வியாழன், 19 ஜனவரி, 2012

Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள




மனிதன் கண்டுபிடித்த முதல் அறிவியல் கருவி நெருப்பை உண்டாக்குவது. நெருப்பு என்பது இன்றைய காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் பண்டைய காலத்தில் ……?
நெருப்பு என்பது ஆயுதம்,
நெருப்பு என்பது ஆற்றல்,
நெருப்பு என்பது பாதுகாப்பு,
நெருப்பு என்பது முன்னேற்றம்,
நெருப்பு என்பது வல்லமை,
நெருப்பு என்பது வாழ்வு.
இன்று கருவிகள் இல்லாமல் ஒரு நொடியும் இல்லை என்ற நிலையிலிருக்கும் மனிதன், தொடக்க கால மனிதர்கள் நெருப்போடு கொண்டிருந்த உறவை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா? முழுமையாக இல்லாவிட்டாலும் அதை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள வாய்ப்பை தந்திருக்கிறது ”நெருப்பைத்தேடி” Quest For Fire எனும் திரைப்படம்.

இன்றைக்கு எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்க்கையின் சிறு பகுதியை விவரிக்கிறது இந்த திரைப்படம். நியாண்டர்தால்கள் இன்றைக்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு. குரோமாக்னன்களும் நியாண்டர்தால்களும் அக்கம்பக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. நிர்வாணக் காட்சிகளும், உடலுறவுக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் ஆபாசமோ, அறுவறுப்போ துளியும் தோன்றாத வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது.

நியாண்டர்தால்களின் ஒரு இனக்குழு நெருப்பை அணைந்துவிடாமல் பாதுகாப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. ஏனென்றால், நெருப்பை எப்படி உண்டாக்குவது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இயற்கையாக ஏற்படும் நெருப்பை ஆண்டுக் கணக்கில் மழையிலும் வெயிலிலும் பனியிலும் அணைந்து விடாமல் பாதுகாப்பதில் தான் அவர்களின் வாழ்வே அடங்கியிருக்கிறது. இதை குறியீடாக ஒரு காட்சி உணர்த்துகிறது. நெருப்பு இருக்கும் போது எளிமையாக தங்களை பாதுகாத்துக் கொண்டு மிருகங்களை விரட்டியடிக்கும் மனிதன், நெருப்பு இல்லாதபோது அந்த மிருகங்களலேயே வேட்டையாடப்படுகிறான். இப்படி எல்லாமுமாக இருக்கும் நெருப்பை கவர்ந்து செல்ல இன்னொரு இனக்குழு வருகிறது. நடக்கும் போரில் கவர்ந்து செல்ல வந்த குழு தோற்கடிக்கப்படுகிறது என்றாலும், நெருப்பை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. விளைவு மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு நெருப்பைத்தேடி பயணம் தொடங்குகிறது. பயணத்தில் அவர்கள் பல்வேறு இனக்குழுக்களைக் கடந்து நெருப்பைக் கவர்ந்து திரும்பும் வழியில் ஹோமோசெபியன்களிடமிருந்து நெருப்பை உண்டாக்கும் கலையையும் கற்றுத் திரும்புகிறார்கள். இது தான் படத்தின் கதை. இதில் கோர்க்கப்பட்டிருக்கும் காட்சியமைப்புகள் வழியாக நியாண்டர்தால்களின் வாழ்க்கையையும், வரலாற்றையும் சொல்லிச் சென்றிருப்பதுதான், இத்திரைப்படத்தை பார்க்க வேண்டிய படமாக மாற்றியிருக்கிறது.

மிகுந்த சிரமங்களுக்கிடையே கவர்ந்து வரப்படும் நெருப்பு, கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி அணைந்துபோவது எவ்வளவு வேதனைக்கும், வெறுப்புக்கும் உரியது. ஆனால் தவறுதலாக அவ்வாறு நீரில் மூழ்கடித்து அணைத்துவிடும் மனிதன் மீது ஏனையோர் குற்றப்படுத்துவது போலோ, கண்டிப்பது போலோ காட்சியமைக்கப் படவில்லை. உழைப்பின் பயன் பொதுவாய் இருக்கும் ஒரு சமூகத்தில் குற்றங்கள் தனிமனிதனை மட்டுமே சார்ந்ததாக கொள்ள முடியாது எனும் கருத்து அந்தக் காட்சியின் மீது கவிதையாய் படிந்திருக்கிறது என்று கொள்ளலாம். அதேநேரம் வேறொரு இனக்குழுவோடு சண்டையிட்டு நெருப்பைக் கவர்ந்து வரும்போது மிச்சமிருக்கும் நெருப்பு அவர்களுக்கு பயன்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆற்றில் எறிந்துவிட்டுப் போகும் காட்சி தனியுடமையின் படிமம். இந்த முரண்பாடான காட்சியமைப்பு, சொந்தக் குழுவுக்குள் பொதுவுடமையும் வேறு குழுவுக்கு எதிரான தனியுடமையுமாக அதன் வளர்ச்சியைக் கூறுகிறது.

தூரத்தில் மான்கள் திரிவதைப் பார்த்து எச்சில் ஊற ஓடுவதும், கொடூர விலங்குகளுக்கு பயந்து மரத்திலிருந்து இறங்க முடியாத நிர்ப்பந்த நிலையில் இலைகளை உண்பதுமான காட்சி சைவ அசைவ உணவு எந்தெந்த காலங்களில் உண்ணப்பட்டது என்பதை தெளிவாக்குகிறது. அதேநேரம் நரமாமிசம் உண்ணும் இனக்குழுவின் மிச்சத்தை பசி மிகுதியால் உண்ணத் தொடங்கி அது நரமாமிசம் எனத் தெரிந்ததும் துப்பிவிடுவது, வேறுவேறு இனக்குழுவினூடாக நரமாமிசத்தை உண்பதும் வெறுப்பதுமாய் தொடக்க கால மனிதன் உணவை எவ்வாறு கையாண்டிருக்கிறான் என்பதை காட்சிப்படுத்துகிறது.

உடலுறவு என்பது உணவுத் தேவையைப் போல் இன்றியமையாத, சாதாரணமான ஒன்று தான். நுகர்வுக் கலாச்சாரம் தான் அதை முன்னணியில் அறுவறுப்பானதாக, ஒழுக்கமாக முன்னிருத்திவிட்டு, பின்னணியில் ஆணாதிக்கத்துடன் பெண்களை வேட்டையாட வைத்திருக்கிறது. அருகில் புணர்ச்சி நடைபெறும் போது ஏனையவர்கள் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதும், அதேநேரம் அவர்களின் வழக்கத்திற்கு மாறான ஒன்றாக நடைபெறும் போது அதைக் கண்டு முகம் திருப்பிக் கொள்வதும் இயல்பான அழகுடன் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

நியாண்டர்தால்களே முதலில் வல்லொலிகளைத் தாண்டி பேச முனைந்தவர்கள் எனும் வரலாற்றை, வெகு சொற்பமான அவர்களின் பேச்சின் மூலமும்; அவர்களைவிட குரோமாக்னன்கள் சரளமாக பேசுவதாகவும் அமைத்திருப்பது சரியாகவும், இயல்பாகவும் அமைந்திருக்கிறது. மட்டுமல்லாது மருத்துவம் முதலான கலைகளை கண்டுபிடித்துக் காத்தது பெண்கள் தான் என்பதை குறிப்பால் உணர்த்தியிருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.

ஊதி ஊதி பற்றவைக்க முயன்றும், கடைசி கனல் நெருப்பாய் பற்றிக் கொள்ளாமல் அணைந்து விடும்போது அவர்கள் வெளிக்காட்டும் ஏமாற்றமும், இயலாமையும் கலந்த உணர்ச்சி, நெருப்பைத் தேடிய பயணத்தில் முதலில் நெருப்பு அணைந்து போல சாம்பலே எஞ்சியதாய் கிடைக்கும் போது அதை உடலில் பூசிக் கொள்வதும், அதில் புறள்வதுமாக அவர்கள் காட்டும் உணர்ச்சி என கதை மாந்தர்களோடு நாமும் இயைந்து பயணப்படுவதற்கு காட்சியமைப்பும், இயல்பான நடிப்புத் திறனும் வெகுவாக உதவுகிறது.

என்றாலும், படத்தில் நெருடல்களும் இல்லாமலில்லை. பெண்ணின் தலைமைத்துவம் நீக்கப்பட்டு ஆண் சமூகத்தை வழிநடத்துபவனாக மாறிய பின்பும் பெண் சமூக முக்கியத்துவம் கொண்டவளாகவே நீடித்தாள். ஆனால், படம் நெடுக பெண் எந்த பக்களிப்பும் அற்றவளாக காட்டப்படுவது பெருங்குறையாகவே இருக்கிறது.

குரோமாக்னன் இனத்தைச் சேர்ந்த பெண் முதலில் நியாண்டர்தால்களுடன் வருவது காப்பாற்றியவர்கள் எனும் பயன்பாட்டுக் காரணம் இருந்தாலும்; அவள் தன்னுடைய இனத்துடன் சேர்ந்துவிட்ட பிறகு இரண்டாம் முறையும் நியாண்டர்தால்களுடன் சேர்ந்து செல்வது படத்தில் நிறைந்திருக்கும் இயல்பான தன்மைக்கு மாறாக துருத்திக் கொண்டு இருக்கிறது. ஏனென்றால், காதல் என்று கூறமுடியாதபடி காதல் பண்பாட்டு வளர்ச்சியை பெறாத சமூகம் அது. குடும்பம் என்றும் கூறமுடியாதபடி குரோமாக்னன்களின் சமூகம் தனிப்பட்ட குடும்ப உறவை எட்டாத நிலையையே காட்சியமைப்புகள் கூறுகின்றன.

நியாண்டர்தால்கள் குரோமாக்னன்களை பிடித்துவைத்து சித்திரவதை செய்வது போலும், குரோமாக்னன்களிடம் நியாண்டர்தால்கள் மாட்டிக் கொள்ளும் போது உபசரித்து பாதுகாப்பது போலும் காட்சிப்படுத்தியிருப்பது வரலாற்று முரணாகவே இருக்கிறது. குரோமாக்னன்களான நாம் ஆஸ்திரேலிய பழங்குடிகளையும், அமெரிக்க செவ்விந்தியர்களையும் துடிக்கத் துடிக்க கொன்றழித்த இரத்த கொடூரங்கள் வரலாறாய் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது தங்களிடம் மாட்டிக் கொண்ட நியாண்டர்தால்களை குரோமாக்னன்கள் உபசரித்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

நியாண்டர்தால்களும், குரோமாக்னன்களும் அருகருகே வாழ்ந்தவர்கள் என்பதும், நியாண்டர்தால்களைவிட குரோமாக்னன்கள் முன்னேறியவர்கள் என்பதிலும் கருத்து வேறுபாடு ஒன்றுமில்லை. ஆனால், நியாண்டர்தால்கள் மலைக்குகைகளில் வாழும் அதே காலத்தில் குரோமாக்னன்கள் வீடுகளை அமைத்து, தரையை சமப்படுத்தி, கனிகள் வகை உணவை அறிந்து, மட்பாண்டங்களை பயன்படுத்தி வாழ்ந்தார்கள் என்பது கொஞ்சம் அதிகமானதாகவே தெரிகிறது.

இதுபோன்று வெகுசில குறைகள் இருந்தாலும், பழங்கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என அறிய விரும்புபவர்கள் இந்த படத்தைப் பார்க்கலாம்.

பின்குறிப்பு: இந்தப் படத்திற்கு முன்னதாக விமர்சனம் எழுதிய எழுத்தாளர் எஸ்.ரா அவர்களுக்கும், இந்தப்படத்தை எனக்கு அறிமுகம் செய்த தோழர் குருத்து அவர்களுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக