திங்கள், 2 ஜனவரி, 2012

ஆத்மாவும் அதுபடும் பாடும்

தோழர் சாஹித், பறையோசை பதிப்பகம் இந்த பெயர்களை நீங்கள் செவியுற்றதுண்டா? மத மூடநம்பிக்கைகளை மக்கள் விளங்கி, விலகிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய நேரங்களை செலவு செய்யும் பொதுவுடமைக்காரர். பறையோசைப் பதிப்பகம் மூலம் இவர் வெளியிட்ட “அடிமை, அது அல்லாவின் ஆணை” மிகப்பரவலாக கவனம் பெற்ற நூலாகும். இது தவிர மருதுபாண்டியர் குறித்தும், ஆசான் லெனின் குறித்த குறுந்தகடும் வரவேற்பைப்பெற்ற பறையோசைப் பதிப்பகத்தின் வெளியீடுகள்.
உயிர், ஆன்மா என்பவை மதக்கொள்கைகளில் மிகவும் புனிதமாக மதிக்கப்படுபவை. ஆனால் அறிவியல் வெளிச்சத்தில் இவற்றுக்கு புனிதம் சார்ந்த எந்த மதிப்பும் அளிக்கமுடியாது என்பதே உண்மை. இது குறித்து தோழர் சாஹித் எழுதிய நீள் கட்டுரை, தோழரின் அனுமதியுடன் இங்கு தொடராக வெளியிடப்படவுள்ளது. படித்து உள்வாங்கிக்கொள்வதுடன் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பறையோசை பதிப்பகம்
****************************************************

ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வான வாழ்க்கைக்கு அவரவரின்  தலைவிதியே காரணம் என்று மதங்கள் கூறுகின்றன. இது உழைப்பவனின் உணர்வுக்கு வடிகால்கள் அமைத்து ஆளும் வர்கத்திற்கு சேவை செய்கிறது என்று பொதுவுடமை சிந்தனையாளர்கள் உரக்கவே கூறுகிறார்கள். ஆனாலும் இருப்பதையும் இழந்துகொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் ஆகப் பெரும்பான்மையினர் தமக்கு எதிரான மதத்திற்குள்ளும் தலைவிதி தத்துவத்திற்குள்ளும் புதைந்து உழன்று கொண்டிருக்கின்றனர்.


தந்தை பெரியாருக்குப்பின் மதக்கோட்பாடுகளுக்குள் புகுந்து அம்பலப்படுத்துதல் என்பது வெகுவாக குறைந்துவிட்டது. பொதுவுடமை இயக்கத்தினர் மற்றும் சில ஜனநாயகவாதிகள் பார்பனீயத்திற்கு எதிராக தீவிரமான பிரச்சாரம் செய்தாலும் பார்பனீயத்துக்கும் அடிப்படையாக அமையும் கடவுள் நம்பிக்கையையும் தலைவிதி தத்துவத்தையும் உடைத்து நொருக்குவதில் தொடரான தமது கடமையைச் செய்யத் தவறுகின்றனர். அதனாலேயே ஆகக் குறைந்தகூலியைப் பெற்று இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் வாழும் ஒரு தொழிலாளிகூட பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தும், தர்காவிற்கு சர்க்கரை வாங்கிகொடுத்து பாத்திஹா ஓதுவதும், சர்ச்சுக்கு மெழுகுவர்த்தி ஏற்றுவதுமாக சிந்திக்கின்றனரே தவிர சங்கமாக திரள்வதற்குக்கூட மறுக்கின்றனர்.


கல்வி அறிவு பெற்றவர் – பெறாதவர் என்ற வேறுபாடில்லாமல் கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவருடைய சந்தேகமும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதைவிட இந்த உலகமும் உயிரினங்களும் எப்படித் தோன்றின? ஒருவர் இறந்தபின் அவரது உயிர் –ஆன்மா- என்னவாகிறது? எங்கே போகிறது? என்ற சந்தேகமே கடவுளையும் தலைவிதியையும் நோக்கித் தள்ளிவிடுகிறது. அதனால் இந்தக் கட்டுரையில் ஆத்மா பற்றிய சில உண்மைகளைப் பார்ப்போம்.
உயிர் பற்றிய அறிவியல் பாடங்கள், பழமைவாத கோட்பாடுகளை விமர்சிப்பதில்லை. அப்படியே சில விஞ்ஞானிகள், அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டாலும் அறிவியலுக்கான அதிகார பீடம் இன்னும் மதபீடங்களின் கட்டுப்பாடுகளில் இருப்பதால் விமர்சனங்கள் அதிகாரபூர்வமாக அச்சேறுவதில்லை. அதுவேறு இதுவேறு என்பதுபோல பல்கலைக்கழகங்களும் சதி செய்கின்றன. அதனால்தான் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என்று பலரும் இன்னும் மதவாதிகளாக உள்ளனர். அறிவு ஜீவிகளே நம்பிக்கை கொள்ளும்போது சாதாரண மனிதன் எம்மாத்திரம். எனவே உயிர் பற்றிய மதங்களின் கோட்பாடுகளை, அதிலும் இசுலாமியக் கோட்பாடுகளிலேயே எனக்கு அதிகமாக  தெரியும் என்பதால் அதில் விரிவாகவும் பார்ப்போம்..


ஆத்மா, ஆன்மா, உயிர் ஆகிய சொற்கள் ஒரே பொருளுடையவையே. வெறுமனே ஒன்றின் உயிர் பற்றிக் கூறும்போது ‘’உயிர்’’ (Live) என்றச்சொல்லையும் அந்த உயிர்மீது புனிதத்தன்மை ஏற்றிச் சொல்லும்போது ஆத்மா (Soul) என்றும் ஆன்மா என்றும் கூறுகின்றனர்.

உயிர் (ஆத்மா) என்றால் என்ன?


பொதுவாக மனிதர்களுடைய நிலைப்பாடும் அறிவியலும் வேறுவேறாக உள்ளது இயக்கம் உடையன உயிர் எனலாம். ஆனாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட சக்தியால் அது இயங்கககூடாது.

உயிர்களின் இயக்கம் என்றால் என்ன?


இதற்கு பிறப்பு, இறப்பு, வளர்ச்சி இனப்பெருக்கம் செய்தல், மூச்சுவிடுதல், நடத்தல், சாப்பிடுதல், என நீண்ட பட்டியல் உண்டு. ஒரு உயிரினத்தில் இந்த செயல்கள் அனைத்தும் மொத்தமாக நின்றுவிட்டால் அல்லது அனைத்தையும் மொத்தமாக நிறுத்திவிட்டால் அது இறந்துவிட்டதாக கூறுகிறோம். (இங்கே சிந்திப்பது, கேட்பது, வலி போன்றவற்றை உணர்வது என்ற செயல்களை மட்டும் புறக்கணியுங்கள். இது பற்றி பிறகு பார்ப்போம்.)  இறந்த பின்னான உயிர் பற்றி மதங்களின் பார்வையும் அறிவியலின் பார்வையும் வேறுவேறாக உள்ளது. உயிர் உடலில் இருந்து பிரிந்து தனி ஒரு பொருளாக சென்றுவிடுகிறது என்று மதங்களும், இறந்துவிட்ட பிறகு அதற்குமேல் ஒன்றும் இல்லை; உடலின் சத்துக்கள் மண்ணோடு மண்ணாக கலந்துவிடுகிறது என்று அறிவியலும் கூறுகிறது.


உயிர் எங்கிருக்கிறது?உலகில் தத்துவங்கள் தோன்றிய நாட்களிலிருந்து இன்றுவரை உயிர் பொதுவாக இதயத்தில் இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இதயம் என்ற உறுப்பு பற்றி தெளிவான அறிவு பழங்காலத்தில் இல்லாதிருந்ததால் நெஞ்சுக்கூட்டிற்குள் இருப்பதாக நம்பப்பட்டுவந்தது. எல்லா மதக்கோட்பாடும் இதற்கு விதி விலக்கல்ல. அதுமட்டுமல்ல, ஆன்மாவின் மையம் இதயம் என்பதுபோல, இந்த இதயமே சிந்தனைக்கான (அறிவுக்கான) உறுப்பாகவும் கூறுகின்றன.


உயிர் பிராணவாயுவில் இருப்பதாக அத்வைதம் கூறினாலும் அது தங்கி இருக்குமிடம் நெச்சுக்கூட்டிலுள்ள இதயத்து அருகில் அல்லது முதுகந்தண்டிற்கு அருகில் ஒரு வெற்றிடத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக கூறுகிறது. பகவத்கீதையும் இவ்வாறே கூறுகிறது.


அறிவியல் வளர்ச்சி மதவாதிகளிடமும் சிறு அசைப்பை எற்படுத்தியுள்ளதால், உயிர் என்பது மூளையில் தங்கி உடல் உறுப்புகளை இயக்குகிறது என்று கொஞ்சம் படித்தவர்களிடம் மாற்றுக் கருத்து உருவாகியுள்ளது. இன்னும், அது உடல் முழுவதும் வியாபித்துள்ளது என்றும் அது இயங்கத்தேவையான உடல் உறுப்புகள், ஆக்ஸிஜன், இரத்தம் போன்றைவைகளில் பழுது ஏற்பட்டு இயங்காவிட்டால் அந்த உயிர் இறந்துவிடுகிறது என்றும் கருதுகின்றனர். எதுவானாலும் உடலில் ஒரு உயிர் தனித்த ஒரு பொருள்போல் உள்ளது என்றும், இறந்துவிடும்போது அது உடலைவிட்டு பிரிந்து விடுகிறது என்று மத நம்பிக்கையாளர்களும், அது இறந்துவிடுகிறது அவ்வளவுதான் அதற்குமேல் அதில் ஒன்றும் இல்லை என்று நாத்திகர்களும் கருதுகின்றனர்.


உயிரின் மூலம்உபநிடதங்களில் ஒன்றுக்கொன்று சில முரண்பாடுகள் இருந்தாலும் மையமான கருத்தில் வேறுபாடு இல்லை. பிரகதாண்ய உபநிடதம் பின்வருமாறு கூறுகிறது.


அது முதலில் ஸோஹ் (நான் இருக்கிறேன்) என்று கூறியது. முதலில் இது ஒன்றுமே இல்லாதிருந்தது. அது தான் ஆன்மா உடையதாக வேண்டும் என்று விரும்பியது. அது விரும்பியதும் நீர் உண்டாயிற்று நிலம் உண்டாயிற்று. அங்கே அது களைத்துவிட்டது. களைத்து வெப்பமடைந்து அந்த பிரம்மத்தின் ஒளியின் சுவையே வெப்பமாக மாறியது.


நெருப்பிலிருந்து சிறு சிறு தீப்பொரிகள் வெளிவருவது போல இந்த ஆன்மாவிலிருந்து எல்லா உயிர்களும் எல்லா உலகங்களும் எல்லா தேவர்களும் எல்லா ஜீவன்களும் தோன்றுகின்றன. என்று கூறுகிறது.


ஐதரேய உபநிடத்தில் அதை இயற்றிய மஹிதாஸ் ஜதரேயர் கூறியதாவது. “இந்த ஆன்மா முதலில் தனிமையாக வாழ்ந்திருந்தது. அப்பொழுது வேறு எதுவுமே இருந்ததில்லை. அது உலகை படைக்க வேண்டும் என விரும்பியது. அது இவ்வுலகையையும், நீரையும், ஒளிக்கதிர்களையும் படைத்தது. அது உலகத்தை ஆளுபவர்களை படைக்க விரும்பியது. அது நீரிலிருந்து ஜீவனை மேலே எடுத்து நடுங்கவைத்தது. அதை மெல்ல சூடாக்கியது. வெம்மைபடர்ந்ததுமே அதன் முகம் முட்டை போல பொரிந்தது. – (கண், காது, தொப்புள் என பொரிந்து வந்ததாக ஒரு நீண்ட பட்டியல் உண்டு) பின்னர் ஆன்மா (பிரம்மம்) அந்த ஜீவனுக்கு பசியையும் தாகத்தையும் ஏற்படுத்தியது.


முண்டக உபநிடதம் கூறுவதாவது;


~அவர் தெய்வீகமான உருவமில்லாத புருஷர். வெளியேயும் உள்ளேயும் நிறைந்துள்ள பிறவி இல்லாதவர். உயிரும் மனமும் இல்லாதவர். புனிதமானதும் தொடப்படாததுமான இயற்கையையும் கடந்தவர். அவரிடமிருந்தே உயிரும், மனமும், அனைத்து புலன்களும் தோன்றுகின்றன. அவரே வானமும், காற்றும், ஒளியும்(நெருப்பும்), நீரும், உலகத்தை தாங்கும் நிலமும் ஆவார். அவரிடமிருந்து பலரகமான தேவர்கள் தோன்றினார்கள். கீழ்நிலைத் தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள் பறவைகள், உயிர், தானியங்கள், பக்தி, உண்மை,விதிகள் எல்லாமுமே அவர்தான்.


நிலத்திலே மூலிகைச்செடிகள் முளைப்பதுபோல், உயிருள்ள மனிதனில் ரோமங்கள் தோன்றுவதைப்போல அழிவில்லாத பிரம்மத்திலிருந்து உலகம் தோன்றுகிறது.


கொழுந்துவிட்டெரியும் நெருப்பிலிருந்து ஒரேவிதமான ஆயிரக்கணக்கான ஜுவாலைகள் பிறப்பதைப் போல அழிவற்ற பிரம்மத்திலிருந்து கணக்கற்ற உயிர்கள் பிறக்கின்றன.


பொதுவாக பிரம்மம் என்ற ஆன்மா தன்னுடைய ஆத்மாவிலிருந்து உலகையும் உயிர்களையும் படைத்தது என்பது வேதங்கள், அதன் விரிவுரையான உபநிடதங்களின் நிலைப்பாடாகும்.


தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலேயே உருவாக்கி உலகை படைக்க விரும்பிய தேவன் (பரிசுத்த ஆவி), உலகில் உள்ள அனைத்தையும் உண்டாகக்கூடியது என்று கூறி ஒவ்வொன்றாக உருவாக்கினான். மனிதனைப்படைத்து ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று கிறித்தவர்களின் பைபிள் கூறுகிறது.


பரிசுத்த ஆவியாக உள்ள தேவன் மனிதனை மண்ணிலிருந்து படைத்து தன்னுடைய ஆத்மாவிலிருந்து மனிதனுக்கு ஊதி உயிரூட்டினான். அந்த முதல் மனிதனிலிருந்து பிற உயிர்களை உண்டாக்குகிறான் என்பது கிறித்தவர்களின் கொள்கையாக உள்ளது.


கிறித்தவர்களின் கொள்கை போலவே இசுலாத்தின் கோட்பாடும் இருக்கிறது. ஆதம் என்ற மனிதனை படைத்து தன்னிடமுள்ள ஆத்மாவிலிருந்து உயிரூட்டினான் என்பதும், ஆதமுடைய விந்தைக் கொண்டு பிற மனிதர்களைப் படைத்து செம்மையான உருவமாக்கியபின் தன்னிடமுள்ள ஆத்மவை ஊதி உயிர் வழங்குகிறான் என்றும் குரான் கூறுகிறது.குரான் வசனம்.15:26- தட்டினால் ஓசைதரக்கூடிய, மாற்றத்திற்குரிய கருப்பு களிமண்ணால் திட்டமாக நாம் மனிதனை படைத்தோம் –என்றும், 15:29 அதனை நான் செவ்வைப்படுத்தி அதில் என் ஆன்மாவிலிருந்து நான் ஊதிய பொழுது அவருக்கு சிரம் பணிந்தவர்களாக நீங்கள் விழுங்கல் (என்று வானவர்களிடம் கூறினான்) – என்றும் 38:72 பிறகு அவரை செவ்வைப்படுத்தி, அவரில் என் புறத்திலிருந்து ரூஹை (ஆன்மாவை) ஊதியபோது அவருக்கு சிரம் பணிந்தவர்களாக நீங்கள் (கீழே) விழுங்கள் -என்றும் கூறுகிறது.


இவ்வசனங்கள் முதல் மனிதனை அல்லா படைத்ததற்கான குரானின் வசனங்கள்.


வசனம்.32:8 பிறகு அவனுடைய (ஆதமுடைய) சந்ததியை அற்பத் தண்ணீரின் சத்திலிருந்து (விந்திலிருந்து) உண்டாக்கினான் என்றும், 32:9 பிறகு அதனைச் சரியாக உருவாக்கி தன் புறத்திலிருந்து ஆத்மாவை ஊதினான் என்றும் கூறுகின்றன.


முதல் மனிதனுக்குப் பின்னால் படைக்கப்படும் மனிதர்களையும் கர்பப்பையில் உருவமைத்து பிறகு தன்னுடைய ஆத்மாவிலிருந்து ஊதி உயிரூட்டுகிறான் அல்லா என்று குரான் கூறுகிறது.


உயிரின் வடிவம் என்ன?அறிவியல் இதற்கு வடிவம் தரவில்லை. அலைகள்போல, ஒளியைப்போல என்றுகூட கூறவில்லை. இயக்கம் உடைய பொருள் உயிருள்ளவை. இயக்கமற்ற பொருள் உயிரற்றவை என்று மட்டுமே கூறுகிறது. நாத்திகர்களும் இதனையே நம்புகின்றனர். ஆனால் பாவம், புண்ணியம் (வழக்கில் பொதுவான நன்மை, தீமை என்பது போல் அல்ல. மதக் கட்டளைகளுக்கெதிரான செயல்களால் விளையும் பாவம், புண்ணியம்) சொர்க்கம், நரகம் போன்ற கருத்தாக்கங்களைக் கொண்டுள்ள மதங்களுக்கு உயிர் பற்றிய ஒரு வடிவம் தராவிட்டால் சிக்கல்தானே. அதனால் உயிர் அல்லது ஆத்மா என்பது ஒரு புகையைப்போல ~ஆவி~ அல்லது காற்றைப்போல வெறுங்கண்ணால் பார்க்க முடியாதது என்று மதங்கள் கூறுகின்றன. இது மகான்களின் கண்களுக்குத்தான் தெரியும் அல்லது அவர்கள் மட்டுமே அதனை காற்றை நாம் உணர்வதுபோல உணறுவர் என்கின்றனர். அதற்காக சிறப்பு ஆன்மீகப் பயிற்சி எடுத்தால் நாமும் பார்க்கலாம், உணராலாம் என்றும் கூறுகின்றனர்.


எங்கோ உள்ள ஒலியையும் ஒளிக்காட்சிகளையும் தேசங்கடந்து, கண்டம் கடந்து, கோள்கள் கடந்து வானொலி பெட்டியிலும், தொலைக்காட்சி பெட்டியிலும் கேட்கிறோமே, பார்க்கிறோமே! அவைகளுக்கெல்லாம் உருவம் உண்டா? காந்த மற்றும் மின்காந்த அலைகளுக்கு உருவம் உண்டா? இவ்வலைகளை கண்களால் பார்க்க முடியாதுதானே. அது போலத்தான் உயிரும் என்று அறிவியலையும் துணைக்கு அழைத்துக்கொள்வதற்கும் இவர்கள் தயங்குவது இல்லை.


ரேடியோ அலைகள் மற்றும் பிம்பங்கள் பற்றிய அறிவை முழுமையாக உள்வாங்காத்தால் இந்த பிதற்றல். ஒலி அலைகளையும் ரேடியோ அலைகளையும் காந்த அலைகளையும் வெற்றுக் கண்களால் பார்க்க முடியாதுதான். ஆனால் அதற்கான கருவிகொண்டு பார்க்கமுடியும். அதன் பண்புகளை மிகத் துள்ளியமாக வரையறுக்க முடியும். அவ்வாறு உயிர் எனபதை காணமுடியுமா? முடியாது என்று நாம் சொல்லிவிடத்தான் விடுவார்களா அவர்கள்? இதற்கும் அவர்களிடம் விஞ்ஞான ஆய்வு தயாராகவே உள்ளது. அது பற்றி தேவையான இடத்தில் பார்ப்போம்.


எல்லா விளக்கங்களுக்கும் மேலாக இவர்களுக்கு ‘’நம்பிக்கை’’ என்ற கொள்கையும் இந்த உயிர் என்பதற்கு வடிவம் தருகிறது.


ஒரு பொருள் வடிவம், இருப்பிடம் இல்லாமல் இருக்கமுடியாதுதான். ஆனால் புகையைப்போல ஆவி என்றும், காற்றைப்போல பார்க்கமுடியாதது என்றும் கூறுவது சரியான பதிலில்லை. காலம் காலமாக மத நம்பிக்கையில் மூழ்கியிருப்பவர்களிடம் அந்த நம்பிக்கையில் உள்ள புளுகுகளை புரியவைக்காமல், இதற்கு நேரிடையாக பதில் கூறுவதன் மூலம் எளிதாக விளக்கிவிட முடியாது.


இவர்களுடைய உயிரின் இருப்பிடம் மற்றும் வடிவத்தைப்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள உயிர் உடலில் இருந்து பிரிந்தபின் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தத்துவ விளக்கத்தை முதலில் நாம் ஆய்வு செய்வோம்.


இந்துமதத்தின் ரிக்வேதம் ஆத்மா பிரிந்து சென்று தோன்றிய இடமான பரமாத்மாவுடன் இரண்டரக்கலந்துவிடுகிறது என்று கூறுகிறது. இக் கருத்து நிலபிரபுத்துவ சமூகமாக மாற்றமடைந்தபோது போதுமானதாக இல்லாததால் உபநிடதங்கள் ஆத்மாவிற்கு மறுபிறப்பை புகுத்தியது. செய்வினைப்பயனே மனிதனின் குலப்பிறப்பிற்கு (சாதிகள்) காரணம் என்றும் இழி பிறப்பு முற்பிறவியின் கர்ம பயன் என்றும் கூறத்தொடங்கியது. அதுபோல சொர்கம் நரகம் என்ற கருத்தாக்கமும் ஆளும் வர்க்கத்திற்கு அமுதமாகவே துணைநின்றது. ஆரியர்கள் மேற்கிந்தியப் பகுதிகளில் தமது ஆட்சியதிகாரம் செழித்தோங்கி இருந்த காலத்தில் மனு என்பவன் பார்ப்பனர்கள் மற்றும் சத்திரியர்கள் ஆத்மாவிற்கு மட்டுமே சொர்கம் என்றும், இவர்களல்லாத பிற சாதியினருக்கு (இழி பிறப்பினருக்கு) நரகம் என்றும் கொள்ளகையை வகுத்தான்.


ஆனாலும் காலம் இதனை தொடராக அனுமதிக்கவிடுமா?. பிறமதங்களின் தாக்கம் மக்களிடையே ஆளுமை செலுத்த தொடங்கியதும் இழிபிறவி ஆத்தமாவை, ஒருவன் இறந்த பிறகு புனிதப்படுத்தி (கருமாதி) சொர்கத்திர்கு அனுப்பிவைக்கும் கொள்கையை உருவாக்கினர். இழிபிறவி ஆத்மாவும்  பிரிந்தபின் நன்மை செய்த ஆத்மாவாக இருந்தால் அது சொர்கத்திற்கு சொல்லும் என்றும் தீமை செய்த ஆத்மாவாக இருந்தால் அது நரகத்திற்கு சென்று வேதனைகளை அனுபவிக்கும் என்றும் புதுகோட்பாடுகளை உருவக்கிக் கொண்டனர். இந்துமதக் கோட்பாடின்படி ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கர்மபயனுக்கு ஏற்ற சாதியில் ஏழுமுறை மறு பிறப்பு உண்டு.  அதன் பிறகு செத்தபின் ஒருவனுடைய ஆத்மா மட்டுமே சொர்கம் அல்லது நரகத்திற்கு செல்கிறது. உடல் இவ்வுலகில் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.


கிறித்துவமதத்திற்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை. நன்மை செய்த ஆத்மாவாக இருந்தாலும் தீமை செய்த ஆத்மாவாக இருந்தாலும் ‘’இளைப்பாறுதல்’’ என்னும் இடத்தில் தங்கி இருக்கும். உலகம் அழிந்தபின் நன்மை தீமைக்கேற்ப சொர்கம் நரகம் செல்லும் என்று கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக