திங்கள், 2 ஜனவரி, 2012

குரான் கூறும் உதவாக்கரை உபதேசங்கள்

இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு அடிப்படை குர்ஆன் மட்டுமே. வாசிக்கிறார்களோ இல்லையோ ஆனால் இஸ்லாமியர்களின் இல்லங்களில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் புத்தகம் குர்ஆன். அதை அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெட்டியினுள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.  குர்ஆனின் புனிதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மீது எந்த ஒரு பொருளையும் வைக்க மாட்டர்கள். சராசரிக்கும் குறைவான நம்பிக்கையுடைய  ஒரு இஸ்லாமியர் கூட அதன் பொருள் விளங்காவிடினும், குர்ஆனிலிருந்து ஒருசில பகுதிகளையாவது மனனமாகக் கூறுவார்.  இன்றும் அதிதீவிர பக்திமானாக தங்களை அறியச் செய்கிறவர்களில் பலருக்கும்   குர்ஆனிய வசனங்களின்  பொருள் தெரியாதென்பது வேடிக்கையானது. அதற்காக அவர்கள் கவலைப்படுவதுமில்லை. இது மதப்பிரசங்கிகளுக்கு வசதியாக அமைந்துவிட்டது எனலாம்.
        மதப்பிரசங்கிகளோ, குர்ஆனில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களும், அதிநுட்பமான கண்டுபிடிப்புகளும், மருத்துவம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் என்று அனைத்தையும் விவரித்து  பேசுவதாக, கண்கள் சிவக்க, கழுத்துநரம்புகள் தெறிக்க குரலை உயர்த்தி குர்ஆன் தெளிவான அத்தாட்சி, நேர்வழி, உறுதியானது, உயிருள்ளது, நல்லுபதேசம்,... என்றெல்லாம் கூறி பர்வையாளர்களை இருக்கைகைகளின் விளிம்பிற்கே கொண்டு வந்து விடுவார்கள். மதத்தின் பெயரால் மக்களை முட்டாள்களாக்குவது அவர்களுக்கு நல்ல வருமானத்தைத்   தரும் தொழில். சிலர் தங்களது இத் திறமையால் கோடீஸ்வரர்களாக வாழ்கைத்தரத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். இவர்களின் கூற்றை ஆய்ந்துணர்ந்த வெகுமக்கள் எத்தனை பேர்?
        குர்ஆன் கூறும் நெறிமுறைகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் வாழ்வியலுக்குப் பொருத்தமானது எனவே, மனிதகுலம் மேன்மையடைய, குர்ஆன் கூறும் நெறிமுறைகள் முறைகள் நமது வாழ்வில் இரண்டற இணையவேண்டுமென்று முஸ்லீம்களிடம் மட்டுமல்லாமல் மற்றமதத்தினரிடமும் வற்புறுத்துகின்றனர். சராசரி மனிதவாழ்க்கைக்கு குர்ஆனின் வழிகாட்டல் என்ன? இன்னும் முதன்மைப்படுத்திச் சொல்வதென்றால், சடங்குகளாகவும், வழிபாட்டில் மந்திரஉச்சரிப்புகளாகவும், வெளிப்படுதலைத்தவிர ஒரு இஸ்லாமியனின் வாழ்வில் குர்ஆனின் பங்களிப்பு என்ன? என்று கேட்கலாம். குர்ஆன் கூறும் செய்திகள் நடைமுறைக்கு இணக்கமானதா?

இதற்கான பதிலை சில குர்ஆன் வசனங்களைக்  கொண்டு காண்போம்

அன்றியும் பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) -அடிமைப்பெண்களில் உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர…
                            (குர்ஆன் 4:24)
(ஆனால்)  தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்.
(குர்ஆன் 23:6)
இக்குர்ஆன் வசனம் போதிப்பது என்ன?
சாதாரண மொழியில் சொல்வதென்றால், எண்ணற்ற வைப்பாட்டிகளுடன் 'கூடி' வாழ்பவர்கள் அல்லாஹ்விடத்தில் பழிப்பிற்குறியவர்கள் அல்லர்.
இன்று, போலிப்பகட்டு வார்த்தைகளைக்  கூறி வலம் வந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சார பீரங்கிகள் கூட, எந்த ஒரு மனிதரையும் உடைமைப் படுத்தியிருக்க முடியாது. மனைவியைத் தவிர்த்து வேறொரு பெண்ணை ஒருபொழுதும் நாடிச் செல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கின்றனர். இத்தகைய ஒழுக்க நிலையிலிருப்பவர்களுக்கு இக்குர்ஆன் வசனத்தின் பயன் என்ன? பல பெண்களுடன் திருமணமின்றி கூடி வாழ்வது எவ்வகையான நாகரீகம்? நிச்சயமாக, ஒழுக்கமுடையோர்  எவராலும் குர்ஆனின் இவ்வனுமதிகளை இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
        இன்றைய சூழலில் நமது வலக்கரம் எவரையும் உடைமையாக்க (அடிமைகளாக்க) வழியில்லை. அடிமைகளைப் போர்கள் மூலமாக மட்டுமே பெறமுடியுமென்று வாதிட்டாலும் இதை போர்க்களத்திலும் செயல்படுத்த முடியாது. சகமனிதர்களை அடிமைகளாக்குவது மனிதாபிமானமற்றது என்று சட்டமியற்றி தடுக்கப்பட்டுவிட்டது. குர்ஆன் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது என்று முழங்குபவர்கள்,  அல்லாஹ்வின் அனுமதிக்கெதிராக சட்டமியற்றப்பட்டிருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏனோ? குர்ஆனின் இவ்னுமதிகளை மூடத்தனமானது என்று தடைசெய்து விட்டு,  மீண்டும் அதே குர்ஆனின் வசனங்களை புனிதமானவைகள் என்று அனுதினமும் கூறி வழிபடுவதன் பொருள் என்ன? தனிமனிதனுக்கோ அல்லது ஒரு சமுதாயத்திற்கோ எவ்வகையிலும் பயனற்ற, செயல்படுத்தக்கூடாத இவ்வனுமதிகளை ஏட்டிலும், மனதிலும் பதித்து வைப்பதின் பொருள் என்ன?      

ஆண்கள், பெண்களை நிர்வகிக்கின்றனர்; காரணம் அவர்களில் சிலரை,சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான்      இன்னும் அவர்களுடைய மாறுபாட்டை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்; படுக்கைகளில் அவர்களை நீக்கி வையுங்கள்; இன்னும் அவர்களை அடியுங்கள் உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் அவர்கள் மீது வேறு வழியைத் தேடாதீர்கள்…
(குர்ஆன் 4:34)
ஏதோ சில காரணங்களுக்காக  ஒருவர் தனது மனைவியை அடிப்பதாக வைத்துக்கொள்வோம் (வாதத்திற்காக). என்னதான் நியாயம் கூறினாலும் இது மனிதாபிமானமற்றது, நகரீகமற்றது  சட்டப்படி குற்றமும் கூட. இச்செயல் அவரது குழந்தைகளை வெகுவாகவே பாதிக்கும். அண்டை வீட்டாரிடம் அவரது நன்மதிப்பைக் குறைத்துவிடும். குடும்ப உறவில் அமைதியையும், மகிழ்ச்சியையும் விரும்புவருக்கு இவ்வசனத்தின் பயன் என்ன?
        மனைவியிடம் மாறுபாட்டைக் காணும் பொழுது  அடித்துத் திருத்த வேண்டுமெனில், கணவனின் மாறுபாட்டை மனைவி காணும் பொழுது கணவனை அடித்துத் திருத்தலாமா?

போர் செய்தல், அதுவோ வெறுப்பாக இருக்க, உங்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது; ஒரு பொருளை நீங்கள் வெறுக்கலாம்; (ஆனால்) அது உங்களுக்கு நன்மையாக இருக்கும்;  இன்னும் ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம் ஆனால் உங்களுக்கு அது தீமையாக இருக்கும்; (இவற்றையெல்லாம்) அல்லாஹ்  அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(குர்ஆன் 2:216)
முஃமின்களே (முதுமை, நோய் போன்று) எவ்வித இடர்பாடுடையவர்களாகவும் இல்லாமல் (போரில் கலந்து கொள்ளாமல்) உட்கார்ந்திருப்பவர்களும் அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உடைமைகளையும் தங்களுடைய  உயிர்களையும் (அர்ப்பணிப்பது) கொண்டு போர் செய்பவர்களும் சமமாக மாட்டார்கள்
(குர்ஆன் 4:95)

நம்மில் பலர் இராணுவப் பின்னணி கொண்டவர்கள் அல்ல. நாம் போர்முனைக்குச் செல்லவேண்டிய அவசியமுமில்லை. உடல்வலிமை கொண்டவர்கள் நம்மில் பலர் உள்ளனர் இக்குர்ஆன் வசனம், இவர்களில் யாரை போர்க்களத்திற்குச் செல்ல வற்புறுத்துகிறது? அல்லது உடல்வலிமை கொண்டவர்கள் அனைவருமே போர்க்களத்திற்குச் செல்லவேண்டுமா? இன்று அல்லாஹ் கூறும் போர்முனை எங்கே இருக்கிறது?

குர்ஆனின் எட்டாவது அத்தியாயம் அன்ஃபால் (போரில் கிடைத்த பொருட்கள்) லிருந்து…

நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் கனீமத்தாகப் பெற்ற பொருட்களிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அதில் ஐந்திலொன்று உரியதாகும்.
(குர்ஆன் 8:41)

இத்தகைய வசனங்கள்  சர்வதேச போர்விதிமுறைகளுக்கு எதிரானது.  மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைக்கக்கூடியது. மனிதர்களாகிய நாம் போரின் விளைவுகளையும்,  போர்க்குற்றங்களையும் பகுத்துணர்ந்ததால்தான் போர்விதிமுறைகள் வகுக்கப்பட்டது மீண்டும் பழைய காட்டுமிராண்டி செயல்களை புனிதவசனங்கள் புனித அனுமதிகள் என்றெல்லாம் கரடிவிடுவதன் பயன் என்ன?
        நடைமுறை வாழ்க்கைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும் உள்ள தலைகீழான வேறுபாடுகளைப் பார்த்தோம். குர்ஆன் ஒவ்வொரு வசனங்களும், வார்த்தைகளும், எழுத்துக்களும் புனிதமானது,  மனிதாபிமானம்மிக்கது, எந்தக்காலத்திற்கும் பொருத்தமானது என்றெல்லாம் பிரதாபிப்பவர்களின் வார்த்தைகளின் பொருள் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக