இதுவரை நண்பர் இஹ்சாஸின் பதிவுகளுக்கு தொடரின் மீதான விமர்சனம், மறுப்புக்கு மறுப்பு என இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையாக பதிலளித்து வந்தேன். ஆனால் இந்தமுறை அவரின் மறுப்புக்கு மறுப்பை விட்டு விட்டு தொடர் மீதான விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் கடந்த சில கட்டுரைகளுக்கு நண்பர் இஹ்சாஸ் பதில் எதையும் அளிக்கவில்லை. கைவிட்டுவிடுவதாக அறிவிக்கவும் இல்லை. பதில் கூறுவதிலிருந்து அவர் நழுவிக் கொண்ட பிறகு சாரமற்ற, வெற்றுகளுக்கு விளக்கமளித்து இத்தொடரை நீர்த்துப் போக வைப்பதை விட, இஸ்லாம் குறித்த தொடரின் மீதான விமர்சனங்களை மட்டும் கணக்கில் கொண்டு இத்தொடரை இன்னும் ஆழமாக கொண்டு செல்லலாம் என்று எண்ணியது தான். ஒருவேளை நண்பர் இஹ்சாஸ் மீண்டும் களத்திற்கு வந்து எல்லாவற்றுக்கும் பதிலளிக்க வேண்டும் எனக் கோரினால் அதை பின்னர் பரிசீலிக்கலாம்.
கடல்கள் பற்றிய அந்த கட்டுரையில் குரானின் கூற்றுகளான இரண்டு அம்சங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். 1) கடல்களுக்கு இடையிலான தடை. 2) ஆழ்கடலின் இருள். இந்த இரண்டு அம்சங்களில் நண்பரின் மறுப்பு என்ன? முதல் அம்சத்தில், இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு இல்லையென செங்கொடி மறுக்கவில்லை. மாறாக பண்டைய கடலாடிகளுக்கு தெரிந்திருந்ததை அறைகுறையாக முகம்மது கேட்டு கூறிவிட்டார் என்று நான் கூறியிருப்பதாக அவராகவே முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் அவ்வாறன்றி தெளிவாகவே கடல்களுக்கு இடையே தடுப்பு இருக்கிறது என்பதை மறுத்திருகிறேன். இரு கடல்களுக்கிடையே எல்லை இருக்கிறது என்பதே போர்வையில் வடிகட்டிய முட்டாள் தனமாக இருக்கும் போது, அங்கு தடுப்பு இருக்கிறது என்று எப்படி கூற முடியும்? இரு கடல்களுக்கு இடையே ஒரு தடுப்பு இருக்க முடியும் என்றால் முழுமையாக இரண்டு கடல்களும் தனித்தனியே பிரித்து காட்டப்பட வேண்டும். உலகில் இருக்கும் எந்த இரண்டு கடலையாவது தனித்தனியே பிரித்து அடையாளம் காட்ட முடியுமா? அந்தந்த பகுதிகளை முன்னிட்டு தனித்தனியான பெயர்களில் வழங்கி வருகிறோம். நிலங்களால் பிரிக்கப்படாதவரை தனித்தனியான இரண்டு கடல்கள் என உலகில் எதுவுமில்லை.
இதையே பர்சக் எனும் அரபுச் சொல்லை திணித்து நான் கூறியதை வேறொன்றாக திரித்திருக்கிறார். முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்ளும் போது மதவாதிகள் செய்யும் வழக்கமான உத்தி தான் இது. குறிப்பிட்ட அந்த 25:53 வசனத்திற்கு ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு பர்சக் எனும் சொல்லுக்கு வரம்பு என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள். திரை அல்லது தடுப்பு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த வரம்பு என்ற சொல்லைக் கொண்டா கடல்களுக்கு எல்லை இல்லை என கூறுகிறேன். கடல்களுக்கு இடையேயான தடுப்பு என்று தான் நானும் கூறியிருக்கிறேன். ஆனால் குரான் அந்த வசனத்தில் தெளிவாக இரண்டு கடல்கள் என்று தான் கூறியிருக்கிறது. அரபுச் சொல்லுக்கு அருஞ்சொற்பொருள் விளக்க வேண்டுமென்றால், இரண்டு கடல்கள் என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள் ஒரு கடல் என்று தான் மூலத்தில் இருக்கிறது என்று அடித்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி கூற வேண்டுமென்றால் திரை குறித்த வசனங்களே தேவையற்றுப் போய் குரானிலிருந்து நீக்க வேண்டியதிருக்குமே. அதனால் தான் பர்சக்கை பிடித்துக் கொண்டு பல்டியடித்திருக்கிறார்.
கடல்களுக்கிடையே திரையோ தடுப்போ இல்லை என்பதற்கு சில விளக்கங்களையும் அந்த கட்டுரையில் தந்திருந்தேன். கடலடி நீரோட்டங்கள் கண்டங்களைக் கூட கடந்து வெகுதூரம் செல்கின்றன. கடல்கள் கலக்கக் கூடாது என்பதற்குத்தான் தடுப்பு மற்றவற்றுக்கு இல்லை என்று கூறும் நண்பர், நீரோட்டங்கள் கடல் நீரல்ல என்றொரு அரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கலாமே. அருசொற்பொருள் விளக்கமோ, உருட்டி, நழுக்கும் மழுப்பலோ கூட செய்ய முடியாது என்பதால் தான் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டாரோ! ஒரே கடலின் இருவேறு பகுதிகளில் கூட கடல் நீரின் தன்மையில் வித்தியாசங்கள் இருக்கின்றன (எகா தமிழ்நாடு, அந்தமான்) என்பதை எடுத்துக் காட்டியிருந்தேன். அதற்கும் கள்ள மௌனம் தான் பதில். உண்மையிலேயே குரான் அல்லா கொடுத்தது தான் என நண்பர் இஹ்சாஸ் நம்பினால் இதற்கும் பதில் என்ற போரவையில் எதையாவது உளறியிருக்கலாமே. விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டக் கூட முடியாத அளவில் குரானே உளறிவிட்டது என்பதை அறிந்ததால் தான் மௌனமாகி விட்டாரோ!
வெவ்வேறு கடல் பகுதிகளின் தன்மைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை எனும் அனுபவ அறிவை செவியுற்று, கடல்களுக்கு இடையில் திரை அல்லது தடுப்பு இருக்கிறது என்று உருட்டிப் புரட்டி பொய்யை அரங்கேற்றியது. அதற்கு விளக்கமாக ஒருபுறம் உப்பாகவும் மறுபுறம் இனிமையான சுவையாகவும் இருப்பதாக சிறுபிள்ளையும் நகைக்கக்கூடிய வகையில் பிதற்றியிருப்பது. இவை போதாதா குரானும் அல்லாவும் முகம்மதின் உருவாக்கம் தான் என்பதற்கு?
இரண்டாவதாக ஆழ்கடலின் இருள், முகம்மது குரானில் சொல்வதற்கு முன்னால் கடலில் ஆழமாகச் செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து இருள் பரவும் என்பது யாருக்குமே தெரியாததா? ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் கடலுக்குள் செல்ல இயலாது என்றொரு அற்புத ஆழிமுத்தை கண்டெடுத்திருக்கிறார் நண்பர். முத்து எடுத்தவர்கள் எல்லாம் கடலின் மேல் மிதந்து கொண்டே தான் முத்தெடுத்தார்களா? கடலின் மேற்பரப்பில் பயணம் செய்தாலும் கூட அடியாழத்தில் வெளிச்சம் ஊடுருவாது என்பதை அறிந்து கொள்ள முடியும். கடலில் தவறி விழும் ஒரு பொருளை கவனித்தாலே தெரிந்துவிடுமே, முதலில் கண்ணாடி போல் தெளிவாக தெரியும் அந்தப் பொருள் கீழே செல்லச் செல்ல படிப்படியாக மங்கி பார்வையிலிருந்து மறைந்து விடும். அவ்வளவு ஏன், கடலின் மேற்பரப்பிலிருந்து பார்த்தால் வெவ்வேறு ஆழங்களில் நீந்தும் மீன்களின் காட்சித் தோற்றத்தைக் கொண்டே கூறிவிடலாமே கடல் நீரின் ஒளி ஊடுருவும் தன்மையை. இதற்கு மேலதிகமாக அந்த வசனத்தில் என்ன இருகிறது?
அறிவியல் கண்டுபிடிப்பான நிரப்பிரிகையின் ஒளி ஊடுருவும் தன்மைக்கும் அந்த வசனத்துக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் நுணுக்கமாக கேள்வி எழுப்பினால் குரான் ஒன்றும் அறிவியல் நூலல்ல என்று ஜல்லியடிக்கும் நண்பர், அதற்கு முன்னால் நவீன அறிவியலைத்தான் குறிப்பிட்ட வசனங்கள் பேசுகின்றன என்று கூறுவதற்கு அந்த வசனங்களில் தகுதி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டாமா? என்னிடம் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் நண்பர் அதற்கு முன்னால் அந்த வசனம் அறிவியலைத்தான் பேசுகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்க வேண்டாமா?
மதம் நுழைய நுழைய அறிவு வெளியேறிவிடும் என்று பெரியார் கூறியதற்கான நடப்பு எடுத்துக்காட்டுகள் இது போன்று இஸ்லாத்திற்காக எகிறிக் குதிக்கும் பதிவர்கள் தாம். என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்குவதில்லை, எப்படி அதை மறுக்க வேண்டும் என திட்டமிடுவதில்லை. இருப்பதெல்லாம் இஸ்லாத்தைக் குறை கூறுவதா எனும் உணர்ச்சிக் கொதிப்பு, மறுக்க வேண்டுமெனும் ஆர்வக் கோளாறு, கொஞ்சம் இரவல் தகவல், நிறைய நம்பிக்கை எல்லாவற்றையும் மொத்தமாக வெட்டிக் கலக்கி தாளித்து இறக்கி விடுவது. உண்டாலல்லவா தெரியும் உணவின் தரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக