டு தனிப்பட்டு வாதங்களுக்கு எதிரான உதிரிப் பதில்களாக கூறியிருக்கிறார். எனவே என்னுடைய பதிலும் அவ்வாறான தோற்றத்தில் இருக்கிறது. அவ்வாறன்றி ஒருங்கிணைந்த முறையில் நண்பர் தன்னுடைய வாதங்களை வைத்தால் அது இவ்விவாதத்தை இன்னும் சீரியதாக ஆக்கும்.
இனி நண்பரின் கடவுள் ஏன் இருக்க வேண்டும்? எனும் எதிர்ப்பதிவுக்குள் கடக்கலாம். நண்பரின் பதிவை முழுமையாக அலசினால், கடவுள் நம்பிக்கை, முதலாளித்துவம் இந்த இரண்டு தாக்கங்களின் கலவையாக இருக்கிறது. 1) நன்மை செய்து வாழ்வதற்கும், 2) தீமை மறுத்து வாழ்வதற்கும் கடவுள் நம்பிக்கை இல்லாத உலகில் என்ன தேவை இருக்கிறது? 3) மனிதச் சட்டங்களின் போதாமை எனும் மூன்று பகுப்புகளின் அடிப்படையில் நண்பரின் பதிவு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
எந்த மனிதனும் தன்னுடைய செயல்களில் திருப்தியுறாத நிலையில் அச்செயலை மீண்டும் செய்ய வேண்டிய தேவை அவனுக்கில்லை. இந்த திருப்தி பொருளாதார பலன்கள், சமுக மதிப்பு, குடும்பத்தேவை, அங்கீகாரம் உள்ளிட்டவைகளை கொண்டதாக இருக்கும். இவை மனிதனுக்கு நன்மை செய்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும் என்பது நண்பரின் கணிப்பு. இது முதலாளித்துவ சிந்தனையின் மரூஉ. தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதோ ஒரு வகையில் பலன் இல்லாவிட்டால் அதை செய்வதினின்று தவிர்த்துக் கொள்வது என்பது மனிதனை தான், தன் குடும்பம் தன் சுற்றம் என தனியுடமைப் பாட்டையில் செலுத்தும் உந்து விசையாக இருக்கிறது. அதே நேரம் எந்தவிதமான பலனும் இல்லாவிட்டாலும் கூட கடவுளின் விருப்பத்திற்காக அதை செய்வது என்பது ஆன்மீக சாரம். இந்த இரண்டுவித சிந்தனைகளையும் மீறி வேறொரு சிந்தனை இருக்க முடியாதா?
உலகம் உனக்குக் கிடைத்த வாய்ப்பு. இதில் முடிந்தவரை பொருளாதார ஏனைய பலன்களை பெற்று உன்னையும், குடும்பத்தையும், சுற்றத்தையும் சிறப்பாக வைத்துக் கொள். இது ஒருபுறம், மறுபுறமோ, இந்த உலகம் ஒரு தற்காலிக தங்குமிடம். அதில் முடிந்தவரை இறை விருப்பத்தை பூர்த்தி செய்து நிரந்தரமான மறு உலகத்தில் உனக்கான இடத்தை உறுதி செய்து கொள். ஒன்று தனக்காக உலகை சுரண்டச் செய்வதன் மூலம் சமூகத்தை பொருளற்றதாக்குகிறது. மற்றதோ தனக்காக உலகை அலட்சியம் செய்யக் கோருவதன் மூலம் சமூகத்தை பொருளற்றதாக்குகிறது. ஆனால் இரண்டுமே தம்முடைய வேலைத் திட்டங்களை இவ்வுலகை மையப்படுத்தியே முன்வைக்கின்றன. இங்கு தான் சமூகம் என்பதன் பிறழ்தலற்ற பொருள் விஞ்சி நிற்கிறது.
சமூகம் என்பதன் சரியான பொருளில் நன்மை என்பதென்ன? அது யாருக்கும் தனிப்பட்ட முறையில் பொருளாதரமோ அல்லது வேறு விதங்களிலோ பலன்களை பெற்றுத்தருவதல்ல. மாறாக சமூகம் முழுமைக்குமான மக்களின் வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துவது. இந்த உலகில் மட்டுமே மனிதனின் வாழ்வு இருக்கிறது. ஒருவன் மரணித்துவிட்டால் சிலரின் நினைவுகளிலன்றி தூலமான முறையில் அவன் எங்கும் என்றும் வாழமுடியாது. இருக்கும் உலகில் கிடைக்கும் வளங்களை அனைவருக்குமானதாக பொதுவில் வைப்பதற்கான நோக்கில் செய்யப்படும் அனைத்தும் நன்மை. அதை மறுக்கும் அனைத்தும் தீமை. அவைகளை இணைப்பது போராட்டம்.
இந்த அடிப்படையில் நன்மை செய்வதற்கும் தீமையை எதிர்த்து போராடுவதற்கும் தேவையான உந்தாற்றலை சமூகம் பற்றிய புரிதலே வழங்கும். இதை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக பார்க்கலாம். ஒரு குழாயிலிருந்து நிறுத்தப்படாமல் தண்ணீர் வழிந்தோடி வீணாகிக் கொண்டிருக்கிறது. வீணாகும் தண்ணீரை நிறுத்துவது நன்மை, நிறுத்தாமல் விட்டுச் செல்வது தீமை, விட்டுச் செல்பவர்களிடம் எடுத்துக் கூறி புரியவைப்பது போராட்டம். இதை கண்ணுறும் ஒருவன் “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்” என்று கடவுள் கூறியிருக்கிறார் அதனால் நிறுத்துகிறேன் என்பதை விட; இந்த தண்ணீரை புட்டியில் அடைத்து விற்றால் பொருளாதார பலன் கிடைக்குமே என்றோ, அல்லது இன்னொருவனுக்கு சொந்தமான தண்ணீர் கவனக் குறைவினால் வீணாகிக் கொண்டிருக்கிறது, அந்த நட்டத்தை தடுக்க வேண்டும் எனும் உந்துதலினால் நிறுத்துவதை விட; இந்த உலகம் என்பது நானோ, இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களோ மட்டும் அல்ல, தொடக்கத்திலிருந்து இன்னும் எத்தனை நூற்றாண்டு காலம் மனிதகுலம் வாழ்கிறதோ அது வரைக்குமானது, நேற்றைய மனிதகுலம் இந்த நீர்வளத்தை எப்படி என்னிடம் தந்திருக்கிறதோ அதே தன்மையில் நாளைய மனித குலத்திடம் கைமாற்ற வேண்டும் எனும் புரிதலோடு அந்த குழாயை நிறுத்துவதே சரியானது. சமூகம் பற்றிய இந்த சரியான புரிதலுக்கு கடவுள் நம்பிக்கையோ, இவ்வுலகை இன்று ஆண்டு கொண்டிருக்கும் முதலாளியமோ கொஞ்சமும் உதவாது.
ஆனால், நண்பருக்கு கடவுள் நம்பிக்கை, முதலாளியம் தாண்டி வேறெந்தப் புரிதலும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் கடவுள் நம்பிக்கையோ, முதலாளித்துவப் பார்வையோ இல்லாவிட்டால் வேறெதுவும் மனிதனை நன்மை செய்யத் தூண்டவும், தீமையை தடுக்கவும் முடியாது என்று கருதுகிறார். பொதுவுடமைச் சிந்தனை மனிதர்களுக்கு இல்லாவிட்டால் கடவுளியத்திலும், முதலாளியத்திலும் கூட நன்மை செய்யும் சிந்தனை தோன்றியிருக்க முடியாது என்பதே மெய்.
அடுத்து, நண்பர் மனிதச் சட்டம் இறைச்சட்டம் எனும் பாகுபாட்டையும் இதனுள் புகுத்தியுள்ளார். இந்த பாகுபாடு குறித்தும், சட்டம் என்பதன் தன்மை குறித்தும் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. அவைகளை உள்வாங்கியதற்கான எந்த அறிகுறியும் நண்பரிடம் தென்படவில்லை. ஆகையால் வேறொரு கோணத்தில் இதை அணுகலாம்.
குற்றம் என்பது தனியுடமையின் விளைவு. ஒன்று, பிறருக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு அது கிடைத்தாக வேண்டும் எனும் மனோநிலைதான் குற்றச் செயலை தூண்டுகிறது. குற்றம் செய்யத் தூண்டும் மனோநிலை வசதி வாய்ப்புகளை, சூழல்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்து குற்றம் தொடங்குகிறது. இந்த மனோநிலை நிலைத்திருக்கும் வரை குற்றம் இருக்கவே செய்யும். சட்டம் என்பது இதற்கு மாற்றோ, தீர்வோ அல்ல. ஒரு இடைக்கால ஏற்பாடாக மட்டுமே சட்டம் இருக்க முடியும். சமூகம் குறித்த சரியான புரிதல் மனிதனுக்குள் ஏற்படும் விகிதத்தில் குற்றத்தை தூண்டும் மனப்போக்கும், அதற்கு அணை கட்டும் சட்டங்களும் விடைபெறும்.
நடைமுறைப் படுத்தப்படும் சட்டங்கள், நிகழ்ந்து விட்ட குற்றத் தன்மைகளுக்கான எதிர்வினைகள் எனும் அடிப்படையில் தான் குற்றங்களுக்கான தண்டனைகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு கொலையா ஒன்பது கொலையா என்று பார்த்து தண்டனைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. வன்புணர்ச்சி செய்ய முயலும் ஒரு பொறுக்கியை ஒரு பெண் கொன்றால், கொலைக்கு கொலை என்று தண்டனை அளிப்பதை நண்பர் ஏற்பாரா? பல உயிர்களை காக்கும் நோக்கில் செய்யப்படும் சில கொலைகளை எண்ணிக்கை கணக்கிட்டு தீர்ப்பளிக்க முடியுமா? ஆக வழங்கப்படும் தண்டனை என்பது குற்றத்தின் தன்மையைப் பொருத்தது. குற்றத்தின் தன்மையைப் பொருத்து அதை செய்தவனுக்கு சமூகத்தில் வாழும் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று தீர்மானிப்பது தான் தண்டனையேயன்றி, எண்ணிக்கையை பார்ப்பதல்ல. வன்புணர்சியை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட கொலைக்கு விடுதலையும், திருடும் நோக்கில் செய்யப்பட்ட காயமேற்படுத்தலுக்கு தண்டனையும் வழங்கப்பட்டால், இது நியாயமல்ல, கொலைக்கு விடுதலையும், காயமேற்படுத்தியதற்கு தண்டனையுமா? மனிதச் சட்டம் குறையுடையது என்று நண்பர் கூறுவாரா?
சட்டங்கள் குற்றத்தை எந்த முறையில் அணுகுகின்றன என்பது முக்கியமானது. குற்றத்தைச் செய்வதும் அதை குற்றம் எனத் தீர்மானித்து தண்டனை வழங்குவதும் மனிதர்கள் தாம். அதை சூழலின் சான்றுகள் மூலமே கண்டடைகிறார்கள். இதில் தவறுகள் நேர்வதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்றால், மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆம், இருக்கிறது. தொழில்நுட்ப அறிவையும், சூழல் சாட்சிகளையும் கொண்டு குற்றத்தை தீர்மானிக்கும் நடைமுறை குறையுடையதாகவே இருக்க முடியும். மேம்பட்ட அறிவையும் தொழில்நுட்பங்களையும் குற்றவாளிகளும் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்பதால் சட்டம் முற்றிலும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது.
சரி, முக்கியமான விசயத்திற்கு வருவோம். மனிதச் சட்டம் குறையுடையதாக இருப்பதைக் கொண்டு நண்பர் முன்வைப்பது என்ன? மனிதச் சட்டம் குறையுடையது என்பதால் இறைவனின் இருப்பை ஏற்க வேண்டும் எனும் வாதத்தில் என்ன தொடர்பு இருக்க முடியும்? வாதத்திற்காக இறைவனின் இருப்பை ஏற்பதாகக் கொள்வோம். குறைபாடுகளுடைய மனிதச் சட்டம் தொடர்ந்து நிலுவையில் இருக்கும். அதோடு, இங்கு தண்டனை வழங்கத் தவறியவர்களுக்கு செத்ததன் பின்னர் தண்டனை கிடைப்பதாக ஒரு கற்பனை இருக்கும். இந்தக் கற்பனை என்னவிதமான தாக்கத்தை சமூகத்தின் மீது ஏற்படுத்தும்? அல்லது ஏற்படுத்தியிருக்கிறது? தன்னுடைய பலம் பலவீனங்களுக்கு உட்பட்டு ஒரு எல்லையின் பின் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை, கடவுள் பார்த்துக் கொள்வார் எனும் முடக்கத்தை தோற்றுவிக்குமா? அல்லது போராடும் உத்வேகத்தைத் தருமா? எந்தக் கற்பனை சமூகத்தின் நோயாக இருக்கிறதோ அந்த கற்பனையையே மருந்தாக சுட்டுவது பேரவலம்.
வறட்டுக் கற்பனைகளுக்கு நேர்மாற்றமாக உலகை மாற்றியமைக்க மக்களை அழைக்கிறது கம்யூனிசம். இவ்வுலகில் மக்களின் முழுமையான வாழ்வுக்கு எதிராக இருக்கும் அனைத்தும் தனியுடமையிலிருந்தே தொடக்கம் பெற்றன. இதை வரலாற்று ஆய்வின் மூலமும், உழைப்புக் கருவிகளின் உடமை மாற்றங்களினால் சமூகம் மாற்றமடைந்த வழிகளின் மூலமும் மிகத் தெளிவாக நிருவி இருக்கிறது கம்யூனிசம். உழைப்புக் கருவிகளையும் உற்பத்தியையும் பொதுவுடமை ஆக்குவதன் மூலம் எல்லாவகை சுரண்டலுக்கும் முடிவுகட்டி அனைத்து வகையிலும் வளர்ச்சியடைந்த பொதுவுடமை சமுதாயத்தை கட்டியமைப்பதற்கு போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. இதன் மூலம் மட்டுமே கடவுள் எனும் மாயக் கற்பனையின் தேவையற்று மக்கள் சமவாய்ப்பும் சமவசதியும் பெற்று மனிதச் சட்டமோ, இறைச்சட்டமோ அவசியமற்ற குற்றம் செய்யும் மனோநிலையின்றி வாழவதற்கான வகையேற்படும்.
இது ஒரு மிக நீண்டகால இலக்கு. ஆனால் இந்த இலக்கை நோக்கி பயணப்படும் கொள்கையோ, கோட்பாடோ, இசங்களோ, மதங்களோ வேறொன்று இல்லை, கம்யூனிசத்தை தவிர. இதில் ஐயுற்றிருப்பவர்கள் தொடருங்கள், விளக்கமுண்டு. எதிர்நிற்பவர்களே, முடிந்தால் மறுத்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக